மயங்கினேன் பொன்மானிலே – 8

பொன்மானிலே _BG-4ed8ce98
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 8

மறுநாள் காலையில்,

ரோகிணியும், கிருஷ்ணனும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இருந்தனர். மிருதுளா தன் பெற்றோரை கவனித்து கொண்டிருந்தாள். வம்சி, ‘பங்காரு…’ என்ற அழைப்பினோடு தன் மனைவியை கவனித்து கொண்டிருந்தான். ஓரிரு நாட்கள் அவ்வாறு சென்றது.

அன்று மாலையில் தன் தாயின் உந்துதலில் மிருதுளா அவனுக்கு உளுந்த வடை கொடுக்க அவர்கள் அறைக்கு சென்று, அந்த வடையை அவன் முன் பட்டென்று வைத்தாள்.

அந்த உளுந்த வடையை பார்த்ததும் அவன் எண்ண அலைகள் அன்றைய நாளை நோக்கி சென்றது.

***

“வடை…” அவள் அன்போடு நீட்டிக்கொண்டு அவன் முன்னே நின்றாள்.

“அட பங்காரு, எனக்கு பிடித்த உளுந்த வடை. அழகா ஓட்டை வர்ற மாதிரி சின்ன சின்னதா போட்டிருக்கியே” அவன் ஆர்வமாக கூறினான்.

“ம்… நீங்க விரும்பி சாப்பிடறதை பார்த்து உங்களுக்கு பிடிக்குமுன்னு நானே தெரிஞ்சிகிட்டேன். உங்களுக்காக ஆசை ஆசையா பண்ணினேன்.” அவள் கண்களில் அத்தனை வாத்சல்யம்.

“பங்காரு! ஆசை… ஆசையாவா?” அவன் பட்டென்று எழுந்தான்.

அவன் எழுந்த வேகத்தில், அவள் கண்கள் கலவரப்பட்டு கன்னத்தில் செம்மை பரவ, “இந்த வடையை பார்த்தா ஆசையா கொண்டு வந்த வடை மாதிரி தெரியலையே?” அவன் கண்சிமிட்டி முகத்தில் மென்னகையோடு அவள் முன்னே வந்து கேட்க,  

“ஏன்?” அவள் பின்னோடு நடந்து சென்றே கேட்டாள்.

“பங்காரு, ஆசையா கொண்டு வந்த வடையை இப்படி தான் கையில் கொண்டு வந்து கொடுப்பாங்களா?” பின்னோடு நடந்த அவளை அவன் முன்னோடு நெருங்கியபடி கேட்டான்.

“வேற எப்படி கொடுப்பாங்க?” அவள் முகம் சிவந்து, கேட்டுக் கொண்டே நடக்க சுவரோடு மோதி நின்றாள்.

“பங்காரு, இனி விலக முடியாது” அவன் தன் கைகளை அவளின் இருப்பக்கமும் ஊன்றி கூற, அவள் அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்.

“ம்.. பங்காரு” அவன் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்து, “அங்க குத்த கூடாது பங்காரு” அவன் கண்டிப்போடு கூறினான்.

“ஏன்?” அவள் முகம் உயர்த்தி, அவனை பார்த்து கேட்க,  

அவன் இதழ்கள் அவள் செவியை நெருங்கின. அவன் சுவாச காற்று, அவள் செவிகளை தீண்ட, அவன் தேகத்தின் வெப்பத்தில் அவள் சற்று நகர்ந்து கொண்டு, “ஏன்னு கேட்டேன்?” அவள் தலை திருப்பி கேட்டாள்.

அவள் முகத்தை பிடித்து பழைய இடத்திற்கு கொண்டு வந்து, அவள் கண்களை கூர்மையாக பார்த்தான்.

“பங்காரு, நான் சொல்றதத்தைத்தான் நீ கேட்கணும். அது ரகசியம். நான் தான் சொல்ல வரெனில்லை?” அவன் அவள் மூக்கை தன் மூக்கால் உரசி கேட்க, அவள் முகம் சுருங்கியது.

“பங்காரு, எதுக்கு முகம் வாடுது. நீ இப்படியே அசையாமல் நிற்பியாம். நான் ரகசியத்தை சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேனாம்” அவன் அவளை இதழ் தீண்டலில் சமாதானம் செய்தான்.

அவன் அவளுக்கும் தன் கரங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொண்டான். அவள் அசைய முடியாமல், அவனுக்கு இடையே மாட்டிக் கொண்டாள்.

மீண்டும், அவள் செவிகளில் அவன் மூச்சு காற்று. அத்தோடு, “பங்காரு…” என்ற அழைப்பும்,  

“பங்காரு…” அவன் மீண்டும் அழைக்க, “ம்…” அவளிடம் ரீங்காரம் மட்டுமே.  

“ஏன் அங்க அடிக்க கூடாதுன்னு கேட்ட இல்லை?” அவன் அவள் முக அழகை மிக அருகாமையில் ரசித்தபடி கேட்க, மீண்டும் அவளிடம் ரீங்காரம் மட்டுமே.

“அங்க என் பங்காரு இருக்கா. அவள் என் கிட்ட பத்திரமா இருக்கா. அவளுக்கு கஷ்டம் வர நான் விட மாட்டேன்” அவன் கூற, “அதையும் நீங்களே கொடுத்திருவீங்கலா?” அவ்வப்பொழுது நடக்கும் நிராகரிப்பை கொண்டு அவள் கேட்க,  

“பங்காரு…” அவன் வேகமாக அவளை தன்னோடு சேர்க்க, அவள் தன்னை நிலைப் படுத்திகொண்டு, “கையில் வடை இருக்கு” அவள் கண்களில் அச்சம் கொண்டு தொண்டை குழி ஏறி இறங்கியது.

‘எப்பவாது தான் இந்த மாதிரி நேரம் கிடைக்கும். அதையும் நானே இடக்கு மடக்கா பேசி கெடுத்துட்டேனோ?’ அவள் கண்கள் அவன் மீது காட்டிய மையலை தாண்டியும் அச்சத்தை காட்ட,  

“இருக்கட்டும்” அவன் நிதானம் காட்டி, அவளை வாசனை பிடித்தான்.

“வடை சுட்டுட்டு வந்திருக்கேன். வடை வாசனை தான் வரும்” அவன் கோபம் கொள்ளவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவள் செல்லமாக சிடுசிடுக்க, அவன் பார்வை அவளை மேலிருந்து கீழ்வரை வருடியது.

வேலை செய்வதற்காக அவள் தன் சேலையை தூக்கி சொருகி இருந்தாள். தன் முந்தானையை சுற்றி தன் இடையோடு சொருகி இருக்க, வளவளப்பான அவள் இடை அவள் இடையழகை எடுத்து காட்டியது.

அவன் தன் ஆள் காட்டி விரலை அவள் முகமருகே எடுத்துச் சென்றான். அவன் விரல்கள் அவளை தீண்டவில்லை.

காற்று புகும் இடைவேளியில் அவன் விரல் நடனமாட, அவன் விரலின் அருகாமையில் அவள் கண்கள் இறுக மூடி அவன் அருகாமையை ரசிக்க ஆரம்பித்தது.

அவன் அவள் முகத்தை வருடமால், காற்றோடு வருடினான். அவன் விரல் மெல்ல மெல்ல அவள் கழுத்து பகுதியை தீண்டாமல் தீண்ட, அவன் கைகள் செல்லும் இடத்தை கணித்தவள் போல், “என்ன பண்ணறீங்க?” விழிகளை திறந்து இமைகள் படபடக்க அவள் கேட்க,

“ஷ்…” அவன் தன் ஆள் காட்டி விரலை அவள் இதழ்களில் வைத்தான்.

“வடை சாப்பிடுங்க” அவள் கூற, அவன் அவள் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.

அவள் விழிகள் இன்னும் படபடக்க, அந்த விழிகளுக்கும் இதழணைப்பு கொடுத்தான்.

“நான் பேச கூடாதுனு சொன்னா, பேச கூடாது” அவன் குரலில் காதல் கண்டிப்பு இருக்க,  

“எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி தான் இருக்கணுமா?” அவள் கழுத்தை நொடிக்க, அவன் இடது கைகள் அவள் இடையை சுற்றி வளைத்து, அவன் உரிமையை நிலைநாட்ட, அவள் தலையை குனிந்து கொண்டாள்.

“ஏன் நான் நினைக்கிறது உனக்கு பிடிக்கலையா?” அவன் வலது கையின் ஆள் காட்டி விரலால் அவள் முகத்தை நிமிர்த்த,  அவன் இதழ்கள் அவளை நெருங்கி பேச்சை வளர்த்தது.

அவன் கண்களில் தெரிந்த காதலில் அவள் கட்டுண்டு போனாள்.

“பங்காரு…” அவன் அழைப்பு அவளை மென்மையாக வருடியது.

“பேச மாட்டியா?” அவன் கண்கள் காதல் பேச, அவன் இதழ்கள் அன்பு மொழி பேசியது.

“வடை சாப்பிடுங்களேன்” அவன் பேச்சில் அவள் தப்பிக்கும் மார்க்கம் கண்டாள்.

அவன் அவள் கன்னம் தட்டி சிரித்தான்.

“நீ ஊட்டி விடு. நான் சாப்பிடுறேன்” அவன் வாயை திறந்து கொண்டு, அவள் முன்னே நிற்க, “இது என்ன வம்பு?” அவள் வெட்கத்தை மறைக்க, கோபித்துக் கொண்டாள்.

“முடியுமா? முடியாதா?” அவன் கறாராக நிற்க, அவள் அவனுக்கு வடையை ஊட்டிவிட, “ரொம்ப நல்லாருக்கு பங்காரு.” அவன் வடையின் மீதி பாதியை அவளுக்கு ஊட்டிவிட்டான்.

“இனி நீ எப்பவும் வடையை இப்படி தான் கொடுக்கணும்” அவன் அதிகாரமாக கூற, அவள் சிரிப்பினோடு சம்மதமாக தலை அசைத்தாள்.

***

நொடிப்பொழுதில் அவன் நினைவலைகள் பின்னே சென்று மீண்டும் முன்னே வந்தது.

‘ஏன் பங்காரு இது போல் திரும்பவும் மாறுவாளா?’ அவன் கண்கள் அவளை ஏக்கமாக தழுவியது.

அவள் எண்ணங்களும் இதே சம்பவத்தை எண்ணி வெட்கம் கொண்டது. ‘இவன் ஒரு அக்கா பிள்ளை என்று தெரிந்தும் நான் இவனிடம் எப்படி குழைந்திருக்கேன். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்’ அவள் கண்கள் அவனை கோபத்தோடு தழுவியது.

அவன் ஆழ மூச்செடுத்து அவள் முன்னே வந்து நின்றான்.

“இப்படி தான் வடை கொடுப்பியா பங்காரு? நான் உன்னை எப்படிக் கொடுக்க சொல்லிருக்கேன்?” அவன் குரலில் கண்டிப்பு மேலோங்க,  

“எப்படி கொடுக்கணும்? வடை மேல கொஞ்சம் விஷத்தை தடவியா?” அவள் புருவங்கள் மேலே ஏறி, கீழே இறங்கியது.

“அதை நீ தடவவே வேண்டாம். உன் பேச்சே அப்படித்தான் இருக்கு” அவன் பற்களை நறநறத்தான்.

“உண்மை தான் எனக்கெல்லாம் விஷத்தை பேச்சில் மட்டும் தான் வைக்க தெரியும். கொடுக்குற மாத்திரையில் இல்லை பாவா” அவள் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

“மிருதுளா…” அவன் கர்ஜிக்க, “பாவா, உண்மை சுடத்தான் செய்யும். அதுக்காக இப்படி கத்தினா,உங்க உடம்புக்கு பீபி வந்திரும். உங்களுக்கு பீபி வற்ரத்தை பத்தி எனக்கு கவலை இல்லை. எனக்கு நீங்க தேவையுமில்லை. ஆனால், உங்களுக்கு உடம்பு சரி இல்லைனா, உங்க அக்கா குடும்பத்தை யார் பாத்துப்பா?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

அவன் அவளை முறைக்க, “அப்புறம் உங்க அக்கா பொண்ணு சிந்துஜா. அவ ஏதோ தப்பு பண்றா. அவ மொபைலை பாருங்க. அவளுக்கு மொபைல் வேண்டாமும்னு சொல்லிட்டேன். நீங்க கேட்கலை. பெரிய பிரச்சனை வரும். அதை தாங்கிக்க உங்களுக்கு தெம்பு வேணும்.” அவள் பேசிக் கொண்டே செல்ல, “பங்காரு..” அவன் அவளை கோபமாக இடைமறித்தான்.  

“பார்த்தீங்களா. உண்மை சுடத்தான் செய்யும். பொறுமை. பொறுமை. உங்க அக்கா, அக்கா பொண்ணு மட்டுமில்லை. என்னை வேற நீங்க பார்க்கணும். உங்களுக்கு அந்த பிரச்சனை வேண்டாமும்னு தான் என்னை டைவர்ஸ் பண்ணிடுங்கன்னு சொல்றேன்.” அவள் பேச, அவன் அலைபேசி ஒலித்தது.

“அக்கா…” அவன் அழைக்க, அவள் உதட்டில் நமட்டு சிரிப்பு.

அவள் தோள்களை குலுக்கிவிட்டு வெளியே சென்றாள்.

கொஞ்சம் நேரத்தில், அவன் அழைக்க அவள் அறைக்குள் சென்றாள்.

“நான் அக்காவை பார்க்க போறேன். நீ வர வேண்டாம்.” அவன் கூற, “அதை நீங்க சொல்ல கூடாது. நான் வருவேன். டைவர்ஸ் பண்ணாம நான் இங்க இருக்க மாட்டேன். நீங்க டைவர்ஸ் கொடுக்குற வரைக்கும் நான் உங்க கூடத்தான் இருப்பேன்.” அவள் தீர்க்கமாக கூறினாள்.

அவன் மறுத்தும், அவனோடு காரில் சென்னைக்கு கிளம்பினாள் மிருதுளா.

“உன் கூடவே பொறக்கணும்

உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

என் வாழ்க்க வரமாக

அட நீயும் பொறந்தாயே

என் உயிரே உறவாக

என் நெஞ்சில் கரைஞ்சாயே

பசி தூக்கத்த மறந்து நீயும்

அடி பாசத்த பொழிஞ்சாயே…”

  பாடல் காரில் ஒலிக்க, அதோடு சேர்ந்து அவனும் அதை ரசித்தபடி பாடியபடியே வர, அந்த பாடலை அணைத்தாள் மிருதுளா.

அவன் முகத்தில் நமட்டு சிரிப்பு. “ஒத்தை பிள்ளையா பிறந்தவங்களுக்கு பாசம் அப்படின்னா என்னனு தெரியாது” அவன் சாலையில் கவனத்தை செலுத்தியபடி கூற,  

“பாசம் இருக்கலாம். வெறி இருக்க கூடாது. உங்களுக்கு அக்கா மேல இருக்கிறது பாசம் இல்லை. வெறி” அவள் கூற, அவன் தோள்களை குலுக்கி கொண்டான்.

“பங்காரு…” அவன் அழைக்க, “என்னை அப்படி கூப்பிடாதீங்கன்னு சொன்னேன்” அவள் கோபமாக கூற,  

“உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன். நான் நினைச்சது தான் நடக்கும். காலையில் அக்கா கூப்பிட்டாங்க. என்னை பார்க்கணுமுன்னு கூப்பிட்டாங்க. நீ இன்னும் குழந்தை உண்டான அக்காவை பார்க்கலை. வான்னு கூப்பிட்டா வரமாட்டா. அதுதான் வேண்டாம்முனு சொல்லி உன்னை கூப்பிட்டுட்டு வந்தேன்” அவன் அழுத்தமாக கூறினான்.

“நீங்க கூப்பிடலைனாலும் நான் உங்க கூட வந்திருப்பேன். நீங்க டைவர்ஸ் கொடுக்கிற வரைக்கும் நான் உங்க கூட தான் இருப்பேன். உங்களுக்கு தொந்திரவாத்தான் இருப்பேன். டைவர்ஸ் வாங்கிட்டு உங்க லட்சணத்தை ஊரறிய சொல்லிட்டு தான் எனக்கு மறுவேலை” அவள் கூற,  

“ம்… ச்… அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது. வீட்டுக்கு போனதும், நாம அக்காவை பார்க்க போகணும்.” அவன் உறுதியாக கூறினான்.

“நான் கூட உடம்பு சரி இல்லாமல் இருந்தேன். அவங்க என்னை பார்க்க வந்தாங்களா? இல்லை ஒரு ஃபோனாவது செய்து கேட்டாங்களா? நான் மட்டும் ஏன் பார்க்க போகணும்?” அவள் கோபமாக கேட்டாள்.

“இந்த பார். அவங்க வயசில் பெரியவங்க. நீ தான் பார்க்க வரணும்” அவன் குரல் அதிகாரமாக ஒலித்தது.

“இது என்ன அநியாயமான நியாயமா இருக்கு? மாமியாருக்கு மருமகள் தான் ஃபோன் பண்ணனும். நாத்தனாருக்கு நான் தான் ஃபோன் பண்ணனும். ஏன் அவங்க என்னை கூப்பிட்டா ஃபோன் வேலை செய்யாதா? இல்லை அவங்களுக்கு நம்ம வீட்டுக்கு வந்து என்னை பார்க்க வழி தெரியாதா?” அவளும் அழுத்தமாகவே கேட்டாள்.

“மிருதுளா…” அவன் குரலை இறக்கினான்.

“நான் உன்னை கூட்டிகிட்டு போகலைனா, உன்னை கேட்பாங்க” அவன் தழைந்து போனான்.

“உங்க பிள்ளையை கொலை செய்தப்ப உங்களை கேள்வி கேட்கலையா?” அவள் கேட்க, “மிருதுளா…” அவன் கர்ஜித்தான்.

“என் பெயர் மிருதுளா தான். நான் என்ன பங்காருன்னா சொன்னேன்” அவள் அசட்டையாக கூறினாள்.

“என்னால் உன்னை சமாளிக்க முடியலை பங்காரு.” அவன் அப்பாவியாக கூற, “இப்படி எல்லாம் அப்பாவியா பேசி உங்க வில்லத்தனத்தை என்கிட்டே காமிக்க வேண்டாம்.” அவள் உதட்டை சுளித்து கொண்டு, முகத்தை திருப்பினாள்.

“நீ என்ன வேணும்ன்னாலும் பேசு. நாளைக்கு அக்காவை பார்க்க போகணும். நீ என்கூட அக்காவை பார்க்க வர்ற. போகும் பொழுது அக்காவுக்கு பிடிச்ச பணியாரம் கொண்டுபோகணும். அதை செய். நான் அக்காவை பார்த்துக்க தான் நமக்கு குழந்தை வேண்டாமுன்னு முடிவு பண்ணினேன். இதை கூட நீ செய்யலைன்னா எப்படி. நம்ம இழப்புக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா? அக்கா சந்தோசம் முக்கியம் இல்லையா?” அவன் கேட்க,  

“உங்களுக்கு எதுவுமே தப்பா தெரியலையா?” அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“அக்கா, பணியாரம் சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னாங்க. நான் பணியாரம் கேட்குறேன். பங்காரு இல்லாமல், நான் இல்லை. நீ இல்லாம நான் வேலை விஷயமா போகலாம். ஆனால், அக்காவை பார்க்கன்னு போகும் பொழுது எப்படி போறது? ” அவன் கேட்க, அவளிடம் மௌனம்.

“என்ன பேசாம இருக்க பங்காரு. நீ நாளைக்கு என் கூட பணியாரம் செய்திட்டு வர்ற” அவன் உறுதியாக கூற, “வரலைனா?” அவள் அழுத்தமாக கேட்டாள்.

“வருவ… சும்மா இல்லை. பணியாரம் செய்திட்டு வருவ. வரவைப்பேன்” அவன் குரலில் அவளை விட அதீதமான அழுத்தம் இருந்தது.

‘என்ன செய்வான்? என்னை என்ன செய்திற முடியும்?’ அவளுள் இறுமாப்பு வந்து அமர்ந்தது.

 மயங்கும்…