மென்சாரலில் நின்வண்ணமோ..!? (10)


சாரல்-10

“Do you still love me மேக்ஸ்?” இந்த வார்த்தை அவளை ஏதோ செய்தது.. இவ்வார்த்தைகள் மட்டுமின்றி அதை உரைத்தவனும்தான்!

அவள் இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. சற்று முன் வரை மனம் முழுதும் அழுத்திக் கொண்டிருந்தவையெல்லாம் கரைந்திடவே அப்பொழுதுதான் அவள் மனம் தனது சுவாசிப்பைத் தொடங்கியது. அந்த சுவாசம் சீராக துணைப்புரிந்தவனே இப்பொழுது அதை சோதித்தான். அன்று காலையிலிருந்து அவள் கடந்த சம்பவங்கள்.. அதன் தாக்கமென மட்டுமே நினைத்திருந்தவளுக்கு இக்கேள்வியின் அர்த்தமும் அழுத்தமும் மெல்லவே புரிந்தது.

அதுவும் விழியோரங்களில் சிறு தவிப்போடும்… இதழ் அசைவில் ம்ருதுவான காதலோடும் அவன் கேட்ட விதம்… அவனையே பார்த்திருந்தாளே தவிர அதற்கு தான் பதிலளிக்க வேண்டும், கேள்வி தனக்கானது போன்ற எண்ணம் ஏதுமின்றி அவனையே பார்த்திருந்தாள் மேகா.

இவன் எதை கேட்கிறான்? தெரிந்துதான் பேசுகிறானா? அதெப்படி அவனால் கேட்க முடிகிறது, அன்று  நடந்தவை எதுவும் அவனுக்கு நினைவு வரவில்லையா? இல்லை வந்தும் மறுக்கிறானா?

அவள் முகத்தில் எதை தேடினானோ? எதை கண்டானோ.. அவளையே பார்த்திருந்தவனோ ஓரெட்டு எடுத்து வைத்து  அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

“But i do… “ என்றவனின் குரல் அவன் அணைப்பிலிருந்தவளின் காதோரத்தில் கசிந்தது.

“இத ஏன் இப்ப சொல்றேனு தெரியல… ஆனா சொல்லிடனும்னு தோணுச்சு.. நீ எப்பவும் சொல்லுவேல்ல, தோணுச்சு செஞ்சிட்டேனு.. அதேபோலதான்! தோணுச்சு சொல்லிட்டேன்…” என்றவன் எதிலிருந்தோ விலகும் முயற்சியில் அவளிடம் இருந்து விலகியவன்,

“டேக் கேர் மேக்ஸ்” என்று முணுமுணுப்பாய் உரைத்துவிட்டு விடுவிடுவென அங்கிருந்து அகன்றுவிட்டான். 

நின்றிருந்தவளுக்குதான் ஒன்றும் புரியா நிலை.. இந்த அணைப்பையும் தவிப்பையும் இதற்கு முன்னும் உணர்ந்திருக்கிறாள். இதே போல் இவளை இறுக்கமாய் அணைத்து தன் மன எண்ணங்களின் அழுத்தத்தை அவள் தோளில் கரைத்திருக்கிறான். இந்த அதி ஏனோ அந்த அதியை ஞாபகப்படுத்தினான். ஏழு எட்டு  வருடங்களுக்கு முன் முதன் முதலாய் தன் தோள் சாய்ந்த அதே அதியை..

அவனைப் பற்றிய இவளது அனுமானங்களை நொறுக்கித்தள்ளிவிட்டு இதமான புன்னகையொன்றுடன் அவள் கரம் பற்றிக் கொண்ட அதே அதியை…

சில வருடங்களுக்கு முன்…

அவன் கல்லூரிக்கு அருகிலிருக்கும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தான் அதிரூபன்.. இதற்கு முன்னும் சில முறை அங்கு அவன் வந்திருக்கிறான்தான்.. ஆனால் அப்பொழுதெல்லாம்  அவனது மேக்ஸும் வருவாள்… அதிக நேரம் செலவிடவில்லை என்றாலும் அவளது சில நேர இருப்பே,  சிற்சிறு வாதங்களும் கால்வாரல்களுமாய்  கலகலப்பாய் கரையும்.
ஆனால் இன்று அவன் தனியாக வந்திருக்கிறான். அதுவும் அவளிடம் சொல்லாமல்…

எப்பொழுதும்போல் லஞ்ச் ப்ரேக் முடிந்த பிறகான வகுப்புகளுக்காய் அந்த வகுப்பறை நிறையத் தொடங்கியது. ஆனால் அவன் மட்டும் திரும்பவேயில்லை! கடைசி பெல்லடித்தும் அதிரூபன் திரும்பி வராததை கவனித்தவளின் நெற்றி சந்தேகத்தில் சுருங்கியது. அன்று காலையில் இருந்தே அவன் ஏதோபோல் இருந்ததை அவள் கவனித்திருந்தாள்தான். ஆனால் காலையில்  அவள் உள் நுழையவும் பெல்லடித்து அவள் பின்னாலையே ப்ரொஃபஸர் வரவும் சரியாய் இருக்க அவளால் அவனிடம் விசாரிக்க முடியாமலே போனது. சரி லஞ்ச் ப்ரேக்கில் கேட்கலாம் என்றால் அவன் பெல்லடித்த மறுகணம் பையை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

ஏதோ சரியில்லை என்று புரிந்தாலும் அவன் வரட்டும் பேசிக் கொள்ளலாம் என்று இவள் இருக்க அவனோ வரவேயில்லை! இத்தனை வருடகாலத்தில் அவளிடம் ‘டேக் கேர்’ சொல்லாமல் அவன் சென்றதில்லை. அப்படியிருக்கையில்… என்னவாயிற்று இவனுக்கு? என்றிவள் மனமிருக்க அது கேட்டதோ என்னவோ.. பபிதா அடுத்த இரண்டு வகுப்புகளை கேன்ஸல் செய்துவிட்டதாய் செய்தி வந்து சேர்ந்தது.

இவன் இனி வரமாட்டான் என்று தோன்றிடவே பையை மாட்டிக்கொண்டு வெளியேறியவளுக்கு திடீரென என்ன தோன்றியதோ.. எப்பொழுதும் செல்லும் வழியைவிட்டு  அந்த பார்க் வழியாய் நடந்தாள்.

மேகாவினது வேகநடை! இருந்தும் அவளது கவனத்தில் எப்படி அவன் விழுந்தானோ? ப்ரேக் அடித்தார்போல நின்றவள் சுற்றிக்கொண்டு உள்ளே வந்து அவனை கலைக்காது அமைதியாய் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

ஒரு வார்த்தை அவள் பேசவில்லை. அவளை உணர்ந்தவன்போல..

“க்ளாஸ் இல்லையா மேக்ஸ்?” என்றான் சாதாரண பாவனையுடன்.

அவனது கேள்வியை கண்டுக்கொள்ளாதவளாய் அவன் முகத்தையே உற்று நோக்கியவளோ,

“என்னாச்சு அதி?” என்றாள்.

“ஹே! அதெல்லாம் ஒன்னுமில்ல மேக்ஸ்… சும்மா இங்க வரனும்போல இருந்தது”

“நீ என்ட்ட பொய்க்கூட சொல்லுவியா அதி?”

“ஹ்ம்.. ஒன்னுமில்ல மேக்ஸ், வீட்டுல…சின்ன சண்டை, அதான்” என்றவனின் முகம் மாற அவன் கை பற்றியவளோ,

“தட்ஸ் ஃபைன் அதி! முடியலனா விட்று, வருத்திக்காத!” என்றாள் மென்மை படர்ந்த குரலில்.

“ம்ம்” என்று ஒப்புதலாய் தலையசைத்தவனிடம் சற்று நேரம் மௌனம்.

“நான் என் அப்பாவ பார்த்ததில்ல மேக்ஸ்.. நான் பொறக்கறதுக்கு முன்னாடியே அவர் இறந்துட்டாரு… ஆனா சின்ன வயசுல நான் அப்பா இல்லனு சொன்னதேயில்ல.. ஏன்னா அன்னம்  எனக்கு அம்மாவா மட்டுமிருக்கல… நான் சின்ன வயசுல அப்படிதான் கூப்பிடுவேன்..” என்றவனின் இதழோரங்களில் புன்னகை.

“அன்னம்தான் எனக்கு எல்லாமே.. அம்மா… அப்பா… ஃப்ரெண்ட்னு எல்லாமே! பதினஞ்சு வயசுவரை என் வாழ்க்கைனா அதுல எல்லாமே அன்னத்த சுத்திதான் இருந்தது.. அன்னத்தோட வாழ்க்கை முழுக்க என்னை சுத்திதான் இருந்தது.. “என்றவனின் பார்வை எங்கோ வெறித்தது.

“அப்போதான்,  அம்மாக்கு கல்யாணமாச்சு… அப்பாவும் நல்லவங்கதான் ஆனா எதையோ என்ட்ட இருந்து பிடுங்கிட்டா மாதிரி ஆகிருச்சு… எதையோ நான் மிஸ் பண்றேன் மேக்ஸ்… அம்மாட்ட இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்துட்ட மாதிரி இருக்கு… என்னால ஒட்டவும் முடியல ஒதுங்கவும் முடியல மேக்ஸ்… அதுக்காக நான் ஸெகண்ட் மேரேஜ்க்கு அகைன்ஸ்ட்னுலாமில்ல மேக்ஸ்…  ஆனா எதையோ இழக்கற ஃபீல்! தலை வெடிச்சிரும்போல இருக்கு..” என்றவன் சொல்லிக்கொண்டே போக அவனருகில் அமர்ந்திருந்தவள் அப்படியே தன் வலக்கையால் அவனை அணைத்துக்கொள்ள அவனுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்ததுபோலும்.. அவள் தோள் சாய்ந்தான்.

அணைத்திருந்தவளின் கரம் அவனை ஆறுதலாய் வருடியது.

“அதி… அதி… அதி…” என்று மென்மையான அழைப்புடன் அணைத்து தட்டிக் கொடுக்க.. அணைப்பில் அடங்கியவன் முற்றிலுமாய் அமிழ்ந்துவிட்டான். மீளவே சற்று நேரம் பிடித்ததுபோலும்.

சுற்றுப்புறத்தை சுதாரிக்க தொடங்கியவனின் பார்வையில் முதலில் விழுந்தது அவர்களையே வினோதமாய் பார்த்துச் சென்ற நடுத்தர வயது மனிதர்.

“அவர் நம்மல மொறச்சுட்டு போறார் மேக்ஸ்…” என்றான் அதே குரலில் தலையை தூக்காமல்.

“ம்ம் ஆமா..”

“எதுக்காக? தப்பா நினைச்சிட்டாரோ…”

“இருக்கலாம்…”

“அப்போ எல்லாருக்கும் அப்படிதான் தோணுமா..”

“கட்டாயமில்ல…”

“மேக்ஸ்?”

“அதி.. அவங்களுக்கு அதியோட தவிப்பும் தெரியாது மேகா சொன்னதும் கேட்டிருக்காது.. அப்போ அவங்க பாக்கறதுதானே தெரியும்… நினைக்கறதுதானே கேட்கும்?” என்க அவனும் எழுந்தமர்ந்துக்கொண்டான்.

அவனையே பார்த்திருந்தவளோ, “அதி… நமக்கு ஏன் அம்மாவ பிடிக்குது?” என்க அவனோ..

“ஏன் மேக்ஸ்? திடீர்னு..” என்றான்

“சும்மா சொல்லேன்..” என்றவள் ஊக்க

“ஹ்ம்.. அம்மானா அளவில்லாத அன்பு மேக்ஸ்! ஈடில்லா ஆறுதல்… loveல மட்டுமில்ல எல்லாதுலயுமே அம்மாக்கள் infinity தான்! நம்மள சாப்பிடவைக்க பூச்சாண்டி கதை சொல்றதுல இருந்து நம்மள அடிச்சிட்டு நம்மக்கூடயே சேர்ந்து அழறதுவரை… எதிர்ப்பார்ப்புகள் இல்லாத உறவு…”

“இல்ல அதி… அம்மாக்களுக்கும் எதிர்ப்பார்ப்புகளுண்டு! ஆனா இந்த எதிர்ப்பார்ப்பு வித்தியாசமானது! நாம எவ்வளோ சாப்பிட்டாலும் நம்ம அம்மாக்களுக்கு மட்டும் திருப்தியே வரதில்லை இல்லையா… நாம கேட்டதவிட ஒரு தோசையாவது எக்ஸ்ட்ரா வைக்காம விடமாட்டாங்க… ஒன்னு கெஞ்சி இல்ல அதட்டினு…. அவங்களோட எதிர்பார்ப்பெல்லாம் அவங்க பசங்களோட சந்தோஷமும் ஹெல்த்துமாதான் இருக்கும்…”

“அதுவும் சரிதான் மேக்ஸ்.. அம்மாக்களோட உலகம் அவங்க பசங்களுக்கானது..”

“ஆனா நம்மோடது?”

“மேக்ஸ்?”

“இந்த அம்மாக்கள் ஏன் அவங்க பசங்களோட கல்யாண விஷயத்துல அவசரப்படறாங்க அதி? ‘என் காலத்துக்குள்ள.. என் காலத்துக்குள்ளனு’ அவங்களோட அதிகபட்ச பயம் எங்க நம்ம பசங்க தனியா தவிச்சிருவாங்களோங்கறதுதானே? ஏன் அதி நாளைக்கு உனக்கு ஒரு கல்யாணம் நடந்து அம்மா இதே மாதிரி உன்னவிட்டு விலகினா உன்னால அத ஏத்துக்க முடியுமா? இல்ல உனக்குனு ஒருத்தங்க வரதால அம்மாக்குனு உன் மனசுல இருக்கற இடம்தான் சுருங்கிருமா?

எங்கம்மா வேற கல்யாணம்கூட பண்ணிக்காம எனக்காகவே வாழ்ந்தாங்கனு சொல்றது பெருமையா அதி? ஒரு பொண்ணு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலனா அவ ஆழமா காயப்பட்டிருக்கானு அர்த்தம்.. ஏதோ அவளை தடுக்குது… மறுபடியும் ஒரு உறவ அமைச்சுக்க தயங்கறா… பயப்படறானு.. இல்ல அந்த கல்யாணத்தையே வெறுத்துட்டானு அர்த்தம்… ஏன் அதி வாய தொறந்து கதறியழுதா மட்டும்தான் வலியா? அதுவும் ஒரு அம்மாவா ரெண்டாவது தடவை ஒரு புது உறவுக்குள்ள வரனும்னா அவங்களுக்குள்ள எவ்வளோ தயக்கம் இருக்கும் தெரியுமா? எவ்வளோ யோசிப்பாங்கனு தெரியுமா? அவங்களுக்காகனு மட்டுமில்லாம முழுக்க முழுக்க அவங்க பசங்களுக்காகவும்!! எங்க தன் குழந்தைங்கள பாதிச்சிருமோனு எத்தனை அம்மாக்கள் அவங்க வாழ்க்கையை தனிமைலயே கழிச்சிருக்காங்கனு தெரியுமா? நீ தப்பா யோசிக்கறேனு நான் சொல்ல வரல அதி… ஆனா நீ இத இப்படியும் யோசினுதான் சொல்றேன்…

அம்மாக்கள் தியாகிகளா இருக்கனும்னு ஏதாவது ரூல் புக் இருக்கா என்ன? அவங்க உலகம் அவங்க பசங்கள சுத்திதான் இயங்குது ஆனா அதுக்காக அது மட்டுமே அவங்க வாழ்க்கையா இருக்கனும்னு நினைக்கறது எந்த விதத்துல சரி?

ஏன் ஒரு ப்ரேக் அப்க்கு அடுத்து காதல் வரலாம்.. ஆனா ஒரு கல்யாணத்துக்கு அடுத்து வரக்கூடாதா?

சிங்கில் பேரண்ட்டா இருந்து ஒரு அம்மா வளர்க்கற பொண்ணோ பையனோ ‘இல்ல எனக்கு கல்யாணம் வேணாம்.. என் அம்மா தனியாகிடுவாங்கனு’ ரீஸன் சொன்னா விட்றுவாங்களா? எத்தனை பேரு அட்வைஸ் பண்ணுவாங்க? ஆனா அதே அந்த அம்மாக்குனு வரும்போது? இன்னொரு கல்யாணம் செய்துக்கோனு சொல்லறதுக்கு எத்தனை பேர் வருவாங்க? வருவாங்க.. ஒன்னு ரெண்டு பேர்… ரொம்ப லைட்டான அட்வைஸ்… அந்தம்மா இல்ல வேணாம்னு சொல்லிட்டா…? அந்த பொண்ணுக்கோ பையனுக்கோ பாக்கற அளவு அந்த அம்மாக்கு பாப்பாங்கனா நினைக்கற?

கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணிக்கூட சொல்ல மாட்டாங்க! ஏன்னா நம்ம மனசுலதான் பதிஞ்சு போச்சே… அம்மானா அப்படிதான்னு… அதை யாராவது ஒடைக்கும்போது அவங்க அந்த உறவோட புனிதத்த கெடுத்துட்டதாதானே பார்க்கப்படுது… அவங்கள வாய்கூசாம செல்ஃபிஷ்னு பட்டம் குடுத்துறுவோம்.. எது செல்ஃபிஷ்நெஸ்?! தனக்காக ஒன்னு செய்றதா? இல்லை தனக்கு மட்டுமே ஒன்னு செய்துக்கறதா? இந்த நல்ல அம்மா.. நல்ல மனைவி… நல்லப் பொண்ணுன்ற பட்டத்த வாங்கறதுக்காக சுயத்த இழந்து.. நாயா பேயா உழைச்சு கொட்டினா கடைசில நாம என்ன செய்யப்போறோம்? நடுரோட்டுல செலையா வைக்கப்போறோம்? தியாகச்செம்மல்னு.. அப்படியே வைச்சாலும் அதால நாலு காசுக்கு பிரயோஜனமா? 

அம்மா ஒப்பற்றவள்தான்! ஆனா அதுக்காக அவ வாழ்க்கையையும் நானேதான் வாழ்வேனா? நியாயமா? எப்படி அவங்க கனவுகள நம்ம மேல திணிக்க கூடாதுனு நினைக்கறமோ அதே மாதிரிதான இதுவும்? கலீல் கிப்ரான் சொன்னதுபோல… பேரண்ட்ஸ் நாம இந்த உலகத்துக்கு வரதுக்கான பயோலஜிகல் மீன்…  எப்படி அவங்க நம்மள அடக்க கூடாதுனு நினைக்கறமோ அதேபோல அவங்க வாழ்க்கையையும் நாம அடக்க கூடாதுல…

அம்மாக்கள் உண்மைலயே அற்புதமானவர்கள்தான் அதி.. அத நான் இல்லனு சொல்லல.. ஆனா அவங்கள நாங்க தெய்வமா பாக்கறோம் கொண்டாடறோம்ற பேர்ல அவங்கள நீங்களே ரூம்ல போட்டு அடச்சிராதீங்கனுதான் சொல்ல வரேன்… அத்தனை வருஷம் உனக்கே உனக்காகனு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சவங்க.. ஒரே ஒரு தடவ அவங்களுக்காக ஒன்னு செஞ்சிக்கிட்டா அது தப்பா? அவங்கட்ட இருந்து ஒதுங்கிருவியா?? அப்போ அவங்க அத்தனை வருஷம் செய்ததெல்லாம்? கடமைனு மட்டும் சொல்லிடாத! அவங்க உனக்காக வாழ்ந்துருக்கனும்… ஹ்ம்!! இந்த அம்மாஸ்க்கு எப்பவுமே தான் பெரிய தியாகச்செம்மல்னு நினைப்பு…”  உணர்ச்சிவசத்தில் பேசிக்கொண்டிருந்தவள் சற்று நிதானித்தாள்.

“ஐ நோ யூ அதி… பிறந்ததுல இருந்து உனக்காக மட்டுமேனு இருந்த அம்மாவோட வாழ்க்கைல இன்னொருத்தர் வந்தத உன்னால ஏத்துக்க முடிஞ்சாலும்.. அவங்களுக்காக சந்தோஷப்பட்டாலும் உன்னால அவங்களோட ஒட்ட முடியல… உன்னிடத்த பகிர்ந்துக்கறதா நினைக்கற… ஷேர் பண்ண அது என்ன சாக்லெட்டா அதி? நீதான சொன்ன அம்மாவோட அன்பு மட்டுமில்ல எல்லாமே infinite னு… 

இந்த தயக்கம் காயம் பயம்னு எல்லாத்தையும் தாண்டி அவங்க கல்யாணம் செய்திருக்காங்க அதி, அது எவ்வளோ பெரிய விஷயம்? இருபது வயசு பையன வச்சிருக்கற அம்மா கல்யாணம் செய்துகிட்டா தப்பா? அவங்க வாழ்க்கைய  வாழறதுக்கு அவங்களுக்கு உரிமையில்லையா?” அவன் முகத்தை கண்டவள்,

“ நீ அப்படி சொல்லல அதி.. நீ அப்படி சொல்லவும் மாட்ட! ஆனா இப்படி ஒன்னு நடந்தா அந்த குடும்பம் எவ்வளவு பேச்சு கேட்கும்னு யோசிச்சு பாரு அதி… இப்படிப்பட்ட ஒரு சொசைட்டிய தூக்கியெறிஞ்சிட்டு ஒரு கல்யாணம்னா.. அவங்களுக்கான காதல அவங்க அங்கிள்ட்ட உணரப்போய்தானே இந்தக் கல்யாணம்? ஏன் அதி இதுவரை எதாவது ஒரு விஷயத்துல உன்ன ஒதுக்கிருக்காங்களா?”

சிந்தித்துப் பார்த்தான். அவனது குட்டித் தங்கை பிறந்த பிறகும்கூட இவனுக்கானவை எதையும் இவன் இழந்திருக்கவில்லை. இன்னமும் அகிலன் அதே முறுவலுடன் அவனை எதிர்கொள்கிறார். அம்மா அதே அன்புடன்தான் அவனை அணைத்து முத்தமிடுகிறாள். குட்டித் தங்கை விஜிகூட “ண்ணா ண்ணா” என்று வீட்டிலிருக்கும் பொழுதனைத்தும் அவன் அறையிலேயே கழிக்கிறாள்.

இதுவரை அவர்கள் விலகவில்லை. அவன்தான் அவர்களிடமிருந்து விலகியிருக்கிறான்.. இல்லை அப்படி உணர்கிறான்?

“ நீ அதிகம் நேசிக்கற அம்மாவ ஒருத்தர் கொண்டாடறாங்கனா அது உனக்கு சந்தோஷம்தானே குடுக்கனும்.. அவர் உங்கள பிரிக்க வரல அதி, உங்கக்கூட சேர்ந்து இருக்கத்தான் வந்திருக்காங்க. உண்மை என்னன்னா உனக்கும் அவங்கள பிடிச்சிருக்கு இல்லைன்னா நீ அவங்கள அப்பானு அட்ரஸ் பண்ணிருக்கமாட்ட! பதினஞ்சு வயசு பையன் மனசுல அப்பாவாகிறது அவ்வளோ ஒன்னும் ஈசியில்லையே… ஆனா தயங்கற! Kind of possessiveness அதி…  பட் ரிமெம்பர் பொஸஸ் பண்றதுக்கு அவங்க பொருளில்ல உணர்வுள்ள மனுஷி!” என்று முடித்தவளையே பார்த்திருந்தான் அதிரூபன்.

“நான் அவங்கள ஒதுக்கல மேக்ஸ்… நான்தான் ஒதுங்கினேன்.. அவங்க கல்யாணம்கூட என்ட்ட கேட்டுதான் நடந்துச்சு. உண்மைய சொல்லனும்னா அம்மாக்கு கல்யாணமானப்போ அதிகம் சந்தோஷப்பட்டது நானாதானிருப்பேன்! ஆனா நீ சொன்னதுல ஒன்னு ரொம்பவே உண்மை மேக்ஸ்… எனக்கு அப்பாவ பிடிச்சிருக்கு.. விஜிக்குட்டி அண்ணா அண்ணானு சுத்தி வரது பிடிச்சிருக்கு.. இந்த லைஃப் பிடிச்சிருக்கு!! ஆனா ஏதோ ஒரு விரிசல்..  உண்மைதான்.. இந்த ப்ராட் மைண்டட் திங்கிங்லாம் அவங்க கல்யாணம்வரைதான்… அதுக்கடுத்து எல்லாத்தையுமே ஒரு  first born baby மாதிரி ஃபீல் பண்ணிருக்கேன்.. எப்பவும் ரெண்டாவது குழந்தை பிறந்த வீட்டுல இருக்கற முதல் குழந்தையோட மனநிலை… வியர்ட்ல…” என்றவாரே எழுந்து இரண்டெட்டு முன்னெடுத்து வைத்தவன் இவள் புறம் திரும்பினான்.

“நான் ரொம்ப மோசமான மகனா மேக்ஸ்?” என்று வினவியவனின் குரலில் கலக்கம்.. கண்களில் கண்ணாடியின் பளபளப்பு..!!

“அதி” என்று எழுந்தவளுக்கு  ஒரு நொடி என்ன செய்யவென்று புரியாமல் போனது. அவள் இதுபோலெல்லாம் யாரையும் தேற்றியதில்லையே.. ஆனால் அவனது கலக்கம் அவளை கலங்கவைத்தது. அணைத்து ஆறுதல் படுத்து என்பதை தவிர வேறெந்த குரலும் அவள் மனதில் ஒலிக்கவில்லை.. வார்த்தைகளால் கொடுக்க முடியாத ஆறுதலை சிறு அணைப்பு உணர்த்திவிடுமே..

அவள் அணைக்க முன்வர அதற்கு முன்பே அவன் அவளை இறுக அணைத்திருந்தான். அவளது தோள்பட்டைத் துணி ஈரத்தை உணர அவன் முதுகை நீவிவிட்டாள் அவள்.

“நீ யாரையும் தப்பு சொல்லல.. உன்னோட ஃபீலிங்க்ஸதான் பகிர்ந்துக்கிட்ட… விடு அதிரூபா…”

சில நிமிடங்களில் விலகியவனின் பார்வையில் என்னவோ.. முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டவன், “தேங்க்ஸ்..” என்றான். அத்தனை ஆழமான, மனம் நிறைந்த தேங்க்ஸை அவள் இதற்கு முன் கேட்டதுமில்லை உணர்ந்ததுமில்லை.

மெல்லிய புன்னகையொன்று அவளிடம்.

வாட்ச்சில் இருந்து வந்த பீப் சத்தத்தில் மணியைப் பார்த்தவனோ, “டைம் ஆச்சு மேக்ஸ்! அன்னம் தேடும்.. அப்பாவோட காஃபி டைம்..” என்றவன் மற்றவளின் புன்னகையை கண்டு,

“டக்குனு மாற நான் என்ன சினிமா வில்லனா? கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்… இந்த தயக்கத்த தள்ளிவச்சிடுவேன்…” என்றான் சின்ன சிரிப்போடு.

“அண்ட்… அதி உண்மையான லவ்வர்ஸ் உக்காந்து பேசினாலும் தப்பில்லையே…” என்று அப்பொழுது கேட்ட கேள்விக்கு அவள் இப்பொழுது இதை சொல்ல எப்பொழுதும்போல அவன் கண்களில் அந்த திடீர் மலர்ச்சி..!! கூடவே சிறு புன்னகையுடனான தலையாட்டல்.

“டேக் கேர் மேக்ஸ்!!” என்றவன் பையை தூக்கிக்கொண்டு ஓட இவளோ,

“கடைசிவரை என்ன சண்டைனு சொல்லவேயில்லயே..” என்று கிண்டலாய் இழுக்க

ஓடியவன் இவள் புறம் திரும்பி ரிவர்ஸில் இரண்டெட்டு எடுத்து வைத்தபடி, “அதான் வருத்திக்காத விடுனு சொல்லிட்டியே..”என்று கண்ணடிக்க

“உன்ன!!”

“ஹா..ஹா.. உன் அதியாச்சே!” என்றபடி முன்னால் திரும்பி ஓடிவிட்டான். அவனது செய்கையில் வரத்துடித்த சிரிப்பை அடக்கியவளாய் பையை எடுத்துக் கொண்டவளுக்கு  அந்த ‘டேக் கேர்’ ஒருவித நிம்மதியை கொடுத்தது. அதே தவிப்பையும் இறுக்கமான அணைப்பையும் இன்று  மறுமுறை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறான்.

ஏனோ மேகாவிற்கு பல சமயங்களில் அதிரூபன் சிறுபிள்ளையாய்தான் தெரிவான்.  அவள் வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவளிடம் இருந்ததாலோ என்னவோ அந்த வயதிற்குறிய துருதுருப்புடன் இருந்த அதிரூபனின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்ததுபோலும்…