மயங்கினேன் பொன்மானிலே – 29 (Pre final Episode)

பொன்மானிலே _BG-42ca1aac

அத்தியாயம் – 29

வம்சி எதுவும் பேசவில்லை. அவன் தமக்கை கூறிய வார்த்தையில் துடிக்க மறந்த அவன் இதயம் சற்று நின்று துடிப்பது போல் இருக்க, நெஞ்சை பிடித்தபடி அமர்ந்திருந்தான். ‘அக்கா ஏன் என்னை புரிந்து கொள்ளவில்லை. நான், எதுவும் தப்பு செய்யறேனா? ஒருவேளை பங்காரு கிட்ட பேசி குழந்தையை …’ அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

அவன் சிந்தனை சென்ற திசையில் அவன் நொறுங்கி விட்டான். ‘என் குழந்தைகளை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். நாளைக்கு வளர்ந்து வந்து… அப்பா, எங்களை வளர்க்க உன்னால் முடியாதான்னு கேட்டுடா? இப்பவே ரெண்டும் என்னை எட்டி உதைக்குதுங்க. சிரிக்குதுங்க. நான் என் பிள்ளைகளை விட்டுத்தர மாட்டேன்.’ தன் தலையை பிடித்து கொண்டு அமர, அவன் நெற்றியில் வியர்வை துளிகள்.

மிருதுளா அவன் அருகே சென்று, அவன் முகத்தை கைகளால் ஏந்தி, தன் முந்தானையால் முகத்தை துடைத்து விட்டாள். அவனுக்கு தண்ணீர் கொடுக்க, அவன் அதை வாங்கி குடித்தான். அவன் மூச்சு சற்று சீரானது. சாந்தமாக இருக்கும் தன் மனைவியின் முகத்தை பார்த்தான். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால், அவன் மனநிலையை அவளால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

இருந்தும், அவன் பேசட்டும் என்பது போல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ப… மிருதுளா, நீ என்னை விட்டு போய்டு. குழந்தைகளை கூட்டிட்டு போய்டு” அவன் பங்காரு என்ற வாரத்தையோடு அவளை விலக சொல்ல முடியாமல், “மிருதுளா என்னை விட்டுட்டு போய்ட்டு.” தன் தலையில் அடித்துக்கொண்டு கதறினான். அவள் அவனை உற்று பார்த்தாள்.

“எனக்கு பயமா இருக்கு பங்காரு. நான் என்னையும் மீறி, உன்னை கஷ்டப்படுத்திருவேனோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு பங்காரு” அவள் முகம் பார்க்க முடியாமல், தன் முகத்தை அவன் மூடிக்கொள்ள, அவன் முதுகு குலுங்கியது.

அவன் சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவள் முகம் பார்த்து, “நீ குழந்தைகளை கூட்டிட்டு இங்கிருந்து என்னை விட்டுட்டு போய்டு” அழுத்தமாக கூற, சாந்தமாக நின்ற அவள், “பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். அக்காவின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தவன் மனைவி கொடுத்த அதிர்ச்சியில் சற்று நிதர்சனத்திற்கு வந்தான்.

“உங்களை விட்டுட்டு போகணுமுன்னா நான் எப்பவோ போயிருப்பேனே” அவள் அவன் மார்பில் குத்த, “நீ போயிருக்கணும் பங்காரு. நான் உன் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். நான் எத்தனை தடவை தான் மன்னிப்பு கேட்குறது?” அவன் சோகமாக கேட்டான்.

“நீங்க வாக்கு கொடுத்ததெல்லாம் தப்புன்னு நான் சொல்ல மாட்டேன்” அவள் கூற, அவன் அதிர்ச்சியாக பார்த்தான். “எங்க அம்மாவோ அப்பாவோ உடம்பு சரி இல்லாம மருத்துவமனையில் இருக்கும் பொழுது எனக்கு ரொம்ப தனிமையா இருக்கு. உன் குழந்தையில் ஒன்னு என் கிட்ட இருக்கட்டுமான்னு கேட்குறாங்கனு வைங்க. இல்லையில்லை அதெல்லாம் இல்லை. நான் தரமாட்டேன்னு சொல்லுவேனா? இல்லை என் புருஷன் கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமான்னு கேட்பேனா?”

“அதனால் என்ன அம்மா… குழந்தை உங்க கிட்ட வளரட்டும். முதலில் நீங்க தேறி வாங்கன்னு சொல்லிருப்பேன். அதனால், நான் என் குழந்தையை தூக்கி அப்படியே என் அம்மா கிட்ட கொடுத்திருவேனா? என்னால், உங்க சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியாதா? நீங்க உங்க அக்கா விஷயத்தில் தப்பு பண்ணலை” அவள் அவனுக்கு புரிய வைத்தாள்.

“எனக்கும் அப்படித்தான் தோணுது” அவன் நெஞ்சை நீவிக்கொண்டான். “ஆனால், உங்க கிட்ட கேட்காமல் நான் அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருந்தாலும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா உங்க கிட்ட சொல்லிருப்பேன்” அவள் குரலில் கோபம் இருக்க, “பங்காரு…” அவன் அழைக்க,”பேசாதீங்க… உன் நல்லதுக்கு தான் சொல்லலை. உன் மனசு வருத்தப்படுமேன்னு தான் சொல்லலை. அதை தானே சொல்ல போறீங்க?” அவள் கடுப்பாக கேட்டாள்.

“அது தான் உண்மை பங்காரு…” அவன் அவளை சமாதானம் செய்தான். “இனி, இப்படி நீங்க மட்டும் யோசிச்சு கவலை படாதீங்க. எதுவா இருந்தாலும், என் கிட்ட சொல்லுங்க. நீங்க எதையோ நினைத்து வருத்தப்படுறீங்கன்னு, நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா?” அவள் கரிசனத்ததோடு கூற, அவள் கண்கள் அவன் மீது அன்பை பொழிந்தது. அன்பை பொழிந்த அவள் விழிகளுக்கு அவன் இதழ்கள் பரிசை வாரி இறைத்தன.

“எவ்வளவு பெரிய கவலையா இருந்தாலும் சேர்ந்தே சரி பண்ணுவோம். நான் உங்களை விட்டு போகவே மாட்டேன். உங்க கிட்ட சண்டை போடுவேன். கொஞ்சம், நிறைய, பயங்கரமா அப்படினு சண்டை போடுவேன். ஆனால், விலகி போகவே மாட்டேன். உங்களை மாதிரி மனசு நிறைய அன்பு வச்சிருக்குறவங்களை ஒரு பொண்ணு விலகி போனா அப்படின்னா, அவளுக்கு பொறுமை இல்லை, பக்குவம் இல்லை சாமர்த்தியசாலித்தனம் இல்லைன்னு தான் அர்த்தம். உங்களுக்கு என் மேல அன்பு இல்லைன்னா, நான் உங்களை தூக்கி போட்டுட்டு என்னைக்கோ போயிருப்பேன். எனக்கு உங்க மேல காதல், எனக்கு உங்க மேல அன்புன்னு உங்களை மன்னித்து உங்க கூட வாழற அளவுக்கு மிருதுளா நல்லவ இல்லை. இந்த பங்காரு பொறுமைசாலி, பக்குவக்காரி சாமர்த்தியசாலி. ஆனால், ஏமாளி கிடையாது” அவள் அழுத்தமாக கூற,

‘ஒரு கட்டத்திற்கு மேல், ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்கள் கணவனாலோ, மனைவியாலோ மட்டும் தான் புரிந்து கொள்ள முடியுமோ?’ என்ற எண்ணம் அவனை சூழ அவன் மௌனித்துக் கொண்டான். அவன் நிதானத்திற்கு வர, அவனுக்கு சற்று தனிமை கொடுத்து தன் வேலைகளை கவனிக்க சென்றாள் மிருதுளா.

***

பத்மப்ரியா வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து மிருதுளாவை திட்டி கொண்டிருந்தாள். சிந்து எதுவும் பேசவில்லை. அன்றைய சம்பவத்துக்கு பின் அவளிடம் மாற்றம். உதய் அவளிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் இருந்தான்.

“நன்றி கெட்ட உலகம்… நான் இல்லைனா, என் தம்பி இவளுக்கு கிடைச்சிருப்பானா?” பத்மா புலம்பிக்கொண்டே போக, “சிந்து நீ உள்ள போய் படி” அவன் தன் மகளை உள்ளே அனுப்பிவிட்டு, தன் மனைவியை பார்த்து, “உண்மை தான் பத்மா. நன்றி கெட்ட உலகம்” அவனும் அழுத்தமாக கூறினான்.

“நாம்ம வம்சிக்கு எவ்வளவு செய்திருக்கோம். தம்பியை பார்த்துக்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்துப்பேன் நீ சொன்ன. நான் சுயநலவாதி தான். என் அம்மா அப்ப இருந்த உடல்நிலை காரணமா, உன்னையும் உன் தம்பியையும் பார்த்துக்குறேன்னு கல்யாணம் செய்தேன். நீ இல்லைனா, அவனுக்கு யார் சாப்பாடு போட்டிருப்பா? யார் படிக்க வச்சிருப்பா. அவன் படிப்புக்கு வாங்கின கடனை அவன் அடைத்தாலும், நாம கைகாட்டலைனா அவனுக்கு யார் பணம் கொடுத்திருப்பா?” வம்சி நிறுத்த, இப்பொழுது பத்மப்ரியாவிடம் அமைதி.

“அவனுக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்தது நீ. என்ன பெருசா கேட்டுட்ட? ஒரு பிள்ளையை தானே கேட்குற. அவன் கொடுத்திருக்கணும்” உதய் கூற, “என்ன என் தம்பிக்கும் எனக்கும் சண்டையை பெருசு படுத்தலாமுன்னு பாக்கறீங்களா?” அவள் சீற, “இல்லை, பத்மா. அவன் இதுவரைக்கும் நமக்கு என்ன செஞ்சிருக்கான்? ஏதாவது இருக்கா?” என்று உதய் நியாயம் பேச, “என் தம்பி என்ன செய்யலை? என்ன செய்யலைனு கேட்குறேன்?” பத்மப்ரியா வீஞ்சிக்கொண்டு உதயிடம் சண்டைக்கு தயாரானாள்.

“ஏதோ தங்க இடம் கொடுத்து, சாப்பாடு போட்டீங்க அவ்வளவு தான். அவன் படிப்பு, அவன் உழைப்பு தெரியுமா? அவன் படித்த கடனை அவன் தான் அடைத்தான். ஆனால், அவன் சம்பாதிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து அவன் அக்கா… அக்கான்னு நம்ம வீட்டுக்கு தான் செய்யறான். உங்களுக்கும் எனக்கும் சிந்துக்கும் அவன் செய்ததை சொல்லி காட்டட்டுமா? இன்னமும் அவன் கடையில் தொழிலில் வேலை பார்த்திட்டு, நம்ம கடையிலும் மாடு மாதிரி வேலை பார்க்குறான். அவனை பார்த்து, நீங்க எப்படி அப்படி சொல்லலாம்?” பத்மப்ரியா கண்ணீர் மல்க கோபமாக கேட்டாள்.

“நான் சொல்லலை பத்மா. நீ தானே சொன்ன?” அவன் கேட்க, “நான் அவன் பொண்டாட்டி மேல உள்ள கோபத்தில் ஏதோ ரெண்டு வார்த்தை சொல்லிட்டேன்” அவள் சிடுசிடுக்க, “உன் தம்பி உனக்கு செய்யறான் சரி. மிருதுளா உனக்கு எதுக்கு பிள்ளையை கொடுக்கணும்?” உதய் கேட்க, அவளிடம் மௌனம்.

“ஆனால், அந்த பொண்ணு நமக்கு என்னவெல்லாம் பண்ணிருக்கு தெரியுமா?” அவன் கேட்க, அவள் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். “அவங்க முதல்  குழந்தை  கரு ஏன் கலைஞ்சிது தெரியுமா? உன் தம்பி மிருதுளாவோட கருவை கலைச்சிருக்கான். அதுவும் மிருதுளாவுக்கே தெரியாம? கலைத்ததுக்கு உன் தம்பி சொன்ன காரணம் என்ன தெரியுமா? என் அக்கா குழந்தை உண்டாக்கிருக்கா, அந்த டெலிவெரியை நாம பார்க்கணுமுன்னு சொல்லிருக்கான்.” உதய் பேசப்பேச பத்மப்ரியா உறைந்து நின்றாள்.

“நீங்க மிருதுளாவை குழந்தை இல்லைனு எவ்வளவு பேசியும், அவள் ஒரு வார்த்தை பேசலை. இதை ஒரு நாள் பேச்சுவாக்கில் வம்சி சொல்லவந்தப்ப கூட, மிருதுளா சொல்லவிடலை. இதுக்கெல்லாம் மேல, உன் தம்பி அவளுக்கு செய்த துரோகத்துக்கு அவள் நம்ம குடும்பத்துக்கு செய்த கைமாறு என்ன தெரியுமா?” அவன் கேள்வியாக நிறுத்த,  ‘இன்னும் என்ன இருக்கிறதோ?’ என்று அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“நம்ம சிந்துவை பத்தி சொன்னால் நீயும் அம்மாவும் குதிப்பீங்களே. ஆனால், மிருதுளா சொன்னது தான் உண்மை. சிந்துவும், அவள் பிரெண்ட்ஸும் நமக்கு தெரியாம பொது இடத்தில் பிராங்க் விடீயோஸ் செய்து யூடியூபில் போட்டிருக்காங்க. ஸ்கூல் படிக்குற பொண்ணு வீட்டுக்கு தெரியாம இதை எல்லாம் செய்யலாமா? அதில் எவனோ ஒருத்தன் சிந்து பிரெண்டை மடக்கி பிடிச்சி மிரட்டிருக்கான். அன்னைக்கு சிந்துவையும் அவன் தான் வர சொல்லி மிரட்ட இவளும் போயிருக்கா. அன்னைக்கு, மிருதுளா வம்சி கிட்ட சொல்லி எங்களை சரியான நேரத்துக்கு அங்க அனுப்பலைனா, அன்னைக்கு என்ன அசம்பாவிதம் நடந்திருக்கும்முனு எனக்கு சொல்ல தெரியலை பத்மா”

“நாங்க எல்லா விடியோஸையும் அழிச்சிடறோம்முனு அன்னைக்கு சமாதானம் பேசி எல்லா பிரச்சனையையும் முடிச்சி வச்சிருக்கோம். நாம அவளை கவனிக்கலை. அவ தனி மொபைல் வச்சிருக்கிறது கூட நமக்கு தெரியலை” அவன் நிறுத்த, “இதை எல்லாம் நீங்க ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை?” அவள் மிரட்சியாக கேட்டாள்.

“வம்சி குழந்தை விஷயம், எனக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும். நான் வந்தது தெரியாம அவங்க பேசிட்டிருந்தாங்க. நானும் தெரியாத மாதிரி வந்துட்டேன். சிந்து விஷயம், மெதுவா பக்குவமா சொல்லனுமுனு இருந்தேன். சிந்து இப்ப ரொம்ப மாறிட்டா. குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிருச்சு. ஆனால், நாம நம்ம பிள்ளைங்களை கவனிக்கணும். தப்பு என் மேலையும் இருக்கு. ஆனால், உன் மேலையும் இருக்கு பத்மா. உனக்கு எப்பப்பாரு மிருதுளாவை குறை சொல்லணும்… உன் தம்பி குடும்ப நினைப்பு தான்…” அவன் நிறுத்த,

“என் தம்பி அவன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நினைக்குற சராசரி நாத்தனாருனு என்னை சொல்லறீங்களா?” அவள் கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள்.

“உன் தம்பி உனக்கு தம்பி தான். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால், உன் தம்பி குடும்பம் உன் குடும்பமாக முடியாது. அதை நீ புரிஞ்சிக்கணும். உன் தம்பி குடும்பத்தலைவி மிருதுளா தான். நீ இல்லை. நீ அவங்க குடும்பத்தில் மேல காண்பிக்குற கவனத்தை நம்ம குடும்பத்தில் காட்டினா பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் பத்மா” உதய் பொறுமையாக கூற, பல அதிர்ச்சிகளில் அவள் அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

***

வம்சி பலமுறை அவன் தமக்கைக்கு அழைத்தும் அவள் அலைபேசியை எடுக்கவில்லை. வம்சி உண்ணவில்லை. அவன் நடை தளர்ந்தது. மிகவும் சோர்வாக இருந்தான். நடைப்பிணமாக இருந்தான். மிருதுளாவிடம் அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், அவன் வருத்தம் அவளுக்கு புரிந்தது. அவனுக்காக அவள் மனம் தவித்தது.

“உங்க அக்காவுக்கு…” மிருதுளா ஆரம்பிக்க, “அரிசி கொடுத்துத்தான் அக்கா வீட்டில் உறவுன்னா, அந்த உறவு எனக்கு வேண்டாம் பங்காரு. எனக்கு கஷ்டம் தான். ஆனால், அப்படி இருக்கிற உறவு நீடிக்காது. நான் சில விஷயங்களுக்கு எந்த இடத்திலையாவது முற்று புள்ளி வைக்கணும். இப்படித்தான் என் தலை எழுதுன்னா, அது இப்படியே இருந்திட்டு போகட்டும்.” அவன் குரல் அழுத்தமாக கூறினாலும், அதில் அதீத விரக்தி மண்டி கிடந்தது.

“நான் உடனே வரேன். நீங்க தூங்குற குழந்தையை பார்த்துக்கோங்க.” கூறிக்கொண்டே, மிருதுளா மடமடவென்று ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, “பங்காரு, எனக்கு குழந்தையை சரியா கூட பார்க்க தெரியாது. தூக்கிட்டு வர கூட தெரியாது.” அவன் அவள் கைகளை தடுத்து நிறுத்த முயல, அவன் கைகளை தட்டிவிட்டு, “இப்ப தான் பால் கொடுத்திருக்கேன். அழுதா தொட்டிலை ஆட்டுங்க” கூறிக்கொண்டு வாசல் பக்கம் வந்த ஆட்டோவில் ஏறி சென்றாள் மிருதுளா.

வீட்டில் இருக்கும் குழந்தையை விட்டுவிட்டு, திடிரென்று செயல்பட்ட மனைவியை தடுக்கவும் முடியாமல் பின்னே செல்லவும் முடியாமல் தவித்தான் வம்சி.

 மயங்கும்…