மழை – 10

romantic-flowers-rain-couple-image-with-umbrella-status-752x440-fcb3ed0b

மழை – 10

அத்தியாயம் – 10

அன்று கல்லூரி விடுமுறை என்றபோதும், எப்.எம். ஸ்டேஷனில் வேலையிருந்ததால் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தாள். அவள் வெளியே வேலை செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் இன்று சொல்லிவிடும் முடிவுடன் ஹாலுக்கு வந்தாள்.

அவள் தயாராகி நிற்பதைக் கண்ட சதாசிவம், “எங்கம்மா கிளம்பிட்ட கோவிலுக்கா?” என்று கேட்டதற்கு மறுப்பாக தலையசைத்தாள்.

 அவர் அடுத்து கேட்கும் முன்பே, “மாமா நான் எப்.எம்மில் ஆர்.ஜே.வாக வேலை பார்க்கிறேன். இவருக்கு அடிபட்ட காரணத்தினால் இந்த வாரம் லீவ் எடுத்தேன்” என்றவள் பாதியில் நிறுத்த சதாசிவம் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த மகனை முறைத்தார்.

“என்னடா மருமகள் சொல்வது உண்மையா? அவளோட படிப்பு செலவுக்கு காசு கொடுக்காமல் நீ என்ன பண்ணிட்டு இருக்கிற? புருஷன் நீயிருக்க அவ ஏன் வேலைக்கு போகணும்?” மகனிடம் கேள்விகளை அடுக்க சத்தம்கேட்டு மிருதுளா மற்றும் மகேஸ்வரி இருவரும் ஹாலிற்கு வந்தனர்.

“அதுவந்து அப்பா..” தயக்கமாக தொடங்கும்போது குறுக்கிட்டாள் சிற்பிகா.

“மாமா அவருக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் வேலைக்குப் போகும் விஷயம் அவருக்கே தெரியாது” தன்மீதே அவள் மொத்த பழியையும் போட்டுக் கொண்டாள்.

அவள் சொன்னதைகேட்டு அதிர்ந்தபடி நிமிர்ந்த முகிலனின் கையை இறுகப்பிடித்து மறுப்பாக தலையசைக்க, “அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் சம்மந்தியம்மா சொன்னபோது கூட நான் அவங்களைத் தவறாக நினைச்சேன். சிற்பிகா என்னம்மா இது புது பழக்கம். யாரிடமும் சொல்லாமல் நீயே ஒரு முடிவெடுத்தால் என்ன அர்த்தம்” என்று அவளைத் திட்டினார்.

வீட்டிற்கு பெரியவர் என்ற முறையில் தலையைக்குனிந்து, “என்னை மன்னிச்சிடுங்க மாமா. அனாதையான எனக்கு ஊரறிய உங்க பிள்ளையைத் திருமணம் செய்து, நான் படிக்கவும் அனுமதி கொடுத்தீங்க. இதுக்குமேல் படிப்பு செலவுக்கு உங்களிடம் கேட்க தயக்கமாக இருந்தது” தன் பக்கமிருந்த நியாயத்தைக் கூறினாள்.

முகிலன் மெளனமாக இருப்பதைக் கவனித்த சதாசிவம் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது. அவனுக்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்தால் அதற்கான எதிர்ப்பு எப்படி வருமென்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவரின் சந்தேகம் அதிகரித்தது.   

“என்னிடம் உன்னை கேட்க சொல்லலையே.. உன்னோட புருஷனிடம் கேட்க என்ன தயக்கம்னு தான் கேட்கிறேன்” நிதானமாக மகனையும், மருமகளையும் பார்த்தார்.

முகிலன் மெளனமாக இருக்க, “வேண்டாத திருமணம், வெறுக்கும் பெண், விவாகரத்து செய்ய போறேன்னு சொல்பவரிடம் என்னவென்று கேட்பது மாமா.. அதுதான் எனக்காக ஒரு பார்ட் டைம் ஜாப் ரெடி செய்துகிட்டேன். இது முழுக்க முழுக்க என்னோட முடிவு.. இதில் அவருக்கு எந்த சம்மந்தமும் இல்லை” தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக கூறினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு முகிலனுக்கு சுர்ரென்று வலித்தது. உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பது போல அமைதியாக இருந்தான். திருமணமான முதல்நாளே அவன் பேசிய பேச்சு அவளை இந்த அளவிற்கு பாதிக்கும் என்று அறியாத காரணத்தினால் மனதளவில் அடி வாங்கினான்.

 “இதுக்குமேல் உங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு என்ன செய்ய தோணுதோ அதை செய்ங்க.” என்றவர் எழுந்து அறைக்குள் சென்று மறைந்தார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் மற்றவர்கள் அங்கிருந்து செல்ல, “ஸாரிங்க. நான் வேலைக்குப்போகும் விஷயம் உங்களுக்கு தெரியும்னு சொன்னால் இன்னும் அதிகமாக உங்களுக்கு திட்டு விழுகும். இதே தெரியாது என்றால் என்னோடு போயிரும் இல்ல அதுதான் பொய் சொன்னேன். சரி நான் கிளம்பறேன்” அங்கிருந்து செல்ல நினைத்தவளின் கரம்பிடித்து தடுத்தவனை கேள்வியாக நோக்கினாள் சிற்பிகா.

அவளின் முகத்தில் பார்வையைப் படரவிட்டு, “சீக்கிரம் வந்துவிடு. மதியம் ராகுலோட அம்மா வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க” என்றவனின் குரலில் இருந்தது என்னவென்று புரியாமல் தடுமாறியவள் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முதல்நாள் மருத்துவமனையில் மற்றவர்களிடம் சொன்ன விஷயம் நினைவு வர, ‘விவாகரத்து வாங்கியே தீருவேன்னு சொன்னேன். ஆனால் இப்போ அது முடியும்னு தோணல. இந்த மனசு முழுக்க நீ மட்டும்தான்டி இருக்கிற இம்சை’ மனதினுள் சொல்லிக் கொண்டான்.

மதியம் எப்.எம். ஸ்டேசனில் வேலையை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்ப, “இத்தனை நாள்தான் கல்யாணம் ஆகாமல் குடிச்சிட்டு சுத்திட்டு இருந்தே. இப்போ உன்னை நம்பி வீட்டில் ஒருத்தி இருப்பதை நினைத்திருக்கலாம் இல்ல தம்பி” ஆதங்கத்துடன் ஒலித்த அவரின் குரல்கேட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

வீட்டில் இருந்த மற்றவர்கள் அமைதியாக இருப்பதைக் கவனித்த சிற்பிகாவின் பார்வை சோபாவில் அமர்ந்திருந்த ராகுலின் தாயாரின் மீது படிந்தது. மெரூன் கலர் பூனம் சேலையில் ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு புருவம் சுருக்கி யோசித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளைக் கண்ட மகேஸ்வரி, “இவதான் என்னோட மருமகள் சிற்பிகா” என்று சந்திராவிற்கு அறிமுகம் செய்ய மரியாதை நிமிர்த்தமாக கை குவித்து வணக்கம் கூறிவிட்டு அங்கேயே நின்றாள்.

“நேற்று நீ பேசியதைப் பற்றி ராகுல் என்னிடம் சொன்னான். நிஜத்திலேயே அந்த வலியை அனுபவிச்சவங்களுக்கு தான் காயத்தோட வீரியம் புரியும். நீ பேசியதில் தவறே இல்லம்மா..” என்று மனம் திறந்து பாராட்டினார்.

அவள் சிரிப்புடன் தலையசைக்க, “ரொம்ப அருமையான பெண்ணை மருமகளாக தேர்ந்தெடுத்து இருக்கீங்க” என்று சொல்ல குடும்பத்தினரின் மரியாதையான பார்வை அவளின் மீது படிந்து மீண்டது.

“அத்தை நான் முகம் அலம்பிட்டு வருகிறேன்” அறைக்குள் சென்ற சிற்பிகா தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள்.

சந்திராவின் முகம் வெகு பரீட்சயமான முகமாக தோன்றவே, ‘இவங்கள எங்கேயோ பார்த்த ஞாபகம்..’ என்ற யோசனையுடன் தாயின் புகைப்படம் கண்டவுடன் சட்டென்று அவரின் இளவயது முகம் சிற்பிகாவிற்கு ஞாபகம் வந்தது.

அன்று யாருமற்ற நிலையில் கண்ணீரோடு ஒரு கையில் மகளையும், மறுகரங்களில் மகனையும் பற்றி நின்றிருந்த நிலை நினைத்தபோது அவளின் மனம் வலித்தது. தற்போது அவர்கள் இருக்கும் நிலையை எண்ணி சந்தோசமடைந்த பெண்ணவள் எழுந்து முகம் அலம்பிவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவள் அறையைவிட்டு வெளியேற நினைக்கும்போது, “சிற்பிகா” என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்த சந்திரா அங்கே மாட்டியிருந்த தாயின் புகைப்படம் கண்டு அதிர்ந்தார்.

அவளோ பதில் பேசாமல் அமைதியாக இருக்க, “இவங்க.. உன்னோட அம்மாவா?” திக்கி திணறியபடி கேட்கும்போது அறைக்குள் நுழைந்தான் முகிலன்.

இரண்டு பேரின் முகமும் சரியில்லை என்று உணர்ந்த முகிலன், “சிற்பிகாவோட அம்மாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்ற கேள்வியுடன் அவரை ஏறிட்டான்.

சிற்பிகா மௌனமாகவே இருக்க, “நான் யாருன்னு உனக்கு நல்லா தெரியும் இல்ல?!” அவரின் கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்த மனைவியை புரியாத பார்வை பார்த்தான்.

“அப்புறம் ஏன் என்னிடம் பேசாமல் தயங்கி விலகி போறம்மா? இங்கே வந்தபிறகுதான் உங்கம்மா இப்போ உயிருடன் இல்லை என்ற விஷயமே எனக்கு தெரியும். அதே நேரத்தில் நீ வேலைக்குப் போகும் விஷயமும் தெரிந்தது. உனக்கு உரிமையான வீட்டை வந்து கேட்டால் நான் எழுதி தர மாட்டேன்னு நினைச்சிட்டியா?” அவரின் கேள்வியில் திடுக்கிட்டு போனான் முகிலன்.

எந்தவிதமான உணர்வுகளையும் வெளியே காட்டாமல், “அம்மா உங்கப் பேரில் எழுதி வைத்ததை நான் கேட்டு வருவேன்னு எப்படி நீங்க நினைக்கலாம். எங்கப்பா செய்தது ஒரு தவறால் எந்த பாவமும் அறியாத உங்க கணவரோட உயிர் போயிடுச்சு. அன்னைக்கு நீங்க இருந்த நிலையில் எங்களிடம் இருந்தது அந்த வீடுதான்.” சற்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அந்த வீட்டை உங்க பெயரில் எழுதி வைத்தது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. இன்னைக்கு எந்தவிதமான கழிவிரக்கமும் இல்லாமல் தைரியமாக நான் உங்க முன்னாடி நிற்க எங்கம்மா தான் காரணம். எங்கம்மா எந்தவொரு செயல் செய்தாலும் அதில் ஒரு நியாயமிருக்கும் என்று நான் முழுவதுமாக நம்பறேன்” என்றவளின் பார்வை தாயின் புகைப்படத்தின் மீதே நிலைத்தது.

அவள் சொன்ன அனைத்தையும் கேட்ட முகிலனுக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், இருவரும் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல் குழப்பத்துடன் நின்றிருக்க, “இன்னைக்கு நீ வேலைக்குப் போக நான்தானே காரணம்..” அவரின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள்.

“எங்கம்மா யாருக்கும் பாரமாக இருக்காமல் உழைத்து சாப்பிட கத்து கொடுத்து இருக்காங்க. அதே நேரத்தில் கொடுத்ததை திரும்ப கேட்டு வரும் அளவிற்கு நான் இன்னும் தரம்தாழ்ந்து போகலம்மா. பாதிப்பட்ட நீங்க இன்னைக்கு நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்க மனசுக்கு நிறைவாக இருக்கு” பட்டென்று சொல்லிவிட கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார் சந்திரா.

அவர் அங்கிருந்து நகர்ந்தவுடன் அறைக்குள் நுழைந்த முகிலன், “உனக்கும், ராகுல் அம்மாவிற்கு என்ன சம்மதம்?” சிந்தனை படர்ந்த முகத்துடன் அவளிடம் கேட்டான்.

சிறிதுநேரம் பதில் பேசாமல் நின்றவள், “இந்த நாடகக்காரி பேச்செல்லாம் உங்களுக்கு புரியாதுங்க. உங்களோட எல்லை எதுவோ அங்கேயே நில்லுங்க. அதை தாண்டி நீங்களும் வராதீங்க. நானும் வர மாட்டேன்” கடந்த காலத்தை சொல்ல மறுத்துவிட்டு விலகி செல்ல நினைத்தாள்.

வலது கையால் அவளை பிடித்து இழுத்து சுவரோடு சேர்த்து நிற்க வைத்து, “ஏண்டி திமிர் பிடித்தவளே.. ஒரு வார்த்தைக்கூட உன்னைப் பற்றி நான் தெரிஞ்சிக்க கூடாதா? அந்தளவு நான் உனக்கு வேண்டாதவனா?” முகிலன் அவளை நெருங்கி நின்றான்.

அவன் முகம் பார்க்க மறுத்தவளின் முகவாயைப் பற்றி தன்பக்கம் திருப்பியவன், “என்னை மனுஷனாக கூட மதிச்சு உன் விஷயத்தை என்னிடம் சொல்லக் கூடாதா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள்.

“நீ என்னை மனுஷியாக இதுவரை மதித்து இருக்கிறாயா? நான் வேண்டாதவள் தானே அப்படியே இருந்துட்டு போறேன் விலகி நில்லுங்க” அவனிடமிருந்து நகர போராடினாள்.

ஒரு கையால் இலகுவாக அவளை சமாளித்த முகிலன் அவளின் இதழில் தன் உதடுகளைப் பொருத்தி முத்தமிட அதிர்ச்சியில் அசைவற்றுப் போனாள் பெண்ணவள். அவளின் இதழை மென்மையாக கையாண்ட முகிலனின் பிடி சற்றே தளர்ந்தது.

மெல்ல அவளின் இதழில் ஒரு கவிதை வரைந்துவிட்டு மூச்சு முட்டும் வேளையில் உதடுகளை பிரித்தெடுத்து அவளின் முகம் பார்த்தான். முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை உணர்ந்த பெண்ணின் உடல் நடுங்க, விழிகள் இரண்டையும் இறுக மூடிக்கொண்டு அவனின் பனியனை கெட்டியாக பிடித்திருந்தாள்.

‘உனக்கிருக்கும் நெஞ்சழுத்தம் வேற யாருக்கும் இருக்காது. உன்னைப்பற்றி என்னிடமே சொல்ல மறுக்கிறாயா? ம்ஹும் சீக்கிரமே என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கிறேன் பாரு..’ மனதினுள் நினைத்தவன், “சிற்பி” என்றதும் விழி திறந்து நெருக்கமாக நின்றிருந்த அவன் முகத்தை நோக்கினாள்.

“எனக்கு எதுக்குடா முத்தம் கொடுத்த?” என்றவள் கோபமாக வினாவிட,

“ம்ஹும் நீ இப்படி கேட்பேன்னு தான்” சிரித்தபடி அவளைவிட்டு விலகினான்.

அவனின் திடீர் முத்தத்தில் தடுமாறிப் போன சிற்பிகா அவன் விலகலை உணராமல் சிலநொடி சிலையென உறைந்து நின்றாள். படிக்கும் பெண்ணின் மனதைச் சலனப்படுத்திவிட கூடாதென்ற எண்ணம் அனைத்தும் காற்றில் கரைந்த கற்பூரமாக மாறிப் போனது.

கணவனும், மனைவியும் வெளியே வரும் வரை சோபாவில் அமர்ந்து அவர்களுக்காக காத்திருந்த சந்திரா, “சரி நாங்க கிளம்பறோம்” என்று அவர்களிடம் விடைபெற்று கிளம்பினார்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கைக்கட்டி பறந்தது. ஒரு மாதத்தில் முகிலனின் கைகட்டு பிரிக்கப்பட்டு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தெரிந்ததும் சதாசிவம் – மகேஸ்வரி, நிரஞ்சன் – மிருதுளா நால்வரும் ஊருக்குக் கிளம்பி சென்றனர்.

அவர்கள் சென்றபிறகு மீண்டும் முகிலன் வேலைக்குச் செல்ல தொடங்கியதும் அவனின் தனியறையில் தாங்கிக்கொள்ள பழையபடி தனித்துவிடப்பட்டாள் சிற்பிகா.

மற்ற பெண்களைப் போல இல்லாமல் தைரியமான வலம்வரும் அவளை முகிலனுக்கு பிடித்திருந்தது. அன்று மாலை வழக்கம்போல அவன் வீடு வந்து சேரவும், மழை வரவும் சரியாக இருந்தது.

அவன் வீட்டிற்குள் நுழையும்போது தன்னவள் இருந்த அறையை நோட்டம்விட்டபடி வேகமாக மாடியேறி சென்று உடையை மாற்றிக்கொண்டு வெளியே வரும்போது, அலைபாயுதே படத்தில் சுவர்ணலதா பாடிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் மாடியிலிருந்து ஒலித்தது.

அந்த பாடலைக் கேட்டதும், “கொட்டும் மழையில் என்ன செஞ்சிட்டு இருக்கிறா?” என்ற சிந்தனையுடன் வேகமாக மாடிக்கு சென்றான்.

மாடிப்படியின் கடைசியில் போனை வைத்துவிட்டு கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நின்றிருக்க, “இவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு” என்று அவளை நெருங்க சிற்பிகாவின் மனமோ பாடலில் தன்னையே மறந்திருந்தது.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

 

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

அவளை நெருங்கிய முகிலன் அப்போதுதான் பாடலின் வரியைக் கவனித்தவனின் பார்வை சிற்பிகாவின் மீதே நிலைத்தது. அவளின் விசும்பும் ஒலிகேட்டு அவளின் பளிங்கு முகத்தை கையில் ஏந்தியபோது சிற்பிகாவின் கண்ணீர் துளி அவனின் கைகளில் பட்டுத் தெரித்தது.

அன்று அவள் சொன்னது இன்று அவன் நினைவிற்கு வரவே, “மழை வரும் நேரத்தில் அழுதல் கண்ணீர் யாருக்கும் தெரியாதுன்னு உங்கம்மா சொல்லி தந்தாங்களா?” என்றதும் அவனின் கையைத் தட்டிவிட்டு விறுவிறுவென்று நடந்தவள் போனை எடுத்துக்கொண்டு வேகமாக கீழிறங்கி சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!