மிரட்டும் அமானுஷ்யம் 2

 

 

மிரட்டல் 2

 

“வாட்… என்னடி சொல்ற…? ஜானு உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு…”

 

“இல்ல நந்து… எனக்கென்னமோ நான் இப்போ எடுத்திருக்க முடிவு தான் கரெக்ட்னு தோணுது…”

 

ஜானு (எ) ஜான்வி. பயந்த சுபாவம் உடையவள். இரவில் தூங்கும் போதும் கூட விளக்கை ஒளிரவிட்டே தூங்குவாள். இருட்டைக் கண்டால் அவ்வளவு பயம் அவளிற்கு. ஆனால் வாழ்க்கையோ அவளிற்கு தனிமையையே பரிசாக இதுவரை அளித்திருக்கிறது. 

 

சிறு வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தவள், தாய் வழி பாட்டியிடம் வளர்ந்தாள். பாட்டியும் அவளின் பதினெட்டாவது வயதில் காலமாக அன்றிலிருந்து இன்று வரை தனிமையே அவளைத் தத்தெடுத்துக் கொண்டது.

 

தந்தையும் அவரின் நண்பரும் சேர்ந்து ஆரம்பித்த தொழிற்சாலையிலிருந்து இவளின் பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையை இவளின் பெயரில் வங்கியில் போட்டுவிடுவதால், அவளின் படிப்பு எவ்வித தடையுமின்றி சென்றது. இதோ பேஷன் டிசைனிங் முடித்தவள் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  

 

என்ன தான் பணத்தேவைகள் இல்லையென்றாலும், சோர்ந்திருக்கும் நிலையில் தோள்சாய ஆளில்லாமல் அவளை வாட்டும் தனிமையை அறவே வெறுத்தாள்.

 

அத்தனிமையை குறைப்பதற்கெனவே வந்தவள் தான் நந்தினி. ஜானுவின் பக்கத்து வீட்டுப் பெண். சிறு வயதிலிருந்தே இருவரும் உற்ற தோழிகள். ஜானுவின் பாட்டி இறந்தபோது அவளிற்கு பெரிதும் ஆறுதலாக இருந்தது, நந்தினியும் அவளின் அன்னை பத்மாவும் தான்.

 

நந்தினி ஜானுவின் பயத்தையும் நன்கறிந்தவள். இருட்டைக் கண்டாலே பயப்படுபவள், அமானுஷ்யத்தைப் பற்றி படிக்கப் போகிறேன் என்று கூறினால்… அதற்கு தான் நந்தினி இப்படி கத்திக் கொண்டிருக்கிறாள்.

 

“என்ன சரியான முடிவா… ஒரு நைட் லைட் ஆன் பண்ணாம தூங்கு… அப்போ நீ எடுத்த முடிவு சரி தான்னு நான் ஒத்துக்குறேன்…” என்றாள் நந்தினி இன்னும் கோபமாக…

 

“நந்து ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ… இருட்டு, பேய் இதை பத்தி தெரியாததால தான பயமா இருக்கு… அதப் பத்தி தெரிஞ்சுகிட்டா பயம் போயிடும்ல… பயத்த பார்த்து விலகி ஓடக்கூடாது. அத தைரியமா ஃபேஸ் பண்ணனும்னு நீ தான சொன்ன…”

 

“அதுக்கு அதப் பத்தி படிச்சு வீர சாகசம் பண்ணனும்னு இல்ல…” என்று நந்தினி முகத்தை திருப்பிக் கொள்ள…

 

அவளின் தாடையைப் பற்றியவள், “ப்ளீஸ் நந்து… ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ் தான்… அதப் பத்தி தெரிஞ்சுக்க தான் போன்றேன்… அத முயற்சி பண்ணலாம் மாட்டேன்… ப்ராமிஸ்” என்று கெஞ்சினாள் ஜான்வி.

 

“சரி சரி… அத படிக்க எங்க போகணும்… இந்த மாதிரி பாரானார்மல் கோர்ஸ் எல்லாம் இங்க சொல்லிகுடுக்குறாங்களா என்ன…”

 

“இந்தியால இந்த மாதிரி படிப்பு இதுக்கு முன்னாடி அவ்ளோவா யாரும் எடுத்து படிச்சது இல்ல நந்து… ஆனா இப்போ கொஞ்ச வருஷமா இந்த படிப்ப பொழுதுபோக்குக்காக நெறய பேரு படிக்கிறாங்க… நெறய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆன்லைன்ல சொல்லித் தராங்க…”

 

“ஹே சூப்பர்… அப்போ நீ ஆன்லைன்ல தான் படிக்கப் போறீயா…?” என்று ஆர்வத்துடன் நந்தினி வினவ…

 

“இல்ல நந்து… ஆன்லைன்ல படிச்சா தியரி மட்டும் தான் இருக்கும்… ப்ராக்டிகல்…” என்று ஜானு முடிப்பதற்குள், “என்னாது ப்ராக்டிகலா… என்னடி விட்டா முழுநேர பேயோட்டி ஆகிடுவ போல…” என்றாள் நந்தினி.

 

“யாருக்கு தெரியும் நெக்ஸ்ட் டைம் என்ன பார்க்குறப்போ, நான் ஒரு ப்ரொஃபெஸனல் பாரானார்மல் இன்வெஸ்டிகேடரா (அமானுஷ்ய ஆய்வாளர்) கூட ஆகிருக்கலாம்…” என்று நந்தினியைப் பார்த்து கண்ணடித்தாள்.

 

“ஜோக்ஸ் அபார்ட் ஜானு… ஆர் யூ சீரியஸ்…?”

 

“எஸ் நந்து… ஐ’ம் ஹன்ரெட் பெர்ஸன்ட் சீரியஸ்… எனக்கென்னமோ இத முடிச்சுட்டு வந்தா எல்லாம் சரியா இருக்கும்னு ஒரு ஃபீலிங்…” 

 

ஜானுவின் தெளிவான குரலில், தானும் தெளிந்த நந்தினி, “சரி மேடம் எங்க போய் படிக்கப் போறீங்க…?” என்று கேட்டாள்.டி

 

“புனே…” என்று ஜான்வி கூறியதும், அதுவரை சாந்தமாய் வீசிக் கொண்டிருந்த தென்றல் காற்று, புயலாய் மாறி சுழன்றடித்தது.

 

“ஹே நந்து, என்ன இது திடீர்னு க்ளைமேட் இப்படி மாறிடுச்சு…” ஜான்வி பயந்து போனவளாய் கேட்க…

 

“தெரியல ஜானு… வா வீட்டுக்கு போயிடலாம்… மழை வந்துருச்சுனா இங்கேயிருந்து போறது கஷ்டம்…”

 

அங்கு… அந்த மரவீடு இருந்த இடத்திலும், பேய் காற்று வீச, சன்னமாக ஒலித்தது அந்த குரல், “உனக்காக தான் காத்திட்டு இருக்கேன் ரொம்ப வருஷமா… நீ இங்க வருவ… வந்து தான ஆகணும்… நீ இங்க வந்தா எல்லாமே சரியாகிடும்… பல வருஷமா தீர்க்கப்படாத கணக்கு சரியாகிடும்…  ஹாஹா… ஹாஹா….” என்று அந்த பலத்த காற்றுகிடையிலும் கோரமாக கேட்ட அந்த குரலில், பூமி அதிர்ந்தது

 

இதோ அதோ என்று காலம் ஓடி அவள் புனே செல்லும் நாளும் வந்தது. கிளம்பும் முன் நந்தினியின் வீட்டிற்கு வந்தவள், பத்மா- கோபால் தம்பதியிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.

 

அவர்களைப் பொறுத்தவரை, ஜான்வியும் அவர்களின் மகள் தான். பாட்டியின் மறைவிற்கு பிறகு அவர்கள் எவ்வளவு சொல்லியும் இவர்களுடன் தங்குவதற்கு அவள் சம்மதிக்கவில்லை. மற்றபடி எந்த உதவி என்றாலும் இவர்களிடம் உரிமையுடன்   கேட்கும் அளவிற்கு அவ்வீட்டில் ஒருவளாக இருந்தாள்.

 

ஜான்வி புனேயில் தங்குவதற்கு. லேடீஸ் பிஜியில் அங்கிருக்கும் தன் நண்பர்களின் மூலம் இடம் பார்த்து கொடுத்தது கூட நந்தினியின் தந்தை கோபால் தான்.

 

அங்கு பத்மா-கோபாலிடம் பிரியாவிடை பெற்றவள், நந்தினியை அணைத்துக் கொண்டாள்.

 

“மேடம், ஒழுங்கா படிச்சுட்டு ஒழுங்கா திரும்பி வாங்க… வரவழில அங்கயிருக்க பேய்ய இங்க கூட்டிட்டு வந்துடாத…” என்று அவளை வாரினாள்.

 

ஜான்விக்கும் இவ்வளவு நாட்கள் இருந்த தைரியம் குறைந்தது போல் இருந்தது. அவள் மனதிற்குள், ‘என்னால இது முடியுமா…’ என்ற குழப்பம் அவளை மீண்டும் பயத்தின் பாதையில் கூட்டிச் சென்றது.

 

இப்போது இவர்களின் அளவளாவலில் குழப்பம் நீங்கி மனம் தெளிந்திருந்தது. தான் இதை கண்டிப்பாக வெற்றிகரமாக முடித்து திரும்ப வேண்டும். இனிவரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்றால், இந்த பயத்தை கண்டிப்பாக போக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

 

புனே இரயில் நிலையம்…

 

இரயிலில் இருந்து இறங்கியவளின் மனதில், காரணமே இல்லாமல் உணர்ச்சிக் குவியல்கள் உண்டாகின… சந்தோஷம், சோகம், அழுகை, கோபம் என்று மாறி மாறி அவ்வுணர்ச்சிகள் அவளைத் தாக்கின. ஏனோ இந்த இடம் அவளிற்கு ஏற்கனவே பரிச்சயமானது போல தோன்றியது.

 

ஒரு நீண்ட மூச்சு எடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டாள். அவள் காதுக்கருகில், “எக்ஸ்க்யூஸ் மீ…” என்ற குரல் கேட்டது.

 

அப்போது தான் அவள் பாதையை மறித்து நின்றிருப்பது தெரிந்தது.

 

அப்புதியவனிடம் அவசரமாக ஒரு ‘சாரி’ கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள், அப்புதியவனின் பார்வை தன்னைத் தொடர்வதைக் கவனிக்காமல்…

 

அமானுஷ்யம் தொடரும்…

 

இன்றைய அமானுஷ்ய இடங்கள்…

 

டெல்லி கன்டோன்ட்மெண்ட் (Delhi Cantonment)

 

 

படத்தில் வருவது போல், பேய் துரத்தும் காட்சி பார்க்க வேண்டுமென்றால், டெல்லி கன்டோன்ட்மெண்ட் தான் அதற்கு சரியான இடம். டெல்லியில் (அமானுஷ்யத்திற்கு) புகழ்பெற்ற இடமான கன்டோன்ட்மெண்ட், இரவு நேரத்தில் யாருமற்ற பாழடைந்த இடமாகவே காட்சியளிக்கின்றது. 

 

இரவு நேரத்தில், பைக்கில் வரும் பயணிகளிடம், வெள்ளை உடை அணிந்த பெண் ‘லிஃப்ட்’ கேட்பதாகவும், மறுப்பவர்களை அவர்களின் வண்டியை அதிவேகத்தில் பின்தொடர்ந்து சென்று பயமுறுத்துவதாகவும் கூறுகின்றனர். அவளிற்கு லிஃப்ட் தருபவர்கள், அதன்பின் காணாமல் போகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது இங்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வாக அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர். மேலும் இரவு நேரத்தில், ஏதோ ஒரு வகையில் (!!!) இறந்த பெண்ணின் ஆவி தான் அங்கு சுற்றுவதாக கூறுகின்றனர். 

 

உங்களுக்கு என்ன தோன்றுகிறது…? ஒரு வேலை நீங்கு அவ்வழியில் சென்று கொண்டிருக்கும்போது இவ்வாறு ஒரு பெண் லிஃப்ட் கேட்டால் என்ன செய்வீர்கள்…?

 

அக்ரேஷன் கி பயோலி (Agrasen ki Baoli)

 

 

மத்திய டெல்லியில் அமைந்துள்ள இந்த இடம் 108 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட நீர் தேக்கம் ஆகும். இது காலத்தால் அழியாமல் இருக்கும் நினைவுச் சின்னம். 15 மீட்டர் அகலமும் 60 மீட்டர் நீளமும் உள்ள இப்படிநிலைகள் மஹாபாரத காலக்கட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

இன்றும் வற்றாமல் இருக்கும் நீர், அங்கு செல்பவர்களின் மனதை வசப்படுத்தி, ஒரு வித மாயையைத் தோற்றுவித்து, அந்த நீரில் மூழ்கச் செய்வதாக சொல்லப்படுகிறது. காலை நேரத்தில் இங்கு செல்பவர்கள் கூட, அவர்கள் அனுபவத்தை பகிரும் போது மனதிற்கு மிகவும் படப்படப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

 

இதுவும் அங்கிருக்கும் ஆவியின் வேலையோ…