மருகுவதேனோ மதிமலரே.

மருகுவதேனோ மதிமலரே.

மதிமலர் 4

உடலை வதைக்க காத்திருக்கும் ஒருவன்
மனதை கூறுபோட காத்திருக்கும் ஒருவன்
இவர்களுக்கு இடையில்
உன்னைச் சுற்றி மாயஅரணாய் நிற்கும் ஒருவன்
இனி…
உன் நிலை என்ன மதிமலரே!

மறுநாள் காலை சிறையின் முன், தன் ராயல் என்ஃபீல்டை நிறுத்திய வீரா, தன்னுடன் வந்த சிவாவிடம் அங்கேயே காத்திருக்குமாறு கூறிவிட்டு சிறையின் வாயிலுக்கு சென்றான்.

தன்னிடம் உள்ள நீதிமன்றத்தின் அனுமதி கடிதத்தை காண்பித்து உள்ளே சென்றவன்,

அங்கு அறையிலிருந்த காவலரிடம் கடிதத்தைக் காட்டினான்.

அதை வாங்கி பாத்த்தவர், “இங்க உட்காருங்க சார், ஜெயிலர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு இப்ப வந்துடுவாரு” எனவும்,

தன் கைக்கடிகாரத்தில் முட்களின் நிலையைப் பார்த்தவாறு,

“எப்ப வருவாரு? ஜெயிலர் மேடம் இல்லையா ? ” என மேலும் கேட்க,

“ஜெயிலர் இப்ப வந்துடுவாரு சார். மேடம் வர இன்னும் ஒன் அவர் ஆகும்” எனக் கூறி அவர் தன் பணியைத் தொடர, வீரா ஜெயிலரின் வருகைக்காக காத்திருந்தான்.
அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டிருந்த வீராவிற்கு, அவன் என்ன நினைக்கிறான்? என்ன செய்துகொண்டிருக்கிறான்? என அவனுக்கே முழுதாக விளங்காத நிலை.

அவனை மீறி ஒரு சக்தி இயக்குவதைப்போல தோன்றியது. ஆனால் அதில் இவனது முழுவிருப்பம் அடங்கியிருப்பதும் புரிகிறது.

அவளை காக்க வேண்டும். இந்த வழக்கிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் இதுதான் அவனது மனதில் நேற்றிலிருந்து மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தொலைக்காட்சியின் மூலமாக ஒருமுறை நேரில் ஒருமுறை பார்த்திருந்தாலும் இந்த வழக்கு அவ்வளவாக மனதில் பதியவில்லை. ஆயிரம் வழக்குகளில் இதுவும் ஒன்று என்ற எண்ணம்தான்!

ஆனால் எப்பொழுது வழக்கின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டானோ! அப்போதிருந்து இவ்வழக்கில் அவனது நிலை வேறாகிப் போனது.
மேலும் சிவாவின் மூலமாக இந்த வழக்கைப் பற்றி அரைநாளில் சேகரித்த தகவல்கள் அவனை மேலும் இதில் ஆழமாக ஒன்றச்செய்துவிட்டது.

மிகத்தீவிரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டான்.

அவனாக ஆரம்பித்துவிட்டானே தவிர அவன் எண்ணமெல்லாம், ‘நான் இந்த வழக்கை எடுத்து நடத்த அந்த பெண் சம்மதம் வேண்டும். அவளிடம் எப்படி பேசுவது?’ என்றுதான்.

வார்த்தை ஜாலத்தைக் காட்டி வழக்கை வெல்லும் வீரன் இன்று சிறு பெண்ணிடம் எப்படி பேசுவது என தடுமாறி நின்றான்!

மேலும், ‘ இந்த வழக்கை யாரும் எடுக்ககூடாது’ என்று வக்கீல்களை மறைமுகமாக மிரட்டுவதாகக் கூட கேள்விப்பட, அதைப் பற்றியெல்லாம் அவனுக்கு பிரச்சினை இல்லை. யாராக இருந்தாலும் நேரில் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.

இதையெல்லாம் சிவா ஆச்சர்யத்துடன் பார்த்தபோது கூட அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பின்னே இருக்காதா! வீராவிடம் தங்களது வழக்கை எடுத்துக்கொள்ள கூறி எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும் வீராவிற்கு மனம் ஒப்பவில்லை என்றால் அவர்களுக்கு “நோ” தான்.
அப்படி “நோ” உடன் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அதேபோல வறியவர்மேல் இரக்கம் கொள்வதாகக் கூறி இலவசமாகவும் வாதிடமாட்டான்.

நீதிமன்றத்திற்கு உரிய கட்டணத்தை அவர்களிடம் வாங்கிக்கொள்பவன் இவனது கட்டணத்தை அவர்கள் கையால் வாங்கிக்கொடுத்த ஒருவேளை சாப்பாட்டோடுகூட முடித்துக்கொள்வான்.

இதில் அவர்களுக்கும் ஒரு திருப்தி. இவனுக்கும் ஒரு திருப்தி.

அதேபோல வசதி உள்ளவர்களிடம் லட்சலட்சமாகவும் கட்டணமாக பெற்றுக்கொள்வான். இப்போது அவன் இருக்கும் இரண்டு படுக்கையறை கொண்ட அப்பார்ட்மெண்ட் வீடு ஒரு வழக்கிற்கான கட்டணமாக பெற்றுக்கொண்டது.

இப்படி, இவன் கணக்கு என்ன கணக்கு என யாராலும் அறிய முடியாது.

இவனைப்பற்றி ஒரளவு அறிந்தது இருவர் மட்டுமே. அதில் ஒருவன் சிவா.

சிறிது நேரத்தில் தன்னிலை தெளிந்த வீரா, தன் கைக்கடிகாரத்தை மீண்டும் பார்க்க அரைமணிநேரங்கள் கடந்திருந்தது.
இன்னும் ஜெயிலர் வந்திருக்கவில்லை. தன் பொறுமையை கைவிட்டவன் அறையிலிருந்த காவலரிடம் மீண்டும் கேட்க நினைக்கும்போதே, யாழினி வேகமாக உள்ளே வந்தாள்.
வந்தவள் இவனை ஒரு பார்வை பார்த்தவாறு தன் இருக்கையில் அமர, வீராவும் அவளைப் பார்த்தவாறு அப்படியே நின்றான்.
யாழினி உள்ளே வரவும் காவலர் தான் பார்த்துக்கொண்டிருந்த பணியை விடுத்து வேகமாக இவளிடம் வந்தார்.

” சேது, சார் யாரு?” என வீராவைப் பற்றி கேட்க,

“ஜெயிலர பாக்கனும் சொன்னாரு மேடம்” என்றவரிடம்,

“ஓ…பாத்தாச்சா!” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்.

சேது, “இல்ல மேடம் …” என தயங்கவும்,

“ஏன் எங்க போனாரு உங்க ஜெயிலர்?” எள்ளலுடன் கேட்டவள் வீராவிடம் கையை நீட்ட அவன் முறைத்தவாறு அனுமதி கடிதத்தை அவளிடம் தந்தான்.

அவன் முறைப்பை கிடப்பில் போட்டவள், கடிதத்தை படிக்கத் துவங்க,

“புதுசா வந்திருக்கற அந்த மர்டர் கேஸ் பொண்ண பார்க்க போயிருக்காரு மேடம். கூட வக்கீல் போல இன்னொருத்தரையும் கூட்டிட்டு போயிருக்காரு” என சேது தயங்கியபடி சொல்லவும் பரபரப்பான யாழினி கடிதத்தை வைத்துவிட்டு வேகமாக எழுந்தவள்,

“வாட்! நான்தான் சொன்னேனே என்னோட அனுமதியில்லாம அவள பாக்க யாரையும் அனுமதிக்ககூடாதுன்னு! அதுவும் அவனைப்போய்…” என சீறியவள் வீராவை ஒரு பார்வை பார்த்தவாறு படாரென தடுப்பை நகர்த்திவிட்டு வேகமாக சென்றுவிட்டாள். சேதுவும் அவள் பின்னாலேயே சென்றுவிட்டார்.

யாழினி நடந்துகொண்டே, “அந்தாள பத்தி உங்களுக்கு தெரியாதா சேது? ஏன் விட்டீங்க?” என கடிய,

“கூட இன்னொருத்தரும் போனாரு மேடம். அதோட என்னை வரவேண்டாம் சொல்லிட்டாரு…” இதற்குமேல் நான் என்ன செய்ய என மனதுக்குள் புலம்பியவாறே அவளின் நடையை சிரமப்பட்டு எட்டிப் பிடித்துக்கொண்டிருந்தார் அந்த நாற்பது வயது மனிதர்.

யாழினி சென்றதும் தனித்துவிடப்பட்ட வீரா , “அது மதியா இருக்குமோ? ” என மெல்லிய குரலில் கூறியவாறு அவனும் அதே வேகத்தில் அவளை பின்தொடர்ந்தான்.

சங்கரின் முன் தன்னுடலை குறுக்கியவாறு அமர்ந்திருந்தாள் மதி.

நேற்றைய மயக்கம் காலையில் தெளிந்திருக்க அதுவரை அவளுக்கு காவல் இருந்த நீலாவும் தன் பணிநேரம் முடிந்து அவளிடம் பத்திரம் கூறிவிட்டு சென்றிருந்தார்.

தன் பணியைத் தொடர அடுத்ததாக வந்த மாலாவிடமும் மதியைப் பற்றி கூறி எச்சரித்துவிட்டே சென்றிருந்தார்.

ஆனால் எப்போதுமே மேம்போக்காக செயல்படும் மாலா, கொஞ்ச நேரத்தில் என்ன வந்துவிடும்? என எண்ணியவாறு அவசரத்தேவைக்காக அறையை விட்டு நீங்கியவர் அரைமணி நேரமாகியும் வரவில்லை.

அவர் சென்ற அடுத்த சில நிமிடங்களில் சங்கர் உடன் இன்னொருவருடன் வந்திருந்தான்.

இவளை விசாரிப்பது போல வந்திருந்தாலும் அவனது பார்வை சரியில்லை என்பதை உணர்ந்துகொண்டதால் தன்னுடலை முடிந்த அளவு குறுக்கி அமர்ந்துகொண்டாள் மதி.

அதிகபட்ச மன அதிர்வில் இந்த இரண்டு நாட்களாக உரைக்காத சுற்றுபுறம் இப்போது தெளிய ஆரம்பித்திருந்தது.

சங்கரின் கண்ணியமில்லாத பார்வையால் என்ன முயன்றும் எரிச்சலை அவளால் கட்டுபடுத்தமுடியவில்லை.

வந்த மனிதரோ ஆரம்பத்தில் என்னென்னவோ பேசினார்.

மதிக்கோ, உடலின் சோர்வில் புரிந்தும் புரியாத நிலை. ஆனால் அவர் பேச்சு பிடிக்கவில்லை என்பதை மட்டும் மூளை பதிவுசெய்துகொண்டே இருந்தது.

இவர்கள் வந்து ஒரு கால் மணி நேரம் கடந்திருக்கும் இப்போது அந்த வக்கீலானவர் மெதுவாக வந்த விசயத்தை பேச ஆரம்பித்தார்.

“இங்க பாரும்மா உன்னோட நல்லதுக்காகதான் சொல்றேன் கேட்டுக்கோ! ” என உனக்கு நல்லதைதான் கூறுகிறேன் என்ற பிம்பத்தை முன்வைத்து பேச ஆரம்பித்தவர்,

“நீ பண்ணின கொலைக்கு எல்லா சாட்சியும் பக்காவா இருக்கறதால கண்டிப்பா தண்டனைலருந்து தப்பிக்க முடியாது. அது ஆயுள் தண்டனையோ இல்ல தூக்கு தண்டனையோ!” எனக் கூறியவாறு அவளை ஆழ்ந்து பார்க்க அவர் விரும்பியதுபோல் மதியின் உடல் அதிர்வது தெரிந்தது.

மதி இயல்பிலேயே மிகவும் புத்திசாலிப்பெண். அவள் நல்ல மனநிலையில் இருந்திருந்தால் இது தவறே இல்லை. தற்காப்பிற்காக செய்தது. அதனால் தனக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என உணர்ந்திருப்பாள்.

ஆனால் சூழ்நிலை அவள் மூளையை முடக்கிவிட்டதால் அவர் கூறுவதை அப்படியே நம்பத்தொடங்கினாள்.

மதியின் முகம் அச்சத்தில் வெளிறவும் அவள் பார்க்காதவாறு அருகிலிருந்த சங்கரைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்தியவர் தன் குரலை மென்மையாக்கி, “ஆனா ஒருத்தர் நினைச்சா உன்னை இந்த வழக்குல இருந்து காப்பாத்த முடியும். ஆனா?”என நிறுத்தவும்,

உடல் நடுங்க கண்கள் அலைப்புற அப்படியே அமர்ந்திருந்தாள் மதி. உறவுகளின் இழப்பால் மரத்த நிலையில் இருந்தவளுக்கு இப்போதுதான் கேஸ், கோர்ட், தண்டனை இவையெல்லாம் நினைவில் வந்து நர்த்தனம் ஆடியது.

கண்கள் மெல்ல அவளிருந்த அறையை பயத்துடன் ஒருமுறை வலம் வந்தது.

சிக்கிக்கொண்டேனா!

என்னோட குடும்பம்!

என்னோட லட்சியம்!

அத்தனையும் போச்சா?

வெள்ளை உடை, வரிசையில் நின்று ஒரு கரண்டி சோறு நினைக்கும்போதே இதயம் படுவேகத்தில் துடித்தது.

ஸ்டெதஸ்கோப்பை பிடிக்க வேண்டிய கையில் கடப்பாரை பிடிக்க வேண்டுமா?

நொடியில் உலகைச் சுற்றும் வித்தைக்காரனான மனம் இன்று அவளை சுழற்றியடித்ததில் இதயம் படபடவென அடித்துக்கொள்ள ரத்தம் சர்சர்ரென்று எறி இறங்கியது.

மீண்டுமொரு மயக்க நிலை அவளை ஆக்கிரமிக்க நினைக்கும் நேரம் ‘நீரின் ஆழத்திலிருந்து ஒலி கேட்பதை போல இருக்கிறதே!’ என அவள் நினைக்க எதிரிலிருந்த அந்த ந…ல…ம் விரும்பிதான் பேசிக்கொண்டிருந்தார்.

மயக்கத்தில் சாய்ந்து கொண்டிருந்த உடலை, தலையை உலுக்கி நேராக்கியவள் அவரை கவனிக்க ஆரம்பித்தாள்.

” ஆனா அதுக்கு நீ நாங்க சொல்ற மாதிரி வாக்குமூலம் கொடுக்கனும்.” எனக் கூறவும்,

இவர் என்ன கூறுகிறார் என மதி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, “அது ஒண்ணுமில்ல நீயும் உன்னோட அக்காவும் விருப்பப்பட்டுதான் அங்க போனீங்க. உங்களோட விருப்பப்படிதான் எல்லாம் நடந்தது.” “எல்லாம்” ல் எந்த எல்லாம் என உணர்ந்தவள் கோபம் உச்சியைத் தொட்டது.

” உன்னோட அக்கா செத்ததுக்கு அவங்க காரணமில்ல. அதோட…”

அதுவரை மதியைப் பார்க்காமல் சரளமாக பேசிக்கொண்டிருந்தவர் இப்போது மதியின் முகத்தைப் பார்க்கவும் அதில் தெரிந்த ஆக்ரோஷத்தில் தானாக வாயை மூடினார்.

பின்னே! மதியின் முகமே செந்தணலை கக்கியவாறு அப்படி இருந்தது. வேகவேக மூச்சுகளை விட்டவாறு கண்மண் தெரியாத கோபத்தில் உடல் நடுங்க பெட்ஷீட்டை இறுக்கிப்பிடித்திருந்தவளின் நிலை!

அன்று அந்த குருவை கொன்றபோது இருந்த அதே நிலை.

என்ன, அன்று பெட்ஷீட்டுக்கு பதில் கையில் உடைந்த பாட்டில் இருந்தது.

சங்கரும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அங்கிருந்த மற்றவரைப்போல் தடுமாறாமல் இவள் என் உடல் பசிக்கு சரியான தீனியாக இருப்பாளா? என்று.

பெண் அணலைக் கக்கினாலும், ஐஸ் மழையாய் குளிர்வித்தாலும், பூமியைப் போல் தாங்கி நின்றாலும், அண்ணா என அடிமனதில் இருந்து அழைத்தாலும் சில ஜென்மங்களுக்கு மட்டும் அவள் பத்துநிமிட சந்தோஷத்திற்கான சதைப்பிண்டம்தான்.

மதியின் ஆக்ரோஷம் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டே செல்ல, உடலே பற்றி எரிவது போல தோன்றியது அவளுக்கு. ஆனாலும் ‘நீ முழுதாக பேசிமுடி’ என்பதைப்போல அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த மனிதரும் கடமை தவறாதவராக வந்த விசயத்தை பேசி முடித்துவிடவேண்டும் என நினைத்து, “நான் சொன்ன மாதிரி இதையெல்லாம் செஞ்சா உனக்கு தண்டனை குடுத்த கொஞ்ச நாள்ல நாங்களே ஜாமீன்ல எடுக்கறோம். அதோட உன்னோட வாழ்நாளுக்கான செலவு, மத்த விசயங்கள் எல்லாமே நாங்களே ஏத்துக்கறோம்.” என ஒருவாறு கூறிமுடித்துவிட்டார்.

அவர் முடிப்பதற்கும் மதி அருகிலிருந்த சலைன் பாட்டிலை அவரை நோக்கி எறிவதற்கும் சரியாக இருக்க, அந்த மனிதர் நூலிழையில் குனிந்து தன்னை காத்துக்கொள்ளவும் சுவரில் பட்டு திரவம் நாலாபுறமும் தெறித்தது.

உடல்நிலை சரியில்லாதவளுக்கு எங்கிருந்து அத்தனை ஆக்ரோஷம் வந்ததோ! அப்பொழுதும் ஆத்திரம் அடங்காதவள் கீழே இறங்கி சலைனை தாங்கியிருந்த ஸ்டேண்டை எடுத்தவாறு , ” நானே அவனுங்க மூனு பேரையும் கொல்ல முடியலன்னு வருத்தத்துல இருந்தா அவனுங்களுக்காக வந்து என்கிட்டயே பேரம் பேசறயா நீ” என்றவாறு அவரைத் தாக்க முற்பட அதற்குள் சங்கர் விட்ட அறையில் கீழே விழுந்திருந்தாள்.

கீழே விழுந்தாலும் அவள் கண்கள் அந்த வக்கீலை முறைப்பதை நிறுத்தவில்லை.

சின்ன பெண்ணிற்குள் இவ்வளவு ஆவேசமா! என அவர் மிரண்டேவிட்டார்.

‘என்ன செய்துவிட முடியும் இவளால்? மிரட்டியாவது இவளை சம்மதிக்க வைத்துவிடலாம்’ என எண்ணி வந்திருந்தார். ஆனால் இந்த சின்ன பெண் அவரது எதிர்பார்ப்பை உடைத்துவிட்டாள்.

மதியின் செயலில் கோபமடைந்த சங்கர் அவள் முடியை கொத்தாக பற்றியவாறு, “ஏய்! என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே அவர அடிக்க வர…” என்றவாறு அவளை மீண்டும் அடிக்கவும் யாழினி வரவும் சரியாக இருந்தது.

“இங்க என்ன நடக்குது?” என அவள் போட்ட சத்தத்தில் திரும்பிய சங்கர், ‘ச்சே…இவ எதுக்கு இப்ப வந்தா? என் லைன்ல க்ராஸ் பன்றதே வேலையா வச்சிருக்கா !’ என எரிச்சலுடன் நினைத்தவாறு மதியை விட்டு விலகினான்.

“யார் நீங்க? யார்கிட்ட பர்மிஷன் கேட்டு இவள பார்க்க வந்தீங்க? கோர்ட் ஆர்டர் இருக்கா? ” என சங்கரை விடுத்து மற்றவரை பிடித்துக்கொண்டாள்.

அவள் கேட்ட தொணியில் வக்கீலுக்கு சற்று பதட்டமானது. அப்படி எந்த கோர்ட் ஆர்டரும் அவரிடம் இல்லையே!

அப்படியெல்லாம் ஆர்டர் இல்லாமல் இங்கு சுலபமாக வந்துவிட முடியாது. அது இவருக்கே எதிராக திரும்பும் என அறியாதவரா இவர்.

இந்த சங்கர்தான், ‘ ஜெயிலே என் கன்ட்ரோல்தான் . யாழினி இல்லாத நேரம் வந்து பார்த்துவிட்டு சென்றுவிடலாம் பிரச்சனை ஒன்றும் வராது’ என கூறியிருந்தான். அவனை நம்பி வந்ததுதான் தப்பாக போனது என நொந்தவாறே, “அது…இல்ல மேடம் கேஸ் விஷயமா…” என சமாளித்தவாறே, ‘ அடேய் என்னை காப்பாத்துடா’ என சங்கரை பார்த்தார்.

சங்கரும் அவரை காப்பாற்றும் பொருட்டு, “அது நான்தான் கூட்டி வந்தேன் கேஸ்க்கு விசாரிக்கனும்னு சொன்னாரு” என வாயைத் திறக்க அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவள் போல,

“என்ன! நீ கூட்டிட்டு வந்தியா? பர்மிஷன் இருக்கா அதுக்கு. இந்த சில்லர வேலையெல்லாம் இங்க வச்சிக்காதன்னு உன்கிட்ட பலதடவ நேரடியாவும் மறைமுகமாவும் சொல்லியாச்சு. நீ கேட்க மாட்டிங்கற. இத வச்சே உன்ன சஸ்பெண்ட் பண்ண வைக்கறேன் பாக்கறயா? அதோட அக்யூஸ்ட்ட மிரட்டி குற்றத்த ஒத்துக்க வைக்க முயற்சி பண்றன்னு இன்னும் கேஸ ஸ்ட்ராங்காக்கறேன். என்ன பண்ணட்டுமா? ” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை நோக்கி அடிஎடுத்து வைக்க, அவன் கால் தன்னால் ஓரடி பின்னடைந்தது.

இவள் புகார் செய்தால் அவள் கூறுவதுபோல நடக்கும் என புரிந்தவன் இப்போதைக்கு இதை சமாளிக்க வேண்டுமென நினைத்து, பல்லைக்கடித்துக்கொண்டு, “சாரி” ஒன்றை உதிர்த்துவிட்டு அந்த மனிதரையும் கண்ணசைவில் கூட்டிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

செல்வதற்கு முன், ‘ இவகிட்ட இப்படி அசிங்கப்பட வேண்டியதா போயிடுச்சே! எல்லாம் உன்னால! இனி நீ எப்படி என்கிட்டருந்து தப்பிக்கறேன்னு பாக்கறேன்டி…’ என மதியைப் பார்த்து ஆக்ரோஷத்தை கண்ணில் காட்டித்தான் சென்றான்.

அவர்கள் வெளியே வரவும் வீராவும் அங்குதான் நின்றிருந்தான். நடந்த அத்தனையும் கேட்டு கோபத்தில் இறுகி நின்றிருந்தான்.

ஒரு சிறு பெண்ணை எந்தளவிற்கு மிரட்டிப்பார்க்கிறார்கள்! என அருவறுத்து நின்றிருந்தான்.

சங்கர் வீராவைப் பார்த்தாலும் அப்போதைக்கு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் வக்கீல், அவர் அறிவாரே வீராவைப் பற்றி!

வீராவை இங்கு பார்த்ததும் ‘இவனென்ன இங்கே?’ அதிர்ந்தவர் வெளியில் மிதமான அறிமுக சிரிப்பை உதிர்த்து பதிலைககூட பெறாமல் வேகமாக சென்றுவிட்டார்.

அவர்கள் சென்றதும் யாழினி, “சேது” என அழைக்க,

“மேடம்”

” இந்த மாதிரி எனக்கு தெரியாம எத்தன தடவ நடந்திருக்கு?” என கேள்விகளைத் தொடுக்க,

“இல்ல மேடம் நிஜமா இவர் இப்படி பண்ணுவார்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா நானே உங்களுக்கு சொல்லிருப்பேன்.” என சங்கடமாய் கூறினார்.

அவர் பதிலில் சமாதானமாகாமல், “இப்ப இங்க ட்யூட்டி யாருக்கு?” என்றவளுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை. கொஞ்சம் தாமதித்திருந்தால் இவளின் நிலை? என மதியை நினைத்து வெடிக்கும் நிலையில் இருந்தாள்.

“மாலா, மேடம் ” என அவர் கூறி முடிக்கவும் , “மேடம் ” என்றவாறு மாலா வந்தாள்.

பொங்கிய கோபத்துடன் , “டியூட்டி நேரத்துல இவ பக்கத்துல இல்லாம எங்க போன நீ?”

“மேடம் அது வந்து பாத்ரூ…” என முடிக்கும் முன்பே,

“ஷட்அப்… வாய்பேசாத நீ. நான் வர கொஞ்சம் லேட்டாகியிருந்தாலும் இவளோட நிலமை என்னவாகியிருக்கும் தெரியுமா? இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட். இது முதல் தடவ இல்ல. டியூட்டி டைம்ல நீ உன் இடத்துல இருக்கறதில்லன்னு கம்ப்ளைண்ட் வரவும், பல தடவ உனக்கு வார்னிங் கொடுத்தாச்சு. இந்த தடவ உனக்கு சஸ்பென்ஷன்தான். ரெடியா இரு. இப்ப போ வெளில” என சீறவும் எதற்கு இத்தனை கோபம் என பயத்தில் கையைப் பிசைந்தவாறு நின்றிருந்தவள்,

“மேடம்… ப்ளீஸ்..” என மீண்டும் தொடங்க,

“ஜஸ்ட் கெட் அவுட் ” என யாழினி பெருங்குரலில் கத்தவும் அதிர்ந்தவள் கீழே கிடந்த மதியைப் பார்த்தவாறு வெளியேறிவிட்டாள்.

“சேது, அவங்க போய்ட்டாங்களான்னு போய் பாருங்க…” எனவும் சேது சென்றுவிட்டார்.
அவர் செல்லவுமே யாழினி இன்னும் கீழே விழுந்திருந்த மதியைப் பார்த்தாள்.

சங்கரின் விரல் தடங்கள் அழுத்தமாக பதிந்திருக்க அத்தனை கோபம் வந்தது தன்மீதே!

‘அவன்கிட்ட பாத்துக்கறதா வீராப்பா சொல்லிட்டு இப்படி அசால்ட்டாக விட்டுட்டோமே’ என நொந்தவள் மதி எழும்ப கையை நீட்ட அவள் பிடிக்கவில்லை.

இத்தனை நேரம் வீராப்பாக கோபமாக பேசியவள் இப்பொழுது தன்னுடைய நிலையை எண்ணி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த யாழினிக்குதான் என்னவோபோல் ஆனது. பாறைக்குள்ளும் ஈரம் இருக்கும் எனும்போது காக்கிச்சட்டைக்குள் மனிதத்தை இன்னும் தொலைக்காமல் வைத்திருந்ததால் வந்த பரிதாபம் இது.

வீரா உள்ளே வந்திருந்தாலும் இரு பெண்களுமே அவனை கவனிக்கவில்லை.

அவன் பார்த்தான். கால்களைக் குறுக்கி அதில் தலை கவிழ்த்தவாறு அழுதுகொண்டிருந்த மதியை.

” சிறிய பெண்ணிவள். இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை! ” என நினைக்க நினைக்க மனம் பொறுக்கவில்லை அவனுக்கு.

சிறிது நேரம் பொறுத்தவன் யாழினியிடம், “நான் இவங்களோட பேசனும் கோர்ட் பர்மிஷன் இருக்கு கேன் ஐ” இறுக்கத்துடன் அனுமதி கேட்க,

யாழினி இப்பொழுதுதான் அவனைப் பார்த்தவள் அழுது கொண்டிருந்த மதியையும் பார்த்தவாறு, “இப்பவே பேசனுமா?” என தயங்கினாள்.

“எஸ்” என்றான் உறுதியாக.

பெருமூச்சொன்றை வெளிவிட்டவாறு சரியென தலையசைத்தவள், “மதி… “

“மதி…”

என இரண்டாவது முறை அழைக்கவுமே அழுகையை அடக்கி, நிமிர்ந்து யாழினியைப் பார்த்தாள்.

அந்த நிலையிலும், ‘நேத்து இவங்கதான நம்மகிட்ட பேசினது’ என யோசிக்க,

“இவங்க லாயர் மகரவீரன். உன்கிட்ட கேஸ் விஷயமா பேச வந்திருக்காங்க… பேசறயா?”

கேஸ் விஷயம் என்றதும் மீண்டும் கோபம் வர, “என்ன? நானும் எங்கக்காவும் அவனுங்க கூட …தான் அங்க போனோம்னு கோர்ட்ல சொல்லனுமா? அதுக்கு பேரம் பேசதான் இவன் வந்திருக்கானா? என்னை ஏன் இன்னும் சித்ரவதை பண்றீங்க… இதுக்கு என்னை கொன்னுடுங்க” என அழுதவள், “ஆனா அதுக்கு முன்னாடி அந்த மூனு பேரையும் நான் கொல்லனும்! என் அக்கா… என்னோட வானுவ அவனுங்க…” என வெறியுடன் கத்தியவள் அதற்குமேல் முடியாமல் மீண்டும் கால்களில் முகத்தைப் புதைத்து தேம்பித் தேம்பி அழ அங்கிருந்த இருவருக்குமே கண்களில் நீர்துளிகள் பூத்தது.

வீரா, யாழினி அறியாமல் கண்ணீரைத் துடைத்தவன், “ப்ளீஸ் தயவுசெஞ்சு அவங்ககிட்ட தனியா பேசனும்” என கம்மிய குரலில் கூற யாழினி வெளியேறிவிட்டாள்.

மெதுவாக மதியின் அருகில் சென்றவன், “மதி …” என்றான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!