மயங்கினேன் பொன்மானிலே!

அத்தியாயம் – 1

பிரமாண்டம் என்றும் சொல்ல முடியாத, அதே நேரத்தில் நடுத்தர வர்க்கம் என்றும் சொல்ல முடியாத மேல்தர வர்க்கத்தினர் வாழும் வீடு.

வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவர்கள் வளமையை காட்டியது. பிங்க் நிற, ‘மாடுலர் கிட்சேன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அனைத்து நவீனங்களையும் கொண்டுள்ள சமையலறையை துடைத்து கொண்டிருந்தாள் அவள்.

அவள் துடைத்த இடத்தில், ஆங்காங்கே அவள் கண்ணீர் துளிகள் விழ அந்த இடத்தை மீண்டும் துடைத்தாள் அவள்.

“பங்காரு…” அழைத்து கொண்டே உள்ளே நுழைந்தான் அவன். ‘தமிழில் சொன்னால் தங்கமே. என்னை எப்பப்பாரு பங்காரு… பங்காருன்னு கூப்பிட வேண்டியது. யாரு இருக்கிறாங்க இல்லைனு பார்க்கிறதில்லை’ அவள் மனம் சுணங்கி கொண்டாலும், அவள் முகம் அவன் அழைப்பை ரசித்து மயங்கி சிவந்தது.

“பங்காரு… கூப்பிடேறனில்லை” அவனது காலடி ஓசை அவளை நெருங்கி இருந்தது.

அவள் திரும்பவில்லை. அவன் சற்று இடைவெளி விட்டு நின்று கொண்டான். அவன் கண்கள் அவள் பின்னழகை ரசிக்க ஆரம்பித்தது. அவள் மனமோ எங்கோ இருக்க, அவள் எதையோ துடைக்க அவள் கூந்தல் அவள் கையசைவுக்கு ஏற்ப அங்குமிங்கும் அசைந்தது.

அவன் விழிகளும் அவள் கூந்தலோடு அங்குமிங்கும் அசைந்து அவள் இடையயையும் இடையிடையே தழுவிக் கொண்டது.

விழிகளின் தாகம் அதிகரிக்க, அவன் அவளை நெருங்கி இடையோடு அணைத்துக் கொண்டான். அவள் கழுத்தில் முகம் புதைத்து, “பங்காரு…” என்றான் ஆழமான குரலில்.

“என்னங்க…” அவள் மூச்சை உள்ளிழுத்து அவன் அணைப்பில் அடங்கி போக, அவள் குரல் கீச் பேசியதில், அவன் கோபம் அதிகரித்தது.

“அழுதியா?” அவன் அவள் கைகளை வேகமாக பற்றி திருப்பினான்.

அவன் அழுந்த பற்றியதில், சிவந்த அவள் கைகள் கனிந்து காட்சியளிக்க, அவள் வலியை உணர்ந்தவன் போல் அவன் பிடியை தளர்த்தினான்.

“பங்காரு…” அவன் அழைக்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவள் தன் மேல் சாய்ந்து கொண்டதில், அவளை புரிந்தவன் போல் “அம்மா, அப்பா கிளம்பிட்டாங்கன்னு அழறியா?” அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.

அவள், ‘ஆம்…’ என்பது போல் மேலும் கீழும் தலை அசைத்தாள்.

“உனக்கு நான் இல்லையா?” அவன் கேட்க, “தேங்க்ஸ்…” என்றாள் முகத்தில் புன்னகையோடு கண்கள் நீர் திரையிட.

“எனக்கு எதுக்கு தேங்க்ஸ் பங்காரு?” அவன் கேட்க, “அம்மா, அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம்.” அவள் அவன் மீது உரிமையாக சாய்ந்தபடி கூறினாள் அவன் சட்டையை திருகியபடி.

“என்ன சந்தோசம்?” அவளை இப்பொழுது நேராக நிறுத்தி, அவன் உதட்டை சுளித்து கண்களை சுருக்கி கேட்டான்.

அவள் முகத்தில் வெட்க புன்னகை வந்தது.

அவன் சட்டென்று அவளை இழுத்து, சிவந்த கன்னங்களுக்கு இதழ் பரிசு கொடுத்து, “இப்படி எல்லாம் நீ வெட்க பட்டா? நாம எப்படி பேசுறது பங்காரு?” அவன் ஆசையாக கேட்டான்.

“பேச வேண்டாம்” அவள் முறுக்கி கொண்டாள்.

“எதையாவது முழுசா சொல்றியா பங்காரு?” அவன் கோபிக்க, “அது… அது…” அவள் மீண்டும் வெட்கத்தில் தலை குனிய, அவனுக்கு சுவாரசியம் கூடி போனது.

அவள் கழுத்தில் தொங்கிய ஒருசில மாதங்களே ஆன புதுத்தாலி, செந்தாமரை நிறத்தில் அவள் வதனம் வரைந்தார் போல் அவள் முகம் அவனை ஈர்த்தாலும், அவள் பேசட்டும் என்று அவன் காத்திருந்தான்.

“…” அவன் மௌனம் நீடிக்கவே, ‘பதில் சொல்லாமல் விடமாட்டாங்க’ இந்த சில மாதங்களில் அவன் பிடிவாதம் தெரிந்த அவள் பேச ஆரம்பித்தாள்.

“நீங்க ஆறடி உயரம். நல்ல சினிமா ஹீரோ மாதிரி இருக்கீங்களா. நல்ல பணம் வேற. உங்க குணம் எப்படி இருக்குமோன்னு அம்மா, அப்பாவுக்கு பயம். இங்க வந்து தங்கிட்டு போன பிறகு, நீங்க அவங்களை கவனிச்சிக்கிட்ட முறையில், நீங்க நடந்துக்கிட்ட முறையில் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்” அவள் அவன் முகம் பார்க்காமல் கூறி முடிக்க,

“அதுக்கு தான் நீ அழுதியா?” அவன் குரல் கோபமாக ஒலிக்க, அவள் கண்கள் படபடக்க அவனை பார்த்தாள்.

“அது என்ன இப்படி பொசுக்குபொசுக்குனு கோபம்” அவள் செல்லமாக அவன் கன்னத்தில் இடிக்க, “மாத்திக்குறேன் பங்காரு” அவன் தன் கன்னத்தை அவள் கன்னத்தில் இழைந்து கூறினான்.

அவன் கன்னத்தில் உரிமை கொண்டாடி, “நான்… நான்… அம்மா அப்பா கிளம்பினதில்… அவங்களை தேடுமில்லை” அவள் சிணுங்க, “நாமளும், அவங்களை அடிக்கடி போய் பார்ப்போம். சரியா?” தன் மனையாளின் முகம் நிமிர்த்தி அவள் தலை கோதி, அவன் சமாதானமாக கேட்டான்.

“என்னை பாவான்னு கூப்பிட மாட்டியா?” அவன் குரலில் ஆசை இருக்க, “அது பழக்கம் இல்லாததால் சட்டுன்னு வரலை” அவள் சோகமாக கூற, “பழகிக்கோ…” அவன் குரலில் அழுத்தம் இருந்தது.

“நாம இருக்கிறது ஆந்திர பார்டர் இல்லையா? இங்க எல்லாம் பாவான்னு கூப்பிடுவாங்க. நான் அதை கேட்டு வளர்ந்ததால், எனக்கு அந்த அழைப்பு ரொம்ப பிடிக்கும். என்னை பாவான்னு கூப்பிட ஒரு பொண்ணு வருவான்னு நான் நினச்சதுண்டு. உன்னை பார்த்ததும் அந்த நொடியே அந்த பொண்ணு நீ தான்னு முடிவு பண்ணிட்டேன்.” அவன் கூற, அவளிடம் மீண்டும் புன்னகை.

“எப்பவும் இப்படியே சிரிக்கணும். அழக்கூடாது.” அவன் அவள் தலை அசைத்து கூற அவள் சம்மதமாக சிரித்தாள்.

அவள் விலகி செல்ல, “அத்தை மாமா என்ன நினைச்சாங்கன்னு சொன்ன, நீ என்ன நினைக்குறேன்னு சொல்லவே இல்லையே?” அவன் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

“சீனிமா ஹீரோ மாதிரி தான் இருக்கீங்க” அவள் முகத்தில் வெட்கம்.

“அப்புறம்…” அவன் ராகமாக இழுக்க, “அப்புறம் என்ன அப்புறம்? அப்புறம், சப்பரம், விழுப்புரம்…” என்று அவள் மழுப்பினாள்.

“நான் நல்லா பார்த்துகிறேனான்னு நீ சொல்லவே இல்லையே?” அவன் கேள்வியாக நிறுத்த, ‘நல்லாத்தான் பார்த்துகிறாங்க. ஆனால்… அந்த ஆனாலுக்கு பின் இருக்கும் வலியை சொல்லட்டுமா?’ அவள் கண்ணுயர்த்தி அவனை யோசனையாக பார்த்தாள்.

அவன் கண்களில் காதலும், ஆசையும் இருந்தாலும், அவளால் அவனிடம் ஒன்றி போக முடியவில்லை. அவர்களுக்கு இடையில் ஏதோ ஒன்று இருப்பதாய் அவளால் உணர முடிந்தது.

அது சரியா, தவறா என்று அவளால் கணிக்க முடியவில்லை. தனக்கே சரியா தவறா என்று சொல்ல முடியாத விஷயத்தை எப்படி பெற்றோரிடம் முழுமையாக சொல்வது. தன் மணவாழ்வை எண்ணி சந்தோஷமாக இருக்கும் பெற்றோரின் மனதை வருத்தவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவள்! படித்தவள். பண்பு மிகுந்தவள். அன்பு மனம் கொண்டவள். மென்மையானவள். அதே நேரம் சுயமரியாதை, தன்னம்பிக்கை என்று இன்றைய பெண்ணின் மொத்த குணமும் கொண்ட அவள் மிருதுளா.

தன் கேள்விக்கு பதில் கூறாததை மனதில் குறித்து கொண்டான் அவன்.

பதில் அறியும் பேராவல் அவனுள் எழுந்தது. தன் மனையாளின் வெற்றிடையை தீண்டியது அவன் விரல்கள். அவன் தீண்டலில் அவள் உடலில் மெல்லிய மின்சாரம்.

 திருமணமான புதிது என்றாலும், இது போன்ற அவன் அருகாமை அவளுக்கு அரிது.

அவள் அவன் தீண்டலை ரசிக்க ஆரம்பித்தாள்.

இடையோடு சுற்றி வளைத்து, அவளை பின்னோடு தன் மார்பில் சரித்து கொண்டான்.

அவள் தோளில் முகம் பதித்து, கழுத்தில் இருந்த தாலியை தன் ஆள் காட்டி விரலால் தீண்டி அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். அவள் செவியோரமாக சரிந்து, “நான் உன்னை எப்படி பார்த்துக்கிறேன்?” அவன் குரலில் பதிலறியும் பேராவல் இருந்தது.

ஆனால், அவளோ அவன் தீண்டலில் அவன் அருகாமையில் சிவந்து மயங்கி நின்றாள்.

“பேசு பங்காரு” அவன் குரல் அவள் செவிகளை தீண்ட, அவன் தீண்டல், அவன் மூச்சு வெட்கத்தை கொடுக்க, அவள் தன் மூச்சை உள்ளிழுத்து கொண்டாள்.

இடையோடு அவளை தன் பக்கம் திருப்பி, “பேச மாட்டியா?” அவன் குரல் இப்பொழுது அழுத்தம் காட்ட, அவன் கைப்பிடியில் வாகாக சாய்ந்து கொண்ட அவள் விழிகள் படபடத்து அவனை காதலோடு பார்க்க, அவன் அவள் இதழ்களை தனதாக்கினான்.

அவன் இதழ் தீண்டலில், அவள் கிறங்கி நிற்க, “பதில் சொல்லலைனா இது தான் தண்டனை” அவன் கறாராக பேச, அவள் நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

அந்த சிரிப்பினோடு, இந்த நொடி நீடித்து விடாதா, என்ற வேட்கை அவளுள் கொழுந்து விட்டு எரிந்தது. அவன் அவளிடம் மேலும் நெருங்கி பேச விழைய, அவன் அலைபேசி அழைத்தது.

“வம்சி…” எதிர்பக்க அழைப்பில், மிருதுளாவின் மொத்தமும் வடிந்து முகம் சுருங்கியது.

“அக்கா, சொல்லுங்க” அவன் ஆரம்பிக்க, அவள் முகம் அஷட்கோணல் ஆனது.

“சரி அக்கா, நான் இப்ப வரேன்” அவன் அலைபேசி பேச்சை துண்டித்தான்.

‘அது தானே… உடனே கூப்பிட்டிருவாங்க. கூப்பிடுற மாதிரி ஒரு பிரச்சனை. கூப்பிடாத மாதிரி இன்னொரு பிரச்சனை’ ஓரிரு மாதங்களில் தெரிந்த மனிதர்களில் அவள் மனம் சலித்துக் கொண்டது.

“அக்கா கூப்பிடுறாங்க. நான் போயிட்டு வந்துடறேன்” அவன் கூற, “இப்ப தானே வந்தீங்க?” அவள் கேட்க,

“இதுக்கு என்ன அர்த்தம் மிருதுளா?” அவன் குரல் காட்டமாக ஒலித்தது.

“நான் கேட்க தானே செய்யறேன்” அவள் பொறுமையாக கூற, “அக்கா கிட்ட இருந்து கால் வரவும் உன் முகம் மாறுச்சு. அக்கா கூப்பிடுறாங்க. நான் கிளம்புறேன்னு சொன்னதும், இப்ப தான் வந்தீங்கன்னு கேட்டா என்ன அர்த்தம்?” அவன் வார்த்தைகள் கூர்மையாக வந்து விழுந்தன.

‘…’ அவள் எதுவும் பேசவில்லை.

“நான் அங்க போகிறது உனக்கு பிடிக்கலைன்னு தானே அர்த்தம்?” அவன் கேள்வியாக நிறுத்த, மீண்டும் அவளிடம் மௌனம்.

‘ஆம்…’ என்று சொல்ல வேண்டும் என்று தான் அவளுக்கு ஆசை. சொன்னால் கோபித்து கொள்வானே என்று அவள் இதழ்கள் மௌனத்தை கையில் எடுத்து கொண்டது.

“என்னை எங்க அக்கா தான் வளர்த்தாங்க. எனக்கு அக்காவுக்கு அப்புறம் தான் எல்லாம். புரியுதா?” அவன் கேட்க, “ம்…” அவள் கூற, அவன் கிளம்பினான்.

“நானும் வரட்டுமா?” அவள் கண்களில் ஆசை மின்ன கேட்டாள்.

“இல்லை, அக்கா வீட்டு வேலைக்கு ஆள் கூப்பிட்டு வர சொன்னா. நான் பைக்கில் தான் போவேன். இன்னைக்கு உன்னை கூட்டிகிட்டு போக முடியாது” அவன் கூறிவிட்டு மடமடவென்று வாசலுக்கு சென்றான்.

‘ஒரு நாள் இரெண்டு நாள் இல்லை, திருமணம் முடிந்த நாள் முதல் இப்படி தான் நடக்கிறது. தனியாக இருக்கிறோம் என்று தான் பேர்வழி. பாதி நாள் இவங்க வாசம் அக்கா வீட்டில் தான்’ அவள் கோபமாக ஹால் சோபாவில் அமர்ந்தாள்.

‘அக்கா வீட்டுக்கு தான் போறாங்களோ? இல்லை வேறு எங்கும்’ அவளுள் சந்தேகமும் மண்டியது.

வெளியே சென்றவன் மீண்டும் வீட்டிற்குள் வந்தான். அவனுக்கு மனது கேட்கவில்லை. வாடிய தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.

அவன் உள்ளே வந்ததும், அவள் சந்தேகம் சற்று குறைந்த மாதிரி தான் இருந்தது.

“பங்காரு, பாவாக்கு டிபன் பண்ணு. சேர்ந்து சாப்பிடுவோம்.” அவள் கன்னம் தட்டி சொல்ல, அவன் அருகாமை அவன் செயலில் அவள் அவனை ஆழமாக பார்த்தாள்.

“அக்கா முக்கியம் தான். ஆனால், நீயும் சந்தோஷமா இருக்கணும்.” அவன் கூற, ‘எல்லாம் சரியாகும். அவங்க அக்கா வளர்த்திருக்காங்க. அக்கா மேல பாசம் அதிகம்.’ தன்னை தானே சரி செய்து கொண்டு அவனிடம் தலை அசைத்தாள்.

தன் மனைவியை ஆழமாக பார்த்து கொண்டிருந்தான் அவன். அவன்! ஆறடிக்கும் கொஞ்சம் அதிகம். உயரத்திற்கு ஏற்ற கட்டுடல், அவன் மீசைக்கு கீழே இருந்த உதடு சிரிக்கவா வேண்டாமா என்று மடிந்திருந்தது. அவன் விழிகள் தன் மனைவியை காதலோடு பார்த்தன. அதே நேரம் இடுங்கி அவளை அளவிட்டு கொண்டிருந்தன.

நல்லவன்! எந்த வித கெட்ட பழக்கங்களும் கிடையாது. பாசம் நிறைந்தவன். அவன் வம்சி.

அவளை பார்த்துக் கொண்டே நின்றான். எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களில், மிருதுளாவின் முகம் சற்று சரியானதும் வேகமாக கிளம்பி சென்றான் தன் தமக்கையின் வீட்டை நோக்கி.

“அக்கா…” அழைத்து கொண்டு உள்ளே சென்றான். “வம்சி… வம்சி…” என்ற அழைப்போடு அவன் மேல் பாச மழை பொழிந்தாள் அவன் தமக்கை.

நேரம் சென்று கொண்டே இருந்தது. மிருதுளா அவனுக்காக பசியோடு காத்திருந்தாள். அவன் வருவான் என்று. மணி எட்டை தாண்டி, ஒன்பதை தாண்டி, பத்தை தாண்டி, பதினொன்றை எட்டி இருந்தது.

அலைபேசியில் இவள் அழைத்த அழைப்புக்கு அவனிடம் பதிலில்லை. மிருதுளாவின் கண்கள் கரித்து கொண்டு வந்தன. அதே நேரம் அவள் கோபமும் சுருசுருவென்று ஏறியது.

வம்சி சுமார் பதினொன்று மணிக்கு திரும்பினான். அவன் வீட்டிற்குள் நுழைகையில், “நில்லுங்க…” கோபமாக ஒலித்தது மிருதுளாவின் குரல்.

“ஏன் வாசலில் வச்சி கத்துற? வீட்டிற்குள் வந்து பேசிப்போம்” அவன் சர்வ சாதாரணமாக நுழைந்து சோபாவில் அமர்ந்தான்.

“நான் இன்னும் சாப்பிடலை.” அவள் கூற, “நான் சாப்பிட்டுட்டேன். இவ்வளவு நேரம் ஏன் சாப்பிடாம காத்திருந்த? சாப்பிட்டு படுக்க வேண்டியது தானே?” அவன் அவளை பார்த்தபடி கேட்டான்.

“நான் நம்ம திருமணம் முடிந்த அன்னைக்கே சொல்லிட்டேன். என் அக்காவுக்கு நான் தான் எல்லாம். அவங்க வீட்டில் இருக்கிற அலுவலக வேலைகளையும் நான் முடிக்கணும் அப்படின்னு. நான் வர நேரம் ஆச்சுன்னா சாப்பிட்டுட்டு படுக்க வேண்டியது தானே? ஏன் லூசு மாதிரி என்னக்கு வெயிட் பண்ணிட்டு இப்படி கத்துற?” அவன் அவள் மீது குற்றம் சாட்டினான்.

“அக்கா தான் எல்லாம்முன்னா, அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணீங்க?” அவள் கோபமாக கேட்க, “ஏய்” அவன் எழுந்து நின்று ஒற்றை விரலை உயர்த்தினான்.

அவன் கோபம் அடங்கவில்லை. தன் அருகே இருந்த பூந்தொட்டியை தட்டி விட்டு மடமடவென்று அவர்கள் அறைக்குள் சென்றான்.

‘இப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிட்டதா?’ மிருதுளா அவனை வேகமாக கோபமாக பின் தொடர்ந்தாள்.

“நீங்க கல்யாணம் செய்த நாள்ல இருந்து ஒரு நாள் கூட வீட்டுக்கு சீக்கிரம் வந்ததில்லை. தினம் தினம் நான் பொறுமையா போறேன். நான் இங்க தனியா தான் இருக்கேன்” அவள் கூற,

“அக்கா, சொன்னது சரி தான்” அவன் கால்களை நீட்டி அமர்ந்தான்.

“என்ன சொன்னாங்க?” மிருதுளாவின் கண்கள் இடுங்கியது.

“அக்கா வீட்டுக்கு தானே வந்திருக்க. உன் பொண்டாட்டி உன்னை முந்தானைக்குள் முடிஞ்சி பொண்டாட்டி தாசனா வைக்கனுன்னு நினைக்குறான்னு நினைக்குறேன். அதுக்கு தான் இத்தனை தடவை கூப்பிடுறான்னு சொன்னாங்க.” வம்சி கூற, மிருதுளா அவனை யோசனையாக பார்த்தாள்.

“நீங்க என்ன சொன்னீங்க?” அவள் கேட்க, “அக்கா சொல்றதுக்கு நான் என்ன சொல்ல, அமைதியா இருந்துட்டேன். இப்ப அக்கா சொன்னது சரின்னு தோணுது. என்ன நடந்திருச்சுன்னு இப்படி சண்டை போடுற?” அவன் எரிச்சலோடு கேட்டான்.

“நான் தண்ணியடிச்சிட்டு வந்தேனா? இல்ல வேற பொண்ணோட சுத்திட்டு வரேன்னா? இல்லை சூதாடிட்டு வரேன்னா? கூட பிறந்த அக்கா வீட்டுக்கு போயிட்டு வரேன். இது ஒரு குத்தமா?” அவன் கேட்க, அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

‘இது மட்டும் தான் தப்பா? கல்யாணம் செய்த நாள் முதல் அக்கா அக்கா என்று அவர்கள் வீட்டிலே குடி இருப்பது. அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு இங்கு வந்து ஆடுவது. இதெல்லாம் தப்பு இல்லையா?’ மிருதுளா அவனை புரியாமல் பார்த்தாள்.

தன் தாயிடம் நாசுக்காக கேட்டு பார்த்ததில், ‘மாப்பிள்ளைக்கு பாசம் அதிகம் போல’ என்று முடித்துவிட்டார்.

“என்ன நிக்குற? போய் சாப்பிடு” அவன் கூற, “எதை விஷத்தையா?” அவள் கோபம் இன்னும் அடங்கவில்லை.

“என்ன நீ மாறி மாறி பேசிட்டே இருக்க?” என்று அவன் எரிந்து விழ, “ம்… உங்க அக்கா இன்னும் என்னை பத்தி என்னென்ன மூட்டி கொடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சிக்க தான்” அவள் கூற, அவள் கன்னத்தில், ‘பளார்…’ என்று அறை விழுந்தது.

அவன் கைகளை மீண்டும் ஓங்க, அவள் அவன் கைகளை பிடித்திருந்தாள்.

“எனக்கு உங்களை திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. உண்மை சுடத்தான் செய்யும். நான் சொன்னது உண்மை. உங்க அக்காவை பற்றி நான் சொன்னது…” அவன் அவளை சுவரோடு அழுத்தினான்.

அவர்கள் இருவரும் மிக அருகாமையில் நின்று கொண்டிருந்தார்கள். அவன் சுவாச காற்று அவளையும், அவள் சுவாச காற்று அவனையும் தீண்டியது. ஆனால், அதில் கிஞ்சித்தும் புது மணத்தம்பதிகளுக்கான ஆசையும், காதலும் இல்லை.

அவள் விழிகள் படபடத்து கோபத்தை மட்டுமே காட்டியது. மறந்தும் அவள் ஏக்கத்தை வெளிப்படுத்தவில்லை.

அவள் தீண்டலில் வெட்கிய, செம்மை நிறைந்த அவள் கன்னம், இப்பொழுது கோபத்தில் சிவந்து அவனை உற்று விழித்தன.

அவன் கைகள் அவள் கழுத்தை அழுத்தியது. அவள் மூச்சு திணறியது. “எனக்கு உன்னை பிடிக்கும். கொஞ்சம் இல்லை. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.”

அவன் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது. அவள் சிந்தையோ, ‘அவனுக்கு என் மீதான அன்பிலும் இத்தனை அழுத்தம் இருக்கிறதா?’ என்ற கேள்வி எழுப்பியது.

“ஆனால், என் குடும்பம் எனக்கு முக்கியம். ம்… ஹூம்… ரொம்ப ரொம்ப முக்கியம்.” அவளை கோபமாக தள்ள, அவள் மெத்தையில் சரிந்து விழுந்தாள்.

‘அந்த என் குடும்பத்தில் நான் இல்லையா?’ என்று அவள் விழிகள் கேள்வியை தேக்கி கொண்டு நின்றன.

“அக்கா சொன்னது சரி தான். நீ ஒத்தை பெண்ணாய் பிறந்ததால், உனக்கு பாசம் எல்லாம் புரியாதுன்னு. நீயும் அதே மாதிரி நடந்துக்குற?” அவன் கர்ஜிக்க, ‘எல்லா அக்கா தம்பியும் இப்படி தான் இருப்பங்கல்லா?’ அவன் பேசிய பேச்சில் அவளுள் சந்தேகம் எழுந்தது.

அவள் யோசனையை பற்றி அவனுக்கு என்ன அக்கறை என்பது போல், அவன் அதே மெத்தையில் வேறு பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.

அவள் அவனை வெறித்து பார்த்தாள். ‘வழக்கமான நாட்களுக்கும் இன்றைக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. வழமையாக அக்கா வீட்டில் வேலை என்று படுத்துக்கொள்வான். இன்று என் சண்டையை காரணம் சொல்லி படுத்திட்டாங்க.’

அவள் கண்களில் கண்ணீர்.

‘ஒரு பிரச்சனைக்கே எனக்கு தலை சுத்துது. இதுல இன்னொரு பிரச்சனை வேற இருக்கு. நான் இதை எப்படி கையாள்வது? எங்க போய் எதை சொல்வேன்?’ அவள் குழப்பத்தோடு தூக்கம் வராமல் தவித்தாள்.

மயங்கும்…