மென்சாரலில் நின்வண்ணமோ..!?(11)

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(11)

சாரல்-11

ஏன் மேகாவிடம் அப்படி சொன்னான்? எது அவனை சொல்ல வைத்தது? அதுவும் இப்பொழுது… போன்ற கேள்விகள் எதையும் அவன் நிம்மதியை பதம்பார்க்க, அதி  அனுமதிக்கவில்லை! அவனைப் பொருத்தவரை, சொல்லத் தோன்றியது… சொல்லிவிட்டான் அவ்வளவே!

அதற்குமேல்… அவள் என்ன நினைப்பாள்? இது சரியா? இல்லை தவறா? ஒரு வேளை அவன்  அவளை சந்திக்காமலே போயிருந்தால்? இல்லை அவன் சந்தித்தப் பொழுது மேகாவுடன் அவளது கணவனும் இருந்திருந்தால்? அவளது திருமண உறவு நல்ல முறையில் அமைந்திருந்தால்? போன்ற கேள்விகளை எல்லாம் அவன் சிந்தித்துப் பார்க்கவும் நினையவில்லை! காரணம் யாதெனில், இது எதுவுமே நடக்கவில்லை! இன்னொன்று அவன் நிகழ் உலகில் வாழத் துடிக்கும் சராசரி மனிதன். அப்படியிருக்கையில் நடவாத ஒன்றை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து  ப்ராபிலிட்டிக்களை கணக்கிடமாட்டான். அது மனித மனத்தின் நிம்மதியை குலைத்துவிடுமல்லவா!? தனக்கு வந்திராத காய்ச்சலையும் கால்வலியையும் ஒருவேளை வந்துவிட்டால்? என்று எண்ணி கலங்குவதில் பயனேதுமில்லையே.. மாறாய் தலைவலி  வருவதுதான்  மிச்சம்!

உண்மையில் அந்த ஷ்ரவன் உயிரோடிருந்து நல்லதொரு வாழ்க்கைத் துணையாய் மேகாவை கண்ணுக்குள் வைத்துப் பார்த்திருந்தால் அவளது சுகவாழ்வில் நிம்மதியுற்று ஷ்ரவனிடம் சுமூகமாய் ஒரு உறவை ஏற்படுத்தியிருப்பானோ என்னவோ.. அவனறியான்!  ஆனால் அப்படி ஒன்றுதான் நடக்கவில்லையே.. பார்த்தறிந்திராத ஷ்ரவனின் தாக்கம் உடன் வாழ்ந்த மேக்ஸைவிட இவனுக்கு குறைவுதானே!
அதிரூபனைப் பொருத்தமட்டில் அவன் அதே அதிரூபனாய்தான் இருக்கிறான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படியே! வயதிற்கேத்த முதிர்ச்சி வந்திருக்கலாம்தான் ஆனால் மனதளவில்? மேக்ஸ் அவளிடத்தில் அப்படியேதான் இருந்தாள்.  அவனைப் பொருத்தவரை எதுவும் மாறியிருக்கவில்லை.  காலத்தை தவிர…

தான் தவறு செய்துவிட்டோம் என்று அவனுக்கு துளியும் தோன்றவில்லை! மாறாய்…

“இந்த வாழ்க்கை ரொம்ப நீளம் அதி… யார எப்போ யார்கூட சேர்த்து வைக்கும்னே தெரியாது..” என்று அவனது மேக்ஸ் என்றோ சொல்லியதெல்லாம் இப்பொழுது நினைவிலாடுகிறது.

உண்மையில் அவள் சொல்லியது போலவே இவ்வாழ்க்கை மேக்ஸின் வாழ்க்கையை தனதுடன் இணைத்துவிட்டதோ என்றும் தோன்றாமல் இல்லை! எதிர்ப்பார்ப்புகளின் தாக்கம் எண்ணங்களில் பிரதிபலிக்கத்தானே செய்யும்.

எண்ணங்களை ஏறக்கட்டியவன் முதலில் சென்றது மனோவிடம். சிற்சிறு உணர்வுகளையும் முகபாவத்தில் வடித்துவிடும் மனோவின் முகம் இறுகிக் கிடந்ததை ஏனோ அதியால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை!

ஏனோ மனோவின் முகத்திலிருந்த கனிவு கரைந்துவிட்டாற்போல, குற்ற உணர்வு மண்டிக்கிடக்க அதை பார்த்திருந்த அதிரூபனின் உள்ளம் தவித்தது! எம்மாதிரியான மனம் இது? மனோ இவனுக்கு அறிமுகம் ஆகி இரண்டு நாட்கள் இருக்குமா? இல்லை மூன்று..?  ஆனால் இன்று ஏன் அவனது முக வாட்டத்திற்கு இவன் அகத்தில் இத்தனை தவிப்பு? அவன் மேகாவின் ஃபேவ்ரெட் ஸ்டூடண்ட் என்பதாலா? இல்லை பவிமாவின் மனோ ஆனதாலா? இல்லை.. அப்படியிருக்க வாய்ப்பில்லை! அதிக்கும் மனோவை பிடித்திருக்கிறது. முதன் முதலாய் கதவைத் திறந்து புன்னகை முகமாய் விசாரித்த பின்பும் உறுதி செய்து வழிவிட்ட மனோவை ஏனோ பிடித்துப்போயிருக்கிறது. இவனது பவிம்மாவை தோளில் சுமந்து மகிழ்ந்தவனிடம் ஏதோ ஒரு ப்ரியம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. இதற்கெல்லாம் மேல் மனோவின் மனம்… எதிர்பார்ப்பற்ற அந்த அன்பு இவனை கவர்ந்திருக்க வேண்டும்!! 

ஆங்காங்கே சில சிராய்ப்புகளும் ப்ளாஸ்த்ரிகளுமாய் இருந்தவனுடன் வெகு நேரம் பேசியவன் அவனை மாத்திரைகளை சரியாய் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்திவிட்டே தனதறைக்கு கிளம்பினான்.

அறையினுள் நுழைந்தவனுக்கு அப்படியொரு அசதி!  அன்று நடந்தது எதிலும் அவனுக்கு நேரடி தொடர்பு இல்லாவிடினும் என்னவோ அவனே அனைத்தையும் கடந்ததுபோலொரு அசதி! அன்றைய சம்வங்களுக்கும் அவனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனினும் அது அவனை மனதளவில் பாதித்திருக்கவேண்டும்.

முதலில் மேக்ஸின் மௌனம்…  அதன் காரணம்.. அடுத்து தென்னல்! அவள் பக்கமென மனதளவில் கடந்தவன் உடை கூட மாற்றாமல் மெத்தையில் விழுந்தது தான் தெரியும்.. ஏதேதோ சிந்தனைகள் வலைப் பின்ன ஆழ்ந்த உறக்கத்தினுள் சென்றுவிட்டான் அதிரூபன். அங்கு ஒருத்தி தூக்கமின்றி புரண்டதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை…

தன்னருகில் நிச்சலனமாய் இமை மூடி ஆழ் உறக்கத்திலிருக்கும் வைபவியையே பார்த்திருந்தாள் மேகராகா.

நீண்ட நேரம் அவளது பார்வை வைபவியிலேயே பதிந்திருந்ததாலோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் பவி புரண்டதுகூட என்னவோ தன் விழி வீச்சால் என்று தோன்றிவிட லேசாக தட்டிக் கொடுத்தவள் பிறகு அந்தரத்தில் அவளைப்போலவே தூக்கமின்றி சுற்றிக்கொண்டிருக்கும் காத்தாடியையே வெறித்திருந்தாள்.

“அதி ஏன் இப்படி?!” என்பதே அவள் மனதை அமைதியிழக்கச் செய்தது.

முதல் முறைக்கூட அவள் இவ்வளவு தவித்திருப்பாளா என்று இப்பொழுது நினைவிலில்லை! ஆனால் அதற்கு சற்றும் சளைக்காமல்… ஏன் அதைவிட அதிகமாகவே இப்பொழுது அகத்தினுள் அப்படியொரு அலைக்கழிப்பு!

ஏன் இப்படி கேட்கிறான் இவன்? அதுவும் அன்று அத்தனை தெளிவாய் இதை பேசி ஒரு முடிவுக்கு வந்தப் பிறகும்… என்றோடிய எண்ணங்களுக்கிடையே சிறு இடறல்..

இல்லையே! இன்றளவில் அவள் இதற்கு சரியான முற்றுப்புள்ளி என்று எதையும் வைத்திருக்கவில்லையே.. இல்லையெனில் ஏனிந்த தவிப்பு…

நாளை அதியிடம் பேசிவிட வேண்டும்! இனி இதைப்பற்றிய விவாதங்கள் நல்லதல்ல.. ஆனால் என்ன பேசவென்றுதான் அவளுக்கு புரியாமல் போனது. பேச வேண்டும்! அவனிடம் எதையோ சொல்ல வேண்டும்! ஆனால் அது என்ன? என்றுதான் அவளுக்கு புரியவில்லை…  பேச வேண்டுமென்ற எண்ணம் ஒரு புறமிருக்க தூக்கத்தில் தன் பிஞ்சுக் கரத்தால் அன்னையை அணைக்க முயன்ற வைபவியிடம் மேகாவின் கவனம் திரும்பிட ஒரு முடிவெடுத்தவளாய் மகளின் புறம் திரும்பி அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

கதிரவனின் கரிசனத்தில் காலை மலர்கள் காதல் மலர்களாய் பூத்துக்குலுங்க… மொட்டவிழ்த்து மனம் நிறைத்த மலர்களால் அகம் மகிழ்ந்த ஆதவனின் அணைப்பு இதமாய் படர்ந்தது பார் முழுதும்.

அன்றைய தினம் விடுமுறையாய் இருக்க.. இரவு வெகு நேரம் சென்று உறங்கியதாலோ என்னவோ மேகா இன்னும் மகளின் அணைப்பிலேயே அகிலம் மறந்திருந்தாள். 

வழமையாய் அதிகாலையில் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து மகளை எழுப்பி தானும் கிளம்பி அவளையும் கிளப்பி உணவூட்டி தானும் சொப்பு கரங்களால் அவள் அவ்வப்பொழுது சிந்தி சிதறி ஊட்டுவதை வாங்கிக்கொண்டு தானும் உண்டென வார நாட்கள் கழியுமென்றால், வார இறுதிகளும் விடுமுறை தினங்களும் பார்க்கிலும் வீட்டிலும் இன்னபிற இஷ்ட இடங்களிலுமென மகளுடன் கரையும் அவளது நேரம்.

வைபவியை மேகா எழுப்பும் நேரம் கடந்துவிட வழமையாய் அந்நேரத்திற்கு எழுந்து பழகிய வைபவி துயில் கலைந்தாள். ‘ராகி’ என்ற தூக்கக் கலக்கத்தோடு அழைத்தவள் மேகா அருகில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவள் இமைத் தொட அத் தூக்கத்திலும் மகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளோ விழி திறவாமல் வைபவியின் கையைப் பற்றி அணைத்துக் கொண்டவளாய்..

“கொஞ்ச நேரம் பவிக்குட்டி…” என்று எதையோ சொல்ல வர, அதில் பாதியை சொன்னவள் மீதியை சொல்வதற்குள் மீண்டும் தூக்கத்திற்குள் சென்றிருந்தாள்.

எழுந்தமர்ந்துக்கொண்ட வைபவி மேகாவின் மேல் ஏறியமர்ந்தபடி சற்று நேரம் அவளது உடையிலுள்ள பட்டன், முடி, கையிலிருந்த ஒற்றை மோதிரமென ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் எப்பொழுது இறங்கி அறையைவிட்டு வெளியேறினாளோ.. திடீரென ஏதோ விழுவதுபோலொரு சத்தம்!

திடுக்கிட்டு எழுந்த மேகாவிற்கு ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை. அத்தனை நேரம் தன் மீது அமர்ந்திருந்த மகளை அவ்வறையில் காணவில்லை என்றதும் பதறியடித்துக்கொண்டு வெளியே வந்துப் பார்த்தாள்.  கூடை நாற்காலி ஒன்று கீழே உடைந்து சரிந்து கிடக்க அதன் அருகிலேயே அதிர்ந்த முகத்துடன் வைபவி நின்றிருந்தது… ஓடிச் சென்றவள் பின் சுதாரித்தாள். இம்மாதிரி சூழ்நிலையில் இவள் பதறினால் அவளும் பதற்றமடைவாள்.. கூடாது! பொறுமை பொறுமை என்று எவ்வளவு சொல்லிக் கொண்டாலும் அவளது அன்னையுள்ளம் அல்லவா!? எல்லாம் அருகில் வரும்வரை தான். மண்டியிட்டமர்ந்தவள் பவியை முதலில் கட்டிக்கொண்டாள். அவள் பயந்திருப்பது அவள் உடல் நடுங்கியதிலேயே மேகாவால் உணர முடிந்தது.

அத்தனை நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த வைபவி அன்னையைக் கண்ட மறுகணமே அழத் தொடங்கிவிட…அச்சோ என்றானது இவளுக்கு! அடி எதுவும் இல்லை என்று உறுதியாகிவிட்டாலும் ஏனோ மேகாவுக்கு அவள் மீதே சிறு கோபம் துளிர்த்தது. அழும் மகளை சமாதானம் செய்தவளுக்கு அதைவிட பயங்கரமாய் அழுகை தொண்டையை அடைத்தது.. வைபவியின் அழுகையை காணக் காண..

பவியை தன்னோடு சேர்த்து அணைத்தபடி தூக்கியிருந்தவள் அவசர அவசரமாய் அவளுக்கு பால் காய்ச்சி.. பவிக்குட்டிக்கு மட்டுமாய் காலை உணவை  தயார்  செய்து…  பவியை உண்ண வைத்தவள் அவளை கீழே இறக்காமல் தோளிலேயே போட்டு தட்டிக்கொடுக்க வெகு நேரமாய் விசும்பிக்கொண்டே இருந்த வைபவியும் ஒருகட்டத்தில் அழுதழுது உறங்கிப்போனாள்.

உறங்கியவளை மெத்தையில் கிடத்தியவள் அவள் அருகிலேயே அமர்ந்துவிட எத்தனை மணி நேரம் ஓடியதோ.. ஒலியெழுப்பிய வால்க்ளாக்கால்தான் மணி மதியமாகிவிட்டதென்பதை உணர்ந்தவள் விறுவிறுவென வேலையில் இறங்கினாள்.

காலையிலிருந்து அவளும் உண்டிருக்கவில்லை. அதுவும் பவிக்குட்டியின் அழுகையில் பச்சைத்தண்ணிக்கூட இவள் பல்லில் படாமல் போயிருக்க இன்னும் கொஞ்ச நேரத்தில் பவியை எழுப்பி மதிய உணவை வேறு கொடுக்க வேண்டும் என்று சமையல் வேலைகளில் இறங்கியவள் கொஞ்ச நேரத்திலேயே அவர்களுக்கான எளிய மதிய உணவை ஓரளவு தயார் நிலையில் இருக்க குக்கரை இறக்கிவிட்டு  தனது காபிக்காக பாலை அடுப்பில் வைக்கவும் காலிங் பெல்லடிக்கவும் சரியாய் இருந்தது.

பாலை சிம்மில் வைத்துவிட்டு வந்து கதவை திறந்தவளுக்கு முன் அதே சிரிப்பும் மலர்ந்த முகமுமாய் நின்றிருந்தான் அதிரூபன்.  அவனைப் பற்றி தெரிந்ததால் லேசாய் இதழ் பிரித்தவள் பின் அவனிடம்  “வா” என்று தலையசைத்துவிட்டு அடுக்களையினுள் நுழையவும், கதவை சாத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தவனின் பார்வையோ முதலில் தேடியது வைபவியையே!

அதை உணர்ந்தவள் போல, “ அவ தூங்கறா அதி” என்றுவிட்டு அடுக்களையினுள் நுழைந்துவிட்டாள் மேகராகா.. அவ்வளவுதான் என்பதுபோல… அவளது மௌனத்தின் காரணம் புரிந்தும் புரியாத நிலை அதியிடம். முதலில் அவன் அதை கவனித்திருக்கவேயில்லை.. ஒருவேளை அவன் அன்று அதை சரியாக கவனித்திருந்தால்… இல்லை முதலிலேயே அதை சீரியஸாக எடுத்திருந்தால்…

அடுக்களையினுள் நுழைந்தவன் அவள் காஃபி கலக்க வேண்டி பால் காய்ச்சுவதை கண்டவன் அவளருகிலேயே சமையல் மேடையில் அவள் முகம் பார்க்குமாறு சாய்ந்தமர்ந்துக் கொண்டான். 

கொஞ்ச நேரத்திலேயே  அவன் பேசுவதற்கெல்லாம் அவளிடம் இருந்து வெறும் “ம்ம்” மட்டும்தான் வருகிறதென்பதை உணர்ந்தவனின் புருவங்கள் இரண்டும் சுருங்கின..

அவனைப் பொருத்தமட்டில் அவன் அவனது மன உணர்வுகளை அவளிடம் பகிர்ந்துக் கொண்டான். ‘உன்னிடம் எனக்கு கோபம்… பிடித்தம்’ என்பதைபோலத்தான் இந்த “காதலும்” ஏன், அவளே முன்பு அப்படித்தானே சொன்னாள்?  அதிரூபனிற்கு அவன் அவளிடம் சொல்லிவிட்டதில் எந்தவித தவறும் தெரியவில்லை. அவனை பொருத்தவரை அதை மீறி அவன் அவளை அதைப்பற்றியே நச்சரித்தால்தான் தப்பு! என்றிருக்க அவளது அன்றைய அழுத்தங்களை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா!? அதிலும் அவன் வந்ததே அப்பொழுதுதான் என்னும்பொழுது.

அதனாலையே பாலையே வெறித்திருந்தவளின் முகம் பார்க்க முயன்றவனாய், “என்னாச்சு மேக்ஸ்? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான் பரிவாய்.

“ம்ம்..ஒன்னுமில்ல அதி” என்றவளின் பதிலில் அவனுக்கு ஒரு சதவிகிதம் கூட திருப்தி ஏற்படாமல் போக,

“இல்ல! என்னவோ இருக்கு!! என்னனு சொல்ல மாட்டியா?” என்றான் விடாமல்.

ஆனால் அவள் அன்று சாதாரண மன நிலையில் இருக்கவில்லையே! நேற்று இவன் பேசிச் சென்றதென்றால், இன்று காலையில் பவிக்குட்டி.. நல்ல வேளை!! கொஞ்சம் தவறியிருந்தாலும் அந்த நாற்காலியுடன் வைபவி விழுந்து அவள் மேல் அந்த குட்டி டேபிளும் சரிந்திருக்கக்கூடும்… இப்பொழுது நினைத்துப்பார்க்கவும் மேகாவிற்கு உள்ளே உலுக்கியெடுத்தது. அப்படியொன்று நடந்திருந்தால்.. என்ன செய்திருப்பாள்? இவளது அஜாக்கிரதையால் பவிக்குட்டிக்கு எத்தனை பெரிய வலி ஏற்பட்டிருக்கக்கூடும்? அதிஷ்டவசமாய் எதுவும்  ஆகிருக்கவில்லை எனினும்.. பயத்தில் பவிக்குட்டி உடல் நடுங்கிய விதம்…
இன்னும் தன் அணைப்புக்குள் உதறிய பிஞ்சின் உடலை அவளால் உணர முடிந்தது. எவ்வளவு அழுகை!? அதுவும் ஏங்கி ஏங்கி.. இவள் முடிந்தளவு மகளை மகிழ்வாய் வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்க அதை இவளே அல்லவா பதம் பார்த்தும் வைக்கிறாள் என்று உள்ளே சிறு குற்ற உணர்வு நேரம் போக போகப் விகாரமானது.
ஒருகட்டத்தில் அப்படியொரு தூக்கம் உனக்கு தேவையா? என்றளவு இறங்கிவிட்டாள்.. இதெல்லாம் சாதாரணமானவையே! எல்லா தாய்மார்களுக்கும் தங்கள் பிள்ளை அடிபடும்பொழுது ஏற்படும் உணர்வே.. இன்னும் கொஞ்ச நேரம் அவளை அவள் போக்கில் விட்டிருந்தால்கூட அவள் மனம் ஒரு நிலையை அடைந்திருக்குமோ என்னவோ.. ஆனால் அதற்குள் அதிரூபனும் அதில் இணைந்துவிட.. காலையிலிருந்து உண்ணாத களைப்பு ஒரு புறமும் நேற்றிலிருந்து மனதளவில் அவள் கடந்து வந்தவையுமென கடைசியில் எல்லாமுமாய் சேர்ந்து அவளை ஒரேடியாக அழுத்தியது போலானது.

அது  அவள் வார்த்தைகளிலும் பிரதிபலித்தது.

“அதான் ஒன்னுமில்லைனு சொல்லிட்டேனே அதி..” என்றுவிட்டு அவள் மௌனமாகிவிட,

“என் மேல என்ன கோவம் மேக்ஸ்? என்கிட்ட நீ நேரடியாவே சொல்லலாமே.. ஏன் ஒரு மாதிரி இருக்க?” 

“நான் கோவமா இருக்கேனா?? அப்போ நீ எல்லாம் சரியாதான் செய்றியா அதி? நேத்து ஏன் அதி அப்படி கேட்ட? ஒரு  விஷயம்.. அதுவும் எப்போவோ பேசி முடிச்ச விஷயம்… அதை ஏன் மறுபடியும் எடுக்கற? ஏன் கேட்ட?”  என்றவளையே உற்று நோக்கியவனோ..

“நீயா மேக்ஸ் இப்படி பேசற? நான் அப்படி எதுவும் தப்பா கேட்டிடலையே… எனக்கு தோணினத சொல்லத்தானே செஞ்சேன்”

“ப்ளீஸ் அதி ஸ்டாப் இட்! புரிஞ்சுதான் பேசறியானே தெரியல..”

“மனோ மட்டுமில்ல நானும் எனக்கு கிடைக்காததெல்லாத்தையும் பவிம்மாக்கு குடுப்பேன்.. ஆனா அவன் அண்ணனா இருந்து குடுக்கறான்..நான் அப்பாவா இருந்து குடுக்க ஆசைப்படறேன்… நான் நல்லா புரிஞ்சுதான் பேசறேன் மேக்ஸ்”

“உன்னோட மேக்ஸ் வரையறைகளுக்குள் அடைப்படாதவளா இருக்கலாம் அதி.. ஆனா பவியோட ராகி எப்பவும் பவிக்காக மட்டுமே.. “ என்று என்றோ அவன் அவளிடம் ‘ நீ மட்டும் எப்பவுமே வரையறைக்களுக்கு அப்பாற்ப்பட்டவளா இருக்க மேக்ஸ்..’ என்றதை அவள் இன்று எடுத்து பேச ஒரு கணம் அதிரூபனுக்கு ஒன்றும் புரியாமல் போனது. ஏன்  மேக்ஸ் இப்படி பேசுகிறாள்? என்னவாயிற்று? என்றெழுந்த கேள்வி அப்படியே அமிழ்ந்துப்போக மாறாய் சூழ்நிலைக்குள் சிக்குண்டவனாய் அவனும்…

“பத்தொம்போது வயசுல உன்கிட்ட இருந்த மெச்சூரிட்டி இருபத்தேழு வயசுல எப்படி இல்லாம போச்சு?” என்றுவிட

அவளோ, “அதேத நானும் கேக்கலாம்ல? பத்தொன்பது வயசுல புரிஞ்சிக்க முடிஞ்ச ஒன்ன உன்னால் இருபத்தேழுல புரிஞ்சிக்க முடியாதானு?”

“அப்ப ஒரு தப்பு செஞ்சா அதையே  நான் இப்பவும் செய்யனுமா என்ன?” என்றான் விடாமல்

அவளும், “அதேதான் அதி!! ஏன் புரிஞ்சிக்கமாட்டேங்கற நீ?? சூழ்நிலை மாறுபடும்… ப்ரையாரிட்டீஸும்கூட… “ என்றுவிட

“நான் என்னைக்குமே உனக்கு ப்ரையாரிட்டியா இருந்ததில்லையா மேக்ஸ்?” என்றவனின் குரலில் இருந்ததென்னவோ? ஆனால் அது மற்றவளின் மனதை ஆழமாய் தாக்கியதென்பதே உண்மை. அவள் அதை அப்படி நினைத்திருக்கவில்லைதான்.. அவள் எதையோ நினைத்துப் பேச அது இப்படி வந்து நின்றுவிட்டது..

மறுபடியும் அவள் எதுவோ பேச வர அதிரூபனோ,

“வேணாம் மேக்ஸ்! இதுதான்.. இந்த பேச்சைதான் நம்பி.. நீ ரொம்ப தெளிவுனு நம்பினேன்.. ப்ச்! உண்மைலயே  நீ ஒரு குழப்பவாதி மேக்ஸ்!!” என்றவனின் குரலின் அடியில் இருந்தது அவளுக்கா புரியாது?

“அதி…” அவனை காயப்படுத்திவிட்டோம் என்பதை உணர்ந்த தருணம் அவளது கோபமும் அத்தனை நேர விவாதங்களும் ஒரே நேரத்தில் அர்த்தமற்றதாய் தோன்றியது. அதியிடம் அவள் ஏன் கோபம் கொண்டாள்? ஏன் எல்லா அழுத்தங்களையும் அவனிடம் கொட்டினாள்? என்று அவளுக்கு புரியாமல் போக அவனோ அவளை தடுத்து நிறுத்தியவனாக,

“வேணாம் மேக்ஸ்… ப்ளீஸ்! இந்த அதிரூபனுக்கு வயசு மட்டும்தான் மாறியிருக்கு மனசில்லை..” என்றுவிட்டு முகத்தை அழுந்த துடைத்துவிட்டு பின்னந்தலையை கோதியவாறு மறுபுறம் திரும்பியவன் பின் “வரேன்” என்று எங்கோ பார்த்து உரைத்துவிட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!