மயங்கினேன் பொன்மானிலே – 26

பொன்மானிலே _BG-a5f5eaa5

அத்தியாயம் – 26

பத்மப்ரியாவிடம், “மிருதுளாவுக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் குழந்தை பேச்சு பேச கூடாது” என்று கூறி உதய் தற்காலிகமாக பிரச்சனையை தள்ளி வைத்திருந்தான். அவள் அமைதியாக இருந்தாலும், அவள் சிந்தை வம்சியின் குழந்தையையே சுற்றி வந்தது.

அவள் வீட்டிலிருந்து எங்கும் செல்லவில்லை. அவளுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. தன் தம்பியின் குழந்தை பிறக்கும் நாளை ஆர்வமாக இல்லை மிக மிக ஆர்வமாக எதிர்பார்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

சிந்து அவள் ஏமாற்றத்தை பிடிவாதமாகவும், கோபமாகவும் வெளி காட்டினாள். அவளை தனிமை படுத்திக்கொண்டு அலைபேசிக்குள்ளே மூழ்க ஆரம்பித்தாள். பத்மப்ரியா அவளுள் மூழ்க, சிந்து தன்போக்கில் இருக்க, அவள் வீட்டில் வருத்தமே சூழ்ந்திருந்தது. உதய்க்கும், அவன் தாய்க்கும் யாரை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. 

வம்சி அக்காவின் வீட்டிற்கு வருவதை குறைக்க ஆரம்பித்தான். ‘வேலை, மிருதுளாவின் உடல் நிலை’ என்று காரணம் காட்டி மழுப்பினான். அவன் மாற்றத்தை உதய் மட்டுமே கண்டுகொண்டான். “பொண்டாட்டி வந்ததிலிருந்து, தம்பி இப்படித்தான்” என்று பத்மப்ரியா பொதுப்படையாக கூறினாலும், ‘அது காரணம் இல்லை…’ என்று உதய்க்கு புரிந்தாலும், எப்படி தன் மனைவிக்கு புரிய வைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதங்களாக உருண்டு ஓட ஆரம்பித்தது.

மிருதுளாவின் உடல் நிலையை காட்டி, வம்சி வற்புறுத்தி கூறவே அவள் பெற்றோர் அவர்கள் வீட்டிலே தங்கினர்.   வம்சி, மிருதுளாவின் உடல்நிலையை மனதில் கொண்டு தற்காலிகமாக தான் அக்காவிடம் கொடுத்த வாக்கை மறைத்தான். ‘முதலில், பங்காரு நல்லபடியாக குழந்தையை பெற்றேடுக்க வேண்டும்’ அது மட்டுமே அவன் மனதில் ஓடியது.

அவன் தன் பங்காருவை தாங்கினான் என்று வார்த்தைகளால் கூறலாம். இருந்தாலும், உண்மை என்னவென்றால் வார்த்தைகளால் வடிக்க முடியாதபடி அவளை அக்கறையாக பார்த்துக் கொண்டான். ஆனால், அவன் கலகலப்பாக பேசவில்லை. அவன் கண்கள் அவளை காதலோடு பார்த்தாலும், நேராக பார்க்கவில்லை. மிருதுளாவின் மனதில் சந்தேகவித்து விழுந்தது.

அன்று, அவன் தமக்கையிடமிருந்து அழைப்பு வர, அவன் அந்த அலைபேசியை யோசனையாக பார்த்தான். அவன் கண்கள் அருகே இருக்கும் மனைவியை நோட்டமிட்டது. மேடிட்ட வயிற்றின் மீது கைகளை வைத்தபடி அமர்ந்திருந்தாள். அவன் நெஞ்சில் பயப்பந்து துடித்தது. ‘அக்கா ஏதாவது கேட்டா, பங்காரு ஏதாவது கண்டுபிடிச்சிட்டா? என்னைக்காவது ஒரு நாள் தெரியத்தான் போகுது. ஆனால், அது இன்னைக்கு வேண்டாம். அதுவும் குழந்தை பிறக்குமுன் தெரியாமல் இருப்பது நல்லது’ அவன் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

இப்படித்தான் அவன் வழமையாக தன் அக்காவுடனான அலைபேசி அழைப்பையும், சந்திப்பையும் முடிந்த அளவு தவிர்த்து நேரத்தை சுருக்கி என்று சமாளித்து  கொண்டிருந்தான்.

“யாரு அக்காவா?” அவனை கூர்மையாக பார்த்தபடி மிருதுளா கேட்க, “ஆமா, பங்காரு. உன் கிட்ட இப்ப கொஞ்ச நேரம்  பேசலாமுன்னு பார்த்தேன். அக்கா கிட்ட அப்புறம் பேசிக்குறேன்” அவன் படபடப்பாக கூற, “நான் உங்க கிட்ட நீங்க ஏன் பேசலைன்னு கேட்கவே இல்லையே?” அவள் புன்னகைக்க, “ஓ, நீ கேட்கவே இல்லையோ?” அவன் எங்கோ பார்த்தபடி கூறினான். ‘ரொம்ப பேசி நீயே மாட்டிக்காத வம்சி’ அவன் தனக்கு தானே அறிவுறுத்திக்கொண்டு, அவன் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தான்.

அவன் கைகளை பிடித்து தன்னவனை நிறுத்தினாள். “என்ன ஆச்சு பங்காரு? எதுவும் வேணுமா?” அவன் கேட்க, “எனக்கு வேணுமிங்கிறதை உங்களால் செய்ய முடியுமா?” அவள் குரலில் ஏக்கம் இருந்தது. “பங்காரு, எனக்கு தெரியாமல் ஏதாவது குறை வச்சிட்டேனா?” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவள் அருகே அமர்ந்து பொறுமையாக கேட்டான்.

“நாம, பக்கத்துல இருக்கிற பார்க் வரைக்கும் வாக்கிங் போவோமா?” அவள் சம்பந்தமில்லாமல் கேட்க, “அத்தையையும்…” அவன் ஆரம்பிக்க, “நாம மட்டும் தான் வாக்கிங் போறோம்” அவள் குரல் அழுத்தமாக ஒலிக்க அவன் முகத்தில் மெல்லிய புன்முறுவல் வந்தது. “பங்காரு… பங்காரு…” அவன் அவள்  தாடையை பிடிக்க, “என்னை கொஞ்ச வேண்டாம்” அவள் முகம் திருப்பிக் கொண்டாள். இருவரும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் பூங்காவை நோக்கி நடந்தனர்.

அவள் வயிற்றை அசைத்து அசைத்து நடக்கும் அழகை பார்த்தபடி, அவள் கைகளை பிடித்து கொண்டு அவள் வேகத்திற்கு ஏற்ப மெதுவாக நடந்தான் வம்சி. அவன் எதுவும் பேசவில்லை. ‘பங்காரு, ஏதோ பேசத்தான் கூட்டிகிட்டு போறா. என்னவா இருக்கும்? அவளே சொல்லட்டும்’ என்று மௌனமாக நடக்க, ‘பூங்காவில், உட்கார்ந்து நிதானமா பேசுவோம்.’ அவளும் அமைதியாகவே நடந்தாள்.

பூங்காவில் அத்தனை கூட்டமில்லை. அங்கிருந்த புல் தரையில் அவள் அமர எத்தனிக்க, “பங்காரு, கீழையா உட்கார போற?” அவன் பதற, “இடம் நீட்டா தான் இருக்குங்க” அவள் கூறிக்கொண்டே அமர்ந்தாள். அவன், அவள் முன் அமர, “வீட்டில் தனிமையே கிடைக்கலை. வாக்கிங்கு கூட, நீங்க எங்க அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டு வந்திடறீங்க. ராத்திரி நான் தூங்கிடறேன்.” அவள் கூற, “எங்க அக்கா தான் இடைஞ்சல். உங்க அம்மா, அப்பாவுமா?” அவன் கேலியாக வினவ, “எனக்கும், என் புருஷனுக்கும் இடையில் யார் வந்தாலும் அது இடைஞ்சல் தான்.” அவன் கைகளை தன் மென்மையான கரங்களுக்குள் அழுத்திக் கொண்ட  அவள் குரலில் இப்பொழுது பிடிவாதம் வந்து அமர்ந்தது.

அவள் ஸ்பரிசத்தில், அவள் உரிமையில் அவன் பெருங்குரலில் சிரிக்க, அவன் சிரிப்பில் மயங்கி அவள் அவனை பார்த்தாள். அவன் சிரித்து முடித்ததும், “சிரிச்சாச்சா? நீங்க இப்படி சிரிச்சி மாசக்கணக்கு ஆகுது தெரியுமா?” அவள் வருத்தத்தோடு கூற, “பங்காரு” அவன் அவள் கைகளை மென்மையாக வருடினான்.

“நீங்க என்னை நல்லா பார்த்துக்கறீங்க. ஆனால், நான் உங்களை நல்லா பார்த்துக்குறேனா? நீங்க சிரிக்கிறது கூட இல்லையே?” அவள் கண்களில் ஏக்கம் வந்து அமர, “ச்சீ… பங்காரு, என்ன இப்படி எல்லாம் பேசுற? நான் சந்தோஷமா தான் இருக்கேன் பங்காரு. என் பங்காரு என் பக்கத்தில் இருக்கும் பொழுது என் சந்தோஷத்துக்கு என்ன குறை வரப்போகுது?” அவன் புருவம் உயர்த்தி முறுவலித்தான்.

“அதனால் தான் என் முகம் பார்த்து பேச கூட மாட்டேங்கிறீங்களா?” அவள் கூர்மையாக கேட்க, “பங்காரு…” அவன் அவள் விழிகளை பார்த்தான். அது  வேதனையை பிரதிபலிக்க, “பங்காரு…” அவன் வார்த்தைகள் தடுமாறியது. “நீங்க என்கிட்ட அன்பா பேசுறீங்க. ஆனால், வெளிப்படையா பேசலை. தப்பு பண்ணின்னா கூட, நீங்க பண்ணது சரின்னு பேசுற என் கணவனை தான் எனக்கு தெரியும். நான் கேள்வி கேட்பேன்னோனு நம்ம தனிமையை தவிர்க்கறீங்க” அவள் கூற, “ஏன் அந்த ஆண்டவன் உனக்கு இவ்வளவு மூளை கொடுத்தான் பங்காரு?” அவன் தன் வருத்தத்தை மறைத்து சிரிப்பினோடே பேச்சை திசை திருப்ப முயன்றான்.

“என்கிட்ட என்ன பொய் சொல்லறீங்க? இல்லை எதையோ மறைக்குறீங்க” அவள் குரலில் இப்பொழுது கண்டிப்பு இருக்க, “பங்காரு” அவன் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு தடுமாறினான்.  “எதுவா இருந்தாலும், பரவால்லை சொல்லுங்க. தப்பா இருந்தாலும், சேர்ந்தே வலியை அனுபவிப்போம். என்ன பிரச்சனை? பணக்கஷ்டமா? இல்லை தொழில்ல எங்கையாவது ஏமாந்துடீங்களா? இல்லை, நீங்க ஏதாவது தப்பு பண்ணிடீங்களா? இல்லை உங்களுக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா? ம்… என்னனு சொல்லுங்க?” அவள் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி கேட்க, அவன் அனைத்தையும் மறைத்து சிரித்தான்.

“பங்காரு… பங்காரு… அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை. அக்காவுக்கு அப்படி ஆகிருச்சேன்னு தான்…” அவன் ஆரம்பிக்க, “பொய். நானும் அப்படித்தான் யோசிச்சேன். ஆனால், நீங்க அந்த விஷயத்தை யோசிக்கலை. முன்ன மாதிரி அக்கா வீட்டுக்கு போறதில்லை. அக்கா கிட்ட பேசுறதில்லை.” அவள் பேச, “என்ன நீ, நான் அக்கா வீட்டுக்கு அடிக்கடி போனாலும் தப்புன்னு சொல்ற. போகலைனாலும் தப்புன்னு சொல்ற” அவன் அவள் தலையில் தட்டி முறைத்து உற்சாகமாக இருப்பது போல் காட்டிக்கொண்டான்.

“அக்கா கூட சண்டையா?” அவள் கறாராக கேட்க, “ஓ! என் அக்கா கூட சண்டை வரணும்னு தான் உனக்கு ஆசையோ?” அவன் கண்சிமிட்டி அவளை வம்பிழுக்க, “ஆரம்பத்தில், உங்களை விட குழந்தை முக்கியமானு நீங்க கேட்டிருக்கீங்க? நானும் ஆமான்னு சொல்லிருக்கேன். எனக்கு என் குழந்தைகள் முக்கியம் தான். ஆனால், என் குழந்தையை நீங்க அழித்தப்ப கூட நான் உயிரோடு தான் இருந்தேன். உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.” அவள் கூற, “பங்காரு… என்னம்மா இது” அவளை தோளோடு அணைத்துக் கொண்ட அவன் குரல் உடைந்தே போனது.

“நீங்க எதையோ நினைத்து மருகறீங்க. நான் உங்களை காதலித்து கல்யாணம் பண்ணலை. நீங்க தாலி கட்டி உருவான பந்தம் தான் இது. எனக்கு உங்களை பிடிக்கும். எனக்கு உங்க கிட்ட பல வருத்தங்கள் உண்டு. கோபம் உண்டு. ஆனால், அதை எல்லாம் தாண்டி எனக்கு உங்களை பிடிக்கும். இன்னும் மாறாத வடுவா எனக்கு காயங்கள் இருக்கு. ஆனால், அதையும் தாண்டி எனக்கு உங்களை பிடிக்கும்.” பொது இடம் என மறந்தும் அவன் தோளில் அவள் கண்ணீர் உகுத்தாள்.

“பங்காரு…” அவன் கண்கள் கலங்கியது.  அதற்கு மேல் பேச விரும்பாமல் படக்கென்று எழுந்து கொண்டு அவள் முன்னே நடக்க, “பங்காரு…” அவன் அவள் பின்னோடு சென்றான்.

“ஏய், எனக்கு ஒண்ணுமில்லை டீ. நான் நல்லா தான் இருக்கேன். அக்காவோட கொஞ்சம் வருத்தம். அவங்க உன்னை பத்தி பேசினாங்கள்ல முன்னாடி… அந்த வளைகாப்பு வீட்டில்… அதிலிருந்து, மத்தபடி ஒன்னுமில்லை. நீ இந்த மாதிரி நேரத்தில், சந்தோஷமா இருக்கணும். நான் ஏதோவொரு யோசனையில் இருந்துட்டேன். அவ்வளவு தான்” அவன் அவள் முன்னே வழி மறித்து நின்று, அவள் விழிகளை பார்த்து கூறினான்.

அவள் விழிகள் விழிநீரை தேக்கி கொண்டு அவனை பார்க்க, ‘பங்காரு,  உன் ஒரு குழந்தையை யமனுக்கு கொடுத்தேன். இப்ப, ஒரு குழந்தையை தானம் பண்றதா வாக்கு கொடுத்துட்டேன். நான் செய்றது தப்புனு தெரிந்தாலும், ஒவ்வொவொரு முறையும் தெரிஞ்சே பண்றேன் பங்காரு. அதை உன்கிட்ட சொல்ற தைரியம் கூட எனக்கு இல்லை பங்காரு. அது தெரிந்தால் நீ வருத்தப்படுவேன்னு மறைக்க நினைத்தால், நீ அதுக்கும் வருத்தப்படுற’ அவன் விழிகளின் பார்வை அவளை வருட, அவன் அன்பின் விசையில் கட்டுண்டு, அவள் விழிகளில் நீர்த்துளி அவன் கரங்களை பட்டுதெறிக்க,

“பங்காரு…” அவன் அவள் விழிநீரை துடைத்துவிட்டான். அதே நேரம், அவன் விழிநீரும் அவன் அறியாமல் அவள் ஸ்பரிசத்தை தீண்டியதை அவன் அறியவில்லை. ஆனால், அவள் கண்டுகொண்டாள். “உனக்கு என்னை எவ்வளவு பிடிக்குமுன்னு நீ சொல்லியா நான் தெரிஞ்சிக்கணும் பங்காரு? என் பங்காரு மனசு முழுக்க நான் தான் இருக்கேன். அப்படி இருக்க உன் மனசை பத்தி நீ எனக்கு சொல்றீயா?” அவன் அவள் கைபிடித்து நடந்தபடியே பேசினான்.

‘நீங்க எதையோ என்கிட்டே சொல்ல விரும்பலை.’ மேலும் அவனை கேள்விகளால் துளைக்க விரும்பாமல் அவள் மௌனிக்க, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

வம்சி அதன்பின் மிக கவனமாக  அவன் மன உளைச்சலை தன்னோடு மறைக்க முயற்சித்தான். அவளுக்காக சிரித்தான். அவள் சந்தோஷமாக இருக்க, அவன் முகத்தில் உற்சாகத்தையும், புன்முறுவலையும் தேக்கி கொண்டான்.

மாதங்கள் கடந்து, ‘அக்கா எந்த பேச்சும் பேசி விட கூடாது. பங்காருவுக்கு எந்த விஷயமும் தெரிந்து விட கூடாது’ என்ற வம்சியின் பயத்தோடே மிருதுளாவின் வளைகாப்பு விழாவும் விமரிசையாக நடந்து முடிந்தது.

விமரிசையாக நடந்து முடிந்த வளைகாப்பு வீட்டில் அப்படி ஒரு குழப்பம் வரும் என்று யாரும் நினைக்கவில்லை.

மயங்கும்…