மருகுவதேனோ மதிமலரே…!

IMG-20210105-WA0008-9eea22dc

மதி…5

 

பாசக்கூட்டில் பாதுகாப்பாய் சுற்றித்திரிந்த பொன்மானே!

நரிகளின் பசிக்கு இரையானதே உன் பாசக்கூடு

இதுவே சமயமென வேடனும் அம்புடன் காத்திருக்க

எதிர்பாரா நேரத்தில் மனிதம் கொண்டு காக்க வந்ததே அரிமா  கர்ஜனையோடு

இனி காலம் தன் விளையாட்டை ஆரம்பிக்கும்

மருகாதே மதிமலரே!

 

சாமிதுரை கைகளால் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தார்.

அவர் நினைத்தது என்ன? நடப்பது என்ன? அனைத்தும் கைமீறி போவது போல இருக்க,  மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.

 

இடம்  அவரது விருந்தினர் மாளிகை.

 

அவரின் பக்கவாட்டு இருக்கையில் மாணிக்கம் அமர்ந்திருந்தார். பிரபலமான வக்கீல் அவர். சாமிதுரையின் நண்பரும்கூட.

இவர்களுக்கு முன் பாவமாக நின்றிருந்தார் மாணிக்கத்தின் ஜுனியர் நாராயணன்.

மாணிக்கம் இந்த வழக்கை எடுக்க வெகுவாகத் தயங்கினாலும் நண்பனின் எண்ணமும் சரியாகப் படவே அரைமனதுடன் இதை ஏற்றிருந்தார்.

 

“ஏய்யா ஒரு சின்ன புள்ள அதுகிட்ட பேசி சமாளிக்க தெரியல… நீயெல்லாம் வக்கீல்னு சொல்லிடாத” என ஏகக்கடுப்பில் வசைபாடிக்கொண்டிருந்தார் அவர்.

 

ஆம், மாணிக்கம்தான் மதியிடம் பேரம் பேசுவதற்காக அவர் முன்னால் நிற்கும் இந்த நாராயணன் என்னும் மனிதனை தூது அனுப்பியது.

இதன் மூலம் மதிக்கும் பலன். நண்பனுக்கும் அவன் எண்ணம் நிறைவேறும் என கணக்கு போட்டிருந்தார்.

 

ஆனால் அது இப்படி சொதப்பலாக முடியும் என அவர் நினைத்திருக்கவில்லை.

சின்ன பெண்தானே! கொஞ்சம் பயமுறுத்தி பேசினால் தங்களது திட்டத்திற்கு ஒப்புக்கொள்வாள் என நினைத்திருந்தார்.

 

ஆனால் இவர்கள் தடுக்கில் புக நினைக்க மதி கோலத்தில் பாய்ந்திருந்தாள்!

அதோடு சிறையை விட்டு வெளியே வந்ததும் சங்கர்வேறு நாராயணனை பிடித்துக்கொண்டான்,

யோவ்… உன்னால நான் மாட்டிகிட்டேன். பத்து நிமிசம் பேசறேன்னு சொல்லிட்டு அந்த சின்ன புள்ளைகிட்ட ஒருமணி நேரமா பேசியும் உன்னால ஒன்னும்… முடியல…” 

என சாடியவன், தானும் அதுவரை நேரம் காலம் மறந்து  அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதை வசதியாய் மறந்தான்.

நாராயணன் அவனது பேச்சில் திகைத்தவர்,

“என்னா சார் இப்படி பேசறீங்க! நீங்கதான நான் பாத்துக்கறேன் சொன்னீங்க. அந்தம்மா இந்த நேரத்துல  வராதுன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போய்ட்டு இப்ப என்னடான்னா என்னை பேசறீங்க…  இந்த விசயம் கோர்டுக்கு போனா எவ்ளோ பெரிய இஷ்யூ ஆகும்னு தெரியுமா? ஏன், அவங்க பக்கம் தீர்ப்பாகவும் வாய்ப்பிருக்கு…” என பதிலுக்கு இவரும் கத்த,

“யோவ் இப்ப என்னங்கற… ஏதோ உதவி கேட்டன்னு செஞ்சா என்னையே கேள்வி கேப்பியா நீ…”  யாழினியிடம் அடங்கி வந்த கடுப்பில்  மற்றவரை காய்ச்சிக்கொண்டிருந்தான் சங்கர்.

“அப்படி இல்ல சார்… இது கொஞ்சம் பெரிய இடத்து கேஸ். அந்த பொண்ணு நினைச்சா ஈஸியா முடிஞ்சிடும். அதோட உதவி பண்ணின உங்களுக்கும் பலன் பெருசா… இருக்கும்.” என நிமிடத்தில் சங்கரிடம் தழைந்து பேசினார் நாராயணன்.

 

வீரியத்தை விட காரியம் பெரிதல்லவா!

இவர் தழைந்து பேசவும் சங்கரும் அமைதியானான்.

“இப்ப என்ன பண்ணனும்ங்கற?”

 

“எங்க சார்கிட்ட கேட்டு சொல்றேன் சார்.”  பிறகு ஏதோ யோசித்தவர் பின்,

“சார் நாம அந்த பொண்ணு செல்ல விட்டு வெளியவரும்போது ஒருத்தன் நின்னுருந்தானே!”

இப்போதுதான் சங்கருக்கும் உரைத்தது. வந்த வேகத்தில் அவனைக் கண்டும் காணாமல் வந்திருந்தான்.

“ஆமா அவனுக்கென்ன…” என யோசனையுடன் தாடையைத் தேய்க்க,

“இல்ல…அந்த ரூம்க்கு வெளிய நின்னானா, ஒருவேள  அந்த பொண்ணதான் பாக்க வந்திருப்பானோன்னு…”  என இழுத்தார்.

“ஏன், அதனால என்ன?” 

 

“அப்படி அந்த பொண்ணு மதியதான் பார்க்க வந்திருந்தான்னா எதுக்கு? என்ன?ன்னு தெரியனும். அது கொஞ்சம் முக்கியமான விசயம். என்னன்னு விசாரிச்சு சொல்லுங்க சார்.”

‘ அவ பேரு மதியா! நல்லாதான் இருக்கு அவள மாதிரியே…’  என சற்று நேரம் யோசித்தவன்,

“சரி நான் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு சொல்றேன். ஆனா மறுபடி அந்த பொண்ண பாக்கனும் அது இதுன்னு வரக்கூடாது” என போனால் போகிறது உதவுகிறேன்  என்றவாறு  கூறிச் சென்றிருந்தான்.

நாராயணன் இதையெல்லாம் கூறியிருக்க அதற்குதான் மாணிக்கம் இவரை வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டிருந்தார்.

 

சாமிதுரை இவற்றைக் கேட்டு ஒரு மாதிரி சோர்வான மனநிலையில் அமர்ந்திருந்தார்.

‘இந்த வழக்கிலிருந்து அவ்வளவு எளிதில் வெளிவரமுடியாது போல கடவுளே!’ என்பதாகத்தான் அவரது மனம் நினைத்துக்கொண்டிருந்தது.

“சார் அந்த வீரா வ ஜெயில்ல பாத்தேன் சார்…” என நாராயணன் இழுக்க,

 

“அவனா?” என மாணிக்கம் யோசித்தவர், “எதாவது கேஸ் விசயமா வந்திருப்பான்யா…” என்றார் அசிரத்தையாக.

“அது அப்படி இல்ல சார். அவன அந்த மதி பொண்ணு இருக்கற செல்லுக்கு வெளியில பாத்தேன்… அதான் அந்த ஜெயிலர்கிட்ட விசாரிக்க சொல்லிட்டு  வந்திருக்கேன்.” என்றார்.

 

“அப்படியா?” என மாணிக்கம் யோசிக்கத்தொடங்கினார்.

‘அப்படியும் இருக்குமோ?’ என மனம் யோசிக்க மூளையோ இது வாய்ப்பே இல்லை என வாதிட்டது.

அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே நாராயணனின் போன் அலறி, இவர்கள் எண்ணியிருந்த விரும்பத்தகாத தகவலையே கூறியிருந்தது.

சங்கர்தான் அழைத்தது. “வக்கீலு…  அவன் பேர் மகரவீரனாம். அவன்தான் இந்த பொண்ணு சார்பா வாதாட போறானாம்” என கூறியிருந்தான்.

நாராயணனும் அத்தகவலை  அப்படியே கூற மாணிக்கம் வியப்புடன் புருவத்தை உயர்த்தினார்.

 

“இது எப்படியா நடந்தது?” என வாய் தன்னால் வார்த்தையை உதிர்க்க, இவரது சத்தத்தில் தன் சிந்தை கலைந்த சாமிதுரை என்னவெனப் பார்த்தார்.

“அதான் சார் எனக்கும் புரியல . வீரா இதுல இறங்கியிருக்கான்னா…”

இதற்குமேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறாமல் விட்டுவிட்டார் நாராயணன்.

 

 இவர்கள்புறம் மேலும் வலுவிழந்து கொண்டே வருவதை உணர்ந்தவர், “சரி நீ போ…” என  நாராயணனை அனுப்பிவிட்டு சாமிதுரையின் புறம் திரும்பினார்.

“என்னடா… என்ன அவ்ளோ யோசனை”

நண்பனின் யோசனையைக் கண்டு சாமிதுரை கேட்டிருந்தார்.

” துரை அந்த பொண்ணுக்கு உதவி பண்றவங்க யாராவது இருக்காங்களா? அதாவது அந்த பொண்ணு சார்பா இந்த கேஸ வக்கீல்கிட்ட கொண்டுபோற அளவுக்கு…”

மாணிக்கத்தின் கேள்வியில் சற்று யோசித்தவர், “இல்லடா… அப்படி யாரும் இல்ல. இருந்தவங்களும் இப்ப உயிரோட இல்ல.  ஏன் கேக்கற?” அவர் குரல் மெலிந்து வந்தது.

“இல்ல வீரா இந்த கேஸ் எடுத்திருக்கான் அதான் யோசனை…” என்றவர் யோசனை பலமாகவே இருந்தது.

 

“யாருடா அது வீரா? உன்னைவிட பெரிய வக்கீலா!”

“பெரிய வக்கீல்னா எப்படி உருவத்துலயா?” எனக் கேட்டு கவலை மறந்து  சிரித்தார் மாணிக்கம்.

“டேய் சிரிக்காத, எனக்கு கடுப்பாகுது. என்னன்னுதான் சொல்லித் தொலையேன்.” சாமிதுரை சிடுசிடுக்க,

“சரி சரி, கோபப்படாத. ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணேன் டா.  ஒரேயடியா யோசிச்சா மூளை சூடாகி நரம்பு வெடிச்சிரும்” என்றவர்,

“எனக்கெதுக்கு  இவ்ளோ ஷாக்னா  அவன் ஒரு  கேஸ எடுத்துக்க ரொம்ப யோசிப்பான்.

ஆனா எடுத்துட்டா தீர்ப்பு அவன் பக்கம்தான். இதுவரை எடுத்த கேஸ்ல அவன் தோத்ததில்ல.

ஜெயிக்கறது… அது முக்கியமில்ல, ஆனா அவன் ஸ்டைல் அது வித்தியாசமா இருக்கும்.”

சாமிதுரை புரியாமல் பார்க்க மாணிக்கம் விளக்கினார்.

” இப்ப ஒரு கேஸ் நடக்குதுன்னா கோல்டன் எக் மாதிரி ஒரு பாய்ண்ட் கேஸ ஜெயிக்க வச்சுடும். அத முதல் ஹியரிங்கலயே  ஓபன் பண்ணினா உடனே கூட சாதகமா தீர்ப்பு வந்துடும். ஆனா வீரா இருக்கானே, சில சமயம்  முதல்லயே ஓபன் பண்ணி கேஸ ஜெயிக்கறவன், சில கேஸ்ல எதிராளிய சுத்த விட்டு அப்பறமாதான் ரிலீஸ் பண்ணுவான். ஏன் தெரியுமா? அப்பதான் அடுத்து இதே மாதிரி கேஸ் வந்தா எந்தெந்த பாய்ண்ட் எதிரணி பேசக்கூடும்னு கவனிக்கறதுக்காக. அதாவது புலி தன்னோட இரைய அடைஞ்சும் அதுகிட்ட கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுமே எங்க போகுது பாக்கலாம்னு அந்தமாதிரி…  “

 

சாமிதுரைக்கு இன்னும் புரியவில்லை, “என்னடா குழப்பற… நீ பெரிய வக்கீல்தான, உன்னால அவன ஜெயிக்க முடியுமா முடியாதா?”

“டேய் நான் டெஸ்ட் ப்ளேயர்னா அவன் ட்வென்டி ட்வென்டி விளையாடறவன்டா…”

“புரியற மாதிரி பேசேன்டா…” என சாமிதுரை எகிறவும்,

“இரு இரு டென்சன் ஆகாத… உனக்கு செஸ் விளையாட தெரியுமா?”

இதில் சாமிதுரையின் முகம் மேலும் கடுகடுவென மாற,

“இங்க பாரு துரை உனக்காததான் பேசிட்டு இருக்கேன்.  பொறுமையா யோசி. நீ போற பாதைய சரியா தேர்ந்தெடுக்கலன்னா அது நீ போகவேண்டிய இடத்துக்கு  உன்னை கூட்டிட்டு போகாது.” என கூறவும் சற்று அமைதியானார்.

சாமிதுரை  அவர் முன்னிருந்த கிளாஸை எடுத்து நீர் அருந்தி சற்று ஆசுவாசப்பட்டவர்,  “எனக்கு செஸ் கொஞ்சமா தெரியும்” எனக்கூற,

“அதுல  பவர்ஃபுல்லான காய்ன் எது?”

சற்று நேரம் யோசித்தவர், “எனக்கு தெரிஞ்சு ராணிதான்.”

“அப்ப மத்த காய்ன் கோட்டை, மந்திரி இதெல்லாம் டம்மியா?”

“இல்லையே! அந்தந்த காய்ன்னுக்கு உண்டான பவர் இருக்கே… ஆனா  ராணிக்கு முன்னாடி இது டம்மியா  தெரியும். “

 “ரைட்… இப்ப வீரா ராணி மாதிரி. அப்ப அவனுக்கு எதிரா நாம நிறுத்தறதும் என்னை மாதிரி கோட்டையையோ மந்திரியையோ இல்ல. அதே அளவு பவரான ராணியாதான் இருக்கனும்.”

அதில் சற்று சிந்தித்தவர், “என்னென்னமோ சொல்ற. ஆக மொத்தம் நீ இந்த கேஸ் எடுக்க மாட்ட அதத்தான சொல்ல வர…” என கேட்டிருந்தார்.

“இல்ல, நான் எடுத்தா ஜெயிக்க வாய்ப்பு கம்மி அதத்தான் சொல்றேன்.”

“இப்ப என்னதான் பண்ண சொல்ற?”

“யோசிப்போம்.  ஒருத்தன் இருக்கான். நான் வேணும்னா அவன்கிட்ட பேசி பாக்கறேன்.” என்றவாறு எழுந்தவர்,

“இப்பதான் ஆட்டம் சூடுபிடிக்குது. ஐ ம் ஈகர்லி  வெயிட்ங் பார் தி கேஸ் மூவ்” என முணுமுணுத்தவாறே, “வரேன்டா…” என கிளம்பிவிட்டார்.

சாமிதுரை சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்.

தான் செய்வது நியாயமில்லை என அவருக்கு புரிந்தாலும் அதைத்தவிர வேறு வழியும் அவருக்கு கிடைக்கவில்லை.

 

 மதியைப் பார்த்துப் பேசிவிட்டு சிறைக்கு வெளியில் வந்தான் வீரா.

சிவா அவனை எதிர்கொண்டவன், “பாஸ் என்னாச்சு? ” என கேட்க,

“இனி மேல ப்ரொசீட் பண்ணனும் சிவா… வீ டோன்ட் ஹேவ் எனி டைம். ” என உரைத்தவாறே வேகநடையில் பைக் இருக்குமிடம் சென்றான்.

அவனுடன் நடந்தவாறே, “ஓ.கே பாஸ்” என்றவன் வீரா பைக்கை ஸ்டார்ட் செய்து  உருமவிடவும் அதில் ஏறி அமர்ந்தவாறு,”பாஸ் ஒரு விசயம் !”

“ம், சொல்லு” என்றவாறு வண்டியை செலுத்தத் தொடங்கினான்.

“அந்த நாராயணன் இருக்காரே!  மாணிக்கம் சாரோட வலதுகை அவர இங்க பாத்தேன்.  ஜெயிலர் கூட ஏதோ பிரச்சனை போல ரெண்டு பேரும் காரசாரமா என்னவோ பேசினாங்க.  ஆனா, கொஞ்ச  நேரத்துலயே சமாதானமாகிட்டாங்க. நல்லவேள நான் இங்க மரத்துக்கு பின்னால நின்னதால அவருக்கு தெரியல… இல்லனா மாட்டிருப்பேன் சரியான அறுவ…” என அவன்போக்கில் பேசினான்.

“சிவா…”

“பாஸ்…”

“அந்த நாராயணன் மேல ஒரு கண்ண வை. எங்க போறான் என்ன பண்றான் எல்லா டீட்டெய்லும் எனக்கு வேணும்.”

“ஓ.கே. பாஸ். நம்ம பில்லுகிட்ட சொன்னா பக்காவா முடிச்சிடுவான்.” என முதலில் சம்மதத்தை தெரிவித்தவன்,

“ஏன் பாஸ்? அவர ஏன்! எதாவது முக்கியமான விசயமா?”

வீரா சற்று நேர அமைதிக்குப்பின், “ம்… மதி கேஸ்க்காக…” என்றவன் சிவா முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டவாறு வண்டியை மார்ச்சுவரி நோக்கி முடுக்கிவிட்டான்.

மதி காலை உணவை முடித்துவிட்டு தனது அறையினுள் இருந்தாள்.

நீலா மதியுடனேயே இருந்தார். அதுவும் நேற்று சங்கர் மதியிடம் நடந்துகொண்டதைப் பற்றி தெரிய வரவும் இன்னும் அதிகமாக அவளிடம் கவனம் வைத்தார்.

மதியின் சிந்தனை முழுவதும் வீராதான் இருந்தான். அவன்  வந்தது பேசியது இதெல்லாம் ஏதோ மின்னல் வேகத்தில் நடந்ததுபோல தோன்றியது மதிக்கு.

 

மதிப்பெண் வந்த அன்றிலிருந்து  எத்தனை நிகழ்வுகள் தன் வாழ்வில். கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு. இது தனக்கு ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என விடையறியமுடியா வினாக்கள் பல தலையை உருட்டிக்கொண்டிருந்தன.

முதல் நாள் கொண்டாட்டம், இரண்டாம்நாள் மரண ஓலம், மூன்றாம்நாள்  பிரக்ஞையற்ற நிலை, நான்காம் நாள் மயக்கம், ஐந்தாம்நாளான நேற்று அத்தனை களேபரத்திலும் வீராவுடன் வந்த சிறு நம்பிக்கை துளிர்.

நேற்று வீராவுடன் பேசியது நினைவில் வந்தது.  நாராயணன், சங்கர் வந்து சென்றதும் வீரா மதியிடம் தான் அவளின் சார்பாக வாதாடுவதாக கூற, ஏற்கனவே நாராயணன் மேல் கோபத்தில் இருந்தவள் அதை அப்படியே வீராவின் மேல் இறக்கினாள்.

 

“என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க… யார் நீங்கலாம்? திடீர்னு என் வாழ்க்கைல நுழைஞ்சு என்னென்னவோ பண்றீங்க. அவனுங்க என் குடும்பத்த என் கண் முன்னாடியே அழிச்சானுங்க… இன்னொருத்தன் நான் குணங்கெட்டவன்னு என்னையே சொல்ல சொல்றான்… இப்ப நீ வந்து உன்னை நான் காப்பாத்தறேன் சொல்ற… நான் என்ன ஃபுட்பாலா ஆளாளுக்கு உதைச்சு விளையாட… என்னால தாங்க முடியலயே! யாரோ என் கழுத்த நெறிக்கறமாதிரி மூச்சு முட்டுதே… யாராவது என்னை கொன்னு எனக்கு விடுதலை குடுங்களேன். எனக்குன்னு யாருமில்லாத உலகத்துல நான் வெளிய வந்து என்ன பண்ண போறேன். இப்படியே என்னை சாகடிச்சுடுங்க… ” என முகத்தை மூடிக்கொண்டு அழுது கரைய, அவ்வீரனுக்கும் கண்கள் கலங்கியது உண்மை.

ஆனால் சாமர்த்தியமாக அதை உள்ளுக்குள்ளே அடக்கியவன் மெதுவாக அவளை அணுகினான்

 அருகில் கேட்ட ஷுக்களின் சத்தத்தில் கண்கள் சிவக்க   வீராவை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் கோபம் வரப்பெற்றளாய் வீராவை அடித்து தள்ளப்பார்க்க அவளால் ஒரு சதவீதம் கூட அதைச் செய்ய முடியவில்லை.

கல்லுபோல அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருந்தான் அவள்முன்.

அவளும் விடாமல் தள்ளிப்பார்க்க, சற்று நேரம் விட்டு அவள் கைகளைப் பிடித்தவன், “மதி… என்னை பாரு.  நான் அவங்கள  மாதிரி இல்ல”

என புரியவைக்க முயன்றான். இதெல்லாம் அவள் காதில் ஏறினால்தானே! விடாமல் அவனைத் தள்ளிக்கொண்டேயிருக்க,

“உங்கப்பா அக்காவ பாக்கனுமா வேண்டாமா? கடைசியா!” என சிறு அதட்டலிட அது வேலை செய்தது.

அதிலும் “கடைசியா” என்ற வார்த்தையின் வலி அவள் உணர்ந்து மேலும் வெடித்து அழ சிறிது நேரம் அழவிட்டவன் , அவள் தோள்களைப் பற்றவும் எச்சரிக்கை உணர்வில் சற்று பின்னோக்கி நகர்ந்தாள்.

“ரிலாக்ஸ் ஒன்னுமில்ல…” என தோள்களைத் தட்டி கொடுக்க,

இழப்பின் வலி கண்களில் தெரிய, “ஆமா, என்கிட்ட இப்ப ஒன்னுமில்ல. ஆனா இருந்துச்சுதான? ”  கண்களில் நீர்தளும்ப அவள் கேட்ட விதம் எந்த மனித உயிரையும் ஊன் உருக வைக்கும். வீராவும் விதிவிலக்கல்லவே! அவனும் உயிர் வலியை உணர்ந்தான்.

மேலும் அவளே, “நான் என்ன பண்ணனும்? உங்க பேச்ச கேட்டு இந்த கேஸ்ல ஜெயிச்சு வெளிய வந்து என் குடும்பத்துக்கு என் கையால கொள்ளி வைக்கனுமா? அதுக்கான சக்தி சத்தியமா என்கிட்ட இல்ல. அவங்கள அப்படி ஒரு நிலைமைல பாத்த கனமே என் உயிர் போயிடும்… ப்ளீஸ், எனக்கு வாழற ஆசையெல்லாம் இல்ல… ஆனா இன்னொரு தடவ என் கண்ணால இந்த கொடுமைய பாக்கற தைரியமும் எனக்கு இல்ல… யார் என்ன கேஸ் வேணாலும் போட்டுக்கோங்க . ஆனா என்னை விட்டுடுங்க. நான் இப்படியே சாகறேன்..”

“ஓ…ஸ்டாப்பிட் மதி. இந்த கொஞ்ச நேரத்துல எத்தன தடவ சாகறேன் சாகறேன் சொல்ற.  சாகனும்னா நீ மூனுநாள் முன்னாடியே செத்திருக்கனும். அதுக்கான வாய்ப்பு இல்லன்னு சொல்றயா?”  என அவள் புலம்பலை சகிக்க முடியாமல் கத்தியிருந்தான்.

அவன் சத்தத்தில் மிரண்டவள் அவனையே பார்க்க, நினைவுகள் அவன் கேள்விக்கு விடை தேடியது.

ஆம், அவள் சாவதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் அமைந்ததே! அதை தங்களிடம் திருப்பியல்லவா அவளது உறவுகள் உயிர் நீத்தன! நிதர்சனம் உரைத்ததும் மலங்க மலங்க விழித்தபடி அவனைப்பார்த்தவள்,

 “ஆமா வந்துது. ஆனா அப்பாவும், வானுவும்  ஏன் இப்படி பண்ணாங்க? அவங்க இல்லாம நான் எப்படி… என்னை முதல்ல சாக விட்றுக்கலாமே!” என மீண்டும் அழ ஆரம்பித்தவளை,

“மதி கன்ட்ரோல் யுவர்செல்ஃப். இப்படியே அழுதுட்டே இருக்க போறயா? தப்பு பண்ணிட்டு  அவனுங்க வெளில சந்தோஷமா இருக்கும்போது நீ இப்படி ஜெயில்ல இருக்கனுமா?” என அதட்ட இப்பொழுது அழுகையை அடக்கி அவன் பேச்சை சற்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

“யோசி மதி உனக்கான வாழ்க்கை இன்னும் இருக்கு. நடந்தத நினைச்சு சும்மா அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியாகிடாது. நமக்கானத நாமதான் சரிபண்ணனும். அடுத்தவன் போடற பாதைல கடமையேன்னு நீ ஏன் போகனும். உனக்குன்னு ஒரு பாதைய உருவாக்கு. இல்லாம போன உன்னோட உறவுகளும் இததான் விரும்புவாங்க.”

” இங்கபாரு, நான் ஒரு வக்கீல். உனக்காக நான் போராட தயாரா இருக்கேன். ஆனா நீ தயாரா இருக்கறயா?” என அவள் கண்களைப் பார்த்து கேட்க, மகுடிக்கு மயங்கிய பாம்பை போல அவன் பேச்சிற்கு உடன்பட்டவள்,

 

” நான் என்ன பண்ணனும்” என யோசித்து அதை வாய்விட்டும் கேட்டிருந்தாள்.

“முதல்ல அழறத நிறுத்து. பீ ஸ்ட்ராங்க்.  எவ்ளோ அழனுமோ அத இங்கயே அழுது முடிச்சிடு.  இப்ப இருக்கற கஷ்டம்  இதெல்லாம் ஒன்னுமேயில்ல. இனிதான் உனக்கான சோதனைகள் காத்துகிட்டு இருக்கு.”

 

சற்றும் இமைக்காமல் தன் கண்களுக்குள் அவன் பிம்பத்தையும் மனதினுள் அவன் வார்த்தைகளையும் பதிய வைத்துக்கொண்டிருந்தாள் மதி.

“கோர்ட்ல உன்னை முடக்கற பல விசயங்கள் நடக்கும். என்ன நடந்தாலும் யார் … என்ன கேட்டாலும் தைரியமா இருக்கனும். அழாம, கலங்காம இருக்கனும் முடியுமா?”

 ” அப்படியே இந்த கேஸ்ல ஜெயிச்சு நிரபராதியா நீ வெளில வந்தாலும்… வந்தாலும் என்ன வருவ… அப்படி வெளிய வந்தாலும் இந்த உலகம் உன்ன கொலைகாரின்னுதான் அடையாளப்படுத்தும்,  உன்னோட உடல் களங்கப்பட்டுச்சான்னு கேள்விமேல கேள்வி கேக்கும். நீ போற இடத்துல எல்லாம் இந்த ரெண்டும் உன்னை விடாம  காலம்பூராவும் தொடரும். நாலு சுவத்துகுள்ள நடந்தத நானூறு தடவ கற்பனைல நடத்திக்காட்டுவாங்க. எல்லாத்தையும் தாங்கி உன்னோட லட்சியத்தை அடைவேன்னு தோணிச்சுன்னா எனக்கு கை குடு நான் உன்ன  தூக்கி விடறேன். ஆனா, இப்பயே முடிவு பண்ணிக்கோ! இதெல்லாம் முடியாதுன்னு தோணிச்சுன்னா இப்படியே இங்கயே இருந்துடு. ஒரு கோழைக்காக என்னோட நேரத்த நான் வேஸ்ட் பண்ண மாட்டேன். “

அவன் பேசபேச அவனையே பார்த்திருந்தாள் மதி. புது பலம் அவளுக்குள் வந்தது போல உணர முடிந்தது. 

பேசிப் பேசியே வரவழைத்திருந்தான் வீரா.

அவள் யோசிக்கட்டும் என நினைத்தவன் எழுந்து வேறு பக்கம் திரும்பி நின்றான்.

சற்று நேரத்தில், “எனக்கு கை குடுக்க மாட்டீங்களா?” என மெல்லிய குரல் கேட்கவும் சடாரெனத் திரும்பியவன் மனதில் தோன்றிய மகிழ்ச்சி, நிம்மதி அதை அப்படியே முகத்தில் காட்டியவாறே தன் கையை மெதுவாக அவள் முன் நீட்டி,

“நம்பி குடுக்கலாம். எப்பவும் கைவிடமாட்டேன்.” என உறுதியுடன் கூற, மதியும்  தன் கையை அவன் கையோடு இணைத்துக் கொண்டாள்.

அந்நிகழ்வை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு,  என்ன மனிதன் அவன்! யாரென்றே தெரியாத பெண்ணிற்கு உதவ ஏன் அத்தனை முனைப்பு.  தன் கண் முன்னான அவன் துடிப்பு அது உண்மை என எண்ணியவளுக்கு,  எதை வைத்து அவனை நான் நம்பினேன்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 எதற்கும் தெளிவான விடையும் அவளிடம் இலலை.

காலம் தனக்கு என்ன வைத்திருக்கிறது? என்ற கேள்வியுடன் சிறைக்கம்பியில் தலையைத் தாங்கியவாறு யோசனையுடன் அப்படியே உறங்கிப்போனாள் மதி.

இரவு முடியாதா இப்போது வெளிச்சம் பிறக்காதா

கதவு திறக்காதா கிளிதான் சிறகை விரிக்காதா

தவறு வருமுன்னே தெய்வம்தான் தடுக்க நினைக்காதா

இதயம் தோற்றுவிட்டால் இப்போது மிருகம் ஜெயிக்காதா

நீதிக்குதான் தண்டனையென்றால் நெஞ்சம் வலிக்காதா

சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…!

 விடியலை நோக்கிய அவள் பயணம் தொடங்கியது.