மிரட்டும் அமானுஷ்யம் 13

 

மிரட்டல் 13

 

சதீஷின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர், எல்லாம் இயல்பாக இருப்பதாகக் கூறினார். சதீஷின் தந்தை, சதீஷ் இந்தியா செல்வது குறித்து கூற, “அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க சதீஷ்…” என்று அந்த மருத்துவர் அறிவுறுத்தினார்.

 

ஆனால் சதீஷ் இந்தியா சென்றவுடன் ஓய்வெடுத்துக் கொள்வதாகக் கூறி அந்த மருத்துவரையும், தன் தந்தையையும் சமாளித்து விட்டான்.

 

அர்ஜுனின் மாமாவிடம் சொல்லி அடுத்த நாளே இந்தியாவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டான். 

 

சதீஷ் கிளம்பும்போது அர்ஜுன் அங்கு இல்லாததை கவனித்தவன், “அங்கிள், அர்ஜு எங்க…?” என்று கேட்டான்.

 

“பிசினஸ் விஷயமா மலேஷியா போறேன்னு சொல்லி இன்னிக்கு ஏர்லி மார்னிங்கே கிளம்பிட்டான் தம்பி… நீங்க இந்தியா போறது அவனுக்கு இன்னும் தெரியாது… சீக்கிரமா பிசினஸ் வேலைகள முடிச்சுட்டு உங்கள பார்க்க வரேன்னு சொல்லிட்டு போயிட்டான்…” என்றார்.

 

“கவலப்படாதீங்க அங்கிள்… அவன் இங்க வரதுக்குள்ள நிஷாவ தேடி கண்டுபிடிச்சு இங்க கூட்டிட்டு வந்துடுறேன்… என்னால அவன் இழந்த நினைவுகளையும் வாழ்க்கையையும் அவனுக்கு கண்டிப்பா மீட்டுக் குடுப்பேன் அங்கிள்…” என்று சொல்லிவிட்டு விமான நிலையத்திற்கு வந்தான்.

 

பத்து வருடங்களாக கோமாவில் இருந்தவனிற்கு, எழுந்த அடுத்த நாளே இப்படி ஒரு பயணம் மேற்கொள்வது சாத்தியமன்று தான். ஆனால் இப்போது அவன் மேற்கொள்ளப் போகும் காரியம் நண்பனின் வாழ்க்கைக்காக அல்லவா… அதை எக்காரணத்திற்காகவும் தள்ளிப் போட அவன் விரும்பவில்லை. ஆனால் இப்போது அங்கு சென்றாலும் பயனொன்றும் இல்லை… எல்லாம் கைமீறி சென்றுவிட்டது என்று அவனிற்கு தெரியவில்லை… தெரியும் சமயம்…

 

விமான நிலையத்தை அடைந்தவன் மற்ற ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். பத்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை யோசித்துக் கொண்டிருந்தவனின் அருகில் யாரோ அமர்வதை உணர்ந்து திரும்பியவனிற்கு, அங்கு அர்ஜூனைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

 

“அர்ஜு… நீ… இங்க…” என்று திக்கினான் சதீஷ்.

 

“நானும் உன்னோட இந்தியா வரேன் சதீஷ்…” என்றான் உறுதியான குரலில்.

 

“உனக்கு எப்படி நான் இந்தியா போறது தெரியும்…?”

 

“நேத்து நீ மாமா கிட்ட சொன்னத நான் கேட்டுட்டேன் சதீஷ்…” என்றான் அர்ஜுன். அவன் குரளிலிருந்த விரக்தியை அறிந்து அவன் தோளில் ஆதரவாக தட்டினான் சதீஷ்.

 

“சாரி என்னால தான்…” என்று சதீஷ் ஆரம்பிக்க.

 

“ப்ச் சதீஷ் அதுக்கு நீ காரணமில்ல… எப்படியிருந்தாலும் ‘அது’ என்ன அங்க வரவச்சுருக்கும்…” என்றான் அர்ஜுன்.

 

“அர்ஜு… ‘அது’ வந்து…” என்று சதீஷ் மீண்டும் தயங்க…

 

“மாமா உங்கிட்ட சொன்னதையும் கேட்டேன்… அந்த வீட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… ‘அது’ எதுக்கு என்ன கொல்ல துடிச்சதுன்னு அவரு சொன்ன எல்லாத்தையும் கேட்டேன்… ஆனா ‘அது’ ஏன் என்ன கொல்லாம விட்டதுன்னு தான் தெரியல…”

 

“அர்ஜு உனக்கு அங்க நடந்தது நியாபகம் வரலையா…” 

 

மீண்டும் விரக்தி சிரிப்பு அவன் உதட்டில் எட்டிப் பார்க்க, “உயிருக்குயிரா காதலிச்சவளோட நியாபாகமே இல்லாம இருக்கேன்…” என்றவனின் குரல் உடைந்திருந்தது.

 

“அர்ஜு…” என்று அவனை சமாதானப்படுத்த முயன்ற சதீஷை தடுத்தவன், “நீ சொன்னதுலயிருந்தே நாங்க ஒருத்தருகொருத்தர் எப்படி காதலிச்சுருப்போம்ன்னு என்னால உணர முடியுது… ஆனா உணர மட்டும் தான் முடியுது… இன்னமும் எனக்கு அவ முகம் கூட நியாபகம் வரலையே டா… அப்போ நான் லவ் பண்ணது உண்மை இல்லையோன்னு தோணுது சதீஷ்… ச்சே பத்து வருஷம்… இந்த பத்து வருஷமும் நான் இல்லைங்கிற எண்ணத்தோட தான வாழ்ந்துட்டு இருப்பா… இப்போ போனாலும் இந்த பத்து வருஷம் அவ அனுபவிச்ச கஷ்டம் இல்லைன்னு ஆகிடுமா…”என்றான் அர்ஜுன்.

 

அவனைக் கண்டு வியந்து தான் போனான் சதீஷ். அவளின் நினைவே இல்லையென்றாலும் அவளிற்காக இவன் இப்போதும் துடித்து கொண்டு தானே இருக்கிறான். அர்ஜுன் மூலம் காதலின் வேறொரு பரிணாமத்தை கண்டவன், இனியேனும் அர்ஜுனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினான். 

 

“சதீஷ் எனக்கு நிஷா பத்தி இன்னும் சொல்லு… அட்லீஸ்ட் அப்போவாவது அவ நினைவு எனக்கு வருதான்னு பார்க்கலாம்…” என்றான்.

 

அதற்குள் அவர்களின் விமானத்திற்கான அழைப்பு வர, இருவரும் விமானத்தில் ஏறினர்.

 

சதீஷும் அவனிற்கு தெரிந்த அவர்களின் காதல் கதையைக் கூறினான்.

 

“சதீஷ், நம்ம அந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, ஐ மீன், அந்த படத்தோட சக்ஸஸ் பார்ட்டில நிஷாவ பார்க்கலையா…” என்று கேட்டான் அர்ஜுன்.

 

“அப்போ நிஷா புனேல இல்ல அர்ஜு… அவங்க மாமா அவசரமா வர சொன்னாங்கன்னு அங்க போயிட்டான்னு எங்கிட்ட சொன்ன…” என்றான்.

 

அப்போது அர்ஜுனின் மனதில் ஏதோவொரு உணர்வு தோன்றி மறைந்தது… என்னவென்று சொல்ல முடியாமல் மனதை பிசைவது போல உணர்ந்தவன், கண்களை மூடி படுத்து விட்டான்.

 

 *******

 

“என்னடா கடைசில இப்படி ஆகிடுச்சு…” என்று நூறாவது முறையாக புலம்பிக் கொண்டிருந்தான் விஷ்வா.

 

“ப்ச் விடுடா அதான் நாளைக்கு போலாம்ன்னு பிளான் போட்டாச்சுல…” என்று ஆதர்ஷும் அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். 

 

அவர்கள் அந்த கிராமத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்த அன்றைய நாள் காலை, பிரபல அரசியவாதி இறந்து விட்டாரென்றும், அவரின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால் அன்று ஒரு நாள் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்ததாகவும் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது.

 

அதைக் கண்டதிலிருந்தே, விஷ்வா இப்படி தான் புலம்பிக் கொண்டிருக்கிறான். ஆதர்ஷும் அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

 

ஆதர்ஷ் தான் இடையில் ஜானுவிற்கு அழைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான். 

 

“ச்சே சிங்கிள் டீக்கு கூட வெளிய போக முடியாம ஆகிடுச்சே…” என்று புலம்பியவனை இப்போது கண்டு கொள்ளாமல், அவனின் காதலை ஜானுவிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.

 

*********

 

இங்கு சாக்ஷியும் ஜானுவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். “ஏற்கனவே வீட்டுல சீக்கிரம் வர சொல்லிட்டு இருக்காங்க… இப்போ இந்த ஊரடங்கு வேற…” என்றாள் சாக்ஷி.

 

“விடு சாக்ஷி… அதான் நாளைக்கு போகலாம்ன்னு சொல்லிட்டங்கள…”

 

“ப்ச்… எனக்கு அதையெல்லாம் விட இங்க இருந்து எப்போ போவோம்னு தான் இருக்கு ஜானு… அந்த நிஷாவ நெனச்சா பயமா தான் இருக்கு…”

 

‘நிஷா’வின் பெயரைக் கேட்டதும் ஜானுவிற்கு தன்னால் ஒரு இறுக்கம் வந்தது.

 

ஏனென்றால், நிஷாவைப் பற்றி அறிந்த நாட்களிலிருந்து அவளை சுற்றி நடப்பதை அவளும் கவனித்து தான் வருகிறாள்.

 

இரவு நேரத்தில் தன்னை யாரோ உற்று பார்த்துக் கொண்டிப்பது போலவும்,  கண்ணாடியில் திடீரென்று அவள் முகம் பார்க்கும்போது, முகம் முழுக்க ரத்தம் ஒழுகுவது போன்றும், தன்னுடைய நிழலே அவளை பயமுறுத்துவது போன்றும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

 

அவள் தான் அதை சாக்ஷியிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏற்கனவே பயந்து கொண்டிருப்பவளை இதைக் கூறி இன்னமும் பயமுறுத்த விரும்பவில்லை. மேலும் இது போன்ற சம்பவங்கள் தனக்கு மட்டுமே ஏற்படுகின்றன, சாக்ஷிக்கு இது போன்ற அனுபவம் இல்லை என்பதை உணர்ந்தவள் அவளிடம் கூறவேண்டாம் என்ற தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

 

இரவு நேரம்… மழை பெய்து நின்றிருந்த சமயம்… ஜான்வியும் சாக்ஷியும் இரவுணவை முடித்தவர்கள், அவரவர் கட்டிலில் அமர்ந்து தங்களின். அலைபேசியில் கவனத்தை செலுத்தியிருந்தனர்.

 

“ஜானு உனக்கு தெரியுமா… பேய்ய பத்தி பேசிட்டு இருந்தா அங்க பேய் வருமாம்…” என்றாள் சாக்ஷி.

 

“அதுகென்ன இப்போ…”

 

“இல்ல நம்மளும் நிஷாவ பத்தி பேசுறோமே அவளும் இங்க…” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மின்சாரம் தடைப்பட்டது.

 

சாதாரண சூழ்நிலையாக இருந்திருந்தால் இருவரும் இயல்பாகவே இருந்திருப்பரோ… ஆனால் சாக்ஷி எழுப்பிய வினா இப்போதுள்ள நிலையை பூதாகரமாக்கிக் காட்டியது. இருவரும் மூச்சு விட மறந்திருந்தனர். இரவு நேர பூச்சிகளின் ஓசையைத் தவிர வேறு ஓசை அங்கு எழவில்லை.

 

சாக்ஷி ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘க்ரீச்’ என்ற ஒலி பேரொலியாக அவர்களின் செவியைத் தீண்டியது.

 

அதில் பயந்த சாக்ஷி, வேகமாக ஜானுவின் கட்டிலில் அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

 

மீண்டும் அதே ஒலி, இப்போது தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அறையில் ஒரு நாற்காலி உண்டு. பழைய துருப்பிடித்த நாற்காலி என்பதால், அதை நகர்த்தினால் இப்படி தான் சத்தம் கேட்கும். அந்த நாற்காலியை தான் யாரோ (!!!) நகர்த்துகிறார்கள் என்பது இருவருக்கும் தெரிந்தது. ஆனால் யாரென்று கேட்க இருவருக்குமே வாய் வார்த்தை வரவில்லை.

 

நொடிகள் கடந்து நிமிடங்களாகின. இப்போது மீண்டும் நிசப்தம். இருந்த இடத்திலிருந்து நகர்வதற்கு கூட இருவரும் யோசித்தனர். ஆனால் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது. 

 

அப்போது தான் ஜானுவின் கைகளில் அவளின் அலைபேசி தட்டுப்பட்டது. அதை சத்தம் வராமல் எடுத்தவள், சாக்ஷிக்கும் தான் செய்யப் போவதை உணர்த்தியவள், மெல்ல அலைபேசியிலிருந்து ஒளியைப் பாய்ச்சினாள்.

 

முதலில் அறையின் மூலையிலிருந்த நாற்காலி இருந்த இடத்தை நோக்கிக் காட்ட, அங்கு யாரும் இல்லை. நாற்காலியும் முன்பு இருந்தது போலவே இருந்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

 

மழைக் காற்று வீசியபோதும், இருவரின் உடலும் வியர்வையில் குளித்திருந்தது. ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட ஜானு, அவ்வறையின் ஒவ்வொரு இடமாக ஒளியைப் பாய்ச்சியபடி பார்த்தாள். எங்கும் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

 

இருவரும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர். திடீரென்று அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அடியிலிருந்து அதே ‘க்ரீச்’ என்ற சத்தம் கேட்டது.

 

பயத்தில் எச்சிலை விழுங்கினர். அந்த சத்தம் போகப் போக அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு பெருமூச்சு விட்ட ஜானு கட்டில் ஓரமாக சென்றாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த சாக்ஷி ‘வேண்டாம்’ என்று சைகையிலே சொல்ல, அவளோ அவள் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கட்டிலுக்கு அடியில் எட்டிப் பார்த்தாள்.

 

முதலில் கட்டிலின் கால் பகுதிலிருந்து பார்த்துக் கொண்டே வந்தவள், திடீரென்று கட்டிலின் மறுபுறம் ஏதோ அசைவு தெரிய, ஒளியை அங்கு காட்டினாள். முடி மறைத்த முகம் கண்டு ஒரு நொடி பயந்தவள், பின் மனதிற்குள் முடியை விரித்துப் போட்ட சாக்ஷியைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

 

அப்போது கட்டிலின் மேல் அவளின் தொடையை யாரோ சுரண்ட மேலே எழும்பி பார்த்தாள். அங்கு சாக்ஷி தான் அவளை பயத்தில் சுரண்டிக் கொண்டிருந்தாள். 

 

‘ப்ச் சாக்ஷி…’ என்று சொல்ல வந்தவள், ‘சாக்ஷி இங்க இருக்கான்னா அப்போ கீழ நான் பார்த்தது….’ என்ற சிந்தனை தோன்ற, உடனே கீழே பார்க்க, இப்போதும் அங்கு முடி மறைத்த முகம் இருந்தது.

 

மனதில் தைரியத்தை வரவழைத்தவள், அந்த முகத்திற்கு நேராக அலைபேசியை ஏந்தினாள்.

 

அங்கு கண்கள் இரத்தமாய் சிவந்திருக்க, முகம் கோரமாய் சிதைந்திருக்க, தன் கூரிய வெண்பற்களை கடித்துக் கொண்டிருந்த நிஷா தெரிந்தாள்.

 

ஜானுவிற்கு கத்துவதற்கு கூட சத்தம் எழவில்லை. உறைந்து போயிருந்தாள்.

 

பல நொடிகளாக ஜான்வியிடமிருந்து எந்த சத்தமும் இல்லாமல் போனதால், மிரண்ட சாக்ஷி அவளை உலுக்கினாள்.

 

ஜான்வி அப்போது தான் நிகழ்விற்கு வந்தாள். சாக்ஷி என்னவென்று கேட்க, ஜான்வி செல்வதற்குள் மீண்டும் கேட்டது அதே ‘க்ரீச்’ சத்தம்… இம்முறை மேலேயிருந்து.

 

மேலே பார்ப்பதற்கு கூட தோழிகள் இருவருக்கும் பயம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். எதுவும் செய்யமலேயே அவர்களுக்கு மூச்சு வாங்கியது.

 

சற்று நேரத்தில் அந்த சத்தம் நின்று போனது. ஆனாலும் இருவரும் வேறெங்கும் தங்கள் பார்வையை திருப்ப வில்லை. இப்போது எங்கோ எதுவோ சொட்டு சொட்டாய் ஒழுகும் சத்தம் கேட்டது. சாக்ஷி ஜான்வியை கேள்வியாக நோக்க, அவளோ இடவலமாய் தலையாட்டினாள்.

 

அப்போது சாக்ஷியின் கன்னத்தில் ஏதோ பிசுபிசுப்பாக பட்டது. என்னவென்று கையிலெடுத்து பார்த்தவளுக்கு அது இரத்தம் என்று புரிந்தது. தன்னிச்சையாக மேலே பார்த்தவள், பயந்து கத்தினாள்.

 

அங்கு தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தாள் நிஷா.

 

தோழிகள் இருவரும் கட்டிலிருந்து இறங்கி அறையின் கதவு பக்கம் ஓடினர். ஆனால் அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை. அது வெளிப்பக்கம் பூட்டியிருந்தது.

 

இருவரின் முகத்திலும் கலவரம்… கதவு திறக்க முடியவில்லை என்றதும் அவர்களின் அடுத்த யோசனை எதிர்பக்கம் இருந்த ஜன்னலைத் திறந்து யாரிடமாவது உதவி கேட்கலாம் என்பதே.

 

மெல்ல அடியெடுத்து வைத்தனர். முதலில் ஜான்வி செல்ல, அவளின் இடக்கையை தன் வலக்கையுடன் கோர்த்தவாறு சாக்ஷி சென்றாள். அப்படி செல்லும்போது, சாக்ஷி தயங்கியவாறு மேலே பார்த்தாள். அங்கு நிஷா இல்லை. மேலே பார்த்துக் கொண்டே தன் இடக்கையுடன் கோர்த்திருந்த கரத்தை அழுத்திவள், “மேல அவ இல்ல…” என்று முணுமுணுத்தாள்.

 

அதே ‘ஹஸ்கி’ வாய்ஸில், “ஏன்னா நான் இங்க இருக்கேன்…” என்ற குரல் அவளின் இடப்பக்க செவியில் ஒலித்தது.

 

‘என்ன இது பின்னாடி இருந்து சத்தம் கேக்குது… எனக்கு முன்னாடி தான ஜானு போனா…’ என்று யோசித்தவள், தன் வலக்கையை நோக்க, அது ஜான்வின் கரத்திற்குள் இருந்தது. ‘அப்போ இங்கிட்டு யாரு இருக்கா…’ என்று பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு இவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல தன் இரத்தம் வழியும் பற்கள் தெரியும்படி மர்மமாக சிரித்தாள் நிஷா.

 

மீண்டும் கத்த போனவளின் வாயை அழுத்தி மூடிய ஜான்வி, அவளை இழுத்துக் கொண்டு வேகமாக அந்த ஜன்னலை நோக்கி முன்னேறினாள்.

 

ஆனால் அவர்களின் முன் தோன்றிய நிஷா, இருவரையும் முறைத்து பார்த்தவள், இருவரின் கழுத்தையும் தன் இரு கரங்களால் பற்றி அவர்களை அந்தரத்தில்  தூக்கியவள், “இங்கிருந்து போக மாட்டீங்களா ரெண்டு பேரும்… நீங்க அங்க போனா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்… உங்கள அவங்க காப்பாத்திட்டு இருக்காங்களா… எத்தன நாள் இப்படி காப்பத்துவாங்கன்னு நானும் பார்க்குறேன்…” என்று எதையோ நினைத்து கூறியவள், மீண்டும் கர்ஜித்தாள், “என்ன ரெண்டு பேரும் போவீங்களா மாட்டீங்களா…” என்றாள்.

 

அவள் கரங்கள் தங்கள் கழுத்தை அழுத்தியதால் ஏற்பட்ட வலியில், அவள் சொன்னதை அவர்கள் கேட்கவே இல்லை. இறுதியில் ஏதோ கேட்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள், ‘சரி என்னும் விதமாய் தலையசைக்க, சட்டென்று இருவரையும் தன் கரத்திலிருந்து விடுவித்தாள் நிஷா.

 

அவர்கள் இருவரும் இறுமிக் கொண்டிருக்க, மின்சாரம் வந்ததற்கு அறிகுறியாக மின்விளக்கு ஒளிர்ந்தது.

 

மின்விளக்கின் வெளிச்சத்தில் அவர்களின் அறையை நோக்க, ஆங்காங்கே, ‘கோ’ என்று கூரிய நகத்தால் கீறியிருந்தது போல் இருந்தது. அவர்களுக்கு அந்த ‘கிரீச்’ சத்தத்திற்கான காரணம் புரிந்தது. அதே போல் அவர்களின் கழுத்திலும் இறுக்கிப் பிடித்த அச்சும், சில இரத்தத் துளிகளும் இருந்தன.

 

இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து ஆறுதல் அடைந்தனர். அப்போது நினைவிற்கு வந்தவளாக ஜான்வி கதவைத் திறக்க, அது திறந்து கொண்டது.

 

வெளியே பக்கத்து அறையிலுள்ள பெண், அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ஜான்வி கதவைத் திறந்ததும், அவளைப் பார்த்து சிரித்தாள் அந்த பெண். இவளும் பதிலுக்கு சிரித்துவிட்டு, “இவ்ளோ நேரம் கரண்ட் இல்லையே… இப்போ தான் வந்தியா…” என்று ஆங்கிலத்தில் கேட்டாள் ஜான்வி.

 

“என்ன கரண்ட் இல்லையா… அதெல்லம் இருந்துச்சே… இவ்ளோ நேரம் உங்க ரூம்ல கூட டிவி சத்தம்  ரொம்ப சௌண்டா கேட்டுச்சே… நான் கூட டிவி வால்யூம் கம்மியா வைக்க சொல்லலாம்னு இருந்தேன்…” என்றாள் அந்த பெண். 

 

ஜான்வி பின்னே வந்த சாக்ஷிக்கும் இவர்களின் உரையாடல் கேட்டது. இருவரும் அன்றைய நாளின் இறுதி அதிர்ச்சியை பெற்றபடி உறைந்திருந்தனர்.

 

அந்த பெண்ணோ இருவரையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

 

********

 

 அடுத்த நாள் காலை, இந்தியாவில் விமானம் தரையிறங்கியதும், சதீஷ், அர்ஜுன் இருவருக்கும் தங்கள் இடத்திற்கு வந்த உணர்வு தோன்றியது… இங்கிருந்து சென்றபோது இருவரும் அவர்களின் சுயநினைவில் இல்லை அல்லவா…

 

அங்கிருந்த டாக்சியில் ஏறியவர்கள் தாங்கள் வழக்கமாக செல்லும் ப்ளூமூன் ஹோட்டலுக்கு செல்லுமாறு கூற, இருவரையும் ஒரு மாதிரி பார்த்த அந்த ஓட்டுனர், “நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு புதுசோ…” என்று ஹிந்தியில் வினவினார்.

 

“ஆமா பத்து வருஷமா ஊருல இல்ல…” என்றான் அர்ஜுன்.

 

“ஹ்ம்ம் நீங்க சொன்ன ஹோட்டல் எரிஞ்சும் கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு…” என்று அந்த ஓட்டுநர் கூறியதும் இருவருக்கும் அதிர்ச்சி.

 

முதலில் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சதீஷ், அந்த ஓட்டுனர் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தான்.

 

அப்போதும் தன் நினைவிலிருந்து வெளிவராத அர்ஜுனின் தோளை தொட்டான் சதீஷ்.

 

“என்னடா இப்படி… இப்போ நிஷாவ எங்க தேடுறது…” என்றான் அர்ஜுன் குழப்பமாக.

 

“ரிலாக்ஸ் அர்ஜு… எதுவா இருந்தாலும் ஹோட்டல் போய் பேசிக்கலாம்…” என்றான்.

 

சாலையில் ஆங்காங்கே போலீசார் நின்றிருப்பதை கண்டதும் ஓட்டுனரிடம் விசாரித்தான் சதீஷ்.

 

“நேத்து *** கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ***** இறந்துட்டாரு சார். அவரு இறுதி ஊர்வலத்துல கலவரமாகி நேத்து முழுக்க ஊரடங்கு சார்… அதான் இன்னிக்கும் அங்கங்க போலீஸ் கண்காணிச்சுட்டு இருக்காங்க …” என்றான். மேலும் இந்த பத்து வருடங்களில் அங்கு நடந்த முக்கிய நிகழ்வுகளை அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டான் சதீஷ்.

 

ஹோட்டலுக்கு சென்றவர்கள் தங்களை தூய்மை படுத்திக் கொண்டு அடுத்து என்ன செய்வது, நிஷாவை எங்கு தேடுவது என்று யோசித்தனர்.

 

“ஹே அர்ஜு… எனக்கு நிஷா தங்கியிருந்த ஹாஸ்டல் பேரு தெரியும்… அங்க போய் விசாரிக்கலாம்…” 

 

“பத்து வருஷமாச்சு சதீஷ்… இன்னும் அந்த ஹாஸ்டல்ல இருப்பான்னு சொல்ல முடியாதே… ஒரு வேள அவ சொந்த ஊருக்கே போயிருந்தா… அந்த ஹோட்டலும் இப்போ இல்ல…” என்றான் அர்ஜுன்.

 

“அவ ஊருக்கு போயிருந்தா நாமளும் போவோம்… சியர் அப் மேன்… ஹாஸ்டல் போய் விசாரிச்சுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பிளான் பண்ணுவோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினான் சதீஷ்.

 

ஆனால் இதே நம்பிக்கை நாளை ஹாஸ்டலில் ‘அவளை’ப் பார்க்கும்போதும் இருக்குமா…

 

அமானுஷ்யம் தொடரும்…

 

 

ஜட்டிங்கா கிராமம் (Jatinga village, Assam)

 

 

அசாம் மாநிலத்திலுள்ள இந்த ஜட்டிங்கா கிராமத்தின் மக்கள்தொகை 2500 மட்டுமே. ஆனால் இக்கிராமம், ‘பறவைகள் தற்கொலை’ என்ற இதுவரை  காரணம் கண்டறிய இயலாத ஒரு நிகழ்வுக்கு உலகளவில் பிரபலமானது.

 

பருவக்காலத்தில் இடம்பெயரும் பறவைகள், இக்கிராமத்தின் குறிப்பிட்ட இடத்தில் அவைகளாகவே கீழே விழுந்து செத்து மடிவதாகக் கூறுகின்றனர். அதுவும், செப்டெம்பர் – அக்டோபர் மாதங்களில், அமாவசைகளில், குறிப்பாக மாலை 6 மணியிலிருந்து 9.30 மணிக்குள் இச்சம்பவம் நடைபெறுவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

 

கடந்த நூறாண்டு காலமாக ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடப்பதாகக் கூறுகின்றனர். அறிவியலாளர்கள் இந்த நிகழ்வின் காரணமாக பல கோட்பாடுகளையும் வாதங்களையும் முன்வைத்தாலும், இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

 

உங்களுக்கு இந்த ‘பறவைகளின் தற்கொலை’ சம்பந்தமாக ஏதேனும் காரணங்கள் தோன்றுகிறதா…?