மிரட்டும் அமானுஷ்யம் 12

மிரட்டல் 12

பதினொரு வருடங்களுக்கு முன்பு…


அர்ஜுன் பிரபல இயக்குனரான விகாஸ் கண்ணாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிது. அவன் அதற்குமுன் எடுத்த பல குறும்படங்களின் நேர்த்தி கண்டே, விகாஸ் கண்ணா அவனை நேரடியாக தன் உதவி இயக்குனராக்கிக் கொண்டார். இதில் பலருக்கு அவன்மீது பொறாமை எழுந்தது. அதையெல்லாம் கடந்து தன்னை நம்பிய விகாஸிற்கும், இவ்வுலகிற்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டயாத்தில் இருந்தான் அர்ஜுன்.

அவர்களின் கூட்டணியில் முதல் படம் வெற்றிகரமாக அமைந்தது. பலர் அவனை வெளியே பாராட்டினாலும், உள்ளுக்குள் அவன்மேல் கொண்ட வன்மம் அதிகமாகியது. அதை அவனும் உணர்ந்து தான் இருந்தான். அத்தகைய சூழலில் அவனிற்கு தோள் கொடுத்தவன் தான் சதீஷ்.

விகாஸ் கண்ணாவுடன் மூன்று வருடங்கள் இருந்தவன் தான் சதீஷ். முதலில் விகாஸின் உதவி இயக்குனருக்கு உதவியாக வந்தவன், பல தடைகளைத் தாண்டி இப்போது அவரின் உதவி இயக்குனர்களில் ஒருவனாக இருக்கிறான்.

நியாயமாக பார்த்தால், அவனிற்கு அர்ஜுன் மேல் பொறாமை தான் வரவேண்டும். ஆனால் அவனிற்கு அர்ஜுனின் துடிப்பும், விவேகமும் மிகவும் பிடித்தது. அதனாலேயே அவனை விட இரண்டு வயது பெரியவனாக இருந்தாலும், தன்னை பேர் சொல்லி அழைத்து நண்பனாக பாவிக்கும் உரிமையை அவனிற்கு அளித்திருந்தான்.

“ஹே அர்ஜு… கங்கிராட்ஸ் மேன்… உன்ன நீ ஃப்ரூவ் பண்ணிட்ட…” என்று அணைத்துக் கொண்டான்.

“சதீஷ், இத நான் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது… இது நம்மளோட வெற்றி… உண்மைய சொல்லணும்னா, இதுக்கு எல்லாத்துக்கும் உன்னோட கோ-ஆப்பரேஷன் தான் காரணம்… என்ன புதுசா வந்திருக்குறவன்னு விலக்கி வைக்காம, என் பிரெண்டா கைட் பண்ண நீயில்லனா எனக்கு இந்த வெற்றி கிடைச்சுருக்குமான்னு தெரியல…” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டான்.

இதோ ஒரு விருது வழங்கும் விழா மேடையில், விகாஸ் கண்ணாவின் பிடித்தமான உதவி இயக்குராக அறிவிக்கப் பட்டதே அவனின் வெற்றியல்லவா… அதன்பிறகு அவனின் இமேஜ், சினிமா உலகில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இதில் அவன் ஆறடி உயரத்தில் பார்ப்பவர்களை ஈர்ப்பவனாகவும் இருப்பதால், அவன் எங்கு சென்றாலும் அவனை சுற்றிலும் மக்கள் கூட்டம் கூடத் துவங்கியது. செலிபிரிட்டி வாழ்க்கையில் இது சகஜம் தான் என்றாலும், இவ்வளவு வேகமாக இவையெல்லாம் அவன் வாழ்க்கையிலும் நிகழும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. அது அவனிற்கு சிறிது சலிப்பையும் தந்தது.

அவனின் முதல் படத்திற்கான வெற்றிவிழா, புனேயிலுள்ள ஹோட்டல் ப்ளூமூனில் நடைபெறவிருந்தது. எப்போதும் இதுபோன்ற வெற்றிவிழா ஏற்பாடு செய்யும்போதும், இங்கு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வது விகாஸின் வழக்கம். அதையே அவரின் கீழ் வேலைப் பார்ப்பவர்களும் பின்பற்றுவர்.

இப்போதும் அதே மாதிரி, எல்லாருக்கும் அதே ஹோட்டலில் அறைகள் கொடுக்கப்பட்டன. அர்ஜுன் ஓய்வு தேவையில்லை என்று சொன்னாலும், சதீஷ் தான், “ஹே அர்ஜு… சார் அடுத்த படம் தொடங்கிட்டாருனா, இது மாதிரி இனிமே என்ஜாய் பண்ண நேரமே கிடைக்காது…” என்று வற்புறுத்தி தங்க வைத்தான்.

முதல் நாள்… காலை நேரத்தில் வெளியே வந்த அர்ஜுனிற்கு, ‘ஏன் தான் வெளியே வந்தோம்…’ என்று எண்ணும் அளவிற்கு மக்கள் வந்து பேசிச் செல்ல… சிறிது நேரத்திலேயே ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டான். அப்போது அவன் மனம் எதற்கோ ஏங்கியது. ஆனால் என்னவென்று தான் அவனிற்கு தெரியவில்லை.

அறைக்குள் வந்தவன் சதீஷிடம் நடந்ததைக் கூற, “உன்ன யாரு இப்போ வெளிய போக சொன்னா… பகல் ஃபுல்லா படுத்து தூங்குனோமா, நல்ல சாப்பாடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டோமா… அப்பறம் நைட் நேரமா வெளிய சுத்துனோமான்னு இருக்கணும்…” என்றான்.

சதீஷிடம் பேசிவிட்டு வைத்த, அர்ஜுனிற்கு பசித்தது. ரிசெப்ஷனில் ஏதாவது ஆர்டர் செய்வோம் என்று அங்கிருந்த தொலைப்பேசியில் தொடர்பு கொண்டான்.

“ஹலோ சார்… ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ…?” என்று அவனின் ‘ஹலோ’விற்கு மறுமொழியாய் வந்த குரலின் இனிமையில் ஒரு நொடி நிதானித்தான். அதுவரை இருந்த எரிச்சலான மனநிலை சற்று தணிந்தது போல இருந்தது.

அவனிடமிருந்து மறுமொழி வராததால், இணைப்பிலிருந்த நிஷா, ஹிந்தியில் ஒருமுறை, மராத்தியில் மறுமுறை எனக் கேட்டும் பதில் வரவில்லை.

‘இது என்ன கால் பண்ணிட்டு பேசாம இருக்காங்க…’ என்று நிஷாவிற்கு லேசான பதட்டம் ஏற்பட்டது. நிஷா அப்போது தான் படிப்பை முடித்தவள், ‘இன்டெர்ன்’னாக அந்த ஹோட்டலில் சேர்ந்துள்ளாள். முதல் முறை இப்படி நடக்கவும் சற்று பயந்தவள், அருகில் இருந்தவளிடம் கூறினாள்.

நிஷா மற்றவளிடம் கூறும்போது தான், நிகழ்விற்கு வந்த அர்ஜுன் தான் பேசாததால் அங்கு நடக்கும் கலவரத்தை உணர்ந்தவன், “ஹலோ…” என்றான் அவசரமாய்…

“ஹலோ சார்… ஆர் யூ ஓகே..? கேன் ஐ ஆஸ்க் சம்படி டு ஹெல்ப் யூ இன் கேஸ் ஆஃப் எமெர்ஜென்சி..?” – நிஷா முடிவே செய்துவிட்டாள், அங்கிருப்பவனிற்கு ஏதோ உடல்நிலை கோளாறு என்று…

அவளின் பதட்டம் மென்சாரலாய் அவன் இதயத்தை நனைத்தது. அப்போது தான் அதை உணர்ந்தான்… தன்மீது தன் அன்னை காட்டும் பாசமே அவனின் தேடலுக்கான விடையென உணர்ந்தான்.

தன் தாயை நேரில் கண்டு, முழுதாக ஒரு வருடம் சென்றிருந்தது… அவ்வப்போது தொலைப்பேசியில் பேசினாலும், வேலைப்பளு காரணமாக முன்போல் பேச முடியவில்லை. அதை நினைத்து இப்போது வருந்தினான். இந்த விழா முடிந்தபிறகு கண்டிப்பாக ஒருவாரம் தன் தாயுடன் செலவிட வேண்டும் என்று எண்ணினான்.

ஆனால் தன் தாயின் அன்பை இதற்கு முன் அறிமுகமாகாத ஒருத்தியின் குரலில் உணர்ந்த அந்த நொடி, அவனிற்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அவன் அதைப் பற்றி யோசிக்கும் போது, தொலைப்பேசியின் இணைப்பு நின்று போயிருந்தது.

அங்கு நிஷாவோ அவளருகே நின்றிருந்தவளைப் போட்டு படுத்திக் கொண்டிருந்தாள். அவளிற்கோ, தான் வேலையில் சேர்ந்த சிறிது நாட்களில், அதுவும் தான் வரவேற்பில் இருக்கும்போது வந்த அழைப்பில் இப்படி குளறுபடி நடக்க, தன் வேலைக்கு ஏதாவது பங்கம் வருமோ என்று பயந்து கொண்டிருந்தாள். அதே பயத்தில் இருந்தவளுக்கு மறுபடியும் அந்த அறைக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கிளம்பி விட்டாள்.

அதற்கு தான் அருகில் இருந்தவளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அவளோ ஹோட்டல் விதிமுறைகளின் படி, இருவர் வரவேற்பில் நிற்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க, மேனேஜரிடம் கேட்டுவிட்டு தான் செல்வதாகக் கூறினாள்.

ஆனால் அப்போது மேனேஜரும் அங்கு இல்லாததால், அவள் அர்ஜுனின் அறைக்கு ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

அறையில் அர்ஜுனோ, இணைப்பு துண்டிக்கப் பட்டதை அறிந்து, தன்னையே திட்டிக் கொண்டான்.

‘இவ்ளோ நேரம் பேசாம இருந்தா, லைன கட் பண்ண தான் செய்வாங்க…’ என்று கூறிக் கொண்டு, மீண்டும் அழைக்கும் சமயத்தில் வெளியே அழைப்பு மணி ஒலிக்க, ‘யார் இந்த நேரத்தில்…’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

அங்கு முகம் முழுவதும் பதட்டமும் கவலையும் நிறைந்திருக்க, ஒரு வித அவஸ்தையுடன் நின்றிருந்தவளைக் கண்டு செயலற்று நின்றிருந்தான்.

அவள் ‘சார்’ என்று இருமுறை அழைத்த பின்பே சுதாரித்தவன், “எஸ்…” என்றான் கம்பீரமான குரலில்.

“சார் இந்த ரூம்லயிருந்து ரிசெப்ஷனுக்கு கால் வந்தது… ஏதாவது பிரெச்சனையா… நான் ஏதாவது உதவி செய்யணுமா…?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள் தவிப்புடன்.

அவளின் தவிப்பு இப்போதும் அவன் மனதிற்கு இதமளிக்க, சிறு புன்னகையுடன், “எவ்ரிதிங் இஸ் ஃபைன்…” என்றான்.

“ஆர் யூ ஸ்யூர்…?” என்றாள் அவனை மேலிருந்து கீழ்வரை நோட்டமிட்டவளாக.

அர்ஜுனிற்கு அவளின் கேள்வியில் குறும்பு எட்டிப்பார்க்க, “நீங்களே என்ன இப்போ ஸ்கேன் பண்ணீங்க தான… உங்களுக்கு என் பாடில ஏதாவது ப்ராப்ளம் தெரிஞ்சுதா…?” என்றான் ஆங்கிலத்தில்.

அவனின் கேள்வியில் அவளின் முகம் குப்பென்று சிவந்தது. தான் அவனைப் பார்த்ததை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டனோ என்று அவன் முகம் பார்க்க, அவன் சிரித்துக் கொண்டே புருவம் உயர்த்தினான்.

“சாரி சார்…” என்று அவள் கூறுகையில், அங்கு வந்த மேனேஜர், “மிஸ். நிஷா… வொய் டிட் யூ கம் ஹியர்…? இஸ் திஸ் யுவர் ட்யூட்டி டுடே? யூ ஆர் டிஸ்டர்பிங் அவர் கெஸ்ட்… வொய் டோன்ட் யூ ஃபாலோ ரூல்ஸ் அண்ட் ரெகுலக்ஷன்ஸ் ஆஃப் அவர் ஹோட்டல்…?” என்று சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார்.

அர்ஜுன் முன்னால் அவர் திட்டுவது அவளிற்கு அவமானமாக இருக்க, முகம் சுருங்கி அழும் நிலைக்குச் சென்றிருந்தாள். அவளின் இந்த தவிப்பைக் காண முடியாதவன், “சார் ப்ளீஸ் ஸ்டாப் ஸ்கோல்டிங் ஹெர்…” என்று அவரிடம் நடந்ததைக் கூறி தன்மேல் தான் தவறு என்றும் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட நிஷாவிற்கு ஆச்சரியம் தான். அதே ஆச்சரியத்தோடு அர்ஜுனைப் பார்க்க, அவன் ‘ரிலாக்ஸ்’ என்று வாயசைத்தான். அதைக் கண்டவளோ லேசாக புன்னகைத்தாள்.

அர்ஜுனே அவள் மீது தவறில்லை என்று கூறியதால், வேறொன்றும் பேசாமல், அவர்கள் இருவரையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த மேனேஜர்.

அவர் சென்றதும் சற்று இயல்பிற்கு திரும்பியவள், அர்ஜுனிடம், “தேங்க் யூ சோ மச் ஃபார் யுவர் ஹெல்ப் சார்…” என்றாள் நன்றியுடன்.

“இட்ஸ் ஓகே நிஷா… எனக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க… உங்களுக்காக இத கூட செய்யலைனா எப்படி…” என்று அவன் தமிழில் பேச, அதைக் கேட்டு முழித்தாள் நிஷா.

அப்போது தான் தமிழில் பேசியதை உணர்ந்தவன், “சாரி…” என்றான்.

மேலும் அவனிடம் பேசி, அவனிற்கு ஒன்றுமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின், “ஹவ் எ நைஸ் டே சார்…” என்று சிரிப்புடன் கூறிவிட்டு சென்றாள்.

அவள் சென்ற திசையையே பார்த்திருந்தவனின் பசி கூட மறை(ற)ந்து போனது.

இரவு வரை அவளைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தவனிற்கு ஒன்று மட்டும் நிச்சயமானது. அது அவளின் மீது அவனிற்கு இருக்கும் ஈர்ப்பு… அது ஈர்ப்பு மட்டுமா இல்லை அதற்கும் மேலா என்பதை காலத்தில் கைகளில் விட முடிவு செய்தான்.

சரியாக 8 மணிக்கு சதீஷுடன் வெளியே சென்றான். அப்போது நிஷாவும் தன் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவன் புன்னகைக்க, அவளும் லேசாக புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அதற்கடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது. மூன்றாம் நாள் அந்த ஹோட்டலில் பார்ட்டி களைக்கட்டத் துவங்கியது. அப்போது தான் அர்ஜுன் யாரென்று நிஷாவிற்கு தெரிந்தது.

அவனின் உயரம் உணர்ந்தவள், அவன்மீது தோன்றிய ஈர்ப்பை எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

ஆம் ஈர்ப்பே… அவனின் கண்ணியமான பார்வையோ, கம்பீரமான குரலோ, தனக்காக பேசிய நல்ல மனமோ… இல்லை இவையெல்லாம் சேர்த்தோ அவன்மீது ஈர்ப்பு தோன்ற காரணமாகியது.

ஆனால் இப்போது அவனின் வளர்ச்சி கண்டு மலைத்தாள். இது சரிப்பட்டு வராது என்று உறுதியாக நம்பியவள், தன் ஈர்ப்பை மனதிற்குள் புதைத்து, மனதிற்கு கடிவாளமிட்டாள்.

அம்மூன்று நாட்கள் கொண்டாட்டம் முடிந்து, அர்ஜுன் ஊருக்கு கிளம்பும்போது, இவளிடம் தலையசைத்து தான் சென்றான். அந்நொடியை இயல்பாகக் கடக்க, அவள் பட்ட பாடு அவளிற்கு மட்டுமே தெரியும்.

வேகவேகமாக நாட்கள் ஓடின… அவனைப் பார்த்து நான்கு மாதங்களாகின… ஒவ்வொரு நாள் எழும்போதும், ‘இனி அவனைப் பார்க்கப்போவது இல்லை… தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்க்கக் கூடாது…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே எழுவாள். ஆனால் இப்படி சொல்லிச் சொல்லி அவனையே மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.

அன்றும் அது போலவே எழுந்து தன் வேலைகளை முடித்து ஹோட்டலிற்கு கிளம்பினாள். அங்கு அனைவரும் பரப்பரப்பாக இருக்க, அவள் தன் தோழியிடம் விசாரித்தாள்.

“நிஷா உனக்கு தெரியாதா… நம்ம விகாஸ் ஜியோட குரூப் இங்க ஸ்டே பண்ண வந்திருக்காங்க… அவங்களோட அடுத்த படம் நாளைக்கு ரிலீசாகப் போகுதுல…” என்றாள்.

அதைக் கேட்டவள் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது. அவனைத் தேடும் கண்களைத் திருப்பி வேலை செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள்.

“எப்போவும் படம் ரிலீசாகி சக்ஸஸ் பார்ட்டிக்கு தான இங்க வருவாங்க…” என்ற தன் சந்தேகத்தை கேட்டாள் நிஷா.

“ஆமா நிஷா… ஆனா இந்த டைம் படம் கண்டிப்பா சக்ஸஸாகிடும்னு ரொம்ப நம்பிக்கைன்னு பேசிட்டு இருந்ததா கேள்விப்பட்டேன்… எல்லாம் அர்ஜுன் சார் வந்ததுனாலன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”

அர்ஜுனின் பெயரைக் கேட்டதும் இனிய படபடப்பு மனதினுள் தோன்றியது. அந்த நாள் முழுவதும் அதே படபடப்புடன் வேலைகளைப் பார்த்தவள், கிளம்பும் நேரம் வரவே, மேனேஜரிடம் சொல்லிவிட்டு செல்ல அவரைத் தேடினாள்.

“எதுக்கும் லான் போய் பாரு…”என்று அவளின் தோழி கூற, நிஷாவும் அங்கு சென்றாள்.

ஆனால் அங்கு சென்றதும் அவள் கண்டது, முகத்தில் பதட்டம் சூழ, ஒரு வித அழுத்தத்தில் அமர்ந்திருந்த அர்ஜூனைத் தான்.

அவனின் சோர்ந்த முகம் அவளை ஏதோ செய்ய, அதற்குமேல் யோசிக்காமல் அவனருகே சென்றாள்.

“சார்…” என்று அவள் கூப்பிட்டதும் திரும்பியவனின் முகம் ஒருநொடி மலர்ந்தது.

“ஹாய் நிஷா…” என்றான்.

தன்னை யாரென்று தெரியாது என்று கூறிவிடுவானோ என்ற எண்ணம் அவள் மனதை குழப்பிக் கொண்டிருக்க, தன்னைக் கண்டதும் அவன் முகம் ஒளிர்ந்ததும், தன் பெயரைக் கூட மறக்காமல் அவன் சொன்னதும் அவளிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

(அவர்களின் ஆங்கில உரையாடல் தமிழில்)

“சார் நீங்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க… உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா… என்னால முடிஞ்சத நான் கண்டிப்பா செய்யுறேன்…” என்றாள் சிறிது தயக்கமாகவே…

அர்ஜுனிற்கு ஆச்சர்யம் தான். இதற்கு முன்னால் ஒருமுறை அவன் மனநிலை சரியில்லாத போதும், இதே போலவே அன்றும் கேட்டாள். அதே ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தவன், “நிஷா எங்கூட ஒரு 5 மினிட்ஸ் பேச முடியுமா…?” என்றான்.

முதலில் சற்று யோசித்தவள், அவனின் கெஞ்சும் முகம் கண்டு இறங்கியவளாய் அவன் அருகே அமர்ந்தாள். “ஏதாவது பிரெச்சனையா சார்…?” என்றாள்.

“ஹ்ம்ம் பிரெச்சனைன்னு சொல்ல முடியாது நிஷா… ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்ட்டா இருக்கேன்… இது விகாஸ் சாரோட சேர்ந்து ஒர்க் பண்ற இரண்டாவது படம்… அதுக்கே என்மேல நம்பிக்கை வச்சு இந்த படம் எப்படியும் சக்ஸஸாகிடும்னு இங்க வந்துருக்காங்க… ஒருவேள இந்த படம் ஃபிலாப் ஆகிடுச்சுனா என்ன பண்றதுன்னே தெரியல… என்ன நம்புன விகாஸ் சாருக்கு நான் என்ன சொல்றதுன்னும் தெரியல… ஏன்னா இந்த படம் முழுக்க முழுக்க என் ஐடியா… எப்போடா இவன் கால வாரிவிடுறதுன்னு நெறையா பேரு காத்திட்டு இருக்காங்க… இப்போ ஏதாவது ஒண்ணு தப்பா நடந்தாலும் அவங்க அத பெருசாக்கி என் கரீயரே ஸ்பாயில் பண்ணிடுவாங்க…” – இங்கு வந்ததிலிருந்தே தன் மனதில் ஓடிக் கொண்டிருந்ததை அவளிடம் கொட்டினான்.

அவளோ சிறு சிரிப்புடன், “சார் இந்த படம் உங்க ஐடியாங்கிறப்போ கண்டிப்பா உங்க ஹண்ட்ரட் பெர்ஸன்ட் உழைப்ப நீங்க போட்டுருப்பீங்க… அண்ட் நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு உங்களுக்கு தெரியாது… அத மாத்தவும் முடியாது… இந்த நிமிஷம் மட்டும் தான் நம்ம கைல இருக்க… சோ ரிலாக்ஸ்டா இருங்க… நல்லதே நடக்கும்னு நம்புவோம்… கண்டிப்பா உங்க படம் சக்ஸஸ் ஆகும்…” என்றாள் நம்பிக்கையுடன்.

அவளின் பேச்சைக் கேட்டவன், அப்போதும் அவளிடத்தில் தன் தாயை உணர்ந்தான். தான் ஒவ்வொரு முறையும் சோர்ந்து அமர்ந்திருக்கும்போது தன் அன்னை தன்னை உற்சாகப்படுத்த இவ்வாறு தான் பேசுவார். அதை யோசித்துக் கொண்டிருந்தவன், அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

நிஷாவோ தான் பேசிய பின்பே என்ன பேசினோம் என்பதை உணர்ந்தவள், ‘ரொம்ப பேசிட்டோமோ… அவரு என்ன நெனைப்பாரு…’ என்று குழம்பியவாறே அவனைக் கண்டாள். அவனின் கண் சிமிட்டாத பார்வையில், அவளின் கன்னங்கள் சிவக்க, கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “சார்…” என்று உரக்க அழைத்தாள்.

அவளின் அழைப்பில் சிந்தை கலைந்தவன், “தேங்க்யூ சோ மச் நிஷா… இவ்ளோ நேரம் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன்… இப்போ நீங்க பேசுனத கேட்டு அந்த டென்ஷன் குறைஞ்ச மாதிரி இருக்கு… தேங்க்ஸ் ஒன்ஸ் அகேயின் நிஷா…” என்றான்.

“யூ ஆர் வெல்கம் சார்… சரி சார் நான் கிளம்புறேன்…” என்றாள் நிஷா.

அவள் வீடு செல்ல கிளம்பியிருப்பதைக் கண்டவன், “சாரி நிஷா… உங்க டைம்ம வேஸ்ட் பண்ணிட்டேனோ…” என்றான்.

“ச்சே ச்சே அப்படிலாம் இல்ல சார்… அட்வான்ஸ் விஷ்ஷஸ் சார்…” என்று சிரித்தவாறே அவனிடமிருந்து விடைபெற்று சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்தவனிற்கு தெரிந்தது தனக்கும் அவளிற்கு இடையே இருப்பது ஈர்ப்பு அல்ல காதல் என்று.

“அர்ஜு… யாரு டா அந்த பொண்ணு… ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு…” என்று கேட்டுக் கொண்டே வந்தான் சதீஷ்.

“அது… அது பிரென்ட் டா… ரொம்ப நேரமெல்லாம் இல்ல… ஜஸ்ட் 10 மினிட்ஸ்ஸா தான் பேசிட்டு இருந்தோம்…”

“ஓ… அப்படி யாரு எனக்கு தெரியாதா பிரென்ட்…?” என்று மேலும் துருவித் துருவி சதீஷ் கேட்க, சற்று நேரம் தாக்குப் பிடித்த அர்ஜுன், அதற்கு மேல் முடியாமல் போக, “ஹே என்ன தான் டா தெரியணும் உனக்கு…?” என்று கேட்டான்.

“ஹாஹா அப்படி வா டா வழிக்கு… இவ்ளோ நேரம் ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருந்துருக்க… அதுவும் நாளைக்கு படம் ரிலீஸாகப் போற டென்ஷன்ல… யாருன்னு கேட்டா… இவரு பிரெண்டுன்னு சொல்லுவாராம் இத நாங்க நம்பனுமா… உனக்கு அந்த பொண்ண பிடிச்சுருக்குன்னு நல்லாவே தெரியுது… என்ன மச்சி லவ்வா…”

அழகாக புன்னகைத்தவன், “ம்ம்ம் இப்போ தான் டா நானே கன்ஃபார்ம் பண்ணேன்…” என்றான்.

பின் அவனின் காதல் கதையை சுருக்கமாக சதீஷிடம் கூறினான். “டேய் என்ன ஒரு நாலு தடவ பார்த்துருப்பியா… அதுக்குள்ள லவ்வுன்னு எப்படி டா சொல்ற…?”

“தெரியல டா… பார்த்தவொடனே ஏதோ ஸ்பார்க்… அவ கூட இருந்தா எங்க அம்மா கூட இருக்குற ஃபீலிங்… ரொம்ப க்ளோஸா ஃ பீல் பண்றேன்… இதுக்கு மேல அத எப்படி சொல்றதுன்னு தெரியல…” என்றான் அர்ஜுன்.

“ஹ்ம்ம் ஏதோ சொல்ற… நமக்கெல்லாம் இந்த லவ்வு செட்டாகாது… எனக்கு என் அத்த பொண்ணு தான்னு அப்போவே ஃபிக்ஸ் பண்ணி வச்சுட்டாங்க…” என்று தன் சோகக் கதையை சொல்லிக் கொண்டிருந்தான் சதீஷ்.

அடுத்த நாள்… அந்த படத்திற்காக உழைத்தவர்கள் அனைவரும் முடிவிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். படம் அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அமோக வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது.

இங்கு அர்ஜுனிற்கு அனைவரும் அழைத்து அவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, அவனோ தன்னவளை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான். மாலை வரையிலும் அவள் கண்ணிற்கே தென்படவில்லை. அவளைக் காணாமல் சற்று சோர்ந்து தான் போயிருந்தான்.

“ஏன் உன் மூஞ்சி ஃபியூஸ் போன பல்ப் மாதிரி இருக்கு…?” என்று கேட்டான் சதீஷ்.

“ப்ச்… ஒண்ணும் இல்ல…” என்றான் சோர்வுடன்.

“ஓ… எல்லாம் காதல் படுத்தும் பாடு…” என்றான் சதீஷ் கிண்டலாக…

“டேய் இப்போ என்ன டா வேணும் உனக்கு…?” என்றான் எரிச்சலாக.

“ஹ்ம்ம் எனக்கு ஒண்ணும் வேணாம்… அவங்க தான் உன்ன பார்க்கணும்னு ரொம்ப நேரமா இங்கயே பார்த்துட்டு இருக்காங்க…” என்று தூரத்தில் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நிஷாவைக் காட்டினான்.

நிஷாவைப் பார்த்ததும் அர்ஜுனிற்கு உற்சாகம் பிறக்க, சிரித்துக் கொண்டே அவன் தோளைத் தட்டிய சதீஷ் அங்கிருந்து நகர்ந்தான்.

சதீஷ் அங்கிருந்து நகர்ந்ததும் அங்கு வந்த நிஷா, “கங்கிராட்ஸ் சார்…” என்று கையில் வைத்திருந்த பூங்கொத்தை நீட்டினாள்.

அர்ஜுனிற்கு தான் அவள் ஏதோ காதலை சொன்னது போலத் தோன்றியது. அப்படி காதலை சொன்னால் எப்படியிருக்கும் என்று அவன் கற்பனை மேலும் விரிய, நிஷாவோ தான் நீட்டிய பூங்கொத்தை வாங்க யோசிக்கிறானோ என்று முகம் சுருங்கினாள்.

அவளின் முகத்தைக் கண்டவன், அவள் யோசனை செல்லும் வழியை அறிந்தவன் போல சட்டென்று அவள் கையோடு பூங்கொத்தை பற்றினான்.

அதில் அதிர்ந்தவள், அவனைப் பார்க்க, அவனோ முதல் நாள் பார்த்த அதே குறும்பு சிரிப்புடன் இருந்தான்.

“தேங்க்ஸ் நிஷா… இட் மீன்ஸ் எ லாட்…” என்று அவள் கொடுத்த பூங்கொத்தை பார்த்துக் கூறினான். அதில் அவள் முகம் மலர்ந்ததையும் கண்டான்.

அடுத்த மூன்று நாட்கள், அவர்கள் இருவரும், இரவு நிஷா வேலையை முடித்துவிட்டு செல்லும் நேரம் சந்தித்துக் கொண்டனர். பொதுவான விஷயங்களை பேசியவர்கள் தங்கள் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.

நிஷா, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவள். தந்தைக்கு சொந்த ஊர் ராஜஸ்தான் என்றாலும், அவள் தாய்க்கு சொந்த ஊர் புனே அருகிலுள்ள கிராமம். அவளின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட, ஒரே பெண் குழந்தையை வைத்து அவள் அன்னை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

ராஜஸ்தானில் குழந்தைத் திருமணங்களும் பல மூட நம்பிக்கைகளும் இயல்பான விஷயமாக இருந்த காலம்… இவர்களின் நிலையை பயன்படுத்த எண்ணிய சில கயவர்கள், நிஷாவை 40 வயது முதிர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்குமாறு நிஷாவின் அன்னையை வற்புறுத்தி வந்தனர். அப்போது நிஷாவிற்கு 12 வயதே ஆனது. அவர்களின் தொல்லை தாங்காமல், நிஷாவை தன் தமையனுடன் தன் பிறந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

புனே வந்ததும் தான் நிஷா அவளின் படிப்பை ஆரம்பித்தாள். இப்போதும் அன்னையை பார்க்க வேண்டுமென்றால், அவர் தான் தமையனின் வீட்டிற்கு வருவார். நிஷா அங்கு அதற்குப்பின் செல்லவே இல்லை.

இதையெல்லாம் அர்ஜுனிடம் கூறியபோது, ‘நல்லவேள என் வருங்கால மாமியார் உன்ன இங்க தொரத்தி விட்டுட்டாங்க… இல்லனா என் நிலைமை என்ன ஆகுறது…’ என்று அவன் மனதில் தோன்றியதை சத்தமாகவே கூறினான். அவன் தமிழில் கூறியதால் அவளிற்கு புரியாமல் முழித்தாள்.

அர்ஜுனும் அவன் குடும்பத்தை பற்றி அவளிடம் பகிர்ந்து கொண்டான். ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம் அவர்களின் குடும்பம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் அவர்களின் தொழில் கிளைபரப்பியிருந்தது. ஆனால் யார் காண்பட்டதோ அந்த ஒரு சம்பவத்திற்கு பிறகு அனைத்தும் சரிந்தது. வரிசையாக பல மரணங்கள், தொழிலில் நஷ்டங்கள் என்று பல சரிவுகளைப் பார்த்து வளர்ந்தவன் தான் அர்ஜுன்.

“இப்போ எங்கூட கூட இருக்குறது என் பாட்டியும் அம்மாவும் தான் நிஷா… எங்க அம்மாவோட அண்ணா சப்போர்ட்ல தான் இப்போ இருக்கோம்… ஆனா என் லட்சியமே எங்க பாட்டி அம்மா வாழ்ந்த அந்த பூர்விக வீட்டையும் அவங்க இழந்த சொத்தையும் அவங்களுக்கு நான் திருப்பி தரணும்… அதுக்காக தான் இப்படி உழைச்சுட்டு இருக்கேன்…” என்றான் அர்ஜுன்.

நிஷாவோ அவன் கைகளின் மேல் தன கையை வைத்து அழுத்தி, “நிச்சயமா நீங்க சொல்றது நடக்கும்…” என்றாள் நம்பிக்கையுடன்.

இவர்களின் இந்த பேச்சினால் தான், பிற்காலத்தில் ஒரு கோரத் தாண்டவம் நிகழும் என்பதையோ, அதனால் எத்தனையோ பேர் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதையோ அவர்கள் இருவரும் அறிந்திருக்க வில்லை.

அவளின் சிரிப்பில் மயங்கியவன் அப்போது தான் அவள் கை தன் கைகளில் மேல் உள்ளதை கவனித்து அவளிற்கு கண்ஜாடை காட்ட, அவளும் அதை அப்போது தான் உணர்ந்திருந்தாள். சட்டென்று கையை எடுத்தவள், சிவந்திருக்கும் தன் கன்னங்களை மறைத்து அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், “நா… நான்… கிளம்புறேன்…” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அந்த கள்வனோ அவளின் கன்னச் சிவப்பை ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் சென்ற பின்பும், அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தோளில் தட்டிய சதீஷ், “அடேய் உன் ஆளு போய் ரொம்ப நேரமாச்சு… இன்னும் என்ன ஃப்ரீஸாகி உட்கார்ந்திருக்க… அட்லீஸ்ட் இன்னைக்காச்சும் உன் லவ்வ சொன்னீயா…?” என்று வினவினான்.

அர்ஜுனோ புன்னகையோடு இடவலமாய் தலையசைத்தான். “காதல் சொல்லி தான் தெரியணும்னு இல்ல… என்னோட காதல அவ உணர்ந்துருக்கா… அவ காதல நான் உணர்ந்துருக்கேன்… மொத்தத்துல எங்க காதல நாங்க உணர்ந்துருக்கோம்… இது போதும் டா இப்போதைக்கு…” என்று காதலை அனுபவித்து கூறினான்.

“டேய் அர்ஜு செம டையலாக் டா… இரு நோட் பண்ணிக்குறேன்… அடுத்த படத்துக்கு யூஸ் ஆகும்…” என்று அப்போதும் அவனை வாரினான் சதீஷ்.

அதன்பிறகு இருவரும் அலைபேசி வழியே தங்கள் சொல்லாத காதலை (!!!) வளர்த்தனர். அவர்களின் பேச்சில் காதலோ விரசமோ இருக்காது… ஆனால் அன்பும் அக்கறையும் நிறைந்திருக்கும்.

இப்படியே நாட்கள் கடந்து மாதங்கள் செல்ல, அடுத்து புயல் வேகத்தில் படத்தை முடித்தவர்கள், அதன் வெற்றிவிழாவை வேறு இடத்தில் கொண்டாட திட்டமிட்டனர்.

இதனை அறிந்த பாவைக்குத் தான் ஏமாற்றமாக இருந்தது. பல மாதங்கள் கழித்து அவனை நேரில் காணலாம் என்று அவள் நினைத்திருந்தாள். அவள் நினைப்பில் மண்ணள்ளி போடுவது போல இந்த செய்தி கிடைக்க, அதன் ஏமாற்றம் கோபமாக உருவெடுத்தது. சொல்லா காதலில் முதல் ஊடல்…

அன்றிரவு அர்ஜுன் பேசும்போது அவள் சரியாக பதிலளிக்க வில்லை. அவன் விடாமல் அதற்கான காரணத்தைக் கேட்க, நேரில் வந்து கேட்குமாறு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

அவள் அழைப்பைத் துண்டித்ததும் முதலில் அதிர்ந்த அர்ஜுன், பின் யோசித்ததில் அவள் கோபத்திற்கான காரணம் விளங்க, சதீஷிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்… தன்னவளைக் காண…

அடுத்த நாள் காலை… எழும்போதே அர்ஜுனிடம் உரையாடியதை நினைத்தவள், ‘ச்சே என்ன பேசி வச்சுருக்கேன்… அவரு என்ன நெனைப்பாரு… இப்போ கால் பண்ணி பேசிடுவோமா…’ என்று நினைத்தவள் மணியைப் பார்க்க, மிகவும் தாமதமாக எழுந்திருந்தாள்.

‘சரி நைட் ஒரு சாரி கேட்டுடுவோம்…’ என்று எண்ணியவளாக வேலைக்குச் சென்றாள்.

அவள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயம், “எக்ஸ்க்யூஸ் மீ…” என்று வெகு பரிச்சயப்பட்ட குரல் அவளருகில் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்.

வசீகரிக்கும் சிரிப்புடனும், தன்னவளைக் கண்ட மகிழ்ச்சியுடனும் நின்றிருந்தான் அவன்… அர்ஜுன்…

அவனை திடீரென்று கண்டதும் உணர்ச்சி குவியலில் சிக்கியவள் போல தவித்தாள் அவனவள்.

அர்ஜுனோ தன்னவளின் தவிப்பை காண முடியாமல் அன்று போல், ‘ரிலாக்ஸ்’ என்று வாயசைத்தான். அவளை அணைத்து சமாதானப்படுத்தும் எண்ணம் தோன்றினாலும், அவர்கள் இருக்குமிடம் அதைத் தடுத்தது.

நிஷாவும், அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

“எஸ் சார்… ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ…?” என்றாள் சிரிப்புடன்

“கேன் ஐ கெட் அ சிங்கிள் பெட்ரூம்…”

அவனிடம் வம்பு வளர்க்கத் தோன்றியது நிஷாவிற்கு…

“சாரி சார்… நோ சிங்கிள் பெட்ரூம் இஸ் வேகண்ட் நொவ்… ஷால் ஐ ஸ்விட்ச் இட் டு எ டபுள் பெட்ரூம்…?” என்றாள்.

அவளின் குறும்பை உணர்ந்தவன், “ஹ்ம்ம் டபுள் பெட்ரூம் புக் பண்ண எனக்கும் ஆச தான்..  ஆனா அதுக்கான ஆள் இன்னும் ஓகே சொல்லையே…” என்று மெல்ல தமிழில் முணுமுணுத்தான்.

அது நிஷாவிற்கும் கேட்டது. கண்களில் குறும்புடனும் உதட்டில் சிரிப்புடனும், “சார்… உங்களுக்கான ஸ்பெஷல் சிங்கிள் பெட்ரூம் தயாரா இருக்கு… இந்தாங்க அதுக்கான கீ…” என்றாள் தமிழில்.

அவள் தமிழில் பேசியதைக் கண்டு அதிர்ந்தவன் ஏதோ சொல்லப் போக, அதற்குள் அந்த ஹோட்டல் மேனேஜர் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

நிஷா, வேலைகளை செய்தாலும், அவளின் சிந்தனையெல்லாம் அவனைப் பற்றியே இருந்தது. ‘அவன் எதுக்காக இங்க வந்துருக்கான்… நான் சொன்னதுக்காகவா… ச்சே ச்சே… ஏதாவது ஷூட்டிங் சம்பந்தமா இருக்கும்…’ என்று தனக்குள்ளேயே குழம்பினாள். பின் அவன் தமிழில் பேசியதை நினைத்து கன்னங்கள் சிவந்தன. மேலும் தான் தமிழில் பேசியதைக் கண்டவனின் அதிர்ந்த முகம் சிரிப்பை வரவழைத்தது.

இவ்வாறு யோசித்தே அந்த நாள் முடிவிற்கு வந்தது. வேலைகளை முடித்தவள், தன் தோழியிடம் சொல்லிக் கொண்டு, ஹோட்டல் பக்கவாட்டிலிருந்த புல்வெளிக்குச் சென்றாள்.

அங்கு அவன் தனக்காக காத்திருப்பான் என்ற நம்பிக்கையில் சென்றவள், சுற்றிலும் தேடிப் பார்க்க, அவள் பின்னிலிருந்து, “என்ன தான் தேடுறியா…?” என்ற சத்தம் கேட்டது.

அவன் மூச்சுக்காற்று தன் மேனியில் பட, உடல் அதிர திரும்பாமலேயே நின்றிருந்தாள்.

அதற்கு மேல் பொறுமையற்றவனாக, அவளின் தோள் தொட்டு திருப்பினான். திரும்பியவள் அப்போதும் அவன் முகம் காணாமல் குனிந்திருக்க, அவளின் முகவாய் தொட்டு முகத்தை உயர்த்தியவன், “ஏற்கனவே ரெண்டு கேள்வி கேட்டுட்டேன்… இன்னும் பதில் சொல்லல…” என்று தமிழிலேயே கேட்டவன்,  “ஹ்ம்ம் இப்போ மூணாவது கேள்வி… எனக்காக தான் தமிழ் கத்துக்கிட்டியா…?” என்று கேட்டான்.

அவனின் நெருக்கத்தில் அவளின் தயக்கம் விலக, “உங்க கேள்விகளுக்கு தலைகீழ் வரிசைல பதில் சொல்லலாமா…” என்று அழகான தமிழில் கேட்டாள்.

அவளின் தமிழைக் கேட்டவன், ஒரு நொடி ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

அவளோ அவனின் பார்வையையே சம்மதமாக எடுத்துக் கொண்டு விடை கூற ஆரம்பித்தாள்.

“உங்க மூணாவது கேள்விக்கான பதில், எங்க ஹோட்டல்ல இப்போ நெறையா கெஸ்ட் சவுத்லயிருந்து வராங்க… அவங்களுக்கு உதவுறதுக்காக என்ன மாதிரி வரவேற்புல நிக்கிறவங்க தென்னிந்திய மொழிகளும் கத்துக்கணும்னு ஹோட்டல் ரூல்ஸ்… அதான் தமிழ் கத்துக்கிட்டேன்…”

“ரெண்டாவது கேள்விக்கான பதில், நான் வேலை முடிச்சு போறப்போ மேனேஜர் கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு போகணும்… அவரைத் தேடி தான் இங்க வந்தேன்…”

“அப்பறம் உங்க முதல் கேள்விக்கான பதில்…” என்று அவள் இழுக்க…

“இந்த கேள்விக்காவது உண்மைய சொல்வியா இல்ல மத்தது போல பொய் தான் சொல்வியா…” என்று சிரிப்புடன் வினவினான்.

நிஷா அவனை குழப்பமாக பார்க்க, அவளை இன்னும் நெருங்கியவன், “உன் ஹோட்டல்ல தென்னிந்திய மொழிகள்ல, எந்த மொழி வேணும்னாலும் படிக்கலாம்னு சொன்னப்போ, நீ எனக்காக தான் தமிழ் கத்துகிட்ட… அப்பறம் நீ உங்க மேனேஜர் கிட்ட சொல்லிட்டு வரத பார்த்துதான் இங்க வந்து உனக்காக வெயிட் பண்ணேன்…” என்று அதே குறும்பு சிரிப்புடன் கூறினான்.

அவன் தான் கூறிய பொய்களை கண்டுபிடித்ததுமில்லாமல், அவளருகே நெருங்கி நின்றது மூச்சுமுட்டுவது போல் இருக்க, அங்கிருந்து விலக முயன்றாள். ஆனால் அவளின் கள்வனோ அதற்குள் அவளை தன் கைச்சிறைக்குள் கொண்டு வந்திருந்தான்.

அவளின் காதருகே குனிந்து, “அந்த முதல் கேள்விக்கான விடையும் நானே சொல்லவா…” என்று கிசுகிசுக்க, அவன் மீசை அவளின் காதுகளை உரசி சென்ற அந்த அரை வினாடி அவளை ஏதோ செய்தது.

அவன் கேட்டது அப்போது தான் மூளைக்குள் செல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ புருவத்தை உயர்த்தினான். அதில் நாணியவள், மீண்டும் தலை குனிந்தாள்.

“ரொம்ப நாளைக்கப்பறம் என்ன பார்க்க நினைச்ச உனக்கு சக்ஸஸ் பார்ட்டி வேற இடத்துல அரேஞ் பண்றோம்ங்கிற செய்தி கிடைச்சுருக்கும்… என்ன பார்க்க முடியாம போன ஏமாற்றத்துல வந்த கோபம் தான் நேத்து இருந்த கோபம்… என்ன நிஷு நான் சொல்றது கரெக்ட்டா…” என்றான்.

‘அச்சோ கண்டுபிடிச்சுட்டானே…’ என்று மனதிற்குள் அவஸ்தையாக உணர்ந்தாள்… ஆனந்த அவஸ்தை…

“நிஷு… என்ன ஒண்ணும் சொல்ல மாட்டிங்குற…” என்று மீண்டும் கேட்டான்.

அவனின் ‘நிஷு’வில் அவன் மனம் தெளிவாக தெரிந்தாலும், தானே சொல்வதில் ஏதோ தயக்கம் ஏற்பட, அதை உணர்ந்தவனோ அவளை மேலும் தவிப்பில் ஆழ்த்தாமல், “சரி நானே சொல்றேன்…” என்றவன் அவள் முன் மண்டியிட்டான்.

“நிஷு… உன்ன பார்த்த அன்னைக்கே உன்மேல் எனக்கு ஈர்ப்பு இருந்துச்சுன்னு சொன்னா நீ நம்புவியா… அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சோன்னு பதட்டமா என்ன பார்க்க வந்தீயே… அப்போ உன்கிட்ட என் அம்மாவ பார்த்தேன்… அதுக்கப்பறம் இதோ இங்க தான், என் நம்பிக்கைய நானே சந்தேகப்படுற நிலைமை வந்தப்போ, எனக்கு தோள் கொடுத்த தோழியா உன்ன பார்த்தேன்… சினிமா உலகத்துல எத்தனையோ அழகிகள பார்த்தாலும் வராத உணர்வுகள் உன்ன பார்த்ததும், உன்ன பார்க்கும்போது மட்டும் எனக்கு வருதே… அது ஏன்னு நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்… அதுக்கான விடையா என் மனசு சொன்னது… இது தான் காதல்னு… ம்ம்ம்… நிஷா நல்லா யோசிச்சு சொல்லு… எனக்கு இன்னொரு அம்மாவா, நான் எதையும் பகிர்ந்துக்கும் தோழியா, நான் திகட்ட திகட்ட காதலிக்கும் காதலியா, என் மனைவியா வர உனக்கு சம்மதமா…?” என்று குரலில் எதிர்பார்ப்புடன் அவன் கேட்டான்.

நிஷாவோ வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்ச்சியின் பிடியில் இருந்தாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. தன்னை அன்னையாக, தோழியாக, மனைவியாக எண்ணி, தன்னை மட்டுமே காதல் செய்யும் ஒருவனை அவள் நிச்சயமாக அவளின் வாழ்க்கையில் எதிர்பார்த்திருக்க வில்லை.

ஆனால் இதோ வந்திருக்கிறானே… தன் சம்மதத்தை வேண்டி முட்டி போட்டு காத்திருக்கிறானே… என்ன சொல்வது… சம்மதம் என்ற ஒரு சொல் போதுமா, அவன் மீது இருக்கும் காதலைச் சொல்ல… அதை சொல்வதற்கு கூட வார்த்தைகள் வரவில்லை அவளிற்கு… அதற்கு பதில் கண்களிலிருந்து தாரை தாரையாக கொட்டியது கண்ணீர்.

அவளின் கண்ணீரைக் கண்டு பதறிய அர்ஜுன், “நிஷா, என்னாச்சு… எதுக்கு அழுகுற…  சாரி சாரி நான் அவசரப்பட்டுட்டேனா… இதுல உனக்கு சம்மதம் இல்லன்னா…” என்று அவன் கூறும் சமயம், அவன் அதை சொல்லி முடிப்பதற்கு கூட அவகாசம் தராமல் அவனை இறுக்கக் கட்டிக்கொண்டாள் அவனின் நிஷு…

பின் இருவரும் அவர்களின் மோன நிலையிலிருந்து வெளிவந்ததும் அவனைக் காண முடியாமல் வெட்கம் தடுக்க, அவளின் வெட்கத்தை ரசித்திருந்தான் அவளவன்.

“கடைசி வரைக்கும் பதில் சொல்லாம ஏமாத்திட்டேல…” என்று அவளை வம்பிழுக்க…

“வாயால சொன்னாதானா…” என்று அவள் முணுமுணுத்தாள்.

அதைக் கேட்டவன் மேலும் அவளை சீண்ட, “அஜு… ப்ளீஸ்…” என்று சிணுங்கினாள்.

அதற்கு பின் பேசியதெல்லாம் காதலர்களின் ‘ஸ்வீட் நத்திங்ஸ்’…

அர்ஜுன் அங்கிருந்த இரண்டு நாட்களும், நிஷா விடுப்பு எடுத்திருந்தாள். மற்றவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் ஊர் சுற்றினர். பல விஷயங்களை பேசினர். அதில் காதலர்களுக்கான அந்தரங்க விஷயங்களும் உண்டு… ஆனால் அதற்கும் ஒரு எல்லை வகுத்தே பேசினர்.

இவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷமாக அந்த நாட்களை கழித்தனர். அவன் ஊருக்கு செல்லும்முன், “படத்தோட சக்ஸஸ் பார்ட்டி இந்த டைம் டிலே ஆகுது நிஷு… ஒரு அவார்ட் ஃபங்க்ஷன் இருக்கு… சோ எப்படியும் இன்னும் ஒரு மாசம் ஆகும்… ஆனா பார்ட்டி உங்க ஹோட்டல்ல தான்… எப்படியும் அடுத்த மாசம் உன்ன பார்க்க வந்துடுவேன்…” என்று கூறியபடி அவளிடமிருந்து விடைபெற்றான்.

ஆனால் அது தான் அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளும் கடைசி நிமிடம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

********

சதீஷ், அர்ஜுன் – நிஷாவின் காதல் கதையை அவனிற்கு தெரிந்த அளவில் மகேந்திரனிடமும் (அர்ஜுனின் மாமா) தன் தந்தையிடமும் கூறினான்.

“முன்னாடியே தெரிஞ்சுருந்தா அந்த பொண்ண எப்படியாவது இங்க கூட்டிட்டு வந்து அர்ஜுனுக்கு கட்டி வச்சுருப்பேனே தம்பி…” என்று மகேந்திரன் வருத்தப்பட்டார்.

“அங்கிள் நான் வேணா இந்தியாக்கு போய் நிஷாவ கூட்டிட்டு வரேன்… எனக்கு தெரிஞ்சு அவ வேறொருத்தர கல்யாணம் பண்ணியிருக்க மாட்டா… அப்படியே அவளுக்கு கல்யாணம் ஆகிருந்தாலும், அர்ஜுன் மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லிட்டு வரேன் அங்கிள்…”

“இல்ல தம்பி ‘அது’ உங்களையும் ஏதாவது….”

“இல்ல அங்கிள்… நீங்க சொல்றத பார்த்தா, ‘அது’ அர்ஜுன தான் டார்கெட் பண்ணிருக்கு… சோ என்ன ஒண்ணும் பண்ணாது… நானும் அந்த ஊருக்கு போகலையே…” என்று கூறி அவர்கள் இருவரையும் சம்மதிக்க வைத்தான்.

“தம்பி நீங்க இந்தியாவுக்கு போறதோ… அந்த நிஷா பொண்ண பத்தின விஷயமோ இப்போதைக்கு அர்ஜுனுக்கு தெரிய வேண்டாம்…” என்றார் மகேந்திரன்.

அவர் எதற்காக கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டவன், “கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன் அங்கிள்…” என்றான்.

இவர்கள் யாருக்கு தெரியக் கூடாது என்று நினைக்கின்றனரோ, அவன் வெளியே நின்று அனைத்தையும் கேட்டு விட்டான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

******

விடுதியின் மொட்டைமாடியில் அருவமாய் நின்றிருந்த நிஷாவும் தங்களின் கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் மட்டும் வராமலேயே போயிருந்தால்…

இன்று அவனும் அவளும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பர் அல்லவா… இன்று… அவன் அவளிடம் காதலை உரைத்து நாள்…

இந்த பத்து வருடங்களை எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டிருந்தாள்…. அனைத்தும் கனவாகவே போனது… தன் கனவை கலைத்தவளை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் அவளுள் இருந்தாலும், இப்போது முக்கியமாகப் பட்டது அவளவனின் உயிர் தான். அதைக் காப்பதற்காகத் தானே அவள் உயிர் துறந்தாள்…

அமானுஷ்யம் தொடரும்…

இன்றைய அமானுஷ்ய இடம்…

ராஜ்கிரண் ஹோட்டல் (Rajkiran hotel, Lonavala)

லோனாவாலா, மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். மும்பை, புனே போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்களின் வாரயிறுதி நாட்களை செலவு செய்யும் இடமாகவும் உள்ளது. இங்குள்ள பசுமை காட்சிகளும், இனிய வானிலையும், இவ்விடத்தை சிறந்த சுற்றுலா தளமாக்கியிருக்கிறது.

இதனாலேயே இங்கு மூலை முடுக்குகளிலெல்லாம் ஹோட்டல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் இந்த ராஜ்கிரண் ஹோட்டல். பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதால், இந்த ஹோட்டல் புறநகர் பகுதியில், ஒதுங்கியிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஹோட்டல், நகருக்கு மத்தியில், முக்கிய இடத்தில் தான் அமைந்துள்ளது.

அந்த ஹோட்டலில் இருக்கும் ஒரு அறையில் தான் வித்தியாசமான நிகழ்வுகள் நடப்பதாக அங்கு தங்கிய விருந்தினர்கள் கூறுகின்றனர். அந்த அறை தரைத்தளத்தில், வரவேற்புக்கு பின்னால் இருக்கிறது.
 
அங்கு தங்கியவர்கள், இரவு நேரத்தில் போர்த்தியிருக்கும் போர்வையை யாரோ இழுப்பதாகவும், காலையில் முழித்து பார்க்கும்போது, காலருகில் வித்தியாசமாக நீல நிறத்தில் ஏதோ ஒளி தெரிவதாகவும் , தங்களை யாரோ கவனித்துக் கொண்டே இருப்பதாக தோன்றியதாகவும் கூறுகின்றனர்.

அந்த அறையில் யாரும் தங்க மறுப்பதால், அது நிரந்தரமாக மூடப்பட்டது என்று கூறுகின்றனர்.

இதுவரை நாம் கண்ட அமானுஷ்ய இடங்களில், அந்த இடம் அமானுஷ்யமாக இருப்பதன் காரணம் என்று ஒன்று கூறப்பட்டது. ஆனால் ராஜ்கிரண் ஹோட்டல் அறையின் அமானுஷ்யத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியே தெரியவில்லை.