மிரட்டும் அமானுஷ்யம் 5

மிரட்டல் 5

 

பத்து வருடங்களுக்கு முன்… புனேயில் ஒரு 5 ஸ்டார் ரெஸ்டாரண்ட்டில் பார்ட்டி களைக்கட்டிக் கொண்டிருந்தது. சமீபத்தில் வெளியாகி மிரட்டல் வசூலைக் குவித்த ஒரு பேய் படத்தின் வெற்றிக்காக அந்த படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தில் வேலைப்பார்த்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் கொடுக்கப்படும் பிரத்யேக பார்ட்டி அது.

 

அங்கு அமர்ந்திருந்த அர்ஜுனின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது. பேய் படங்கள் இயக்குவதில் சிறந்த இயக்குனரான விகாஸ் கண்ணாவின் முதன்மை உதவி இயக்குனராக இருப்பவன் அர்ஜுன். இப்படத்தின் வெற்றிக்கு அவனின் உழைப்பு அபரிமிதமானது என்று விகாஸ் கண்ணாவே அவனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். 

 

அதுமட்டுமில்லாமல், தனியாக அவன் இயக்கவிருக்கும் ஒரு படத்திற்கு இப்படத்தின் தயாரிப்பாளரே தயாரிக்க சம்மதம் தெரிவித்தது அவனிற்கு பெரும் மகிழ்ச்சி. தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த தருணத்தை அவன் எண்ணினான். அவன் எதிர்பார்த்த திருப்புமுனையாக அமையுமா என்பது விதியின் கையில் அல்லவா இருக்கிறது…

 

அப்போது அவனின் நண்பன் மற்றும் உதவியாளனான சதீஷ், “ஹாய் அர்ஜு… சாரி சாரி அர்ஜுன் சார்…” என்றான் கிண்டலாக…

 

“ப்ச் சதீஷ்… இப்போ எதுக்கு சார்… இங்க நீயும் நானும் தான இருக்கோம்…” என்றான் சலிப்புடன்…

 

“ம்ம்ம் இப்போ வேணா இது ஓகேவா இருக்கும்… இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய டைரக்டர் ஆகிடுவ… அப்போலாம் எப்போ பார்த்தாலும் உனக்கு பின்னாடி பிரெஸ் நியூஸுக்காக அலஞ்சுட்டே இருப்பாங்க… அப்போ உங்கள மரியாதையா தான கூப்பிட முடியும் ‘சார்’…” என்றான் சிரித்துக் கொண்டே…

 

“ஹே ரொம்ப ஓட்டாத மேன்…” என்றான் சதீஷின் தோளில் அடித்தவாறு…

 

“ரொம்ப பெருமையா இருக்கு அர்ஜு… இன்னும் பெரிய டைரக்டரா வர வாழ்த்துக்கள்…” என்றான் சதீஷ் அவனை அணைத்து.

 

“கண்டிப்பா சதீஷ்… என்னோட ஃபர்ஸ்ட் படமே மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைக்கணும்… அதுக்காக தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்க பேய் படமா டைரக்ட் பண்ண போறேன்… இது வரைக்கும் இல்லாத மாதிரி எடுக்கணும்… அதுக்கு நல்ல லொகேஷன் பார்க்கணும்…” என்றான் கனவுகள் நிறைந்த குரலில்…

 

“ஹோல்ட் ஆன்… படம் பத்தி பேச ஆரம்பிச்சா உன்னையவே மறந்து பறக்க ஆரம்பிச்சுடுவ… போதும் பூமிக்கு வாங்க சார்…” என்று கிண்டலடிக்க, பின் அனைத்தும் நண்பர்களின் பேச்சானது…

 

“அர்ஜு வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க…” என்று கேட்டான் சதீஷ்.

 

ஒரு பெருமூச்சுடன், “இருக்காங்க டா… ஆகாஷ் இறந்ததுல அம்மாவும் பாட்டியும் ரொம்ப ஒடஞ்சு போய்ட்டாங்க… சித்தப்பாவோட வாரிசுன்னு அவன் ஒருத்தன் தான் இருந்தான்… அவனும் இறந்தது அவங்கள பெருசா பாதிச்சுருக்கு… இதுல ஏதோ பேய், பிசாசுன்னு பேசிட்டு இருந்தவங்கள மாமா தான் அதட்டுனாரு… அப்பறம் தான் கொஞ்சம் நார்மல் ஆனாங்க… ஆனாலும் இந்த விதி எங்க குடும்பத்த மட்டும் ஏன் இவ்ளோ சோதிக்குதுன்னு தெரியல…” என்று புலம்பினான்.

 

விதியோ, ‘அது நான் இல்லை… ‘அது’ தான்…’ என்று கைகாட்டியதை அவன் பார்க்கவில்லை அல்லவா…

 

பார்ட்டி நடந்துக்கொண்டிருக்க, சதீஷிற்கு அலைபேசியில் ஏதோ செய்தி வர, அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கைப்பட்டு அந்த இணையதளத்திற்குள் சென்றது. அங்கு அவ்வீட்டைப் பற்றிய காணொளி காட்சி ஒளிபரப்பாகியது. 

 

அதைக் கண்டவன், “ஹே அர்ஜு உன் படத்துக்கு லொகேஷன் கிடைச்சுருச்சு டா…” என்றான் உற்சாகமாக…

 

அர்ஜுனும் அதை ஒருமுறை பார்த்தவன், “இங்க பக்கத்துல தான டா… ஒரு தடவ நேர்ல பார்த்துட்டு வந்துடலாம்…” என்றான்.

 

அங்கு பத்து வருடங்களுக்குப் பிறகு மேலெழும்பிய வீடோ, அவர்களின் வரவிற்காக காத்திருந்தது.

 

******

 

அர்ஜுனும் சதிஷும் அந்த கிராமத்தில் நுழையும் போது, மேகம் தன்னை கருமையாக்கி, சுட்டெரிக்கும் சூரியனை மறைத்து, அந்த பகலையும் இரவாக்கியது.

 

“ஹே அர்ஜு, உங்க பேய் படத்துல பேய்க்கு இண்ட்ரோ சீன்ல தான இப்படியெல்லாம் நடக்கும்…”

 

“சும்மா இரு டா…” என்று அவனை அதட்டியவன், அங்கிருக்கும் சூழலை கிரகிக்க முயன்றான்.

 

அங்கு ‘அது’வோ மகிழ்ச்சியில் கூத்தாடியது. அதன் ஆட்டத்தில் அந்த வீடே அதிர்ந்தது. 

 

“வா வா உனக்காக தான் இவ்ளோ காத்திருந்து இப்போ வெளிய வந்தேன்… உன்ன முடிச்சிட்டா இன்னும் ஒன்னு இருக்கு… அதையும் முடிசிட்டா அப்பறம் இந்த வீட்டுக்கே நான் தான் ராணி…” என்று கர்ஜித்தது. அதன் கர்ஜனை மனிதர்களுக்கு கேட்கவில்லை என்றாலும், ஐந்தறிவு ஜீவங்களுக்கு கேட்டதால், அவை மிரண்டு கத்தின.

 

“கரண் தோட்டத்துல மாடெல்லாம் கத்துது… என்னனு பாரு…” என்றார் பிபுல்.

 

அங்கு கிராமத்து பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிபுலும் அங்கு சென்று அமர்ந்து கொண்டார்.

 

(அவர்களின் உரையாடல் தமிழில்…)

 

அங்கிருந்தவர்களில் ஒருவர், “ஐயா, அந்த வீடு…” என்று நிறுத்தினார்.

 

“தெரியும் பல்வீர்… அதுக்காக தான ஊர்ல இருக்க யாரும் அந்த பக்கம் போகக் கூடாதுன்னு சொல்லிருக்கோமே…” என்றார் பஞ்சாயத்து தலைவரான அமித் பட்டேல், பிபுலின் அண்ணன்.

 

“அது வந்து…” என்று கைகளைப் பிசைந்தார் அந்த பல்வீர்…

 

“எதுக்கு தயங்குறீங்க பல்வீர்…” என்று ஏளனத்தோடு வந்தது ஒரு குரல், அது ரத்தன் சிங். அமித் பட்டேல் குடும்பத்திற்கும் ரத்தன் சிங் குடும்பத்திற்கும் பரம்பரை பகை. அதை மனதில் கொண்டு, அமித்தை எதிர்ப்பதையே தனது வேலையாகக் கொண்டுள்ளார், ரத்தன்.

 

பொதுமக்களிற்காக அமித் வகுக்கும் எல்லா திட்டங்களுக்கும் முதல் ஆளாக எதிர்ப்பைக் காட்டுவார். இப்போது அவருக்கெதிராக அவரின் எதிர்களையெல்லாம் ஒன்று கூட்டி இருக்கிறார். அவரை எதிர்க்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர், இந்த ‘வீடு’ பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டார்.

 

 “அந்த வீட்டுல இவங்க எதையோ மறைச்சு வச்சுருக்காங்களோன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு… அதனால தான் அங்க யாரும் போகக் கூடாதுன்னு இவங்க ஊர்மக்கள் கிட்ட பொய் சொல்றாங்க…” என்றார் ரத்தன் சிங்.

 

பிபுலோ, ‘இவன் என்ன லூசா…’ என்றவாறு அவரைப் பார்த்தார்.

 

அமித் அமைதியாக, “இன்னும் நாலஞ்சு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்கு எங்ககிட்ட… நாங்க எதுக்கு பொய் சொல்லணும்… எத மறைச்சு வைக்கணும்…” என்றார்.

 

“இதோ இதுக்காக தான்… இவ்ளோ சொத்து இருக்குன்னு பெருமையா சொல்லிகிறதுக்காக கூட இருக்கலாம்…” என்றார் ரத்தன்.

 

அங்கிருக்கும் அனைவருக்குமே தெரிந்து தான் இருந்தது ரத்தன் சிங் வேண்டுமென்றே பழி போடுகிறார் என்று… ஆனால் அதை சொல்லத் தான் பயமாக இருந்தது.

 

பிபுல் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல், “அந்த வீடு அப்பப்போ தான் வெளியவே வருது… நாங்க என்ன மந்திரம் மாந்திரீகம் எல்லாம் பண்ணியா அத மண்ணுக்குள்ள பொதைய வச்சு திரும்ப வெளிய கொண்டு வரோம்…” என்றார்.

 

“யாருக்கு தெரியும்… உங்க குடும்பமே மந்திரம் தெரிஞ்ச குடும்பமா இருக்கலாம்… உங்க அண்ணன் கூட மந்திரவாதியா இருக்கலாம்…” என்றார் ரத்தன்.

 

தன் அண்ணனை சொன்னதும் கோபம் கொண்ட பிபுல், பேச அந்த தரப்பினர் பேச என்று வாய் சண்டையில் ஆரம்பித்து கைகலப்பு ஆகத் துவங்கிய நேரம், அங்கிருந்த மற்றவர்கள் இரு பிரிவினரையும் பிரித்து, அந்த காலந்துரையாடலை பின்னர் நடத்திக் கொள்வதாகத் தீர்மானித்தனர்.

 

அனைவரும் கலைந்து சென்ற பிறகு அமித் பிபுலிடம், “ நீ கொஞ்சம் அமைதியா இருந்திருக்கலாம்…” என்றார்.

 

“எப்படி அண்ணா அமைதியா இருக்க சொல்றீங்க… அவங்க வேணும்னே உங்கள பத்தி நம்மள பத்தி தப்பா பேசுறத வேடிக்கை பார்க்கச் சொல்றீங்களா…” 

 

“நம்ம இப்போ பேசிட்டு இருந்தது மக்களுக்காக பிபுல்… நம்ம சொந்த பகைய அங்க காமிச்சுருக்கக் கூடாது…” என்றார் அமைதியான குரலில்.

 

அவரின் கூற்றை  ஏற்ற பிபுல், “மன்னிச்சுருங்க அண்ணா… கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்…” என்றார்.

 

“எப்பவும் நான் இப்போ சொன்னத மனசுல வச்சுக்கோ பிபுல்…” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

 

இத்தகைய சூழலில் தான் அர்ஜுனும், சதீஷும் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

ஊருக்கு புதிதாக வந்திருப்பதால் அவர்களை அமித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

அமித்தின் வீட்டில் அவர்களை வரவேற்று  உபசரித்தவர்கள், அவர்கள் வந்த நோக்கத்தை வினவினர்.

 

சதீஷ் தான் ஆரம்பித்தான். “நாங்க சினிமா ஷூட்டிங்க்கு லொகேஷன் பார்க்க வந்தோம்… இந்த ஊர்ல ஒரு வீடு இருக்குதாமே… தானா எழும்பி நிக்குதாம்… அதான் அந்த வீட்ட பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.” என்றான்.

 

அவன் ஆரம்பித்த போதே ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டவர்கள், முடித்தபோது அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 

அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுப்பட்டவராய் அமித், “மன்னிச்சுடுங்க… இது தான் உங்களோட நோக்கமா இருந்ததுனா இப்போவே நீங்க இந்த ஊர விட்டு போறது தான் நல்லது…” என்றார்.

 

அவரின் வார்த்தைகளில் இருந்த உறுதியைக் கண்டு திகைத்த அர்ஜுனும் சதீஷும் அவரையே பார்த்திருந்தனர்.

 

பின் அர்ஜுன் தான், “ஏன்னு தெரிஞ்சுக்கலாமா…” என்று கேட்டான்.

 

“உங்க படத்துக்காக ஊர் மக்களோட உயிர பணயம் வைக்க முடியாது…” என்றார் பிபுல் கோபமாக.

 

அவரைத் தன் கண்ணசைவில் அடக்கிய அமித், “சொன்னா புரிஞ்சுக்கோங்க…” என்றார்.

 

“நீங்க பயப்படுற அளவுக்கு அங்க என்ன நடந்துச்சுனாவது சொல்லுங்க… இந்த ஊருக்கு வந்து ஒண்ணுமே இல்லாம திரும்புறதுக்கு அந்த கதையாச்சும் தெரிஞ்சுட்டு போறோம்…” என்றான் அர்ஜுன்.

 

அமித் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் அவருக்கு தெரிந்த கதையை சொல்ல ஆரம்பித்தார். 

 

“அந்த வீடு, தமிழ்நாட்டுல இருந்த ஒரு வியாபாரக் குடும்பம், இங்க வரும்போது தங்குறதுக்கு கட்டினதுன்னு கேள்வி பட்டிருக்கேன்… இந்த வீடு கட்டி சில நாட்கள் கழிச்சு அவங்க  வீட்டுல யாரோ இறந்துட்டாங்க போல… அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு தான் இந்த வீட்டுக்கு கிரஹபிரவேசமே பண்ணாங்க… ஊருல இருக்க எல்லாரும் போய் கலந்துகிட்டாங்க… ஆனா அதுக்கு அப்பறம் தான் பிரெச்சனையே ஆரம்பிச்சுது… அன்னைக்கு இரவு என்ன காரணம்னே தெரியாம அந்த வீடு எரிஞ்சிடுச்சு… அதுக்குள்ள இருந்தவங்களும் இறந்துட்டாங்க… ஊர்மக்களுக்கெல்லாம் கஷ்டமா ஆகிடுச்சு… அப்பறம்  ரெண்டு நாளுக்கு பிறகு அங்க வீடு இருந்ததுக்கான எந்த அடையாளமும் இல்லாம இருந்தது… ஊரே அதப் பார்த்து ஸ்தம்பிச்சு போயிருச்சு…” என்று பெருமூச்சு விட்டார்.

 

“அதுலயிருந்து தப்பிச்சவங்க வேறு ஊருக்கு போயிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டாங்க.. அவங்க பேரு….” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த வேலையாள் ஒருவன், “ஐயா, நம்ம மாடெல்லாம் கத்திக்கிட்டே இருக்குதுங்க…” என்று கூறினான்.

 

அதைக் கேட்டதும், அமித்தும் பிபுலும் கால்நடைகளைக் கவனிக்கச் சென்று விட்டனர்.

 

அமித் அப்போது பெயரை கூறியிருந்தால், அதன்பின் நடந்த விபரீதங்கள் தடுக்கப் பட்டிருக்குமோ… ஆனால்  ‘அதனுடைய’ கைப்பாவை ஆனவர்கள், அவர் பெயரைக் கூறியிருந்தாலும் ஊரை விட்டு சென்றிருக்க மாட்டார்கள்… செல்லவும் ‘அது’ விட்டிருக்காது…

 

யோசனையாக அமர்ந்திருந்த அர்ஜுனின் தோளைத் தட்டிய சதீஷ், போலாம் என்பது போல சைகை செய்ய, அவர்கள் இருவரும் வெளியே வந்தனர். 

 

“என்ன டா ரொம்ப யோசிக்கிற…” என்று சதீஷ் தான் ஆரம்பித்தான்.

 

“இவங்க சொல்றத என்னால நம்பவே முடியல டா… வீடு எரிஞ்சுதாம்… அப்பறம் வீடே இல்லையாம்… இப்போ திரும்ப வந்துருக்காம்… என்ன டா இது… இதுவரைக்கும் நாங்க எடுக்குற பேய் படத்துல கூட இப்படி சீன் வச்சதில்ல…” என்றான்.

 

சதீஷோ வெறுமனே ‘ம்ம்ம்’ கொட்டிக்கொண்டு வந்தான். அவர்கள் சாலையில் நடந்து செல்ல, அவர்களை கடக்கும் சுமோவில் இருந்த ரத்தன் சிங் இவர்களைப் பார்த்தார்.

 

அவர்களைப் பார்த்தவுடனே, வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று கண்டுகொண்டவர், தன் வேலையாளிடம் அவர்களைப் பற்றி வினவ, இவர்கள் ஊருக்குள் வந்த நோக்கம் காட்டுத்தீ போல அக்கிராமத்தில் பரவியிருந்ததால், ரத்தனின் வேலையாளும் அவர்களின் நோக்கத்தைக் கூறினான்.

 

அதைக் கேட்டதும் ரத்தனின் மூளைக்குள் பல யோசனைகள் உருவாக, அதில் தனக்கு சாதக-பாதகங்களை கணக்கிட்டவர், இவர்களைப் பயன்படுத்தி அமித்தை அவமானப்படுத்தி பழிவாங்க திட்டம் தீட்டினார். பாவம் இவர்களையெல்லாம் ஆட்டுவிப்பது ‘அது’ என்று தெரியாமல்.

 

“டேய் சதீஷ், நம்ம ஒரு தடவ அந்த வீட்டுக்கு போய் பார்த்தா என்ன…”

 

சதீஷ் அவன் கேள்வியில் முழித்துக் கொண்டிருக்க, “சரியா சொன்னீங்க தம்பி…” என்றவாறே அவர்கள் அருகில் வந்தார் ரத்தன் சிங்.

 

தங்களின் பேச்சில் தேவையில்லாமல் குறுக்கிடும் அவரை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் அர்ஜுன்.

 

அவனின் பார்வையைக் கண்டுக்கொண்ட ரத்தன் சிங்கோ, “மன்னிச்சுடுங்க தம்பி… என்ன பத்தி நான் சொல்லல… நான் ரத்தன் சிங்…” என்று ஆரம்பித்து அவனின் வரலாற்றைக் கூறிக் கொண்டிருந்தார்.

 

அதனை எரிச்சலான பாவனையில் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன், “இப்போ எதுக்கு இதெல்லாம் எங்ககிட்ட சொல்லிட்டு இருக்கீங்க…” என்றான்.

 

“தம்பி, உங்களுக்கு அந்த வீட்ட பத்தி தெரிஞ்சுக்கணும்னா என்னோட உதவி கண்டிப்பா வேணும்…” என்றார் ரத்தன்.

 

அர்ஜுனோ அவ்வீட்டைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருக்க, எதற்காக ரத்தன் அவராகவே வந்து உதவுகிறேன் என்று கூறுகிறார் என்று யோசிக்க மறந்தான். அவனின் மூளை அந்த சமயத்தில் ‘அதன்’ வசமாகி இருந்ததோ…

 

சதீஷ் ஏதோ கூற முற்படும்போதும், “அந்த வீட்ட ஒரு தடவ பார்த்துட்டு கிளம்பிடலாம் டா…” என்று கூறி சமாளித்து விட்டான்.

 

அவர்களை ரத்தன் தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், அமித் மற்றும் அவன் குடும்பத்தைப் பற்றி தவறாகக் கூறி, அவர்களின் மனதை மாற்றினார். பகல் வேளையில் அவ்வீட்டிற்கு சென்றால்,  ஊரார் ஏதாவது சொல்வார்கள், அதனால் இரவு அங்கு செல்லலாம் என்று அவர்களிடம் கூறியிருந்தார்.

 

அர்ஜுன், “நான் கூட இன்னைக்கு காலைல அமித் சொன்னத கேட்டு, இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யத் தான் அவரு இப்படியெல்லாம் செய்யுறாரு நெனச்சேன்… ஆனா இப்போ தான தெரியுது… ரத்தன் சொல்ற மாதிரி அந்த வீட்டுக்கும் அமித் குடும்பத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு… இன்னைக்கு நைட் அங்க போனா எல்லாம் தெரிஞ்சுடும்…” என்றான்.

 

“ஹே அர்ஜு, நம்ம இங்க வந்தது லொகேஷன் பார்க்க தான… எனக்கென்னமோ நம்ம தேவை இல்லாம இதுல இன்வால்வ் ஆகுறோமோன்னு தோணுது…” என்றான் சதீஷ்.

 

“ப்ச்… இப்போ அந்த வீட்டுல என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சா, இந்த ஊர்மக்களுக்கு அமித்தோட உண்மையான நோக்கத்த சொல்லலாம்… அப்பறம் அந்த வீட்ட நம்ம படத்துக்கு லொகேஷனா ரத்தன் கிட்ட கேட்கலாம்… நம்ம இந்த விஷயத்துல உதவுனதால, அவரு எப்படியும் ஓகே சொல்லிடுவாரு…” என்று அர்ஜுன் கூறினான்.

 

அர்ஜுன் இங்கு ஒரு திட்டத்தை தீட்ட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரத்தனோ, ‘ம்ம்ம்… நம்ம திட்டம் சரியா தான் வேலை செய்யுது… இவங்க ரெண்டு பேரும் நான் சொன்னத நம்பிட்டாங்க… இன்னிக்கு நைட் இவங்கள கூட்டிட்டு அந்த வீட்டுக்கு போய் இருந்தா, நாளைக்கு காலைல, இவங்க வாயாலேயே அங்க பேய்ன்னு ஒண்ணும் இல்லன்னு சொல்ல வச்சுடலாம்… அமித் தான் இப்படி புரளி கிளப்பி அங்க ஏதோ தவறா செய்றான்னு சொல்லி, இந்த ஊர்மக்களுக்கு அவன் மேலயும் அவன் குடும்பத்து மேலயும் இருக்க நம்பிக்கைய ஒடச்சுடலாம்…  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா இவங்கள ஏமாத்தி அடுத்த பஞ்சாயத்து தலைவராகிடலாம்…அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, இந்த ரெண்டு பேரு மேல பழிய போட்டு, நம்ம தப்பிச்சுக்க வேண்டியது தான்…’ என்று மனக்கோட்டை கட்டினார்.

 

இவர்கள் இங்கு திட்டம் தீட்டுவதற்கு முன்பே, ‘அது’ தனது திட்டத்தில் இவர்களை சிக்க வைத்து, இவர்களுக்காக காத்திருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவில்லை.

 

இரவு நேரத்தில், ரத்தன் சிங், அர்ஜுன், சதீஷ் மற்றும் அமித்தை எதிர்க்கும் சிலர் அந்த வீட்டை நோக்கி நடைபோட்டனர். சில மணித்துளிகளிலேயே, சடசடவென மழை பெய்யத் துவங்கியது.

 

அந்த பேய் மழையைக் கண்டு சில நிமிடங்கள் தயங்கி நின்றவர்களை ரத்தன் சிங் தான் முன்னோக்கி அழைத்துச் சென்றார். எப்படியும் இன்று அந்த வீட்டிற்குள் சென்று விட வேண்டும் என்ற தன் நிலைபாட்டில் உறுதியாக நின்றார். இவரின் இந்த உறுதி அங்கு சென்ற பின்னரும் இருக்குமா என்பதில் சந்தேகமே…

 

அந்த அமானுஷ்ய வீட்டை நோக்கிய இவர்களின் பயணம், கொட்டும் மழையின் காரணமாக அமித்திற்கு தெரியாமல் போனது, இவர்களின் துரதிர்ஷ்டமோ…

 

இவர்கள் அனைவரும் அந்த வீட்டின் எல்லையை அடைந்ததும், சட்டென்று பெய்து கொண்டிருந்த மழை நின்றுபோனது. இந்த சம்பவம் அவர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

சதீஷ் கூட இங்கு வந்தது தவறோ என்று என்ன ஆரம்பித்தான். ஆனால் அதை சொல்வதற்கு தான் அவனிற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை.

 

சதீஷ் அர்ஜுனிடம் ஏதோ கூறப் போக, அதற்குள் அவன் அந்த எல்லைக்குள் நுழைந்திருந்தான்.

 

அப்போது இடித்த இடியின் சத்தம் அங்கிருப்பவர்கள் மனதில் பயத்தை தோற்றுவித்தது என்றால், மின்னலின் வெளிச்சத்தில் அவர்கள் கண்முன்னே  தெரிந்த அந்த வீடு அவர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது.

 

அமாவாசை இரவென்பதால் காரிருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில், மின்னலின் வெளிச்சம் தெரிந்த அந்த ஒரு நொடியில் அவர்கள் பார்த்ததென்னவோ,தீயின் கோரத்தில் சிக்கி சின்னாபின்னமானாலும் கரு நிறத்தில் கம்பீரமாய்  நின்றிருந்த அந்த மரவீட்டை தான்… அங்கங்கு மரக்கட்டைகள் தொங்கிக் கொண்டும், வீசும் காற்றிற்கேற்ப ஊசலாடிக் கொண்டிருந்தாலும், அதுவும் அவ்வீட்டிற்கு அமானுஷ்ய கம்பீரத்தை வழங்கிக் கொண்டிருந்தது.

 

ஆம்… அமானுஷ்யமே… இதுவரையிலும் அதை அமானுஷ்யமாக கருதாதவர்கள் கூட, நடுநிசியில் அதைக் கண்டதும், அவர்கள் உடம்பில் நடுக்கத்தை உணர்ந்தனர்.

 

இவையனைத்தும் அந்த ஒரு நொடியில் நிகழ்ந்து விட, இனிமேலும் அங்கு நிற்க அஞ்சி அனைவரும் அங்கிருந்து செல்ல முற்பட, திடீரென்று சூறாவளியாக மாறிய காற்று சுழன்றடிக்க, கண்களைக் கூட திறக்க முடியாமல் அனைவரும் அந்த காற்றின் திசையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

 

சற்று நேரத்தில் மீண்டும் சாந்தமானது காற்று… அனைவரும் ஆசுவாசமாகி கண்களைத் திறந்து பார்க்க, அவர்களின் கண்முன் இரண்டடி தொலைவில் இருந்தது வீடு.

 

பயத்தில் கத்தக் கூட முடியாமல், அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். அப்போது தான் அர்ஜுன் தங்களுடன் இல்லாததை சதீஷ் கவனித்தான். சதீஷ் அர்ஜுனை தேட, அவனை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

 

எதேச்சையாக வீட்டின் உள்ளே பார்க்க, அங்கு அர்ஜுன் அவ்வீட்டின் படிக்கட்டில் ஏறிப்போவதைக் கண்டான்.

 

‘அச்சோ இவன் எப்போ உள்ள போனான்…’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே போகும் சமயம், அவனை யாரோ தடுத்து, “தம்பி உள்ள போகாதீங்க… நம்ம இப்படியே கிளம்பிடுறது தான் நல்லது…” என்று கூற…

 

“அங்க உள்ள என் பிரெண்ட் இருக்கான்… அவன இங்கயே விட்டுட்டு எப்படி போறது…” என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.

 

இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் அந்த வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தார் ரத்தன் சிங். ‘இந்த வீட்டிற்கு வந்திருக்க கூடாது…’ என்று அவர் மனம் கூப்பாடு போட்டது.

 

அவரின் உதவி வேண்டி அவனிடம் வந்த சதீஷ், “சார் எப்படியாவது அர்ஜுன வெளிய கூட்டிட்டு வரணும்… நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்…” என்று கோரிக்கை வைத்தான்.

 

சதீஷை பார்த்தவர், “எல்லாம் கிளம்பலாம் வாங்க… தம்பி உயிர் வாழனும்னு ஆசை இருந்தா எங்க கூட வாங்க…” என்று கூறிவிட்டு முன்னால் நடந்தார்.

 

அவரின் பேச்சில் அதிர்ச்சியடைந்தவன், “யோவ் உன் பேச்ச கேட்டுத் தான இங்க வந்தோம்… இப்படி பாதில விட்டுட்டு போற…” என்று கத்தினான் சதீஷ்.

 

அதில் அங்கு மீண்டும் சலசலப்பு எழ, ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது திடீரென்று சலங்கையின் சத்தம் கேட்டது. ‘ஜல் ஜல்… ஜல் ஜல்…’ அதில் அனைவரின் பேச்சு சத்தம் நின்றிருந்தது. அருகில் வரவர அந்த சத்தம் அதிகரிக்க, இங்கு அனைவரின் கால்களும் ஆட்டம் கண்டது.

 

அனைவரின் கண்களும் சத்தம் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்த இருட்டில் அவர்களின் கண்களுக்கு தெரிந்தது என்னவோ புள்ளிகளாய் மஞ்சள் வெளிச்சம் மட்டுமே…

 

ரத்தின் சிங் தன் கையிலிருந்த டார்ச்சை ஒளி(லி) வந்த திசை நோக்கி காட்ட, அவை அவர்கள் கிராமத்து காளைகளின் கண்கள் என தெரிந்தது. அக்காளைகளின் கண்கள் ஒளிர்ந்ததிலிருந்தே எதுவோ சரியில்லை என்று உணர்ந்தனர். மேலும் அங்கிருந்து யாராவது நகர்ந்தால், தன் கூரிய கொம்பால் குத்திவிடும் தோரணையில் நின்றிருந்தன அக்காளைகள்.

 

புசுபுசுவென மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் காளைகளைக் கண்டவர்கள் மூச்சு விட மறந்து நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு பின்னால் கேட்ட கதவு திறந்து மூடும் சத்தமும், ஜன்னல்கள் படபடவென அடித்துக் கொள்ளும் சத்தமும் இவர்களின் செவிப்பறைகளை கிழித்துக் கொண்டு மூளையை அடைந்தது. 

 

இதனை சகித்துக் கொள்ள முடியாமல், அங்கிருந்த ஓடினார் ஒருவர், சிறிது தூரம் ஓடியவரை, அவரின் வழியை மரித்து நின்ற காளை, தன் கொம்பினால் வயிற்றில் குத்தி தூக்கி வீச, மீண்டும் அவர் நின்ற இடத்திற்கே வந்து சேர்ந்தார்… உயிரற்ற சடலமாக….

 

இந்த காட்சியை வாய் பிளந்து கண்டவர்கள், நடுங்கிக் கொண்டிருக்க, அவர்களின் நாசி, அங்கு வீசிய துர்நாற்றத்தை அப்போது தான் உணர்ந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில், மீண்டும் கதவுகள் அடித்துக் கொள்ள, அவர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. ஒன்று அந்த வீட்டிற்குள் சென்று சாக வேண்டும்…. இல்லை இந்த காளைகளிடம் அகப்பட்டு  சாக வேண்டும்… ஆனால் அவர்களின் மரணம் என்பது உறுதியாகி விட்டது.

 

நேரம் செல்ல செல்ல, காளைகளுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

 

அவர்கள் அறியாமலேயே வீட்டின் வாசற்படிகளைக் கடந்து வந்திருந்தனர். முதலில் சுதாரித்த சதீஷ் சுற்றி பார்க்க, அப்போது தான் அவர்களுக்கு வீட்டிற்குள் வந்தது தெரிந்தது.  கதவுகளின் சத்தம் நின்றிருக்க, காளைகளும் விலகிச் சென்றிருந்தன.

 

காளைகள் சென்ற தைரியத்தில் ஒருவர் அவ்வீட்டிலிருந்து இரண்டடி எடுத்து வைத்தார். எதுவும் நடக்கவில்லை என்பதில் மகிழ்வுற்று திரும்பி அவர்களைப் பார்த்து சிரித்த அந்த நொடி, மண்ணுக்கடியிலிருந்து மரத்தின் வேர் ஒன்று அவர் கால்களைப் பற்றி மண்ணிற்குள் இழுத்துச் சென்றது. 

 

அவரின் மரண ஓலம் செவிகளை நிறைந்திருக்க, அவர்கள் நின்றிருந்த இடத்தை விட்டு அகலவே அஞ்சினர்.

 

எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது, உள்ளே சென்று அர்ஜூனையாவது தேடலாம் என்ற முடிவிற்கு வந்தான் சதீஷ்…

 

“நான் உள்ள போய் அர்ஜுன தேடப் போறேன்…” என்றான்.

 

“தம்பி உனக்கென்ன பைத்தியமா… வெளிய நின்னதுக்கே என்னென்னமோ நடக்குது… இதுல உள்ள போறேன்னு சொல்ற…” என்று கேட்டார் ஒருவர்.

 

“இங்கயே எவ்ளோ நேரம் நிக்கப் போறீங்க..? நம்ம இறப்பு இன்னிக்குன்னா இங்க நின்னாலும் இறக்கத் தான் போறோம்… உள்ள போனாலும் இறக்கத் தான் போறோம்… இங்கயே வெட்டியா நிக்கிறதுக்கு உள்ள என்ன இருக்குன்னாவது பார்க்கலாம்… அப்படியே அர்ஜூனையும் தேடலாம்…” என்றான். 

 

அனைவரும் ரத்தன் சிங்கை பார்க்க, அவரோ ஓய்ந்து போன தோற்றத்தில் இருந்தார். இதுவரை எதிரிகளாக இருந்தவர்களை பலத்தால் அடித்தோ, பணத்தால் அடித்தோ ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறார். ஆனால் இங்கு எதிரியாக இருப்பதோ கண்ணுக்கே தெரியாமல் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது அல்லவா…

 

இவர்கள் இப்போதைக்கு வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து சதீஷ் உள்ளே சென்று விட்டான். ஏதோ யோசித்துக் கொண்டிருந்த, ரத்தனும் உள்ளே செல்ல, மற்றவர்களும் பலியாடு போல அவரின் பின்னே சென்றனர்.

 

அடுத்த நாள் காலை… இவை மட்டுமே அமித்திற்கும் ஊராரிற்கும் அங்கிருந்து தப்பி வந்தவரால் சொல்லப்பட்டது. இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஏற்கனவே உடம்பில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஐந்தே நிமிடங்களில் அவரின் உயிர் பிரிந்திருந்தது.

 

மற்றவர்கள் எல்லாம் அவ்வீட்டின் வெளியே இறந்து கிடந்தனர், ரத்தன் உட்பட… இதில் உயிர் பிரியாமல் தப்பித்தது என்னவோ சதீஷ் மட்டும் தான். ஆனால் அவனும் கோமா நிலைக்கு சென்றிருக்க, அவ்வீட்டின் உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமலேயே போயிற்று…

 

மேலும், அர்ஜுனின் சடலம் (அவனும் கண்டிப்பாக இறந்திருப்பான் என்றே எண்ணினர்.. ) வீட்டின் வெளியே இல்லை… வீட்டிற்குள் சென்று தேட யாரும் முன்வரவில்லை.

 

யார் உள்ளே செல்வது என்று அந்த ஊர் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்க, அமித்தும் பிபுலும் மருத்துவமனையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கு வந்தனர்.

 

இவர்களின் சண்டையைக் கண்டு எரிச்சலுற்ற பிபுல் தானே உள்ளே செல்வதாகக் கூறி அவ்வீட்டின் அருகே செல்ல, அவ்வீடு சட்டென்று மண்ணிற்குள் புதைந்தது. 

 

அதன்பின்னர், பெரும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு, அவ்வீட்டின் அருகே செல்பவர்கள் கூட தண்டிக்கப் பட்டனர். ஆனாலும் அவர்களின் ஊரில் துர்சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருந்தன.

 

கால்நடைகள் நோயில் இறந்தன. விவசாயப் பயிர்கள், திடீரென்று பெய்யும் பேய் மழையில் அழிந்து போயின… இதைக் கண்ட ஊர் மக்களில் சிலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, சிலர் பிழைப்பிற்காக வெளி ஊர்களில் தஞ்சம் புகுந்தனர்.

 

பஞ்சாயத்து தலைவரான அமித்தின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது. அவர் உயிராக நினைத்த கால்நடைகள் எல்லாம் ஒவ்வொன்றாக கண்முன் மடிய, உறவாக நினைத்த மக்களோ எதிலிருந்தோ தப்பித்து செல்வது போல் ஊரை விட்டுச் செல்ல, அதைக் கண்டு பெரிதும் வருந்தியவரின்  உடல்நிலை மோசமாகத் துவங்கியது.

 

அடிக்கடி பிபுலிடம், எப்படியாவது ஊரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தவரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்திருந்தது.

 

அதன்பிறகு பல பூஜைகள் செய்து, ஊர் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, ஊரை ஓரளவிற்கு பழையபடி மாற்ற பிபுல் மிகவும் கஷ்டப்பட்டார். 

 

இவ்வளவு துன்பங்களை அந்த ஊருக்கு வாரி வழங்கிய ‘அது’ தனது அடுத்த இலக்கிற்காக பொறுமையுடன் காத்திருக்க ஆரம்பித்தது அவ்வீட்டில்… 

 

அமானுஷ்யம் தொடரும்…

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

ராமோஜி ஃபிலிம் சிட்டி (Rajini Film city)

 

பல தென்னிந்திய படங்களுக்கு படப்பிடிப்புத் தளமாக இருந்த (இருக்கின்ற) ராமோஜி ஃபிலிம் சிட்டி தான் அமானுஷ்ய இடங்களின் பட்டியலில், நாம் அடுத்து பார்க்கப் போகும் இடம்…

 

ஹாலிவுட்டின் யூனிவெர்சல் ஸ்டுடியோஸிற்கு நிகராகக் கருதப்படும், இந்த ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அங்கங்கு சில இடங்களில் அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாகக் கூறுகின்றனர்.

 

இதற்கு காரணம், இந்த இடம் ஒரு காலத்தில், நிஜாம்களின் போர்க்களமாக இருந்திருக்கிறது. அதற்கு முன்னர் திருடர்கள் தாங்கள் திருடியதை பதுக்கும் இடமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

 

அங்கு இறந்து போன போர்வீரர்களின் ஆவிகள் அங்கு உலவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் சில நேரங்களில், கண்ணாடியில் உருது மொழியில் ஏதோ கிறுக்கல்களைக் காண்பதாகவும் கூறுகின்றனர்.  

 

ஒரு முறை அங்கு படப்பிடிப்பு நடக்கும் போது, வெளிச்சத்திற்காக விளக்குகளை பிடித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று அருகில் இருந்த ஹீரோவின் மீது விழுந்து விட்டானாம். அவனிடம் அது பற்றி விசாரித்தபோது, யாரோ பின்னாலிருந்து தள்ளி விட்டதானாலேயே அவன் விழுந்ததாகக் கூறினானம். ஆனால் அவன் அங்கு நின்றிருந்த சமயம், அவனிற்கு பின்னால் யாரும் இல்லை!!!

 

இவ்வளவு திகில் நிறைந்த ராமோஜி ஃபிலிம் சிட்டியில், நீங்கள் ஒரு இரவை கழிப்பீர்களா…?