மின்னல் ஒரு கோடி

அத்தியாயம் 1

ஜோசப் குடும்ப வரலாறு… எந்தன் உயிர் தேடி வந்ததே படிக்கமால் நேரடியாக இந்த கதை படிப்பவர்களுக்கான முன்னுரை…

ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டுகளில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து, ஆங்கிலேயர் குற்றப் பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி அம்மக்களை கொடுமைப் படுத்தி வந்தனர்.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் இந்த ஜோசப் குடும்பத்தின் அதாவது, இந்த ஐவரின் தந்தைமார்களின் தாத்தா வேலுச்சாமியும் ஒருத்தர்.

அவர்கள் அனுபவிக்கும் கொடுமையைத் தாங்க முடியாமல் ஜார்ஜ் ஜோசப் என்ற வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து, பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டார்.

அதில் வேலுச்சாமியின் தந்தையையும் ஒரு பொய் வழக்கிலிருந்து காப்பாற்றினார். அதில் அவரின்பால் கவரப்பட்ட வேலுச்சாமி படித்து பட்டம்பெற்று வழக்குரைஞர் ஆனார். ஜார்ஜ் ஜோசப்பின் மீது கொண்டிருந்த அளவுக்கடந்த அன்பினால் தன் பெயருக்கு பின் வேலு ஜோசப் என்று சேர்த்துக்கொள்ள, அதுவே அவர்களது குடும்பத்தின் பின்பெயராக, அடையாளமாக மாறியது.

அவருக்கு ஒரே ஒரு பையன் திலகர் ஜோசப். அவரும் தன் தந்தையின் வழியிலே வழக்குரைஞர் பட்டம் பெற்று, தனது முயற்சியால் லா ஃபிர்ம் ஒன்றை ஆரம்பித்தார். அவர் ஸ்வப்னம் என்ற பஞ்சாபி பெண்னை மணம் புரிந்தார். அவர்களுக்கு தினகரன் ஜோசப், சுதாகரன் ஜோசப் என்ற உருவ ஒற்றுமையற்ற இரட்டை ஆண்பிள்ளைகள்.

சகோதரர்கள் இருவருமே தங்களது தந்தையின் அடியைப் பின்பற்றி வழக்குரைஞர் ஆகினர். இருவரும் தொட்டது அனைத்தும் வெற்றிப் பெற, தமிழகத்தின் சிறந்த அடையாளமாக மாறி விட்டனர். தங்களது லா ஃபிர்ம்மை இந்தியாவின் அடையாளமாக மாற்றினர்.

தினகரன் ஜோசப்கு அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்தவரது மகள் விஜயாவை பெற்றோர் மணமுடித்து வைத்தனர். தனது மாமியாருக்கு சிறிதும் குறையாத வகையில், அவரது பஞ்சாபி கோதுமை நிறத்தையே வந்து பாரு! என்று சொல்லும் அளவிற்கு இளமஞ்சள் நிறத்தில் இருந்தார். தினகரன் மற்றும் விஜயா தம்பதியினருக்கு இருவர். ஒருத்தன் ஆதித்யன் ஜோசப், இன்னொருத்தன் கணிதன் ஜோசப்.

தனக்கு சில நிமிடங்களே மூத்தவரான தினகரன் மணம் முடித்து இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் வரையிலே திருமணத்தில் சிறிதும் நாட்டமில்லாமல் தனது பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தார் சுதாகரன் ஜோசப்.

அவரது பேச்சிலர் வாழ்க்கையை முடித்து வைக்கவே மலையாளத் திரையுலகில் நுழைந்தார் பார்வதி நாயர். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்த பொழுது, அவருக்கு ஏற்பட்ட சில சட்ட சிக்கல்களை கலைய ஜோசப் பிரதர்ஸை தேடி வந்தார்.

சுதாகரனும் பார்வதி நாயரும் காதல் வயப்பட, சிக்கல்களை அவிழ்த்து விட்டு அவரைத் தன்னுடைய மனைவியாக கட்டிக் கொண்டார் சுதாகரன் ஜோசப்.

சுதாகரன், பார்வதி தம்பதியருக்கு முதலில் வீரேந்திர ஜோசப், விஜயயேந்திர ஜோசப் என்ற உருவ ஒற்றுமையற்ற ஒரு இரட்டையர்கள். தங்களது வம்சத்திலே பெண்ணே இல்லையே! ஒரு பெண்ணாச்சும் வேண்டுமென்று அடுத்து ஒரு குழந்தை பெற்க, அதுவும் ஆணாகி போய் விட அவன் பெயர் ரிஷிபன் ஜோசப்.

ஆகமொத்தம் ஜோசப் குடும்பத்தில் அடுத்த தலைமுறைக்கு ஐந்து ஆண்பிள்ளைகள்.

தினகரன் மற்றும் சுதாகரன் இப்பொழுது லா ஃபிர்ம்ல் இருக்கிறார்கள். தினகரனின் மனைவி விஜயா ஒரு தமிழாசிரியர். தமிழுக்கென்றே புகழ்பெற்ற ‘செந்தமிழ்’ என்னும் கல்லூரியை நடத்தி வருகிறார்.

சுதாகரனின் மனைவி பார்வதி நாயர் தற்பொழுது எதுவும் நடிக்கவில்லை என்றாலும், சில குறிப்பிடத் தகுந்த தயாரிப்பு நிறுவனங்களில் சைலண்ட் பார்ட்னராக பணிபுரிகிறார்.

மூத்தவனான ஆதித்யன் லண்டனில் சென்று லா முடித்திருக்கிறான். தற்பொழுது தமிழ்நாட்டின் தற்காலிக முதலமைச்சராக இருக்கிறான். வயது முப்பத்து மூன்று.

    கணிதன் புகழ்பெற்ற இஞ்சீனியரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறான்.

அடுத்தவன் வீரேந்திரன், தனது தாயின் வழியைப் பின்பற்றி அவனது தாய் வழி தாத்தாவின் இயக்கத்தில், ஒரு படம் நடித்திருக்கிறான். அது இன்னும் திரையிடப்படவில்லை. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை சென்று கொண்டிருக்கிறது.

விஜயேந்திரன் மதுரை சட்டக்கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுவிட்டு, சில வருடங்கள் இவர்களிடமே ஜூனியராக இருந்தான். அடுத்து லண்டனில் உள்ள லா ஸ்கூலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறான்.

ரிஷிபன் கடைக்குட்டி. மும்பையில் பாலிவுட்டின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சஞ்சய் மல்கோத்ராவிடம் உதவியாளராக பணிபுரிகிறான்.

 

இன்று…

 

            அடுத்து தான் என்ன செய்யவேண்டும்? இல்லை இதைப்பற்றி யாரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் புரியாமல் தன் கையிலிருந்த கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் இரண்டு கோடுகளையுடைய அந்த கருவியை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் சக்தி.

        திருமணமான ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்த்திருக்கும் ஒருநொடி. சில காலங்களுக்கு முன்பு இவளும் தானே இந்த இரண்டு கோடுகளுக்காக தவமிருந்தாள். அப்பொழுதெல்லாம் போக்கு காட்டிய இந்த இரண்டு கோடுகள் இப்பொழுது தானா வரவேண்டும். அதுவும் தன்னை மணந்தவனை வேண்டாம் என்று கைகழுவிவிட்டு தன்னை பெற்றவரையும் விலக்கிவைத்துவிட்டு தானே தனக்குதவி என்று பிரிந்து வந்த ஆறுமாதத்திற்கு பின்பா இது வரவேண்டும்?

           கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது? என் புருஷனும் நானும் ஆறு மாசமா பிரிஞ்சி இருக்கோம். ஆனால் நான் இப்ப இரண்டு மாசம் என்றா?

                  “ப்ளடி சீட் ###### ….” என்று எந்த பெண்ணும் தன் கணவனை பேச தயங்கும் வார்த்தைகளை கொண்டு சரமாரியாக திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள் சக்தி. இந்த வார்த்தைகளை மட்டும் அவள் கணவன் கேட்டிருந்தால் எப்படியும் இவளது கன்னம் பேந்திருப்பது உறுதி.

              “நம்ப வைச்சு கழுத்தறுத்துட்டான். இந்த நாயே திருப்பி நம்பி இருந்தேன்ல என் புத்தியை செருப்பாலயே அடிக்கனும். ” என்று தன்னையே திட்டியவள் அது போதாதென்று தன் இடக்கரம் கொண்டு தனது பால்நிற கொழுக்மொழுக் கன்னத்தில் அறைந்துக்கொண்டாள்.

இவள் சக்தி. ஐந்தரையடி உயரத்தில் கொழுக் மொழுக் என்று பால் வண்ண நிறத்தில் தன்னை பார்ப்பவரை குறைந்தது ஐந்து நொடிகளாவது இமை சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அளவிற்கு அழகுடையவள். அதுவும் அவளது கன்னக்குழி சிரிப்பிற்கு எதுவும் ஈடாகாது என்று பலபேர் சொல்ல கேட்டிருக்கிறாள்.

குணமோ தான் நினைத்ததை அடைந்தே தீரும் வைராக்கியமும் தன்னம்பிக்கையும் சில நேரங்களில் வெறியும் அளவுக்கதிகமாக கொண்ட பெண். தொழிலோ கிரிமினல் லாயர். புகழ்பெற்ற கிரிமினல் லாயரான தனது மாமனார் சுதாகரன் ஜோசப்பிடம் ஜூனியராக இருக்கிறாள். ஜோசப் லா ப்ரம்ஸ்ஸின் ஒன் ஆப் தி ஷேர் ஹோல்ட் மெம்பரும் கூட.

இந்த ஷேர் எப்படி வந்ததென்றால் அதாவது இவளுடைய கணவன் ஆதித்யன் ஜோசப் தன்னுடைய ஷேர் அனைத்தையும் இவளது பெயரில் மாற்றி விட்டான். அவ்வளவு காதலா என்றால் ஆம் ஒரு காலத்தில் கரை காணா காதலுடன் தான் இருவரும் தங்களுடைய வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது காதல் இருந்த இடத்தை இருவருக்கும் வெறுப்பும் கோவமும் தான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

இரண்டு கைகளையும் தலையில் வைத்து அழுத்தியவாறு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் சக்தி.

அவளது கைப்பேசியின் இன்னிசையில் தனது நினைவுகளில் இருந்து கலைந்தவள் யாரென்று எடுத்து பார்த்தாள். பகவதி காலிங் என்று காட்டியது. பகவதி இவளது நண்பன்  சுதாகரனிடம் இவனும் ஒரு ஜீனியர். ஒரளவிற்கு இருவரும் ஒரே எண்ணப்போக்குகளை பெற்றிருந்ததால் மிக குறுகிய காலத்திலே இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர்.

‘இந்த நாய் வேற… நேரம் காலம் தெரியாமல் கூப்பிட்டு கழுத்தறுக்கும். எடுக்காட்டியும் விட்டு தொலையாது பேய்…’ என்று அவனை மனதினுள் அர்சித்தவாறு அழைப்பை எடுத்து காதில் வைத்தாள் சக்தி.

அவள் பேசுவதற்கு நேரமே தராமல், “ஹே சக்தி. வேகமா எதாவது நியூஸ் சானல் வைச்சு பாரு லே… வேகமா…” என்று பிபி வந்த பன்னியாக பதற, அவனது பதற்றம் இவளையும் தொற்றிக்கொள்ள தொலைகாட்சியை இயக்கி ஒரு செய்தி அலைவரிசையை வைத்தாள்.

ஆதித்யனின் அதாவது அவளது கணவனது புகைப்படத்தை ஒரு புறம் ப்ளோ ஆப் செய்து போட்டு, மறுபுறம் அவன் சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் விடியோவை போட்டு கீழே பிளாஸ் நியூஸ்ஸில் தமிழகத்தின் அடுத்த முதல்வர்… தமிழகத்தின் மிக இளவயது முதலமைச்சர் என்று ஒடிக்கொண்டிருக்க அதை பார்த்த சக்திக்கு என்ன ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் பே வென்று நின்றிருந்தாள்.

“ஹே சக்தி… ஹே சக்தி… பார்த்தீயா? நீ முதலமைச்சர் பொண்டாட்டி ஆகிட்ட…” என்று பகவதி மறுமுனையில் கத்த சுயநினைவிற்கு வந்தவள் மீண்டும் ஒரு முறை அந்த செய்தியை அழுத்தமாக பார்த்து விட்டு ,

“யாருக்கோ எதுவோ நடந்தா எனக்கு எதுக்கு லூசு தனமா போன் பண்ற? பொண்டாட்டி வப்பாட்டின்னு எதாவது பேசுன வாயை உடைச்சிருவேன் மூடிட்டு வை போனை. பரதேசி நாயே…” என்று தனது தோழனை திட்டிவிட்டு கைப்பேசியை அணைத்தவளுக்கு ஐயோடா என்றிருந்தது.

வெறும் எம்.ஏல்.ஏ வாக இருந்தப்பவே இவன் பந்தா தாங்க முடியாது. இப்ப சி.எம் மா எப்படி போய் இவங்கிட்ட இந்த விசயத்தை சொல்றது. முருகா!!!

 

அன்று…

05.02.1994

ரேடியோ, நாளிதழ்கள், வார இதழ்கள் அனைத்திலும் கடந்த மூன்று நாட்களாக ஒரே செய்தி. பகலில் உத்தமன் வேசமும் இரவில் ஐயோக்கியனுமாக திரிந்த ஆட்டோ பாலு கைது செய்யப்பட்டான். அவனுடன் நெருங்கிய உறவிலிருக்கும்  அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், சினிமா பிரபலங்கள் என்று பல பல செய்திகள். தோண்ட தோண்ட பிணங்கள். விசாரிக்க விசாரிக்க பெரிய பெரிய பிரபலங்கள் அரசியல் வாதிகளின் கருப்பு பக்கங்கள். அப்ப்ப்பா சொல்லி மாள முடியாதளவு சென்னையில் தனது இரவு இராஜங்கத்தை நடத்தி கொண்டிருந்தவனுடன் மொத்த தமிழ்நாடே சம்மந்தப்பட்டிருந்தது.

கள்ள சாராய கடத்தலில் ஆரம்பித்த கேஸ் பிராத்தல், பெண் கடத்தல்கள், கொலைகள், சுவற்றில் புதைக்கப்பட்ட பிணங்கள், வீட்டிற்கு அடியில் புதைக்கப்பட்ட பிணங்கள் என்று நீண்டுக்கொண்டே போனது.

அப்படி ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தியை பார்த்து அந்த வீடே அதிர்ந்து போயிருந்தது. அதில் வந்த செய்தி என்னவென்றால் முன்னாள் மத்தியமைச்சர் இன்னாள் நிதியமைச்சரின் வாரிசுக்கும் ஆட்டோ பாலுவிற்கும் இடையில் பழக்கமா?அவரின் ரெகுலர் கஸ்டமரே இவர் தானாமே! இது எல்லாம் தெரிந்தும் காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறதாம்?

இரவெல்லாம் நல்ல உறக்கத்தில் இருந்துவிட்டு மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்த தன் அண்ணன் திரவியத்தின் மீது பத்திரிக்கையை தூக்கி எறிந்தாள் விஜயா. அது அவனின் நெஞ்சில் பட்டு கீழே விழுந்தது. அதை சிறிதும் கணக்கில் எடுக்காதவன்,

“ஹே விஜயா! எப்ப வந்த? என் மாப்பிளைகளை எங்கே? ஆதி மட்டும் தான் வந்திருக்கானா? கணி எங்கே?” என்று புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்த தங்கையை உபசரித்தான் திரவியம்.

“ச்சை வாயை மூடு… அந்த பத்திரிக்கைல வந்து இருக்கது உண்மையா? ஆதி அப்பா சொன்னப்ப கூட நம்பலை. உன் பழக்கம்வழக்கம் சரியில்லைன்னு அவர் சொன்னப்ப எல்லாம் நான் நம்பவே இல்லை. இதுனாலயே எங்களுக்குள்ள பல தடவை சண்டை வந்திருக்கு.. ஆனால் இன்னைக்கு ச்சீய்..” என்று அழுகையும் பதட்டம்முமாக கேட்டாள் விஜயா.

தனது தந்தையின் அமைதியிலும் தாய் அடுப்பறையை விட்டு வெளியே வராது இருத்தலிலே தெரிந்து விட்டது அவளுக்கு அந்த பத்திரிக்கையில் போட்டு இருக்கும் செய்தி உண்மை தான் என்று. தன் அண்ணன் அதெல்லாம் உண்மை இல்லை டா என்று சொல்வான் என்ற சிறிய நட்பாசையில் அவனது முகத்தைப் பார்த்தாள்.

திரவியமோ தனது காலுக்கடியில் கிடந்த பத்திரிக்கையை எடுத்து வாசித்தவன் மீண்டும் அதை கீழேயே போட்டான். கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன் நாற்காலியில் ஒய்ந்துப்போய் அமர்ந்திருந்த தங்களது தந்தை பவித்திரனையும், சமையலறையின் வாசலில் அழுகையுடன் சுவரில் சாய்ந்து நின்றிருந்த தங்களது அன்னை மீனாட்சியையும், தனக்கு எதிரில் தன்னை கொன்றுப்போடும் விழிகளுடன் முறைத்துக்கொண்டிருந்த தங்கை விஜயாவையும், அவளுக்கு அருகில் நின்றுக்கொண்டு இங்கு நடப்பது புரியாவிட்டிலும் புரிந்துக்கொள்ளும் நோக்குடன் நின்றிருந்த ஆறே வயதான தனது தங்கையின் மகன் ஆதித்யனையும் சுற்றி பார்த்தவன் ஒரு முடிவெடுத்தவாறு விறுவிறுவென்று சென்று தனது தந்தையின் காலில் பட்டென்று விழுந்து கதறி அழ ஆரம்பித்தான்.

“அப்பா என்னை மன்னிச்சிருங்க அப்பா… இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் அப்பா… என் ப்ரண்ட்ஸ் தான் இப்படி பண்ண வைச்சுட்டாங்க… இனிமேல் சத்தியமா எதுவும் பண்ணமாட்டேன் அப்பா…” என்று கெஞ்ச அவரோ ஒன்றும் சொல்லாமல் அங்கு நடப்பதை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தனது பேரன் ஆதித்யனின் கையை பற்றிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்துவிட்டார்.

இருந்தும் அசராமல் அடுத்து தனது தாயின் காலில் விழுந்தான் திரவியம்.

“அம்மா என்னை மன்னிச்சிரு அம்மா… இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் அம்மா… நீ என் சேர்க்கை சரியில்லைன்னு சொன்னப்ப எல்லாம் நான் கேட்காம இருந்ததுக்கு வந்த வினை மா… இனிமேல் நீ சொல்ற மாதிரி நடந்துக்குறேன் அம்மா… என்னை மன்னிச்சிரு அம்மா…” என்று அழுக தாயிற்கு உருகிவிட்டது. தாயுள்ளம் ஆச்சே தனது ஒரே மகன் கதறுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“எந்திரி சாமி… எந்திரி… ஒன்னும் இல்லை… உன் கூட சேருறவங்க சரியில்லைன்னு சொன்னப்ப நீ அம்மாவ தான் ஏசுன… இப்ப பாரு… எங்கே வந்து நிற்பாட்டி இருக்குன்னு? கல்யாணம் பண்ணிக்கோ சாமி. எல்லாமே சரியா போயிரும். அம்மா சொல்றதை கேளு சாமி. வயசு இருபத்தி எட்டு ஆச்சு உனக்கு. விஜயாவுக்கு  பத்தொன்பது வயசுலயே கல்யாணம் பண்ணி வைச்சிட்டோம். உன்னை விட இவனுக்கு  இரண்டு வயசு மூத்தவன் இவனுக்கும்  பண்ணுவோம்னு உங்கப்பாக்கிட்ட சொன்னப்ப எல்லாம் பொறுப்பு வரட்டும் பொறுப்பு வரட்டும்னு சொன்னாரு இப்ப பாரு?” என்று தனது மகன் திரவியத்திடம் ஆரம்பித்து தனது மகள் விஜயாவிடம் முடித்தார் மீனாட்சி .

விஜயாவிற்கு என்ன சொல்லவேண்டுமென்றே தெரியவில்லை. தனது அண்ணன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறான். இவர் என்னமோ இப்படி பேசுகிறார் என்று தனது தாயை அதிர்ந்து பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தனது தந்தை இருந்த அறைக்குள் நுழைந்து விட்டாள்.

விஜயாவின் செயல் மீனாட்சிக்கு கோவத்தை வரவழைத்திருக்க வேண்டும் செல்லும் அவளைப்பார்த்து முறைத்தவர் அடுப்படிக்குள் சென்று காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் தனது மகனுக்கு காபியையும் தனது பேரனுக்கு பாலையும் எடுத்து வந்தார்.

“ஓன்னும் விசனப்படாத யா… எல்லாம் சரியா போயிரும். காபியை குடி.” என்று திரவியத்திடம் கொடுத்து அவனது தலையை தடவி விட்டவர் பால்லை எடுத்துக்கொண்டு அவர்கள் மூவருமிருந்த அறைக்குள் நுழைந்தார் மீனாட்சி.