மிரட்டும் அமானுஷ்யம் 3

 

மிரட்டல் 3

 

“ஹலோ நந்து…”

 

“…”

 

“ஹான் நான் இங்க வந்து சேர்ந்துட்டேன்…”

 

“…”

 

“இல்ல ரயில்வே ஸ்டேஷன்ல தான் இருக்கேன்… இனிமே தான் ஆட்டோ பிடிச்சு பிஜி போகணும்…”

 

“…”

 

“சரி சரி… கேப் புக் பண்ணியே போறேன்…” என்று அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவளின் கவனத்தைக் கவராமல் சற்று தள்ளி நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த புதியவன்.

 

தற்செயலாக அவனை கவனித்தவளுக்கு சந்தேகம் தோன்ற, அழைப்பைத் துண்டித்துவிட்டு, ஓலாவில் ‘கேப்’ புக் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள். அதிகாலை என்று கூறுவதற்கும் முன்னிருக்கும்  நேரமென்பதால், ‘கேப்’பும் புக்காகாமல் அவளை சோதித்துக் கொண்டிருந்தது.

 

தலை குனிந்து அலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்ததால், அவளை நோக்கி வரும் கால்களை அவளால் பார்க்க முடிந்தது. மனதிற்குள் அதிர்ந்தாலும், ‘ஆல் இஸ் வெல்’கூறி அதை சமாதானப் படுத்தி, அவனை தைரியமாக எதிர்கொள்ள முடிவெடுத்தாள்.

 

என்ன தான் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அவள் கண்கள் அங்குமிங்கும் அலைந்து அவளின் படபடப்பை வெளிப்படையாகக் காட்டியது. அவன் அவளின் பதட்டத்தை ரசித்துக் கொண்டே அருகில் வந்தான்.

 

“ஹாய்… நீங்க பாரானார்மல் கோர்ஸ் பண்ண தான இங்க வந்துருக்கீங்க…” என்றான் அந்த புதியவன்.

 

‘இவனுக்கு எப்படி தெரியும்…’ என்று யோசித்தவள் அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

 

அவனிற்கு அவளின் செய்கை சிரிப்பைத் தர, “என்ன மேடம் பார்த்து முடிச்சுட்டீங்களா… நான் பார்க்குறதுக்கு டிசென்ட்டா இருக்கேனா…” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

 

“ஹலோ மிஸ்டர்… யாரு நீங்க… நான் பாரானார்மல் கோர்ஸ் பண்ண தான் வந்துருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்…?” படபடப்புடன் வினவினாள் அவள்.

 

“ஓ சாரி… நான் யாருன்னு சொல்லவே இல்லல… ஐ’ம் ஆதர்ஷ் ஃபிரம் சென்னை… நீங்க வந்த அதே ட்ரெயின்ல அதே கம்பார்ட்மெண்ட்ல தான் வந்தேன்… சீட் நம்பர் கூட 27…” என்றான் உதட்டோர சிரிப்பில்.

 

‘அய்யயோ நமக்கு எதிர்த்த சீட்ல தான் இருந்தானா… இவன எப்படி கவனிக்காம போனேன்…’

 

‘உனக்கு தான் நந்து கூட பேசவும், நைட் பயம் வராம இருக்க கண்ண மூடி கந்த சஷ்டி கவசம் சொல்லவுமே நேரம் சரியா இருந்துச்சே…’ என்று அவளின் மனம் இடித்துரைத்தது.

 

“ஹலோ என்ன ஃப்ரீஸ் ஆகிட்டீங்களா… என்ன மேடம்.. எப்படி என்ன கவனிக்கலன்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா…?”

 

‘இவன் என்ன மனசுல நெனைக்குறதெல்லாம் சொல்றான்… இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்…’

 

அவளின் முகமே அவளின் எண்ணத்திற்கு வஞ்சகம் செய்து அவளின் மனதை கண்ணாடி போல் அவனிற்கு காட்டிக் கொண்டிருப்பது அவளிற்கு தெரியவில்லை…

 

“ஓய் என்ன பிஜி போகணுமா இல்ல இங்கயே நிக்க போறீங்களா…?”

 

“நான் பிஜி போகணும்னு உங்களுக்கு எப்படி தெரியும்…”

 

“நேத்து நைட்லயிருந்து நீங்க ரகசியமா போன்ல பேசுனீங்களே, அப்போ தெரிஞ்சுகிட்டது தான்…” என்று கண்ணடித்தான்.

 

இரவு நந்தினியிடம் அலைபேசியில் பேசியதை தான் அவன் கலாய்க்கிறான் என்பதை உணர்ந்தவளாய் அவனை முறைத்தாள். 

 

“ஒரு பொண்ணு போன் பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டிருக்கீங்களே, அது தப்புன்னு தெரியலையா…”

 

“ஹாஹா… நீங்க ‘சீக்ரெட்’டா பேசுனத ஒட்டுக் கேட்டதுனால தான் இங்க என்கூட சேர்ந்து படிக்க ஒரு கம்பெனி இருக்குன்னு தெரிஞ்சது…” என்றான் ‘சீக்ரெட்’டில் அழுத்தம் கொடுத்து.

 

அவள் மறுபடி அவனை முறைக்க, “ஹே இப்போ எதுக்கு இப்படி பாசமா பார்க்குறீங்க… நானும் பாரானார்மல் கோர்ஸ் பண்ண தான் வந்துருக்கேன்… ஒரே ஊருல இருந்து வந்திருக்கோம், பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்னா, தெரியாத ஊருல மேனேஜ் பண்ண ஈசியா இருக்குமேன்னு தான் பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னடானா கண்ணாலேயே எரிச்சுடுவீங்க போல…” என்றான்.

 

அவனின் பார்வையும் பேச்சும் கண்ணியமாகவே இருக்க, ஜானு யோசித்தாள். ‘அவன் சொல்றதும் கரெக்ட் தான்… தெரியாத ஊரு, புரியாத மொழி… பிரெண்ட்ஸ் யாராவது இருந்தா நல்லது தான்… ஆளும் டிசென்ட்டா தான் பேசுறான்…’ என்று அவளின் மனம் கணக்கு போட்டுக் கொண்டிருக்க…

 

“சரிங்க உங்களுக்கு என்கூட பேச பிடிக்கல போல… நான் கிளம்புறேன்… சாரி உங்கள ஏதாவது தொல்லை பண்ணிருந்தா…” என்று அவன் திரும்பி நடக்கத் துவங்கியிருந்தான்.

 

‘ஐயோ என்னதிது தனியா விட்டுட்டு போறான்…’

 

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ… “ என்று அழைத்துக் கொண்டே இவள் பின்னாடி செல்ல, முன்னே சென்ற அவனின் முகத்திலோ குறும்புப் புன்னகை.

 

‘இவன் என்ன இவ்ளோ வேகமா நடக்குறான்… இவன எப்படி கூப்பிடுறது…’

 

“மிஸ்டர். ஆதர்ஷ்…” என்று கத்த, சுற்றியிருந்த நான்கைந்து பேர் இவளை பார்த்தனர்.

 

‘அய்யயோ ரொம்ப கத்திட்டேனோ…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

 

நிதானமாக திரும்பியவன், “ஓ என்ன தான் கூப்பிட்டீங்களா…” – அவன் குரலிலியே அவன் மீண்டும் தன்னை சீண்டுகிறான் என்பதை உணர்ந்தவள், மீண்டும் அவனை முறைத்தாள்.

 

அவன் தான் பின்னே சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று…

 

“ஓகே கூல்… பிரெண்ட்ஸ்…” என்று கையை நீட்டினான்.

 

அவளும் அவன் கையில் அடித்து, “பிரெண்ட்ஸ்…” என்றாள்.

 

“இப்போ கேப் கிடைக்குறது கஷ்டம்… வாங்க நாம ஆட்டோல போயிடலாம்…” என்றான்.

 

“நீங்க எங்க ஸ்டே பண்ண போறீங்க…?” என்றாள் கேள்வியாய் அவனை பார்த்தபடி…

 

“இப்போவாவது கேக்கணும்னு தோணுச்சே… உங்க பிஜி இருக்க தெருக்கு பக்கத்து தெருல ஒரு ஜெண்ட்ஸ் பிஜி இருக்கு… அங்க தான் ஸ்டே பண்ண போறேன்…” என்றான்.

 

அடுத்த அரை மணி நேரம் அவர்களின் பயணம் இனிதே நடந்தது. ஒருவருக்கு ஒருவர் முறையாக அறிமுகமாகிக் கொண்டனர். 

 

ஆதர்ஷ் சென்னையில் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன். வேலையில் இருக்கும் ‘ஸ்ட்ரெஸ்’ காரணமாக நான்கு மாதம் ‘லாங் லீவ்’ போட்டு ஓய்வெடுக்க விரும்பினான். இரு வருடங்கள் ஆன்சைட்டில் உழைத்துக் கொட்டி நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித் தந்ததால், அந்நிறுவனமும் இவனின் விடுமுறையை ஏற்றுக் கொண்டது.

 

அரை மாதம் வெட்டியாக செல்ல, எந்நேரமும் ‘பிஸி’யாக இருந்தவனிற்கு, வேலை எதுவும் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. அப்போது தான் ‘பாரானார்மல் கோர்ஸ்’ஸிற்கான விளம்பரத்தை இணையத்தில் பார்த்தான்.

 

பொதுவாகவே ‘ஹாரர்’ படங்களை விரும்பிப் பார்க்கும் அவனிற்கு, அவ்விளம்பரம் ஆர்வத்தை தூண்டியது. இதோ உடனே கிளம்பி விட்டான் அவனின் ஆர்வத்தை தூண்டியதை கற்க வேண்டும் என்ற முனைப்புடன்.

 

இதை சொல்லி முடித்தவன், “நீ எதுக்கு இந்த கோர்ஸ் படிக்க வந்த..?” என்று கேட்டான்.

 

‘உன் பயத்த பத்தி சொல்லி நீயே அசிங்கப்பட்டுக்காத…’ என்று அவளின் மனம் அவளை எச்சரிக்க…

 

“ஹான்… எனக்கும் பேய் பிடிக்கும்…”

 

“ஹாஹா என்னது உனக்கு பேய் பிடிக்குமா..?”

 

‘ஐயோ இப்படி சொதப்புரியே …’ என்று தன்னையே திட்டிக் கொண்டவள்…

 

“இல்ல பேய் பத்தி படிக்குறது பிடிக்கும்னு சொன்னேன்…” என்றாள் சமாளிப்பாய்…

 

அவனோ இருபுறமும் தலையாட்டி புன்னகைத்தான்.

 

“என்ன நம்பலையா…”

 

“நீயே சொல்லு இத நான் நம்பனுமா…” என்றவனின் பதிலில் முறைக்க முயன்று சிரித்து விட்டாள்.

 

அதன்பிறகு பேச்சு வேறு பக்கம் செல்ல, ஜானுவும் அவளின் பயத்தை அவனிடமிருந்து மறைத்து விட்டதாய் நினைத்தாள். ஆனால் அவளின் பயத்தை பற்றி அறிந்ததாலேயே, அவன் அவளிடம் நட்பு கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிய நேர்ந்தால்…

 

இங்கு இவள் சிரித்துக் கொண்டிருக்க, அங்கு இவளை வேட்டையாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தது ‘அது’…

 

*****

 

“முக்கியா ஜி” என்று கத்தியவாறே அந்த வீட்டிற்குள் வந்தான் அவன்.

 

அவ்வீட்டிலிருந்து, பின் நாற்பதில், பார்ப்பதற்கு பெரிய மனித தோரணையில் இருப்பவர் வெளியே வந்தார்.

 

அவர் பிபுல் படேல். அவ்வூரின் தலைவர். அங்கிருக்கும் பெரிய மனிதர்களில் இவரும் ஒருவராக இருந்தவர். இப்போது அவ்வூரில் இருக்கும் ஒரே பெரிய மனிதர் இவர் மட்டுமே…

 

(இவர்களின் உரையாடலை தமிழில் காண்போம்…)

 

“என்னாச்சு கரண்.. எதுக்கு இப்படி கத்துற…” காலை வேளையின் இனிமையைக் கலைத்ததால் சிறிது சுணக்கம் அவரின் குரலில் எட்டிப் பார்த்தது.

 

“ஐயா… அது… வந்து…” எப்படி சொல்வது என்று தெரியாமல் அவன் இழுக்க…

 

“சீக்கிரம் சொல்லு கரண்… எனக்கு இன்னைக்கு வேலை நிறைய இருக்கு…”

 

“அந்த வீ..டு…” என்றான் திக்கிக் கொண்டே…

 

அவன் எந்த வீட்டைப் பற்றிக் கூறுகிறான் என்பதை நன்குணர்ந்தவர், படபடப்புடன் எழுந்தார்.

 

“அந்த வீட்டுக்கு என்னாச்சு கரண்… சொல்லு…” என்று அவனை உலுக்காத குறையாக கேட்டார்.

 

எச்சிலை விழுங்கியவன், “அந்த வீடு மேல எழும்பி நிக்குது, ஐயா…” என்றான்.

 

பிபுலின் முகத்திலோ அதிர்ச்சி எல்லாம் இல்லை… இம்முறை எத்தனை பேரை காவு வாங்கப் போகிறதோ என்ற பயம் மட்டுமே…

 

******

 

ஜானுவை பிஜியில் பத்திரமாக சேர்த்தவன், “கிளாஸ்ல மீட் பண்ணலாம்…” என்று கூறி விடைபெற்றான்.

 

ஜானுவும் பிஜியில் சேருவதற்கான சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு அவளிற்காக தரப்பட்ட அரைக்குச் சென்றாள். இருவர் தங்குவதற்கான அரையில் இப்போது அவள் மட்டுமே இருந்தாள். 

 

வேகமாக தன் பொருட்களையெல்லாம் அங்கு அடுக்கியவள், நியாபகம் வந்தவளாக நந்தினிக்கு அழைத்து பிஜிக்கு வந்ததைக் கூறினாள்.

 

பின் மணியைப் பார்த்தவள், இப்போது கிளம்பினால், சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ தன்னை கூர்ந்து பார்ப்பதைப் போல உணர்ந்தாள்.

 

சுற்றியும் பார்த்தாள். அவ்வரையில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. அவளை லேசாக பயம் ஆட்கொள்ள, கண்களை மூடி கடவுளைத் துதித்து குளிக்கச் சென்றாள்.

 

சுற்றிலும் பார்த்தவள் சுவரைப் பார்க்காமல் சென்றது அவளின் தவறோ… அப்படியே பார்த்திருந்தாலும், அது அவளின் நிழலாக அல்லவா அவளிற்கு தெரிந்திருக்கும்…

 

அந்நிழல் அவளைத் தொடரக் காரணம் என்ன..?  

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

டி மான்ட்டி காலனி  (De Monty colony)

 

சென்னையில் இருக்கும் அமானுஷ்ய இடம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது இந்த டி மான்ட்டி காலனி தான். இதைக் கொண்டு தமிழில் ஒரு படமும் வெளியானது.

 

19ஆம் நூற்றாண்டில், டி மான்ட்டி என்கிற போர்ச்சுக்கிசீய வணிகருக்கு சொந்தமானது இந்த காலனி. அதன்பின் அவரின் பெயரையே கொண்டு அழைக்கப்பட்டு வருகிறது. அவர்தம் வாழ்க்கை முழுவதும் துன்பத்தையே அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டவராவார். அவர்களின் மகனும் சிறுவயதிலேயே சில கண்டறியப்படாத சூழ்நிலைகளினால் இறந்திருக்கிறார். இதனால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இப்போதும் இரவில் டி மான்ட்டி அங்கு நடமாடுவதாகவும், அடிக்கடி தாழ்ப்பாள் திறந்து மூடும் சத்தமும், ஆடும் நாற்காலியின் சத்தமும் கேட்பதாக அங்கு வசிப்பவர்களால் கூறப்படுகிறது.

 

இந்த காலனிக்கு வேலைக்கு வந்த காவலாளி அடுத்த நாளே மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறுகின்றனர். இத்தெருவிற்குள் நுழையும் செல்லப் பிராணிகள் கூட காணாமல் போவதாகக் கூறுகின்றனர். இதனாலேயே மக்கள் அந்த காலனியில் நுழைவதற்கே அஞ்சுகின்றனர்.

 

ஆனால் சிலரோ, அங்கு விளக்கு வெளிச்சம் இல்லாததும், சரியாக கவனிக்கப் படாமலும் இருப்பதாலேயே அந்த தெரு அமானுஷ்யமாக காட்சியளிப்பதாக கூறுகின்றனர்.

 

உங்களின் கருத்து என்ன…? உண்மையிலேயே டி மான்ட்டியின் ஆவி அங்கு உலவுவதாக நீங்கள் நம்புகிறீர்களா…?