மயங்கினேன் பொன்மானிலே-5

பொன்மானிலே _BG-c563728c

அத்தியாயம் – 5

 மிருதுளா தன் பெற்றோரிடம் குழந்தை விஷயத்தையும் தான் ஓய்வு எடுக்க அங்கு வருவதாகவும் தெரிவித்திருந்தாள்.  மறுநாள் காலை அவர்கள் வருவதாக ஏற்பாடு ஆகி இருந்தது.

“பங்காரு” அழைத்தபடி வம்சி அறைக்குள் வந்தான். அவன் முகம் கலை இழந்திருக்க, அவன் கண்களோ அவளை பரிதவிப்போடு பார்த்தது.

அவள் பார்வையில் அவன் சட்டென்று, “மிருதுளா…” என்று மாற்றிக் கொண்டான்.

ஆனால், அவன் மனமோ, ‘என் பங்காருவை நான் பங்காருன்னு கூப்பிடுறேன். இவளுக்கு என்ன பிரச்சனை?’ என்று சுணங்கி கொண்டது.

அவன் கண்கள் துவண்டு கிடந்த அவள் தேகத்தை வருடியது. அவள் ஸ்பரிசம் தீண்டி ஆறுதல் கூற துடித்தது.

‘இப்படி அழுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கலை. நான் உன் கூடவே இருக்கிறேன். ஏன் இப்படி வருத்தப்படுற?’ என்று அவளை அணைத்து கண்டிக்க துடித்தது.

ஆனால், அவள் முகம் காட்டிய துயரத்தில், அவன் தன்னை நிதானித்துக் கொண்டான்.

“மத்த பிரச்சனை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நீ சாப்பிடு. நீ ஒண்ணுமே  சாப்பிடாம இருக்க. உன் உடம்பு இப்ப பலவீனமா இருக்கு.” அவன் குரலில் அக்கறையை தேக்கி கொண்டு சொன்னான்.

அவள் பேசவில்லை.  “நானும் சாப்பிடல ப… மிருதுளா. பசிக்குது சாப்பிட வாம்மா” அவன் அவள் அருகே அவள் கைகளை பிடித்து குழைவான குரலில் பேசினான்.

அவன் கைகளிலிருந்து அவள் தன் கைகளை உருவிக் கொள்ள முயன்றாள். அவள் உருவிக் கொள்ள எத்தனிக்க, அவன் பிடிமானம் இறுகியது.

‘நான் உன்னை விட மாட்டேன்’ என்று அவன் பிடி சொல்லாமல் சொல்லியது.

அவள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது.

அவள் விழிநீர், அவன் கரங்களை தீண்ட அவள் கைகளை விடுவித்தான்.

அவள் விழிநீரை துடைத்து, “நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு நான் உன்னை தொட கூடாதுன்னு சொல்லுற?” அவன் குரல் உடைந்திருந்தது.

“நான் உன்கிட்ட சொல்லாமல் செய்தது தப்புத்தான். ஆனால், உன் நல்லதுக்காக, தான் நான் அப்படி செய்தேன். நான் சொல்லிருந்தா நீ இப்படி எல்லாம் வருத்தப்படுவேன்னு தான். உன் சந்தோசம், உன் நலன் எனக்கு முக்கியமில்லையா பங்காரு?” அவன் அவள் முகம் உயர்த்தி கேட்க,

“உங்க நடிப்பை பார்த்து ஏமாற, நான் உங்க பங்காரு இல்லை. நேத்து உங்க குழந்தையோட… ச்சீ… ச்சீ… என் குழந்தையோட அந்த பங்காருவும் செத்து போய்ட்டா. நடிக்காம அப்படியே போய்டுங்க.” அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பங்…” அவன் அழைக்க ஆரம்பித்து, “மிருதுளா, உன்னை பத்தி எனக்கு தெரியும். உனக்கு கோபம் வரும். ஆனால், நீடிக்காது. என் பக்கம் நியாயம் உனக்கு புரிந்ததும் நீயே மாறிடுவ” அவன் குரலை உயர்த்தி அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்?” அவளிடம் ஒரு விரக்தி புன்னகை.

“என்னை பத்தி என் வீட்டில், என் நண்பர்கள் கிட்ட கேட்டு பாருங்க.” அவள் குரல் கடுமையாக வெளி வந்தது.

“விசாரிக்க என்ன இருக்கு பங்காரு? ரொம்ப நல்லவ, பொறுமைசாலி, அன்பானவள் இந்த பாவா மேல உயிரை வச்சிருக்க.” அவன் கூற,

“நேத்து வரைக்கும் வச்சிருந்தவ, குழந்தையோடு அந்த உயிரும் செத்து போச்சு.” அவள் அமைதியாக கூறினாள்.

“என்னை பத்தி உங்களுக்கு முழுசா தெரியாது. இந்த சில மாதங்களில் ஒரு சாதாரண கணவனுக்கு அவன் மனைவியை பற்றி தெரிந்திருக்கும். உங்களுக்கு தெரியாது. ஏன் தெரியுமா? உங்களுக்கு தான் உங்க அக்காவை கவனிக்கவே நேரம் பத்தாதே. இதுல என்னை எப்படி புரிஞ்சிப்பீங்க?” அவள் வார்த்தைகள் நிதானமாக வெளி வந்தன.

“மிருதுளா…” அவன் எழுந்து நின்று கர்ஜித்தான்.

“பார்த்தீங்களா, உண்மையை சொன்னதும் கோபம் வருது.” அவள் இப்பொழுது ஏளனமாக சிரித்தாள்.

“உங்க உண்மை முகம் இது தான். உங்க அக்காவுக்கு கடமை முடிய உங்களுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சி வைக்கணும். எந்த இளிச்சவாய் மாட்டுவான்னு பார்த்திருந்து என்னை கட்டி வச்சிட்டாங்க” அவள் கூற,

“போதும் மிருதுளா. நம்ம பிரச்னையில் அக்காவை ஏன் இழுக்கிற?” அவன் அவளை கடுப்பாக பார்த்தான்.

“நம்ம பிரச்சனையே உங்க அக்கா தானே. என் குழந்தையை கொன்றது உங்க அக்கா வயித்தில் வளர…” அவள் உலகத்திற்கு வந்திராத சிசுவின் மேல் பழி கூற விருப்பமில்லாமல் தன் தலையில் அடித்து கொண்டு கதறினாள்.

அவள் கைகளை அவன் இறுக பற்றினான்.

அவன் முகத்தோடு அழுத்திக் கொண்டான். அவன் கண்ணீர் அவள் உள்ளங்கையை நனைத்தது.

“பங்காரு… பங்காரு… பங்காரு…” அவன் அழைப்பு நீண்டு கொண்டே போனது.

அவன் ஒவ்வொரு அழைப்புக்கும், அவன் கண்ணீர் துளி அவள் கைகளை தொட்டது. அவன் இதழ் ஸ்பரிசம் அவள் விரல் நுனியை தீண்டியது.

அவள் விருப்பமில்லாமல் தன் விரலை மடக்க, “தப்புத்தான் பங்காரு. உன்கிட்ட பேசி, உன்னை புரிய வைத்து நான் இதை பண்ணிருக்கணும். காலம் கடந்தா, உன் உடம்புக்கு ஏதாவது ஆகிருமுன்னு தான் நான் அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேன்.” அவன் கூற,

‘இவன் பேச்சை கேட்டுகிட்டே இருந்த, மிருதுளா நீ கொலைகாரியாகிருவ’ அவள் இதய துடிப்பு ஏறியது.

“நீ அன்பானவள் மிருதுளா… உன்னால் கோபத்தில் கூட ஒரு குழந்தை மேல பழி சொல் சொல்ல முடியலை பார்த்தியா?” அவன் அவளுக்கு அவளையே காட்ட நினைத்தான்.

“உண்மை தான். நான் அன்பானவள். என் அன்புக்கு எல்லை கோடுகளே கிடையாது. அதனால், தான் நமக்கு இடைஞ்சலா இருந்த உங்க அக்கா பொண்ணு மேல கூட நான் அன்பு காட்டிகிட்டு இருக்கேன். அவ பக்கம் ஏதோ தப்பு நடக்குதுன்னு உங்க கிட்ட பல தடவை சொல்ல முயற்சி பண்ணிருக்கேன்.” அவள் கூற, அவன் இடைமறிக்க முயன்றான்.

“ஷ்… நான் பேசணும். நான் மட்டும்தான் பேசணும். நான் இந்த வீட்டை விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி பேசணும். என்னை பேச விடலை. உங்களையும் உங்க அக்காவையும் சேர்த்து சந்தி சிரிக்க வச்சிருவேன்.” அமைதியாக அழுத்தமாக கூறினாள்.

அவன் அவளை மௌனமாக பார்த்தான்.

“சிந்து எப்படி போனால், எனக்கென்னன்னு விட எனக்கு மனசு வரலை. அது தான் என் நல்ல மனசு. அது உங்களுக்கு புரியலை. இல்லை, எனக்கு புரிய வைக்க தெரியலையான்னு எனக்கு தெரியலை ” அவள் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டாள். அவளிடம் விம்மல்.

அவள் விம்மியதும் ஏறி இறங்கிய அவள் மார்பை அவன் அச்சத்தோடு பார்த்தான். நேற்று வலிக்குது என்று அவள் கதறலுக்கு காரணமான வயிற்றை கவலையோடு பார்த்தான்.

“தம்பியை வாழ விடக்கூடாதுன்னு ஒரு அக்கா. த்தூ…” அவள் முகம் வெறுப்பை காட்ட, “பங்காரு…” அவன் அவளை கோபமாக நெருங்கினான்.

“ம்… நான் பங்காரு இல்லை” ஆள் காட்டி விரலை உயர்த்தி பேசிய அவளிடம் கர்ஜனை.

“அங்கேயே நில்லு. ஏதாவது பேசின, உன் அக்கா மேல போலீஸ் கம்பளைண்ட் கொடுத்துட்டு ஊருக்கு கிளம்பி போய்கிட்டே இருப்பேன். உன் துட்டு, அதிகாரம்  வைத்து வெளிய வந்தாலும் அவமானம் அவமானம் தானே? அவமானத்தில் அக்கவும் தம்பியும் சாகத்தான் செய்யணும்” அவள் எகிற,

அவன் முகத்தில் கலவரம்.

“இதெல்லாம் நான் ஏன் முன்னமே பண்ணலைன்னு யோசிக்கறீங்களா? அப்ப, இது நான் வாழ வந்த வீடு. இப்ப, இது என் வாழ்வை அழிக்க வந்து வீடு.” அவள் கூற அவன் அவளை புரியாமல் பார்த்தான்.

‘இப்ப என்ன நடந்திருச்சுன்னு இவ இப்படி புலம்புறா? கொஞ்ச நாள் கழித்து குழந்தை பெத்துக்கலாம். சாப்பிடாம இவள் இப்படியே பேசிட்டு இருந்தா இவ உடம்பு தாங்குமா?’ தன் மனைவியை கரிசனமாக பார்த்தான்.

அவனுக்கு மற்ற எல்லா பிரச்சனைகளும் பின்னுக்கு சென்றுவிட்டன. இப்படி உடல் சோர்வில், சாப்பிடாமல் இருக்கிறாளே என்பது மட்டுமே முன்னுக்கு நிற்க, “பங்காரு…” அவன் பரிதவிப்போடு அழைத்தான்.

“அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்றேன்னில்லை” அவள் உறும, “பங்காரு… எதுவும் மாறலை மா. நான் உன் கணவன், நீ என் மனைவி. என் பொண்டாடியை பங்காருனு கூப்பிடுற உரிமை எனக்கு இருக்கு.” அவன் அவள் தலை கோத முயல, அவள் அவன் கைகளை வேகமாக தட்டி விட்டாள்.

“உங்க கிட்ட பொறுமையா நான் இவ்வளவு நாள் இருந்ததும், என்னை முட்டாளுன்னு நினைச்சிட்டிங்களா? இல்லை, உங்க அக்கா செவுட்டில் விட்டு கேட்காம அமைதியா இருந்ததும் இவ பயந்தவன்னு நினைச்சிட்டிங்களா?” அவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள்.

“உங்க பக்கம் நியாயம் இல்லைனு எனக்கு தெரியும். அம்மா, அப்பா இல்லாம வளர்ந்திருக்கீங்க. நல்லது சொல்லி கொடுக்க ஆள் இல்லை. அக்கா வளர்த்ததில், முட்டாத்தனமான பாசத்தில் இருக்கீங்க. உங்களுக்கு பொறுமையா புரிய வைக்கலாமுன்னு பார்த்தேன். ஆனால், நீங்க என் பொறுமைக்கு என் குழந்தையை காவு வாங்கிட்டிங்கள்ல?” அவள் உடல் கோபத்தில் நடுங்கியது.

“பங்காரு…” அவள் தோள்களை பிடித்தான்.

அவள் மூச்சு விட முடியாமல் திணற, அவள் உடல் நடுக்கம் இன்னும் கூடி அவள் கைகள் விரைத்து கொண்டன.

“பங்காரு… பங்காரு…” அவளை அவன் மேல் சாய்த்து கொண்டு அவள் கன்னத்தை தட்டினான்.

அவள் நெற்றியில் இதழ் பதித்து, “பங்காரு… நீ இல்லைனா எனக்கு எதுவும் இல்லை. நான் எல்லாருக்கும் செய்றது என் கடமை. நன்றிக்கடன். ஆனால், பங்காரு நீ… நான் இல்லையா? நீயும் நானும் ஒன்னில்லையா?” அவன் அவளை உலுக்கியபடி கேட்டான்.

‘எதுவும் சாப்பிடாம இருக்கா. அது தான்’ அவன் சுதாரித்து கொண்டு, வேலையாளிடம்  உப்பும் சக்கரையும் கலந்த எலுமிச்சை சாறை கலந்து தரச் சொன்னான்.

வேலை செய்யும் பெண்மணியை வெளியே அனுப்பி, தன் மனைவியை பார்க்கும் பொறுப்பை அவனே எடுத்துக் கொண்டான். எலுமிச்சை பழ சாற்றை அவள் வாயில் புகட்டினான்.

அவளறியாமல், உப்பும் இனிப்பும் சேர்ந்த அந்த சாறு அவளுள் இறங்க அவள் நடுக்கம் குறைந்தது.

‘பிடிவாதக்காரி, இப்படி சாப்பிடாமல் இவள் எதை சாதிக்க போகிறாள்? என்கிட்டே சண்டை போட வேண்டியது தானே?’ அவன் கோபம் கனன்றது.

உணர்வு வர பெற்றதும், “தொடாதீங்க…” அவள் திமிர, “சரி பங்காரு தொடலை. தொடலை…” அவன் தன் கைகளை எடுத்துக்கொண்டான்.

“பங்காரு, நீ கோபப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கலை பங்காரு. நமக்கு வயசு இருக்கு. இப்ப என்ன உனக்கு குழந்தை தானே வேணும். நாம பெத்துக்கலாம். இப்ப ரெஸ்ட் எடு.” அவன் அனைத்தையும் மறந்து அவளை சமாதானம் செய்ய,

“எப்படி?” அவள் கண்களை விரித்தாள்.

“நீங்க என்னை தொட வரும் பொழுது, நான் என்னை மறந்து நிற்பேன்.  அப்ப நீங்க அக்கான்னு அலறி அடிச்சிக்கிட்டு ஓடவா?” அவள் இப்பொழுது அவனை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

அவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

“பங்காரு…” அவன் குரல் இப்பொழுது உறுமியது. தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு, அவன் கோபத்தை குறைக்க கைகளை இறுக மூடிக்கொண்டான்.

“இல்லை, நீ என் கிட்ட வரும் பொழுது நான் உங்க கிட்ட மயங்கி நிற்கும் பொழுது, இதுக்காகத்தானே வந்தேன்னு கேட்கவா…” அவள் அவன் கன்னத்தில், ‘பளார்…’ என்று அறைந்திருந்தாள்.

“அன்னைக்கு நீங்க இப்படி கேட்ட அப்பவே நான் அடிச்சிருக்கணும். போடான்னு போய்கிட்டே இருந்திருக்கணும். கால விழுறேன்னு உங்க வார்த்தையில் அமைதியா இருந்தேன் பாருங்க, என்னை செருப்பால அடிக்கணும்.” அவள் அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தாள்.

“நான் எந்த தப்பும் பண்ணலை பங்காரு. என்னை அடிப்பதால், உனக்கு கோபம் குறையுமுன்னா என்னை அடிச்சிக்கோ. எனக்கும் வலி தான். ஆனால், நீ எப்பவும் ரொம்ப எமோஷனால தான் யோசிக்குற. நான் பிராக்டிகலா இருக்கேன். எனக்கு கஷ்டம் இல்லையா?” அவன் நிதானமாக பேசினான்.

“ஆனால், அக்கா குழந்தையை தூக்கிட்டு வரும் பொழுது, நீயும் அப்படி இருந்தா நம்ம குழந்தையையும் நாம் சரியா பார்க்க முடியாது. அக்கா குழந்தையையும் நாம் சரியா பார்க்க முடியாது.” அவன் கூற, அவள் தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தாள்.

“ஊரு உலகத்தில் நடக்காததில்லை. அக்கா டெலிவரி முடியட்டும்முன்னு தங்கை வெய்ட் பண்றதும், தங்கை பொறுப்பை முடிச்சிட்டு நாம குழந்தை பெத்துக்கலாமுன்னு அண்ணன் நினைக்கறதும் சாதாரண விஷயம்.” அவன் பொறுமையோடு விளக்கினான்.

“நாம் சில விஷயங்களுக்காக இத்தனை நாள் குழந்தையை தள்ளி போடலையா?” அவன் கேட்க, அந்த விஷயம் மிருதுளாவின் சிந்தையை தொட, அவள் கோபம் சுர்ரென்று ஏறியது.

‘நான் இப்ப அதை நினைக்க கூடாது. இருக்கிற பிரச்சனை போதும்.’ அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“அக்கா, விஷயம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நாம நம்ம குழந்தையை தள்ளி தானே போட்டிருப்போம்” அவன் கேள்வியாக நிறுத்த,

“நம்ம குழந்தையை கொல்ல சொன்னது உங்க அக்காவா?” தன் கண்களை இடுக்கி அவனை பார்த்தாள்.

“உன்னை…” அவன் கைகளை ஒங்க, “அடிங்க… ஏன் நிறுத்திட்டீங்க?” அவள் கேட்க, அவன் கைகள் தானாக கீழே இறங்கியது.

“பங்காரு… என்னை நீ படுத்துற?” அவன் தன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்.

“காலா காலாமா பொண்ணு பொறுத்து தான் போகணும். புகுந்த வீட்டுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போகணும். இப்படியே சொல்லி சொல்லி வளர்த்து எங்க சுயத்தை மறக்கடிச்சி தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பறாங்க. அங்க நடக்குது முதல் தப்பு.” அவள் நிறுத்த,

அவன் எதுவும் பேசவில்லை.

“அன்னைக்கே, உங்க அக்கா வீட்டுக்கு வந்து, ஏண்டி ஏன் மாப்பிள்ளையை உன் வீட்டில் வச்சிருக்கன்னு கேட்காம விட்டது என் முதல் தப்பு.” அவள் கூற, அவன் அவளை வெறுப்போடு பார்த்தான்.

“எங்க அம்மா அப்பா வளர்ப்பு சரி இல்லைனு சொல்லிடுவாங்கன்னு நான் பொறுமையா போனேன். பொறுமையும் தேவை இல்லை. இந்த வாழ்க்கையும் தேவை இல்லை.”

“மிருதுளா…” அவன் குரலை உயர்த்தினான்.

“வில்லி மாதிரி பேசிகிட்டு இருக்க, லூசா நீ” அவன் கேட்க, ‘இவன் ஓர் அக்கா லூசு… இவன் குழந்தையை கொல்லுற வில்லன். ஆனால், இவன் என்னை கேட்குறானா?’ அவள் தன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டாள்.

“ஒரு பொண்ணு பிறந்த வீட்டிலிருந்து வரும் பொழுது நல்ல மனசோட தான் வர்றா. ஆனால், இந்த மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினன் இவங்க எல்லாம் பண்ற கொடுமையில் இல்லை குடுக்கற கொடைச்சல்ல தான் வில்லியா மாறிடுற. சில சமயங்களில் உங்களை மாதிரி அன்பை கொட்டுற புருஷனால் மாறிடுறா. நான் வில்லி தான்!” அவள் தன் கண்களை இறுக மூடி திறந்தாள்.

“வேண்டாம்… எனக்கு பேச பிடிக்கலை. அம்மா, அப்பா நாளைக்கு காலையில் வருவாங்க. நான் கிளம்புறேன். இது நாள் வரை நீங்க வாழ்க்கையில் எனக்கு செய்ததெல்லாம் போதும். நன்றி!” அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

அவள் ‘கிளப்புகிறேன்’ என்று கூறிய வார்த்தையில் அவன் மொத்தமும் மாறிப்போனான். அவன் பொறுமை பறந்தது. அவன் கோபம் கனன்றது.

‘கொஞ்சம் இடம் கொடுத்தால் இவ ரொம்ப பேசுறா…’ அவன் சீறி எழுந்தான்

“அது எப்படி போக முடியும் மிருதுளா?” அவன் புருவம் உயர்த்தினான்.

“எனக்கு பங்காரு வேணும்முனு சொன்னேன். நீ கேட்கலை. ஆனால், என் அக்காவை பார்த்துக என் மனைவி வேணுமுன்னு சொல்றேன். அதுக்காக என் குழந்தையையே நான் தியாகம் பண்ணிருக்கேன். அப்படி இருக்க உன்னை எப்படி நான் அனுப்புவேன்?” அவன் இப்பொழுது நக்கலாக கேட்டான்.

எப்படியும் தன் மனைவியை அனுப்பிவிட கூடாது. அவனை விட்டு அவள் பிரிந்து சென்று விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் வம்சி.

“என் பங்காரு என் கூட இருக்க வைக்க நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன்” அவன் குரல் குழைய, அவன் கைகள் அவள் கன்னத்தை தட்டியது.

“என்ன செய்தாலும், நான் இங்க இருக்க மாட்டேன். எல்லாம் முடிச்சி போச்சு.” அவள் விலகல் தன்மையோடு கூற,

 “எதுவமே முடியலை பங்காரு. இனி தான் ஆரம்பம். அக்கா டெலிவரி முடியட்டும். நம்ம கடமை முடியட்டும். நமக்குன்னு ஒரு குழந்தை வரும். நமக்கு என்ன வயசாகிருச்சு? அதுக்குள்ள ஏன் அபசகுனமா எல்லாம் முடிஞ்சிருச்சுனு பேசுற பங்காரு?” அவன் கேட்க,

“…” அவளிடம் மௌனம்.

“ரெஸ்ட் எடு பங்காரு” அவளை காயப்படுத்திவிட கூடாது என்று அவன் அறையைவிட்டு மடமடவென்று கிளம்ப, ‘என்னை எப்படி தடுக்க முடியும்?’ என்ற கேள்வி அவள் மண்டையை குடைய, ‘அதையும் நான் பார்த்திடுறேன்’ அவள் மனம் சவால் விட்டுக் கொண்டது.

மயங்கும்…