மிரட்டும் அமானுஷ்யம் 10

 

மிரட்டல் 10

 

ஜான்வி எப்படி விடுதி அறைக்கு வந்து சேர்ந்தாள் என்பதெல்லாம் அவளுக்கு நியாபாகத்தில் இல்லை. ஆதர்ஷ் அவளிடம் இருமுறை விடைப்பெற முயன்றும் பதில் இல்லாமல் போக, சாக்ஷியைப் பார்த்தது. பதிலுக்கு சாக்ஷி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியது – இவை எதுவும் அவளின் கவனத்தில் இல்லை.

 

அவளின் சிந்தனை முழுவதும் நிஷாவைப் பற்றி தான் இருந்தது. நிஷா யார்…? எதற்காக தன்னிடம் அவள் அறிமுகமாக வேண்டும்…? அவளிடம் பேசும்போது தான் மட்டும் அந்த இடத்தில் இருக்குமாறு ஏன் சூழ்நிலை அமைய வேண்டும்…? அம்மாதிரியான சூழ்நிலை தானாக அமைந்ததா… இல்லை அவளால் அமைக்கப் பட்டதா…?  இப்படி பல கேள்விகள் அவளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன.

 

தங்கள் அறைக்கு வந்த பின்னர், சாக்ஷி பல முறை ஜானுவை அழைத்தும் எதிர்வினை இல்லாமல் போக, அவளை உலுக்கினாள்.

 

அவள் உலுக்கியதும் நிகழ்விற்கு வந்த ஜான்வி, அப்போது தான் அறைக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள்.

 

“ஹே ஜானு… என்னாச்சு… ஏன் ரெஸ்ட்லெஸா இருக்க…?” என்று சாக்ஷி வினவினாள்.

 

“அன்னைக்கு நிஷா ஹோட்டல்ல ரிஷப்ஷனிஸ்ட்டா வேலை பாக்குறான்னு சொன்னேன்ல அந்த ஹோட்டல் பேரு ‘ப்ளூ மூன்’…” 

 

முதலில் அந்த ஹோட்டல் பெயரை கண்டுகொள்ளாத சாக்ஷி, “அதுக்கும் நீ இப்படி இருக்குறதுக்கு என்ன சம்பந்தம்…” என்றாள்.

 

“ப்ச்… நான் சொன்னத ஒழுங்கா கவனிக்கலையா… ஹோட்டல் பேரு ‘ப்ளூ மூன்’…” என்று ‘ப்ளூ மூன்’னை அழுத்திச் சொன்னாள்.

 

அப்போது தான் அவள் கூறவருவது சாக்ஷிக்கு புரிந்தது.

 

“ஹே ஜானு… அந்த ஹோட்டல் தான இன்னைக்கு நாம பார்த்தோம்…”

 

ஜானு அதை ஆமோதிப்பது போல தலையசைத்தாள். இருவரும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, சாக்ஷி தான் அந்த நிலையை மாற்றினாள்.

 

“ஜானு, அவங்க வேற எங்கயாவது ஹோட்டல் மாத்திருக்கலாம்ல…” என்றாள் சாக்ஷி.

 

“எனக்கும் அதே யோசனை தான் சாக்ஷி… எதுக்கும் மேல போய் செக் பண்ணிட்டு வருவோம்….”

 

“ஹப்பா இப்போவாவது மாடிக்கு கூட்டிட்டு போகணும்னு தோணுச்சே…” 

 

தோழி உடன்வருவதால் சற்று தைரியமாகவே மேலே சென்றாள் ஜான்வி.

 

நான்காம் மாடியை அடைந்ததும், இருவரின் மனதிலும் இனம்புரியா பயஉணர்வு தோன்றியது. ஆனால் மற்றவரிடம் அதை சொல்லவில்லை.

 

ஜான்விக்கு விடுபட்டிருந்த குழப்பம் மீண்டும் முளைத்தது. அவள் எப்போது இங்கு வந்தாலும் மெல்லிய ஒளி கசிந்து கொண்டு இருக்கும். ஆனால் இன்றோ கருமை நிறம் பூசி பயங்கரமாக இருந்தது.

 

பௌர்ணமி நிலவின் ஒளியினால், சற்று வெளிச்ச கிடைக்கப் பெற்று தோழியர் இருவரும் முன்னேறினர்.

 

நிஷாவின் அறையை அடைந்தவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறை வெளிப்பக்கம் பூட்டி அதன் மேல் பல கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த கதவும், பல காலமாக யாரு அணுகவில்லை என்பது போல தூசி படிந்துக் கிடந்தது.

 

“சாக்ஷி… இது என்ன பூட்டியிருக்கு… நான் பார்த்தப்போ திறந்து தான் இருக்கும்… இந்த ரூம் குள்ள தான் நிஷா தனியா இருக்கிறதா ஃபீல் பண்ணுவா…” என்று படபடத்து கொண்டிருந்தாள்.

 

அவளை அமைதி படுத்த சாக்ஷி தான் திண்டாடிப் போனாள்.

 

“ஜானு ரிலாக்ஸ்… என்னன்னு பார்க்கலாம்…” என்ற சாக்ஷியின் சொல்லை கேட்காதவாறு பேசிக் கொண்டே இருந்தாள் ஜான்வி.

 

“இல்ல சாக்ஷி… எனக்கு நல்லா நியாபகம் இருக்கு…. இங்க இருக்க மத்த ரூம்ஸ் கூட வெளிப்பக்கம் சும்மா தாழ் போட்டிருப்பாங்க… பூட்டிருக்க மாட்டாங்க…” என்றவாறு மற்ற கதவுகளைப் பார்க்க, அவைவும் அவ்வாறே பூட்டப்பட்டு கயிறு சுற்றப்பட்டிருந்தன.

 

இருவருக்கும் இப்போது மனதினுள் பயம் எழுந்தது. ‘நிஷா’ யாரென்று இருவராலும் யூகிக்க முடிந்தாலும், அதை வெளியே சொல்வதற்கு கூட யோசித்தனர்.

 

அப்போது மொட்டைமாடியில் ஏதோ சத்தம் கேட்க, ஜான்வி மொட்டைமாடியை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

 

“ஜானு உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா… இப்போ எதுக்கு அங்க போற…? வா கீழ போயிடலாம்…” என்று சாக்ஷி கத்த, அவளின் குரல் அந்த மாடி முழுக்க எதிரொலித்து அந்த இடத்தை மேலும் பயங்கரமாக்கியது.

 

ஜான்வியோ அவள் சொல்வதை காது கொடுத்து கேட்காதவளாக, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளாக மொட்டைமாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினாள்.

 

அவளைத் தனியாக அனுப்ப மனமில்லாத சாக்ஷியும் அவளின் விதியை நொந்தவாறு மேலே சென்றாள்.

 

பௌர்ணமி நிலவு இருட்டை வெளிச்சமாக்க முயன்றாலும், அவ்வொளியால் இருளின் அமானுஷ்யத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. மழைக் காற்று வேறு பேய்த்தனமாக வீசிக் கொண்டிருந்தது.

 

“ஹே சாக்ஷி… நம்ம எப்போ மொட்டைமாடிக்கு வந்தோம்…” என்று கேட்ட ஜான்வியை முறைத்த சாக்ஷி, “அடிப்பாவி… நான் கத்த கத்த அத காதுல கூட வாங்காம வேகவேகமா படியேறி வந்துட்டு… இப்போ வந்து ’காந்தி செத்துட்டாரா…’ங்கிற ஸ்லாங்ல ‘எப்போ மொட்டைமாடிக்கு வந்தோம்…’ன்னு கேக்குற… ஏம்மா உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா…” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

“ப்ச்… சாக்ஷி நான் என்ன கேட்டா நீ என்ன சொல்லிட்டு இருக்க…”

 

இவ்வாறு இவர்கள் சண்டைபோட்டு கொண்டிருக்க,  ஒரு கருப்பு உருவம் வேகமாக அவர்களை கடந்து சென்றதை இருவருமே தங்கள் கண்களால் கண்டனர். ஒரு நிமிடம் இருவருக்கும் இதயம் நின்று பின் மெதுவாக துடிக்க ஆரம்பித்தது.

 

“ஜானு, இப்போ நான் பார்த்தத நீயும் பார்த்த தான…” என்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்டாள் சாக்ஷி.

 

ஜான்வி எதுவும் கூறாமல் அது சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

தன் கேள்விக்கு எந்த மறுமொழியும் இல்லாததால், அவளை உசுப்பிய சாக்ஷி, “ஜானு…” என்று மீண்டும் ஏதோ கூற ஆரம்பிக்க, “உஷ்… சாக்ஷி உன் மொபைல்ல டார்ச் ஆன் பண்ணு…” என்றாள் ஜான்வி.

 

“என் மொபைலா… அத ரூம்லேயே வச்சுட்டு வந்துட்டேன்…” 

 

“என்ன ரூம்ல வச்சுட்டு வந்துட்டீயா… நீ என்ன லூசா… அத எடுத்துட்டு வரணும்னு கூட தெரியாதா…” என்று கத்தத் துவங்கினாள் ஜான்வி.

 

“ஹான் அவ்ளோ டைட்டா இருக்குறவங்க, ஏன் அவங்க மொபைல் எடுத்துட்டு வராம எங்கிட்ட கேக்குறீங்க…” என்று பதிலடி கொடுத்தாள் சாக்ஷி.

 

இங்கு மீண்டும் ஒரு சண்டையை அவர்கள் துவங்கியிருக்க, ‘ஷிஷ்’ என்ற ஒலியுடன், மஞ்சள் நிற ஒளியை பரப்பி, அதன் பரவலுக்கு உட்பட்ட இடத்தை வெளிச்சமாகியது அந்த ‘குண்டு பல்ப்’…

 

இருவரின் சத்தம் அடங்கியிருக்க, வீசும் காற்றின் சத்தமே அங்கு பிரதானமாக கேட்டுக் கொண்டிருந்தது.

 

“ஜா…ஜான்..னு இந்த பல்பு எப்படி தானா எரிஞ்சது…” என்று பயத்துடன் வினவினாள் சாக்ஷி. 

 

ஜான்வியோ அந்த ‘பல்ப்’ காட்டிய வெளிச்சத்தில் தெரிந்த அந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் இங்கு வந்த புதிதில், நிஷா அவளை மொட்டைமாடியிலிருந்து விழாமல் காப்பாற்றிய போது, பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டதாக கூறிய அதே சுவர் முழுதாக காட்சியளித்தது. அதையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், சாக்ஷியின் கேள்வியை இம்முறையும் கண்டுகொள்ள வில்லை.

 

‘ப்ச் இவ ஒருத்தி எப்போ பார்த்தாலும் ஸ்டேச்சு மோடுக்கு போயிடுவா…’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்ட சாக்ஷி, ஜான்வியின் கைகளை சுரண்ட, திடீரென்று அவர்கள் நின்றிருந்த இடத்தில் குளிர் பரவத் துவங்கியது. காற்றில் துர்நாற்றம் வீச, இருவரும் மூக்கை மூடிக் கொண்டனர். அவர்களின் பின்னே சூடான மூச்சுக் காற்று பரவியது. இருவரும் பயத்தில் ஒருவர் கைகளை ஒருவர் பற்றிக் கொண்டனர்.

 

“நான் தான் அந்த லைட்ட போட்டேன்…” என்று கோரமான குரல் அவர்களின் காதுகளில் ஒலிக்க, இருவரும் கத்திக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினர்.

 

“ஓடு ஜான்வி ஓடு… இப்போ உன்ன சும்மா விடுறேன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு… இப்போ எங்கிட்ட இருந்து ஓடுற நீ, அப்போ எப்படி தப்பிக்குறன்னு பார்க்குறேன்…” என்று அது கத்தியது ஓடிக் கொண்டிருந்தவர்களை சென்றடைய வில்லை.

 

இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்து தங்களின் அறையில் முடங்கிக் கொண்டனர். ஓடி வந்ததில் இருவருக்கும் பலமாக மூச்சு வாங்கியது. 

 

ஜான்வி சாக்ஷியின் கட்டிலில் அமர்ந்திருக்க, சாக்ஷியும் அவள் அருகில் அமரச் சென்றாள். அப்போது திடீரென்று தொலைக்காட்சியில் ஹை டெசிபலில் பாடல் அலற, அதை எதிர்பார்க்காத இருவரும் அதனுடன் சேர்ந்து அலறினர்.

 

சற்று நேரத்திற்கு பின் நிதானித்தவர்கள், அப்போது தான் அதைப் பார்த்தனர்… சாக்ஷி தொலையியக்கியின் (remote control) மீது அமர்ந்திருந்தததால், தொலைக்காட்சி ‘ஆன்’னாகி விட்டது என்பது புரிந்தது.

 

‘ச்சே’ என்று தலையிலடித்துக் கொண்டவர்கள் தொலைக்காட்சியை முதலில் நிறுத்தினர். இதைப் பற்றி ஆதர்ஷ், விஷ்வாவிடம் சொல்லப் போவதாகக் கூறிய சாக்ஷியை தடுத்த ஜான்வி, “இன்னும் மிஞ்சி போனா ஃபோர் டு ஃபைவ் டேஸ் தான் இங்க இருக்கப் போறோம்… இதுக்கு எதுக்கு அவங்க கிட்டயும் சொல்லி அவங்கள டென்ஷன் படுத்தணும்… விடு நம்மளே சமாளிச்சுக்கலாம்…” என்று கூறினாள்.

 

ஜான்வி என்னவோ அவர்களை எதற்கு தொல்லை செய்ய வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் இதை அவர்களிடமிருந்து மறைத்ததற்கான பலனை அவர்களும் சேர்ந்து அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்திருந்தால், அவர்களிடம் சொல்லியிருப்பாளோ….

 

அன்று இரவு தோழிகள் இருவருக்கும் தூங்கா இரவாகவே சென்றது. இருவரும் ஒரே கட்டிலில் ஒருவரை ஒருவர் பிடித்தபடி தூங்கியும் தூங்காமலும் இருந்தனர். பின் விடியலில் தான் சற்று கண்ணசந்தனர்.

 

அன்று கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்பதால், இருவரும் காலை உணவுண்ணும் நேரத்திற்கே எழுந்தனர். வேகமாக தங்களை சுத்தப்படுத்தியவர்கள் சாப்பிடச் சென்றனர்.

 

அங்கு அன்று போல இன்றும் அந்த இரு கேரளப் பெண்களைக் கண்டனர். அவர்கள் இவர்களைக் கண்டு ஒதுங்கி செல்ல, அவர்களின் வழியை மறித்தனர்.

 

“எதுக்கு எங்கள பார்த்து ஓடுறீங்க…?” என்று வினவினாள் சாக்ஷி.

 

“அது… அது வந்து…” என்று ரீனா திணறிக் கொண்டிருக்க, “நாங்க ஒண்ணும் உங்கள பார்த்து ஓடல…” என்றாள் கீதா…

 

“சரி அத விடுங்க… நிஷா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்…?” என்று நேரடியாக கேட்டாள் ஜான்வி.

 

“ப்ச் அவ பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டான்னு இந்த பிஜில எல்லாருக்கும் தெரியும்… அதுலயிருந்து இந்த பிஜிக்கு யாரும் வரலங்கிறதுக்காக தான் கம்மியான வாடகைக்கு ரூம்ஸ் விடுறாங்க… இது தெரியாத உங்ககிட்ட இந்த பிஜியோட ஓனர் நெறையா ரெண்ட் வாங்கிட்டு இருக்காங்க…” என்று உண்மையை போட்டு உடைத்தாள் கீதா…

 

“நான் மொட்டைமாடிக்கு போனேன்னு சொன்னப்போவே ஏன் இத சொல்லல…” என்று மீண்டும் வினவினாள் ஜான்வி.

 

“நாங்க எங்க வீட்ட விட்டு இங்க தனியா தங்கியிருக்கோம்… உங்களுக்கு உதவ போய் எங்களுக்கு ஏதாவது பிரச்சன வந்துட்டா… ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க… இங்க  3 வருஷமா இருக்கோம்… இதுவரைக்கும் அந்த நிஷாவால எந்த தொந்தரவும் இல்ல… யாரும் மொட்டைமாடிக்கு போறதும் இல்ல… ஆனா நீங்க போனதும் இல்லாம நிஷா பார்த்திருக்கேன்னு சொல்றீங்க… எங்க யாருக்கும் தெரியாதவ உங்க கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா, பிரச்சன உங்களுக்கு தான்… உங்க பிரச்சனையில எதுக்கு சம்பந்தமே இல்லாம நாங்க மாட்டிக்கணும்…” என்று படபடவென பொரிந்து விட்டு ரீனாவுடன் சென்று விட்டாள்.

 

“என்ன இந்த பொண்ணு இவ்ளோ நீளமா பேசிட்டு போகுது… என்னமோ நீயும் நானும் அந்த பேய் கூட பிரெண்டா இருந்து ரூம் ஷேர் பண்ற மாதிரி, ‘உங்க கூட பேசுனா பிரச்சன வரும்…’ன்னு சொல்லிட்டு போகுது…” என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள் சாக்ஷி.

 

“அப்போ நிஷா பத்து வருஷத்துக்கு முன்னாடி அந்த ஹோட்டல் ஃபயர் ஆக்சிடெண்ட்ல இறந்து போயிருக்கா…” என்று ஜான்வி கூற, “இல்ல…” என்ற குரல் அவர்களின் பின்னே ஒலித்தது.

 

**********

 

சிங்கப்பூரில் பத்து வருடங்களாக கோமாவிலிருந்து விழித்த மகனிற்கும் தந்தைக்குமான பாசப் போராட்டம் நிகழ்த்துக் கொண்டிருந்தது.

 

“சதீசு… எங்கனாயாச்சும் வலிக்குதாய்யா…” என்று கண்ணீர் மல்க கேட்டார் அந்த வெள்ளந்தி மனிதர்.

 

“இல்ல ப்பா…” என்று கூறியவனின் கண்களிலும் கண்ணீர்… “ப்பா… எத்தன வருஷம் ஆச்சு…?” என்று தயங்கியபடி வினவினான்.

 

“பத்து வருஷமாச்சுய்யா இப்படி படுத்து…” என்றார் வேதனையான குரலில்…

 

சதீஷிற்கும் வேதனையாகத் தான் இருந்தது. அப்போது தான் தாய் இல்லாததை கவனித்தவன், “ப்பா… அம்மா எங்க ப்பா…?” என்றான்.

 

“நீ இப்படி படுத்துக் கிடந்தத பார்த்தே மனசொடிஞ்சு போயிட்டாய்யா… அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மொத்தமா நம்மள விட்டுட்டு போயிட்டாய்யா…” என்று அழுதார் அந்த பெரிய மனிதர்.

 

‘அம்மாவின் இழப்பைக் கூட அறியாமல் படுத்து கிடந்தோமே…’ என்று அவனின் மனம் அடித்துக் கொண்டது. அப்போது தான் இவ்வாறான நிலைமைக்கு காரணம் நினைவிற்கு வந்தது. கூடவே அர்ஜுனின் நினைவும்…

 

“ப்பா… அர்ஜு… அர்ஜு எங்க ப்பா… அவன் எப்படி இருக்கான்…” என்றான் உயிரைத் தேக்கி வைத்த குரலில்.

 

*********

 

தங்களின் பின் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தனர் ஜான்வியும் சாக்ஷியும். அங்கு பின் முப்பதுகளில் இருந்த ஒரு பெண் நின்றிருந்தார். அவரின் முகத்தில் தமிழ்நாட்டு சாயல் தெரிந்தது.

 

“நீங்க…” என்று சந்தேகத்துடன் கேட்டாள் ஜான்வி.

 

“என் பேரு வர்ஷா… நீங்க இவ்வளவு நேரம் பேசுன நிஷாவோட ரூம் மேட்டா இருந்தவ…” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

 

அதில் அதிர்ந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“உங்களுக்கு நிஷாவ பத்தி என்ன தெரியணுமோ எங்கிட்ட கேளுங்க…” என்றார்.

 

முதலில் சிறிது தயங்கியவர்கள், பின் இவரை விட்டால் வேறு யாரிடமும் கேட்க முடியாது என்ற காரணத்தினால் தங்களை இயல்பாக்கிக் கொண்டனர்.

 

“நிஷா அந்த ஃபயர் ஆக்ஸிடென்ட்ல இறக்கலைனா வேற எப்படி இறந்தாங்க…?”

 

“ம்ம்ம்… நிஷா கண்டிப்பா அந்த ஃபயர் ஆக்ஸிடென்ட்ல இறக்கல… ஏன்னா அவ அதுக்கு முன்னாடியே இறந்துட்டா…” என்றார் அவர்.

 

இந்த தகவல் அவர்கள் இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

அவர்களின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்டவர், “ஃபர்ஸ்ட் உங்களுக்கு நிஷாவ பத்தி சொல்றேன்… அவ ரொம்ப சைலெண்ட்… யாரு கிட்டயும் எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டா… ஏன் அவ கூட ரூம் மேட்டா இருந்த என்கிட்டயே அவ பேசுன வார்த்தைகள எண்ணிடலாம்… அவங்க வீட்டுக்கு கூட அடிக்கடி பேசமாட்டா… மாசத்துக்கு ஒருமுறை தான் பேசுவா… இப்படி இருந்தவ திடீர்னு நைட்ல போன் பேசிட்டு இருந்தா… நானும் ஏதோ லவ் மேட்டர்ன்னு கண்டுக்க மாட்டேன்… அப்போ தான் அவ நாலு நாள் ஹாஸ்டலுக்கு வரவே இல்ல… ஊருக்கு போயிருப்பான்னு நாங்களும் விட்டுட்டோம்… அவ வேலை செஞ்ச ஹோட்டல்ல இருந்து இங்க கால் பண்ணி ஏன் அவ வேலைக்கு வரலன்னு கேட்டப்போ தான் விஷயம் பெருசுன்னு புரிஞ்சது… இந்த பிஜி ஓனரும் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்தாங்க… ஒரு மாசத்துக்கு அப்பறம் தான் அவ இறந்த விஷயமே எங்களுக்கு தெரிஞ்சுது… அவ வேலை செஞ்ச ஹோட்டல் மேல எந்த பிளாக் மார்க்கும் விழுந்துடக் கூடாதுன்னு, ஏதோ லவ் விஷயம்… அவ லவர் ஏமாத்திட்டான்… அதான் சூசைட் பண்ணிக்கிட்டான்னு அவங்க இஷ்டத்துக்கு புரளி கிளப்பி விட்டுட்டாங்க… போலீஸும் சூசைட்ன்னு கேஸ மூடிட்டாங்க… இதெல்லாம் முடிய ஒரு மாசம் ஆச்சு… எல்லாரும் நார்மல் லைஃபுக்கு திரும்பிட்டதா நெனச்சப்போ தான், ஒரு பொண்ணு அவள மொட்டைமாடில பார்த்தா சொன்னா… அதுக்கப்பறம் நெறையா பேரு அவள பார்த்தா சொன்னாங்க… இப்படி இருக்க பிஜில இருக்கமுடியாதுன்னு நாங்க எல்லாம் காலி பண்ணி போயிட்டோம்… அப்பறம் பூஜை எல்லாம் செஞ்சு அவள அந்த ரூம்லயே அடைச்சு வச்சுட்டதா சொல்லிக்கிட்டாங்க…” என்று நிஷாவைப் பற்றி அவருக்கு தெரிந்ததைக் கூறினார்.

 

“அப்போ அந்த ஹோட்டல் எப்படி எரிஞ்சுச்சு…” என்று வினவினாள் சாக்ஷி.

 

“ஷார்ட் சர்க்யூட் ஆகிடுச்சுன்னு போலீஸ் தரப்புல சொல்றாங்க… ஆனா எனக்கென்னமோ இதுக்கு அவ தான் காரணம்னு தோணுது… அவ மேல தப்பான புரளி கிளப்பி விட்டதால பழிவாங்க இப்படி செஞ்சுருப்பான்னு தோணுது…” என்றார்.

 

ஏதோ நினைவு வந்தவளாக, “நிஷாக்கு தமிழ் தெரியுமா…?” என்றாள் ஜான்வி.

 

“ம்ம்ம் தெரியும்… அவ சொந்த ஊர் ராஜஸ்தான்ல இருக்க கிராமம்னாலும், இங்க ஹோட்டல்ல ரிஷப்ஷனிஸ்ட்டா வேலை செஞ்சதால, தமிழ் உட்பட அஞ்சு மொழிகள் கத்துகிட்டா…” என்றார்.

 

அப்போது ஜான்விக்கு, நிஷா ஒருமுறை தன சொந்த ஊர் புனேக்கு அருகிலுள்ள கிராமம் என்று சொன்னது நினைவிற்கு வந்தது. 

 

“ராஜஸ்தானா… உங்ககுக்கு நல்லா தெரியுமா…?” என்று உறுதிப்படுத்திக் கொள்ள வினவினாள்.

 

“ம்ம்ம் அவளே எங்கிட்ட ஒருமுறை சொல்லிருக்கா… அன்னைக்கு ஃபார்மாலிட்டிஸ் முடிக்கிறதுக்காக வந்த அவங்க அம்மா கூட ராஜஸ்தான்லயிருந்து வந்ததா தான் சொன்னாங்க…” என்றார்.

 

‘அப்பறம் ஏன் எங்கிட்ட அப்படி சொல்லணும்… அந்த ஊர் பெரும் மறந்துடுச்சே…’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஜான்வி.

 

“ஆமா, நீங்க எதுக்காக இப்போ இங்க வந்துருக்கீங்க…?” என்று கேட்டாள் சாக்ஷி.

 

“அவளோட திங்ஸ் கொஞ்சம் இங்க விட்டுட்டு போயிட்டாங்க… அது எங்கிட்ட தான் இருக்கு… அதப் பத்தி அவ வீட்டுக்கு தகவல் கொடுத்து இத்தன வருஷமாச்சு… ஆனா ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல… அதான் ஒரு தடவ ஓனர் கிட்ட கேட்டுட்டு அத தூக்கிப் போடலாம்னு நெனச்சேன்… இங்க வந்தப்போ தான் நீங்க பேசுறத கேட்டேன்…” என்றார்.

 

“அது என்ன பொருள்னு நாங்க பார்க்கலாமா…” என்றாள் ஜான்வி.

 

அதில் ஒரு டைரி மற்றும் லாக்கெட் இருந்தது.

 

அந்த லாக்கெட்டின் டாலரில் ‘ஏ’ மற்றும் ‘என்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒன்றோடொன்று இனைந்து இருந்தன.

 

அந்த டைரியை படபடக்கும் இதயத்துடன் திறந்தாள். அதன் முதல் பக்கத்தில் இதய வடிவத்திற்குள் ‘அர்ஜுனிஷா’ என்று எழுதியிருந்தது.

 

அமானுஷ்யம் தொடரும்…

 

 

இன்றைய அமானுஷ்ய இடம்

 

ஷனிவார் வாடா (Shaniwar wada, Pune)

 

 

 

இது பேஷ்வாக்களின் கோட்டை. இக்கோட்டை 1730ஆம் ஆண்டு முதலாம் பாஜிராவ் காலத்தில் கட்டப்பட்டது. 13 மாடிகளைக் கொண்ட இக்கோட்டையின் சுவர்களில் இராமாயண, மஹாபாரத காட்சிகள் வரையப் பட்டிருக்கின்றன.

 

இக்கோட்டையின் பின்கதை சுருக்கம்…

 

முதலாம் பாஜிராவ்வின் மகன் நானாசாஹிப் பேஷ்வாவிற்கு மூன்று மகன்கள். முதல் இரு மகன்கள் இறந்து விட, அந்த பதவிக்கு வந்தார் அவரின் இளைய மகன் நாராயணராவ். 17 வயதிலேயே பதவிக்கு வந்த இளைய பேஷ்வா இவர்.

 

ஆனால் நாராயணராவ் பதவிக்கு வந்தது, அவரின் சித்தப்பா ரகுநாதராவ்விற்கு பிடிக்கவில்லை. அண்ணன் மகன்கள் இறந்த பின் அந்த பதவி தனக்கு கிடைக்கும் என்று கருதினார் ரகுநாதராவ். 

 

இப்படி இருக்க, நாராயணராவ்விற்கும் ரகுநாதராவ்விற்கும் அடிக்கடி பூசல்கள் வர ஆரம்பித்தது. தன் மூத்த அண்ணன் மறைவிற்கு ரகுநாதராவ் தான் காரணம் என்ற சந்தேகமும் நாராயணராவ்விற்கு இருந்தது.

 

ஒருமுறை கோபத்தில், ரகுநாதராவ்வை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார் நாராயணராவ். இது பிடிக்காத ரகுநாதராவ்வின் மனைவி ஆனந்திபாய், அன்றைய கால கூலிப்படைகளான ‘கார்டி’ என்பவர்களின் உதவியை நாடினார்.

 

விழா நாள் அன்று அக்கோட்டையில் மக்கள் கூட்டமாக இருக்கும் நேரத்தில் அங்கு புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தினர் அந்த கார்டிக்கள். இதையறிந்த 17வயது நாராயணராவ் தன்னை காக்கவேண்டி, “காகா! மாலா வச்வா…” (சித்தப்பா! என்னை காப்பாற்றுங்கள்…) என்று கத்தியதாகக் கூறுகின்றனர்.

 

ரகுநாதராவ்விற்கு, நாராயணராவ்வை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை… அதனால் அவரை சிறைப் பிடித்து வருமாறு கார்டிக்களின் தலைவனிற்கு, “நாராயணராவ் லா தாரா…” என்று செய்தி அனுப்பினார்… (தாரா என்றால் சிறைபிடி என்று அர்த்தம்)

 

ஆனால் ஆனந்திபாயோ அந்த செய்தியை “நாராயணராவ் லா மாரா…” என்று மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். (மாரா என்றால் கொன்று விடு என்று அர்த்தம்)

 

கார்டிக்களும் நாராயணராவ்வை கொன்று பல பாகங்களாக பிரித்து ரகுநாதராவ்வின் முன் கொண்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.

 

அதன்பின் இந்த கோட்டை, 1828ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தால் மிகவும் சேதமானது. அத்தீவிபத்தின் காரணம் என்னவென்று இன்று வரை தெரியவில்லை. தொடர்ந்து ஏழு நாட்கள் அணையாமல் எறிந்த தீ, ஏழாம் நாள் தான் அணைந்ததாகக் கூறுகின்றனர்.

 

இப்போதும் பௌர்ணமி இரவில் அங்கு சென்றால், “காகா! மாலா வச்வா…” என்ற அலறல் குரல் கேட்பதாகக் கூறுகின்றனர்.