மென்சாரலில் நின்வண்ணமோ!? (1)

images (17)-641b239d

                                  சாரல்-1

ஹே ஹோ ஹூம்… ல ல லா…
பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை
பொழுது
வானமகள், நாணுகிறாள்
வேறு உடை, பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை
பொழுது
ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ…
ம்ம்ம்…

துள்ளலாய் செவி நிறைக்கும் எஸ்.பி.பியின் குரலில் தாமாய் மலர்ந்தது அதியின் இதழ்கள் இரண்டும்.

எத்தனை பொருத்தமான பாடல்?! ஒரு முறை சன்னல் வழியாய் வெளியே பார்த்துக்கொண்டான். உண்மையிலேயே அது ஒரு பொன்மாலைப் பொழுதுதான்.

வானமகள் கொஞ்சம் கொஞ்சமாய்.. மஞ்சள் ரேகைகளினூடே ஊடுருவிய இளஞ்சிவப்பு கோடுகளுடன் கூடிய உடைக்கு மாறிக்கொண்டிருந்தாள்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்து கிடந்த கடலரசியில் கண்கள் மென்மையாய் படிந்து மீண்டன..
பாடலின் இதம் பழைய நினைவுகள் அனைத்தையும் மெல்ல தட்டியெழுப்பிக்கொண்டிருந்தது.

நகர்ந்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வெளியை வெறித்திருந்தவனின் பார்வையில் கடற்கரையை கடக்கிறோம் என்ற எண்ணம் விழுந்த கணம் வண்டியை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டான்.

“அண்ணா! இங்கயே நிறுத்திக்குங்க..” என்றவனின் குரலில் சந்தேகப்பார்வையுடன் ஓட்டுனர் இருக்கையில் இருந்த மனிதரின் கவனம் திரும்பியது.

“இங்கயேவா..” என்று வாய் கேட்டாலும் வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தியிருந்தார் அவர்.

ஆமென்பதாய் தலையசைத்துவிட்டு இறங்கியவனோ பர்சிலிருந்து ட்ராப் லொகேஷனுக்குண்டான பணத்தை எடுத்து கொடுக்க சிறு சங்கடப்பார்வையுடன் அதை பெற்றுக் கொண்டார் அவர்.

பின்னே, அவன் வண்டியில் ஏறி இருபது நிமிடங்கள்கூட இருக்காது. அவன் புக் செய்திருந்த ட்ராப்பிங் லொகேஷனுக்கோ இன்னும்.. தோராயமாய் முக்கால் மணி நேரப் பயணம்.

அப்படியிருக்கையில்..ஏறியதில் இருந்து சிநேகபாவத்துடன் பேசி வந்தவனிடம் இதை வாங்க மனம் வருந்தினாலும்..அவருக்கும் வேறு வழியில்லையே! அது அவரது கடமையல்லவா! வாங்கிக்கொண்டார்.

தனது தோள்பையுடன் கீழிறங்கியவன் கதவை அடைத்துவிட்டு ட்ரைவர் ஸீட்டிற்கு பக்கத்து ஸீட் சன்னல் அருகே குனிந்தான்.
அவர் கேள்வியாய் நோக்க அவனோ,

“இரசனையான மனுஷண்ணா நீங்க!!” என்று புன்னகை பூக்க உரைத்தவன் அவர் முகம் மலர்வதைக் கண்டுவிட்டு திரும்பி நடந்தான்.

அவன் பாராட்டின் காரணம் பாடல்கள் என்பதை உணர்ந்தவரின் உள்ளமோ சாரலில் நனையும் பறவையாய் சிலிர்த்தது. அவரும்தான் தினம் தினம் எத்தனையோ வகை மக்களுடன் பயணிக்கிறாரே! இவனைப்போல் ஒருவனை.. அதிகம் பேசியிராவிட்டாலும் அதி அவரை கவர்ந்திருந்தான். அண்ணா என்றவன் குரலில் ஒலிக்கும் மென்மை அவரை கவர்ந்திருந்தது. போதாக்குறைக்கு மனம் திறந்த பாராட்டு வேறு! வேறென்ன வேண்டும்? மனித மனம் மகிழ்வுற.. சிற்சிறு பாராட்டுக்கள்தானே வாழ்வை வண்ணமயமாக்குகிறது.

உள்ளம் கனிந்ததில் இதழ் விரிந்திட நடந்துச் செல்லும் அவனையே ஒரு முழு நிமிடம் கவனித்தவர் பின் வண்டியை கிளப்பினார்.

பாதங்கள் இரண்டும் மணலில் புதைய புதைய நடந்தவனினுள்ளோ அழையா விருந்தாளியாய் சில நினைவுகள்.. கனவுகளாய் மாறிய நினைவுகள்..!!

கடல் மணலில் மாளிகை கட்டிவிடும் முயற்சியில் மணலை குவித்து விளையாடும் பிஞ்சுக் கைகளும்.. ஆங்காங்கே தென்படும்..கடலை வெறித்தபடி கடலைப் போட்டுக்கொண்டிருந்த காதல் ஜோடிகளும்.. கேலியும் கூச்சலுமாய் நண்பர் கூட்டங்களும்.. கிடைத்த நேரத்தில் மனைவி மக்களுடன் நேரம் செலவிடும் முயற்சியில் சிலரும்.. கடலலையில் கால் நனைத்து குழந்தை பருவத்தை ரீவைண்ட் செய்ய முயலும் சிலரும்.. இவர்களாவது வாங்கிவிட மாட்டார்களா? என்ற நம்பிக்கையை கையில் பிடித்துக் கொண்டு.. பல கனவுகளை நெஞ்சில் சுமந்து வரும் சுண்டல் விற்பனையாளர்களும்.. பூவாசத்துடன் கலந்த வேர்வை வாசத்துடன் பூக்கூடையை சுமக்கும் பெண்களுமென.. அவனைச்சுற்றித்தான் எத்தனை எத்தனை மனிதர்கள்? சகலத்திலும் சில கணங்கள் அவன் கவனம் பதிந்தாலும், ஆட்கள் அதிகமில்லாத இடத்தில்.. கரையில் இருந்து சில அடிகள் தொலைவில்.. மணலை சேர்த்துக் கொண்டு வந்து அவனை தழுவும் காற்றை சுவாசித்தபடியே அமர்ந்திருந்தான்.

அவனது ரெஃப்ரிஜிரேட்டர் வாழ்க்கைக்கு நேரெதிரான சூழல் அவனை ஈர்க்கத்தான் செய்தது. ஏஸி அறையில்..கை நிறைய சம்பளத்துடன் வேலை என்று வெளியில் பெருமையாய் சொல்லிக் கொண்டாலும்.. ஏஸிக்காற்று மெல்ல மெல்ல அவனை உறைய வைத்துக் கொண்டிருந்தது. ஊசி குத்தும் குளிர்காற்றின் வலியைப்போல..

எப்பொழுதாவது அவளை நினைவான்..

அவளும் இதோ.. இந்த ஆர்பரிக்கும் ஆழியைப்போலத்தான். இன்றுவரையிலும்.. அவனால் தீர்க்க முடியாத புதிராகவே இருக்கிறாள்..

கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீலப் போர்வை ஒன்றை உதறுவதைப்போல.. அவ்வப்பொழுது கரையை தொட்டு முத்தமிட்டுச் செல்லும் அலைகளும்.. தூரத்தில்.. ஆழிக்குள் அமிழும் மஞ்சள் வானும்.. அவனுக்கு அந்த ‘பொன்மாலைப் பொழுதை’ நினைவூட்டின.

அவள் மேகா..மேகராகா..!!

இப்பொழுதும் அப்பெயருக்கான.. அவளுரைத்த அர்த்தம் நினைவிருக்கிறது அதிக்கு. மேகராகக் குறிஞ்சி எனப்படும் நீலாம்பரி ராகமாம்!

ம்ஹ்ம்! எவ்வளவு பொருத்தமான பெயர் அவளது!

அந்த நீலாம்பரி எத்தனை இதத்தை அவனுக்கு உணர்த்துமோ அதே அளவு..ம்ஹும்! அதைவிட அதிகமே! அவளை நினைத்ததும் நெஞ்சில் குடிகொள்ளும் இதம்!

அதியின் இதமான நினைவுகளுக்குச் சொந்தக்காரி மேகா.

எப்படித்தான் அவளை நினைத்ததும் இதழ் விரியுமோ! முகம் மலருமோ! அவனறியான்.
மென்சாரல் தூவிடும் அவளே பல புதிர்களையும் உள்ளடக்கியவளாய் இருந்தாள்.

யாருடனும் அவளுக்கு ஒத்துப்போகாதோ? என்று அவன் பல முறை எண்ணியதுண்டு.

அதற்கு முழு முதற் காரணமும் அவளே!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்பு வட்டத்தினுள் இருப்பாள் உணவருந்தும் வேளையில்.. எல்லோருடனும் சிநேகமாய் பழகுவாள்.. திடீரென தனிமையிலும் இருப்பாள்.. அழைத்தாலும் புன்னகை முகமாகவே மறுத்துவிடுவாள். எந்த வகையில் இவள் சேர்த்தி? என்று பல முறை குழம்பியிருக்கிறான். அந்த குழப்பம் எப்பொழுது ஆர்வமாய் உருவெடுத்தது என்று இன்றளவும் விளங்கவில்லை அதிக்கு. ஏனெனில் அது வெறும் ஆர்வத்துடன் நின்றுவிடவில்லையே!
அந்த சராசரி உயரமும்.. மாநிற தேகமும்.. கருவிழிகள் இரண்டும்.. நிரம்பவே சாதாரண தோற்றமும்.. இதில் எதுவோ அவளை தனித்து காட்டியது! அது என்ன? அதுதான் அவனுக்கு இன்றளவும் புரியவில்லையே.

இல்லையெனில், தினமும் அவன் கடக்கும் பெண்களைப்போலத்தான் அவளும்.. வெகு சாதாரணமானவள். ஆனாலும் அவனுக்கு வித்தியாசமாகவேபட்டாள். பார்த்த முதல் பார்வையிலேயே ஈர்த்துவிடும் அழகி இல்லைதான். ஆனால் அவன் ஈர்க்கப்பட்டிருந்தான்.

இன்று..இருபத்தி ஏழு வயதில்.. கடமைகளையும் கனவுகளையும் துரத்திக் கொண்டிருக்கும் இந்த வயதிலும் அவனது மனம் மட்டும் யூஜியிலேயே தங்கிவிட்டது.

அதியின் பொற்காலம் அல்லவா அவை!
இதமளிக்கும் அவள் நினைவுகள் முக்கால்வாசி சிற்சிறு சண்டைகளையும்.. அதிரடி பேச்சுக்களையும் உள்ளடக்கியவைதான்.

“எனக்கு தோணுனத சொன்னேன்!” என்றுவிட்டு அவள் அந்த வகுப்பறையைவிட்டு வெளியேறியது இன்றும் அவன் நினைவில் பசுமையாய்..!!

ஆங்காங்கே சிரிப்புச் சத்தங்களும்.. பேச்சுக்குரல்களும்.. ஃபோனில் கேமாடியபடி சிலரும் என அந்த வகுப்பறையிலிருந்த மாணவர்கள் அனைவரும் அவரவர் உலகில் மூழ்கியிருந்தனர். காரணம் அவர்களுக்கு அந்த வேளையில் வர வேண்டிய வகுப்பாசிரியை வர தாமதமாக.. அதற்கு அடுத்ததாய் லஞ்ச் ப்ரேக் வேறு! சொல்லவா வேண்டும்? சிலர் அதையே லஞ்ச் ப்ரேக்காய் பாவித்திருந்தனர்.

“உஷ்! உஷ்! மேம் வராங்க!!” என்றக் குரலுடன் விறுவிறுவென வாசலில் இருந்து ஓடி வந்தவளாய் சிந்தியா அவள் இருக்கையில் அமர்ந்துக் கொள்ளவும் அவர்களது வகுப்பாசிரியையான சைத்ரா உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது. அவருடன் இன்னொருவரும்.

“ஸ்டூடன்ட்ஸ்! ஷீ இஸ் நவ்யா! M.Com ஸ்டூன்ட். இன்ட்டர்ன்ஷிப்ல வந்துருக்காங்க. இந்த வீக் மார்கெட்டிங் ஹாண்டில் பண்ணப்போறது இவங்கதான்” என்றுவிட்டு நவ்யாவிடம் திரும்பியவரோ எதையெல்லாம் அவர் கையாள வேண்டும் என்பதை எடுத்துரைத்துவிட்டு..

“ஆல் த பெஸ்ட்” என்று வெளியேறிவிட்டார்.

முதல் முறையாய் இத்தனை பேரை கையாள்வதாலோ என்னவோ முதலில் சற்று தடுமாறிய நவ்யா பின் சுதாரித்தவளாய் நேரடியாய் நோட்ஸ் எடுக்கும்படி பணித்துவிட்டு தனது லெக்சரை தொடங்கியிருந்தாள்.

அனுபவம் வாய்ந்த ப்ரொஃபஸர்களையே கதறவிடுபவர்கள். நவ்யா போன்ற புதியவர்களை விட்டா வைப்பார்கள்?

ஆங்காங்கே கேலியும் கிண்டலும் தொனித்தாலும்.. விரைவிலேயே அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் முயற்சியில் எல்லாம் நின்றுவிட்டது.

“என்னடா, டெக்ஸ்ட் புக் முழுசையும் டிக்டேட் செய்றாங்க?” என்ற குரலுக்கு..

“மூடிட்டு எழுது! அதுக்குள்ள அடுத்த லைன் போயிருச்சு!!” என்று சலித்தபடி மௌனமானது மற்றொரு குரல்.

எழுதியே ஆக வேண்டிய கட்டாயம். இல்லையெனில் சைத்ரா வறுத்தெடுத்துவிடுவாரே! அதுபாதியே எல்லோரும் தீவிரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

தனது முதல் முயற்சி என்பதாலோ என்னவோ எல்லாரிடமும் தன்னைப் பற்றிய கருத்தை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தாள் நவ்யா.

அதியை ஆச்சர்யத்தில் தள்ளியது என்னவென்றால்.. அவ்வளவு சலித்துக்கொண்டவர் எவரும் நவ்யா கேட்கும்பொழுது “குட் மேம்”ஐ தவிர்த்து வேறெதையும் சொல்லியிருக்கவில்லை.
ஏன் அவனே நைஸ் மேம்! என்றுதானே சொல்லியிருந்தான்.

பெல்லடித்துவிட பொதுவாய் ஒரு தாங்க்ஸுடன் வெளியேறிய நவ்யாவை தொடர்ந்து எல்லோரும் அப்ஸ்காண்ட் ஆகியிருக்க அந்த வகுப்பறையில் வெகு சிலரே!

பேகை பேக் செய்துக் கொண்டிருந்தவள் எழுந்துக்கொள்ள ஆர்வத்தை அடக்கவியலாதவனோ,

“நீ என்ன சொன்ன?” என்று அவளிடம் கேட்டான்.

அவனது குரலில் திரும்பியவளோ பையை மாட்டியவளாய்..

“நல்லா பண்றீங்க.. இன்னும் நிறைய எக்ஸ்ப்ளேன் பண்ணா பெஸ்ட்டா இருக்கும்னு சொன்னேன்..” என்றாள் புன்னகை முகமாகவே.

“சீரியஸா அப்படியேவா சொன்ன?!!” என்றவனின் ஆச்சர்யக்குரலில் புருவங்களிரண்டும் சுருங்கிட,
“ஏன்?” என்றாள் கேள்வியாய்.

“இல்ல.. நானும் அதான் சொல்லனும்னு நினைச்சேன்..”

“அப்போ சொல்லியிருக்கலாம்ல?” என்று இடைவெட்டியவளுக்கு மறுப்பாய் தலையசைத்தவனோ,

“பாவம் வருத்தப்படுவாங்கல்ல..” என்க இப்பொழுது மறுப்பது அவள் முறையாகியது.

“ப்ச்! அப்படியில்ல.. அவங்கதான பாஸிட்டிவ் அன்ட் நெகட்டிவ் ரெண்டுத்தையும் சொல்லுங்கனு கேட்டாங்க?.. ஒருத்தங்கள இம்ப்ரஸ் பண்ண வேணா குட் மேம் சொல்லலாம் ஆனா அவங்க இம்ப்ரூவ் ஆகனும்னு நினைக்கறவங்க ரெண்டையும்தானே சொல்லனும்… நான் மட்டும்தான் இப்படி சொன்னேனு நினைக்கிறேன்..” என்றாள் சிந்தனையாய்.

“ஆமா” என்று அவனும் கேலியாய் தொடங்கிட அவளோ,

“அவ்வளவு நேரம் அவங்கள கலாய்ச்சவங்கல்லாம்.. வெரி குட் மேம்.. ஃபெண்டாஸ்டிக்னு வாய்கூசாம பொய் சொல்றாங்க..” என்றவள் சிறு மௌனத்திற்கு பின்,

“ப்ச்! என்னவோ.. எனக்கு தோணினத நான் சொன்னேன்” என்றுவிட்டு வெளியேறினாள்.

அவள் அன்று சொன்னது எவ்வளவு உண்மை என்று தாமதமாகவே புரிந்தது அவனுக்கு. ஏன் அவனே நைஸ் மேம் என்றுதானே சொன்னான்.
வருத்தப்படுவாள் என்று நினைத்தானே. மேகாவைப்போலவும் பொறுமையாய் சொல்லியிருக்கலாமே! அது அவனுக்கு தோணவேயில்லையே!
என்றெண்ணியவனின் இதழ்களில் தாமாய் வந்து ஒட்டிக் கொண்டது புன்னகை ஒன்று.

அவன் மனதைத் தொட்டுரசிய காதல் கலாபத்தால்..!!

சாரலாவாள்…