மிரட்டும் அமானுஷ்யம் 9

 

 

மிரட்டல் 9

 

நால்வரும் புனே வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. அவர்களுக்கு நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இனிமையாகவே சென்றது.

 

அன்றைய வகுப்பு ஆரம்பித்தது. கங்காதர் உள்ளே நுழைந்ததும், அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க, உள்ளே நுழைந்தவர் எப்போதும் அவர் முகத்தில் இருக்கும் புன்னகையுடன், “ஹாய் பிரெண்ட்ஸ்…” என்றார்.

 

அதன்பின் அங்கு அவரின் குரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் அவர் கூறும் விளக்கத்தையும் , படவீழித்தியில் தெரியும் படங்களையும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

 

“ஓகே கைஸ்… இன்னைக்கு நாம அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துற கருவிகள பத்தி பார்ப்போம்…” என்றவாறு ஒவ்வொரு படங்களாக காண்பித்தார்.

 

“பேய் வேட்டைக்கு முக்கியமான கருவி,  மின்காந்த புலக்கருவி (Electromagnetic field meters) இது இல்லாம எந்த ஒரு ஆய்வாளரும் களத்துல இறங்க மாட்டாங்க… நமக்கு ஏற்கனவே தெரியும், இந்த பூமில இருக்க ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், மின்காந்த கதிர்வீச்சோட அதிர்வெண்கள் (frequency of electromagnetic radiation)  வேறுபட்டிருக்கும். எந்த இடங்கள்ல இந்த கதிர்வீச்சு அதிகமா இருக்கோ, அங்க எதிர்மறை ஆற்றல் அதிகமா இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கலாம்… உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா அங்க பேய் இருக்குன்னு அர்த்தம்… மின்காந்த புலக்கருவிங்கிற இந்த கருவி தான் அந்த மின்காந்த கதிர்வீச்ச அளக்குற கருவி… இத வச்சு நாம சுலபமா அந்த இடத்துல பேய் இருக்கா இல்லையான்னு சொல்லிடலாம்.” என்று கூறி அதன் நிழற்படத்தைக் காட்டினார்.

 

“அடுத்தது அகச்சிவப்பு வெப்ப புகைப்படக் கருவி (Infrared thermal camera). கண்ணுக்கு புலப்படுற ஒளில பேயோ ஆவியோ தெரிய வாய்ப்புகள் கம்மி… முக்கியமா இரவு நேரங்கள்ல தான் இந்த ஆவிங்களோட ஆதிக்கம் அதிகமா இருக்கும்… இந்த கருவி ஒரு வெப்ப நிலை உணர்வி… (temperature sensor) இது அமானுஷ்ய இடங்கள்ல இருக்க வெப்பநிலை மாற்றங்கள கணிச்சு அத காட்சிகளா நமக்கு திரைல காட்டும்… இத பயன்படுத்தியும் ஆவிங்கள நம்மளால கண்டறிய முடியும்…” என்று கூறி அதைப் பற்றிய காணொளியை காட்டினார்.

 

“முதல்ல நான் சொன்ன கருவி உணர்தலுக்கு, அடுத்தது காண்பதுக்கு… இப்போ சொல்லப் போற கருவி கேக்குறதுக்கு… ஆமா இப்போ பார்க்கப் போறது மீயொலி கேட்கும் கருவி… (ultrasonic listening device)  மனிதனுக்கு குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு தான் கேட்கும் திறன் இருக்கு… பேய்களோட சத்தம், மனிதன் கேட்கும் டெசிபல் அளவிற்கும் ரொம்ப கம்மியான டெசிபல்ல இருக்கும்… சோ ஆவிங்களோட சத்தத்த கேக்குறதுக்கு இந்த மீயொலி கேட்கும் கருவி பயன்படுது…”

 

மேலும் சில கருவிகளைப் பற்றி அவர் கூற, அனைவரும் அவற்றை கூர்ந்து கவனித்தனர்.

 

“ரொம்ப நேரம் நானே பேசிட்டு இருக்கேன்… இப்போ நீங்க பேசுங்க… இவ்ளோ நாள் வகுப்பு நடந்துருக்கு… அமானுஷ்யங்கள பற்றி நெறையா பார்த்துருக்கோம்… அத பயன்படுத்தி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க… ஒரு அமானுஷ்ய ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய தகுதி இல்லனா குணம் எதுன்னு நீங்க நினைக்குறீங்க…?”

 

அவ்வளவு நேரம் மௌனம் காத்த மாணவர்கள், என்ன விடையாக இருக்கும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்ள, விஷ்வா எழுந்து, “பயப்படாம இருக்கணும்…” என்று சத்தமாக கூறி, “எத்தன பேய் படம் பார்த்துருக்கோம்…” என்று மற்ற மூவரிடம் முணுமுணுத்தான்.

 

கங்காதரோ சிரிப்புடன், “விஷ்வா குட்… ஆனா நான் எக்ஸ்பெக்ட் பண்ற விடை இது இல்ல…” என்றார்.

 

விஷ்வாவோ, ‘இது இல்லனா வேற என்னவா இருக்கும்…’ என்று தன் மூளையைக் கசக்கி, தான் பார்த்த திரைப்படங்களை எல்லாம் ஒருமுறை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இன்னொருவன், “ஆவிங்கள பத்தி நல்லா தெரிஞ்சவனா இருக்கணும்…” என்றான்.

 

மற்றொருவன், “வேகமா செயல்படனும்…” என்றான்.

 

“இல்ல விவேகமா செயல்படனும்…” என்றாள் ஒரு பெண்.

 

“முனைப்பா கவனிக்கணும்…” என்றான் ஆதர்ஷ்.

 

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூற, “கைஸ் நீங்க சொன்ன விடைகளெல்லாம் சரி தான்… ஆனா இதையெல்லாம் விட மிக முக்கியமான குணம் ஒன்னு இருக்கு… யாரும் அத சொல்லல…” என்றவாறே ஜானுவை பார்த்தார்.

 

“ஜான்வி, உங்களோட பதில் என்ன…?” என்று கேட்டார்.

 

ஜானுவோ எந்த பதிலையும் யோசிக்கவில்லை. திடீரென்று அவர் கேட்கவும், முதலில் பதறியவள், பின் அவரின் பார்வையில் என்ன கண்டாளோ, சிறிது யோசனைக்குப் பின், “பொறுமை…” என்றாள்.

 

“எஸ் பொறுமை… அதான் ரொம்ப அவசியமான குணம்… யூ காட் இட் ரைட் ஜான்வி…” என்றார்.

 

“பல நேரங்கள்ல நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கிற மாதிரி இருக்கும்… முதல் முறை கணிச்சது மாதிரி இரண்டாவது முறை இருக்காது… முடிவுகள் மாறிட்டே இருக்கலாம்… சில நேரங்கள்ல முடிவுக்கே வர முடியாம பல ஆராய்ச்சிகள க்ளோஸ் பண்ணிருக்காங்க… சோ எந்த நேரத்துலயும் பொறுமைய மட்டும் கைவிடவே கூடாது…” என்றார்.

 

பின் சிலர் அவர்களின் சந்தேகங்கங்களைக் கேட்க, அதற்கு பொறுமையாக பதிலளித்தார்.

 

“அப்போ இனிமே நாங்களும் இந்த மாதிரி பாரானார்மல் கேஸஸ் இன்வெஸ்டிகேட் பண்ணலாமா, சார்..?” என்றான் ஒருவன்.

 

“கூடாது. அதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்கு… இந்த கோர்ஸ் படிச்சு முடிச்ச உங்கள முதல இன்டெர்னா தான் சேர்த்துப்பாங்க… அப்படி இன்டெர்னா சேருறவங்களுக்கு பாதிக்கப் பட்டவங்க கிட்டயிருந்து தகவல் சேகரிக்குறத தான் முதல் வேலையா தருவாங்க… அப்பறம் தான் அவங்க கூட களப்பணிக்கு கூட்டிட்டு போவாங்க… இந்த மாதிரி பல களப்பணிகளுக்கு அப்பறம் தான் உங்ககிட்ட தனியா கேஸ் ஒப்படைப்பாங்க…”

 

“ஃப்ரீலான்சிங்கா இந்த வேலைய செய்யலாம்ல சார்…”

 

“செய்யலாம் தான்… ஆனா அப்போ யூ ஆர் அட் யுவர் ஓன் ரிஸ்க்ஸ்… அப்பறம் இதுல பெருசா வருமானம் பார்க்க முடியாது… சோ இதை யாரும் ஃப்ரீலான்சிங் ஜாபா தேர்ந்தெடுக்குறது இல்ல…”

 

அன்றைய வகுப்பு முடிவுறும் நேரம் வர, “இன்னிக்கோட உங்களுக்கு இந்த கோர்ஸ் முடியுது பிரெண்ட்ஸ்… இன்னும் ரெண்டு நாள்ல இந்த கோர்ஸ்லயிருந்து நீங்க தெரிஞ்சுகிட்டத மதிப்பிடுறதுக்கு ஒரு டெஸ்ட் இருக்கு… உங்களுக்கு இந்த கோர்ஸ் சம்மந்தமாவோ இல்ல அமானுஷ்யம் தொடர்பாகவோ ஏதாவது சந்தேகம் இருந்தா எப்போவேணாலும் என்கிட்ட கேட்கலாம்… அப்பறம் இந்த பேட்ச் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது பிரெண்ட்ஸ்… எல்லாரும் என்கிட்ட நல்லா இன்டெரக்ட் பண்ணீங்க… நீங்க எல்லாரும் உங்க கரீயர்ல ஷைன் பண்ண என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என்றார்.

 

பின் அனைவரும் அவரிடம் தனித்தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தனர். 

 

விஷ்வா தான், “என்னடா இப்படி பொசுக்குன்னு டெஸ்ட் இருக்குன்னு சொல்றாரு…” என்றான்.

 

“க்கும்… யாரோ கிளாஸ் ஸ்டார்ட் பண்ண அன்னைக்கு டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணுவேன்னு சீன் போட்டாங்க… உனக்கு அது யாருன்னு தெரியுமா, ஜானு…?” என்றாள் சாக்ஷி.

 

“ஓய் சாக்ஸ்… என்ன கலாய்க்குறியா…”

 

“யாரு டா சாக்ஸ்… நீ தான் டா விக்ஸ்…”

 

ஆதர்ஷ் அவர்கள் இருவரின் சண்டையைத் தடுக்க ஜானு அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதில் கடுப்பான சாக்ஷி, “ஹே ஜானு… நாங்க ரெண்டு பேரும் இங்க காமெடியா பண்ணிட்டு இருக்கோம்… வந்து சண்டைய தடுக்காம எங்கள பார்த்து சிரிச்சுட்டு இருக்க…” என்றாள்.

 

“எப்படியும் நீங்களா சண்டைய நிறுத்துனா தான் உண்டு… இதுல நான் வேற உங்களுக்கு நடுல வந்து என் எனர்ஜி வேஸ்ட்டாகவா…”

 

ஜானுவின் பேச்சைக் கேட்ட மூவரும் அதிர்ந்து நின்றனர். இந்த மூன்று மாதங்களில் அவள் இவ்வளவு உற்சாகமாக பேசியதே இல்லை. சாக்ஷியோ விஷ்வாவோ சண்டையிட்டால் சிரிப்பாள். ஆதர்ஷுடன் பேசும்போது சிறிது புன்னகையிப்பாள். இது மாதிரி கலாய்த்ததெல்லாம் கிடையாது.

 

அப்படி இருந்தவள், திடீரென்று பேசியதும் மூவருக்கும் ஆனந்த அதிர்ச்சி (!!!) தான்.

 

முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த விஷ்வா, “டேய் ஆது, எனக்கென்னமோ இது நம்ம ஜானு இல்லன்னு தோணுது…அவ வேற எனர்ஜின்னு சொல்லிட்டு இருக்கா… எதுக்கும் நெகடிவ் எனர்ஜியான்னு ஒரு தடவ செக் பண்ணு டா…” என்று சிரிக்காமல் சொல்ல, மற்ற இருவரும் சிரித்தனர்.

 

ஜானு விஷ்வாவை முறைத்தவள், தன் கையிலிருந்த புத்தகம் கொண்டு அவன் தலையில் அடித்து, பின் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

 

விதியோ, ‘இது தான் உன் இறுதி சிரிப்பு…’ என்று அவளிற்காக வருத்தப்பட்டது.

 

“ஆமா இன்னிக்கு என்ன உங்க சார் கிட்ட டவுட் கேக்க போகலையா…” – ஆதர்ஷ்.

 

“அதெல்லாம் தனியா போய் அரை மணி நேரம் பேய்ய பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு வருவா…” – சாக்ஷி.

 

“ஹோய் இன்னைக்கு என்ன எல்லாரும் என்ன டார்கெட் பண்ணுறீங்களா…” என்று ஜானு சிணுங்கினாள்… இவளின் சிணுங்களில் ஒருவன் மயங்கி நிற்கிறான் என்பது தெரியாமல்…

 

“டேய் மச்சான்… அவசரத்துக்கு டிஸ்யூ கூட இல்லையே…” என்று விஷ்வா ஆதர்ஷின் காதில் முணுமுணுக்க… அவ்வளவு நேரம் மங்கையவளின் சிணுங்களில் மயக்கம் கொண்டவன், விஷ்வாவை புரியாத பார்வை பார்த்தான்.

 

“என்ன டா சொல்ற…?” என்று குழப்பமாக கேட்க…

 

“இல்ல ஆது… ரொம்ப வழியுதே, தொடச்சு விடலாம்ன்னு பார்த்தா டிஸ்யூ இல்ல… அதான் என் நண்பனுக்கு இது கூட பண்ண முடியலையேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்…” – கடைசி வரியைக் கூறும்போதே விஷ்வா ஓடத் துவங்க, “டேய் நில்லு டா…” என்று கத்திக்கொண்டே அவனை துரத்தினான்.

 

“இதுங்களுக்கு என்ன ஆச்சு இப்போ…” என்று அலுத்துக் கொண்டாள் சாக்ஷி.

 

“சரி நீங்க மூணு பேரும் கேண்டீன்ல வெயிட் பண்ணுங்க… சார் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” என்றாள் ஜானு.

 

அடுத்து அவள் நின்றது கங்காதரின் முன்…

 

“என்ன மா ஜான்வி… இப்போ உன் பயம் குறஞ்சுடுச்சா…” 

 

“ஆமா சார்… இப்போ எனக்கு இருட்ட பார்த்தோ பேய்ய நெனச்சோ பயம் இல்ல… இப்போ தான் ரொம்ப ரிலாக்ஸ்ட்டா ஃபீல் பண்றேன்” என்று சந்தோஷமாகக் கூறினாள்.

 

அவள் பேச பேச அங்கு வானிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தெளிவாக இருந்த வானம் கறுத்து, இடி சத்தம் கூட கேட்டது.

 

ஜானுவோ இதை எதையும் கவனிக்காமல் பேசிக் கொண்டே இருக்க, கங்காதர் இதை கவனித்தார்.

 

அவள் பேசுவதை தடுப்பதற்காக, “ஜான்வி…” என்று சத்தமாக அழைத்தார்.

 

திடீரென்று அவர் கத்தியதில் அதிர்ந்தவள் முழித்துக் கொண்டிருக்க, “க்கும்… வா நடந்துகிட்டே பேசலாம்…” என்றார். அவள் பேச்சு நின்றதும் வானம் மறுபடியும் தெளிவானதைக் கண்டு மனதிற்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

 

அவரின் யோசனையைக் கலைக்கும் விதமாக, இப்போது “சார்…” என்று கத்துவது ஜானுவின் முறையானது.

 

“ம்ம்ம் எஸ்…”

 

“சார் நான் ஒரு கேள்வி கேட்டேன்… நீங்க பதில் சொல்லாம யோசிச்சுட்டு இருந்தீங்க…” என்றாள் தடுமாற்றத்துடன்…

 

“ஓ சாரி… நான் கவனிக்கல ஜான்வி… என்ன கேட்டீங்க…?”

 

“எந்தவித தீய சக்தி… ஐ மீன்… எதிர்மறை ஆற்றலையும் நடுநிலை படுத்துவதற்கான வழிகள் இல்ல கருவிகள் நம்மகிட்ட இருக்கா…”

 

அதில் லேசாக புன்னகைத்தவர், “இப்படி சயின்ஸ் சொல்லுது… ஆனா உண்மை  என்னன்னா… நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு… அது நல்லதாவும் இருக்கலாம்… சில சமயம் கெட்டதாவும் இருக்கலாம்… அத முழுமையா கட்டுப்படுத்துற கருவிகளோ வழிமுறைகளோ நம்மகிட்ட இல்லங்கிறது தான் உண்மை…” என்றார்.

 

“சார்… அப்போ அந்த மாதிரி சக்திய நம்ம எதிர்கொண்டா என்ன பண்ணனும்…?”

 

“முடிஞ்ச அளவு, அந்த மாதிரி சக்திகள எதிர்கொள்ற நிலைமைய உருவாக்கிக்க கூடாது… அதையும் மீறி நடந்துட்டா, நேர்மறை ஆற்றல்…. அதான் கடவுள் மேல நம்பிக்கை வைக்க வேண்டியது தான்…” 

 

பேசிக் கொண்டே அவர்கள் கங்காதரின் ஓய்வறைக்கு வந்திருந்தனர்.

 

“சாரி ஜான்வி… பேசிட்டே இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டேன்…” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே, அவரின் அறையிலிருந்து வெளிவந்தார் அவர்… முதல் நாள் இந்த கல்லூரியில் அடியெடுத்து வைத்தபோது, ஜான்வியின் கைகளைப் பிடித்த முதியவர்.

 

இன்றும் ஹிந்தியில் கத்திக்கொண்டே வந்தார். “யஹாங் சே சலே ஜாவோ…” (இங்கிருந்து சென்றுவிடு) என்றபடி வந்தவரைக் கண்டு பயந்தாள் ஜான்வி.

 

கங்காதர் தான் அவரை பிடித்து, “சாரி ஜான்வி… இவரு என்னோட பிரென்ட்… திடீர்னு ஹைப்பர் ஆகிடுவாறு… உங்கள பயமுறுத்திருந்தா சாரி…” என்று ஜான்வியிடம் கூறினார்.

 

“இட்ஸ் ஓகே சார்…” என்று ஜான்வி கூறினாலும் அவளின் கண்கள் பயத்துடன் அந்த முதியவரை நோக்கியது. “நான் கிளம்புறேன் சார்…” என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து சென்றாள்.

 

அவள் செல்வதை கண்ணில் நீர் வடிய பார்த்திருந்தார் அந்த முதியவர். தன் நண்பரின் செய்கைக்கான காரணம் புரியாமல், அவர் சற்றுமுன் ஜான்வியிடம் கூறியதை யோசித்துக் கொண்டிருந்தார்.

 

இங்கு ஜான்வியோ, அந்த முதியவர் பேசியது புரியாவிட்டாலும் அவரின் உடல்மொழியிலிருந்து தன்னை அங்கிருந்து போகச் சொல்கிறார் என்பது புரிந்தவளாக கிளம்பிவிட்டாள். ஆனால் அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

“ஹே என்னாச்சு ஜானு…?” – ஜானுவின் குழம்பிய முகம் கண்டு சாக்ஷி கேட்க, ஏனோ அங்கு நடந்ததை சொல்ல விரும்பாமல், ‘ஒன்றும் இல்லை’ என்று தலையாட்டி விட்டாள்.

 

அவள் அங்கு செல்லும்போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடத்தில் இல்லை என்பது அம்மூவருக்கும் தெரிந்தாலும், மேலும் கேட்டு அவளை தொல்லை செய்ய விரும்பாமல், ஏதேதோ பேசி அவளை அதிலிருந்து மீட்டனர்.

 

பின் எப்போதும் போல், ஊர் சுற்றிவிட்டு டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தனர். அன்று வழக்கமாக அவர்கள் செல்லும் வழியில் செப்பனிடும் பணி நடப்பதால், வேறு வழியில் சென்றனர்.

 

அவ்வழியில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் ஊர்ந்து கொண்டே சென்றன.

 

“ப்ச் என்னடா இது இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ லேட்டாகுது…” என்று விஷ்வா சலிப்புடன் கூறினான்.

 

“இந்த வழில வந்தா எப்பவும் இதே தொல்லை தான் தம்பி…” என்று அந்த டாக்ஸி ஓட்டுனரும் கூறினார்.

 

“அண்ணா நீங்க தமிழா…” என்று வினவினான் ஆதர்ஷ்.

 

“ஆமா தம்பி… பத்து வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல இருந்து இங்க வந்தேன்… இப்போ வரைக்கும் இங்க தான்…” என்று அவரின் சொந்த கதை சோகக் கதையை கூற, அந்நால்வருக்கும் நேரம் போனது.

 

அப்போது அவர்களின் வண்டி நகர்ந்து ஒரு எரிந்த கட்டிடத்திற்கு அருகே நின்றது. எதச்சையாக திரும்பிய ஜானு அங்கு கண்டது, ‘BlueMoon’ என்று தொங்கிக் கொண்டிருந்த  பெயர் பலகையை. அதைக் கண்டதும் அவளிற்கு அந்த பெயரை எங்கோ கேட்ட நியாபகம்…

 

“அண்ணா என்ன இது எரிஞ்சு போன கட்டிடமா இருக்கு…” என்று சாக்ஷி கேட்டாள்.

 

“இது தான் ப்ளூ மூன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்… பத்து வருஷத்துக்கு முன்னாடி இங்க தான் சினிமா நடிகர்களெல்லாம் பார்ட்டி பண்ணுவங்களாம்… அப்பறம் ஏதோ காரணத்தினால் தீ பிடிச்சு எரிஞ்சுடுச்சாம்…” என்று விளக்கினார்.

 

அவர் கூறிய முதல் வரியிலேயே ஜானு அதிர்ச்சியடைந்து விட்டாள்.

 

‘இந்த ஹோட்டல்ல தான நிஷா வேலை பாக்குறேன்னு சொன்னா… பத்து வருஷத்துக்கு முன்னாடியே எரிஞ்சுருச்சுன்னா அவ எப்படி இப்போ வேலை பார்ப்பா…’ என்று அவள் மனதில் தோன்ற, அந்த கேரளப் பெண்கள் நான்காவது மாடிக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியதும் அப்போது நியாபகம் வந்தது.

 

அவளின் மூளை கூறிய தகவல்களையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்க்கும்போது, நிஷா யாரென்ற உண்மை விளங்கியது. ஆனால் அந்த உண்மையை நினைக்கும்போது தான் அவளின் உடம்பு நடுங்கியது.

 

அருகில் அமர்ந்திருந்த சாக்ஷி, அவளின் நடுக்கத்தை உணர்ந்து மற்றவர்களிடம் தெரிவிக்க நினைக்கையில், அவளின் கைப்பிடித்து தடுத்த ஜானு வேண்டாம் என்று கண்களாலேயே கெஞ்சினாள்.

 

ஜானுவிற்கு, எதற்கும் விடுதி சென்று ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளும் எண்ணம். அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை தான் இத்தனை நாட்களாக பேசிக் கொண்டிருந்தது ஒரு பேயிடம் என்று… எதிர்மறை ஆற்றல் என்று சொல்ல வேண்டுமோ…

 

*********

 

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை…

 

இத்தனை வருடங்கள் கண்மூடி எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் படுத்திருந்தவனின் கருமணிகள் கண்களினுள்ளே அசைந்தன. அவன் மெல்லிய குரலில் ஏதோ முணுமுணுத்தான்.

 

அதைக் கவனித்த செவிலி, “டாக்டர், ஹி இஸ் ரீகேயினிங் கான்சியஸ்னெஸ்…” என்றாள் மகிழ்ச்சியுடன்.

 

அமானுஷ்யம் தொடரும்….

 

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

போனகாட் பங்களா (Bonacaud bungalow, Kerala)

அடுத்து நாம் செல்ல… இல்லை பார்க்கப் போகும் இடம் கேரளாவில் உள்ள போனகாட் பங்களா. கேரளா என்றாலே நினைவிற்கு வருவது பசுமையே… எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென்ற காட்சிகளை காணலாம். அப்படி ஒரு இடம் தான் அகஸ்தியர் மலை தொடர்களில் அமைந்துள்ள இந்த போனகாட் பங்களா.

 

இந்த பங்களா, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பும் அவர்களின் கட்டிட கலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. காலையில் இதன் அழகைப் புகழ்பவர்கள், இரவு நேரத்தில் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்களாம்.

 

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இப்பகுதி பரந்து விரிந்த தேயிலை தோட்டத்திற்கு பிரபலமாக இருந்தது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயம், இந்த பங்களாவிற்கு சொந்தமானவரின் குழந்தை இறந்து விட்டதாகக் கூறுகின்றனர். அந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த குழந்தையின் குடும்பத்தினரும் லண்டன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

 

அன்றிலிருந்து அந்த பங்களாவில் அந்த குழந்தையின் நடமாட்டம் இருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர். மேலும் இரவு நேரத்தில், கண்ணாடி உடையும் சத்தமும், குழந்தையின் அலறல் சத்தமும் கேட்பதாகக் கூறுகின்றனர்.

 

உண்மையிலேயே அந்த போனகாட்பங்களா, பேய் பங்களாவா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…