மிரட்டல் 16.1
வெகு நேரம் நிஷாவைப் பற்றியும் அந்த மரவீட்டைப் பற்றியும் ஆராய்ந்தவர்கள், நடுநிசிக்கு சில நாழிகைகள் முன்பே உறங்கச் சென்றனர். பயணத்தின் விளைவாலும், மூளைக்கு வேலை கொடுத்து யோசியத்ததன் விளைவாலும் மற்ற மூவரும் உறக்கத்தை தழுவியிருக்க, ஜான்வி மட்டும் அந்த மரவீட்டைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால், அவளிற்கு உறக்கம் வரவில்லை.
அந்த அறையில் , பழைய மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஜான்வியும் அந்த மின்விசிறியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காற்றுக்கு ஜன்னல்கள் அடித்துக் கொண்ட சத்தத்தில் சிந்தை கலைந்த ஜான்வி, அருகில் படுத்திருந்த சாக்ஷியைக் கண்டாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
அந்த ஜன்னல்களின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். ‘படுக்குறப்போ எல்லாத்தையும் மூடிட்டு தான படுத்தேன்…’ என்று மனதிற்குள் புலம்பியவள், எழுந்து அதை மூடச் சென்றாள்.
புயலயென காற்று வீசிக்கொண்டிருக்க, அந்த இரவு வேளையில் வெளியே யாரோ ஒரு பெண் நடந்து செல்வது போல தெரிந்தது ஜான்விக்கு.
‘யாரு இந்த நேரத்துல நடந்துட்டு இருக்காங்க…’ என்று உற்று பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
அந்த பெண்ணின் கால்கள் தரையைத் தொடவே இல்லை. அப்பெண் காற்றில் மிதப்பது போன்று இருந்தது. அப்பெண்ணை சற்று கூர்ந்து நோக்கினாள் ஜான்வி. அத்தனை நேரம் திரும்பியிருந்த பெண், சட்டென்று இவளை நோக்கித் திரும்பினாள்.
நீண்டு விரிந்த அவளின் கூந்தல் முகத்தை மறைத்திருக்க, மறைக்கப்படாத கண்கள் மட்டும் ஜான்வியை உறுத்து விழிப்பது போன்று இருந்தன. சிவந்திருந்த அக்கண்களின் கூர்மையில் ஜான்வியின் மனது படபடவென அடித்துக் கொண்டது.
அப்போது ஜான்வியின் கண்களில் தூசி விழுந்ததால், கண்களை கசக்கிவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தவள் கண்ட காட்சியில், அவளின் இதயம் எம்பி வெளியே குதித்துவிடும் அளவிற்கு பயந்து போனாள்.
பத்தடி தொலைவில் நடந்து கொண்டிருந்த அப்பெண், ஜான்வி கண்களைத் திறக்கும்போது அவளின் முகத்தின் முன்னே, அதே சிவந்த கண்களுடனும், பாதி தெரிந்த உதட்டில் கோணல் சிரிப்புடனும் காட்சி தந்தாள்.
அதைக் கண்ட ஜான்வி, பயத்தில் ‘ஆ…’ என்ற மெல்லிய அலறலுடன் பின் பக்கம் சரிந்தாள்.
முதற் கட்ட அதிர்ச்சி நீங்கியவள், மனதை ஆசவாசப் படுத்தி, அவள் நின்ற இடத்திற்கு சென்று பார்த்தாள். அங்கு நடந்த நிகழ்வுக்கான எந்த சுவடும் இல்லாமல் அமைதியாக இருந்தது. சற்று முன் வீசிய புயல் காற்றும் தென்றலாக அவளைத் தீண்டிச் சென்றது.
‘ச்சே… நிஷாவ பத்தி யோசிச்சதால வந்த பிரமையா இருக்கும்…’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு ஜன்னல்களை அடைத்து படுக்கச் சென்றாள்.
அவள் திரும்பியதும் அந்த ஜன்னல் கதவுகள் சத்தமில்லாமல் திறந்து கொண்டன. அதைக் கவனிக்காதவள் கட்டிலில் சென்று அமர்ந்தாள். அவள் மனமோ அவள் கண்டதை பிரமை என்று நம்ப மறுத்தது.
ஏதோ தோன்ற, அந்த அறையின் மூலையில் பார்வையை செலுத்தினாள். வெளிச்சமில்லாத அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்க, பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘க்ளிக்… க்ளிக்…’ என்று ஏதோ உடைவது போன்ற சத்தம் அது.
ஜான்வியின் இதயம் அங்கு கேட்ட ஒவ்வொரு ‘க்ளிக்’குக்கும் அடித்துக் கொண்டது. மெல்ல அந்த சத்தத்தின் அளவு உயர, ஏதோ ஒன்று அவளை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
அவளின் இதயத் துடிப்பை எகிற வைத்த அது, கைகளையும் கால்களையும் நிலத்தில் ஊன்றி அவளை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கு காயமும் ரத்தம் உறைந்த தடமும் இருக்க, முகம் முழுவதையும் முடி மறைத்திருந்தது. ஒவ்வொரு முறையும், அது தன் கைகளையும் கால்களையும் வளைத்து, அடுத்த அடி எடுத்து வைக்கும்போது உள்ளே எலும்புகள் உடையும் சத்தம் தான் அந்த ‘க்ளிக்’ சத்தம்.
அதைக் கண்டவள் கத்தக் கூட முடியாமல், மூச்சு விட திணறினாள். இதோ அவள் கட்டில் அருகே வந்து, அவளின் கால்களை தொடப் போகும் சமயம், கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.
சில நொடிகள் கடந்தும் ஒன்றும் நிகழாமல் இருக்க, கண்களைத் திறந்தவள் அங்கு அது இல்லாததைக் கண்டு பெருமூச்சு விட்டாள்.
பின்பு கங்காதரின் வார்த்தைகளை நினைவிற்கு கொண்டு வந்தாள்.
“அமானுஷ்ய சக்தியால சாதாரணமா மனுஷங்க கூட தொடர்பு கொள்ள முடியாது. ஒன்னு அது தொடர்பு ஏற்படுத்தனும்னு நெனைக்கிறவங்க அவங்கள நெனைக்கணும்… இல்ல அவங்க மனசளவுல ரொம்ப பயந்துருக்கணும்… பொதுவா ஆவிங்க ரெண்டாவது வழிய தான் தேர்ந்தெடுக்கும்… அது தான் சுலபமான வழியும் கூட… அதுங்களோட உருவத்த காட்டியோ இல்ல மைண்ட் கேம்ஸ் மூலமா அவங்களோட எண்ணங்கள்ல பயத்த விளைவிச்சு, அவங்கள தன்வசப்படுத்திக்கும்…”
‘பயப்படக் கூடாது ஜானு… எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்…’ என்று கூறிக் கொண்டவள், பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த சாக்ஷியைக் கண்டாள்.
‘இங்க இவ்ளோ நடக்குது… இவ இப்படி தூங்குறா… சின்ன சத்தம் கேட்டாலும் முழிப்பாளே…’
‘இந்த நிஷா எதுக்கு என்ன பயமுறுத்தணும்… எங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்…’ – இப்படி பலவற்றை யோசித்தவாறே கண்ணயர்ந்தாள்.
சில மணி நேரங்கள் கழித்து, அவள் முகத்தில் ஏதோ பட, புருவம் சுருக்கி கண் விழித்தாள் ஜான்வி. அவளை அதிர வைக்கவென சாக்ஷி சுயநினைவின்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள். சாக்ஷியின் முடி பட்டே ஜான்விக்கு விழிப்பு வந்தது.
“சாக்ஷி…” என்று அவள் கத்த, அது அவளிற்கே கேட்க வில்லை. சாக்ஷியின் கைகளைப் பிடிக்க முயற்சிக்க, அவளோ அந்தரத்தில் மேலே சென்று கொண்டேயிருந்தாள்.
அப்போது தான் அவளிற்கு எதிரே நின்ற உருவத்தை கண்டாள் ஜான்வி. அவளின் பார்வைக்காக காத்திருந்ததைப் போல், கையை உயர்த்தி வெளியே சுட்டிக் காட்டியது.
ஜான்விக்கு, அது அவளை அந்த மரவீட்டிற்கு தான் போகக் சொல்கிறது என்பது புரிந்தது. தான் செல்லும் வரை அது தன்னை நிம்மதியாக இருக்க விடாது என்றும், சாக்ஷியின் நிலை கண்டு, தன்னை அழைத்துச் செல்ல தன் நண்பர்களையும் துன்புறுத்தலாம் என்றும் புரிந்தவள், மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள்.
அவளின் முடிவை அறிந்தோ, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாக்ஷியை கட்டிலின் மறுமுனையில் வைத்த அது மறைந்தது.
மனதிற்குள் முடிவெடுத்தவளாக, அவள் சந்திக்கவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள தயாரானாள். அலைபேசியின் மூலமாக தான் அங்கிருப்பதை அறிந்தால், அவளின் நண்பர்கள் அவளைத் தேடி அங்கு வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வார்களோ என்று எண்ணியவள் அதை அங்கே வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.
அப்போது சுவரில் தெரிந்த நிழலைக் கண்டு, புருவம் சுருக்கி யோசித்தாள். அவளின் நிழல் அங்கு விழ சாத்தியமே இல்லாத போது, அங்கு எவ்வாறு நிழல் உருவானது என்று யோசித்ததன் விடையாய் அவள் புரிந்து கொண்டது, இதுவும் அதன் வேலை தான் என்று… உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
ஆனால் ஒரு நொடி தாமதித்திருந்தால், அந்த நிழல் கூற வந்த செய்தியை புரிந்திருப்பாளோ…
*******
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதர்ஷிற்கு ஏதோ கெட்ட கனவு வர, சட்டென்று எழுந்தான். அவன் கனவில் ஏதோ ஒரு பெண், தன் பெயரை சொல்லி காப்பாற்றுமாறு கத்திக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் முகம் அவனிற்கு சரியாக தெரியவில்லை.
ஒரு பெருமூச்சுடன், அருகில் மேசையிலிருந்த தண்ணீர் குவளையை எடுக்க முயன்ற போது அதைக் கண்டான். ஜான்வியின் அறையிலிருந்த அதே நிழல்… இப்போது அவனின் அறையில்…
அதைக் கண்டவன் திகைத்தது ஒரு நொடியே… அடுத்த நொடி அது தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று புரிந்தவனாக, அதை கவனமாகக் கண்டான். அது சைகையில் பக்கத்து அறையைக் காட்டியதும், பரபரப்பானான்.
வேகவேகமாக வெளியே சென்றவன், ஜான்வியின் அறைக் கதவை தட்டவும், சாக்ஷி பரபரப்புடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
“ஆது… ஜானுவ காணோம்…” என்று திக்கியபடி கூறினாள் சாக்ஷி.
அவனின் சந்தேகம் உறுதியாக, அவள் எங்கு சென்றிருப்பாள் என்று யோசித்தான்.
மீண்டும் சாக்ஷியே, “ஆது… அங்க ஒரு நிழல்…” என்று பயத்தில் கூற, தான் கண்டதை தான் அவளும் பார்த்திருப்பாள் என்று யூகித்தவன், “ரிலாக்ஸ் சாக்ஷி… அது நமக்கு ஹெல்ப் தான் பண்ணுதுன்னு நெனைக்கிறேன்… இப்போ ஜானுவ கண்டுபிடிக்கணும்… அவ எங்க போயிருப்பா…” என்று ஆதர்ஷ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த விஷ்வா, ஆதர்ஷிடம் நடந்ததைக் கேட்டவன், “டேய் ஆது… அந்த மரவீட்டுக்கு தான் போயிருப்பான்னு நெனைக்குறேன்…” என்றான்.
ஆதர்ஷுக்கும் அது சரியென்றே தோன்ற, ஆதர்ஷும் விஷ்வாவும் கிளம்பினர்.
“ஹே என்ன விட்டு எங்க போறீங்க… எனக்கு பயமா இருக்கு… நானும் வரேன்…” என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் சாக்ஷி. அவர்கள் எவ்வளவோ சொல்லியும், தனியாக இருக்க சம்மதிக்க வில்லை.
மூவரும் அங்கிருந்து கிளம்பும் முன், ஆதர்ஷ் அந்த நிழலைத் திரும்பிப் பார்த்தான். பின் தலையைக் குலுக்கிக் கொண்டு சென்றான்.
*********
ஜான்வி அந்த மரவீட்டை அடைந்திருந்தாள். அவ்வீடு இருளின் பிடியில் பயமுறுத்துவதாகவே இருந்தது. அவள் வீட்டிற்குள் செல்லாமல், அவ்வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, “வாவ் விக்கி சூப்பரா இருக்கு இந்த வீடு… இதுக்காக தான் என்ன இவ்ளோ தூரம் அலைய வச்சியா… பட் உன் செலக்ஷன் பக்கா… இங்கயே நம்ம ஃபர்ஸ்ட் அனிவெர்சரிய கொண்டாடலாம்…” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, அங்கு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.
அவளின் முகம் பரிச்சயமாகத் தோன்றியது ஜான்விக்கு. அவரிடமே கேட்கலாம் என்று, “ஹாய்…” என்றாள்.
ஆனால் அப்பெண்ணோ அவளை கண்டுகொள்ளாமல், அவ்வீட்டை நோக்கியே நடந்து கொண்டிருந்தாள். அந்த வீட்டின் முதல் படியில் ஏறி நின்றவள், எதற்கோ திரும்பினாள். அப்போதாவது தன்னை கவனிப்பாள் என்று எண்ண, அப்பெண்ணோ மீண்டும் அந்த வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல் இருந்தது. ஜான்விக்கு தான் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை.
சரசரவென்று ஏதோ சத்தம் கேட்க, ஜான்வி கீழே குனிந்து பார்த்தாள். முட்செடிகள் பாம்பு போல அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தன. அவள் அதை திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவை அப்பெண்ணின் கால்களை இறுக்குவதையும், அவள் வலியில் கத்துவதையும் கண்டாள்.
உடனே அவளைக் காப்பாற்ற ஓடிச் சென்றாள். அவள் கைகளைப் பிடித்து இழுக்க முயன்றவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக, அவளின் கை அப்பெண்ணின் கைகளை ஊடுருவிச் சென்றது.
அவள் அக்காட்சியை வாய் பிளந்து பார்க்கும்போதே, அப்பெண் ‘விக்கி…’ என்று கத்த, அதற்கு மறுமொழியாக, ‘நித்து…’ என்று தூரத்தில் ஒரு குரல் கேட்டது.
‘விக்கி… நித்து….’- இப்பெயர்கள் ஜான்வியினுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியதோ… அவளின் தலை பயங்கரமாக வலித்தது. அப்பெயர்களோடு ஏதேதோ காட்சிகள் அவள் மனதிற்குள் விரிந்தன.
“என் ஜானு செல்லத்த யாரு திட்டுனா… நித்துமாவா… நித்துமாவ அடிச்சிடலாமா…”
“ப்ச்… இப்போ எதுக்கு விக்கி… பாருங்க என் ஜானுமா அழறா… நம்ம இன்னொரு நாள் போலாம்… இப்போ ஓகேவா ஜானு மா…”
இப்படி பல உரையாடல்கள் கலங்களாக அவளிற்கு நியாபாகம் வந்தன. அவை அனைத்திலும் இப்போது பார்த்த பெண்ணுடன் இன்னொருவர் இருந்தார். அவர்கள் யாரென்று முதலில் அவளிற்கு தெரியவில்லை. மீண்டும் மீண்டும் மூளையை கசக்கி யோசித்தவளின் நினைவிற்கு வந்தனர், அவளின் விக்கிப்பாவும் நித்தும்மாவும்….
சொல்லவியலாத உணர்ச்சிகளுடன் நிமிர்ந்து பார்த்தவள், அங்கு கண்டது, எதுவோ அவளின் ‘நித்துமா’வை அவ்வீட்டிற்குள் இழுத்துச் சென்றதை தான்.
“நித்துமா…..” என்ற அலறலுடன் பின் தொடர்ந்தவள், ஏதோ அவளின் கால்களை இடர கீழே விழுந்தாள். ஏற்கனவே சரியான தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தவள், இப்போது அவளின் மூளைக்கு அதிகமான வேலை கொடுத்ததால், மயங்கியிருந்தாள்.
அந்த மரவீட்டிற்குளிருந்து இதனைக் கண்ட ‘அது’, “உனக்கு பழசு நியாபகம் வரணும்னு தான் இதையெல்லாம் காட்டுனேன்… நான் உன்ன கொல்லுறப்போ, நீ யாருன்னு உனக்கு தெரிஞ்சுருக்கணும்… அப்போ தான் என் பல வருஷ பகை பூர்த்தியாகும்…” என்று கோணல் சிரிப்பு சிரித்தது.
அமானுஷ்யம் தொடரும்…