மீனம்மா… மீனு வாங்க போலாமா?

மீனம்மா… மீனு வாங்க போலாமா!

 

இன்னும் இருள் பிரியாத விடியல் காலை, நேரம் நான்கு மணி அந்த நீல கடலுக்கு அப்பால் செஞ்சூரியன் தலை காட்டுவதற்கு முன்னேற்பாடாக வானமகள் செந்நிறம் பூசிக் கொண்டிருந்தாள். கண் கொள்ளா காட்சி தான், ஆனால் இப்பொழுது அங்கிருக்கும் மக்களுக்கு அதை நின்று ரசிப்பதற்கான நேரமில்லை.

அது சென்னை ராயபுரம் காசிமேடு மீன்பிடிப்பு பகுதி. ஒரு புறம் மீன் பிடிக்க சென்ற பெரிய பெரிய கப்பல்கள் சிறிய படகுகள் எல்லாம் அந்த கடலின் நடுவில் போடப்பட்டிருந்த பாலத்திற்கு இருப்புறமும் கரை ஒதுங்க, ஆண்கள் பட்டாளம் வலைகளில் சிக்கியிருந்த மீன்களை வகை வகையாக பிரித்து ஐஸ் கட்டிகள் நிரம்பி இருந்த மரப்பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருக்க, சிலர் நிரம்பிய பெட்டிகளில் மேலும் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு மீன் ஏலம் விடும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பெட்டி பெட்டியாக மீன்கள் ஏலம் விடப்படும். ஏலத்தில் எடுக்கப்பட்ட மீன்கள் தான் தினசரி வியாபாரத்திற்கு விற்கப்படும். ஒரு சிலர் அங்கு உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களை விற்க, சிலர் பெரிய பெரிய குண்டாக்களில் வாங்கிய ஒரு சில வகையான மீன்களை மட்டும் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார்கள், தெருக்களில் சென்று விற்பதற்காக.

அன்று ஞாயிற்றுக்கிழமை பொதுவாக வார நாட்களை விட வார இறுதி நாள் தான் காசிமேடு மீன் மார்க்கெட் ஜெகஜோதியாக இருக்கும். காலை ஆறு மணிக்கெல்லாம் மக்கள் கூட ஆரம்பித்துவிடுவார்கள். மீன்களின் பச்சை வாடைக்கு மத்தியில் மீன்களின் பெயர்கள் ஒரு பக்கம் கேட்டுக்கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் மக்கள் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். 

பெரும்பாலும் நேரடியாக காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவது சற்று லாபகரமான விஷயம் தான் மீன்களும் ஃபிரஷ்ஷாக கிடைக்கும். அங்கே அதனை வெட்டி சுத்தம் செய்தும் கொடுத்துவிடுவார்கள். அதற்கு தனி விலை உண்டு தான் எனினும் மீன் துண்டங்கள் அத்தனை கச்சிதமாக இருக்கும்.

முதல் தரமான மீன்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட் வியாபாரம் இருக்க நம் வீட்டு வாசலுக்கே வந்து மீன் விற்கும் பெண்களும் உள்ளனர். காசிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு எல்லாம் மீன் விநியோகம் இவர்கள் மூலம் தான் நடைபெறுகிறது.

ஒரு சிலர் சிறு சிறு மார்க்கெட் ஏரியாக்களில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு விற்பனை செய்வார்கள், ஒரு சிலர் அந்த மார்க்கெட் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அங்கு கடையைப் போட்டுவிடுவார்கள். 

இதில் மிகவும் சிரமமான சவாலான வேலை என்றால் அது தலையில் பாரத்துடன் வீதி வீதியாக நடந்து சென்று கூவி கூவி விற்கும் பெண்களின் நிலைதான். அவர்கள் வியாபாரத்திற்குச் செல்லும் அனைத்து நாட்களிலும் லாபம் கிடைத்து விடுமா என்று கேட்டால் கேள்விக்குறிதான். 

ஏசி ஷோரும்களில் விலைபேச வெட்கப்பட்டு அவன் கொடுக்கும் விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் நாம், உச்சிவெயிலில் தேய்ந்த செருப்பும் நிறம் மங்கிய புடவையுடன் ஒரு நாள் வயிற்றுப் பிழைப்பிற்காக வியாபாரம் செய்பவர்களிடம் வெட்கமே இன்றி பேரம் பேசுகிறோம். இதில் என்னை ஏமாற்றி விட முடியுமா! என்று ஒரு பெருமை வேறு பேசுவோம். நாம் குறைத்து கேட்கும் ஒவ்வொரு ரூபாயும் அந்த ஜீவனின் ஒரு வேளை சாப்பாட்டையோ அல்லது அந்த ஜீவனின் வீட்டிலுள்ள முதியவரின் மருத்துவ செலவிலோ பள்ளி கல்லூரியில் பயிலும் பிள்ளைகளின் அத்தியாவசிய செலவிலோ, துண்டு விழுவது உறுதி.

அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தி தான் நம் மீனம்மா, மீனாட்சி வடசென்னைக்கே உரிய சர்வ லட்சணங்களும் பொருந்திய இளம்பெண். படிக்க ஆசைதான் ஆனால், இளம் வயதில் குடிக்கு அடிமையாகிய ஒருவனை மணந்து, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த அன்னை இவள் பத்தாம் வகுப்பு பாதியில் இருக்கும் போதே இறந்து விட, இப்பொழுது அந்த குடிமகனுக்கு உழைத்துக் கொட்டுவது, தந்தை வழிபாட்டியின் மருத்துவ செலவு, வீட்டு செலவு என அனைத்தும் இவள் பொறுப்பில். அதுவரையில் வீட்டு வாடகை என்பது இல்லாமல் குடிசை மாற்று வாரியம் கட்டிக்கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.   

அன்றைய வியாபாரத்தை முடித்துவிட்டு மீனா வீடு வரும் பொழுது நேரம் மதியம் இரண்டு. வீட்டிற்குள் இவள் நுழையும் போதே வழி மரித்தார் அந்த கடமை தவறா குடிமகன். அவருக்காகவே கையில் வைத்திருந்த இருநூறு ரூபாய் நோட்டை தூக்கி எறிந்துவிட்டு அவள் உள்ள சென்று விட, அதையும் பொறுக்கி கொண்டு சென்று விட்டார் அவர் மீனாவின் தந்தை. இத்துடன் மாலை ஆறு மணிக்கு தான் அவரின் தொல்லை அதுவரையில் நிம்மதி தான்.

வேக வேகமாக ஒரு குளியலை போட்டு வியாபாரத்திற்கு போக மீதி இருந்த மீனை வைத்து குழம்பு வைத்தவள், சோற்றை வடித்து நிமிர்த்தினாள்‌. சமையல் வேலை முடித்து வீட்டை ஒதுக்கி சுத்தம் செய்து, ஹப்பாடா என்று அவள் நிமிரும் போது மணி நான்கு.  

வடித்த சோற்றில் சிறிது குழம்பை ஊற்றி குழைய பிசைந்தவள் முள் இல்லாமல் மீனை பிட்டு பாட்டிக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டு முடித்து, ஓய்வுக்கு கெஞ்சிய உடலை சற்று சாய்க்கலாம் என போகும் நேரம் வந்தது அவளுக்கு அழைப்பு. 

“மீனாயீ…” ஒரு பொடியனின் குரல். மீனாட்சிக்கு வந்த கோவத்திற்கு அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து வீசியிருந்தாள்.

“எடு செருப்ப, பன்னாடை பயலே, எத்தனை தபா சொல்லி இருக்கேன் அப்டி கூப்டாதனு, கேக்கவே மாட்டியா நீ?” இவள் கடுப்பாக கத்த,

“உன் ஆயா உன்ன அப்புடி தான கூப்புடுது அப்போ நானும் அப்புடி தான் கூப்பிடுவேன் மீனாயீ…” அவள் கோவத்தை அவன் கண்டு கொள்வதாக இல்லை.

“குருட்டு பயலே, அதுக்கு வாய்ல பல்ளெல்லாம் கொட்டி போய் பொக்கையா கெடக்கு. அதனால அப்புடி கூப்பிடுது. உனக்கு என்ன கேடு வந்து தொலச்சிது.” அதே கடுப்புடன் அவள் கத்த,

அவன் அவளை விடுவதாக இல்லை. “அதெல்லாம் இல்ல நீ மீனாயீ தான்…” 

இம்முறை அவள் சிரிப்புடன், “சரிடா மூக்குறுஞ்சி, சொல்லு எதுக்கு கூப்ட?” மீனா ஃபார்முக்கு வந்திருந்தாள்.

“அக்காவ் என் பேரு முகேஷ்…” பொடியன் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான்.

“ஆமாடா மூக்குறுஞ்சி, ராத்திரில முக்கா பான்ட்ல மூச்சா போறவங்களுக்கு பேரு முகேஷ் தான்.” இவள் சொல்லி முடித்தது தான் தாமதம், அந்த பன்னிரண்டு வயது பொடுசு மூக்கை உறிந்து கொண்டே ஓடி இருந்தது வெளியே.

இந்த துடுப்பு சென்று அடுத்து ஒரு உலக்கையை கூட்டிக்கொண்டு வரும் என்று இவளுக்கு தெரியும். அவ்வளவு தான் இன்றைய பகல் தூக்கத்திற்கு ஆப்பு வந்து கொண்டே இருக்கும். எழுந்து சென்று முகம் கழுவியவள், டீ போட பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினாள்.

டீயுடன் இவள் அமரவும், லேசாக சாற்றி இருந்த கதவை டமார் என தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தனர். உலக்கையும் துடுப்பும் வந்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இவள் டீ குடித்துக் கொண்டிருக்க, வந்தவர்களும் இவளைக் கண்டுகொள்ளவில்லை.

நேராக அடுக்கலைக்குள் சென்றவர்கள் இவள் மீன் குழம்பை சட்டியுடன் தூக்கி சென்று விட்டனர். சட்டி குழம்புக்கு தான் இத்தனை அலப்பறை. இவளுக்கு சிரிப்புதான் வந்தது. 

இவளும் டீயுடன் எழுந்து பக்கத்துக்கு வீட்டிற்கு செல்ல, உலக்கையும் துடுப்பும் ஒரு பெரிய பாத்திரத்தில் முதலில் இட்லியை போட்டு பிறகு சட்டினி சாம்பாரை ஊற்றி, அதை ரவா உப்புமா ரேஞ்சுக்கு பிசைந்து பிறகு, அதனை உருண்டை பிடித்து அதில் இவளின் மீன் குழம்பை ஊற்றி ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அது இருவருக்கும் மாலை நேர சிற்றுண்டி. 

இவள் அமைதியாகச் சென்று உலக்கையின் அருகில் அமர்ந்து கொள்ள, துடுப்பாக பட்டவன், “மதன் அண்ணே, இந்த மீனாயீ என்ன மூக்குறிஞ்சினு கூப்புடறா என்னனு கேளு.” பொடுசு பெருசிடம் புகார் வாசித்தது. பாவம் சின்னவன் மீனாவின் ஒற்றை பார்வைக்கே உலக்கை அவளின் அல்லக்கை ஆகிடும் என்ற உண்மை அறியாமல் பேசி கொண்டிருந்தான்.     

“டேய், யாரு இங்க மதன்? அவன் பேரு மருதமலை. ஒன்னு மருதுன்னு கூப்புடு இல்ல மலைன்னு கூப்புடு, அது என்ன மதன் யாரு சொன்ன உனக்கு?” மீனாட்சி என்ற அவளின் அழகான பெயரை அசிங்க படுத்திய கடுப்பில் கேட்க,

“இதோ இம்புட்டு அழகா உன் பக்கத்துல இருக்குதே என் அண்ணன் அதுதான் மதன், மதன் குமார் உனக்கு தெரியாதா, இல்ல தெரிஞ்சும் இவ்ளோ அழகான பேரு உனக்கு யாரும் வெக்கலன்னு போறாமைல பேசுறிய மீனாயீ…” இப்பொழுதும் அவளையே அவன் சீண்ட,

“ஆமா மாமிச மலை கணக்கா இருக்க உன் நொண்ணனுக்கு மதன் குமாரூனு பேரு தான் இப்போ கேடு.” என கத்தி கொண்டே காலி டீ கிளாஸுடன் எழுந்தவள், போகிற போக்கில் மதன்குமார் ஆக பட்டவனை ஒரு எத்து எத்திவிட்டு சென்றாள்.

சாப்பிட்டு முடித்த ஈரக்கையைக் கொண்டு மீசையை முறுக்கியவனின் உதடுகளில் வெட்கச்சிரிப்பு. அவனின் மீனம்மா வெளக்குமாறைக் கொண்டு விளாசினாலும் அவனுக்கு அது காதல் பரிசு தான் அப்போது வெட்க சிரிப்பும் நியாயம் தானே. 

அவனின் மீனு குட்டி அவனுடன் பேசி முழுதாக ஒரு மாதம் ஆகி விட்டது. இவளிடம் பணம் இல்லாத சமயம் இவளின் தந்தைக்கு இவன் பணம் கொடுத்துவிட்டதால் வந்த பஞ்சாயத்து. 

இவனும் ஏரியாவில் இவனுக்கு தெரிந்த அக்கா முதல் அந்த அக்காளின் குழந்தை வரை தூது அனுப்பி வைத்து விட்டான். அவள் சாமதானம் ஆவது போல் தெரியவில்லை. இப்பொழுது இறுதி முயற்சியாக முகேஷை அனுப்ப, இதோ தேவதை வீடு வரை வந்து இப்போது வரமும் தந்து விட்டது. இனி முன்போல் இல்லாவிட்டாலும் சிறிது சமாதனம் ஆகிவிட்டாள் அது போதும் அவனுக்கு.

அவன் மருதமலை. அப்பா, அம்மா இல்லை, போய் சேர்ந்து விட்டார்கள். இப்போதைக்கு அவனின் மீனம்மா மட்டுமே அவனின் ஒரே உறவு, ஆறுதல் எல்லாம்.

இந்த வருடம் ஆவது அவளை சமாதனம் செய்து திருமணம் செய்து விட வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறான். இனி எல்லாம் அவள் கையில் தான்.

மறுநாள் மீனா வியாபாரத்திற்கு சென்றிருந்தாள். சென்ற இடத்தில் திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி‌. நின்ற இடத்திலேயே மீனா சுருண்டு அமர்ந்து விட்டாள். நல்ல வேளையாக இன்று எதற்கும் இருக்கட்டுமே என்று கைப்பேசியை கொண்டு வந்திருந்தாள். 

அதிலிருந்து அவளின் ‌மாமிசமலைக்கு அழைத்து, அவள் இருந்த ஏரியாவின் பெயரை சொல்லி அவனை அழைத்திருந்தாள்.

அவன் என்னவோ ஏதோ என‌ அடித்து பிடித்து பைக்கில் இவள் இருக்கும் இடம் வந்து சேர்ந்திருந்தான்‌.

அடிவயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டு, அந்த சாலையோரம் கண்கள் கலங்க அவள் அமர்ந்திருந்த கோலம் அவன் மனதை அழுத்தியது‌. பைக்கை அப்படியே விட்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

அவன் அவள் அருகில் மண்டி இட்டு அமரவும்‌, அவன் மார்புகுள் ஒளிந்து கொண்டவள், “பாத்ரூம் போகணும் மாமா, வயித்த வலி உசுரு போகுது கொஞ்ச‌ அசஞ்சாலும் என்னை மீறி…” அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை.

அவனுக்கு ‌புரிந்தது. ஆக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டினான், இவனின்‌ உருவத்தை கண்டு யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.

என்ன‌ செய்வது என்று தெரியாமல் அந்த தெருவில் சுற்றி முற்றி பார்க்க, ஒரு சிறு க்ளீனிக் தென்பட்டது. சிறிதும் யோசிக்காமல் ‌அவளைத் தூக்கி கொண்டு அவன் அந்த ‌க்ளீனிக் பணியைத் தாண்டும் முன்னே அவள் அத்தனை நேரம் அடக்கி‌ வைத்திருந்த சிறுநீர் அவளை மீறி அவனையும் நனைத்துக்கொண்டு வெளியேற துவங்கியிருந்தது.

“மாமா என்னால முடிலடா…” அவள் அவன்‌ மார்பில் முகம் புதைத்து தேம்பி தேம்பி‌ அழ துவங்கிவிட்டாள். மிகவும் அவமானமாக இருந்தது.

மருதமலை‌ நின்ற இடத்தில் இருந்து சிறிதும் அசையவில்லை. அவன்‌ உடையை நனைத்து சென்ற‌ அந்த அசுத்த நீரைக் காட்டிலும்‌, இப்பொழுது அவன் மனதை நனைத்து கொண்டிருக்கும் அவளின் விழி நீர் தான் அவனை அசைத்து பார்த்தது.

அவன் நகர்ந்தால் அந்த இடம் முழுவதும் அசுத்தம் ஆகிவிடும். தேக்கி வைத்த நீரெல்லாம் வடியட்டும் என பொறுமை காத்தான்.

பிறகு பொறுமையாக அவளை அந்த க்ளீனிக்கில் உள்ள பாத்ரூமில் கொண்டு சென்று விட்டவன் அவள் முகத்தைப் பார்க்காமல் வெளியேறிவிட்டான்.

அவனுக்குத் தெரியும் அவள் முகத்தை பார்த்து அவளிடம் என்ன சமாதானம் பேச முயன்றாலும் அது அவளை கூனிக்குறுக செய்யும். இப்பொழுது அவளுக்கு சிறிது தனிமை தேவை என நினைத்தவன் வெளியே வந்துவிட்டான்.

அவள் வெளியே வருவதற்கு முன் அசுத்தமான இடத்தை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தவன், அவனையும் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

நினைத்துப்பார்க்கவே மனது நடுங்கியது. அவன் வருவதற்கு சிறிது தாமதித்து இருந்தாலும் நடுரோட்டில் தன்னவளின் நிலை என்னவாகியிருக்கும் என நினைக்கும் போதே அந்த உணர்ச்சியை என்னவென்று வெளியே சொல்ல முடியவில்லை. உடலெல்லாம் ஒரு மாதிரியாக நடுங்கியது. என்ன மனிதர்கள் இவர்கள் ஒரு ஆத்திர அவசரத்திற்கு ஒரு பெண்‌ ஒதுங்க கூட அனுமதிக்கமாட்டேன் என்கிறார்கள் என நினைக்கும் போதே‌, அனைவரையும் கடலில் தூக்கிபோட‌ வேண்டும் போல் இருந்தது.

பிறகு அந்த க்ளினிக்கிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி. அடக்கி வைத்திருந்த சிறுநீர் எல்லாம் வெளியாகி இருந்தாலும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. டெஸ்ட் செய்து பார்த்ததில் கிட்னியில் கல் ஏற்பட்டிருந்தது. இப்படியாக வியாபாரத்திற்கு செல்லும் பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்காமல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அதனை அடக்கி வைத்து அடக்கி வைத்தே இப்படியான உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. 

மூன்று நாட்களுக்கு பிறகு ‌மீனாட்சி‌ வீடு திரும்பியிருந்தாள். வந்த அன்று வீட்டுக்குள் சென்றவள் தான் அதற்கு அடுத்து மருதுவிடம் பேசுவதே இல்லை. அவன் வந்து எத்தனை பேச்சு கொடுத்தாலும், அவள் அவனிடம் பேச மறுத்தாள். என்னவோ அன்றைய சம்பவத்திற்குப் பிறகு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட பெண் கூசி போனது.

அவனும் சிறிது விட்டுப் பிடிக்கலாம் என்று பார்த்தால், பெண் அதற்கு சரிப்பட்டு வருவது போல் இல்லை. இப்படியே இரண்டு மாதம் சென்ற நிலையில் ஒருநாள் திடீரென வீட்டிற்கு வந்தவன். மறுநாள் காலையில் அவளுக்கும் அவனுக்கும் திருமணம் என்ற செய்தியை அறிவித்துவிட்டு சென்றிருந்தான்.

உடன் திருமணத்துக்கான புடவையையும் நகைகளையும் அவளிடம் வீசிவிட்டு சென்றிருந்தான். என்ன காரணம் என்று அவளுக்கு புரியவில்லை. எப்போதும் போல் அவளின் தந்தை குடி போதையில் உளறி இருந்தார். ‘இவள் இப்படியே தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தால் தனக்கு குடிப்பதற்கு யார் பணம் தருவார்கள். அதனால் இவளை விற்று விட்டேன்’ என இவளுக்கு நெஞ்சே நின்று‌விட்டது.‌ இப்படியும் ஒருவனா? ச்சே வெறுத்துப் போனது அவளுக்கு.

மறுநாள் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கிளம்பி நின்றாள் மீனாட்சி. அவள் பாட்டியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவள், மருதுவுடன் அமைதியாக திருமணம் நடக்கும் கோவிலுக்கு சென்றாள். அங்கு அவர்கள் ஏரியாவில் இருவருக்கும் நெருக்கமானவர்களை மட்டும் வைத்து மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றிருந்தது. அவன் முகத்தை மட்டும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.

திருமணம் முடிந்து, வந்திருந்த இருபது பேருக்கு மட்டும் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் காலை உணவை வாங்கி கொடுத்துவிட்டு, அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டவன் வெளியே சென்று விட்டான். 

அவளிடம் பேசவே இல்லை. அவளுக்கு புரிந்தது இத்தனை நாள் இவள் பேசாமல் இருந்ததற்கு பழி வாங்குகிறானாம். இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டாள். வெளியே போன வேகத்தில் மீண்டும் வந்தவன், அவளுக்கு மட்டும் பிரியாணி வாங்கி வந்திருப்பான் போல, எங்கோ பார்த்து கொண்டு அவளிடம் நீட்ட. அவள் அதை வாங்கிக் கொள்ளவில்லை. என்ன என்பது போல் இவன் அவள் முகத்தை பார்க்க, மீனாட்சி மாமிச மலையின் மீது பாய்ந்திருந்தாள்.

“சாரி மாமா, அன்னைக்கு சத்தியமா வேணும்னு…” என்ன கூற வந்தாளோ தெரியாது. அவன் மீது படர்ந்திருந்த அவளை விலக்கி. பளார் என்று அறைந்திருந்தான்‌.

அவனிடமிருந்து மீனாட்சி எதை எதிர்பார்த்து இருந்தாலும், இந்த அடியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

 அதிர்ந்து போய் அவன் முகத்தை காண. “என்னடி நெனச்சிட்டு இருக்க கல்யாணம் ஆனதும் வைத்த நெரப்பி பொண்டாட்டி மசக்கைல வாந்தி எடுக்கிறத தாங்கறது மட்டும் தான் புருஷனா? அது மட்டும் தான் காதலா? இதுவும் காதல்தான் உன்னோட அறிவு கெட்ட புத்திக்கு இதெல்லாம் எங்க இருந்து புரிய போது.” என்று கடுப்பில் கத்தியவன், அதிர்ந்து நின்ற அவளை இழுத்து இப்போது அவன் அணைத்து இருந்தான். 

அறைந்த கன்னத்தில் இதமாக இதழை ஒற்றியவன், “அதையெல்லாம் நான் தப்பா நினைப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம். அன்னைக்கு மட்டும் நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகிருந்தா நீ என்ன ஆயிருப்பனு நினைக்க எனக்கு உசுரு துடிச்சி போச்சு தெரியுமா? ஆனா நீ என்னை தப்ப நினைச்சிட்ட இல்லை. அவ்வளவுதான் இத்தனை வருஷத்துல நீ என்னை புரிஞ்சுக்கிட்டது இல்லை. என்னோட காதல் அவ்வளவு தானு நினைச்சுட்டியா. நான் படிக்காதவன் தான். தற்குறி தான். அதுக்காக ஒரு பொண்ணோட ஆத்திர அவசரத்த கூட புரிஞ்சிக்க முடியாத பைத்தியக்காரன் கிடையாது‌டி.” என்று ஆவேசமாக பேசியவன் அவளுக்கு அவனின் காதலை புரிய வைக்க ஆரம்பித்திருந்தான்.

கணவனின் புதிய பரிமாணத்தில்,‌ அவன் காட்டிய காதலின் புதிய அவதாரத்தில், மீனாட்சி கரைந்து காணாமல் போனாள். அவள் கண் விழித்து பார்க்கும்போது மாலை ஆகி இருந்தது.

எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு வந்தவளை அலேக்காக தூக்கியவன், “மீனம்மா மீனம்மா மீனு வாங்க போலாமா…” என்று பாட, 

“ஐயோ மாமா அது கண்ணம்மா.” வெக்கத்தில் சிணுங்கினாள் மீனம்மா.

***