மலர் – 5

download (38)-c1bb9879

அத்தியாயம் – 5

கிழக்கு வானம் சிவக்க தொடங்கிய நேரத்தில் உடல் சோர்வை உதறிவிட்டு சட்டென்று எழுந்தவரின் கண்ணில் கண்ட காட்சியோ அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. சங்கீதா காலையில் சீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு சமையலறையில் வேலையில் மும்பரமாக இருந்தார்.

இந்த பதினைந்து ஆண்டுகளாக சமையலறை பக்கமே வராதவர் திடீரென்று சமையல் செய்வதை ஆச்சர்யத்துடன் பார்த்தார். தங்களின் செல்ல மகளை கடல் அன்னைக்கு பலி கொடுத்த நாளில் இருந்தே சங்கீதா பித்து பிடித்தவர் போன்ற மனநிலையில் இருந்தார். தனக்கான தேவைகளை மட்டும் செய்பவர் ஒருநாள் கூட சமையல் செய்தது கிடையாது.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் மனையாளை சமையலறையில் பார்த்த சந்தோஷத்தில், “என்னம்மா என்னை எழுப்பி விட்டிடுந்தால் நான் சமையல் செய்து தந்திருப்பேனே” என்றவர் குரல்கேட்டு திரும்பிய சங்கீதாவின் முகத்தில் பழைய களை திரும்பியிருந்தது.

“நம்ம பாப்பா வந்தால் சாப்பிட அவளுக்கு பிடிச்சதெல்லாம் கேட்ப இல்லங்க. அப்போ எனக்கு சமையல் மறந்து போச்சு சொன்னால் நல்ல இருக்குமா? அதுதான் நானே சமையல் பண்றேன். உப்பு, காரம் கொஞ்சம் கூட குறையாக இருந்தாலும் திட்டாதீங்க. போக போக எல்லாமே சரி பண்ணிவிடுகிறேன்” என்று நம்பிக்கையோடு பேசும் மனைவியைப் பார்த்தவரின் கண்கள் கலங்கியது.

கல்யாணம் ஆன புதிதில் சங்கீதா சொன்ன அதே வார்த்தைகள். இப்போது மீண்டும் சொல்வதை கண்டு அவரின் மனம் ஆனந்தமடைந்தது.

“அதெல்லாம் சரி சங்கீதா. இதென்ன இத்தனை நாள் இல்லாமல் இப்போது புதுசாக சொல்ற” என்றவர் எழுந்து மனையாளின் அருகே சென்றார்.

தன் கணவனை நிமிர்ந்து பார்த்த சங்கீதா, “நம்ம பாப்பா ரொம்ப பெரிய பொண்ணாக வளர்ந்துட்டாங்க. அப்படியே என்னை பார்க்கிற மாதிரியே இருந்தாள். நான் தினமும் போகும் கடற்கரைக்கு அவளும் அவளோட கணவனும் வந்திருந்தாங்க. என்னைப் பார்த்தும் அதிர்ச்சியில் அவளுக்கு பேச வார்த்தையே வரலங்க. அவளோட கணவன் வேற யாருமில்லைங்க நம்ம வேந்தன்தான். வீட்டுக்கு கூட வந்தாங்க” என்று அவர் சொல்லிக்கொண்டே சென்றார்.

இரவு கண்ட கனவின் தாக்கம் தான் தன் மனையாளின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்று புரிந்து கொண்டவர், “நம்ம மகள் திரும்பி வருவா என்ற நம்பிக்கை உண்மையான எனக்கும் ரொம்ப சந்தோசம் தான் கண்ணம்மா. சரி நீ வேலையை செய்.. நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தவருக்கு தன் தங்கையும், தங்கையின் பிள்ளைகளும் மனக்கண்ணில் வந்து போயினர்.

சிலநொடிகளில் குளித்துவிட்டு வந்த ஜெகதீஸ்க்கு உணவு பரிமாறினார் சங்கீதா. அன்றும், இன்றும் அவளின் குணம் மாறவே இல்லை. கணவனுக்கு அருகே அமர்ந்து இருவரும் ஒன்றாக சாப்பிட்டு எழுந்தனர். கணவன் – மனைவி இடையே பேச்சு வார்த்தைகளற்ற அழகான மௌனம் ஆட்சி செய்தது.

கணவன் வழக்கம்போல வேலைக்கு சென்றபிறகு வீட்டின் மற்ற வேலைகளை முடித்துவிட்டு கடற்கரை ஓரம் சற்று நேரம் நடந்துவிட்டு வந்தார் சங்கீதா. தன் மகள் தன்னை தேடி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவரின் மனதில் விதையாக விழுந்து விருச்சமாக வளர்ந்திருந்தது.

அதே நேரத்தில் வேலை செய்யும் ஒர்க் ஷாப்பிற்கு புதிய நபர் ஒருவர் தன்னுடைய புதிய பைக்கில் ஏதோ பிரச்சனை என்று தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தார். உடனே அந்த கடையின் முதலாளி, “ஜெகதீஸ் இதை கொஞ்சம் என்னன்னு பாரு” என்று குரல்கொடுக்கவே கருப்பு நிற பனியன், கருப்பு நிற பேண்டில் வந்தவரை கூர்ந்து கவனித்தார் பைக்கின் முதலாளி.

“ஸார் என்ன பிரச்சனை?” என்ற கேள்வியுடன் பைக்கை ஆராய்ந்தவர் பிரேக் ஒயர் கட்டாகி இருப்பதைப் பார்த்து அதை சரி செய்துவிட்டு நிமிரும் வரையில் கூட புதியவரின் திகைப்பு மாறவில்லை.

“ஸார் சரி பண்ணிட்டேன். ஓனரிடம் பணத்தைக் கொடுத்திடுங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே செல்ல திரும்பிய ஜெகதீஸ் கைகளைப் பிடித்தவர், “டேய் என்னை அடையாளம் தெரியலயா?” என்று கேட்டார்.

சட்டென்று திரும்பி புதியவரின் முகம் பார்த்த ஜெகதீஸ் புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, “இல்லங்க ஞாபகம் வரல” என்றார்.

“நான் மனோஜ்டா. எனக்கு அத்தனை உதவி செய்ததை மறந்துட்டியா? நீ  இறந்துவிட்டதாக சொன்னாங்களே” அவர் படபடவென்று உண்மையைப் போட்டு உடைத்தார். அவரின் பேச்சில் தன்னை சுதாரித்து கொண்ட ஜெகதீஸ்க்கு வந்திருப்பது யாரென்று தெரிந்துவிடவே முதலாளியிடம் சொல்லிவிட்டு சற்று தூரம் நகர்ந்தார்.

வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த தன் நண்பனை தோளோடு சேர்த்து தழுவிக்கொண்ட மனோஜ், “என்னடா நீ நாமக்கல் வராமல் இங்கே இப்படியொரு கடையில் வேலை பார்த்துட்டு இருக்கிற? உனக்கு அங்கிருக்கும் சொத்துகளின் மதிப்பு என்னன்னு தெரிஞ்சும் நீ சின்ன ஒர்க் ஷாப்பில் இப்படி வேலை செய்வதை  பார்க்கவே மனசுக்கு வருத்தமாக இருக்கு” என்றார்.

“உனக்கு நடந்த எதுவும் தெரியாது” என்று தொடங்கியவர் நடந்த அனைத்தையும் கூறி, “பாப்பா கிடைக்கும் வரை இங்கிருந்து நானும், சங்கீதாவும் வரமாட்டோம் மனோஜ். அவ்வளவு சொத்துக்கள் இருந்து என்னப்பா பண்றது. அதெல்லாம் யாருக்கு செலவு செய்ய நினைத்தேனோ அந்த மகள் இப்போ எங்களோட இல்லையே. அவ எவ்வளவு கஷ்டபட்டு இருக்காளோ யாருக்கு தெரியும்?” என்ற கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

சிறிதுநேரம் நண்பனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய மனோஜ், “சொத்தை கஷ்டப்பட்டு சம்பாரித்தவன் ஏதோவொரு ஒர்க் ஷாப்பில் வேலைக்காரனாக இருக்கான். எதுவுமே செய்யாமல் பொண்ணை மட்டும் கட்டிட்டுப் போனவன் கோடிஸ்வரன் என்ற பெயரில் கோபுரத்தில் இருக்கான். இதுதான் இயற்கையின் நியதியா?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.

அதுவும் கடைசியாக நாங்கள் உயிரோடு இருக்கும் விஷயத்தை யாரிமும் சொல்லாதே என்று நண்பன் கையைப்பிடித்து கேட்டபோது அதை அவரால் மறுக்க முடியவில்லை. பிள்ளை பாசம் தன் அவரை எப்படி மாற்றி இருக்கிறது என்று நேரில் பார்த்து புரிந்துகொண்ட மனோஜ் மனம் கனத்துப் போனது.

கிட்டதட்ட பதினோரு மணியளவில் ஜமுனா வந்து அவனை எழுப்பிட, “குட் மார்னிங்” என்றாள்.

அவன் வேகமாக எழுந்து குளித்துவிட்டு வேகமாக தயாராகி கீழே வந்தான். விமலா வேண்டா வெறுப்பாக அவனுக்கு சாப்பாடு பரிமாறவே, “அம்மா மூஞ்சியை இப்படி தூக்கிவெச்சுட்டு தயவுசெய்து சாப்பாடு போடாதீங்க. திங்கிற சோறு கூட செரிமானம் ஆகாது” என்று கோபத்துடன் கூறினான்.

வழக்கம்போல ஆபீஸ் கிளம்பிய நரசிம்மன், “ஆமா இப்போ மட்டும் சாருக்கு திங்கும் சோறு செரிமானம் ஆகாமல்தான் இருக்கோ” என்று சிடுசிடுத்துவிட்டு வாசலை நோக்கி விரைய விமலா அவரின் பின்னோடு சென்றார்.

தாய் – தந்தை ஆத்மார்த்தமான நேசத்துடன் இருப்பதை நினைத்து சந்தோசபட்ட பிள்ளைகள் ஏராளம். ஆனால் இங்கோ தாயும், தந்தையும் தங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதை நினைத்து மனம் வருந்தியவன் சாப்பாட்டில் கை கழுவிட்டு எழுந்து சென்றான்.

அவன் வெளியே செல்ல, “அண்ணா இன்னைக்கு ஈவினிங் நான் ஷாப்பிங் போகணும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று அறையின் உள்ளிருந்து குரல் கொடுத்தாள் ஜமுனா.

“சரி செல்லம்மா” என்று சொல்லிவிட்டு அவன் வேகமாக கிளம்பிட, “ஓஹோ கிளம்பிட்டியாப்பா. சரி போயிட்டு வா” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

‘இவங்க இப்படி அக்கறை இல்லாமல் பேசுவதைவிட நிரந்தரமாக பேசாமலே இருக்கலாம்’ என்று நினைத்தவன் பைக்கை எடுக்க உடனே அவனின் மனக்கண்ணில் அவளின் உருவம் தோன்றி மறைந்தது.

அவனின் செல்போன் சிணுங்கிட திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தும் அட்டன் செய்து காதில் வைக்க,  “நீ உடனே கிளம்பி வாடா” என்று கூறியதும், “என்ன விஷயம் சொல்லு நான் செய்யறேன்” என்றான் எரிச்சலை மறைத்தபடி.

அடுத்தநொடியே அவள் கட் பண்ணிவிட, “எங்கே இருக்கான்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் உடனே கிளம்பி வான்னு சொல்லிட்டு போனை வைத்தால் நான் என்னதான் பண்றது” என்று புலம்பியவன் பைக்கை ஸ்டார்ட் செய்து உடனே கிளம்பிவிட்டான்.

கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் செல்போன் சிணுங்கிட, “ச்சே முதலில் இந்த போனை தூக்கிட்டுப் போய் போஸ்ட்மார்ட்டம் பண்ணனும். அப்போதான் மனுஷன் நிம்மதியாக இருக்க முடியும். இது கையில் இருக்கும்போது எல்லாம் குட்டி சாத்தனை கூடவே கூட்டிட்டு சுத்துற மாதிரி இருக்கு” என்று திட்டிக்கொண்டே போனை எடுத்து காதில் வைத்தான்.

“வெற்றி நான் எங்க வீட்டு பஸ்ஸ்டாப் நிற்கிறேன். சீக்கிரம் வா எனக்கு மீட்டிங் ஒன்னு இருக்கு” என்று அவள் அவசரபடுத்த, “ம்ம் வரேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

அவள் சொன்ன இடத்திற்கு அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றவனை முறைத்தவள், “ஏண்டா இவ்வளவு லேட்டாக வர. இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல என்னை மீட்டிங் ஹாலில் இறக்கிவிடற” என்று ஒரு பை ஃஸ்டார் ஹோட்டலின் நேமை சொல்ல  அவன் பைக்கை எடுத்தான்.

வெற்றியிடம் நேற்று சண்டைபோட்ட காரணத்தினால் அவள் மௌனமாக வந்தாள். ஜனனி எப்போதும் சண்டைபோட்டால் வெற்றிதான் அவளை சமாதானப்படுத்தி பேச வைக்க வேண்டும். எப்போதும் தன் தவறை உணர்ந்து அவள் மன்னிப்பு கேட்டதில்லை.

அவனுக்கோ ஜனனியின் சின்ன சின்ன செயல்கூட மனதை காயப்படுத்தியது. அவளின் இந்த அலட்சியம் அவனை நோகடிக்க, ‘இந்த முறை நானாக உன்னிடம் பேச மாட்டேன்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

இருவரின் பயணமும் மௌனத்தில் முடிய பைக் அவள் சொன்ன ஹோட்டல் முன்னே நின்றது. அவளை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்த ஓனரை பார்த்தும் வெற்றியை மறந்தவளாக,“ஸாரி சார் ரொம்ப லேட்டாகிடுச்சு” அவள் பாஸ் பின்னாடி ஓடுவதைப் பார்த்து, “ஒரு தேங்க்ஸ் சொன்னதான் என்ன” என்று எரிச்சலோடு கிளம்பினான்.

நேற்று நடந்த அனைத்தும் அவனின் மனதில் படமாக ஓடிட, ‘கடையில் வேலையை ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்களா? இந்த ஊர் வேற புதுசுன்னு சொன்னாங்களே. இங்கிருந்து போகின்ற வழியில் தான் கடை இருக்கு ஒருமுறை அவங்களை பார்த்துவிட்டு போலாம்’ என்று நினைத்தவன் பைக்கை அவளின் கடை முன்னாடி நிறுத்தினான்.

“அண்ணா உங்களுக்கு சம்பளம் அதிகம் வேணும்னா தயங்காமல் கேளுங்க. ஆனால் எனக்கு வேலை சுத்தமாக இருக்கணும்” என்று ஆசாரியிடம் கறாராக பேசி வேலை வாங்கி கொண்டிருந்தாள்.

“என்ன மேடம் அதட்டல் எல்லாம் பலமாக இருக்கு” என்ற கேள்வியுடன் கடைக்குள் நுழைந்தவனை பார்த்தும் அவளின் முகம் பூவாக மலர்ந்தது. சட்டென்று அவனின் மனதில் சலனம் ஏற்பட்டது. ஜனனியிடம் அவன் தேடிய ஏதோவொன்று இதுதானோ என்ற எண்ணத்துடன் சிலையென உறைந்து நின்றான்.

அங்கிருந்த ஆசாரியிடம் வேலைகளை பிரித்து கொடுத்துவிட்டு அவனின் அருகே வந்தாள் செவ்வந்தி. வெற்றி அதிர்ச்சியில் சிலையென உறைந்து நிற்பதை கண்டு, “என்னங்க ஏதோ பேயைப் பார்த்தவர் போல பயந்து நிற்கிறீங்க” என்று அவனை வேண்டும் என்றே வம்பிற்கு இழுத்தாள்.

அதில் தன்னை மீட்டெடுத்த வெற்றி, “நிஜமாவே பேயை நேரில் பார்த்த மாதிரியே இருந்துச்சுங்க” அவன் ஜனனியை மனதில் வைத்துகொண்டு கூற அவளோ திருதிருவென்று முழித்தாள்.

“நீங்க சொல்கின்ற விஷயம் எனக்கு புரியலங்க” என்றாள் செவ்வந்தி குழப்பத்துடன்.

“நான் சும்மா சொன்னேங்க” என்று சொல்லிவிட்டு அங்கே வேலை செய்பவர்களின் மீது கவனத்தை திருப்பிவிட்டான் வெற்றி.

அவர்கள் வேலையை சரிவர செய்கிறார்களா என்ற சந்தேகத்துடன் நோட்டம் விட்டவன், “உங்க கடை வேலை எப்படி போகுதுன்னு பார்த்துட்டு போலான்னு வந்தேங்க” என்று அவன் எதார்த்தமாக கூற அவளும் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அதன்பிறகு வெற்றி தான் செவ்வந்திக்கு தேவையான உதவிகளை எல்லாம் உடனிருந்து செய்து கொடுத்தான். டெயிலர் மிஷின் வாங்குவதில் தொடக்கி ஜவுளிகளை எடுப்பது வரை அனைத்து வேலைகளையும் ஒரு நண்பன் போல இருந்து அக்கறையுடன் செய்து கொடுத்தான்.

செவ்வந்திக்கும் அவன் உடன் இருப்பது பக்கபலமாகவே இருந்தது என்று சொல்லலாம். புதிய ஊர் ஆளுங்களை விசாரித்து அவள் கடையை ரெடி செய்வதற்குள் குறைந்தது ஆறுமாதம் ஆகிவிடும் என்று அவள் நினைக்க வெற்றி அவளுக்கு உதவிகரம் நீட்டியதால் ஒரே மாதத்தில் கடையை பக்கவாக ரெடி செய்துவிட்டான்.

இந்த இடைபட்ட நாளில் வெற்றியின் நடவடிக்கைகளையும், அவனின் குணத்தையும் தெளிவாக புரிந்து கொண்டாள் செவ்வந்தி. உதவி என்று கேட்காமல் ஓடிவந்து செய்யும் அவனின் குணம் கண்டு மனம் எதையோ நினைத்து அலைபாய்ந்தது. ஆனால் சிந்திய பாலுக்காக வருத்தபட்டு பயனில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து மௌனமானமாக இருந்தாள்.

வெற்றிக்கும் செவ்வந்தியை பற்றி ஓரளவு புரிந்து கொண்டான். ஆண்களிடம் நெருப்பாக இருப்பவள் தன்னிடம் மட்டும் இயல்பாக பேசி பழகுவதை நினைக்கும்போது ஆச்சர்யமாகவே இருந்தது. இந்த இடைபட்ட நாளில் அவனின் திருமணத்தை பற்றியோ, ஜனனி பற்றியோ ஒரு வார்த்தை கேட்கவில்லை என்ற நினைவே அவனுக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து சேல்ஸ்மேன், டெயிலர், சூப்பர் வைசர் என்று ஆட்களை தேர்வு செய்து வேலைக்கு சேர்ப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆனது.  வெற்றிதான் அதற்கும் உதவினான்.

ஆட்கள் தேவை என்று செய்திதாளில் அவன் கொடுத்த ஒரு விளம்பரம் கடையின் பெயரை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துவதற்கு இதுவும் ஒரு வாய்ப்பு என்று சொன்னான்.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து நாளை கடையின் திறப்புவிழா என்ற நிலையில் செவ்வந்தி கடையை சுற்றி வந்தாள் செவ்வந்தி.