மயங்கினேன் பொன்மானிலே – 9

பொன்மானிலே _BG-36d6cfa6
மயங்கினேன் பொன்மானிலே

அத்தியாயம் – 9

பயணம் முடியும் வரை மிருதுளா அவனிடம் பேசவில்லை. வம்சி அவளுக்கு ஏதுவாக கார் சீட்டை சரி செய்தான். அவன் கண்கள் அவள் மீது அக்கறையாக தழுவி மீண்டது.

 “பங்காரு…” அவன் அன்பாக அழைக்க, அதில் கடுப்பாகி, அவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். ‘இவனிடம் பேச கூடாது.’ அவள் மனம் உறுதி எடுத்துக் கொண்டது.

“தூங்கிறவங்களை எழுப்பலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்பறது?” அவன் அவளிடம் பேச்சு வளர்க்கவே விரும்பினான்.

 அவள் கண்களை கிஞ்சித்தும் திறந்து பார்க்கவில்லை. இரவு முழுதும் சாலையில் கவனத்தை செலுத்தியபடியும், தன் மனையாளின் மேல் கண்களை செலுத்தியபடியும் காரை செலுத்தினான் வம்சி.

 மறுநாள் காலையில் அவர்கள் வீட்டை அடைத்திருந்தனர்.

மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

‘நான் இந்த வீட்டை விட்டு ஏன் போனேன்? ஏன் திரும்பி வந்தேன்? எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறைந்தபட்சம், வம்சி தன் தவறை கூட ஒத்துக்கொள்ளவில்லை.’ அவள் எண்ணப் போக்கில் அவளே திடுக்கிட்டு நின்றாள்.

‘வம்சி தவறை ஒத்துக்கொண்டால், நீ மன்னித்து விடுவாயா?’ என்று அவள் சிந்தை கேள்வி எழுப்ப, அவள் சட்டென்று மறுப்பாக தலை அசைத்தாள்.

‘இல்லை, இவனை இனி ஒருநாளும் நான் மன்னிக்க மாட்டேன். இவனிடமிருந்து, நான் முழுதும் விலக வேண்டும். அதற்கு நான் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு, சமாதானம் செய்து யாரவது சேர்த்து வைத்து விட்டால், நான் உயிரோடே இருக்க மாட்டேன்.’ அவள் மனம் உறுதி பூண்டது.

“பங்காரு…” அவன் அழைப்பில், தன் சிந்தையிலிருந்து மீண்டாள் மிருதுளா.

“என்ன பயங்கர யோசனை பங்காரு?” அவன் அவள் அருகே, மிக அருகே அமர்ந்தபடி கேட்டான்.

அவள் சட்டென்று எழுந்து கொள்ள முயல, “நான் பங்காரு கிட்ட மரியாதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை” அவன் அவள் கைகளை அழுத்தமாக பிடித்தபடி அவள் அருகே அமர வைத்தான்.

“என்ன நக்கலா?” அவள் முறைக்க, “இல்லை, பங்காரு. அன்பு , பாசம், காதல்… இப்படி எப்படி வேணும்ன்னாலும் சொல்லலாம்.” அவன் கூற,

“அப்படி எதுவும் எனக்கு உங்க மேல இல்லை.” அவள் சிடுசிடுக்க,

“எனக்கு என் பங்காரு மேல இருக்கே” அவன் கண்சிமிட்டினான்.

“என்ன உங்க வீட்டுக்கு வந்ததும் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.” அவள் சீற,

“என் வீடில்லை பங்காரு. நம்ம வீடு.” அவன் அவள் தோள் மீது கைகளை வைத்தான்.

அவள் விலகி செல்ல, எத்தனிக்க, அவன் அழுத்தம் கூடியது.

“இந்த வீடு என் மனைவிக்காக நான் கட்டிய வசந்த மாளிகை. கல்யாணமானதும் நாம இங்க இருக்குமுன்னு, கடனை வாங்கி நான் ஆசை ஆசையா கட்டின வீடு. உன்னை பார்த்தும் வேலை வேகவேகமா நடந்தது. இந்த வீடு உனக்காக ஆசை ஆசையா காட்டியது. இந்த வீட்டில் உன்னோடு ஆசையா இல்லாமல், எப்படி இருக்க?” அவன் கைகள் தோளிலிருந்து இடமாறி, அவளை இடையோடு சேர்த்து கொள்ள, அவன் குரல் கேள்வியாக நிறுத்தியது.

அவன் தீண்டலில் தெரிந்த உரிமையில், அவள் இரத்த நாடி எகிறியது.

“வசந்த மாளிகை கட்டி என்னத்துக்கு? உங்களுக்கு உங்க அக்கா வீட்டில் இருக்கவே நேரம் பத்தலை” அவள் உதட்டை பிதுக்கினாள்.

“பங்காரு, அது தான் உன் பிரச்சனைன்னா, நான் மாத்திக்குறேன்” அவன் அவளிடம் இறங்கி பேசி, சமாதானம் செய்யவே முயற்சித்தான்.

“மாத்தறீங்களா? பேசாம, வசந்தமாளிகைக்கு பதிலா, இதை தாஜ்மஹாலா மாத்திருங்கேளன். என் குழந்தைக்கு சமாதி கட்டின மாதிரி, எனக்கும் ஒரு சமாதி…” அவள் பேசிக்கொண்டே போக, “பங்காரு…” அவன் அலறினான்.

“கேட்கவே வலிக்குதில்லை? உங்க பங்காரு செத்தா உங்களுக்கு வலிக்கும். என் பிள்ளை? என் பிள்ளை எங்க?” அவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள்.

அவள் கைகளை விடுவித்தான். ஆழ மூச்செடுத்து அமைதி கொண்டான்.

“அக்காவை பார்க்க போகணும். பணியாரம் பண்ணு கிளம்புவோம் ” அவன் குரல் உணர்ச்சியை விடுத்து நேரடியாக ஒலித்தது.

“பணியாரம் பண்ண மாவு இல்லை. மாவு அரைக்காம, எப்படி பண்றது? கார கொழுக்கட்டை பண்ணட்டுமா?” உணவு தான் முக்கியம் என்பது போல் அவளும் உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டாள்.

“ஓ… இரு, அக்கா கிட்ட கேட்டுட்டு வரேன்.” அவன் சட்டென்று அலைபேசியை எடுக்க,

அவள் கண்கள் இடுக்கி அவனை கூர்மையாக பார்த்தது.

அவன் அலைபேசியை அன்லாக் செய்ய, “உங்க அக்காக்குன்னா மட்டும், பணியாரமா இல்லை கொழுக்கட்டையான்னு கூட கேட்டுட்டு செய்வீங்க? ஆனால், எனக்குன்னா குழந்தை கூட வேணுமா வேண்டாமான்னு கேட்க மாட்டீங்க?” அவள் கோபமாக கேட்க நினைத்து பரிதாபமாகவே கேட்டு முடித்தாள்.

அவன் கைகளிலிருந்த அலைபேசி அவனிடம் இருந்து நழுவி மெத்தையில் விழுந்தது.

கைப்பேசி நழுவி விழுந்ததை உணர்ந்தவன், அவன் வாழ்க்கை நழுவியதை உணராமல் சமைந்து நின்றான்.

அவள் உடல் குலுங்க, அவள் கண்ணீரில் அவன் தேகம் பரபரத்தது.

“பங்காரு…” அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அவளை அவன் முன் நிறுத்தினான்.

“பங்காரு…” அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். அவள் கண்கள் தாரைதாரையாக கண்ணீரை சொரிந்து, அவன் கைகளை தீண்டி சென்றது.

“அழாத பங்காரு… பங்காரு…” அவன் குரல் உடைய ஆரம்பித்தது.

“நான் உன்னை அழ வைக்க நினைச்சதே இல்லை பங்காரு.” அவன் பேச, அவள் அழுகை கூட, அவள் சோகத்தை தன் மேல் தாங்கி கொள்பவன் போல் அவளை அவன் மீது சாய்த்து அணைத்துக் கொண்டான்.

அவள் திமிர, அவன் அணைப்பு இறுகியது. அழுகையில் குலுங்கிய அவள் முதுகை ஆறுதலாக தட்டிக் கொடுத்தான்.

இயல்பாக இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், மிருதுளா சமாதானம் ஆகி இருப்பாளோ என்னவோ, இப்பொழுது அவனால் அரங்கேறிய அசம்பாவிதத்திற்கு அவனே ஆறுதல் படுத்த, அவனை உதறி தள்ளினாள் மிருதுளா.

உதறிய கைகளை, அவன் இறுக பற்றினான். “பங்காரு…” அவன் குரல் கெஞ்சியது.

“பங்காரு, நான் உனக்கு நல்லது தான் பண்ணினேன். அக்காவை பார்க்க, நாம்ம அங்க அடிக்கடி போகணும். நீ அலையும் பொழுது உனக்கு கஷ்டமா இருக்கும். நீ கஷ்டப்பட்டா, என் மனசு தாங்காது. உன் வசதிக்காக தான் பங்காரு, நான் அப்படி செய்தேன்.” அவன் கூற, அவள் தன் கைகளை உருவிக் கொண்டு, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

“நமக்கு வயசு இருக்கு. அக்காவுக்கு குழந்தை பிறந்ததும், நாம குழந்தை பெத்துக்கலாம். இதுக்கு எதுக்கு இப்படி ஃபீல் பண்ற?” அவன் சமாதானம் செய்ய,

அவன் சமாதானத்தில், அவள் கடுப்பு எகிறியது.

“உங்க அக்கா இன்னொரு குழந்தை பெத்துக்கணும்னு யோசிச்சா?” அவள் அவனிடம் குதர்க்கமாக கேட்க, “ஓ… அப்ப, அக்கா கிட்ட முன்னமே கேட்டுப்போம்” அவன் அவள் பிரச்சனைக்கு தீர்வு கண்டவன் போல் எளிதாக கூற,

‘மிருதுளா, நீ கொலைகாரியாகிருவ போலிருக்கே. ஏதாவது பேசி உன் பீபியை ஏத்திக்காத. நீயோ அவனை விட்டு போக போற, யாரு குழந்தை பெத்துக்கிட்டா உனக்கென்ன? பெத்துக்கலைனா என்ன?’ அவள் தலைக்கு அண்டை கொடுத்து அமர்ந்தாள்.

சட்டென்று வெளியே சென்றான் வம்சி.

“இந்தா பங்காரு, காபி குடி” அவன் கூற, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“நீ தான் தலையை பிடிச்சிட்டு உட்கார்ந்தியே. அது தான் காபி” அவன் கூற, அந்த காபி அவளுக்கும் தேவையாக இருக்க, அவள் அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

“பங்காரு, உனக்கு அக்கா வீட்டுக்கு எதுவும் செய்திட்டு வர வேண்டாம். அப்படித்தானே?” அவன் அவள் முகம் பார்த்து, ஆழமான குரலில் தன்மையாக கேட்க,

“எனக்கு அங்க வரவே பிடிக்கலை.” அவளும் சண்டையிடும் எண்ணத்தை கைவிட்டு தன்மையாகவே கூறினாள்.

“நீ எதுவும் செய்ய வேண்டாம் பங்காரு. ஆனால், நீ வரணும். என் கூட வரணும். நீ இல்லாமல், நான் போக மாட்டேன்.” அவன் எழுந்து செல்ல, அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அவள் முன் வந்து மண்டியிட்டான்.

“முடிந்து போனதை நான் பேசலை. ஆனால், என் பங்காரு எப்பவும் என் கூடத்தான் இருக்கணும். நான் உன்னை எங்கையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் தப்பு பண்ணலை. உன்னை மனசில் வைத்துதான் நான் செய்தேன். அப்படி, நான் செய்தது தப்புன்னு இந்த உலகம் சொல்லுச்சுன்னா, நான் யார் காலில் வேணும்ன்னாலும் விழுந்து மன்னிப்பு கேட்பேன். ஆனால், உன்னை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் பங்காரு.” அவன் குரல் உறுதியாக வெளிவந்தது.

அவன் மடமடவென்று வெளியே சென்றுவிட்டான். எதுவும் செய்யாமல் அவனோடு அவளும் கிளம்பினாள்.

பணியாரத்தை தவிர்க்க முடிந்த அவளால், அவனை தவிர்க்க முடியவில்லை. பேசிப்பேசியே அவளை அழைத்து சென்றுவிட்டான்.

‘நேரில் சந்தித்து தான் பிரச்னையை சரி செய்ய வேண்டுமென்றால், செய்து தானே ஆகணும்.’ அவளும் அவனோடு அவன் அக்கா வீட்டை நோக்கி பயணித்தாள்.

***

வம்சியின் அக்கா வீடு.

வம்சி மிருதுளாவோடு உள்ளே நுழைந்தான்.

“வம்சி வா… வா…” அவனை அன்பாக அழைத்தார் வயது முதிர்ந்த பெண்மணி. ‘அக்காவின் மாமியார்…’ என்ற பவ்யத்தோடு, தலையசைத்தான் வம்சி.

வம்சியின் கண்கள் தன் தமக்கையை தேட, “உங்க அக்காவை பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க. கொஞ்சம் வயசு அதிகமில்லையா?” என்றார் அவர். அவன் தலையசைத்துக் கொண்டான்.

“வாம்மா மிருதுளா” என்று அவர் அழைப்பு கொடுக்க, “எப்படி இருக்கீங்க?” அவளும் மறுமொழியாக அன்போடு விசாரித்தாள்.

“நான் நல்லாருக்கேன். உனக்கு தான் குழந்தை தங்களையமே?” அவர் விசாரிக்க, இருவரும் ஒரு நொடி அமைதியாக நின்றனர்.

“ம்… எல்லாருக்கும் எல்லாம் அமையுமா? பகவான் சித்தம் வேணும்” அவர் அங்கலாய்க்க, மிருதுளாவின் பார்வை தன் கணவனை நோக்கி திரும்பியது.

“எல்லாம் நேரம் வரும் பொழுது அமையும் அத்தை” அவன் பதில் கூறி, “அக்காவை பார்க்கலாமா?” வம்சி பேச்சை திசை திருப்பி, வீட்டிற்குள் நடந்தான்.

அவன் தமக்கை இருக்கும் அறைக்குள் சென்றான். பத்மப்ரியா, சோர்வாக அமர்ந்திருந்தாள். சற்று பருத்த உடல், சாந்தமான முகம். இவர்கள் இருவரையும் பார்த்ததும் மெல்லிய புன்முறுவல். இவர்களை வரவேற்கும் விதமாக தலையசைத்தாள்.

அவள் அருகே சிந்துஜா அமர்ந்திருந்தாள். அவள் யாரையும் கண்டு கொள்ளவில்லை. தான் உண்டு தன் அலைபேசி உண்டு என்று தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

 உள்ளே சென்ற அவன் தன் தமக்கையிடம் பழங்களை நீட்ட, “என்னப்பா பழம் கொண்டு வந்திருக்க. உன் அக்காவுக்கு பழமே பிடிக்கலை. ஏதாவது காரமா செஞ்சி கொண்டு வந்திருக்கலாமில்லை. உன் பொண்டாட்டி நல்லாத்தானே இருக்கா?” என்று பத்மப்ரியாவின் மாமியார் கூற, வம்சி சுருக்கென்று அவரை திரும்பி பார்த்தான்.

‘நான் என் மனைவியை ஆயிரம் செய்ய சொல்வேன். இந்தம்மா என்ன சொல்றது?’ அவன் கோபம் பட்டென்று ஏற, அவன் வெடுக்கென்று ஒரு பார்வை பார்த்தான்.  தன் தமக்கையின் வாழ்வு அவன் கண் முன் வர, சட்டென்று மௌனித்துக் கொண்டான்.

மிருதுளா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவள் சிந்துஜாவை பார்த்தாள்.

‘இவ சரி இல்லை. இதை சொன்னால், யாரும் கேட்க போறதில்லை. ஒரு நாள் பெரிய பிரச்சனை வரும்.’ மனதோடு எண்ணிக்கொண்டாள் மிருதுளா.

அடுத்ததாக, மிருதுளாவின் பார்வை, பத்மப்ரியாவின் பக்கம் திரும்பியது.

‘இப்படி சாது மாதிரி இருந்துட்டு என் வாழ்க்கையை அழிச்சிட்டியே?’ என்ற கோபம் அவளுள் கனன்றது. தன் நாத்தனாரின் மண்டை முடியை கொத்தாக பிடித்து அவள் கன்னத்தில், ‘பளார்… பளார்…’ என்று அறைந்து சண்டையிடும் கோபம் அவளுள் எழுந்தது.

தன் இயலாமையை எண்ணி விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

‘நான் மட்டும் தான் இப்படியா? இந்த நாட்டில் எத்தனை பெண்களுக்கு இப்படியொரு நிறைவேறா ஆசை இருக்கும்?’ என்று அவள் மனம் குரூரமாக எண்ணிக் கொண்டது.

அவள் கண்கள் பத்மா ப்ரியாவின் வயிற்று பக்கம் சென்றது. அவளுக்கு அனைத்தும் மறந்து போனது. ‘குழந்தை…’ அவள் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது.

சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் அவள் மறந்து போனாள். பத்மப்ரியாவின் வயிற்று பகுதியை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. தன் நாத்தனாரை பார்த்தபடி, தன் வயிற்று பகுதியை தடவினாள் அவள்.

அவள் கண்கள் கண்ணீரை கோர்க்கவில்லை. ஆனால், ஆசையை தேக்கி கொண்டு நின்றது.

வம்சி சில நிமிடங்கள் தன் தமக்கையோடு பேசிவிட்டு, தன் மனைவியை அழைக்க, அவள் முதலில் கவனிக்கவில்லை.

அந்த சம்பவத்திற்கு பின், இன்று பத்மப்ரியாவை பார்த்ததும் அவளுள் அழுத்தம் கூடியது. அவள் கைகள், நடந்ததை நம்ப முடியாமல் அவள் வயிற்றை தடவியது.

“மிருதுளா…” அவன் அவள் தோளை தொட, சட்டென்று சுய உணர்வுக்கு வந்தாள் மிருதுளா.

இருவரும் வெளியே செல்ல, “பத்மா, இனி உன் தம்பி பொண்டாட்டி இங்க வர வேண்டாமுன்னு சொல்லிடு.” அவர் சத்தமாக கூற, வம்சி, மிருதுளா இருவரும் அசையாமல் நின்றனர்.

“அந்த மிருதுளா பெண்ணும் அவள் பார்வையும். உன்னை அப்படியே ஏக்கமா பார்க்குறா” அவர் கூற, அங்கும் மௌனம்.

“அவளுக்கு குழந்தை வராம இருந்திருந்தா கூட பரவால்லை. உனக்கு வந்த அதே நேரம் வந்து கலைஞ்சிருக்கு. அவ பார்க்குற பார்வையே சரி இல்லை. முதலில் அவன் நின்ன இடத்தில் உள்ள அவள் காலடி மண்ணை எடுத்து உனக்கு திருஷ்ட்டி சுத்தி போடணும்” அவர் கூற,

வம்சி ஒரு நொடி ஆடி விட்டான். ‘என் பங்காரு, அக்கா குழந்தைக்காக தானே அவ குழந்தையை இழந்துட்டு நிக்குறா. இவங்க என்ன இப்படி எல்லாம் பேசுறாங்க. தப்பு பண்ணிட்டேனோ?’ அவன் முதல் முறையாக தடுமாறினான்.

‘ஒரு குழந்தைக்கு பின்னால் இப்படி எல்லாம் பேச்சு வருமா?’ அவன் தன் மனைவியின் கைகளை மடமடவென்று பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.

“அத்தை பார்வையே அப்படிதான். என் ஃபோனையும் அப்படி தான் பார்ப்பாங்க. மாமா, அத்தைக்கு இப்படி ஒரு ஃபோன் வாங்கி குடுக்கலைன்னு என்னையும் இப்படி தான் பார்ப்பாங்க” சிந்துஜா மேலும் கூறுவது, அவர்கள் காதில் விழத்தான் செய்தது.

வம்சி காரை வேகமாக செலுத்தினான். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் அவன் எதுவும் பேசவில்லை.

மிருதுளா, மடமடவென்று அரிசியை ஊற வைத்தாள். எதுவும் நடவாது போல் வேலை செய்ய ஆரம்பித்த மனைவியை புரியாமல் பார்த்தான் வம்சி.

தன்னை நிதானப்படுத்தி கொண்டு, “பங்காரு… நீ இனி அக்கா வீட்டுக்கு வர வேண்டாம்.” அவன் அழுத்தமாக கூறினான்.

“ஏன், என் பார்வை உங்க அக்காவை எதாவது பண்ணிடுமா?” அவள் நக்கலாக கேட்டாள்.

அவர்கள் பேச்சு அவனை பாதித்த அளவு அவளை பாதிக்கவில்லை. குற்றம் அவன் மீது என்ற காரணமோ என்னவோ!

“முட்டாள் மாதிரி பேசாத பங்காரு. இந்த பேச்செல்லாம் உனக்கு தேவையா? நீ வர வேண்டாம்” அவன் கூற, “இந்த பேச்செல்லாம் கேட்க வைத்ததே நீங்க தானே?” அவள் அவன் முன் கோபமாக நின்றாள்.

“ஆமா, நான் தான். அப்பவும் உன் நலத்துக்கு தான் பண்ணேன். இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.” அவன் கூற, அவள் அவனை நம்பாமல் பார்த்தாள்.

“அப்பவும் உங்க அக்கா குழந்தைக்காக பண்ணீங்க. அக்காவுக்காக செய்தீங்க. இப்பவும், அக்காவுக்காக செய்யறீங்க. என் பார்வை உங்க அக்காவை ஏதாவது செய்திருமோன்னு பயந்து பண்ணறீங்க” அவள் கூற,

“பங்காரு… நான் உனக்காக பேசிட்டு இருக்கேன். அக்காவை ஏன் சும்மா சும்மா இழுக்கற. அக்கா பாவம். அவங்க மாமியார் தான் ஏதேதோ பேசினாங்க. அக்கா, அமைதியா தானே இருந்தா?” அவன் கேட்க,

“நானும் அதையேதான் சொல்றேன். உங்க அக்கா, அமைதியாத்தானே இருந்தாங்க. ஒரு வார்த்தை, தம்பி மேல பாசம் இருந்திருந்தா, என் தம்பி பொண்டாட்டி வர்றதால் ஒன்னும் ஆகிருக்காதுன்னு சொல்ல வேண்டியது தானே?” அவள் கேட்க, அவன் மௌனித்தான்.

“எனக்கு என் அக்கா முக்கியம். அதே மாதிரி உன் மரியாதையும் முக்கியம். உன்னை பேசுறவங்க இடத்துக்கு நீ போக வேண்டாம்” அவன் உறுதியாக கூறினான்.

“அது எப்படி போகாம இருக்க முடியும். உங்க அக்காவை நல்லா பார்த்துக்க தானே, நான் என் குழந்தையை இழந்திருக்கேன். நான் அரிசியை ஊற போட்டிருக்கேன். நாளைக்கு உங்க அக்காவுக்கு பிடிச்ச பணியாரம் செய்து கொண்டு போவேன்” அவளும் உறுதியாக கூறினாள்.

“மிருதுளா…” அவன் அலற, “என் பார்வை… என் பார்வை என்ன செய்ய போகுது. என் காலடி மண்ணை எடுக்கணுமா? நான் சொல்லுவேன். நானே சொல்லுவேன். உங்க அக்கா, அவங்க யாரும் நல்லாருக்கு மாட்டாங்க. என்னை அழ வச்சிட்டு அவங்க எல்லாம் நல்லா இருந்திருவாங்களா?” அவள் கோபத்தில் வார்த்தைகளை சிதற விட, அவன் கைகள் அவள் முடியை கொத்தாக பிடித்து அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்து.

அவன் அடித்த வேகத்தில் அவள் சுவர் மீது சரிந்து விழுந்தாள். எழுந்த வேகத்தில், அவன் முன் அவள் கோபமாக நின்றாள்.

“உங்க வீட்டு ஆளுங்களை சொன்னாலே வலிக்குதா? அப்ப, நானும் என் குழந்தையும் யாரும் அத்தவங்களா? என்னை அடிச்சி கொன்னாலும் சரி, நான் பணியாரம் செய்திட்டு போவேன். தினமும் போவேன் உங்க அக்காவை பார்க்க, என்ன நடக்குதுன்னு நானும் பார்க்குறேன்.” அவள் கூற, அவன் செய்வதறியாமல் அவளை பார்த்தான்.

“என் குழந்தையை அழிச்சிட்டு, அதையே சாக்கா வச்சி என்னை ஒதுக்கி வைக்கலாமுன்னு பார்க்குறீங்கள?” அவள் கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள்.

“பங்காரு… நான் உன் நல்லதுக்குதான்…” அவன் அவளை நெருங்க, அவள் விலகி போனாள்.

 “நீங்க இதுவரைக்கும் எனக்கு பண்ண நல்லதே போகணும். இனி நீங்க, என் நல்லதுக்குன்னு எதுமே பண்ண வேண்டாம். என் நல்லதை நான் பார்த்துக்கறேன்.” அவள் கையெடுத்துகும்பிட,

இன்று நடந்த சம்பவமும், மிருதுளாவின் விலகலும் அவனை அசைத்து பார்த்தது.

‘அக்கா ஒரு வார்த்தையாவது பேசி இருக்கலாமோ?’ அவன் மனம் விரும்ப, ‘அக்காவுக்கு என்ன சூழ்நிலையோ?’ தன் தமக்கையாக தானே வக்காலத்து வாங்கி கொண்டான்.

‘தேவை இல்லாமல் எதையோ செய்து அனைத்தையும் சிக்கலாக்கிவிட்டேனோ? இவள் ஏன் நான் எதை சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேங்குறா?’ அவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான்.

 மயங்கும்…