மிரட்டும் அமானுஷ்யம் 4

மிரட்டல் 4

 

 

வேகவேகமாக கிளம்பிய ஜானு, பிஜியில் கொடுத்த காய்ந்த ரொட்டியை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினாள். 

 

‘ஐயோ முதல் நாளே இப்படி இருக்கே… இன்னும் மூணு மாசம் இந்த காஞ்சு போன ரொட்டியை தான் சாப்பிடணுமா…’

 

பின் கூகிளின் உதவியுடன், **** காலேஜ் செல்லும் பேருந்தை அறிந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள். அப்போது அங்கு வந்த ஆதர்ஷ், “ஹாய்” என்றான்.

 

‘ஹப்பா நல்ல வேல, தனியா போகணுமான்னு பயந்துட்டு இருந்தேன்…’ என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே அதை காட்டிக் கொள்ளாமல், “ஹாய்…” என்றாள்.

 

அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து ஓரளவிற்கு கூட்டமாக வர, இருவரும் அதில் தொற்றிக் கொண்டனர்.

 

அந்த காலை நேரத்தில், அந்த பேருந்து கூட்டத்தில், கல்லூரிக்கு வருவதற்குள் இருவரும் சோர்ந்து விட்டனர்.

 

“ஜானு வரியா கேன்டீன் போலாம்… ஐ நீட் அ கப் ஆஃப் காஃபி நவ்…” என்றான் தலையை பிடித்தபடியே…

 

அவளிற்கும் ஏதாவது குடித்தால் தேவலாம் போல இருந்ததால், இருவரும் கேன்டீன் நோக்கி சென்றனர்.

 

அங்கிருந்தவர்களிடம் கேன்டீன் எங்கிருக்கிறது என்று கேட்டு, பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒருவர், ஜானுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஏதோ ஹிந்தியில் கூறினார்.

 

அவர் அப்படி செய்வார் என்று எதிர்பார்க்காததால், அதிர்ச்சியில் நின்றிருந்தாள் ஜானு. அவரின் கசங்கி கிழிந்த உடையும், கருத்த தோற்றமும் கரகரப்பான குரலும் இவளிற்கு ஏற்கனவே இருக்கும் பயத்தை மேலும் அதிகப்படுத்தியது.

 

ஆதர்ஷும் முதலில் அதிர்ந்தான் தான். பின் ஜானுவின் நிலையைக் கண்டவன், சட்டென்று சுதாரித்து, அவளை தன் பக்கம் இழுக்க முயன்றான். ஆனால் அவனின் முயற்சி சிறிதும் பலனளிக்கவில்லை என்பது அவனிற்கு ஆச்சரியமே.

 

ஏனெனில், ஆதர்ஷ் ஜிம் சென்று உடலை நன்கு பேணி வருபவன். அவனிற்கு எதிராக இருப்பவரோ, பசியில் வாடி வதங்கியது போன்ற தோற்றம் கொண்டிருந்த முதியவர். அவரிடத்தில் இத்தகைய பலத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

அப்போது அங்கு வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் இவர்களிடம் ஏதோ ஹிந்தியில் கூறினார். அவர் பேசும் சரளமான ஹிந்தி ஆதர்ஷ், ஜானு இருவருக்குமே புரியவில்லை. அவரோ இவர்களை கவனிக்காமல் சென்றுவிட்டார்.

 

“அவங்க மனநலம் பாதிக்கப் பட்டவங்களாம்… இங்க ஒரு ப்ரோஃபெசரோட பிரெண்டாம்… அப்போப்போ இங்க வருவாராம்… அப்போ புதுசா யாரையாவது பார்த்தா இப்படி நடந்துக்குவாராம்… நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு சொல்லிட்டு போறாரு…” என்ற குரலில் ஆதர்ஷ் தனக்கு அருகில் திரும்பிப் பார்த்தான்.

 

அங்கு நின்றிருந்த பெண்ணை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.  தென்னிந்திய நிறமும் வடஇந்திய சாயலும் கொண்டிருந்தவளின் முகத்தை ஒரு நொடி உற்றுப் பார்த்தான்.

 

அதில் சுதாரித்தவள், “சாரி நான் யாருன்னு சொல்லாமலேயே பேசிட்டு இருக்கேன்… என் பேரு சாக்ஷி… மும்பைல இருந்து வரேன்…” என்று கையை நீட்டினாள்.

 

“ஹாய்… நான் ஆதர்ஷ்…” என்று கூறியவாறு அவளிடம் கைகுலுக்கி கொண்டான்.

 

“நீங்க மும்பைனு சொல்றீங்க… ஆனா நல்லா தமிழ் பேசுறீங்க…” என்றான் ஆதர்ஷ்.

 

“எங்க அப்பா-அம்மா லவ் மேரேஜ்… அம்மா தமிழ்நாடு, அப்பா மஹாராஷ்டிரா… அதான் எனக்கு தமிழும் தெரியும் ஹிந்தியும் தெரியும்…” என்றாள் சாக்ஷி.

 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் ஆதர்ஷிற்கு ஜானுவின் நியாபகம் வந்தது.

 

அவன் அவளைப் பார்க்க, அவளோ இன்னும் அந்த முதியவரை கூட்டிச் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இருமுறை அவளை அழைத்த பிறகும், அவள் அதே நிலையில் இருக்க, ஆதர்ஷ் தான் அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

 

“ஹே ஜானு என்னாச்சு…?” என்று ஆதர்ஷ் கேட்க…

 

‘ஒன்றும் இல்லை’ என தலையை அசைத்தாள். ஆனால் அவளின் மனமோ குழம்பியக் குட்டையாய் இருந்தது. புனே வந்திறங்கிய போது இரயில் நிலையத்தில் என்ன மனநிலையில் இருந்தாளோ, அதே நிலையில் தான் இப்போது அந்த முதியவரைக் கண்டபோதும் இருந்தாள். ஏனோ அவரைப் பார்க்க பார்க்க, மனதினுள் எழும் உவகையை அவளால் தடுக்க முடியவில்லை… அதற்கான காரணமும் அவளிற்கு தெரியவில்லை.

 

“ஓய் என்ன மறுபடியும் ட்ரீம்ஸா…?”என்றான் ஆதர்ஷ்.

 

அப்போது அங்கு நிற்கும் பெண்ணைக் (சாக்ஷி) கண்ட ஜானு கேள்வியாய் ஆதர்ஷைப் பார்க்க, “ஒரு வழியா ட்ரீம்ஸ்லயிருந்து ரியாலிட்டிக்கு வந்துட்டியா… இவர்களும் நம்ம கோர்ஸ் தான் படிக்க போறாங்களாம்…” என்று சாக்ஷியைப் பற்றிக் கூற…

 

“ஹாய் நான் சாக்ஷி…” என்று சாக்ஷியே ஜானுவிடம் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

 

தன் மனதின் சந்தேகங்களை ஒதுக்கி விட்டு தானும் அவளிடம் நட்பு  பாராட்ட, அவர்களின் பேச்சு அவர்களின் பெயரில் ஆரம்பித்து, தத்தம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது வரை செல்ல, இவர்களின் உரையாடல் இப்போது முடியாது என்பதை உணர்ந்தவனாய், லேசாக செறுமி தன் இருப்பைக் காட்டிக் கொண்டான் ஆதர்ஷ்.

 

அவனின் செறுமலில் இரு பெண்களும் அவனை நோக்க, “கேன்டீன் போயிட்டு கூட பேசலாம்… சும்மா வேடிக்கை பார்க்குறதுக்கு, காஃபி குடிச்சுட்டாவது வேடிக்கை பார்ப்பேன்…” என்று பாவம் போல அவன் சொல்ல, இரு பெண்களும் சிரித்தனர்.

 

மூவரும் கேன்டீன் நோக்கி நடக்க, “அய்யயோ அந்த கொரங்க மறந்துட்டேனே…” என்று சாக்ஷி கத்தினாள்.

 

அவளின் திடீர் கத்தலில் மிரண்ட ஜானுவும் ஆதர்ஷும் ஒருவரை ஒருவர் நோக்க, பதட்டத்தில் தான் கத்திவிட்டிருந்ததை உணர்ந்த சாக்ஷி, “ஹிஹி சாரி…” என்று கூறி சமாளித்தாள்.

 

“சாக்ஷி யாரையாவது விட்டுட்டு வந்துட்டீயா…” என்று கேட்டாள் ஜானு, அவள் கூறிய கொரங்கில் சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டவளாய்…

 

“ம்ம்ம் ஆமா அந்த அரலூச விட்டுட்டு வந்துட்டேன்…” என்று அரை மணி நேரத்திற்கு முன் நடந்ததைக் கூறத் துவங்கினாள்.

 

சாக்ஷிக்கு மும்பை தான் என்றாலும், புனே புதிய ஊர் தானே…. அதனால் முதல் நாள் சற்று முன்னராக சென்று கல்லூரிக்கு செல்லும் வழியையும், கல்லூரியை சுற்றியிருக்கும் இடத்தையும் பரிச்சயமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து சீக்கிரமாக வந்திருந்தாள்.

 

ஆனால் அவளின் நேரமோ, அவள் கல்லூரிக்குள் நுழைந்த போது, அது சற்றும் ஆரவாரமின்றி அமைதியாக காட்சியளித்தது. பரந்து விரிந்த அந்த கல்லூரியில், எங்கு செல்ல வேண்டும் என்று புரியாதவளாக, கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க, அங்கு ஓரத்தில் ஒருவன் அங்கிருக்கும் மர பெஞ்சில் அமர்ந்து, பின்னால் சாய்ந்து கண்களை மூடியிருப்பது தெரிந்தது.

 

விசாரிக்க ஆள் கிடைத்த சந்தோஷத்தில்,வேகமாக அவனை நோக்கி நடைபோட்டாள். அவன் அருகில் சென்றபோதும், அவனிடம் அசைவே இல்லை.

 

‘இப்போ இவர எப்படி கூப்பிடுறது…’ என்று யோசித்தவளாய், “ஹலோ…” என்றாள்.

 

உடனே அவன் பக்கத்தில் இருந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தான். அதன் பிறகே அழைப்பே வரவில்லை என்பது புரிந்து அலைபேசியாலே தலையில் அடித்துக்கொண்டான்.

 

அதில் ‘களுக்’கென்று சிரித்த சாக்ஷியை அப்போது தான் பார்த்தான். அவன் அவளை கூர்ந்து நோக்கவும், “சாரி… நான் தான் உங்கள கூப்பிட்டேன்…” என்றாள்  சிறிது பயத்துடன்.

 

அவனோ, ‘ஆஹா நம்மளயும் பார்த்து ஒரு பொண்ணு பயப்படுதே… இத இப்படியே மெயின்டெயின் பண்ணனும்…’ என்று யோசித்தான்.

 

“ஹ்ம்ம் சீனியர்னு ஒரு மரியாதை இல்லாம ஹலோன்னு கூப்பிடுற… இதுல சிரிப்பு வேற…” என்றான் வெளியில் முறைத்துக் கொண்டு.

 

“அச்சோ சாரி சீனியர்…” என்று சாக்ஷி கூறினாள்.

 

‘அட நம்ம என்ன சொன்னாலும் நம்புதே… வேற ஏதாவது ட்ரை பண்ணி பாப்போம்…’ 

 

“க்கும்… என்ன எதுக்கு கூப்பிட்ட…”

 

“அது வந்து சீனியர்… நான் இங்க பாரானார்மல் கோர்ஸ் ஜாயின் பண்ணிருக்கேன்… எனக்கு அந்த கிளாஸுக்கு எப்படி போகணும்னு வழி தெரியல… கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா…” 

 

‘அட நம்ம கோர்ஸ் போல… ஹ்ம்ம் எனக்கே வழி தெரியாம தான் இங்க உட்கார்ந்துருக்கேன்னு சொன்னா கண்டிப்பா கேவலமா நெனைப்பா… இதுல சீனியர்னு கெத்து வேற காமிச்சுருக்கேன்…’

 

“என்ன மேடம்… என்ன பார்த்தா நோட்டீஸ் போர்ட் மாதிரி இருக்கா…” என்றான் இன்னும் கெத்தை குறைக்காதவனாய்…

 

‘ம்ம்ம் நல்லா மலமாடு மாதிரி இருக்கு…’ என்று அவள் முணுமுணுக்க…

 

‘அடிப்பாவி என்ன மலமாடுன்னா சொல்ற… இதுக்கே உன்ன இன்னிக்கி அலைய வைக்கிறேன்…’

 

“க்கும்… சரி சரி எங்கிட்ட ஹெல்ப் கேட்டுட்ட, வா நானே உன்ன கூட்டிட்டு போறேன்… அது சரி இது எவ்ளோ பெரிய கேம்பஸ்… நீயோ இங்க செர்ட்டிஃபிகேட் கோர்ஸ் பண்ண வந்துருக்க… இதுக்கான கிளாஸ் ரூம் என்ன நடு கேம்பஸ்லையா கட்டிருப்பாங்க… எங்கயாவது ஓரத்துல இருக்கும்… வா போலாம்…” என்று கூறிவிட்டு முன்னால் நடக்கத் துவங்கினான்.

 

‘ஆளப் பாரு… டப்ஸா தலையா… உங்கிட்டலாம் ஹெல்ப் கேக்கணும்னு என் தலையெழுத்து…’ என்று முணுமுணுக்க மட்டுமே முடிந்தது அவளால்.

 

சிறிது தூரம் நடந்தவர்களுக்கிடையே மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய, அம்மௌனத்தை உடைத்து, “சீனியர் நீங்க என்ன படிக்கிறீங்க…?” என்று வினவினாள் சாக்ஷி.

 

“ஆங்…அது…” என்று வெளியே திக்கியவன், ‘அய்யயோ திடீர்னு கேக்குறாளே… இதுக்கு என்ன சொல்றதுன்னு நான் யோசிக்கவே இல்லையே… அவசரத்துல நான் என்ன படிச்சுருக்கேன்னு கூட நியாபகம் வர மாட்டிங்குதே…’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

அவள் இன்னமும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவன், “நான்… வந்து… ஹான்… எம்.பி.ஏ ஃபைனல் இயர்…” என்றான் சமாளிப்பாக…

 

“ஓ…” என்றாள் ஒற்றை எழுத்தை பெரிதாக இழுத்து…

 

‘என்ன இவ ‘ஓ’ன்னு சொல்றா… நம்ம சொன்னத நம்பலையோ… ஹ்ம்ம் இன்னும் ஏதாவது சொல்லுவோம்…’

 

“ம்ம்ம் எனக்கு பெரிய பிசினஸ் மேக்னட்டா ஆகணுங்கிறது தான் லட்சியமே… இப்போ கூட அப்பா ஆரம்பிச்ச டிபார்ட்மென்டல் ஸ்டோரோட நெறையா ப்ரான்சஸ் இந்தியா ஃபுல்லா ஆரம்பிக்கணும்னு பிளான் போட்டு வச்சுருக்கேன்…” என்று அவன் இஷ்டத்திற்கு பொய்களை அள்ளி விட்டுக்கொண்டிருந்தான். இடையிடையே அவள் நம்புகிறாளா என்று பார்த்துக் கொண்டும் இருந்தான்.

 

இப்படியே பேசிக் கொண்டே நடந்தவர்கள், நான்கு வழிகள் பிரியும் இடத்தில் நின்றனர்.

 

அங்கு பலகையில் ஒவ்வொரு வழியில் இருக்கும் இடங்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதிலும் இவர்களுக்கான இடம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. ஆனால் அவனின் கண்களோ கேன்டீன் என்றதிலேயே நிலைத்து நின்றது.

 

‘ஹ்ம்ம் இவகிட்ட பேசுனதுல, சாப்பிட்டது செமிச்சுருச்சு… இப்போ ஏதாவது வயித்துக்குள்ள போட்டா தான் மதியம் வரை தாக்கு பிடிக்க முடியும்… இப்போ இவகிட்ட கேன்டீன் போலாம்னு சொன்னா… ஹ்ம்ம் இல்ல இவள அப்படியே கழட்டி விட்டு நம்ம மட்டும் போய் கொட்டிக்க வேண்டியது தான்…’ என்று முடிவெடுத்தான்.

 

“ஆமா உன் பேரு என்ன…”

 

“சாக்ஷி…”

 

“ஹான் சாக்ஷி… இப்படியே சேர்ந்து தேடுனா இன்னைக்குள்ள தேடி முடிக்க மாட்டோம்… அதுனால நீ என்ன பண்ற, இந்த சைட் போய் தேடு…” என்று கேன்டீன் செல்லும் வழிக்கு மறுபுறம் இருந்த வழியைக் காட்டினான். “நான் இந்த சைட் போய் தேடுறேன்… நீ போன வழில கிளாஸ் ரூம் இருந்துச்சுனா எனக்கு கால் பண்ணி சொல்லிடு… நான் போற வழில இருந்துச்சுனா உனக்கு சொல்லிடுறேன்… என்ன ஓகே வா..?” என்றான்.

 

அவளிற்கும் அது சரியெனத் தோன்றியதால் அவனிடம் அவனின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அவனும் கேன்டீனை நோக்கி துள்ளல் நடைபோட்டு சென்றான்.

 

“அங்க ஆரம்பிச்சு நடந்துகிட்டே இருந்தேன்… ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல… அப்போ தான் உங்கள பார்த்தேன்…” என்று தன் ஃபிளாஷ்-பேக்கிற்கு எண்டு கார்ட் போட்டாள் சாக்ஷி…

 

“அப்போ அந்த மலமாடு, அரலூசு, கொரங்கு… இதெல்லாம் ஒரே ஆளா…” என்று கேட்டு சிரித்தாள் ஜானு.

 

பேசிக் கொண்டே கேன்டீனை அடைந்திருந்தனர் அவர்கள். பெண்கள் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க, “டேய் விச்சு…” என்ற ஆதர்ஷின் அழைப்பில் அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

 

அங்கு அவர்கள் கண்டதோ, காய்ந்து போன ரொட்டியைக் கூட வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த விச்சு (எ) விஷ்வாவைத் தான். 

 

ஆதர்ஷ் தன் பள்ளித் தோழனை நீண்ட நாள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் அவனிடம் பேச சென்றான். ஜானுவும் அவனைப் பின் தொடர, சாக்ஷியோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

முதலில் ஆதர்ஷைக் கண்ட விஷ்வாவும் அவனைக் கட்டிப்பிடித்து  நட்புப்பயிரை வளர்த்தான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தான், ஆதர்ஷிற்கு தன்னுடன் வந்த பெண்களின் நினைவு வந்தது.

 

உடனே ஜானுவிடம் திரும்பியவன், “சாரி ஜானு… ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணதுல உன்ன இண்ட்ரோ பண்ண மறந்துட்டேன்…” என்றான்.

 

பின், விஷ்வாவையும் ஜானுவையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.

 

“ஆமா சாக்ஷி எங்க காணோம்…?” என்றான் ஆதர்ஷ்.

 

சாக்ஷி ஜானுவின் பின் நின்று கொண்டிருந்ததால் ஆதர்ஷிற்கு தெரியவில்லை. 

 

‘சாக்ஷி’ என்ற பெயரைக் கேட்டதும் விஷ்வாவின் முகம் மாறியது.

 

சாக்ஷியோ, பார்வையாலே சூட்டெரிப்பது போல் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

இவர்களின் பார்வை பரிமாற்றத்திலேயே ஓரளவு நடந்ததை யூகித்த ஜானு, “ஓ… அப்போ அந்த மலமாடு, அரலூசு, கொரங்கு எல்லாம் நீங்க தானா…” என்றாள்.

 

அதன்பின் அங்கு ஒரு களேபரமே நடக்க, ஆதர்ஷும் ஜான்வியும் தான் இருவரையும் சமாதானப் படுத்தினர்.

 

பின்னர் நால்வரும் ஒன்றாக அவர்களின் வகுப்பறையைத் தேடிச் செல்ல… அரை மணி நேரத்திற்கு பின்னர், அதைக் கண்டுபிடித்தும் விட்டனர்.

 

படவீழ்த்தியுடன் இருந்த வகுப்பறை, சுமார் 60 பேர் அமரக் கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் அங்கு இருந்தது என்னவோ 30 பேர் தான். அவர்களுக்கு ஒரு நாளில் 3 மணி நேரமே வகுப்பு என்பதாலும், அன்று முதல் நாள் என்பதால்  வகுப்பு எதுவும் நடக்காததாலும் சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

 

இதற்கிடையில், சாக்ஷி ஜானுவிடம் அவள் தங்கியிருக்கும் இடம் பற்றி அறிந்து தானும் அவளின் அறையில் தங்கிக் கொள்வதாகக் கூறினாள். விஷ்வாவும் ஆதர்ஷுடன் தங்குவதாக முடிவெடுத்தான்.

 

இவ்வாறு இந்நால்வரின் அன்றைய நாள் முடிவிற்கு வர, இனி வரும் விடியல் இவர்களுக்கு நல்லதாக அமையுமா….

 

*****

 

அடுத்த நாள் காலை… நேற்று போல் இன்றும் ஓடி வந்த கரணைக் கண்ட பிபுல் ‘இன்று என்னவோ’ என்ற பயத்தில் இருந்தார்.

 

“ஐயா… நம்ம சந்தீப் ஐயாவோட மாடு…. இல்ல… மாட்டோட எலும்பு அந்த வீட்டுக்கு முன்னாடி இருக்குதுங்க…” என்றான் பயத்துடன்.

 

எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விட்ட வேதனை அவரின் முகத்தில் தெரிய, “அது சந்தீபோட மாடு தான்னு எப்படி தெரிஞ்சுது…?” என்று வினவினார்.

 

“ஐயா… அது வந்துங்க… பத்து வருஷத்துக்கு முன்னாடி, நம்ம வீட்டு மாடுங்க இறக்குறது முன்னாடி எப்படி வித்தியாசமா நடந்துச்சோ அதே மாதிரி தான் சந்தீப் ஐயாவோட மாடும் நேத்துலயிருந்தே வித்தியாசமா நடக்க ஆரம்பிச்சுதுங்க…. சந்தீப் ஐயா கூட இன்னைக்கு கால்நடை டாக்டர பார்க்கணும்னு சொன்னாருங்க… ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சுங்க…” என்றான் கரண்.

 

அவன் பத்து வருடங்கள் என்று சொன்னபோதே இறுகி விட்டார் பிபுல்…

 

“அப்பறம் ஐயா, அந்த வீட்டு எல்லைல, மாட்ட இழுத்துட்டு  போன இரத்த தடம் இருக்குதுங்க…” என்றான்.

 

‘இரத்த வாடை கண்ட ‘அது’ இனி தினமும் காவு வாங்காமல் விடாது… பத்து வருஷத்துக்கு முன் நடந்த மாதிரி இப்போவும் நடக்க விடமாட்டேன்…’ என்று மனதிற்குள் நினைத்தவராய் ஒரு முடிவெடுத்தார்.

 

ஒரு பெருமூச்சுடன், “இனிமே தினமும் 6 மணிக்கெல்லாம் அந்த வீட்டு எல்லைல  ஆடு, கோழின்னு ஏதாவது ஒன்ன கட்டிப்போட்டு வந்துடுங்க… அந்த வீட்டு எல்லைக்குள்ள யாரும் போகக் கூடாதுன்னும், 6 மணிக்கு மேல அந்த பக்கமே யாரும் போகக் கூடாதுன்னும் மக்களுக்கு சொல்லிடுங்க…” என்றார்.

 

கரண் அதற்கு, “ஐயா…” என்று எதுவோ கூற வந்து தயங்க…

 

“நீ என்ன கேட்க வரேன்னு புரியுது கரண்… இப்படி பண்றது மூலமா நம்ம மக்களோட இறப்ப தடுக்க முடியாது… ஆனா தள்ளி வைக்கலாம்…” என்றார் வருத்தத்துடன்…

 

‘இம்முறை எத்தனை இழப்பு…’  என்பதே அவரின் மனதை உலுக்கிக் கொண்டிருந்தது. பயத்தில் அவரின் மனம் தானாகவே பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கத் துவங்கியது.

 

இன்றைய அமானுஷ்ய இடம்

 

ஹோட்டல் ஃபேர்ன் ஹில், ஊட்டி (Hotel Fern Hill, Ooty)

 

இது தமிழ்நாட்டில் உள்ள அடுத்த அமானுஷ்ய இடம். இந்த இடம் பாலிவுட் வரையிலும் பிரபலமானது என்றால் நம்புவீர்களா…

 

2002ஆம் ஆண்டு வெளிவந்த “ராஸ்” என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தான் நடந்தது. அப்போது இங்கு தான் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் தங்கியிருந்தனர். அவர்களின் திகில் அனுபவத்திற்கு பின்பே அந்த ஹோட்டல் அமானுஷ்யத்திற்கு பிரபலமானது.

 

அடுத்த நாள் அதிகாலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டி, அப்படத்தில் பணியாற்றிய நடன கலைஞர்கள் எல்லாரும் இரவு விரைவாக உறங்கச் சென்றனர். ஆனால் இரவு முழுவதும், முதல் தளத்தில் யாரோ நாற்காலிகளை நகர்த்தும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தொடர்ந்து கேட்ட சத்தத்தினால், அவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். வரவேற்பில் இருப்பவர்களுக்கு தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 

 

எப்படியோ அந்த இரவை தூக்கமில்லாமல் கழித்தவர்கள், அடுத்த நாள் காலை படப்பிடிப்பிறகு செல்லும்முன், ஹோட்டல் பணியாளர்களிடம் இதைப் பற்றிக் கூறினர்.

 

ஆனால் அதற்கு அந்த பணியாளர்கள் கூறியதைக் கேட்டவர்கள் உண்மையில்  பயத்தில் உறைந்து தான் போயிருப்பர். ஏனெனில், அந்த ஹோட்டலில் முதல் தளம் என்ற ஒன்று இல்லவே இல்லை!!!

 

அந்த சம்பவத்திற்கு பின், அனைவராலும் அமானுஷ்ய இடமாகக் பார்க்கப்பட்டதால், அந்த ஹோட்டல் சில காலத்திற்கு மூடிவைக்கப்பட்டிருந்தது.

 

கூடுதல் தகவல்… ராஸ் என்பது ஹாரர் படம் தான்… பேய் பட குழுவினருக்கே பேய் எஃபெக்ட் கொடுத்திருக்கிறது அந்த ஹோட்டல்…