மழைத்துளி-29 (prefinal)

IMG-20210619-WA0109-019da07f

மழைத்துளி-29

சாட்சி சொல்ல வந்த இளம்பெண்ணைக் கண்டு அனைவரும்
அதிர்ந்தனர். அன்று இந்தக் கயவர்களால் நடுஇரவில் அவர்களின்
இச்சைகளுக்கு இரையான பெண்.

கூண்டில் வந்து ஏறி நின்றவள் எதிரில் அமர்ந்திருந்த ஆதியைப்
பார்த்தாள். அவன் அவளைப் பார்வையாலே எச்சரித்து எரிக்க அவளோ
அசையாமல் அவன் பார்வையைத் தாங்கி நின்றாள். கூடவே ஆனந்தும் அவளை பார்வையால் அச்சுறுத்தினான். ஆனால், அவளின் பயம்
தற்போது பறந்திருந்தது. உயிர் பயம் இல்லை அவளிடம். இதற்கு மேல்
உயிர் போனால் என்ன இருந்தால் என்ன என்றது அவளது கண்கள்.

அன்று எவ்வளவு நம்பிக்கையாய் ஆதியை நம்பிச் சென்றாள். அதற்கு
அவன் நன்றாக கைமாறு செய்தான். கற்பழித்துவிட்டு நடுஇரவென்றும்
பாராமல் ரோட்டில் தள்ளிவிட்டு மனிதாபிமானமே இல்லாமல்
சென்றதை அவளால் மறக்க முடியுமா. அது ஆதியின் அலைபேசியில்
இருந்ததால் இவர்களுக்குத் தெரியவில்லை. கூடவே, பணம்கேட்டு
மிரட்டல்கள் வேறு. துன்புறுத்தப்பட்ட நெஞ்சம் எதுவும் செய்ய
முடியவில்லையே என்று உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த
போதுதான் இவ்வழக்கைப் பற்றி அவள் கேள்விப்பட்டது.

மனதில் எண்ணம் தோன்ற அடுத்தநாளே அவள் சந்தித்தது வசீகரனை.
அவள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. அதனால் இந்தச் செய்தி
எங்கு வெளியானதோ அங்கேயே சென்றாள். சாட்சியைத் தேடிக்
கொண்டிருந்த வசீகரனும் பெண்ணைப் பற்றி நன்கு விசாரித்தார்.
விசாரித்து அவளைப் பற்றி அறிந்து, அதிர்ந்து விசாரிக்க விரக்தியாக
மட்டுமே புன்னகைத்தாள்.

நீதிமன்றத்தில் அவளிடம் வந்து பெயரைக் கேட்க, “தாரிகா சிதம்பரம்”
என்றாள். தந்தையின் பெயரைக் கேட்க அங்கு சிலையாய் நின்றிருந்த
ஐபிஎஸ் அதிகாரியான தன் தந்தையைப் பார்த்தவள், “சிதம்பரம்” என்றாள்.

தாயாரின் பெயரைக் கேட்க உடல் மட்டும் இருக்க, ஜடமாய் அமர்ந்திருந்த
நீதிபதியாகிய தன் அன்னையைப் பார்த்தவள், “சாருமதி” என்றாள்.
கணவன் மனைவி இருவருக்கும் தலையில் இடி விழுந்தது
போலிருந்தது.

இன்பராஜ் காட்டிய பணத்தாசையில் இருந்த இருவருக்கும் மகளே
வந்து சாட்சியாக நிற்க பணம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
தாரிகாவிடம் வக்கீல் விசாரிக்க அவள் தலையை நிமிர்த்திக்கொண்டே
ஒவ்வொரு பதிலையும் சொன்னாள்.

கொச்சமான சில கேள்விகளுக்கும் அதே குரலுடன் பதிலளித்தாள்.
எல்லாம் இந்திரா அவளின் மனதை மாற்றியதாலே. முதலில் அதை
அவமானமாய் நினைத்தவளிடம், “இங்க பாரு தாரிகா… நாங்க கேட்ட
கேள்வியைவிட கோர்ட்ல அதிகமா கேப்பாங்க… அசிங்கமாவும் கேள்வி
வரும்… எல்லாத்துக்கும் தலைகுனியாம ஆன்சர் சொல்லு… எல்லா
அசிங்கத்தையும் பண்ண அந்த நாய்களே தைரியமா கோர்ட்டிற்கு
வரும்போது உனக்கென்ன?”

“பொண்ணுங்களை வெறும் சதையா மட்டும் பார்க்கிற அந்த ஜென்மங்க
முன்னாடி தலைகுனிஞ்சு நின்னா, அது டோட்டல் கேர்ள்ஸையே நீ
குற்றவாளியா நிறுத்திற மாதிரி… அவனுகளை அசிங்கப்படுத்தி நீ
உள்ள அனுப்பு… உன் அம்மா, அப்பாக்கும் புரியவை” நீளமாய் இந்திரா
பேச அவளின் சொற்கள் விதையாய் அவள் மனதில் இறங்கி
கம்பீரமான மரமாய் வளர்ந்து நின்றது.

அனைத்திற்கும் பதிலளித்து முடித்த தாரிகாவிற்கு தன்னையறியாமல்
கண்கள் கலங்கியது. அனைத்தையும் சொல்லி முடித்தவள்
அன்னையைக் கோபத்தோடு பார்க்க அவரோ மகளின் பார்வையில்
குறுகினார்.

செல்லம் கொடுத்து வளர்த்த அன்னை தந்தைதான். ஆனால்,
பணத்திற்காக இவ்வளவு கீழ் இறங்குவார் என்று நினைக்கவில்லை.
அவர்கள் அவ்வழக்கைப் பற்றி வீட்டில் ஒருமுறை பேசியதை
கேட்டவளிற்கு ஆத்திரமாக இருந்தது. கூடவே வெறுப்பும். அப்படி
அறிந்துதான் அவள் இவ்வழக்கிற்குள் நுழைய முடிவு செய்தது.

சக்தியோ மித்ராவின் அக்கா வழக்கையும் தக்க ஆதரங்களோடு
சமர்ப்பித்தாள்.அது கொலை என்று நிரூபித்தாள்.

கண் கலங்க அமர்ந்திருந்த நீதிபதி சாருமதி மகள் எவ்வளவு துன்பத்தை
அனுபவித்திருக்கிறாள் என்று நினைக்கும்போதே மனம் பாரமேறியது.
கதறி அழக்கூட முடியாத நிலையில் இருந்தார் அவர். தீர்ப்பு இன்னும்
சில நிமிடங்களில் என்றவர் எழுந்து சென்றார்.

தாரிகா கூண்டில் இருந்து இறங்க அவளிடம் பேச வந்த தந்தையை
பார்வையாலேயே எரித்து தள்ளி நிறுத்தியவள், சக்தியோடு சென்று
நின்றாள்.

நீதிபதி சில நேரத்தில் வந்தமர அனைவரும் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் தெரியும் தாரிகா யாருடைய மகளென்று. எப்படியும்
நான்கு பேருக்கும் தண்டனை என்பதும் தெரியும். ஆனால், என்ன
தண்டனை என்பதுதான் இப்போது கேள்விக்குறியாய் நின்றது.
தீர்ப்பை ஒவ்வொரு செக்ஷனிற்கு கீழ் சாருமதி கணீர்க் குரலில்
தெளிவாகப் படிக்கப் படிக்க அங்கிருந்த பெண் காவலாளிகள், பெண்
வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தங்களை அறியாமல் கண்கள்
கலங்கியது. கொலை வழக்கும் இருக்க தூக்கு தண்டனை முடிவானது.

இங்கு தீர்ப்பு வழங்கப்பட ஆதித்ய வெற்றிவேந்தன்-திவ்யபாரதியின்
மைந்தன் மதுரை மண்ணை சுவாசித்திருந்தான். நான்கு பேரின்
கையிலும் பெண் பாதுகாவலர் விவங்கை மாட்ட நால்வரின் முகமும்
செத்தது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் இருந்ததால் எதிர்க்கட்சி பிரச்சினை செய்வதோடு, இன்பராஜ் பக்கமே அவர்களுக்கு எந்த
உதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் சரியாக மாட்டியிருக்க
எதுவும் செய்யமுடியாத நிலை இன்பராஜால்.

அன்று அம்மன் சொன்ன வாக்கியம் காற்றின் காதில், “அரக்கர்களின்
முடிவு மீசையில்லா பாரதிகளின் கையில்” என்று மீண்டும் ஒலிக்க
மதுரையில் காற்று பலமாக வீசியது.

திவ்யபாரதி என்ற பெண்ணின் உந்துகோலால் வழக்குத்
தொடுக்கப்பட்டு, தாரிகாவின் சாட்சியால் சாருமதியின் கையால் தீர்ப்பு
எழுதப்பட்டு, பெண் காவலரின் கையால் குற்றவாளிகளுக்கு விலங்கை
மாட்டி அழைத்துச் செல்ல, மதுரை மண்ணே பன்னீர்த் துளியாய் விழுந்த
மழையில் நனைந்து குளிர்ந்தது. திவ்யபாரதியின் வேண்டுகோளும்
அதுதானே. பெண் வழக்கறிஞர் வாதாட வேண்டும் என்பது. அதனால்
தான் வெற்றி சக்தியைத் தேர்ந்தெடுத்தது.

தாரிகா தன்னுடன் துணை நின்ற அனைவரையும் திரும்பிப் பார்த்து
கையெடுத்து கும்பிட்டாள், உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி.
அவளின் கரத்தைப் பற்றி கீழே இறக்கிய வசீகரனும், வெற்றியும்
அவளை அவசரமாக வெளியே அழைத்துச் சென்றனர். அமர்ஷா
சக்திக்கு துணையாய் நின்றுவிட்டான்.

அவளை அவசரமாகக் கொண்டு சென்று காரில் ஏற்றியவர்கள் நேராக
விமான நிலையத்திற்கு விரைந்தனர். வசீகரன் தாரிகாவை
அழைத்துக்கொண்டு சென்ற வெற்றி அனைத்தையும் அவர்கள்
கரங்களில் தந்தான்.

மதுரையிலிருந்து சென்னைக்கு இரண்டு விமானச்சீட்டு இருக்க,
சென்னையிலிருந்து சிட்னிக்கு தாரிகா பெயரில் ஒரு விமானச் சீட்டு
இருந்தது. “பை அண்ணா” என்று வெற்றியிடம் விடைபெற்ற தாரிகா
வசீகரனுடன் கிளம்பினாள். இன்பராஜ் என்ன செய்வான் என்று
தெரியாது. அதனால் வெற்றியின் யோசனையில் தாரிகாவை
சிட்னியில் தனக்குத் தெரிந்தவரிடம் அனுப்ப முடிவெடுத்திருந்தார்
வசீகரன். அவர் சென்னை வரை அவளோடு செல்ல,
சென்னையிலிருந்து அவள் பாதுகாப்பிற்கு மற்றொரு ஆள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

அப்படித்தான் தாரிகாவை சந்தேகமில்லாமல் கோர்ட்டிற்கு அவர்கள்
அழைத்து வந்தது. முதலில் ஸ்ருதியின் அன்னை வீட்டில் இருந்தவளை,
பல்கிஸ் அழைத்து வந்து வசீகரன் சொன்ன காரில் ஏற்றியிருந்தாள்.
வெற்றி, அமர்ஷாவின் மனைவியரை கொல்ல நினைத்து இன்பராஜ்
அனுப்பியிருந்த லாரி தான் பல்கிஸின் மீது மோத வந்தது.

சுதாரித்து ஒருவர் அவளைப் பிடித்திழுக்க லாரியைப் பார்த்தபடி
கத்தியவள் பயத்தில் மயங்கியேவிட்டாள். அங்கிருந்தவர்கள் தான்
அவளை மருத்துவமனையில் அனுமதித்தது.

வெற்றியின் அலைபேசி அடிக்க ஃபோனை எடுத்தவன் அவசரமாக
மருத்துவமனைக்கு விரைந்தான். அமர்ஷா, பல்கிஸிற்கு விபத்து என்று
யாரோ மேம்போக்காக அழைத்து தெரிவித்திருக்க அங்கு வேகமாகக்
கிளம்பினான. சக்தியும் செல்லும் வழியில் வெற்றிக்கு
தெரிவித்திருந்தாள்.

அமர்ஷா மருத்துவமனைக்குள் நுழைய பல்கிஸ் கவுண்டரில் பில்லைக்
கட்டிக் கொண்டிருந்தாள். பதட்டத்தில் அடித்துப்பிடித்து மேடு, பள்ளம்
பார்க்காமல் ஓடி வந்தவன் மனைவியைச் சென்று அணைத்துக்
கொண்டான் அனைவரின் முன்னால்.

சுற்றியிருந்த அனைவரும் இவர்களைப் பார்த்து முகம் சிவக்க, “டேய்,
எல்லாரும் பார்க்கறாங்கடா…” அவள் வெட்கத்துடன் சொல்ல சக்திக்கே
புன்னகை வந்து வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

“பரவாயில்லை… செத்துட்டேன்டி இங்க வரதுக்குள்ள” என்றவன்
அவளை இறுக்க அவனிடம் இருந்து பிரிந்தவள், “இப்படிப் பேசுன
உன்னை அவ்வளவுதான்” பல்கிஸ் கோபமாக.

“டாக்டர் என்ன சொன்னாங்க?” அவன் பேச்சை மாற்ற, “ஆங்! நான்
ப்ரக்னென்டா இருக்கேனாமா?” பல்கிஸ்.

“என்னது?”, “எப்படி?” அமர்ஷா அதிர்வுடன்.

அவன் காதருகில் சென்றவள், “நீ நைன்டீஸ் கிட் தானே?”, “உனக்குத்
தெரியாதா… நம்ம கிஸ் பண்ணோம்ல… அதுல பேபி பார்ம் ஆகிடுச்சு”
பல்கிஸ் கேலி பேச, “இல்லடி தாலி கட்டுனா அந்த சக்தில பேபி பார்ம்
ஆகும்” அமர்ஷா அவளிற்கு ஏற்றவாறு அடித்துவிட்டான்.

இருவரும் பேசியபடி நிற்க வெற்றி வந்து சேர்ந்தான். “வெற்றி ஸார்…
என்னைக் காப்பாத்துங்க… இங்க ரொமான்ஸ் பண்ணியே என்னைக்
கொன்றுவாங்க போல” சக்தியின் குரலில் இருவரும் திரும்பினர்.
வெற்றிதான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி இவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

இருவரையும் வெற்றி கேலி செய்ய ஆரம்பிக்க மறுபடியும் வெற்றியின்
அலைபேசி சிணுங்கியது. சதீஷின் எண் திரையில் மின்ன, “பர்ஸ்ட்
பாரதிகிட்ட சொல்லணும்” முணுமுணுத்தவன் எடுத்தவுடன்
திவ்யபாரதியிடம் தரச் சொல்ல, சதீஷ்(குழந்தை பிறந்ததை மட்டும்)
சொன்னதில் அவனிற்கு டபுள் டமாக்காவாக இருந்தது.

“மாப்ளே, பையன்டா” வெற்றி வெட்கத்துடன் சொல்ல தற்போது
அவனை எல்லோரும் கேலி செய்யத் துவங்கினர்.

வெற்றியின் மகிழ்ச்சி இரண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை. ஊரில்
உள்ள இளவட்டத்தில் ஃபோன் செய்த ஒருவன், “அண்ணே, அண்ணி
சேஃபா?” கேட்க, “எந்தப் பிரச்சினையும் இல்லடா தம்பி… நல்லவேளை
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டாக” காரிற்கு வந்தபடியே வெற்றி பேச,
அங்கிருந்தவன் சொன்ன செய்தியில் வெற்றி அப்படியே
நின்றுவிட்டான்.

வெற்றி நிற்பதைக் கண்டு அமர்ஷா அலைபேசியை பறித்து
விஷயத்தை அறிந்தான். அனைவரும் காரிற்கு விரைய, வெற்றி
தனக்கு இருக்கும் பதட்டத்திற்கு தன்னால் காரை செலுத்த முடியாது
என்று அமர்ஷாவிடம் சாவியைத் தந்தான்.

மருத்துவமனைக்கு வரும் வழி முழுதும் வெற்றியால் நிம்மதியாக
இருக்க முடியவில்லை. ‘என்ன மாதிரி கொடுமை இது. ஒரு
பிரசவத்தைக் கூட நிம்மதியாக அவளுக்குத் தன்னால் தர
முடியவில்லையே’ என்று மனதிற்குள் குமுறினான். இரண்டு
கையையும் தலையில் வைத்தவன் மனஇறுக்கதுடனே வந்தான்.

‘என்ன மாதிரியான பெண் இவள்! தன்னைக் காதலித்ததைத் தவிர
வேறெந்தத் தவறும் அவள் செய்யவில்லையே’. அதீத தாக்கத்தில்
அவனிற்கு கண்கள் கூட கலங்கவில்லை. அவளை எப்போது
பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் மட்டுமே அவனிடம்.

மருத்துவமனை வந்த பின் இறங்கி முன்னால் கேட்டுக்கொண்டு
அவளிருக்கும் அறையை நோக்கி விரைந்தவன் தன் குடும்பம்
அறையின் முன் நிற்பதைக் கண்டான்.

“பாரதி எங்க?” பதட்டத்துடன் கேட்டவனை, “அண்ணா… எதுக்கு
இவ்வளவு பதட்டப்படறே… உன் பாரதி ஓகே” கவிநயா சமாதானம்
செய்ய, “நான் பார்க்கணும்?” வெற்றி.

“உள்ள இருக்காங்க”, “ஆனா, இவ்வளவு பதட்டமா உள்ள போகாத”
கவிநயா சொல்ல, “அப்ப யோகா பண்ணிட்டு போலாமா?” அமர்ஷா
குதர்க்கமாகக் கேட்டான்.

“உனக்கென்னப்பா கேஸ் ஜெயிச்சிட்டீங்க… இனி கைலயே புடிக்க
முடியாது இரண்டு வக்கீலையும்” கவிநயா வழக்கு வெற்றி பெற்றதிற்கு
கேலி செய்து, பிறகு வாழ்த்தைச் சொல்ல அனைவரும் அடுத்தடுத்துத்
தெரிவித்தனர். தையல்நாயகி வெற்றிக்கும் அமர்ஷாவிற்கும் இனிப்பை
வாயில் அடைத்தார்.

“எலே அமுசா, நீயும் வெரசா ஒண்ணை ரிலீஸ் பண்ணு” தையல்நாயகி
சொல்ல அமர்ஷா பல்கிஸைப் பார்க்க, அவளோ சிவந்த முகத்தை
விட்டத்தைப் பார்த்தபடி மறைத்தாள்.

வெற்றி அனைவரின் கேள்விக்கும் ஒருவழியாய் பதிலை சொல்லிவிட்டு
உள்ளே நுழைந்தான். அங்கு ஒரு செவிலியர் திவ்யபாரதிக்கு
குழந்தைக்கு பசியாற்ற உதவி செய்து கொண்டிருக்க, திரும்ப
எத்தனித்தவனை திவ்யபாரதி, “ஆதி” என்றழைத்தாள்.

அவன் திரும்ப, “வா” என்றாள். அவளருகே சென்றமர்ந்தவன்
அங்கிருந்த நிஜம் ரிப்போர்ட்ஸின் வார நாழிதளை
எடுத்துக்கொண்டான்.

பத்து நிமிடம் கழித்து திவ்யபாரதி குழந்தையின் பசியை ஆற்றிவிட்டு
செவிலியர் சென்றபின், “ஆதி” என்றழைத்தாள்.

“கேஸ் என்னாச்சு?” தவிப்புடன் கேட்டாள். அவள் மயக்கத்திலிருந்ததால்
அவளிடம் யாரும் தெரிவிக்கவில்லை.

குழந்தையின் உள்ளங்காலில் முத்தமிட்டவன், “நம்ம பையன் வந்த
நேரம் எல்லாமே எனக்கு வெற்றிதான்டி” என்றான்.

மனதில் ஒட்டியிருந்த சிறு இறுக்கமும் தளர, ஆதியின் கரங்களில்
குழந்தையை எடுத்து வைத்தாள். தன் கரங்களில் இருந்த தன்
உயிர்நீரால், திவ்யபாரதியின் உதிரத்தோடு கலந்து வந்த தன் உயிரைக்
கண்டவனிற்கு உடலில் ஒரு சிலிர்ப்புப் பரவியது.

குழந்தையின் கன்னத்தில் குட்டி முத்தங்களை வெற்றி வைக்க,
தூக்கத்தில் இருந்த அவனது மகனோ தூக்கம் கலைந்து
சிணுங்கினான். பிஞ்சு முகத்தை ரசித்தவனின் முகமும் அகமும்
மலர்ந்தது.

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்ல ஆதி… நீ உன்னோட
சின்ன வயசு ஃபோட்டோ எனக்கு காமிச்சு இருக்க ஞாபகம் இருக்கா…
அப்படியே உன் ஜெராக்ஸா இருக்கான்” குழந்தையின் கன்னத்தை
வருடியபடி சொன்னவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

எதையும் வெளிக்காட்டாமல் சிரித்தபடியே அமர்ந்திருந்தவளின்
கையைப் பற்றியவன், “ஸாரி பாரதி, என்னால உனக்கு எதுமே
நிம்மதியில்லாம தான் நடக்குது” என்றான்.

அவன் சொல்வது புரியாமல் திவ்யபாரதி பார்க்க, குழந்தையை
தொட்டிலில் கிடத்தியவன், அவள் கால் விரலில் முத்தமிட்டவன், “ஸாரிடி”
என்று மன்னிப்பை யாசித்தான். பத்து மாதங்களுக்கு முன், ‘உன்
காலைப் பிடிப்பேன் என்று நினைக்காதே’ என்றவனை விதி தலைகீழாக
மாற்றியிருந்தது.

“ஆதி என்ன இது?”, “காலை விடு” என்றாள்.

அவளின் அருகே வந்தமர்ந்தவன், “ரொம்ப கஷ்டப்பட்டியாடி” அவன்
கேட்க, அவனின் முகச் சோர்வு தாங்காதவளாய், “அதெல்லாம்
எதுவுமில்ல ஆதி… பின்னாடி இருந்த நம்ம காளைக…” அவள் சமாளிக்க
முயல, “எனக்கு எல்லாம் தெரியும்டி” என்றான். அவளின் மேல்
காதலைத் தாண்டி மரியாதை கூடியிருந்தது வெற்றிக்கு.

அவளது இருகன்னத்தையும் பற்றியவன், “எனக்கு என்ன சொல்றதுனே
தெரியல பாரதி… நான் உனக்கு அப்படி என்ன பண்ணிட்டேன்… எதுக்கு
என்னை இவ்வளவு லவ் பண்ற… ஒவ்வொரு டைமும் உன்னோட லவ்வ
ஃபீல் பண்ணும்போது, நான் அதுக்கு தகுதி இல்லாதவன்னு தான்
தோணுது…” வெற்றி சொல்ல அவனின் கையைத் தட்டிவிட்டவள்,

“இன்னும் நாலு குழந்தை பிறந்த அப்புறம் சொல்லு…” பேச்சை
மாற்றியவள், “எனக்கு உன்னைத் தான்டா ரொம்ப பிடிக்கும்…” என்றாள்
அவனின் கையை பிடித்தபடி.

“என்னமோ போடி” என்றவன் எழப்போக அவனின் கையைப் பிடித்தவள்,
தன் கையை நீட்ட புரிந்தவனாய் அவளின் உள்ளங்கையில்
மென்மையாய் முத்தமிட்டான். அவனின் சட்டையைப் பிடித்து அருகில்
இழுத்தவள், அவனின் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ ஆதி” என்றாள்.

திடீரென, அமர்ஷா உள்ளே வர இருவரும் விலகினர். ‘ஆஹா!
இரண்டாவது குழந்தைக்கு ரெடி பண்றாங்க… நம்ம இன்னும்…’ என்று
நினைத்தவன் பல்கிஸைப் பார்க்க அவளோ பார்வையைத்
திருப்பினாள். ‘இவ ஒருத்தி எதுவுமே நடக்காத மாதிரி நிப்பா… அதுசரி
அதுதான் எதுவும் நடக்கலையே’ மனதில் நினைத்து
பெருமூச்சுவிட்டவன் உள்ளே நுழைந்து குழந்தையைக் கொஞ்சினான்.
பல்கிஸும் குழந்தையை கையில் எடுத்து அதன் அழகை ரசித்துவிட்டு
அமர்ஷாவுடன் கிளம்பினாள்.

அன்று மாலை நடந்த நல்ல விஷயம், ஆதி, ஆனந்த், சபரி, பிரதீப்
நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த செய்தி. போலீஸாரை
சுட்டுவிட்டுத் தப்பிக்க முயன்றதால் சுட்டதாக செய்தியில் வர, அது
என்கவுன்டர் என்று அனைவருக்கும் புரிந்தது. சிதம்பரம் தான் செய்தது.
மகள் பேசாமல் சென்றிருக்க மகளின் மனம் தங்களை மன்னிக்க அந்தப்
பெற்றோர் காத்திருக்க முடிவெடுத்தனர்.

வெற்றியின் வீடுவந்து சேர்ந்த பல்கிஸ் குளியலறைக்குள்
புகுந்துகொள்ள, அவள் வெளியே வந்தவுடன் அவளைக்
கண்டுகொள்ளாமல் குளியலறைக்குள் புகுந்தான். ‘என்ன பையன்
நம்மள கண்டுக்காம போறான்’ மனதிற்குள் நினைத்தவள் காஃபி தயார்
செய்யச் சென்றாள்.

காஃபி கலக்கிக் கொண்டிருந்தவளின் பின்னால் சென்றவன் அவளின்
இடைக்குள் கரத்தை நுழைக்க பல்கிஸ் கூச்சத்தோடு நகரப் பார்க்க
அவனோ காஃபியை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றான்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன்’ மனதில் மூண்ட கோபத்தோடு
நினைத்தவள், வெளியே சென்று அவனை முறைக்க அவனோ டிவியில்
மூழ்கியிருந்தான்.

அவனை முறைத்துவிட்டு அவள் உள்ளே நுழைய, “மவளே, என்னைய
வெயிட் பண்ண வச்சில்ல.. இப்ப வெயிட் பண்ணு” மனதிற்குள்
நினைத்தவன் கிரிக்கெட் மேட்சில் மூழ்கினான்.

திவ்யபாரதிக்கு இரவு விசாலாட்சி சமைத்து தரச் சொன்னதை செய்து
முடித்தவள், “வெற்றி அண்ணா எப்ப வருவாங்க” அமர்ஷாவிடம்
கேட்டாள்.

அவள் கேட்கும்போதே வெற்றி உள்ளே நுழைய, விசாலாட்சி தவிர
அனைவரும் வந்திருந்தனர். வெற்றி உணவை வாங்கிக்கொண்டு
கிளம்பினான். அனைவரும் உறங்கச் செல்ல அறைக்குள் நுழைந்த
அமர்ஷா மனைவி முதுகுக்காட்டி படுத்திருப்பதைக் கண்டு உள்ளுக்குள்
சிரித்தவன், படுக்கையில் விழுந்து அவளருகில் சென்று அவளை
பின்னிருந்து அணைத்தான்.

கோபத்தில் இருந்தவள் எதுவும் பேசவில்லை. அவன் மேலும் அவள்
கழுத்தில் முகம் புதைக்க அவனின் தலையில் சரமாரியாக கொட்ட
ஆரம்பித்தாள். “ஏய் ஏய் வலிக்குதுடி… அம்மாஆஆஅஅ!” அவன் அலற,

“பின்ன அலையவிடறியா என்னை?” பல்கிஸ் அவனின் கன்னத்தைக்
கடித்து வைக்க, “ஆஆஆஅஅ!” அமர்ஷா கத்த அவனின் வாயைப்
பொத்தினாள்.

“நீ மட்டும் பண்ணில்லடி” அமர்ஷா சண்டைக்கு வர, “சண்டைப்
போடறில்ல… நான் போறேன் போ” அவள் எழப்பார்க்க அவளின்
இடுப்பைச் சற்றிப் பிடித்தவன் அவளை தன் ஆளுகைக்குள் வைத்தான்.

“ஸாரி சரியா” அமர்ஷா கேட்க, “ஸாரி இப்படிக் கேட்கக் கூடாதே” அவள்
விஷமச் சிரிப்புடன் கேட்க அமர்ஷாவிற்கோ ஆயிரம் வாட்ஸ் உடம்பில்
அடித்ததைப் போலிருந்தது. அவளின் இதழில் அவன் புதைய அவனின்
மனைவியோ தன்னவனின் முத்தத்தில் கிறங்க ஆரம்பித்தாள்.

அவளின் இடையை சுற்றி வளைத்தவன், தன்னுடைய மொத்தக்
காதலையும் அவளுள் இறக்க, இருவருக்கும் மோகமும் தாபமும்
கிளர்ந்தெழுந்தது. அன்றைய இரவில் அவளை மீண்டும் மீண்டும் அவன்
சீண்ட இருவருக்கும் காதல் லீலைகள் தொடர்ந்து தூங்கா இரவாகிப்
போனது அன்று.

•••

திவ்யபாரதியையும், குழந்தையையும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு
அழைத்து வர இருவரையும் யார் தாங்கினார்களோ இல்லையோ
வெற்றி உள்ளங்கையில் வைத்திருந்தான். மனைவி, குழந்தைக்கு
அனைத்து வேலைகளையும் அவனே செய்தான்.

திவ்யபாரதி குழந்தைக்கு பசியாற்றும் நேரத்தைத் தவிர, மகனைத்
தானே பார்த்துக் கொண்டான். குழந்தைக்கு துணிகள் மாற்றிவிடுவது,
சுத்தம் செய்வது, குளிக்க வைக்கும்போது தண்ணீர் ஊற்றுவது, தூங்க
வைப்பது என அனைத்தையும் செய்தான்.

“நீ இப்படியே பண்ணு… நான் சோம்பேறி ஆகப்போறேன்” திவ்யபாரதி
ஒரு மாதம் ஓட குறைபட, “அதெல்லாம் ஆகமாட்டடி” என்றான்
மகனைக் கொஞ்சியபடியே. அவனின் பேச்சு திவ்யபாரதியிடம் குற்ற
உணர்வால் குறைந்திருந்தது. அவளை அக்கறையாக பார்த்துக்
கொண்டவனால் முன்பு இருந்ததைப்போல பேச முடியவில்லை.

“எப்போமே மகனை மட்டும் கொஞ்சு” திவ்யபாரதி முணுமுணுக்க,
“என்ன?” வெற்றி.

“உனக்கு உன் மகன் தானே முக்கியம்… நல்லா அவனைக் கொஞ்சு”
திவ்யபாரதி சிடுசிடுக்க வெற்றி புன்னகையுடன் கடந்தான்.

“ஏன்டா என்னைப் பிடிக்கலையா… ஏன் என்னை தள்ளி வைக்கற?”
திவ்யபாரதி அவனின் ஒதுக்கம் தாங்க முடியாதவளாய் கேட்க, பேசாமல்
இருக்கும்படி சைகை செய்தவன், குழந்தையை தொட்டிலில்
கிடத்திவிட்டு ஜன்னலின் வெளியே பார்த்துக் கொண்டிருந்த
திவ்யபாரதியின் அருகில் சென்றான்.

“உன்னை எனக்கு ஏன் பிடிக்காமப் போகப்போது பாரதி” என்றான்
அவளின் கற்றைக் கூந்தலை ஒதுக்கிவிட்டபடி.

“அப்புறம் ஏன் என்னை ஒதுக்கறே… சரியாவே பேசமாட்டிறே…
என்னோட ஆதியே இல்ல இது” திவ்யபாரதி,

“எனக்கு கஷ்டமா இருக்குடி… ஒரு மாதிரி கில்ட் ஃபீல்” என்றான்
தலையைக் குனிந்தபடி.

“சரி, அப்புறம் ஏன்டா என்னைக் கல்யாணம் பண்ணே?” திவ்யபாரதி
இடுப்பிற்கு கை கொடுத்து கோபமாகக் கேட்க,

“அது உன்னை என்னால விட்டுத்தர முடியாதுடி”

“ஆதி, என்னடா மாத்தி மாத்தி பேசற?” திவ்யபாரதி சிணுங்க,

“இல்லடி அது வேற டிப்பார்ட்மெண்ட் இது வேற டிப்பார்ட்மெண்ட்”,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… ரொம்ப ரொம்ப… ஆனா, நான்
செஞ்ச தப்பு இன்னும் எனக்குள்ள நின்னு கேள்வி கேக்குது… மனசு
உறுத்துது பாரதி” என்றான்.

“நான் அன்னிக்கு உன்னைக் கேட்ட கேள்வி எல்லாம் தானே உன்னை
இப்படி ஆக்கிடுச்சு”, “ஸாரிடா…” திவ்யபாரதியின் கண்களில் கண்ணீர்
கீற்று உருவாக அவளை இழுத்து அணைத்தவன், “சரியான லூசுடி நீ…
அதெல்லாம் இல்லை… பர்ஸ்ட் அழாதே… நம்ம பையன் கூட
அழமாட்டான் போல…” வெற்றி கேலி செய்ய,

“அவனுக்கு என்ன? நீ கூடவே இருக்க… அழுகமாட்டான்” திவ்யபாரதி
குட்டினாள்.

“டைம் தாடி, ப்ளீஸ்… நீ என்னை ஈசியா மன்னிக்கலாம்… ஆனா, எனக்கு
உள்ளேயும் ஒரு ஓரத்துல ஒரு நல்லவன் இருப்பான்ல அவன் என்னை
மன்னிக்க டைம் ஆகும்…” வெற்றி சொல்ல தலையை ஆட்டினாள்.

“நீ நல்லவன் தான்டா” திவ்யபாரதி.

“பையனுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு?” வெற்றி கேட்க,

“வர்ஷித் வருணன்” என்றாள் அடுத்த நொடியே. மழை நாளில்
உருவானவன் அல்லவா! அதனால் வர்ஷித் வருணன் என்று முடிவு
செய்திருந்தாள் திவ்யபாரதி. மனைவி பெயர் வைத்ததன் காரணம்
புரிந்தவன் நகர, அவனைப் பிடித்தவள், “நீ எப்பவோ மனசு மாறு…
அதுவரைக்கும் என்னால உன்னை விட்டுத் தள்ளி நிக்க முடியாது”
என்றவள் கணவனை இறுக அணைத்தாள்.

அவளின் அணைப்பில் புன்னகைத்தவன் அவளின் நெற்றியில்
முத்தமிட்டு, “உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு… நீ செஞ்சா
எதுவா இருந்தாலும் கரெக்டாதான் இருக்கும்” என்ற வெற்றி குழந்தை
அழ திவ்யபாரதியிடம் இருந்து நகர்ந்து நின்றான்.

“உம் மகனுக்கு மூக்கு வேர்த்திடுச்சு… நானும் நீயும் பேசுனாக்கூட
பிடிக்காது” என்றவள் மகனை அள்ளியெடுத்து முத்தம் கொடுத்து
தொந்திரவு செய்ய அந்தப் பிஞ்சு பாலகனோ அன்னையின் பாசம்
தாங்காமல் சிணுங்கினான். அவனைத் தோளில் போட்டு தட்டிக்
கொடுத்தவள் மீண்டும் வெற்றியிடம் வந்தாள்.

“டேய், மறுபடியும் மாமியார் வீட்டுல கோவிச்சிட்டு போற மருமக மாதிரி
அந்த வீட்டுக்குப் போயிடாத” என்று நக்கலடித்தவளிடம், “சரிங்க மேடம்”
வெற்றி.

நல்ல நாளில் தங்கள் மகனிற்கு, “வர்ஷித் வருணன்” அவர்கள் சூட்ட
அனைவரும் எந்த மணச்சுணக்கமும் இன்றி கலந்துகொண்டனர். 

மூன்று மாதங்கள் கடந்தது… 

மகனைக் கையில் வைத்திருந்த திவ்யபாரதி பின்னால் அந்த
ஆட்டுக்குட்டியுடன் மகனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
மகனின் கையை எடுத்து ஆட்டின் தலையில் அவள் தொட்டுக்
காண்பித்தவள் புன்னகைத்த மகனின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்துவிட்டு, ஆட்டின்
தலையிலும் நீவி முத்தத்தை வைத்தாள்.

மகனின் உச்சியை முகர்ந்து அவனின் மேல் வந்த பால்வாசத்தை
அனுபவித்தபடி சிறிதுநேரம் காற்றாட நின்றவள் உள்ளே வர 
அமர்ஷாவை வெற்றி கலாய்த்துக் கொண்டிருந்தான்.

திவ்யபாரதி புருவம் சருக்கியபடியே வர, “மாப்ளேயும், இன்னும் பத்து
மாசத்துல ரிலீஸ் பண்ணப் போறான்” வெற்றி சொல்ல, திவ்யபாரதி
பல்கிஸைப் பார்க்க அவளோ தலையைக் குனிந்தாள். முகமோ தக்காளி
நிறமாக சிவந்திருந்தது.

“பார்ரா… எங்க பல்கிஸையே வெட்கப்பட வச்சுட்டீங்க” திவ்யபாரதியும்
வெற்றியோடு சேர்ந்து கிண்டல் செய்ய, வர்ஷித்தை வாங்கிய பல்கிஸ்
அவனைக் கொஞ்சியபடி தப்பித்துக்கொள்ள சிக்கயது என்னமோ இந்த
அப்பிராணி தான்.

இரவில் மகனை தொட்டிலில் போட்ட திவ்யபாரதி அவனின் கன்னத்தில்
விளையாடிவிட்டு படுக்கையில் விழுந்தாள். சிறிது நேரம் கழித்து வந்த
வெற்றி தொட்டிலில் குருவிக்குஞ்சாய் தூங்கிக் கொண்டிருந்த மகனை
தூக்கம் கலையாமல் கொஞ்சிவிட்டு நிமிர, திவ்யபாரதி அவனை
முறைத்துவிட்டுத் திரும்பிப் படுத்தாள்.

அவன் வெளியே செல்வதை உணர்ந்தவள், ‘இவனுக்கு என்னை மட்டும்
கண்ணுக்குத் தெரியாது’ என்று புகைந்தாள்.

மீண்டும் அவன் வரும் சத்தத்தை உணர்ந்தவள் திரும்பாமல்
படுத்திருக்க அவளைத் தீண்டிய ஒன்றில் படக்கென்று திரும்பினாள்.