மருகுவதேனோ மதிமலரே

மருகுவதேனோ மதிமலரே

மருகுவதேனோ மதிமலரே!

மதி 1:

எல்லா இரவும் இருட்டில்லை…

எல்லா பகலும் வெளிச்சமில்லை…

பகலும் ஒருநாள் இருளும்…

இருளும் ஒருநாள் ஒளிரும்…

மருகாதே மதிமலரே!

“மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… ”  என்ற குரல் சுப்ரபாதம் போல அந்த அறை முழுவதும்  எதிரொளித்து அவன் காதுகளை நிறைக்க, மெல்ல எழுந்தவன், “குட்மார்னிங் மா” என்றவாறு  அலாரத்தை அணைத்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் சமையலறைச்  சென்று தனக்கென காபி தயாரித்துக்கொண்டு, அதோடு கதவைத்திறந்து வெளியில் கிடந்த பேப்பரையும் எடுத்துக்கொண்டு வந்து, ஹாலில் இருந்த ஒற்றைச் சோபாவில் அமர்ந்தான்.

 பேப்பரை  வைத்துவிட்டு டிவியை ஆன் செய்து நியூஸ் சேனலை வைத்துக்கொண்டு காபியை பருக ஆரம்பித்தான்.

 பிரபல தொழிலதிபரின் மகன்  அவர்களது சொகுசு பங்களாவில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

அவரை கொலை செய்த குற்றத்திற்காக சாட்சியின் அடிப்படையில் பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இது குறித்த விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில்….

பிரபல நியூஸ் சேனல் ஒன்றில் ஃபிளாஷாகிக் கொண்டிருந்ததை கூர்மையுடன் பார்த்தது அவனது கண்கள்.

ஒரு கையில் காபி கப்பும் மறு கையில் ரிமோட்டுமாக செய்தி சேனலை பார்த்திருந்தவன் அலைபேசி அதிர கண்களை சுழட்டி யாரெனப் பார்த்தான்.

சிவா காலிங் என எழுத்துகள் மின்னிக் கொண்டிருக்க, காலியான காபி கப்பை கீழே வைத்துவிட்டு ஃபோனில் பச்சை நிறத்தை தெரிவு செய்தது அவன் விரல்கள். சிவா அவனுடைய ஜுனியர்.

“எஸ் ஸ்பீக்கிங்…”

அந்தப் பக்கம் ஏதோ கூறப்பட,

“ம்… நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்.  பேப்பர் சப்மிட் பண்ணி  அப்ரூவல் வாங்கிடு… கவனம்! விஷயம் வெளிய வரக்கூடாது.” என்றவன் மேலும் சில தகவல்களை  கூறிவிட்டு போனை வைத்தான்.

மகரவீரன். இருபத்தியெட்டு வயதாகும் கிரிமினல் லாயர்.

தாய்க்கு மகரா. மற்றவர்களுக்கு வீரா.

அவன் அன்னை ஆசை ஆசையாய் அவனுக்கு வைத்த பெயர்.

பெயரைப்போலவே அவனும் தனித்தன்மையானவனாய் இருக்க வேண்டும் என நினைத்து வைத்தது.

அவனும் அப்படிதான், உறுதியானவன் உள்ளத்தாலும், உடலாலும்.

தெளிவான நேர்கொண்ட சிந்தனைகள். யாருக்கும் எதற்கும் அஞ்சாத உள்ளம்.

பாதுகாக்க பொருளோ  உயிரோ நம்மிடத்தில் இருக்கும் போதுதான் பயம் உண்டாகும். இங்கு அவன் நேசிக்கும் உயிரோ, அவன் பாதுகாக்கும் பொருளோ இல்லாத காரணத்தால் பயம் என்ற ஒன்று இதுவரை அவனை அண்டியதில்லை.

அவன் அனைவருக்கும் பரிட்சயமான வக்கீல் இல்லை. ஆனால் அவன் எடுத்த வழக்கை அவனுக்கு சாதகமான பாதையில் எடுத்துச் செல்ல தேர்ந்தவன் என பெயர் பெற்றவன்.

வழக்கென ஒன்று உண்டெனில் அதன் இரு பக்கங்களும் நியாய அநியாயங்களைக் கொண்டிருக்கும். என்ன, அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

ஒரு சில வழக்குகள் மட்டுமே விதிவிலக்காக அநியாயத்தின் மொத்தமும் ஒரு பக்கத்தை சார்ந்திருக்கும்.

வீராவிடம் ஒரு வழக்கு வருகிறதென்றால் அதன் தன்மை, அவன் ஏற்கும் தரப்பின் நியாய, அநியாயங்களை விசாரித்து ஆராய்ந்தே இந்த வழக்கை ஏற்பதா? வேண்டாமா? என முடிவு செய்வான்.

அதனால் இதுவரை அவனாக வழக்கைத் தேடி சென்றதாக, சரித்திரம் இல்லை என்பர் அவனை அறிந்தவர்.

ஆனால் சிலருக்கு தெரிவதில்லை… சரித்திரங்கள் உருவாவதில்லை! உருவாக்கப்படுகின்றன!

 இப்படி, இந்த நான்கு வருடங்களில், வீரா கேஸ் எடுக்கிறானா? அப்போது அந்த வழக்கில் அவன் புறம் வெல்வது உறுதி என்ற நிலை உண்டானது.

மிகத் திறமையான வக்கீல்களும் சறுக்கும் இடம் இவனானான்.

வல்லவனுக்கும் வல்லவன் உண்டல்லவா?

சுருக்கமாக மகரவீரன் “ஐகான் ஆஃப் சக்ஸஸ்” என அறியப்பட்டான்.

போனில் பேசி முடித்ததும் அவன்  மீண்டும் செய்தியைப் பார்க்க அதில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை கொலைகாரி என சித்தரித்திருந்தனர்.

இதைக் கண்டதும், “ச்சே… இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்…  என்ன ஏதுன்னு தீர விசாரிக்கறதுக்குள்ள  இப்படியா அந்த  பொண்ண கொலைகாரின்னு போடுவானுங்க…” என அந்த  நியூஸ் சேனலை சில கெட்ட வார்த்தைகளை கொண்டு சாடியவன் தனக்கு நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து டிவியை நிறுத்திவிட்டு தயாராகச் சென்றான்.

*****

குற்றவியல் நீதிமன்ற வளாகம். தினமும் பலதரப்பட்ட மக்களால் சூழப்படும் இடம்.

சாட்சி ஆதாரம் இந்த இரண்டை வைத்து ஒரு நபரின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் சக்திவாய்ந்த இடம்.

காலை ஒன்பது மணி. சிவா தன் ஹோண்டா டிஸ்கவரில் சாய்ந்து நின்றவாறு, இன்று வீரா வாதாடப்போகும் வழக்கின் குறிப்புகளை சரிபார்த்தவண்ணம் இருந்தான்.

“என்ன சிவா! இன்னைக்கு இந்த கேஸ் முடிஞ்சிடுமா?” என நடுத்தர வயதுள்ள வக்கீல் ஒருவர் கேட்க, கோப்பிலிருந்து கண்களை விலக்கி அவரை பார்த்தான்.

அவர் கண்களில் சற்று பொறாமையும் தெரிந்ததோ?

“என்ன சீலன் சார் காலைலேவா… வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல வீரா சாரே வந்துடுவாரு நின்னு கேட்டுட்டு போங்களேன்!” என ஒருவித சிரிப்போடு சொல்ல,

“ஏன்யா… ஏன் காலங்காத்தால எனக்கு டென்சன் ஏத்தி பாக்கறதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோசம்…”  வீரா வந்துவிடுவானோ என திரும்பித் திரும்பி பார்த்தவாறே கூறினார்.

பின்னே வீராவிடம் இப்படி எதுவேண்டுமானாலும் பேசிவிட முடியாதே! யார் என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டான். நங்கூரத்தை போல விழும் வார்த்தைகள் எதிரிலிருப்பவரின் வாயை அடைக்கச் செய்துவிடும்.

அவர் பம்முவதைப் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன், “அட நீங்கதான கேட்டீங்க..” என கேட்க,

“அடப்போயா இத அவன்கிட்ட கேட்டா…”  எனவும்

“ஏது? …” என சிவா குரலை உயர்த்தினான்.

“சர்ரி…வீராகிட்ட கேட்டா அவர்ரு சொல்ற பதில்ல, ஏன்டா இத கேட்டோம்னு ஆகிடும். தேவையா எனக்கு?”  என அந்த  “அவர் ”   ஐ அழுத்திக் கூறியவர்,

“ஆனாலும் வீராவ விட நீதான்யா அதிகம் பண்ற… வயசுல பெரியவன் நான், வீராவ  “டா” போட்டு பேசக்கூடாதா?” என  அங்கலாய்க்க,

“ஓ… பேசலாமே கோர்ட்டுக்கு வெளியில பேசலாம்… அதுவும் வீரா சார் விருப்பப்பட்டா. ஆனா கோர்ட்டுக்குள்ள அவருக்குன்னு உண்டான மரியாதையை குடுக்கனுமில்லயா?” என நியாயம் பேசினான் சிவா.

“நல்லா பாய்ண்ட் பாய்ண்டா பேசறயா… சேர்ந்த இடம் அப்படி. எப்படியோ கவனமா, சந்தோசமா இருங்க… நாம செய்யற இந்த தொழில் மூலமா பலபேர் வாழ்ந்ததா இருக்கனுமே தவிர, இதால நாம அழிஞ்சதா இருக்க கூடாது.” என உண்மையான அக்கறையோடு கூற,

 

“இது பெரிய மனுசனுக்கு அழகு…” என அவர் கன்னத்தை கிள்ளியவன்,

 “உங்கள மாதிரி நாலு பேர் வாழ்த்தினா போதும் சார். நாங்க நல்லா இருப்போம் …” எனச் சிரிப்புடன் கூற,

அவன் கையைத் தட்டி விட்டவர், “டேய் எங்க நின்னு என்ன பண்ற… உங்களுக்கு மட்டும்தான் கேம்பஸ்க்குள்ள மரியாதை முக்கியமா எங்களுக்கெல்லாம் இல்லையா?” என சுற்றும் முற்றும் பார்க்கவும்,

“யாரும் பாக்கல…” என நமட்டுச் சிரிப்புடன் கூறியவனை ஒரு அடி அடித்துவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் இதழில் உறைந்த புன்னகையுடனே மீண்டும் கோப்பை ஆராயத் தொடங்கினான் சிவா.

சிவா வீராவிடம் ஜுனியராக சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. அப்படி ஒரு குரு பக்தி வீராவிடம். இவன் முன்னாலோ இல்லை இவன் காது படும்படியாகவோ யாரும் வீராவைக் குறித்து தவறாகவோ மரியாதை இல்லாமலோ ஒருவார்த்தை பேசிவிட முடியாது.

இன்று வாதாடும் வழக்கு ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு.

பெண்ணின் தரப்பில் வீரா ஆஜராகியிருக்க, குற்றம்சாட்டப்பட்டவனின் சார்பில் பிரபல வக்கீல் பரமசிவன் ஆஜராகியிருந்தார்.

கிட்டத்தட்ட இன்றோடு கேஸ் முடியும் நிலை. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தன் உயிரை மீட்க தைரியத்தின் துணை கொண்டு போராட, அவளின் தந்தையோ சட்டத்தின் முன் நியாயம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்.

முக்கியமாக சாட்சிகள், ஆதாரங்கள்   சமர்பிக்கப்பட்டு விசாரணை முடிந்துவிட இன்று இறுதி விசாரனை.

ஒன்பதரை மணி அளவில் வீரா தனது ராயல் என்ஃபீல்டில் கோர்ட்டினுள் நுழைந்தான். வண்டியை அதனிடத்தில் நிறுத்த, சிவா வேகமாய் அவனுடன் இணைந்து கொண்டான்.

“குட்மார்னிங் சார்… நம்மளோடது ரெண்டாவது கேஸ். நீங்க கேட்டதெல்லாம் ரெடி. விக்டிம சாட்சியாக்க பர்மிஷன் வாங்கியாச்சு. நம்மளோட மணிகண்டன் சார் வராரு. நேத்ராவோட அப்பாவ உள்ள உட்கார வச்சிருக்கேன். எதிர் தரப்பும் வந்தாச்சு…” என விபரங்களைக் கூறினான்.

நேத்ராதான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கல்லூரி படிக்கும் பெண்.

இவனது இத்தனை பேச்சுக்கும்  தன் கருப்பு அங்கியை அணிந்துகொண்டிருந்தவன் , கழுத்து டையைக் கட்டியவாறே,  “அக்யூஸ்ட்  வந்தாச்சா?” என கேட்க,

“வர நேரம்தான் சார். அநேகமா இந்நேரம் வந்திருக்கனும். “

“குட்… ” என்றவாறு கோப்பை வாங்கி ஆராய்ந்து, அனைத்தும் சரியாக இருக்க சிவாவை  மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, வழக்கு விசாரிக்கும்  இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இருதரப்பு வக்கீல்கள்,  குற்றவாளி,  என அனைவரும் காத்திருக்க,  நீதிபதி வரவும் விசாரனை தொடங்கியது.

எதிர்தரப்பு வக்கீல் பரமசிவன் தனது வாதத்தை தொடங்கினார்.

“கனம் நீதிபதி அவர்களே! இந்த வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகள் சென்ற விசாரணையின்போது  ஸ்திரத்தன்மை அற்றதாக எங்கள் தரப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டது.”

“எனவே  குற்றம்சாட்டப்பட்டிருக்கும் எனது கட்சிகாரரின் மீது ஜோடிக்கப்பட்ட இவ்வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்யுமாறு தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.” என தன் வாதத்தை முடித்து தனது இடத்தில் அமர்ந்தார்.

ஆம், குற்றவாளிக்கு எதிராக சாட்சி அளித்திருந்தவர்கள் சென்ற விசாரனையின் போது தங்களது வாக்குமூலத்தை மாற்றிக் கூற வீராவின் தரப்பு பெரும் பின்னடைவை சந்தித்தது.

“கடவுளே என் பொண்ணு படற அவஸ்த்தைய பாக்கையில என் பெத்த வயிறு பத்தி எரியுதே! என் பொண்ணுக்கு நியாயமே கிடைக்காதா?” என நேத்ராவின் தாய் கதறிய கதறல் அன்று நீதிமன்ற வளாகத்தையே நிறைத்தது.

அன்று ஒட்டு மொத்த இயலாமையையும் கண்ணில் தேக்கி,” அவ்ளோதானா தம்பி…” என நேத்ராவின் தந்தை வாய்மூடி அழுதது வீராவின் நெஞ்சை வேர் வரை அறுத்திருந்தது.

வழக்கை பொறுத்தவரை இப்படி பல்டி அடிக்கும் சாட்சிகள் இருக்கத்தான் செய்யும். அவை பணத்தின் காரணமாகவோ!இல்லை பயத்தின் காரணமாகவோ!

நேத்ரா வந்து சாட்சியளித்தால் இந்த கேஸ் நொடியில் இவர்கள் புறம் தீர்ப்பாகிவிடும்தான். ஆனால் நேத்ராவிற்கு ஐம்பது சதவீதம் உடல் உருக்குழைந்து இருக்க, அதீத அதிர்ச்சி, வலி இவை காரணமாக நேத்ரா கோமாவிற்கு சென்றுவிட்டாள்.

 அதனால் அவளால் சாட்சியளிக்க இயலா நிலை. கிட்டத்தட்ட தோல்வி உறுதியான நிலையில் இன்று இறுதி விசாரணை.

பிரதிவாதியின் வாதத்தில்  தனக்கு தேவையான குறிப்புகளை குறித்துக் கொண்ட நீதிபதி, “வாதி அவர்கள் தரப்பின் வாதத்தை முன்வைக்கலாம்” என வீராவின் தரப்பைக் கூறினார்.

அதுவரை சாய்ந்தமர்ந்தவாறு எதிர்தரப்பு வாதத்தை கவனித்துக் கொண்டிருந்தவன் மெதுவாக எழுந்தான்.

நீதிபதியின் முன் நின்றவன், “கனம் நீதிபதி அவர்களே!  இன்று எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் இன்னொரு சாட்சியை முன்வைக்கிறோம்.”

“ஐ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். ஏற்கனவே இவர்களால் ஜோடிக்கப்பட்ட சாட்சியங்கள் ஸ்திரத்தன்மை அற்றதாக  இருக்க, இப்போது மற்றொரு சாட்சி இருப்பதாக கூறுவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக தோன்றுகிறது.” என பரமசிவன் எழுந்து வாதாடினார்.

இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, “என்ன சாட்சி?” என கேட்க, பரமசிவனை பார்க்காமல்,

” வழக்கின் விக்டிம் நேத்ரா. வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் சாட்சியளிக்க உள்ளார் யுவர் ஆனர்” எனக்கூறவும்,

எதிர் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சி. நேத்ரா நேற்று வரை கோமாவில் இருந்ததை கண்காணித்து வைத்திருந்தனர்.

ஆனால் இப்போது வாதியின் தரப்பில் நேத்ராவை சாட்சியாக கொண்டுவருகிறார்கள் என்றால் அந்தப்பெண்ணிற்கு நினைவு திரும்பியிருக்க வேண்டும். இது எப்போது நடந்தது என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இப்போது பரமசிவன்  எழுந்தவர். “கனம் நீதிபதி அவர்களே! விக்டிம் கோமாவில் இருப்பதாக கூறியிருந்தார்கள். இப்போது அவர் எப்படி சாட்சியளிக்கக்கூடும். அப்படி சாட்சியளிப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பே நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டுமல்லவா?”

“கனம் நீதிபதி அவர்களே! விக்டிம் நேத்ரா நேற்றிரவு வரை கோமாவில்தான் இருந்தார். ஆனால் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர் கோமாவில் இருந்து மீண்டுவிட்டார். இப்போது சாட்சியளிக்க தயாராக உள்ளார்.  இதற்கு முன்பே நீதிமன்றத்திடம் முறையாக அனுமதியும் வாங்கியுள்ளோம். இதோ அதற்கான சான்று… ” என அந்த படிவத்தை நீதிபதியின் முன் சமர்ப்பித்தான் வீரா.

எதிர்தரப்பினர் செய்த வாதங்கள் அனைத்தும் தோல்வியடைந்து,  போலீஸ், நீதிமன்றம் சார்பில் அதிகாரி ஒருவர் உடனிருக்க வீடியோ மூலம் மருத்துவமனையில் இருந்தவாறே நேத்ரா சிரமப்பட்டு வாக்குமூலம் அளிக்கவும் தீர்ப்பு இவர்கள் வசமானது.

“குற்றவாளியின் மேல் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு செக்ஷன் 326 A ன்படி பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய்அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்படுகிறது.” என நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கு முடிந்து இவர்கள் வெளியே வரவும் செய்தியாளர்கள் வீராவை சூழ்ந்து கொண்டனர்.

 அவர்களுக்கு தேவையான தகவல்களை அளித்துவிட்டு, நேத்ராவின் தந்தையை அனுப்பியவன் வளாகத்தை விட்டு  வெளியே வரவும் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.

 இரண்டு பெண் காவலர்கள் இறங்க மூன்றாவதாக இறங்கினாள் அவள்!

வீரா அவளைப் பார்த்தான்.

அவளது கோலம்!

இளமஞ்சள் நிற சுடிதாரில் ரத்தத் துளிகள் தெறித்திருக்க, நீலக்கலர் துப்பட்டா பாதி முகத்தை மறைத்திருக்க, கலைந்த தலை அழுதழுது வீங்கிய கண்களுடன் பொம்மை போல நடந்து வந்தாள்.

எதையோ நினைத்த வீராவின் கால்கள் தானாக அவளை நோக்கி நீண்டது.

கீழே பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தவளை நீண்ட வலிய பாதங்கள் வழிமறிக்கவும் மெதுவாக பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தவள் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

 அவளுடன் வந்த பெண் காவலர்களை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தவன், “இந்த பொண்ணு முகத்த நல்லா மூடி கூட கூட்டிவரக்கூடாதா?  இப்படிதான் மேம்போக்கா இருப்பீங்களா?” என கடிந்து, அவர்கள்  அவள் முகத்தை  நன்றாக மூடிய  பின்னே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவள் நீதிமன்றத்தை நோக்கி  நடக்க, வீரா வெளியே நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் இருவரின் பாதையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது.

 

                           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!