மிரட்டும் அமானுஷ்யம் 6

 

மிரட்டல் 6

 

கல்லூரியிலிருந்து கிளம்பிய நால்வர் படை, மெதுவாக அருகில் இருந்த இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். விஷ்வாவும் சாக்ஷியும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டதும், ஜானுவும் ஆதர்ஷும் அவர்களை சமாதானப் படுத்துவதும் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்து கொண்டு தான் இருந்தது.

 

ஒரு வழியாக, அன்று அவர்களின் ஊர் சுற்றலை முடித்துவிட்டு தங்கள் இருப்பிடங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

 

“ஓகே ஜானு, நாளைக்கு மார்னிங் பார்க்கலாம்… பை சாக்ஷி…” என்று ஆதர்ஷ் விடைப்பெற்றான்.

 

“பை ஜான்ஸ்… பை சாக்ஸ்…” என்று கூவியபடி விஷ்வா ஓடிச் செல்ல, இங்கு சாக்ஷியோ அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

 

பிஜிக்கு சென்று, சாக்ஷி அங்கு தங்குவதற்கான சம்பிரதாயங்களை முடித்துவிட்டு அறைக்கு வந்தபோதும் கூட அவளின் புலம்பல்கள் ஓய்ந்த பாடில்லை.

 

“அவனுக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா, என்னையவே காலைல அலைய வச்சிருப்பான்… இதுல சாக்ஸ்னு கேவலமா வேற கூப்பிடுறான்… லூசு பய…” என்று அவனை மீண்டும் அர்சித்துக் கொண்டிருக்க, ஜானு தான் அவளை அதிலிருந்து தெளியவைத்தாள்.

 

“போதும் போதும் நீ திட்டுனது… அத கேட்டு என் காது தான் வலிக்குது… போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா…” என்று அனுப்பி வைத்தாள்.

 

காலையில் அப்படி அப்படியே போட்டு சென்றிருந்ததை எடுத்து வைத்துக்  கொண்டிருந்த ஜானுவிற்கு யாரோ தன்னை பார்ப்பது போல இருந்தது. இங்கு வந்ததிலிருந்தே அவளிற்கு இவ்வுணர்வு இருக்கிறது. 

 

மெல்ல திரும்பிப் பார்த்தவள், அவர்களின் அறைக்கதவு திறந்திருப்பது கண்டு அதை மூடச் சென்றாள். அப்போது வெளியே ஒரு நிழல் அங்கிருந்து வேகமாக நகர்வது தெரிந்தது.

 

சாதாரணமாக சென்றிருந்தால், ஜானுவிற்கு சந்தேகம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அந்த வேகம் தான் ஜானுவை அந்த நிழலின் பின்னே செல்லத் தூண்டியது. அவளும் அந்த நிழலின் பின்னே சென்றாள்.

 

சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் எதற்காக அதன் பின்னே செல்கிறாள், எங்கு செல்கிறாள் என்பதைக் கூட கவனிக்க மறந்தவளாக நடந்து கொண்டிருந்தாள்.

 

குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அந்த நிழல் மறைந்து விட்டது. அப்போது தான் நிகழ்விற்கு வந்தாள் ஜானு. அவள் நின்றிருந்த இடம் அந்த பிஜியின் மொட்டைமாடி.

 

சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். துணி காயப்போட ஆங்காங்கே கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அவள் நின்றிருந்ததற்கு எதிர் திசையில் காயப்போட்டிருந்த சேலைக்குப் பின் யாரோ நின்றிருப்பது போல இருந்தது.

 

தான் தேடி வந்தவர் அங்கு தான் இருப்பார் என்று எண்ணியவளாக மெதுவாக அதை நோக்கிச் சென்றாள். மனதிற்குள் பயம் இருந்தாலும், செஞ்சூரியன் மேற்கே மறைவதற்கு இன்னும் காலம் இருப்பதால், சிறிது தைரியமாகவே முன்னோக்கி நடந்தாள். (பகலில் பேய்களின் தொல்லை இருக்காது என்று கேள்விப்பட்டதாலோ…)

 

இதோ நெருங்கி விட்டாள். அந்த சேலையை தன் கைகளால் பற்றி விலக்கியவள், தான் கண்ட காட்சியில் அவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது.

 

இன்னும் ஓரடி எடுத்து வைத்திருந்தாலும், அவளின் எலும்புகள் கூட மிஞ்சியிருக்காது. ஏனெனில், அங்கிருந்ததோ சிறிய அளவிலான தடுப்புச்சுவர் மட்டுமே… அதுவும் பாதி கட்டியும் கட்டாமலும் இருந்தது. கவனக்குறைவாக இருந்தால் கீழே விழுந்து பின் மேலே செல்வது உறுதி.

 

ஒரு நொடி கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். திடீரென்று தன் தோள்களின் மேல் படிந்த கரங்களில், திகைத்து திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணொருத்தி நின்றிருந்தாள். “சாரி பயந்துட்டியா…” என்று ஆங்கிலத்தில் கேட்க, அப்போது தான் ஜானுவிற்கு மூச்சே வந்தது.

 

ஜானு கண்களால் அந்த சுவரைப் பார்க்க, “இந்த பிஜி ரொம்ப வேகமா கட்டினதால, அப்போதைக்கு இந்த சுவர இப்படியே விட்டுட்டாங்க… இன்னும் கொஞ்ச நாள்ல சரி பண்ணிடுவாங்கன்னு ஓனர் ஆண்ட்டி சொன்னாங்க…” என்றாள்.

 

ஜானுவும் அதைக் கேட்டு தலையை ஆட்டிக் கொண்டாள். 

 

“ஹாய் என் பேரு நிஷா… உன் பேரு என்ன…” என்றாள் அப்பெண்.

 

ஜானுவும் தன் பெயரைக் கூறினாள். சிறிது நேரம் பேசினர் இருவரும்.

 

நிஷா, “ஹே உங்கூட பேசி டைம் போறதே பார்க்கல… பாரு சூரியன் கூட மறஞ்சுடுச்சு… இந்த துணிகள சீக்கிரம் எடுக்கணும்னு தான் வந்தேன்…” என்று கூறியவாறு அங்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுத்தாள்.

 

பின் இருவரும் பேசிக் கொண்டே கீழே வந்தனர். நிஷா நான்காம் தளத்தில் இருப்பதாகக் கூறி விடைபெற, “நீ மட்டும் தான் இங்க இருக்கியா…”என்று கேட்டாள்.

 

ஏனெனில், அந்த நான்காம் தளத்தில் வேற யாரும் இருப்பதாக தெரியவில்லை. அவள் நுழையப்போன அறையைத் தவிர மற்ற மூன்று அறைகள் வெளியில் பூட்டப்பட்டிருந்தது.

 

நிஷாவோ, “ம்ம்ம் ஆமா நான் மட்டும் தான் இருக்கேன்… மத்த ரூம்ஸ் எல்லாம் காலியா தான் இருக்கு…” என்றாள்.

 

ஜானுவிற்கோ சாக்ஷியுடன் விடுதி காப்பாளரிடம் பேசியது நினைவிற்கு வந்தது. சாக்ஷி தங்குவதற்கு பணம் செலுத்தும் போது, “நல்ல வேல சீக்கிரம் வந்த மா… இல்லனா இருந்த ஒரு இடமும் ஃபுல்லாகிருக்கும்…” என்றார்.

 

‘ஆனா இங்க தான் இவ்ளோ ரூம்ஸ் காலியா தான இருக்கு…’ என்று யோசித்தவள், அதை நிஷாவிடமும் கேட்டாள்.

 

அவளோ சோகமாக, “எங்கூட ஷேர் பண்றதுக்கு தயக்கமா இருக்கும்…” என்றாள்.

 

‘ரூம் ஷேர் பண்றதுக்கு தயக்கமா இருக்கும்னு சொல்றது சரி… ஆனா ஃப்ளோர ஷேர் பண்றதுக்கு கூடவா தயக்கமா இருக்கும்…’ என்று மனதிற்குள் நினைத்தவள் அதை வெளியே கேட்கவில்லை.

 

“ஓகே நிஷா… பை…” என்று கூறிவிட்டு தன் அறை இருந்த இரண்டாம் தளத்தை அடைந்தாள்.

 

அங்கு நிஷாவோ இவளைக் கண்டு மர்மமாக புன்னகைத்ததை அவள் பார்க்கவில்லை.

 

அறையில் நுழைந்த ஜானு முதலில் கண்டது சாக்ஷி யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை தான். அதுவும் அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தில் எதையோ யூகித்தவளாய் சிறு சிரிப்புடன் குளியலறைக்குள் சென்றாள் ஜானு.

 

பின், இரவு உணவாக வைக்கப் பட்டிருந்த ரொட்டியை சாப்பிட்டுவிட்டு தங்கள் கட்டிலில் தஞ்சம் புகுந்தனர்.

 

ஜானு நந்தினியிடம் காலை முதல் இப்போது வரை நடந்ததை கூறிக் கொண்டிருக்க, சாக்ஷி தன் வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.  டவர் சரியாக கிடைக்கவில்லை என்று சாக்ஷி வெளியே பேச சென்றுவிட்டாள்.

 

ஜானுவோ நந்தினியிடமும் அவள் குடும்பத்தினரிடமும் பேசி முடித்தவள், என்ன செய்வது என்று தெரியாமல் தன் மடிக்கணினியை உயிர்ப்பித்தாள். ஏதாவது படம் பார்க்கலாம் என்று தேடிக் கொண்டிருக்க, அவள் கையில் சிக்கியது ஒரு நகைச்சுவை படம்.

 

தலையணையை அணைவாக வைத்து சாய்ந்து அமர்ந்தவள், படத்தை போட்டாள். அப்போது அவளின் மடிக்கணினி மக்கர் செய்ய, படமோ தடைபட்டு நின்றுவிட்டது. எந்த பொத்தானை அழுத்தினாலும் வேலை செய்யவில்லை.

 

‘ஸ்ஸ்ஸ் இது வேறயா… ஒரு படத்த உருப்படியா பார்க்க முடியுதா…’ என்று சலித்துக் கொண்டவள், அப்போது தான் அதைக் கண்டாள்.

 

மடிக்கணினியின் கருப்புத் திரையில், தனக்கு பின்னாலிருந்த ஜன்னலுக்கு வெளியே யாரோ நின்றிருப்பதைப் போல இருந்தது.

 

வேகமாக திரும்பிப் பார்த்தாள். ஆனால் அங்கு யாரும் இல்லை. குழப்பத்துடன் திரும்பியவள், மடிக்கணினியின் திரையைப் பார்க்க, இப்போது அங்கு யாரும் இல்லை.

 

ஒரு பெருமூச்சுடன் தனக்கு எதிரில் இருந்த கண்ணாடியைப் பார்க்க, தனக்கருகே ஏதோ ஒரு உருவம் வெறித்துப் பார்த்திருப்பதை கண்டு பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

 

வேக மூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தவளின் தோளை தொட்டு யாரோ உலுக்க, கண் திறந்து பார்க்கும் துணிவில்லை ஜானுவிற்கு.

 

“ஜானு ஜானு…” என்ற சாக்ஷியின் கத்தலில் தான் தன்னிலை அடைந்தவள், கண் விழித்துப் பார்க்க அவளிற்கருகே நின்றிருந்தாள், சாக்ஷி.

 

“ஹே ஜானு, என்ன ஹாரர் படம் பார்க்குறியா… பயத்துல கண்ண மூடிருக்க…” என்று கிண்டல் செய்ய, அதெல்லாம் அவளின் மூளைக்கு சென்று சேரவில்லை.

 

மீண்டும் கண்ணாடியைப் பார்த்தவள், சற்றுமுன் அங்கு தெரிந்த உருவம் நின்றிருந்த இடத்தில் இப்போது சாக்ஷி நின்றிருப்பது தெரிந்தது.

 

‘அப்போ நான் பார்த்தது உண்மை இல்லயா…’ என்று ஜானு மனதினுள் புலம்பிக் கொண்டிருக்கையில், “ஹே இந்த படத்த பார்த்து தான் கண்ண மூடிட்டு இருந்தீயா…” என்று சாக்ஷி கூற, அவள் மடிக்கணினியைப் பார்க்க, அதில் அவள் தேர்ந்தெடுத்த படம் எவ்வித தடையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

 

அதைக் கண்டவன் மேலும் அதிர்ச்சி அடைந்தாள். அவளின் எதிர்வினையைக் கண்டு குழம்பிய சாக்ஷி, “ஜானு ஆர் யூ ஓகே..?”என்று கேட்க…

 

தான் பார்த்ததை சொல்லி அவளையும் பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவள், ‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தாள்.

 

“ஓகே ஜானு… எனக்கு ரொம்ப டையார்டடா இருக்கு… நான் தூங்க போறேன்… லைட்ட ஆஃப் பண்ணிக்கவா… லைட் இருந்தா எனக்கு தூக்கமே வராது…” என்றாள் சாக்ஷி.

 

அவளின், ‘லைட்ட ஆஃப் பண்ணிக்கவா’வில் அதிர்ந்த ஜானு, எதையும் காட்டிக்கொள்ளாமல் சரி என்று கூறினாள்.

 

ஜானுவும் அந்த மடிக்கணனியை மூடிவிட்டு படுத்துக் கொண்டாள். ஏற்கனவே அன்று நடந்த நிகழ்வுகள் அவளின் மனதில் பயத்தை தோற்றுவிக்க, அந்த இரவின் இருளும் அதை பன்மடங்காக பெருக்கியது.

 

இந்த மாதிரி நேரங்களில், எப்போதும் செய்வது போல, கண்களை மூடி கந்தசஷ்டி கவசம் கூறியபடி உறங்கிவிட்டாள். அவள் உறங்கியதும், அவள் அருகே இருந்த சுவரில் தோன்றிய அந்த நிழல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

******

 

காலை முதலில் எழுந்த ஜானு, முதல் நாள் நிகழ்ந்த நிகழ்வுகளை மனம் தானாக யோசிக்க, ஒரு தலை குலுக்களுடன், அதைப் பற்றி நினைக்கக் கூடாது என மனதிற்கு கட்டுப்பாடு விதித்து குளிக்கச் சென்றாள்.

 

பின் சாக்ஷியை எழுப்பி, இருவரும் தயாராகி, சாப்பிடச் சென்றனர். அங்கு இருந்த இன்னும் இரண்டு பெண்கள் இவர்களைப் பார்த்து சிரித்தனர். இருவருரையும் கண்டாலே கேரளப் பெண்கள் என்பது தெரிந்தது.

 

தங்கள் உணவை எடுத்துக் கொண்டு, அப்பெண்கள் அமர்ந்திருந்த மேஜையிலேயே அமர்ந்தனர். அவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினர். அவர்கள் மூன்றாம் தளத்தில் இருப்பதாகவும், அருகிலே உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினர்.

 

அதன்பின் பேச்சு சுவாரசியமாக சென்று கொண்டிருக்க, சாக்ஷி, “ஹே இங்க எத்தன ஃப்ளோர் இருக்கு… நான் இன்னும் மேல போய் பார்க்கவே இல்ல.. இன்னிக்கு ஈவினிங் மொட்டைமாடிக்கு போகணும்…” என்று கூற…

 

எதிரில் இருந்த இரு பெண்களும், “நோ…” என்றனர் ஒரே குரலில்.

 

அதில் ஜானுவும் சாக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ரீனா (அப்பெண்களில் ஒருத்தி), “யாரும் ஃபோர்த் ஃப்ளோருக்கோ மொட்டை மாடிக்கோ போகக் கூடாதுன்னு ஓனர் சொல்லிருக்காங்க…” என்றாள்.

 

“ஏன்… நான் கூட நேத்து மொட்டைமாடிக்கு போனேனே…” என்றாள் ஜானு.

 

அவள் கூறியதைக் கேட்ட அவ்விரு பெண்களும் அதிர்ந்தனர்.

 

ரீனா எதுவோ கூற முற்பட, மேஜைக்கு கீழே அவளின் கையைப் பற்றிய கீதா, “எங்களுக்கு டைம் ஆச்சு… நாங்க கிளம்புறோம்…” என்று கூறியவாறு ரீனாவையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

“ஓய் ஜானு, என்ன விட்டுட்டு நீ மட்டும் மொட்டைமாடிக்கு போயிருக்க…” என்றாள் சாக்ஷி.

 

ஜானுவோ சிரிப்புடன், “நீ உன் ஆளு கூட பேசிட்டு இருக்குறப்போ நான் எப்படி உன்ன கூப்பிடுறது…” என்றாள்.

 

சாக்ஷியோ வெட்கத்துடன், “அது வந்து… அவரு என் அத்தை பையன்…” என்றாள்.

 

பின் இருவரும் சிரித்துக் கொண்டே கிளம்ப, அதைக் கண்ட ‘அது’, “சிரிக்கிறியா… நல்லா சிரிச்சுக்கோ… இன்னும் கொஞ்ச நாள் தான் இப்படி சிரிக்க முடியும்…” என்றது.

 

அமானுஷ்யம் தொடரும்…

 

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

த்ரீ கிங்ஸ் சர்ச், கோவா (Three Kings Church, Goa)

 

 

அமானுஷ்ய தேவாலயம்… இதைக் கேட்பதற்கு சற்று முரணாக இருக்கலாம்… ஆனால் உண்மையிலே இப்படி ஒரு தேவாலயம் கோவாவில் இருக்கிறது.

 

அதன் பெயர் தான், த்ரீ கிங்ஸ் சர்ச். கோவாவின் தென்பகுதியில் உள்ள கான்சாலிம் என்கிற கிராமத்திலுள்ள சிறு குன்றான க்யூலிமில் அமைந்துள்ளது இந்த தேவாலயம்.

 

இதன் கதையை தெரிந்துகொள்ள, காலனித்துவம் பின்பற்றப்பட்ட காலத்திற்குச் செல்வோம். அப்போது கோவா, போர்ச்சுக்கிசியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

 

பெயருக்கேற்றார் போல இக்கதை மூன்று அரசர்களைப் பற்றியதே… அவர்களின் பேராசைப் பற்றியது. அம்மூன்று அரசர்களுக்கும் அவ்விடத்தை தானே ஆள வேண்டும் என்கிற எண்ணம் உருவாக, அந்த இடமும் அங்கு வாழும் மக்களும் மிகுந்த  போராட்டத்துடனே நாட்களைக் கழித்து வந்தனர்.

 

அப்போது, அம்மூவருள் ஒருவரான, அரசர் ஹோல்கர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி மற்ற இரு அரசர்களையும் சமரசம் பேச அழைத்தார். அவர்கள் தேர்ந்தெடுத்த இடமே இந்த தேவாலயம்.

 

அங்கு ஹோல்கர் மற்ற இருவருக்கும் விஷம் கலந்த உணவை பரிமாற, அவர்களும் இவரின் திட்டம் தெரியாமல் அதை உண்டு மடிந்தனர்.

 

அதில் பெருமகிழ்ச்சி அடைந்த ஹோல்கர், மக்களை ஒன்றுகூட்டி தன் வெற்றியைத் தெரிவித்தார். ஆனால் மக்களோ, அவரின் கொடூர செயலைக் கண்டு கொதித்தெழுந்தனர். இதனை எதிர்பார்க்காதவர், அவர்களிடமிருந்து தப்பிக்க மீண்டும் அந்த தேவாலயத்தை அடைந்தார்.

 

மக்களிடமிருந்து தன்னால் தப்பிக்க இயலாது என்பதை அறிந்தவர், மீதி இருந்த விஷத்தை அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

அங்கு வந்த மக்கள், அம்மூன்று அரசர்களின் உடல்களை தேவாலயத்தை சுற்றியிருந்த இடத்தில் புதைத்தனர்.

 

அன்றிலிருந்து அந்த தேவாலயம், ‘த்ரீ கிங்ஸ் சர்ச்’என்று பெயர்பெற்றது.

 

இறந்தும் அவ்விடத்தின் மேலுள்ள மோகம் குறையாமல், அம்மூன்று அரசர்களின் ஆவியும் அவ்விடத்தில் உலவுவதாக அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர். இரவானால், தேவாலயத்தின் உள்ளே சத்தம் கேட்பதாகவும் கூறுகின்றனர்.

 

இங்கிருந்து பார்த்தால் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி மிக அழகாக தெரியுமாம். ஆனாலும் அந்த இடத்திலுள்ள அமானுஷ்யத்தின் காரணமாக யாரும் அந்த நேரத்தில் அங்கு கூடுவதில்லையாம்.

 

உங்களுக்கு அங்கு சென்று சூரிய அஸ்தமனம் பார்க்க ஆசையா..?