மிரட்டும் அமானுஷ்யம் 16.2

 

 

மிரட்டல் 16.2

 

“நித்துமா…” என்ற ஜான்வியின் சத்தம் அம்மூவருக்கும் தெளிவாகக் கேட்டது. அதற்கு மெல் தாமதிக்காமல் அவ்வீட்டை நோக்கி வேகமாக சென்றனர்.

அந்த மரவீடோ யாருமற்ற இடமாக மயான அமைதியில் இருந்தது. அந்த அமைதியே அவர்களின் நெஞ்சில் திகில் உணர்வை கொடுத்தது. மெல்ல வீட்டினுள் செல்ல அடியெடுத்து வைத்தனர்.

சாக்ஷிக்கு தங்களை யாரோ பின்தொடர்வது போல் உணர்வு வர, அவள் பின்னாடி திரும்பப் போகும் சமயம், “ஹே என்ன பண்ற..? பேய் படமெல்லாம் பார்த்தது இல்லையா… இப்படி பின்னாடி திரும்பி பார்த்தா அங்க கண்டிப்பா பேய் இருக்கும்.. எதுக்கு பின்னாடி திரும்பி பார்க்கணும் எதுக்கு நாமளே பயப்படனும்…” என்றான் விஷ்வா.

“போடா லூசு…”என்றுவிட்டு முன்னாடி ஆதர்ஷுடன் இணைந்து கொண்டாள் சாக்ஷி.

அமாவாசை இரவென்பதால், நிலா வெளிச்சம் கூட இல்லாமல், அவ்வீடு பயங்கரமாகத் தோன்றியது. மூவரும் தங்கள் அலைபேசியில் டார்ச்சை ஆன் செய்துவிட்டு நடக்கத் துவங்கினர்.

வீட்டினுள்ளே, பெரிய ஹால் இருக்க, அதன் நாற்புறங்களிலும் நான்கு அறைகள் இருந்தன. ஒரு ஓரத்தில் மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. அப்படிகளின் கீழே உள்ள இடம் கதவு வைத்து சிறிய அறையாக மாற்றப் பட்டிருந்தது.

அதை சுட்டிக்காட்டிய விஷ்வா, “அங்க தான் ஜானு இருக்கணும்…” என்றான் தீவிரமாக.

மற்ற இருவரும் அவனை நம்பாமல் பார்க்க, “ஹே எத்தன பேய் படம் பார்த்துருக்கோம்…” என்று ஆரம்பிக்க, அவனை இழுத்துக் கொண்டு, அந்த சிறிய அறைக்கு அருகில் சென்றனர்.

வெளியில் பூட்டு மாட்டப்படாமல் தாழ் மட்டுமே போட்டிருக்க, அதைத் திறந்து உள்ளே நோக்கியவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

உள்ளே ஒரு ஓரத்தில், கடப்பாரை மண்வெட்டி போன்ற தோட்ட வேலைக்கு பயன்படும் கருவிகள் இருந்தன. வேறு எதுவும் அங்கு இல்லை.

அதைப் பார்த்தவர்கள், விஷ்வாவை முறைக்க, “இதுக்கே முறைக்க ஆரம்பிக்க கூடாது… பாரானார்மல் ரிசர்ச்சருக்கு பொறுமை தான் முக்கியம்… வாங்க நம்ம மாடிக்கு போய் பார்க்கலாம்…” என்று சமாளித்தவன் அந்த படிகளில் ஏற கால் வைத்தான்.

அப்போது தான், அப்படிகளுக்கு அருகிலிருந்த சுவரைக் கவனித்தான். சுவரில் பல புகைப்படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன. 

“ஹே கைஸ் இங்க பாருங்க… இந்த வீட்டு ஓனரோட குடும்பம் போல…” என்று அப்புகைப்படங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவனின் கூவலில் அருகில் வந்த அதர்ஷும் சாக்ஷியும், அதை அசுவாரஸ்யமாகப் பார்க்க, ஒரு படத்தைக் கண்ட ஆதர்ஷின் புருவங்கள் சுருங்கின.

அதில் ரெட்டைக் குடுமியுடன் மூன்று வயதுடைய குழந்தை, அழகாக சிரித்துக் கொண்டிருந்தது.

அப்போது மீண்டும் விஷ்வாவின் குரலில், சிந்தனையை விடுத்து அவனருகே சென்றான்.

“இந்த போட்டோல இருக்குறவங்கள பாரேன்… இங்க இருக்க எல்லா போட்டோஸும், ரெண்டு மூணு பேரு சேர்ந்து எடுத்ததா இருக்கு… இவங்க மட்டும் ஏன் தனியா எடுத்துருக்காங்க…  ஆனா பாரேன் எவ்ளோ கம்பீரமா இருக்காங்க…” என்றான் விஷ்வா.

ஆம் அப்பெண் கம்பீரமாகத் தான் இருந்தாள். ஆனால் ஆதர்ஷிற்கு தான் அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. சாதாரண புகைப்படத்தை போல இல்லை அது. அதுவும் அப்பெண்ணின் கண்களிலிருந்த பாவம், நேரில் அவர்களை குத்திக் கிழிப்பதைப் போல இருந்தது.

“இவங்க யாரா இருக்கும்…?” என்று சக்க்ஷி வினவினாள்.

“இந்த வீட்டோட எஜமானி…” என்று அவர்களின் பின்னிலிருந்து உறுமலான குரல் வந்தது.

அதில் அதிர்ந்தவர்கள், திரும்பிப் பார்த்தனர். அங்கு முதிர்ந்த தோற்றத்தில் ஒரு பெண்மணி, கையில் நீளமான குச்சியுடன் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் முதலில் தோன்றிய உணர்வு பயம் தான். அவரின் உடலில் முழுவதும் கம்பளி கொண்டு மறைக்கப் பட்டிருக்க, வெளியே தெரிந்தது அவரின் முகம் மட்டுமே. தோல் சுருங்கி, கண்கள் இடுக்கி, பெரிய பொட்டுடன் சட்டென்று பார்ப்பதற்கு பயமுறுத்துவதாகவே இருந்தது அவரது தோற்றம்.

சாக்ஷி தான் முன்வந்து, “நீங்க யாரு..?” என்று வினவினாள்.

அதற்கு ஒரு பெரிய சிரிப்பு சிரித்தவர், “நான் இந்த ஊருல ரொம்ப காலமா இருக்கிறவ… இந்த கேள்விய நான் தான் உங்ககிட்ட கேக்கணும்…” என்று தமிழில் பேசியவரை மூவரும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.

அதைக் கண்டுகொண்டவர், “நான் இந்த வீட்டுல வாழ்ந்தவங்க கூட நெருக்கமா பழகுனவ…” என்றார்.

விஷ்வா சாக்ஷியின் அருகே சென்றவன், “எனக்கென்னவோ இவங்கள பார்த்தா சூனியக்காரி மாதிரியே இருக்கு…” என்று முணுமுணுத்தான்.

அதைக் கேட்டது போல, அவனை முறைத்தார், அந்த பெண்மணி. அவரின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷிற்கு அந்த கண்கள் அவனிற்கு பரிச்சயமானதாகத் தோன்றியது.

அதற்குள் அவரே பேச ஆரம்பித்தார். “உங்களுக்கு அவங்கள பத்தி தான தெரியணும்…” என்று அந்த புகைப்படத்திலிருந்தவரை நோக்கி கையை நீட்டினார். அவர் கையிலிருந்த கூரிய நகங்களை மற்ற இருவரும் பார்க்கவில்லை என்றாலும் ஆதர்ஷ் கவனித்திருந்தான்.

“அவங்க பேரு வேதவள்ளி… இந்த வீட்டோட உரிமையாளர்…” என்று அவரின் கதையை கூறத் துவங்கினார்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்….

தமிழ்நாட்டின் தென்கோடியிலிருந்தது இந்தியாவின் பல இடங்களில் தங்களின் தொழிலை பரப்பியிருக்கும் ஈஸ்வரன் தொழில் குழுமத்தின் தலைவரான சிவனேஸ்வரன் – உமா தம்பதியரின் திருமண விழாசிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர்களின் புதல்வர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் விக்னேஸ்வரன், தாய் தந்தையரின் திருமண விழாவிற்காக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர்.

“உமா, போன வாரம் புனேக்கு போன வேலை சிறப்பா முடிஞ்சது. அப்போ தான் நம்ம மணி புனேக்கு பக்கத்துலயிருக்க கிராமத்துல, அழகா ஒரு வீடு இருக்குன்னு கூட்டிட்டு போய் காமிச்சான்… சும்மா சொல்லக்கூடாது வீடு ரொம்ப அழகா இருந்துச்சு… முழுசும் மரத்தால கட்டியிருக்காங்க. அந்த வீடு கட்டுனவருக்கு ஏதோ அவசரத் தேவைன்னு வீட்ட விக்கப் போறாராம்… நம்மளே அந்த வீட்ட வாங்கிக்கலாம்னு மணி சொல்றான்…நீ என்ன சொல்ற…? இந்தா மணி கொடுத்த போட்டோவ பாரு” என்று மனைவியிடம் புகைப்படத்தைக் காட்டினார் சிவனேஸ்வரன்.

கணவனின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத உமா, “உங்க விருப்பம் தான் என் விருப்பமும்…” என்று கூற, தன் மனைவியை காதலாகப் பார்த்தவர், சற்று தொலைவில் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த மணியை அழைத்தார்.

“மணி, நீ சொன்ன வீட்ட வாங்க ஏற்பாடு பண்ணு… பத்திரம் பதியிறப்போ உமா பேர்ல பதிஞ்சுடு…” என்று அவர் சொல்ல, “ஏங்க…  என் பேர்ல சொத்து வாங்குனதெல்லாம் போதும்… நம்ம சின்னவன் பேர்ல வாங்க சொல்லுங்க… அந்த வீடு வாங்கற யோகம், அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து, அவன் குடும்பமா வாழுறத பாக்கணும்…” என்றார். 

சிவனேஸ்வரனோ, “இல்ல உமா… நம்ம எப்போ சொத்து வாங்குனாலும், நம்ம வீட்டு பொண்ணுங்க பேர்ல தான் வாங்குவோம்… அதான் யோசனையா இருக்கு…” என்றார்.

“அப்போ சின்னவனுக்கு வரப் போற மனைவி பேர்ல இருக்கட்டும்ங்க…” என்றார் உமா.

சிவாவும் அதை ஒப்புக் கொண்டவராக, “இப்போதைக்கு விக்னேஷ் பேர்லயே அந்த வீட்ட வாங்கிடு, மணி…அவனுக்கு கல்யாணம் ஆனா பின்னாடி மருமக பேர்ல மாத்திகலாம்…” என்றார்.

அப்போது அவர்களின் மூத்த மருமகள் மயூரியின் வருகையால், மணியின் முகமாற்றத்தை கவனிக்கத் தவறினர் அந்த தம்பதியர். மயூரியுடன் வந்த ஒன்பது வயது அர்ஜுன், தாத்தா பாட்டிக்கு இடையே அமர்ந்து, அவர்களிடம் செல்லம் கொஞ்சினான்.

இவர்களின் பேச்சைக் கேட்ட இன்னொருத்தியின் மனமோ தீவிரமாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. 

அவள் வள்ளி… சிவனேஸ்வரனின் தங்கை தனலட்சுமியின் மகள். சிவனேஸ்வரன் தன் ஒரே தங்கைக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தார். ஆனால் மாப்பிள்ளையின் குணத்தை பார்க்க தவறிவிட்டார். 

தனலட்சுமியின் கணவர் சுந்தரமோ, தன் பாட்டன் சொத்தை, குடி கும்மாளம் என்று கரைத்துவிட்டு ஏகப்பட்ட கடன் வாங்கி, அதை கட்டமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதில் வருந்ததக்க விஷயம் என்னவென்றால், சுந்தரம் கடன்தொல்லையால் தான் இறந்தார் என்பது தனலட்சுமிக்கு தெரியாது. சிவனேஸ்வரன் தான் கடன் முழுவதையும் அடைத்தார் என்பதும் தெரியாது. அதை அறிந்த ஒரே ஜீவன் வள்ளி. 

வள்ளி, சிறு வயதிலேயே தந்தையின் செயல்களையும் அதற்கு தாய் வாய் மூடி மௌனியாக இருப்பதையும் கண்டவள், பெண்ணாக பிறந்தால் இப்படி தான் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டுமா என்று தீவிர சிந்தனையில் இருந்தாள். தான் இது போல யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்றும் அதற்கு என்ன வழி என்றும் யோசிக்கத் துவங்கினாள், அந்த சிறு வயதிலேயே…

அப்போது தான், சிவனேஸ்வரன் அவளின் தந்தையின் கடனை அடைப்பதைக் கண்டாள். அவள் அதை மட்டும் பார்க்க வில்லை. தன் தந்தையை கேவலமாக நடத்தியவர்கள், தன் மாமாவின் முன் பணிவாக இருப்பதையும் கண்டாள். அதற்கு மாமாவிடமிருக்கும் பணம் தான் காரணம் என்று அவளே யூகித்துக் கொண்டாள்.

பாவம் அச்சிறு பெண்ணிற்கு, பணம் அல்ல, அவரின் மேலுள்ள மரியாதை தான் அவர்களின் பணிவிற்கு காரணம் என்று புரியவில்லை…

அவள் வளர வளர, அவளின் பணம் பற்றிய சிந்தனையும் வளர்ந்து, எப்படியாவது பணக்காரியாக, எல்லாரும் மதிக்கும்படி, சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்ற அவளின் ஆசை பூதாகரமாகிப் போனது. 

சாதாரண நேரமாக இருந்தால், மகளின் போக்கை கண்டுபிடித்திருப்பார் தனலட்சுமி. ஆனால் அவரோ கணவன் இறந்த துக்கத்தில் இருந்ததால், அவரால் மகளின் எண்ணங்களை அறிய முடி(னை)யவில்லை. அதை அறிந்த போதோ காலம் வெகுவாக கடந்திருந்தது.

சிவனேஸ்வரன், தங்கை வருந்தக் கூடாது என்று பார்த்து பார்த்து செய்தாலும், வள்ளிக்கு அதில் ஏனோ மனம் திருப்தியடையவே இல்லை. எதற்கெடுத்தாலும் அவரின் மகன்களுக்கு செய்வதையும் தனக்கு செய்வதையும் ஒப்பிட்டு பார்த்து குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கினாள். 

ஆரம்பத்தில் தாயிடம் கூறியவள், அவர் சொன்ன, “அண்ணா அவரு பசங்களுக்கு செய்றதும், நமக்கு செய்றதும் ஒண்ணா… தேவையில்லாம ரெண்டையும் ஒப்பிட்டு பாக்காத…” என்றதில், தன் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள். தனலட்சுமி இதை சாதாரணமாகத் தான் சொல்லியிருந்தார். ஆனால் இதுவே மகளின் மனதில் துவேஷ விதையை தூவக்கூடும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

இப்படியாக சதா சர்வகாலமும் பணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளின், கலகலப்பில்லாத சுபாவம், லிங்கேஸ்வரனையும் விக்னேஸ்வரனையும் அவளிடமிருந்து தள்ளி வைக்க, அதற்கும் மனதில், அவர்களின் பணத்திமிரே காரணம் என்று உருவகப் படுத்திக் கொண்டாள். ஒருவேளை இவர்களின் அன்பு கிடைத்திருந்தால்அவளின் பணத்தை நோக்கிய பயணம் பாசத்தை நோக்கி திசை மாறியிருக்குமோ…

இவளின் பணமோகம் யாருக்கும் தெரியாமல் வளர, விக்னேஸ்வரன் அதை தெரிந்து கொள்ளும் நாளும் வந்தது.

அவர்களின் ஊரில் புதிதாக நகைக்கடை திறந்திருக்க, ஊரில் செல்வாக்கானவர் என்ற வகையில் சிவனேஸ்வரனின் வீட்டிற்கு வந்த அந்த நகைக்கடை முதலாளி அவர்களுக்கு அன்பளிப்பாக வைர அட்டிகையை கொடுத்தார்.

சிவனேஸ்வரன் அதை உமாவிடம் கொடுக்க, உமாவும் அதை வாங்கி வைத்துக் கொண்டார். அதைக் கண்ட வள்ளிக்கு தான் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அந்த வைர அட்டிகையை, வீட்டில் இளையவளான தனக்கு தருவார்கள் என்று வள்ளி நினைத்திருக்க, சிவனேஸ்வரன் உமாவிற்கு கொடுத்ததும், அதை உமா வாங்கிக் கொண்டதும், பெரும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தந்தது. 

‘வள்ளிக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி நகை எடுத்து கொடுக்கணும்…’ என்று உமா மனதில் நினைத்தது அவளிற்கு தெரிய வாய்ப்பில்லை தான். 

நகை கிடைக்காத எரிச்சலைத் தான் ஒரு நொடி முகத்தில் காண்பித்து, பின் சுதாரித்தவளாக பாவனையை மாற்றிக் கொண்டாள் வள்ளி. 

அதை விக்னேஸ்வரன் கவனித்தாலும் சிறு பெண், நகையின் மீது கொண்ட ஆசை என்று சாதாரணமாக விட்டுவிட்டான். ஆனால் இது அவனின் வாழ்க்கையையே மாற்றி  அமைக்கும் என்று தெரிந்திருந்தால், அப்போதே பெரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பானோ…

அன்று வைர நகையின் மீது ஆசை கொண்ட பெண்ணவள், இன்று அந்த வீட்டின் அழகில் அதை எப்படியாவது சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டினாள். அவளின் திட்டத்தில் தங்கள் குடும்பமே பலியாக போவது தெரியாமல், சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

“அம்மாடி மயூரி, சின்னவனுக்கு அந்த வீட்ட கொடுக்குறதுக்கு உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லயே…”

“என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க… தாராளமா சின்னவருக்கு கொடுங்க… அப்படியே இந்த வருஷம் அவருக்கு கல்யாணமும் பண்ணி வச்சுடலாம்… நீங்க என்னங்க சொல்றீங்க…” என்றாள் மகிழ்ச்சியாக தன் கணவனிடம் கேட்டாள்.

“ஆமா ப்பா… தம்பி மனசுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கட்டி வச்சுட வேண்டியது தான்…” என்றான் லிங்கேஷ்வரன், ’மனசுக்கு பிடிச்ச’ என்பதில் அழுத்தம் கொடுத்து…

லிங்கேஸ்வரனிற்கு மட்டும் தான்  தம்பியின் காதல் தெரியுமென்பதால், அவனை அதை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். விக்னேஸ்வரனோ அளவான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

இவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு நிலைமையை யூகித்த வள்ளி, தான் தீட்டி வைத்த திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாள்.

அதற்கு தோதாக லிங்கேஸ்வரனும், வேலை காரணமாக அடுத்த நாள் வெளியூர் செல்ல,  அவளின் நாடகத்தை ஆரம்பித்தாள் வள்ளி.

நீண்ட நேரமாக அறைக்குள்ளே அடைந்து கிடந்தவள், தாய் வரும் ஓசை கேட்டு வேகவேகமாக தன் சேலை ஒன்றை மின்விசிறியில் போட்டு இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். வெகு நேரமாக கதவைத் திறக்காததால், ஜன்னலைத் திறந்த தனலட்சுமி கண்டது மகள் தூக்கில் தொங்க தயாரவதை தான்.

“ஐயோ வள்ளி… என்ன மா பண்ற…?” என்ற தனலட்சுமியின் குரலில், அதிர்ச்சியடைவது போல் திரும்பிய வள்ளி, “ம்மா… என்ன தடுக்காதீங்க…” என்று அழுதுக்கொண்டே முடிச்சை இறுக்கினாள்.

“ஏ என்னாச்சு மா உனக்கு… ஏன் இப்படி பண்ற… ஐயோ யாராச்சும் வாங்களேன்…”

தான் நினைத்ததன் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்ததில், வள்ளியின் முகத்தில் வெற்றிச்சிரிப்பு வந்து போக, அதைக் கவனிக்காமல் தன் அண்ணனையும் அண்ணியையும் அழைத்தார் தனலட்சுமி.

“என்ன தனம்… எதுக்கு இப்படி கத்துற…” என்றவாறே வந்த சிவனேஸ்வரன் உமா தம்பதியருக்கும் வள்ளியின் செயல் அதிர்ச்சியை கொடுக்க, அவர்களும் அவளை அவளின் முடிவிலிருந்து பின்வாங்குமாறு கூறினர்.

“இல்ல நான் சாகப் போறேன்… எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்… அவரு இல்லாத வாழ்க்கை எனக்கு எதுக்கு…” என்று கண்ணில் நீர் வழிந்தபடி அரற்றிக் கொண்டிருந்தாள்.

“யாரயாவது காதலிக்கிறியா வள்ளி… யாருன்னு சொல்லுமா… நாங்க காதலுக்கு எதிரியில்ல வள்ளி… கண்டிப்பா அவன் நல்லவனான்னு பார்த்து சேர்த்து வச்சுடுறோம்…” என்றார் உமா.

“இல்லத்த… நான் காதலிக்குறது அவங்களுக்கே தெரியாது… அவங்க ரொம்ப பணக்காரங்க… நான்…” எண்டு விம்மியபடி அழ, “என்ன வள்ளி இப்படி சொல்ற… உன் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்த வேண்டிது இந்த மாமனோட கடமை… நீ விரும்புன பையன் யாருன்னு சொல்லு…” என்றார் சிவனேஸ்வரன்.

“அது வந்து… மாமா…” என்று அவள் தயங்க, “தயங்காம சொல்லு மா…” என்று அவளை ஊக்கினார் உமா…

“நான் விக்னேஸ்வரன் மாமாவ தான் காதலிக்குறேன்…” என்று கூறி அவர்களின் எதிர்வினையை கூர்மையாக நோக்கினாள்.

அவள் கூறியதில், சிவனேஸ்வரன் – உமா தம்பதியர் ஒரு நொடி தயங்கினர். அதைக் கண்ட தனலட்சுமி, “மன்னிச்சுடுங்க அண்ணா… அவ இப்படி பண்ணுவான்னு நெனைக்கல…” என்றார்.

“ச்சே ச்சே இதுல என்ன தப்பிருக்கு தனம்… நம்ம தான் வீட்டுலேயே பொண்ண வச்சுக்கிட்டு வெளில தேடிருக்கோம்… தனம் உன் மகளுக்கும் என் மகனுக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்… உனக்கு சம்மதம் தான…” என்றார் சிவனேஸ்வரன்.

“ரொம்ப சந்தோஷம் அண்ணா…” என்றார் தனலட்சுமி.

“என்னமா மருமகளே… இப்போவாவது கதவ திறந்து வெளிய வா…” என்றார் உமா.

தன் லட்சியம் நிறைவேறப் போவதில் மகிழ்ந்தாலும், அவர்களின் ஒரு நொடி தயக்கம், அவளின் மனதில் குடிக்கொண்டிருந்த வஞ்சத்தில் சேர்ந்து கொண்டது.

வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், இதையறிந்து ஆடிபோய்விட்டான். வள்ளிக்கு தன் மேல் காதலில்லை என்று அவனிற்கு நன்கு தெரியும். அவளின் நோக்கத்தை யூகித்தவன் சற்று அதிர்ந்து தான் போனான். அன்றே இவளைப் பற்றி மற்றவர்களிடம் கூறியிருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து யோசித்தான். இருந்தும் அவளிடம் ஒருமுறை பேசிப் பார்க்கலாம் என்று அன்று இரவு அவளை தனியாக சந்தித்தான்.

“வள்ளி, என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்று கூற, “ஓ ஆமால உங்களுக்காக அங்க ஒருத்தி காத்திட்டு இருக்காள…” என்று கேலியாக வினவியதும், மேலும் அதிர்ந்தான்.

தான் காதலிக்கும் விஷயம் தெரிந்தால், தன் முடிவை மாற்றிக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் அற்று போக, அவளை வெறித்தான் விக்னேஸ்வரன்.

“மாமா, நான் ஏன் உங்கள கல்யாணம் பண்ணிக்குறேன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்… எனக்கு உங்க மூலமா வர மரியாதை, அந்தஸ்து எல்லாம் வேணும்… முக்கியமா அந்த வீடு வேணும்… மத்தபடி நீங்க யாரு கூட வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வாழலாம்… எனக்கு அதுல ஒன்னும் ஆட்சேபனை இல்ல…” என்று அவள் கூறும்போதே, “ஏய்…” என்று கை ஓங்கியிருந்தான் விக்னேஸ்வரன்.

அப்போது “விக்னேஸ்வரா…” என்ற குரலில் பின்னாடி திரும்பிப் பார்க்க, அங்கு கோபத்துடன் நின்றிருந்தார் சிவனேஸ்வரன்.

“என்ன பண்ற… பொம்பள பிள்ளை கிட்ட கை நீட்டிட்டு இருக்க… இத தான் உனக்கு சொல்லிக் கொடுத்தோமா…”

“இல்ல ப்பா…” என்று அவன் ஏதோ சொல்ல வருகையில், “மாமா, அவருக்கு என்ன பிடிக்கலையாம்… நல்லா படிச்ச பட்டணத்து பொண்ணு தான் அவருக்கு பிடிக்குமாம்… அதான் கல்யாணத்த நிறுத்த சொல்லி எங்கிட்ட சொன்னாரு… நீங்க இந்த கல்யாணத்த நிறுத்தி, அவருக்கு பிடிச்ச மாதிரி பொண்ணையே கல்யாணம் பண்ணி வைங்க மாமா…” என்று அழுதுகொண்டே உள்ளே செல்ல விரைய, அவளைத் தடுத்தார் சிவனேஸ்வரன்.

“நில்லு மா… நீ எதுக்கு அழனும்… யாருக்கு பிடிக்குதோ இல்லையோ இந்த கல்யாணம் நடக்கும்…” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

“ப்ச்… பார்த்தீங்களா மாமா… நீங்க சொன்னத தான் சொன்னேன்… ஆனா பெரிய மாமா கல்யாணத்த நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு… இப்போ என்ன செய்வீங்க… நீங்க வேற உங்க அப்பா சொல்பேச்ச மீற மாட்டீங்களே…” என்று நக்கலாக கூறினாள்.

அதன்பின் அனைத்தும் வேகவேகமாக நடக்க, விக்னேஸ்வரன் – வேதவள்ளியின் திருமணமும் இனிதே (!!) நடந்து முடிந்தது. இடையில் லிங்கேஸ்வரன் தந்தையிடம் பேசிப்பார்ப்பதாக கூறியதையும் தடுத்து விட்டான் விக்னேஸ்வரன்.

“டேய் அந்த பொண்ணு கிட்ட சொன்னீயா…” 

“ம்ம்ம் சொல்லிட்டேன் அண்ணா… இனிமே நான் அவ வாழ்க்கைல இல்ல… என்ன மறந்துட்டு வேற வாழ்க்கைய அமைச்சுக்கோன்னு சொல்லிட்டேன்…” என்று சொல்லும்போதே அவனின் இதயம் தன் ‘நித்து’விற்காக துடித்தது.

கல்யாணம் முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட ஆரம்பித்தாள் வள்ளி.

“மா வள்ளி… இன்னைக்கு காலைல இட்லியும் பொங்கலும் பண்ண சொல்லி பொன்னி கிட்ட  சொல்லிடு…” என்று கூறிய உமாவை வெறித்தவள் மனதில், ‘இன்னும் எத்தன நாள் இவங்களுக்கு அடிமையாவே இருக்கணும்னு நெனைப்பாங்க… இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்…’ என்று நினைத்தாள்.

“என்ன அத்த, முன்ன மாதிரின்னு நெனச்சீங்களா… நான் இப்போ உங்க மருமக… உங்க மகன கவனிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு… இந்த மாதிரி சின்ன வேலையெல்லாம் வேற யாரயாவது செய்ய சொல்லுங்க…” என்று கூறி அறைக்குள் புகுந்து விட்டாள்.

அவளின் பேச்சு உமாவிற்கு சுருக்கென்று இருந்தாலும் சமாளித்தவராக அங்கிருந்து நகர, அவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட மயூரி,  “இனி எங்கிட்ட சொல்லுங்க அத்த… இட்லி பொங்கலுக்கு தோதா சாம்பாரும் சட்னியும் பண்ண சொல்லிடவா…” என்று பேச்சை மாற்றியவாறே அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

அதன்பின்பு அவளின் போக்கு நாளுக்கு நாள் பெரியவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. முதலில் ஜாடை மாடையாக மரியாதை இல்லாமல் பேச ஆரம்பித்தவள், பின் முகத்திற்கு நேராகவே பேசினாள். ஏதாவது கேட்டால், தன் மீது பொய்யாக குற்றம் சுமத்துவதாக கூறி நாடகம் போட்டாள்.

விக்னேஸ்வரனோ, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டான். 

அவளின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தனலக்ஷ்மியே அவளிடம் அதைப் பற்றி கேட்க, “ம்மா இது உனக்கு உன் அண்ணன் வீடு… ஆனா எனக்கு என் வீடு… எல்லாரும் அவங்கவங்க எல்லைக்குள்ள இருந்துகிட்டா நல்லது…” என்று அருகிலிருந்த சிவனேஸ்வரனையும் உமாவையும் பார்த்துக் கொண்டே தான் கூறினாள்.

தனலட்சுமியே மகளின் பேச்சில் அதிர்ந்து, தன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டார்.

உமாவும் தனியாக இருக்கும் சமயத்தில், “நாம அவசரப் பட்டுட்டோம்னு  தோணுதுங்க… நம்ம பையனும் சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியல…” என்றார்.

“ம்ம்ம் இப்போ அத நெனச்சு ஒன்னும் பண்ண முடியாது உமா… அவங்க வாழ்க்கை நல்லா இருக்குறதுக்கு நம்ம தான் ஏதாவது செய்யணும்… ம்ம்ம் செய்யுறேன்…” என்றவாறே படுத்தார்.

அடுத்த நாள் காலையில் மணி சிவனேஸ்வரனின் வீட்டிற்கு வந்தான். நலவிசாரிப்புகள் முடிந்ததும், “மணி நான் சொன்ன மாதிரி அந்த வீட்டு பத்திரத்த மாத்திட்டீயா…” என்று சிவனேஸ்வரன் கேட்டதும், “மாத்திட்டேன் மாமா…” என்று அந்த பத்திரத்தை கொடுத்தான்.

அதைக் கண்ட வள்ளி, ‘என்ன பத்திரமா இருக்கும்…’ என்று யோசித்துக் கொண்டிருக்க, உமாவே சிவனேஸ்வரனிடம் கேட்டார்.

“சமீபத்துல வாங்குன புனே வீட்டு பத்திரம் உமா…” என்றார் சிவனேஸ்வரன்.

அதைக் கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், வேகவேகமாக கை அலம்பிவிட்டு நடு கூடத்திற்கு வந்தாள்.

“அத என் பேர்ல தான எழுதிருக்கீங்க மாமா…” என்று ஆவலுடன் கேட்டவளிற்கு சிவனேஸ்வரனின் பதில் கோபத்தை வரவழைத்தது.

“இல்ல மா… உங்களுக்கு பொறக்குற குழந்தை பேர்ல தான் இந்த வீடு இருக்கும்…” என்று திட்டவட்டமாக கூறினார்.

“மாமா நீங்க பண்ணுறது அநியாயம்… அவரு மனைவி பேர்ல தான இந்த வீட்ட எழுத போறேன்னு சொன்னீங்க… இப்போ எப்படி அத மாத்தலாம்…” என்று ஆவேசமாக வினவினாள்.

“இதுல என்ன மா தப்பிருக்கு… உன் பேர்ல எழுதனும்னு சொன்னத உன் பிள்ளை பேருக்கு தான மாத்திருக்கேன்… அதுவுமில்லாம அது நான் வாங்கி போட்ட வீடு… அது யாரு பேருக்கு எழுதனும்னு எனக்கு தெரியும்…” என்று கோபமாக கூற, அவரின் கோபத்தில் அவள் பின்வாங்கினாள்.

அந்த நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். தனக்கு குழந்தை பிறந்தால் தான், அந்த வீடு  தனக்கு சொந்தமாகும் என்பதை உணர்ந்தவள் தன் கணவனை நாடினாள்.

விக்னேஸ்வரனோ அவளை கேவலமாக பார்த்துவிட்டு, “என் மனசும் உடம்பும் எப்பவும் என் நித்துக்கு தான். இந்த நெனப்போட என் பக்கத்துல வராத…” என்று கூற, அவனின் புறக்கணிப்பில் ஒரு நொடி அவளின் பெண்மனம்  அடி வாங்கியது. ஆனால் அடுத்த நொடியே அவளுக்குள் இருந்த பணமோகம் என்னும் பிசாசு உயிர்த்தெழ, “நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி அவளும் யாரயாவது  கல்யாணம் பண்ணிருப்பா… அப்போ நீங்க சொன்னதுக்கு வாய்ப்பே இல்ல… ஒன்னு நீங்க பிரமச்சாரியா உங்க வாழ்க்கைய வாழனும்… இல்ல அவக்கூட கள்ளத்தொடர்புல இருக்கணும்…” என்று கூற, “சீ உன் அசிங்கமான கற்பனைய நிறுத்து… அவ பேர சொல்றதுக்கு கூட உனக்கு எந்த தகுதியும் இல்ல…” என்று கத்திவிட்டு வெளியே சென்று விட்டான்.

அதன்பின் மூன்று நாட்களாக அவன் வீட்டிற்கே வரவில்லை. நான்காம் நாள் வந்தவன், மும்பையில் தங்களின் தொழில் சற்று மோசமாக இருப்பதால், அதை கவனித்துக் கொள்ள அங்கு செல்லப் போவதாகக் கூறினான்.

இதை கேட்ட வள்ளிக்குள் ஒரு திட்டம் உருவாக, தன் கணவனிடம் தன்னையும் அங்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாள்.

முதலில் மறுத்தவனை, “உங்க மூலமா தான் குழந்தை பிறக்கணும்னு இல்ல… நான் முடிவு பண்ணிட்டேன்… நான் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு முயற்சி செய்யப் போறேன். இங்க இருந்தா அது எல்லாருக்கும் தெரிஞ்சு உங்க குடும்ப மானம் தான் போகும்…” என்று மிரட்ட, அவனும் அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் அவளை அழைத்துச் சென்றாள்.

இருவரும் மும்பை வர, புது ஊர் புரியாத மொழி என்று முதலில் கொஞ்சம் தடுமாறினாள் வள்ளி. அவளின் உதவிக்கு யாரையாவது நியமிக்குமாறு விக்னேஸ்வரனிடம் கேட்டாள். அவனும், தன்னை தொல்லை செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்து ஒரு பெண்ணை அவளின் துணைக்கு நியமித்தான்.

அதன்பின்பு வள்ளியின் நேரம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலையவே சரியாக இருந்தது. மருத்துவமனையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தன்னிடமிருந்த பணத்தால் விடை கூறியவள், தான் நினைத்ததை சாதித்தும் விட்டாள்.

ஆறு மாதங்களில், பல முயற்சிகளின் பின் அவள் கர்ப்பம் தரித்திருந்தாள். அதில் அவள் சந்தித்த வலிகள் பல… இருந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டாள் அவள், அவள் விரும்பிய வீடு அவளிற்கு சொந்தமாவதற்காக…

அவள் கர்ப்பமான விஷயம், அவர்களின் வீட்டிற்கு பகிரப்பட, அனைவரும் அவர்களின் வாழ்வு மலர்ந்ததென்று மகிழ்ச்சியடைந்தனர்…. உண்மை நிலை அறியாமல்…

மும்பையில் சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்ததால், வளைகாப்பிற்கு வீட்டிற்கு வா மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, மற்றவர்கள் மும்பை சென்று அவளிற்கு வளைக்காப்பை நடத்திவிட்டு வந்தனர்.

இப்படியாக மாதங்கள் நகர, அவளினுள்ளிருந்த சிசு இந்த பூமியை பார்க்க அவசரம் காட்டியதோ, ஒன்பதாம் மாத துவக்கத்திலேயே வலி வர, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் வள்ளி.

விக்னேஸ்வரனிற்கு தகவல் தெரிவிக்கப்பட, வேண்டாவெறுப்பாக மருத்துவமனைக்கு வந்திருந்தான். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்க, அவனின் மனதில் குடிக்கொண்டிருந்த வெறுப்பு அப்பிஞ்சின் அழுகையில் தகர்ந்து தான் போனது. எதிர்பார்ப்புடன் அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தவன், கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு வேகமாக எழுந்தான்.

அவன் கைகளில் ரோஜா குவியலாக பெண் குழந்தையை வைத்தார் அந்த செவிலியர். குழந்தையின் முகம் கண்டவன் அதன் அன்னையை மறந்து தான் போனான்.

அப்போது அவனருகே வந்த மருத்துவர், “சாரி மிஸ்டர். விக்னேஸ்வரன் உங்க மனைவிய காப்பாத்த முடியல… ட்ரீட்மெண்ட் முடியுற நேரத்துல அவங்களுக்கு ப்ரேஷர் அதிகமானதுனால அவங்க இறந்துட்டாங்க…” என்றார்.

அந்த செய்தியில் அவன் அதிர்ந்து தான் போனான். அவளை வெறுத்தாலும், அவள் இறக்க வேண்டும் என்று அவன் ஒருபோதும் நினைக்க வில்லை. உள்ளே சென்று பார்த்தவனிற்கு, அவளின் உயிரற்ற சடலமே காட்சிக்கு கிடைக்க, அவளைக் கண்டு விரக்தியாக சிரித்தவன், “வீடு வீடுன்னு அதுக்காக இவ்ளோ தூரம் வந்து, கடைசில அத அனுபவிக்கக் கூட முடியலயே உன்னால…” என்று கைகளிருந்த மகளுடன் வெளியே சென்று விட்டான், வள்ளியின் ஆன்மா, இன்னும் அந்த வீட்டிற்காக அலைவதை அறியாமல்.

வள்ளி இறந்து ஒரு வருடம் முடிந்திருந்தது. விக்னேஸ்வரனிற்கு மகளே உலகம் என ஆனது. அவளிற்கு ஜனனி என்று பெயரிட்டு கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அந்த குழந்தையை கொண்டாடினர். அர்ஜுன் கூட புது தங்கையைத் தூக்கிக் கொண்டே அலைந்தான்.  அவர்களுக்கு ஜனனியின் பிறப்பின் ரகசியம் தெரியாது… விக்னேஸ்வரனும் சொல்ல வில்லை. அவளை தன்னுடைய மகளாகவே உலகிற்கு அடையாளப்படுத்த விரும்பினார்.

இப்படியே நாட்கள் செல்ல, வீட்டின் மேல் ஆசை கொண்டு இறந்திருந்த வள்ளியின் ஆவியோ, அவள் ஆசைப்பட்ட வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தது.

*******

“விக்கிப்பா, நித்துமாவ எப்படி கல்யாணம் பண்ணீங்க…?” சித்தப்பாவிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் வினவினான். அவர்களின் வண்டி பிம்ரிவாடியை நெருங்கியிருந்தது.

“எல்லாம் உங்க அப்பாவால தான் அர்ஜு, என் நித்து எனக்கு கிடைச்சா…”, அவரின் குரலில் காதல் கொட்டிக் கிடந்தது.

“என் நித்து கல்யாணமே பண்ணிக்காம இருந்துருக்கா… அண்ணா சொல்லித்தான் எனக்கு இந்த விஷயமே தெரியும்… ஆனாலும் அவள கல்யாணம் பண்ணிக்க எனக்கு தகுதி இல்லன்னு அவகிட்டேயிருந்து விலகியே இருந்தேன். ஆனா எங்கிட்ட பேசி பேசியே என்ன கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டா என் நித்து… அப்பாவும் அம்மாவும் தான், என் காதல தெரிஞ்சுக்காம வள்ளிய கல்யாணம் பண்ணி வச்சத நெனச்சு வருத்தப்பட்டாங்க… அத்த ஒருபடி மேல போய், எங்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க… அதுக்கப்பறம் எல்லாம் நல்லதா நடக்கும்னு சந்தோஷப்பட்டேன்… என் நித்து எங்க பொண்ணு ஜனனின்னு அழகா போயிட்டு இருந்த எங்க வாழ்க்கைல மறுபடியும் வந்தா… ஹும்… வந்துச்சு ‘அது’…

******

“எனக்கென்னமோ இவங்க தான் வில்லி சாரி வள்ளியோட உதவியாளரா இருப்பாங்கன்னு தோணுது…” என்று மீண்டும் சாக்ஷியின் காதில் முணுமுணுக்க, அந்த பெண்மணி மீண்டும் விஷ்வாவை முறைத்தார்.

“அப்போ வள்ளி அவங்க குடும்பத்த பழி வாங்குனாங்களா…” என்று ஆதர்ஷ் கேட்க, “ஆமா அவளோட வீடு அது…  அவ வளைக்காப்புக்கு வந்தவுங்க, அவ நல்லபடியா குழந்தை பெத்துகிட்டு வந்தா அந்த வீட்ட அவ பேருக்கே மாத்திருறதா சொன்னாங்க… ஆனா அவ இறந்ததும், இது தான் சாக்குன்னு அவ புருஷன் அவனோட காதலிய கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தான். அவங்க குடும்பத்தோட சந்தோஷத்துக்கும் குறைவில்லாம இருந்துச்சு… தனக்கு வீட்ட சொந்தமாக்குறேன்னு சொல்லி மொத்த குடும்பமும் ஏமாத்தி சாகடிச்சத அவளால தாங்கிக்க முடியல… அதான் அவங்க குடும்பத்தோட நிம்மதிய பறிக்கணும்னு திட்டம் போட்டு பழி வாங்குனா….” என்றார்.

“இது என்ன தப்பான லாஜிக்… அந்த வீடு வேணும்னு இவங்க தான டெஸ்ட் ட்யூப் பேபி முறைய தேர்ந்தெடுத்தாங்க… அதுக்கு அவங்க மேல பழி போடுறாங்க…” என்று சாக்ஷியிடம் கூறியவன், அவளின் பயந்த முகத்தைக் கண்டு, “என்ன திரும்பவும் முறைக்குறாங்களா… நான் இவ்ளோ மெதுவா பேசும்போதும் எப்படி தான் அவங்களுக்கு கேக்குதோ…” என்று திரும்பியவனின் முகத்திற்கு அருகே அவரின் முகத்தை வைத்து உற்றுப் பார்த்தார் அந்த பெண்மணி. அவரின் பார்வையில் விஷ்வாவின் நாக்கு வறண்டு போனது.

“முதல பேசுனது போல அவ பேர்லேயே அந்த வீட்ட எழுதியிருந்தா, அவளும் குழந்தை வேணும்னு ட்ரீட்மெண்ட் எடுத்திருக்க மாட்டா… உயிரோடவும் இருந்திருப்பா…” என்று கூறினார்.

‘சரியான செல்ஃபிஷ்…’ இது தான் அங்கிருந்த மற்ற மூவருக்கும் தோன்றியது.

“எப்படி பழி வாங்குனாங்கன்னு சொல்லவே இல்லயே…” என்று ஆதர்ஷ் அந்த பெண்மணியை பேசத் தூண்டினான்.

ஒரு மர்ம சிரிப்புடன், “முதல, தன்னோட வாழ்க்கைய சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த சக்காளத்திய இதே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவ புருஷன் கண்முன்னாடியே கொன்னா… இறந்த சடலம் கூட கிடைக்காம அவன் அழுத்துட்டே பைத்தியமானத பார்த்து பார்த்து ரசிச்சா… தம்பிய எப்படியாவது சரிபண்ணிடனும்னு நெனச்ச அண்ணனையும் கொன்னா… அதுக்கப்பறம் அவ ஆவி இங்க இருக்குறத தெரிஞ்சுகிட்ட அவ குடும்பம், பேய் ஓட்டுறதுக்காக மந்திரவாதிங்கள கூட்டிட்டு வந்து ராத்திரியோட ராத்திரியா, அவள இந்த உலகத்த விட்டு அனுப்ப நெனச்சாங்க… ஆனா அதுக்கெல்லாம் அடங்குவாளா அவ… அடுத்த நாள் இந்த வீட்டையே எரிச்சுட்டா… தான் ஆசைப்பட்ட வீடு, தான் அனுபவிக்கலேனா, வேற யாரும் அனுபவிக்கக் கூடாதுன்னு எரிச்சுட்டா… அதுல அவளோட மாமா  மட்டும் இறக்க, மத்தவங்களெல்லாம் தப்பிச்சு போயிட்டாங்க… அவ கண்ணுல படக்கூடாதுன்னு அவ குழந்தைய தூக்கிட்டு அவ அம்மா யாருக்கும் தெரியாம மறைஞ்சு வாழ்றதா நெனச்சாங்க… ஆனா அதெல்லாம் தெரிஞ்சவ காத்திருந்தா… அவ பொண்ணு இந்த மண்ணுல காலடி எடுத்து வைக்கிற நாளுக்காக காத்திருந்தா… இதுக்கு இடையில, அந்த வீட்டு பையன கொல்லணும்னு நெனச்சவ, அவனுக்கு மரணத்த விட மேலான தண்டனைய கொடுத்தா… அவங்க பையன் இறங்துட்டதா நெனச்சே  அவன் அம்மாவும் பாட்டியும் உயிர விட்டுட்டாங்க… இப்படி அந்த குடும்பத்தோட மொத்த நிம்மதியும் அழிச்சு பழி தீர்த்துகிட்டா… இப்போ அவளோட பழிவாங்கும் படலத்தோட கடைசி கட்டத்துல இருக்கா… அவளோட கனவுல மண்ணள்ளி போட்ட அவளோட வாரிச கொல்றது தான் இப்போ அவளோட லட்சியம்…” – அவர் பேச பேச அவரின் குரல் கோரமாக மாறியது. கடைசி வரியை அவர்கள் மூவரையும் பார்த்து கர்ஜிக்கும் குரலில் சொன்னார்.

அதைக் கண்ட மூவருக்குமே மனதில் பய உணர்வு தோன்றியது. சற்று சுதாரித்த ஆதர்ஷ், “அவங்கள கொல்லணும்னா அன்னைக்கே கொன்றுக்கலாமே… ஏன் இவ்ளோ நாள் காத்திருந்தீங்க, வேதவள்ளி…” என்று கேட்டிருந்தான்.

“என்னாது இவங்க தான் வள்ளியா…” என்று வாய்விட்டு அலறிய விஷ்வாவின் மனதில், சற்று நேரத்திற்கு முன் வள்ளி – வில்லி என்றெல்லாம் கூறியது நினைவிற்கு வந்து, அவனின் மனம் படபடவென அடித்துக் கொண்டது.

சாக்ஷியும் பயத்தில் இரண்டு அடி பின்வாங்கியிருந்தாள்.

“பரவாலையே சீக்கிரமா கண்டுபிடிச்சுட்ட… இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்க, யாரும் நானா சொல்ற வரைக்கும் கண்டுபிடிக்கல… ஹ்ம்ம் நீ புத்திசாலி தான்…” என்று கூறியபடியே உண்மை தோற்றத்திற்கு மாறியது ‘அது’…

கையில் பிடித்திருந்த குச்சியை தூக்கிப்போட்டு, சுற்றியிருந்த கம்பளியை விலக்கியது. அதன் கோர உருவத்தை கண்டவர்களுக்கு தலையே சுற்றித் தான் போனது.

“ஆனா அந்த புத்திசாலி ஒரு பொண்ணுக்காக மத்த ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வந்தது மிகப்பெரிய முட்டாள்தனம்…” என்று கூறி பேய்சிரிப்பு சிரித்தது.

அதுவரை இருளை கொஞ்சமாக விலக்கிய, அவர்களின் அலைபேசி ஒளியும் அணைந்து போக, அதன் சிரிப்பும் சூழ்நிலையை அசாதாரணமாக்க, சற்று பயந்திருந்த ஆதர்ஷ், விரைவாக செயல்பட்டு மற்ற இருவரையும் இழுத்துக் கொண்டு ஓடி ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டனர். அது விஷ்வா கூறிய மாடிப்படிகளுக்கு கீழிருந்த சிறிய அறையே…

*******

அர்ஜுனின் நால்வர் குழு, பிம்ரிவாடி வந்திறங்கினர். நேராக பிபுலின் வீட்டிற்கு சென்ற அர்ஜுனை, அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

பிபுலிடம் அன்று நடந்தது அனைத்தையும் விளக்கியவன், தன் அடையாளத்தையும் கூறி, விக்னேஸ்வரனை அறிமுகம் செய்து வைத்தான்.

நடந்தவற்றை கேட்டறிந்த பிபுல், மற்ற நால்வரையும், இங்கு தங்க வைத்தது தவறோ என்றெண்ணிய வேளையில், இடியாய் அதிர்ச்சியை தந்தது, நால்வரும் அவர்களுக்காக ஒதுக்கிய வீட்டில் இல்லை என்னும் செய்தி.

அதைக் கேட்ட மற்றவர்கள் அந்த மரவீட்டிற்கு சென்று ‘அதை’ எதிர்கொள்ள தயாராக, அவர்களுடன் பிபுலும் கிளம்பினார். இன்றைய நிலைக்கு தானும் ஒருவகையில் காரணம் என்ற குற்றவுணர்ச்சி, மற்றவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கிளம்ப வைத்தது.

அதன் பழிவாங்கும் படலம் பூர்த்தியடையுமா… அதனை எதிர்க்க பெரும் படை போல் இவர்கள் தயாராக இருக்க, இவர்களில் யார் வாழ்வார்கள்… யார் வீழ்வார்கள்… கடைசி அத்தியாயத்தில்…

அமானுஷ்யம் தொடரும்…

இன்றைய அமானுஷ்ய இடம்…

தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல் (TajMahal Palace hotel, Mumbai)

 

மும்பை மாநகரின் செழிப்பான இடங்களில் ஒன்றாகும் இந்த தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல். பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் அதிநவீன ஹோட்டலான இதன் வரலாறு, பயங்கரவாத தாக்குதல், கொலைகள், அமானுஷ்ய நிகழ்வுகள் முதலியவற்றால் கரை படிந்ததாக இருக்கிறது.

இந்த ஹோட்டல் 1903ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்றிலிருந்து  இன்றுவரை பல முக்கிய பிரபலங்களின் வரவால் இந்த ஹோட்டல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதே ஹோட்டல், இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவ மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின், 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் பலரின் உயிரை காவு வாங்கியதும் இங்கு தான்.

இதற்கும் முன் சென்று பார்த்தால், இந்த ஹோட்டலை கட்டும் போது, அதன் தலைமை பொறியாளராக இருந்தவர் சேம்பர்ஸ். (Chambers) இந்த ஹோட்டலின் வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கியவர், இங்கிருப்பவர்களை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, சொந்த வேலைக்காக அவரின் நாட்டிற்கு சென்றார். அவர் இங்கு வந்து பார்த்தபோது, அவர் ஒப்புதல் அளித்த வரைபடத்தில் பெரிய தவறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த ஹோட்டலின் முகப்பு இருக்க வேண்டிய திசையில் இல்லாமல், எதிர்திசையில் கட்டப்பட்டிருந்தது. பாதி கட்டிமுடித்த கட்டிடத்தை இடித்தும் கட்டமுடியாத சூழ்நிலையில் இருந்தார் அவர். அதுவரை எந்தவொரு தவறுமின்றி பணியாற்றியவருக்கு, இந்த தவறு மிகவும் உறுத்தியதால் அந்த ஹோட்டலின் ஐந்தாம் தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்போதிருந்தே அவரின் ஆவி அங்கு உலவுவதாக அங்கிருக்கும் மக்கள் நம்பினர். பலர் அவரைப் பார்த்தாகவும், அவரின் குரலைக் கேட்டதாகவும் கூறினர்.

இன்னமும் அந்த ஹோட்டலை அவர் கண்காணித்து வருவதாகக் கூறுகின்றனர். ஒருமுறை அங்கிருந்த விலைமதிப்பற்ற பொருளைத் திருட முயன்ற ஊழியரை, அவரின் ஆவி அடித்து மயக்கமுற செய்ததாக அங்கு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.

சேம்பர்சின் ஆவி அங்கு உண்மையிலேயே இருக்கிறதா… இல்லை இது கட்டுக்கதையா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…

இன்னையோட இந்த பகுதி முடிவுக்கு வந்தாச்சு… அப்போ ஃபைனல் எபிக்கு… கொஞ்சம் புதுசா முயற்சிக்கலாம்… இதுவரைக்கும் பல அமானுஷ்ய இடங்கள நான் சொன்னேன்… கடைசி எபில, நீங்க கேள்விபட்ட அமானுஷ்ய இடங்களையோ, சம்பவங்களையோ,  உங்க சொந்த அனுபவங்களையோ பகிர்ந்துகோங்க… வாங்க ஃபைனல் எபிய எல்லாரும் சேர்ந்து கொண்டாடலாம்…