மழைத்துளி-2

IMG-20210619-WA0109-059d609e

மழைத்துளி-2

முந்தைய நாள் அடித்து ஓய்ந்திருந்த மழையில் மதுரை மாவட்டமே
அழகாகக் காட்சியளித்தது. தன் வீட்டிற்கு வெளியே ஆங்காங்கே சிறு
துளிகளாய் விட்டிருந்த மழையின் தாக்கமாய், மழைநீர் சொட்டிக்கொண்டு இருக்க அதை சிறிது நேரம் நின்றபடி ரசித்த வெற்றி
கிளம்பிக் கீழே வர, சேனாதிபதி வரவேற்பறையின் நடுவில் தேக்கு
மரத்தால் செதுக்கப்பட்டு, அதன் மேலே அடர் சிவப்பின் நிறத்தில்
இராஜரீகமான போடப்பட்டிருந்த மெத்தை வைத்த சோபாவில்
கம்பீரமாக அமர்ந்து அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார்.

கீழே வந்த மகனைக் கண்ட சேனாதிபதி, “வெற்றி! நம்ம திருவிழா
விசயமா உன் மாமன் உங்கிட்ட ஏதோ பேசணுமாம்யா. நம்ம
வயக்காட்டுப் பக்கம் போனா அவனை பாத்துட்டு வந்துருய்யா”
என்றார்.

“சரிங்கப்பா” என்றவன் கோயில் திருவிழாவிற்கு இதுவரை நடந்து
கொண்டிருக்கும் வேலைகளையும் செலவுகளையும் தந்தையிடம்
சொல்லி கணக்கு காண்பித்தான்.

“இது எதுக்குய்யா இப்ப? நம்ம ஐயருகிட்ட காமுச்சுடுய்யா” என்றவர்
மேலே ஏதோ சொல்ல வரத் தயங்கினார்.

“சொல்லுங்கப்பா” வெற்றி கேக்க,

“உன் கோவத்த குறைச்சுக்கய்யா… கோவம் வந்தா நிதானம் போய் அறிவ
மழுப்பிடும்ய்யா… அதே தான் அந்த அமர்ஷா பயலுக்கும். இரண்டு பேருக்கு எதுக்கு இம்புட்டு கோவம்னு புரியமாட்டிங்குது. செத்த
குறைங்கய்யா. நானும் அமர்ஷா வந்தா சொல்லுறேன்” என்றார்.
அவருக்கு மகனிடம் பிடிக்காதது கோபம்தான். கோபம் வந்தால்
யோசிக்காமல் ஆவேசமாக செயல்படும் மகனைப் பார்க்கும்போது
அவருக்கு சற்று பயமாகக்கூட இருக்கும். மகனை ஊரார் மெச்சிப்
பேசும்போது பெருமையாக இருந்தாலும், அவனது கோபம் சிறிய
வயதில் இருந்தே அவருக்கு நெருடலாகவே இருந்தது. அமர்ஷாவிற்கு
இருக்கும் நிதானம் கூட வெற்றிக்கு இருக்காது.

“சரிங்கப்பா” என்றான் வெற்றி அமைதியாகவே. சரியான
அழுத்தக்காரன். சில விசயத்தை முடிவு செய்துவிட்டால் அதை செய்து
முடிக்கும்வரை வேறெதையும் நினைக்க மாட்டான். அதைப் பற்றி
வெளியில் சொல்லவும் மாட்டான்.

எட்டுமணி போல அமர்ஷாவும் வீட்டிற்கு வந்தான். பேரன் வந்ததை
அப்போது தான் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த
தையல்நாயகி கவனிக்க, “விசாலாட்சி, வேந்தன் வந்தாச்சு.
எல்லாருக்கும் அடையை எடுத்துவை” என்றவர், “ஏலே! அமுசா நீயும்
வந்து உக்காருவே” என்று அமர்ஷாவை அவர் அழைக்க அவனிற்கோ
கடுப்பானது.

“அப்பத்தா… எம் பேரு அமர்ஷா… எத்தனைவாட்டி சொல்லுறது” என்று
அவன் பல்லைக் கடிக்க,

“எனக்கு பழகீடுச்சுடா அமுசா” என்றவரை அவனால் பொய்யாய்
முறைக்க மட்டுமே முடிந்தது.

“அமர்ஷா” என்றபடி சேனாதிபதி வர,

“அப்பாங்” என்றவன் அவரைக் கண்டு புன்னைத்தான் மரியாதையாக.
அமர்ஷாவின் தாத்தவும் வெற்றியின் தாத்தாவும் அந்தக் காலத்து
பாட்ஷா படத்தில் வரும் மாணிக்கம்-அன்வர் போல நெருங்கிய
நண்பர்கள். அதை அவர்களது பிள்ளைகளும் தொடர்ந்து இப்போது
பேரப்பிள்ளைகளும் அதே நட்பில் இருந்து வருகின்றனர்.

வெற்றிக்கு சொன்னதையே அவனிற்கும் அவர் சொல்ல, “சரிங்கப்பா”
என்று அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

“அப்பா எப்படி இருக்கான்? வரச்சொல்லு வீட்டுக்கு” என்று தன்
நெருங்கிய நண்பன் ராஷிக்கை அவரின் மகனிடம் விசாரித்தார்.

“நல்லாருக்காரு அப்பாங்… நாஞ்சொன்னா உங்க ப்ரண்டு கேப்பாரா.
நீங்களே சொல்லிக்கங்க” என்று வாயடித்தவனை முதுகில் தட்டிவிட்டு,
அவர் வேலையாக அனைவரிமும் சொல்லிவிட்டு வெளியே
கிளம்பினார்.

“மாமா!” என்று வெற்றியை மழலையில் அழைத்துக்கொண்டு ஓடி வந்த
அதீதி அவனது காலைப் பிடித்துத் தத்துபித்து என்று மடியில் ஏறி
உட்கார்ந்தாள். பின்னோடேயே வந்த வாசுதேவனையும் தையல்நாயகி
அழைத்து அமர வைக்க அமர்ஷாவின் பக்கத்தில் அமர்ந்த வாசுதேவன்
இருவரையும் மேலிருந்து கீழே பார்வையால் அளந்தான்.

‘இந்தவாரம் எங்கன வம்பிழுக்க காத்து இருக்காய்ங்களோ’ என்றது
அவன் பார்வை. அவன் பார்வை புரிந்த அமர்ஷாவை, “நேத்து
காலைலயே எங்க கோட்டா முடிஞ்சுடுச்சு” என்று சொல்ல அவனோ
தலையில் அடித்துக் கொண்டான்.

“யாரு?” என்று வாசு வினவ,

“அவிங்கதான்டா… அந்த வாய்க்கா ஓரமா நிப்பாய்ங்களே. எப்பப்பாரு
காலேஜுக்கு போயிட்டு வர புள்ளைககிட்ட லந்தக் கொடுத்திருக்கானுக.
அதான் இங்குட்டு தோட்டத்துக்கு வரவச்சு பேசி அனுப்புச்சேன்” என்று
வெற்றி டைனிங் டேபிளின் மேல் அதீதியை உட்கார வைத்தபடி
விளையாடிக்கொண்டே பதில் சொன்னான்.

“பேச மட்டும்தான் கூப்பிட்டீங்களோ?” வாசு நக்கலாக வினவ, “யாரு
இவனா. ஒருத்தனுக்கு அறைஞ்ச அறையிலே பல்லு இருக்குமா
என்னான்னே தெரியல” என்று அமர்ஷா சிரிக்க,

“அவனை சொல்றியே… நீ போன வாரம் அடிச்சவன் ஹாஸ்பிடல்ல
இருந்து வந்துட்டானா?” என்று வாசு அமர்ஷாவிடம் வினவ, “யாருக்கு
மாப்ளே தெரியும்” என்றான் சிரித்தபடி.

“ஏன்டா… அடிச்சதும் இல்லாம நீயே போய் ஹாஸ்பிடல்ல சேத்திட்டு
வந்தியாமே?” வாசு வினவ அமர்ஷா தலையை ஆட்டினான் சிரித்தபடி.

“எலே, எப்பத்தான் இந்த சண்டியர் தனத்தை எல்லாம் குறைச்சிட்டு
கல்யாணம் பண்ணப்போறீக?” என்று சமையல் அறையில் இருந்து
வந்த தையல்நாயகி மூவருக்கும் அடையைப் பரிமாறினார்.

“அத மொதல்ல உங்க பேரங்கிட்ட கேளுங்க அப்பத்தா” என்று அமர்ஷா
சொல்ல, அடைக்கு ஸ்ருதி எடுத்து வந்த அவியலை மூவருக்கும்
பரிமாறிவிட்டு ஆரம்பித்தார் தையல்நாயகி.

“ராசா மாதிரி இருக்க எம் பேரனுக்கு ராணி மாதிரிதான் பாப்பேன் நான்”
என்றவரிடம்,

“உம் பேரனுக்கே அப்படி பொண்ணு பாத்தா அப்பத்தா… நானும் எனக்கு
ஏத்த மும்தாஜை தான் பாப்பேன்” என்றான்.

“எது? அந்த பிக்பாஸ்ல வந்தாளே அவளை மாதிரியா?” என்று
தையல்நாயகி காலை வாரிவிட, வெற்றியும் வாசுவும், ‘பக்’ என்று
சிரித்தனர்.

தையல்நாயகியை முறைத்தவன், “டேய் வெற்றி, முதல்ல உங்க வீட்டுக்
கேபிளை புடுங்கிவிடுடா. இந்த அப்பத்தா எப்பப்பாரு, ‘டைமிங் ஜோக்ல’
காலை வாருது” என்றவன், “அப்பத்தா நான் சொன்னது ராணி மும்தாஜ்.
என் ரேன்ஞ் தெரியாம பேசுறீக நீங்க” என்றவனின் குமட்டில் குத்தியவர்,

“இந்தப் பகுமானத்துக்கு ஒண்ணும் குறைச்ச இல்ல” என்றவர் அவன்
தட்டில் இன்னும் இரண்டு அடையை எடுத்து வைத்தார்.

“இன்னும் ஒரு வாய்” என்று வெற்றி அதீதிக்கு ஊட்ட, “ம்கூம்… வேணா
மாமா” என்று தலையை திருப்பியது நண்டு.

“ஏய் சில்வண்டு,,, அப்புறம் நான் வாங்கிப்பேன் உன் மாமன்ட இருந்து”
என்று அமர்ஷா வம்பிழுத்தபடி சொல்ல, அவனை ஓரக்கண்ணால்
முறைத்த இரண்டரை வயது அதீதி மாமன் கையில் இருந்ததை அடுத்த
நொடியே வாங்கிக்கொண்டது.

“என் மாமா” என்று வெற்றியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு
அமர்ஷாவை அதீதி ஒற்றை விரலை காட்டி எச்சரிக்க, “இதுக்கெல்லாம்
நான் பயப்படமாட்டேன் சில்வண்டு” என்று சொல்லி அதீதியைப்
போலவே கையை நீட்டி அவன் எச்சரிக்க, கோபம் தலைக்கேறிய
நண்டோ அவனது இடக்கை விரலை தனது ஊசிப் பற்களால்
கடித்துவிட்டது.

“ஆ…” என்று அலறியவன் கையை இழுத்துக்கொள்ள பற்களோ
ஆங்காங்கே பதிந்திருந்தது. நடந்ததைப் பார்த்த ஸ்ருதி வந்து மகளைத்
தூக்கி, “இந்தாடி. ஏன் மாமாவை கடிச்சு வச்ச… ஸாரி சொல்லு” என்று
ஸ்ருதி சொல்ல அதீதியோ அசராமல் அமர்ஷாவை
முறைத்துக்கொண்டு இருந்தாள்.

“இதப்பாரு சில்வண்டு. உன் மாமன் எனக்குத்தான் பிரண்டு” என்று
மீண்டும் சிரிப்பை அடக்கியபடியே அவன் வம்பிழுக்க, அன்னையிடம்
இருந்து அவனைத் தாக்க அதீதி முயற்சித்து கை கால்களை அசைத்து,
“அட ஏண்ணே… இவளுக்கு ஏத்தாப்புல தான் நீங்களும் பேசுவீங்க”
என்ற ஸ்ருதி மகளை தூக்கியபடியே அறைக்குள் செல்ல அங்கிருந்த
அனைவரும் சிரித்தனர்.

“ஏண்டா எம்பிள்ளையை வம்பிழுக்கற?” வாசு சிரித்தபடியே கேட்க,
“உம்மக தானே மாப்ளே. அதான்” என்றான்.

“ஒருநாளில்ல ஒருநாள் எம் மருமக உன் மண்டையை உடைக்கப்போறா”
என்று சிரித்தபடியே கையைக் கழுவிக்கொண்டு வந்தான் வெற்றி.

மூவரும் அன்னை பாட்டியிடம் சொல்லிக்கொண்டு வெளியே வர, “வாசு…
நம்ம கவிப்புள்ள விசயமா சென்னை நீ எப்ப கிளம்பறே?” வெற்றி தன் தங்கை கவிநயாவின் ஞாபகம் வந்தவனாய்க் கேட்க,

“நீ போனா தானே மாப்ளே சரியா இருக்கும்” வாசு சொல்ல, “கோயில்
வேலை இருக்கு மாப்ளே. திருவிழா வேற நெருங்கிடுச்சு. இல்லினா
நானே போயிடுவேன்” என்று வெற்றியும் விளக்க, அமர்ஷாவிற்கும்
அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்தது.

“மாப்ளைகளா… நீங்க போய் பேசறது பிரச்சினை இல்ல. ஆனா, எங்க
பிரச்சினை வரும்னு உங்களுக்கே தெரியும்” என்றவன் பார்வை சென்ற
இடத்திற்கு இருவரும் திரும்ப அப்பத்தா யாரையோ வேலையாக
ஏவிக்கொண்டிருந்தார். “அப்பத்தாக்கு மட்டும் விஷயம் எட்டுச்சு… நம்மள
அம்புட்டுதான்” என்று எச்சரித்தான்.

“நான் பாத்துப்பேன் மாப்ளே” என்றான் வெற்றி உறுதியாக.

•••

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரம். 1996க்கு முன்புவரை மெட்ராஸ் என்று
அழைக்கப்பட்டு வந்த மாநகரம். மக்கள் தொகை 7.45 மில்லியைக்
கொண்டு எப்போதுமே போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் குறையாத
மாநகராட்சி என்று கூறலாம். காலை எட்டு மணிக்கு போக்குவரத்து
நெரிசலில் சிக்கிய பல்கிஸ், தன் அலுவலகத்திற்கு வருவதற்குள்
போதும் போதுமென்று ஆகிவிட்டது. ராயப்பேட்டையில் வந்து
தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியவள் நிமிர்ந்து அதை ஒருமுறை
பார்த்தாள். அந்த அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது
நிறைய ஊடகவியல் படித்த நிறைய மாணவர்களின் கனவு. அதாவது
நீதி, நேர்மை, அஞ்சாமை மட்டும் உள்ளவர்கள் மட்டுமே இங்கு பணிபுரிய
முடியும்.

இது புலனாய்வு ஊடகத்துறை. புலனாய்வு ஊடகத்துறையில் நிருபர்
ஒருவர் பொதுமக்கள் நலன் சார்பான விவகாரம் ஒன்றினை ஆழமாக
தேட வேண்டும். புலனாய்வு ஊடகத்துறை என்பது ஊடகவியலாளர்கள்
ஊழலை வெளிக்கொணரக் கூடிய, அரசு அல்லது பெரும்
நிறுவனங்களின் கொள்கைகள் அல்லது அரசியல், சமூக, பொருளாதார
அல்லது கலாச்சார போக்குகளின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் ஒரு
விடயத்தை ஆழமாக புலனாய்வு செய்வதாகும். இந்த அலுவலகத்தில்
தமிழில் வார இதழ் வெளியிடப்படும்.

தனது இருசக்கர வாகனத்தில் பார்க்கிங்கில் நிறுத்தியவள்
விஜய்தேவரகொண்டா பாடலை முணுமுணுத்தபடியே அலுவலகத்தின்
உள் நுழைந்தாள்.
‘ததிகின தாகஜானு
ததிகின தாகஜானு
தரிக்கிட தாதரினா
தரிம்தீத்த ஆனந்தம்
தலவணி தலாபுக
யாதலாளு காலப்பெகா
மோகலிகா மோகலிகா
மாலீகீதா கோவிந்தம்
இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே…
சாலே இதி சாலே…
நீகேநுவே வச்சி வாலவே
இகப்பாய் திரநாலே
குண்டலொனா வேகாம் பெஞ்சாவே…
கும்மலோகி ஹோலி தெச்சாவே
நுவ பாக்கானந்தி இண்டெனிமனி
நா கோக்கோ கண்டா ஒர்கோ ஜான்மை
மல்லேபட்டீ சஸ்தூன்னே’ என்று பாலை
வாயில் அசைபோட்ட படியே வந்தவள்
தனது இருக்கையில் அமர்ந்தாள்.

“என்ன பல்கிஸ்… மூஞ்சியெல்லாம் ஒரே பல்ப்பா இருக்கு” என்று
தோழனும் உடன் வேலை பார்ப்பவனுமான கார்த்திக்கேயன் கேட்க,
“விஜேடி(VJD) தான் காரணம்” என்றாள் தனது இருகன்னத்தில் கையை
வைத்தபடி. அதாவது விஜய்தேவரகொண்டாவை ஆங்கிலத்தில்
சுருக்கினால் விஜேடி.

“அப்படி என்ன பண்ணான்?” என்றான் அவன். “அவன் இவன்னு என்
டார்லிங்கை சொல்லாதடா” என்றாள் நண்பனிடம்.

“எவ்வளவு க்யூட் தெரியுமா? ஐம் இம்ப்ரஸ்டா” என்றாள் கண்கள் மின்ன.
கார்த்திக்கோ கடுப்பானது.

“அவனுக்கு அவ்வளவு சீனில்ல” என்றான் பொறாமையாக. அவனது
ஆள் காவ்யாவும் இப்படித்தான், ‘விஜேடி’, ‘விஜேடி’ என்று வாட்ஸ்ஆப்பில்
ட்ரெயின் ஓட்டுகிறாள் என்று.

“ச்சி போடா, கழுதை” என்றாள் முறைப்பாக.

“காலைலயே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?” என்று சிரித்த முகத்துடன்
வந்தாள் திவ்யபாரதி. தங்கள் முன் கம்பீரமும் அதே சமயம்
தோழமையுடன் நின்றவளை கண்டு இருவருமே புன்னகைத்தனர்.

“பாரு திவி, ‘விஜேடி’க்கு அவ்வளவு சீன் இல்லைனு சொல்றான்.
வயித்தெறிச்சல் புடிச்சவன்” என்று பல்கிஸ் கார்த்தியை குற்றம் சாட்ட,

“நீங்கதான் அவனைத் தலையில் தூக்கி வச்சிட்டு ஆடறீங்க… ஹும்”
என்று கார்த்தி அலட்சியம் செய்தான்.

“ஏன் கார்த்தி பொறாமைப்படறே?” என்று சிரிப்புடனே வினவினாள்
திவ்யபாரதி.

கார்த்தி ஏதோ பேச வரும்முன் திவ்யபாரதியே தொடங்கினாள். “நம்ம
பசங்களே இப்படித்தான் பல்கிஸ். அவங்க மட்டும் சீரியல் ஹீரோயின்
க்ரஷ் , மாடல் க்ரஷ், டப்ஸ்மேஷ் க்ரஷ், இன்ஸ்டாகிராம் செலிப்ரெட்டி
க்ரஷ், நியூஸ் ரீடர் க்ரஷ், இவ்வளவு ஏன் ஐ.பி.எல் பாக்க வந்த
பொண்ணைக் கூட க்ரஷ் ஆக்கி லிஸ்ட் வச்சிருப்பானுக. ஆனா, நம்ம
மட்டும் ஒண்ணு சொல்லிட்டா,,, எங்க இருந்து தான் அவனுகளுக்கு
புகையுமோ. கஷ்டகாலம்டா உங்களோட” என்றாள் கார்த்தியைப் பார்த்து.

“என்ன திவ்யா… பல்கிஸக்கு சப்போர்ட் பண்ற? அதுசரி
பொண்ணுங்களா பசங்களானு வந்தா நீ அங்கதான் நிப்ப”
என்றான் பொய்யாய் முறைத்தபடி. திவ்யபாரதியின் குணமே
அப்படித்தான். தன் பெயரின் பின்னால் உள்ள பாரதியைப் போல
பெண்ணியம் பேசுபவள். வாராவாரம் வரும் தங்கள் இதழில்
திவ்யபாரதிக்கு எப்போதுமே ஒரு பக்கம் ஒதுக்கப்படும். அதில்
பெண்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் அறிவும் ஆற்றலுமாக
எழுதுபவள். அவளைப் பாராட்டி அவர்களது அலுவலகத்திற்கு
எப்போதும் கடிதங்களும், அவளுக்குத் தனிப்பட்ட முறையில் ஈமெயிலும்
வருவது உண்டு. ஆனால், அந்த கர்வம் அவளுக்கு ஒருபோதும்
இருந்ததில்லை.

“பெண்களுக்காக யாராவது பேசிக்கிட்டே இருக்கணும் கார்த்தி.
இல்லினா மறுபடியும் எங்களை அடக்குமுறை செய்ய பலபேர் வெளிய
சுத்தீட்டு இருக்காங்க” என்று திவ்யபாரதி சொல்ல, “செம செம”
என்ற பல்கிஸ் கையைத் தூக்க இருபெண்களும் ஹைபை அடித்துக்
கொண்டனர்.

“உங்களுக்கு நாங்க சுதந்திரம் குடுக்கறது இல்லியா திவ்யா… நீயே
சொல்லு” என்று வினவினான் கார்த்தி.

“இல்லைடா நண்பா. நீங்க எல்லாரும் இப்படியே ஏன் யோசிக்கறீங்க?”,
“சுதந்திரங்கிறது யாரும் யாருக்கும் கொடுக்கிறது இல்ல. அது
அவங்கவங்களுக்குனு இருக்கிறது. இதை நீங்கதான் தப்பா புரிஞ்சிட்டு
எங்களோட இன்டிப்பெண்டன்ஸ் உங்க கையிலனு நினைக்கறீங்க”
என்றவளை கூர்ந்து பார்த்தான் கார்த்தி.

“ஏன் இப்படிப் பாக்கறே?” என்று திவ்யபாரதி வினவ,

“நீ எல்லாமே வித்தியாசமா யேசிக்கறே?” என்றான்.

“இல்ல கார்த்தி. திவி எல்லாமே சரியான பார்வைல பாக்கறா” என்றாள்
பல்கிஸ்.

“திவ்யா மேடம். உங்க மூணு பேரையும் வசீகரன் ஸார் கூப்பிடறாரு”
என்று ஆபிஸ் பாய் வந்து சொல்ல, மூவரும் அந்த அலுவலகத்தின்
நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் வசீகரனுடைய அறைக்குள்
நுழைந்தனர்.

வசீகரன். வயது 45. இவரது, “நிஜம் ரிப்போர்ட்ஸ்” தான் இன்று
புலனாய்வு ஊடகங்களில் தமிழ்நாட்டிலேயே முதலாக இருக்கிறது.
அதற்கு இவரது நேர்மையும் தைரியமுமே காரணம். எந்தவொரு
செய்தியாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கு கொண்டுவந்து
விடுவார். அரசியல்வாதிகளின் பணத்திற்கு பணியவும் மாட்டார்,
மிரட்டலுக்கு அஞ்சவும் மாட்டார். அப்படிப்பட்ட யாருக்கும் அஞ்சாத
தைரியமான மனிதர்.

அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவர்களை புன்னகையுடன்
பார்த்தவரிடம், “குட்மார்னிங் ஸார்” என்றனர். “குட்மார்னிங்” என்றவர்
மூவரையும் உட்காரச் சொன்னார்.

“பாரதி” என்று அவர் அழைக்க புன்னகையுடன் நிமிர்ந்தாள் அவள்.
அவளுக்குத் தன்னை பாரதி என்று அவர் அழைப்பதில் அவ்வளவு
பிடித்தம். அவளை அப்படி வாழ்க்கையில் அழைத்தது மூன்று பேரே.
அவளது தந்தை, வசீகரன் ஸார், இன்னொன்று…

மனதில் வந்ததை ஒதுக்கி வைத்தவள், “சொல்லுங்க ஸார்” என்றார்.

“மாதர் சங்கத்துல ஒரு விழா நடக்கப்போகுதுமா. அதுல நிறையப்
பெண்களுக்கு பாராட்டு கிடைக்கப்போகுது. அதுல உன் எழுத்துக்கும்
இருக்கு” என்று அவர் சொல்ல,

“இல்ல ஸார். இந்திரா மேடமையே எனக்காகப் போய் வாங்க
சொல்லுங்க” என்றாள் திவ்யபாரதி, முகத்தில் எந்தவொரு
உணர்வையும் பிரதிபலிக்காமல். இந்திரா வசீகரனுடைய மனைவி.
மனநல மருத்துவ நிபுணர். மாதர் சங்கத்தில் பொறுப்பான பதவியில்
உள்ளார்.

அவரும் அதற்கு மேல் பேசவில்லை. “ஏன் உன் முகத்தை யாருக்கமே
காட்ட மாட்டிற?” கார்த்தி கேட்க,

“என்னோட எழுத்து மாற்றத்தை உண்டு பண்ணா போதும் கார்த்தி. நான்
என்னை வெளிய காட்டிக்க விரும்பல” என்றாள் நேராக அவனைப்
பார்த்து. கார்த்தியும் பல்கிஸும் கடந்த ஒருவருடமாக
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஜர்னலிசம் படிக்கும்
காலத்தில் இருந்தே திவ்யபாரதி இங்கு வந்து எல்லாம் கற்றுக்கொண்டு,
நான்கு வருடங்களாக இந்த ஆபிஸில் இருப்பது அனைவருக்குமே
தெரியும். ஆனால், ‘ஏன்’ ‘என்ன’ என்று தெரியாது.

இவ்வளவு திறமை இருந்தும் இந்த மாதிரி விழாக்களை அவள் அறவே
ஒதுக்குவது யாருக்கும் புரியவில்லை. இதே மற்றவர்களாக இருந்தால்
அங்கு விருது வாங்குவதை புகைப்படம் எடுத்து வந்து ஃபேஸ்புக்,
இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டு இருப்பார்கள். ஆனால்,
திவ்யபாரதியின் செய்கை அவர்களுக்கு எப்போதுமே புரியாதபுதிர்
தான்.

“சரி, உன் இஷ்டம்” என்ற கார்த்தி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“உங்க மூணு பேருக்கும் ஒரு வொர்க்” என்று வசீகரன் பேச்சை மாற்ற
மூவரும் கூர்மையாக அதை கவனித்தனர்.

“ஒரு ஹாஸ்பிடல்ல ஒரு பொண்ணு சூசைட் பண்ணி இறந்துட்டதா
நியூஸ் தப்பா வெளிய போயிடுச்சு. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுப்
பாத்த அந்தப் பொண்ணு உயிரோட தான் இருந்திருக்கு. ஸோ
மறுபடியும் நியூஸ் தப்பா சொல்லிட்டோம்னு வெளியப் போகக்கூடாது,
கெட்ட பெயர் ஆகக்கூடாதுனு அவங்களே அந்தப் பொண்ணைக்
கொன்னுட்டாங்க. இது அவங்க சித்தப்பா ஆதாரத்தோட குடுத்த
எவிடன்ஸ். அவங்க பேசுனது வீடியோ எல்லாம் இதுல இருக்கு. பாரதி
இதுக்கு நீதான்மா எழுதனும். இன்னிக்கு ஈவ்னிங் இதை நான் மக்கள்
பார்வைக்கு கொண்டுப்போகணும்” என்றவர்,

“கார்த்தி அன்ட் பல்கிஸ்… இதுல ஆடியோ க்ளாரிட்டி டவுனா இருக்கு.
இதை சரி பண்ணி… பாரதி எழுதித் தர்றதை வச்சு வீடியோஸோட
அட்டாச் பண்ணிக் கொண்டுவாங்க” என்று அவர் பணிக்க
மூவரும் ஆர்வமாய் எழுந்து வேலையைப் பார்க்கச் சென்றனர்.

திவ்யபாரதிக்கோ கோபம் தலைக்கேறியது. இப்படிக் கூட மனிதர்கள்
இருப்பார்களா என்று. மனதில் எழுந்த ஆத்திரத்தை தன்
எழுத்துக்களின் மூலம் கொட்டினாள்.

‘உயிர் காப்பது மட்டுமே
தன் கடமையாய் பார்க்கும்
தெய்வங்களுக்கு மத்தியில்,
பாசக்கயிற்றை ஏந்திக்கொண்டு
இந்தத் துறையின் புனிதத்தை
குலைக்க வந்த களைகளா இவர்கள்?
மனிதாபிமானமே மிதமிஞ்சிய துறையில்
மனிதத் தன்மையே எஞ்சியும் இல்லையே!
நொடிப் பொழுதும் அயராது
நோய் நீக்கும் மருத்துவர்களுக்கு
மத்தியில்,
கொடிய விஷமாய் மாறி
ஒரு உயிரைப் பறித்த உனக்கு…

முடிவு மக்கள் கையில்!’

என்று எழுதி முடித்த திவ்யபாரதி சூட்டோடு சூடாக கார்த்தியிடமும்
பல்கிஸிடமும் காண்பித்தாள் தான் எழுதியதை.

“செம”, “என்னோட மெயில்கு அனுப்பிடு திவ்யா. நான் அப்படியே பேஸ்ட்
பண்ணிப்பேன்” என்று கார்த்தி சொல்ல தன் இருக்கையில் சென்று
அமர்ந்தவள் தனது லேப்டாப்பை உயிர்ப்பித்தாள். பாஸ்வோர்ட் அடித்து
உள்ளே சென்றவுடன் அவளை பாரதியார் வரவேற்றார் திரையில்
இருந்தபடி. அவள் லேப்டாப் வாங்கியபின் இரண்டாவதாக வைத்த
வால்பேப்பர். முன் முதலாவதாக ஆசைப்பட்டு வைத்திருந்ததை தூக்கி ரீ
சைக்கிள்பின்னில் எறிந்துவிட்டு ஐந்து வருடங்களாக மகாகவி
பாரதியின் படத்தை வைத்திருப்பவள் இன்னும் அதை மாற்றவில்லை.

ஒரு பெருமூச்சுடன் வந்த யோசனையை அகற்றியவள் கார்த்தி
கேட்டதை அனுப்பி வைத்தாள். பல்கிஸ் அதை தீயாக முடித்துத் தர,
அன்று மாலையே அதை மக்களின் பார்வைக்கு வசீகரன் கொண்டு
வந்தார். “நிஜம் ரிப்போர்ட்ஸ்” யூ டியூப் சேனலில் அது பகிரப்பட அன்று
அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சென்றடைந்தது. எல்லோரும்
சோஷியல் மீடியாவில் அதைப் பகிர வசீகரன் நினைத்ததுபோல அது
மக்களை அடைந்து அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டது. தன்
மருத்துவனையின் பெயர் கெட்டதால் அந்தக் கார்ப்பரேட் சேர்மன்
அடியாட்களை அலுவலகத்திற்கு அனுப்ப அலுவலகமோ பூட்டி இருந்தது.

“அண்ணே இங்க யாரும் இல்ல…” என்று ஒருவன் சொல்ல, “டேய்
ஒடச்சிட்டு உள்ள போடா” என்றான் அந்தக் கூட்டத்தின் தலைவன்.

அவர்கள் உள்ளே நுழைய அலுவலகமே வெறிச்சோடி இருந்தது. அந்த
அலுவலகத்தின் இரகசிய வழியில் எல்லோரும் தப்பித்து
சென்றிருந்தனர். வாட்ச் மேன் உட்பட. தன்னிடம் பணிபுரியும் நபர்களின்
பாதுகாப்பு எப்போதுமே வசீகரனுக்கு முக்கியம். அதனால்
எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு திவ்யபாரதி, பல்கிஸ்,
கார்த்தியுடன் வந்துவிட்டார். எல்லோரும் ஃபோனை ஸ்விட்ச்ட் ஆஃப்
செய்திருந்தனர்.

அவர்களை எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர் அந்த கும்பல். ஆனால்,
மெரீனா கடற்கரையை மறந்துவிட்டனர். இந்திராவையும் மதியமே
அலுவலகத்திற்கு வர வைக்கப் பட்டிருந்ததால் மனைவியையும் உடன்
தன்னுடன் வைத்துக்கொண்டார் வசீகரன்.

அவர்கள் ஐவரும் கரையில் ஒரு படகின் அருகில் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருக்க அருகே இருந்த படகின் மறைவில் ஏதோ சத்தத்தை
உணர்ந்த திவ்யபாரதி எழுந்து சென்று என்னவென்று பார்த்தாள்.

அடுத்து வரவிருக்கும் புயலை யாரும் அறியவில்லை.