மாறா காதலுடன் 3

Mk-376f882b

“சப்பாாா… முடியலை மச்சான் ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ண எவ்வளோ ப்ரோசிஜர் ஒரு மாசமா ஒடி ஒடி இன்றைக்கு தான் முடிஞ்சது” என்று சத்ரேஷ் நண்பன் கௌதம் சொல்ல, 

“ஹலோ கூட ஒப்புக்கு தான் நீ வந்த எல்லா வேலையும் பண்ண மாதிரி சொல்ற. பண்ண நானே இவ்வளவு சோர்ந்து போகலை. பின்ன ஈசியாவா இருக்கும்… இதைவிட இனி நம்ம உழைப்பு ரொம்ப முக்கியம் மாமா அப்ப தான் முன்னேற முடியும்” என “வேலைனு வந்துட்டா இந்த கௌதம் எப்படி னு நீ பார்த்தது இல்லை தானே பார்ப்ப இனி. அதுக்கு முன்ன வாடா கொஞ்சம் பொருள் வாங்கனும். வாங்காமல் போனேன் எங்க வீட்டில் சாப்பாடே போட மாட்டாங்க” என்று இருவரும் பல்பொருள் அங்காடி வர, 

அங்கு கல்லுரியில் “நாளைக்கு நம்ம காலேஜில் வெர்க்சாப் பண்ண போறாங்க… இது நேற்று வரை ஒரு தனியார் கல்லூரி தான் பண்றதா இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன ஆச்சுனு தெரியலை. நம்ம காலேஜ் க்கு இந்த வாய்ப்பு வந்து இருக்கு. நேரம் ரொம்ப குறைவு தான் சிரமம் பார்க்காமல் எல்லாரும் ஒன்றாக அதுக்கான வேலையை பாருங்க” என்று கல்லூரி முதல்வர் அறிவித்து செல்ல, அனைவருக்கும் வேலைகள் பிரித்து கொடுக்க, வெளியே சென்று தேவையான சில பொருட்களை வாங்கி வர ஆத்ரேயா அதே பல்பொருள் அங்காடிக்கு வந்தாள். 

பொருட்களை வாங்கி கொண்டு பார்க்கிங் யில் இருந்து ரிவர்ஸில் வர, பின்னே வந்த காரை கவனிக்காமல் மோதி ‘அம்மாாாா’ என்று கீழே சரிந்தாள். 

“இடியட்” என்று காரில் இருந்து வேகமாக இறங்கினான் சத்ரேஷ். காரை ஓட்டிய கௌதம் ‘அய்யோ!!! கொலை கேசு எதுவும் ஆகிடுமோ’ என்று பயத்துடன் இறங்கினான். 

அப்பெண்ணை நெருங்கியதும் அவளை பார்த்த சத்ரேஷ் இன்பமாக அதிர்ந்து, தன் அதிர்வை மறைத்து கொண்டு “ஹலோ!! ” என்று மென்மையாக அழைக்க, 

கீழே விழுந்ததில் கையில் சில சிராய்ப்புகள் எரிச்சலை தர, இதில் சத்ரேஷ் பேசியதில் கடுப்பு அவன் மீது திரும்பி “கீழே விழுந்து கிடக்கிறேன் இப்ப இந்த நல விசாரிப்பு ரொம்ப முக்கியமா… யோவ் வந்து கையை கொடு” என்று கடுகடுப்பாக மொழிய, 

‘என்ன’ என்று புரியாமல் சத்ரேஷ் அவளை பார்க்க, கௌதம் தன் நண்பன் அசிங்கப்படுவதை கண்டு வந்த சிரிப்பை வாய்க்குள் மறைத்துக் கொள்ள, 

சத்ரேஷ் சிலையாக நிற்பதை கண்ட ஆது ‘அட ச்சை’ என்று பக்கத்தில் இருந்த கௌதமை பார்த்து “ஹலோ பாய் கொஞ்சம் மேல இருக்கிற வண்டியை மட்டுமாவது எடுக்க உதவுங்களேன். கால் வண்டியில் மாட்டிட்டு இருக்கு” என்று வலியை பொறுத்து கொண்டு சொல்ல, 

“சாரி மா சாரி… நான் கவனிக்காமல் இடிச்சிட்டேன்” என்று வண்டியை மெதுவாக எடுத்து விட்டு அவளுக்கு உதவ கையை கொடுக்க, அந்த கையை தட்டி விட்டு சத்ரேஷ் தன் கையை நீட்டினான். அதை கண்ட கௌதம் ‘இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல’ என்று முணுமுணுத்து கொண்டு நகர, 

சத்ரேஷ் நீட்டிய கையை பிடித்து கொண்டு எழுந்தவளின் கால் சுருக் என்று வலிக்க, அதை முகத்தில் காட்டாமல் எழுந்து நின்றாள். கௌதம் “ஊருக்கு புதுசா தங்கச்சி. இதுக்கு முன்ன பார்த்தது இல்லையே” என

“ஆமாம் பாய்… இங்க பக்கத்தில் எதாவது ஹாஸ்பிடல் இருக்கா” என்ற ஆதுவின் கண்களை பார்த்த சத்ரேஷ் என்ன நினைத்தானோ “மாமா பக்கத்தில் இருக்கிற கிளினிக் க்கு இவங்க வண்டியை எடுத்துகிட்டு வா. இவங்களை நான் காரில் கூட்டிட்டு வரேன்” என, அதுவும் கௌதமிற்கு சரியாக பட, “சரி மச்சி” என்க, 

“ஹலோ…. நான் உங்க கிட்ட உதவி பண்ணுங்கனு கேட்டேனா… இல்ல எனக்கு உதவி பண்ண நீங்க எல்லாம் யாரு எனக்கு. உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு போங்க. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று சத்ரேஷ் கையில் இருந்த தன் கையை எடுத்து கொண்டு மெதுவாக வலிக்கும் காலை நகர்த்தி கொண்டு வண்டியை எடுத்தாள். 

கௌதம் “உதவு தானே பண்ண நினைச்சோம். அதுக்கு எதுக்கு இப்படி கத்திட்டு போறாங்கனு புரியலையே. விடு மச்சான் சின்ன அடி தான் போல” என்று பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் சொல்ல, 

“இல்லடா அவங்க காலில் எதோ பண்ணுது. வலி அவங்க கண்ணில் இருக்கு. பாரு போகும் போது கூட காலை எடுத்து வைக்க முடியாமல் நடந்தாங்க. வா நான் காரை ஓட்டுறேன்” என்று காரில் ஏறியவன் அவள் வண்டியை பின் தொடர்ந்தான். ‘ஏது காரை நீ ஒட்டுறீயா’ என்று ஆச்சரியமாக அவனை பார்த்தவன் மேலும் அதிர்ந்து தான் போனான் அப்பெண்ணின் ஸ்கூட்டியை பின் தொடர்ந்ததில். 

ஆத்ரேயா மருத்துவமனையில் இருந்து தான் தங்கி இருக்கும் வீட்டை அடையும் வரை பொறுமையாக அவளை பின் தொடர்ந்தவனை கண்ட கௌதம் “மச்சி இப்ப எதுக்கு ஹச் டாக் மாதிரி அந்த பெண் பின்னாடியே போறனு நான் தெரிந்துக் கொள்ளலாமா” என்று வெகு தீவிரமாக கேட்க, 

“நம்ம எங்கடா அவங்களை பாலோ பண்றோம். லூசு கண்ணை திறந்து பாரு நம்ம வீட்டுக்கு பக்கத்து தெருவில் இருக்கோம். எப்பவும் வர வழியில் வராமல் இன்றைக்கு இந்த பக்கமா வந்தோம்” என்று சாலையில் கவனமாக இருப்பது போல் பக்கத்து தெருவில் இருந்த வீட்டில் ஆது நுழைவதை கண்டு கொண்ட பின் தான் வண்டி வேகம் எடுத்தது. 

வீட்டின் முன் நிறுத்தி “வாடா மாமா மதியம் ஆகிடுச்சு சாப்பிட்டு போவ” என்க “இல்ல மச்சி அம்மா ஈவினிங் வெளியே போகனும்னு சொன்னாங்க. இப்ப போனா தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போக முடியும். வரேன் டா” என்று கிளம்பி விட்டான். 

ஏகாந்த இரவு, முழு நிலவு தன் குளுமையை பூமியில் பரப்பி விட்டு இருக்க, ஆத்ரேயா இலக்கில்லாமல் வெறித்து கொண்டு இருந்தாள். அவள் காதில் ‘திரும்ப உன்னை வண்டியில் பார்த்தேன் காலை ஓடச்சிடுவேன்’ என்று காரமாக மொழியும் ஆணின் குரல் கேட்க “ஸ்டே ஸ்ட்ராங் ஆது….. ஸ்டே ஸ்ட்ராங்” என்று முணுமுணுக்க, அவளின் நிலையை கலைத்தது அவளின் கைபேசி. 

“சொல்லு மோனல்… என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க” என்றதும் எதிர் பக்கம் விசும்பலுடன் அழுக்குரல் கேட்க, 

“மோனல் என்ன ஆச்சு அழாமல் சொல்லுமா” என்ற மறுநொடி நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, “மோனல் குட்டி எவ்வளவு ஸ்டாங் இதுக்கு எல்லாம் அழலாமா… நீ நாளைக்கே டி. சி வாங்கிட்டு இங்க வா” என்றாள். 

“தாங்ஸ் தீதி…. லவ் யூ வீட்டில் யார் கிட்டவும் சொல்லாதீங்க” என்று சில நிமிடம் பேசி விட்டு வைத்தாள். அடுத்த சில நாட்களில் மோனலை அவள் வேலை செய்யும் கல்லூரியில் சேர்த்து விட்டாள். அர்ச்சனா படிக்கும் படிப்பை தானே மோனல் படிக்கிறாள். இருவரும் சில நிமிடத்திலே நட்பாகி விட்டனர். 

காலை, உணவருந்த அனைவரும் மேஜையில் அமர்ந்து இருக்க மாடியில் இருந்து இறங்கி அர்ச்சனா பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஒரே நேரத்தில் இருபது பேர் அமர கூடிய பெரிய மேஜை. பின்னே வந்த கயலை காவேரி பிடித்து சத்ரேஷ் பக்கத்தில் அமர வைத்தார். 

சுடச்சுட பூரி பரிமாற பேச்சோடு பேச்சாக பூரி காலியாக அர்ச்சனா கல்லூரிக்கு நேரமாவதால் பக்கத்தில் இருந்த தமையன் தட்டில் இருந்து ஒரு பூரியை எடுத்து வாயில் போட, அதை கண்ட சத்ரேஷ் “இடியட்!! தட்ஸ் மைன்” என்று அதட்ட, ஈஈஈ என்று இளித்து வைத்தாள். 

அதற்கு மேல் ஒரு வாய் கூட இறங்கவில்லை. தட்டில் கையை கழுவி விட்டு சென்றுவிட்டான். குடும்பமே ஒன்றாக அவளை முறைக்க ‘சாரி’ என்று கல்லூரி கிளம்பி விட்டாள். 

கோகிலா “இவனை நினைச்சா பயமா இருக்கு அத்தை. சின்னதுல இருந்தே இவன் கிட்ட மாற்ற முடியாத ஒரே கெட்ட பழக்கம். அவனுடைய எந்த பொருளையும் விட்டே கொடுக்க மாட்டன்றான். இப்ப வரை இப்படியே இருந்தா எப்படி. தங்கச்சி மேல உசுரா இருக்கான் ஆனால் அவளிடம் கூட பகிர மனசு வரலை. எப்படி நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்ட பகிர்ந்து வாழ்வான்” என்று கவலையாக சொல்ல, 

பேச்சியம்மாள் “நல்லதே நினை. நம்ம கயல் மாற்றுவா இவனை” என்று இவன் மாற்றம் காண நினைப்பவர்களுக்கு தெரியவில்லை மாறிய பின் இவன் ஆடும் ஆட்டத்தை தாங்க முடியாது என்று. 

ஊரே ஒன்று கூடி இருந்தது. ஊரில் இருக்கிற நண்டு பொடிசு முதல் தடியின் உதவியால் நடக்கும் பெரியவர்கள் வரை ஒன்றாக இருக்க காரணம் ஊர் எல்லை தெய்வமான பேச்சியம்மன் கோவிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்துவது பெற்றிய ஆலோசனை கூட்டம் தான். 

விடுமுறை தினம் என்பதால் மோனல் மற்றும் ஆது புதிதாக வந்த படத்தை பார்த்து கொண்டு இருந்த சமயம் அர்ச்சனா மோனலுக்கு போன் செய்து கூட்டத்தை பற்றி சொல்ல அங்கு செல்லும் ஆர்வம் வந்தது மோனலுக்கு. உடனே “தீதி அங்க எதோ கூட்டம் நடக்கிறதாம் அச்சு போன் பண்ண எனக்கு பார்க்கனும் போல இருக்கு. ப்ளீஸ் போகலாமா” என்று கண்களில் ஆசையுடன் கேட்க, 

ஆத்ரேயா “குட்டி நமக்கு அங்க ஒரு வேலையும் இல்லையே. எங்க போய் என்ன பண்றது நமக்கு இங்க யாரையும் தெரியாதே” என “என் ப்ரெண்ட் அச்சு அவ குடும்பத்தோட அங்க தான் இருக்கா. நான் இதை எல்லாம் பார்த்ததே இல்லை ப்ளீஸ்” என “சரி போகலாம். போய் ரெடி ஆகிட்டு வா” என்றதும் இருவரும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். 

அனைவரும் இருவரையும் தான் வித்தியாசமாக பார்த்தனர். மோனல் அர்ச்சனாவை அந்த கூட்டத்தில் தேடி கண்டுகொண்டு அங்கே அழைத்து சென்றாள். 

ஊரின் பெரிய தலை கட்டுகள் மேகநாதனிடம் “ஐயா நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம்னு” என்று பனிவாக கேட்க, 

அவரோ தொண்டையை சரி செய்து “நம்ம ஊரின் எல்லை தெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு பண்ணி பல வருடங்கள் ஆகிடுச்சு. அதுவும் இல்லாமல் நிறைய சேதங்கள் வேற இருக்கு. நம்ம தெய்வத்தை நம்ம தானே பார்த்துக்கனும். அதனால ஊர் மக்கள் கிட்ட நன்கொடை கேட்கலாம் என்பது என் விருப்பம்” என்றதும், 

கூட்டத்தில் ஒருவர் “அதற்கு என்ன கொடுத்திடலாம் தலைவரே நீங்க மேல சொல்லுங்க” என்றதும் மீசையை முறுக்கி கொண்டு “ஒவ்வொரு வீட்டிலும் உங்களால் கொடுக்க முடிந்த தொகையை கொடுங்கள். மீதியை என் குடும்பத்தார் கொடுப்பாங்க” என்று சொல்லி முடிக்கும் முன், 

“உங்க குடும்பம் கொடுக்கிறது இருக்கட்டும் முதலில் கோவிலை சீரமைக்க எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள்” என்று கூட்டத்தில் இருந்த ஆத்ரேயா கேட்க, அனைவரும் அவளை யாரு இது என்று பார்த்தனர். 

“ஏ.. பொண்ணே பிழைக்க வந்த உனக்கு எங்க ஊர் வழக்கம் தெரியாது. தலைவர் சொல்றது சரியா தான் இருக்கும். சத்த சும்மா இருக்கு” என்று ஒரு பெரியவர் எரிந்து விழ, 

“அது எப்படி சரியா இருக்கும். நீங்களும் கேள்வி கேட்க மாட்டிங்க நானும் கேட்க கூடாதா. பொது இடத்தில் நடக்கிற எந்த விஷயத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் கேள்வி கேட்கலாம்” என்ற ஆதுவை அர்ச்சனா கையை பிடித்து “மேம் ப்ளீஸ் சண்ட வேண்டாம்” என்றதை கவனிக்க தான் நேரம் இல்லை. 

ஆண்களே அமைதியாக இருக்க ஒரு பெண் கேள்வி கேட்பதில் கோபம் கொண்ட மேகநாதன் “இங்க பாருங்க உங்க மத சிந்தனையை இங்க கொண்டு வராதீங்க. எங்களுக்கு தெரியும் என்ன செய்யனும் என்று” என்று உரக்க சொல்ல, 

“மத சிந்தனையா…. கேள்வி கேட்கிறது மத சிந்தனையா சார். எனக்கு தெரியாம போச்சு. நீங்க எதுவா வேண்டுமானால் நினைச்சுக்காங்க நான் கேட்பேன். உங்கள் கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்குமா குறைந்தபட்சம் ஒரு குடும்பம் ஐநூறு ரூபாய் கொடுத்தா கூட பத்து லட்சம் வரும். கண்டிப்பா முக்கால்வாசி குடும்பத்தில் அண்ணன் தம்பி சண்டை இருக்கும். நீ பெரியவனா நான் பெரியவனானு போட்டி போட்டு காசை கூட்டி தான் கொடுப்பாங்க. 

ஊரில் பெரிய நல்ல வசதியா இருக்கிற குடும்பம் குறைந்தது நூறு கிட்ட இருக்கும் அவங்க எல்லாம் பெரிய தொகையை தான் கொடுப்பாங்க. சாமிக்குனு சொன்னா அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இருக்கிற காசை கூட அள்ளி கொடுப்பாங்க. இதை எல்லாம் கூட்டி பார்த்தா பத்து லட்சம் மேல தான் வரும். 

கோவில் அவ்வளவு பெரியது கூட இல்லை. மொத்த செலவும் ஐந்து லட்சம் உள்ள தான் ஆகும். நீங்களே சொல்லுங்க மிச்சம் பணம் இருந்தால் தரவா போறீங்க ” என்றாள். 

கார்த்திக், அந்த ஊரின் இளவட்டங்களின் தலைவன். “ஐயா இந்த பொண்ணு சொல்றதும் சரியா தான் இருக்கு. நம்ம முதலில் எவ்வளவு ஆகும்னு பார்க்கலாம்” என்று அவரிடம் பதில் மொழியை கூட எதிர் பார்க்காமல் தனக்கு தெரிந்த இஞ்சினியர் ஒருவரை அழைத்து வந்தான். 

சில நிமிடத்தில் கோவிலை சோதித்து விட்டு அவர் “சேதம் பெருசா இல்லைங்க ஐயா. மொத்தமா இரண்டு லட்சம் ஆகும்” என்றான். 

மேகநாதன் ஏக கடுப்பில் இருந்தார். அவரின் வார்த்தை முதல்முறையாக மீறப்பட்டு இருந்ததை கண்டு ஆத்ரேயா மீது கடும் குரோதம் கொண்டார். தன்னை நிலைப்படுத்தி கொண்டு “சரி கோவில் சீரமைக்க இரண்டு லட்சம் போதும் குடமுழுக்கு விழாவிற்கு மூன்று லட்சம் கிட்ட கண்டிப்பாக ஆகும். அதனால் குடும்பத்திற்கு நானூறு ரூபாய் வசூல் செய்தால் போதும்” என்றார். அனைவரும் சரி என்று ஒப்புக் கொண்டனர். 

கூட்டத்தின் நடுவே இருந்த ஆத்ரேயா “நானும் என் சார்பாக கொடுக்கனும்ல. இந்தாங்க காசு” என்று நன்கொடை வசூலிக்க நால்வர் அமர்ந்து இருக்கும் இடத்தில் சென்று கொடுக்க, 

ஒருவன் சிறு சிரிப்புடன் “மேடம் பெயர் என்ன” என்றதும், சற்று உரக்க “ஆத்ரேயா அஹ்மத்” என அப்போது தான் தன் வண்டியை விட்டு கூட்டத்தை நோக்கி வந்த சத்ரேஷ் காதில் அவள் பெயர் கேட்டது. 

‘ஆத்ரேயா அஹ்மத்…… அஹ்மத் செட் ஆகலையே என்ன செய்யலாம் ம்ம்ம் ஆத்ரேயா சத்ரேஷ் னு மாற்றிடலாமா’ என்று மெலிதாக முணுமுணுக்க, அதை பக்கத்தில் நடந்து வரும் கௌதம் கேட்டு “உங்க பெரியப்பா இரண்டு பெயரையும் இல்லாமல் பண்ணிடுவார் அப்ப செட் ஆகும் பாரு” என்று அவன் காதில் சொல்ல ஏகத்துக்கு முறைத்தான். 

“நீ முடு உன் வாயை. என்ன செய்யனும்னு எனக்கு தெரியும்” என்றவன் செய்கையில் தான் மெதுவாக அரங்கேற வேண்டிய அவனது நிச்சயத்திட்டம் வெகு சீக்கிரத்தில் நடத்த அவன் குடும்பம் உறுதியாக இருந்தது. அப்படி அவன் செய்த செயல் தான் என்ன?