மழைத்துளி-30(2)

IMG-20210619-WA0109-a918021b

மழைத்துளி-30(2)

எட்டு வருடங்களுக்குப் பிறகு…

தாரிகாவுடன் வீடியோ கால் பேசிய திவ்யபாரதி மனம் நிறைவாக
இருந்தது. தாரிகாவை நன்கு அறிந்த ஒருவன் அவளை மட்டும் அவளது
நிகழ்காலத்தை மட்டும் காதலித்து மணந்து தற்போது அவர்களுக்கு
மூன்று வயதில் மகள் உள்ளது. தாய் தந்தையுடன் ஏதோ பேச
ஆரம்பித்திருந்தாள் தாரிகா.

“இந்த எட்டு வருடத்தில் எங்காவது சோகத்தை சந்தித்திருக்கிறாயா?’
என்று கேட்டால் அவளின் பதில் இல்லவே இல்லை தான். காரணம்
அவளின் கணவன். கணவனின் நினைவில் எப்போது போல ஒரு பளிச்
முகத்தில் வந்தமர்ந்தது திவ்யபாரதிக்கு.

தற்போது இன்னொரு வழக்கு திவ்யபாரதி உந்துதலில் வெற்றி நடத்திக்
கொண்டிருந்தான். பெண்கள் சிலர் இன்ஸ்டாகிராமிலும்,
ஃபேஸ்புக்கிலும் (பப்ளிக் அக்கவுன்ட் அல்லது மிரட்டி வாங்கப்படும்
புகைப்படம்) பதிவு செய்யும் புகைப்படத்தை எடுத்து டெலிகிராமில்
உள்ள சேனல் ஒன்றில் காசிற்காக விற்கும் சில கிருமிகளைப் பற்றி
அறிந்த திவ்யபாரதி கணவனிடம் அதைத் தெரிவித்து தற்போது
அவ்வழக்கு நடந்து கொண்டிருந்தது.

வீட்டின் முன் அதீதியுடன் விளையாடிக் கொண்டிருந்தான் வர்ஷித்
வருணன். “வர்ஷித்! வித்யூத் எங்க?” ஆறு வயதான இரண்டாவது
மகனை தேடியபடி வந்த திவ்யபாரதி கேட்க,

“தெரியலம்மா” வர்ஷித் விளையாட்டு மும்முரத்தில்.

“அத்தை… அதோ வர்றான்” அதீதியின் குரலில் திரும்பிய திவ்யபாரதி
அதிர்ந்தாள். கையில் பாம்பை எடுத்துக்கொண்டு தைரியமாக வந்த
மகனைக் கண்டு, “அடேய்!” என்று கத்தியவளின் குரலில் வேலையாள்
ஓடிவர, திவ்யபாரதி மகனைச் சென்று பிடிக்க வேலையாள் பாம்பை
கையிலிருந்து தட்டிவிட அதுவோ உயிரில்லாமல் இருந்தது. கேட்டதிற்கு,
“சும்மா எடுத்துக்கொண்டு வந்தேன்” என்றான் சாதாரணமாக.
திவ்யபாரதியின் குணம் வர்ஷித்திற்கு இருக்க, வெற்றியின் குணம்
மொத்தமும் வித்யூத்திற்கு இருந்தது.

மகனின் கையில் பட்டுபட்டென அடி வைத்தவள், “இனித் தோட்டத்துப்
பக்கம் போன உரிச்சிடுவேன்” அவள் மிரட்டிக் கொண்டிருந்த சமயம்
வெற்றி வந்து மகனை கையில் எடுத்தான். வித்யூத்திற்கோ அன்னை
அடித்ததில் கண்களில் நீர் தழும்பியிருந்தது.

மகனை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்த வெற்றி, “எத்தனை
தடவை சொல்றது கை வைக்காதேன்னு” வெற்றி திவ்யபாரதியைத்
அதட்ட வர்ஷித்தும், அதீதியும் திவ்யபாரதிக்கு சப்போர்ட்டாக நின்று
வெற்றியிடம் நடந்ததைத் தெரிவித்தனர்.

“அவனுக்கு எதுலையும் பயமில்ல ஆதி” திவ்யபாரதி. “எம்மகன்ல
அதனால அப்படித்தான் இருப்பான்” வெற்றி பெருமையடிக்க,
திவ்யபாரதி திருப்பிக் கொடுக்க வருதற்குள் தொட்டிலில் தூங்கிக்
கொண்டிருந்த அவர்களின் ஒரு வயது மகள் அழுகுரல் கேட்க
திவ்யபாரதி ஓடினாள்.

வெற்றிக்கு திவ்யபாரதியின் மேல் காதல் தீரவே தீராமல் போனதால்
வந்த மூன்றவாது குட்டி தேவதை வேதாபாரதி. எழுந்த மகளை
சமாதானம் செய்த திவ்யபாரதி அவளிற்கு பாலைக் கலக்கிக்
கொடுத்துவிட்டு, மனம் கேட்காமல் சின்ன மகனைத் தேடிச் சென்றாள்.
அவனோ தையல்நாயகியுடன் வம்பளந்துகொண்டு இருந்தான். அதில்
மட்டும் அம்மாவும், மகனும் ஒரே மாதிரி.

வர்ஷித், வித்யூத்தைப் பார்க்கும்போது மட்டும், “ணா” என்று வரும்
வேதாபாரதிக்கு. அவனின், “ணா” என்ற அழைப்பில் திரும்பிய வித்யூத்
அன்னையைப் பார்த்து கோபமாய்ச் சென்றான். மகனின் பின்னேயே
சென்ற திவ்யபாரதி அவனைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானம்
செய்தவள் வெளியே வரவும் அமர்ஷா வரவும் சரியாக இருந்தது.

வர்ஷித், வித்யூத், வேதா மூவரையும் ஒன்றாகப் பார்த்தவன்
வெற்றியிடம், “உன் ஹார்ட்வொர்க்குக்கு அளவே இல்லை மாப்ளே”
மெச்சினான் அமர்ஷா.

“நான் ஹார்ட்வொர்க்னா நீ ஸ்மார்ட்வொர்க் மாப்ளே” வெற்றி கேலி
செய்தான், பின்னால் வந்த அமர்ஷாவின் இரட்டைப் பெண்
குழந்தைகளைப் பார்த்து. பல்கிஸிடம் இருந்து ஓடிவந்து தந்தையைக்
கட்டிக்கொண்டனர் அமல் அமர்ஷாவும், ஆனீசா அமர்ஷாவும்.

அடுத்தநாள் பொங்கிலிருக்க அனைவரையும் வீட்டிற்கு
அழைத்திருந்தனர். வசீகரன் தம்பதி, அவர்களின் மகள், தாத்தா, சதீஷ்,
கவிநயா கூடவே அவர்களின் ஐந்து வயது மகள் யாசிதாவும் வர, வீடே
விழாக்கோலம் பூண்டது.

வித்யூத் வருணனோ அத்தை மகள் யாசிதாவிடம் ஸ்கோர் போட்டுக்
கொண்டிருந்தான்.

வயதின் முதிர்வால் அமைதியாக அமர்ந்திருந்த தையல்நாயகியின்
முகத்திலும், சுந்திரம் தாத்தாவின் முகத்திலும் அப்படியொரு நிம்மதி.
அனைத்து தம்பதியும் வாழ்க்கையில் விதி வைத்த இறுதிச்சுற்றை
வெற்றிகரமாக முடித்திருந்தனர். அவர்களின் காதலுக்கு கிடைத்த
பரிசுகளாய், அழகழகாக தங்கத்தில் வார்த்த பிள்ளைகளோடு.

அனைவரும் ஒன்றாய் மதிய உணவை முடித்துவிட்டு அமர்ந்திருக்க
தன்னருகில் இருந்த மனைவியின் கரத்தை எப்போதும்போல தன்
கரத்தைக் கோர்த்துக்கொண்டான் வெற்றி. அதையுணர்ந்த
திவ்யபாரதியும் எப்போதும் போல் கணவனின் நேசத்தில் மிதந்தாள்.

அவளின் மனதை உணர்ந்த மேகம் மழைத்துளியை மீண்டும் மண்ணில்
விழ வைத்து, அற்றைத் திங்களின் மழைத்துளியை இருவருக்கும்
நினைவூட்ட காதல் என்ற சிறையில் இருவரும் கைதிகளாய்!

வாழ்நாள் முழுதும் விடுதலையில்லா சிறை இருவருக்கும்!

*முற்றும்*

(ஞாயிறு முடிவுரை உள்ளது. பைனல் படித்தவர்கள் முடிவுரையை
தவறாமல் படிக்கவும்)