மென்சாரலில் நின்வண்ணமோ..!? (12)

சாரல்-12

அந்த மதிய வெயிலில் இருந்து தப்பும் முயற்சியில் சிலரும் சாப்பிட அடம்பித்த பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டியபடி உணவூட்டும் அக்கம்பக்கத்தினரும்… உணவு இடைவேளையில் காலாற நடைபயிலும் பக்கத்து கம்பனிகளில் வேளை பார்ப்பவர்களுமென அந்த பூங்காவினுள் மனிதர்கள் பலவிதம்..!! ஒவ்வொருவரும் ஒருவிதம்.. அவர்களுக்கென்று ஒரு கவலை.. ஆசை… தொண்டையை அடைக்கும் துக்கம்.. தூரே நின்று பழிப்பு காட்டும் தூக்கம்… மனம் நிறைந்த தருணங்கள்.. மனதை அழுத்தும் கணங்களென அவரவர் அவரவரின் அக உணர்வுகளை புற உலகிற்கு காட்டாமல் அச்சூழலுக்குப் பொருந்திப்போயினர்.

அவர்களுள் ஒருவனாய்.. அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாதவனாய்.. இறுகிய முகத்துடன், கல் பெஞ்சொன்றை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்ததுபோல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான் உதய்.

சாதாரணமாய் அவனை அப்பொழுது பார்ப்பவர்களுக்கு அவ்வளவு அமைதியாய் அவன் அமர்ந்திருப்பதுபோல தெரிந்தாலும் அவனுள் புயல் வீசாதக் குறையாக உள்ளத்தின் கடைசித் துண்டுவரை சுக்கல் சுக்கலாய் நொறுங்கிக் கொண்டிருந்தது.

அவனுக்கு யாரையும் பார்க்க தோன்றவில்லை. எவரிடமும் பேச பிடிக்கவில்லை. எங்கேனும்.. ஆள் அரவமற்ற இடத்திற்கு ஓடிவிட வேண்டும்போல இருந்தது. அவனது உலகமே ஒரே நொடியில் மாறிப்போனதே! அவன் எந்த நிலைக்கு வந்துவிட்டான்..?!

மனம் நிறைந்தவளை இழந்துவிட்டான்! ஏனோ அவனை எல்லோரும் கேவலமாய் பார்ப்பதுபோலொரு உணர்வு! எவ்வளவு பெரிய தவறை செய்து வைத்திருக்கிறான்!! உதய் என்ற தனிமனிதனுக்கிருந்த உலகம் நிலைகுலைந்தது. காதலை இழந்தான்.. இப்பொழுது நட்பையும்  அவனே தூக்கி வீசியிருக்கிறான்.. ஆம்! அன்று ஹெலனின் கேபினில் இருந்து வெளியேறியவனுக்கு அவனை நினைத்தே அப்படியொரு வெறுப்பு உணர்வு எழுந்தது.

அவன் வாய் திறந்து எதையும் பேசியிருக்கவில்லைதான். ஏன், அவன் அப்படியெல்லாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இருந்தும் அவன் நண்பன் பேசியபொழுது அவன் காத்த மௌனம்… அதுவே அவனை கொன்றது! அவனது அந்த மௌனம் அவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. தப்பு முழுதும் தேஜஸின் மேல்தான் என்று மற்றவனின் மேல் பழியை தூக்கிப்போட அவன் தயாராயில்லை! அவன் மனசாட்சியைக் கேட்டு நடப்பவன். அவனால் அதை செய்ய முடியாது. தேஜஸ் பேசியதற்கு தானும் ஒரு காரணம் என்பதை அறிந்தேதான் இருந்தான்.

கடைசி சில நாட்களாக, அதாவது தென்னல் இவனை நேரிடையாக மறுத்த நாளிலிருந்தே இவன் தனி உலகொன்றினுள் தொலைந்துப் போனான். சுற்றம் மறந்தான். முன்பெல்லாம் தேஜஸ் இப்படி பேச யோசிப்பான் ஏனெனில் அவன் உதயை அறிவான். பல முறை அவர்களிடையே இதை வைத்து சண்டை வந்திருந்தது. தேஜஸ் தென்னலைப் பற்றி பேச ஆரம்பித்தாலே இவன் அவளைப் பற்றி நானறிவேன் ரேஞ்சில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுவான். ஆனால் கடைசி சில நாட்களாக இவனுக்கு  தேஜஸின் பேச்சிற்கு  கூட மறுபேச்சு பேசத் தோன்றவில்லை ஏனெனில் அவன்தான் மற்றவனின் பேச்சுக்களை உள்வாங்கவேயில்லையே! அவனது கவனக் குறைவிலும் மெத்தனமானப் போக்கிலும் உதய் ஆழமாய் காயப்பட்டுவிட்டான் என்று எண்ணினானோ என்னவோ அதுவரை ஒரளவு பேசியவனின நாவு அன்று எல்லையை கடந்துவிட்டிருந்தது.

முதலில் எல்லாம் தனக்காக பார்த்துதான்  தேஜஸ் இப்படி பேசுகிறான் என்று நினைத்திருந்த உதய்க்கு வெகு தாமதமாகவே புரிந்தது. தேஜஸின் பேச்சுக்கும் தன் காதலுக்கும் சம்பந்தமில்லையென.. அவனுக்கு மனோவை பிடிக்கவில்லை! மேகாவின் வீடு வரை செல்லும் மனோவையும் பிடிக்கவில்லை… அவன் தோளில் கைப்போடும் தென்னலையும் பிடிக்கவில்லை.. சிலருக்கு சிலரின் மேல் ஏன் எதற்கென்று தெரியாமலே ஒருவித வெறுப்பும் காரண காரியமற்ற  போட்டியும் உண்டாகுமல்லவா? அப்படியொன்றுதான் தேஜஸினதும்.

அவனுக்கு ஏன் மனோவை பிடிக்கவில்லை என்று கேட்டால் அவனிடமிருந்து பதில் வருவது.. சந்தேகம் தான்! இருந்தும் அவனுக்கு மனோவை பிடிக்கவில்லை! அவனை பார்க்கும்பொழுதே வெறுப்பாகும் அதே தேஜஸ்தான் மனோவின் ஒவ்வொரு நகர்வையும் நோட்டமிடுவதும்!

அது என்னவோ.. பிடிக்காதவனிடம் இருந்து விலகிப்போகாமல் இவனது எண்ணஙகளும் நகர்வுகளும்கூட அவனை நோக்கியே இருந்தது. நடக்காத ஒரு யுத்தத்தை அவனே வெறுப்பால் உண்டாக்கி அதில் எப்படியேனும் மனோவை வென்றுவிட எண்ணுகிறான். அவனை ஏதோ ஒரு விதத்தில் இந்த மனோ தோற்க்கடிப்பதாய் நினைக்கிறான். அதை அவமானமாய் கருதி அவனை பழிக்கு பழியாய் வெல்லவும் நினைக்கிறான்.. ஆனால் தான் எதில் மனோவிடம் தோற்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லையே!! இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணியல்லவா இத்தனை நாள் தேஜஸ் வன்மத்தை சேமித்திருக்கிறான்!!

எண்ணிப்பார்க்கவே ஏதோபோல் இருந்தது உதய்க்கு. இவன் மட்டும் எந்த விதத்தில் உசத்தியாம்!? தன் சுய பச்சாதாபத்தால் தனதிலேயே உழன்று பிரச்சனையை பெரிதாக்கியாயிற்று. 

கோடுகளற்ற வெள்ளை காகிதத்தினுள் சிக்கிக் கொண்டதுபோல் உணர்ந்தான் உதய். மனம் முழுதும் வெறுமையை தவிர்த்து வேறன்றும் இல்லை! கூடவே சிறு குற்ற உணர்வும்.

அன்று கேபினிலிருந்து வெளியேறியவனுக்கு மற்றொரு நண்பன்  முதலில் அங்கிருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டால் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்க.. அது முடிந்து வெளியேறியவனால் அவனை கடந்து சென்ற யாரையும் நிமிர்ந்து பார்க்க இயலவில்லை.. ஏனோ அவனமானமாய் உணர்ந்தான். அதுவும் மேகா அவனுக்காக பேசியதில்…  தான் தரம் தாழ்ந்துவிட்டதாய் ஓர் உணர்வு உந்தித்தள்ள க்ரௌண்டின் மூலையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

உதய் பின்னாலையே அவனது நட்பு வட்டமும் ஓடி வந்திருந்தது. அவர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரிந்தளவு அறுதலும் விசாரிப்புகளுமாய் இருக்க உதயிடம்தான் எதற்கும் பதிலில்லாமல் போனது. அவன் குனிந்த தலையை நிமிராமல் தரையையே வெறித்திருக்க அருகில் அமர்ந்திருந்த ஒருவன் தான்,

“மச்சான்! அந்த பக்கம் பேண்டெய்ட் சரியா ஒட்டல..” என்று அவன் தலையை நிமிர்த்த முயன்று அதை சரி செய்ய..

“நான்தான் அப்போவே சொன்னேனே உதய்! அவ சரியில்லனு.. இப்போ பாரு!! உண்மையை சொன்னதும்  அவ மூஞ்சி எப்படி போச்சு பார்த்தல்ல…” என்றவாரே வந்த தேஜஸை கண்ட உதயிடம் அத்தனை நேரமிருந்த அமைதி காணாமல் போயிருந்தது.

பேண்டெய்டை சரி செய்துக்கொண்டிருந்தவனின் கையை விலக்கிவிட்டவன் விறுட்டென எழுந்து வந்து மற்றவனின் சட்டையை கொத்தாய் பிடித்துக்கொண்டான்.

“என்னடா சொன்ன!? இல்ல என்ன சொன்னேனு கேக்கறேன்??! நீ பேசின பேச்சுக்கு தென்னல் இடத்துல நான் இருந்திருந்தா செருப்ப கழட்டி சாத்திருப்பேன்!! அவளும் அதை செய்யக்கூடியவதான்… அப்படிப்பட்ட அவளையே கலங்க வச்சிட்ட!! படிச்சு படிச்சு சொன்னேனேடா அவங்க ஃப்ரெண்ட்ஸு தப்பா பேசாதனு! எனக்கு தென்னலப்பத்தி தெரியும்னு… “ என்று நெருக்க அவனோ உதயை பிடித்து தள்ளியவனாக,

“உனக்கு தெரிஞ்ச லட்சணம்தான் தெரியுதே! எது? கட்டிப்பிடிச்சிக்கிறதெல்லாம் உனக்கு ஃப்ரெண்ட்ஷிப்லயா வருது!?  நானும் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து பார்த்துட்டுதானே இருக்கேன்.. ஒன்னு அவ இவன் பெஞ்ச்ல இருப்பா இல்ல இவன்  அங்க போயிர வேண்டியது. ஒன்னா கேண்டின் போறதென்ன! லைப்பரரிலேயே தவங்கெடக்கறது என்ன! இது போதாதுனு கட்டிப்புடி வைத்தியம் வேற! ம்ஹ்ம் அவ நல்லவ.. உனக்காக பேசின நான் கெட்டவன்ல?”

“மண்ணாங்கட்டி!! ஏன் நான் உன்ன கட்டிபுடிச்சதில்ல!? நாம கேண்டின் போனதில்ல?? நாம ரெண்டுபேரும் சேர்ந்தே தானே உக்காந்துருக்கோம்? பேசனும்ங்கறதுக்காக பேசாத தேஜஸ்!! தென்னல் அப்படிப்பட்டவ இல்ல! ஒருவேளை அவ அப்படியே இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாதது! என்ன சொன்ன? என்ன சொன்ன?? நீ எனக்காக பேசினியா?? மனசாட்சிய தொட்டு சொல்லு!” என்றவன் தன்னை தாங்கலாய் பிடித்திருந்தவனிடம், “டேய் விட்றா!” என்று விடுவித்துக்கொண்டு

“மனசாட்சிய தொட்டு சொல்லு பார்ப்போம்!! நீ எனக்காகத்தான் பேசினேனு… “ என்று தேஜஸின் கண்களையே உற்று நோக்கியவாறு கேட்டவன்..

“உனக்கு மனோவ பிடிக்காது! அதுவும் காரணமேயில்லாம!! உன்னோட கண்றாவி காம்ப்ளக்ஸ என் காதலோட கலந்துட்ட…  சரி நான் உன் ஃப்ரெண்ட்.. ஆனா மேகா மேம் என்னடா பண்ணாங்க உன்ன!!?  உன் அக்காவ விட ரெண்டு இல்ல மூணு வயசு பெரியவங்களா இருப்பாங்களா? அவங்களப்போய்.. எப்பட்றா உன்னால இப்படி பேச முடிஞ்சது?? தென்னல் உன்ன என்னடா பண்ணா??  ஃப்ரெண்டு ஃப்ரெண்டுனு கூடவே சுத்திட்டு எப்பட்றா உன்னால என் ஃபீலிங்க்ஸோட விளையாட முடிஞ்சது!!? இதெல்லாம் தெரிஞ்சப்பறமும் ஏண்டா இவன் நமக்காக சண்டைப்போட்டானு பாக்கறீயா!? அது நான் என்னோட ஃப்ரண்ட்ஷிப்க்கு செஞ்சது..  நான் முட்டாளில்ல தேஜஸ்!! ச்ச!!” என்று அவனை விட்டு விலகியவனோ,

“இனி என் மூஞ்சிலையே முழிக்காத!!” என்றுவிட்டு நேற்று வந்ததுதான், இன்று.. இப்பொழுதுவரை அத்தனை அழைப்புகள்! எல்லாம் மற்ற நண்பர்களிடமிருந்து. எதையும் எடுத்து பேசும் மன நிலையில் அவனில்லை.

தென்னல் என்ன நினைப்பாள்? என்ற கேள்வி எழுந்த நொடி இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோனது. அவன் அவளை முதல் முறை கவனித்த சூழலே அப்படிப்பட்டதாயிற்றே!

“சித்திகள் ஆப்பிரிக்காவின் “பன்ட்டு” (Bantu) எனும் பழங்குடி வழி வந்தவர்கள். கர்நாடகாவின்  உத்தர் கன்னடா மாவட்டப் பகுதிகளில், ஆப்பிரிக்கர்களையொட்டிய உருவ ஒற்றுமை கொண்ட சித்திகள் பலரையும் பார்க்க முடியும். அதேபோல், குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, ஹைதரபாத் போன்ற இடங்களிலும் சித்திகள் இருக்கிறார்கள். இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த சில சித்திகளும் இருக்கிறார்கள்… (Ref.)”

கதவினருகே அடர்பச்சை நிற பலகையில் முத்து முத்தான கையெழுத்தில் நேர்த்தியாய் எழுதப்பட்டிருந்ததை எத்தனையாவது முறையாகவோ வாசித்துப் பார்த்தாள் தென்னல். அவளுக்கு தமிழ் வாசிக்கச் சொல்லிக்கொடுத்த பெருமை ஸ்வர்ணத்துக்கே!

காலை மணி எட்டு , எட்டரை இருக்கக்கூடும். சுறுசுறுப்பாய் அங்குமிங்கும் அலங்காரத்துடன் சிலரும் அடித்துபிடித்தபடி சிலரும் ஓடிக்கொண்டிருந்தனர்.

சில வாரங்களாகவே திட்டமிட்டு அதற்கேற்றார்போல வடிவமைத்தென சிறுக சிறுக அவர்கள் தொடங்கியதன் முழு பலனையும் அவர்கள் அடையப்போகும் நாளல்லவா அது!?

அவர்கள் கல்லூரியில் குறிப்பிட்ட வருடங்களில் நடக்கும் ஃபெஸ்ட் அது! அதுவும் மிகப் பெரியளவில்… வெளியாட்களில் இருந்து சீஃப் கெஸ்ட்டாக வெவ்வேறு துறையில் சாதித்தவர்கள்வரை அனைவரும் பங்கேற்கும் விழா அது.
ஒவ்வொரு தரமும்  பொதுவாய் ஒரு தீமை(Theme)  எடுத்துக்கொண்டு அதை ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட அதை அவ்வகுப்பு ஆசிரியரின் தலைமையில் மாணவர்களே முழுக்க முழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தென்னலின் முதல் வருடம் அது. அந்த வருடம் அவர்கள் எடுத்த தீம் இந்தியாவின் பழங்குடி மக்களும் அவர்களது கலாச்சாரமும்!!  ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு மாநிலமும் வகையுமாய் பிரித்துக் கொடுத்திருந்தனர். அப்படி இவர்களுக்கு வந்ததுதான் சித்தி (Siddhi) உத்தர கர்ணாடகாவை வசிப்பிடமாக கொண்ட பழங்குடியினரும் பக்கத்து வகுப்பிற்கு ஆசாமின் பழங்குடியும். அடுத்தடுத்து வகுப்புகள் இருப்பதால் இன்னும் சிறப்பாக செய்தாலொழிய இவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியும். அதுவும் பழங்குடி மக்களில் இருந்து முன்னேறி நேஷனல் அளவில் விளையாடி வென்ற வீராங்கணையின் கையிலிருந்து!!  அம்மக்களின் கலாச்சரம், மொழி, உணவு, வசிப்பிடம் முதல் வழிபாடு ஸ்தலம் வரை எல்லாவற்றையும் அவர்கள் ஒரே ஒரு அறைக்குள் காட்டிட வேண்டும்.  அதிலும் எதையும் வெளியில் இருந்து வாங்காமல் செய்ய வேண்டும்.. மூலப் பொருட்க்களை மட்டும் வாங்கிக்கொள்ளலாம். அப்படி ஒவ்வொன்றாய் செய்து இதோ.. இப்பொழுது இவள் முன் அந்த பழங்குடி மக்களின் வாழ்வியலை முழுதாய் கொண்டு வருவது கடினம் எனினும் ஓரளவு கொண்டு வந்துவிட்டனர். அதீத உழைப்பாலும் ஒற்றுமையாலும் மட்டுமே இது சாத்தியம் என்று அவள் அறியாமல் இல்லை. இல்லையெனில் நேற்று இவள் டேபிளின் மீதேறி இறங்கும் சமயத்தில் கீழிருந்த பெய்ண்ட் டப்பாவை மிதித்துவிடக்கூடாதென பார்த்ததில் தடுமாறியவள் ஒரு நிலையில் நின்றுவிட்டாள்தான்! ஆனால் கால்தான் எங்கோ இசக்கு பிசகாய் பிடித்துக்கொண்டது.

ஒருவர் அவளை ஒருவார்த்தை சொல்லவில்லையே! “நீ இவ்வளவு செஞ்சதே அதிகம் தென்னல்.. இதுக்கடுத்து நாங்க பாத்துக்கறோம்” என்றனரே தவிர வேறெதுவும் சொல்லவில்லை. மாறாய் அவ்வப்பொழுது வழங்கப்பட்ட பிஸ்கட்டையும் சோடாவையும் இவளிடம்  மனோ கொண்டு வர அவள் கைகளில் காய்ந்திருந்த பெயிண்ட்டை பார்த்துவிட்டு வாயில் பிஸ்கட்  ஒன்றை திணித்துவிட்டே நகர்ந்தான்.

மறுநாளுக்குள் முடிக்க வேண்டும் என்பதால் அனைவரும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் இவள் பிஜிக்கு கிளம்பியிருந்தாள். ஏனெனில் அவர்கள் கிளம்ப மாலை ஏழு வரைக்கூட ஆகலாம்.

லேசாக வீங்கியிருந்த காலுக்கு ஒத்தடம் கொடுத்தவள் ஆஸ்பத்திரி செல்லும் அளவுக்கூட தென்பில்லாததைப்போல் உணர்ந்ததால் வந்தவுடன் உறங்கியதுதான் தெரியும். அந்த வாரம் முழுதும் உழைத்ததின் விளைவு அப்படியொரு அசதியும் தூக்கமும்! எழவே மனம் வராமல் போக எப்பொழுதும் நாலரைக்கு எழுபவள் அன்று எழுந்தது என்னவோ ஆறரைக்கே! அதிலும் அன்று அவர்களது ட்ரெஸ் கோட் வேறு ஆண்களுக்கு வெள்ளை வேட்டி கறுப்பு சட்டையும் பெண்களுக்கு கறுப்பு நிற சேலையுமென முடிவு செய்திருக்க அவசர அவசரமாய் கிளம்பியவளுக்கு உண்ணக்கூட நேரமில்லாமல் போனது.

இதில் அன்று அவளுக்கு மென்ஸஸ் வேறு! அதுவும் முதல் நாள்.. எப்பொழுதும் மாதவிடாயின்  முதல் நாளில் முணுமுணுவென சிறு தலை சுற்றலும் வாயாலெடுப்பது போலவும் இருந்துக்கொண்டே இருக்கும் அவளுக்கு. இதில் இன்று அவள் சாப்பிட வேறு இல்லை! அங்கு வந்துப் பார்த்தால் கடைசி கட்ட ஏற்பாடுகளாய்,  இருந்த ஒன்றிரண்டு பெஞ்சுகளையும் வெளியில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க கொஞ்ச நேரம் அங்குமிங்குமாய் நின்று பார்த்தவளுக்கு அதற்குமேல் முடியாதென்று தெளிவாகிப்போகவே காலில் வேறு சுருக் சுருக்கென அவள் அடியெடுத்து வைக்கும்பொழுதெல்லாம் வலித்துக் கொண்டிருக்க அங்கிருந்த பெஞ்சை நோக்கி நடையை கட்டினாள்.

முதல் பெஞ்சில் இருந்த இடம் முழுதும் சக மாணவர்களால் நிறைந்திருக்க இரண்டாவது பெஞ்ச் மேலிருந்த டெஸ்கை சற்று தள்ளி வைத்தவளாக கிடைத்த சிறு இடத்தில் அமரப் போனவளை தடுத்து நிறுத்தினாள் அத்தனை நேரம் அவளுடன் நின்றிருந்த நிதி.

“அங்க எங்க போற?” என்றவளை வினோதமாய் ஏறிட்டவள்.

“நிக்க முடியல நிதி கொஞ்ச நேரம் உக்காரப் போறேன்..” என்றுவிட மற்றவளோ,

“ அங்க ஃபுல்லா பாய்ஸ்தான் இருக்காங்க! நீ மட்டும் போய் உக்காந்த..” என்றிவள் முடிப்பதற்குள் அமர்ந்திருந்தாள் தென்னல்.  அவளுக்கு முடியவில்லை! இடம் வேண்டும்! அது இல்லாமல் போக அவளே ஏற்படுத்தி அமர்ந்துவிட்டாள் அவ்வளவே! அதை தவிர்த்து பக்கத்தில் இருப்பது யார் எதிரில் இருப்பது யாரென்றெல்லாம் பார்க்கும் நிலையிலா அவள் இருக்கிறாள்!?  இருந்திருந்தாலும் அவள் இதையேதான் செய்திருப்பாள்.

தனது வேலைகளில் மூழ்கியிருந்த மனோ தென்னல் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்துவிட்டதை கவனித்தவனாய் கையிலிருந்த வேலையை மற்றொருவனிடம் ஒப்படைத்துவிட்டு அவளிடம் விரைந்தான். அவள் முகமே சரியில்லை என்பதை குறித்துக் கொண்டவனாக..

“என்னாச்சு தென்னல்? ஏன் ஒரு மாதிரி இருக்க? தனியா வேற உக்காந்துருக்க..”

“நிதி இவ்வளோ நேரம் இங்கதான் இருந்தா… இப்போதான் உள்ள போனா…  நாட் ஃபீலிங் வெல் மனோ… “  அவள் கையை பற்றியவன் அது வேறு சில்லென்றிருக்க,

“என்ன பண்ணுது தென்னல்? ஏன் சில்லுனு இருக்கு? ஏதாவது சாப்பிட்டியா நீ? கால்ல எப்படி இருக்கு? அதனாலையா?”

“ப்ச்! அதால இல்ல மனோ… யூஷுவல்தான்! வயிறு வலி.. பீரியட்ஸ்.. நேத்து கால்ல அடிப்பட்டதால அதிகம்  நிக்க முடியல.. மத்தபடி அம் ஆல்ரைட்!”

“காலைல சாப்பிட்டியா!?”

“லேட்டாச்சு.. அது மட்டுமில்ல நான் அங்கருந்து நேரத்தே எறங்கி…”

“உன் பேக்லதான் ஒரு சாக்லெட் ஃபேக்ட்ரி வச்சிருப்பியே..” என்று அவள் பையை தேட அவளோ,

“அது நேத்துதான் காலியாச்சு மனோ.. இன்னைக்குதான் மறுபடியும் வாங்கனும்”

“ப்ச்!! என்ன தென்னல் இது!? சாப்பிடக்கூட செய்யாம… இரு நான் போய் பிஸ்கட் வாங்கிட்டு வரேன்..” என்றவனை தடுத்தவள் பையிலிருந்த பர்ஸை எடுத்து கொடுத்தவளாய்,

“பிஸ்கட் வேணாம் மனோ.. சாக்லெட் வாங்கிட்டு வா.. அதான் டக்குனு சரியாக்கும்..”

இஷ்டமில்லாவிடினும் அவள் பர்ஸை பெற்றுக்கொண்டான். அவள் அப்படிதான். நெருங்கிய நண்பனாய் இருந்தாலும் ஒரு சில  விஷயங்களில் அவள் ஒரேயடியாய் நின்றுவிடுவாள் அதில் இதுவும் ஒன்று.

மனோ கேண்டீனுக்கு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே முன் பெஞ்சிலிருந்த சிலர் பேசிக்கொண்டே எழுந்து சென்றுவிட ஒருவன் மட்டும் மொபைலுக்குள் தலையை நுழைத்தவாறு அமர்ந்திருந்தான். நிதியும் வந்துவிட உட்கார இடம் தேடியவள் முதல் பெஞ்சிலிருந்தவனை கூப்பிட்டு..

“பொண்ணுங்க நாங்களே நின்னுட்டிருக்கோம்.. நீ உக்காந்திருக்கியே..” என்று கேட்டுவிட அதில் இருவரின் முகமும் இருவேறு விதமாய் மாறியது. அத்தனை நேரம் அமர்ந்திருந்தவன் நிதியின் இந்த கேள்வியில் எழுந்துவிட்டான். அவனது முகமே ஒரு மாதிரியாகிப்போக தென்னலுக்கோ அதை பார்க்க சகிக்கவில்லை!  பரிதாபமாய் நின்றிருந்தவனை பார்த்தவளுள் அப்படியொரு கோபம்..!!

“அது என்ன நிதி.. பொண்ணுங்க நாங்களே நின்னுட்டிருக்கோம்!?  ஏன் எந்தவிதத்துல நீ அவனுக்கு குறைஞ்சிட்டனு இப்படியொரு கேள்வி!? ம்ம்??” என்று நிதியிடம் கேட்டவள் மற்றவனிடம் திரும்பி,

“இல்ல! நீ எழுந்துருக்காத! விஜய்..” என்றுவிட நிதி என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தவள்

“இல்ல ஃபன்னுக்குதான்..” என்க

“எது ஃபன்!? நீ நினைச்சிருந்தா என்னப்போல பெஞ்ச்ச தள்ளிவச்சிட்டு உக்காந்திருக்கலாம்.. இல்ல அவன் உக்காந்துருக்க பெஞ்ச்லயே அவ்ளோ இடம் இருக்கு.. அங்க உக்காந்துருக்கலாம்.. அதவிட்டுட்டு இது என்ன கேள்வி?? பொண்ணு நானே நின்னுட்டிருக்கேன்னு… அப்போ உன்ன நீயே கீழிறக்கிக்கிறியா!? உனக்கு உடம்பு சரியில்லன்னா பரவால்ல.. அதுக்கூட கேக்கறதுக்கு ஒருவிதம் இருக்கு…” என்க

“இல்லை.. பரவால்ல!” என்ற விஜய்  அவன் தூரத்து நண்பனுக்கு கையசைத்து நகர்ந்துவிட நிதிதான் என்ன சொல்ல என்று புரியாமல் நின்றிருந்தாள்.

காரணம்,  கோபமாய் பேசுபவளிடம் சண்டைபிடிக்கலாம்! குரலை உசத்தினால்கூட பரவாயில்லை.. ஆனால் இவள் அமர்ந்த குரலில் அல்லவா கேள்விகளை அம்பாய் தொடுக்கிறாள்… இதற்கு எப்படி பதிலளிக்க?? என்று நின்றிருந்தவளின் கவனம் மனோவிடம் திரும்பியது. 

கேண்டீனுக்கு சென்றவன் கையில் பெரிய சைஸ் சாக்லெட்டுடன் வந்தான். அதன் ராப்பரை பாதி பிரித்து அவளிடம் நீட்ட  வாங்கிக்கொண்ட தென்னல் அதை முழுதாய் பிரித்து ஒரு துண்டை அவனிடமும் நிதியிடமும்  பகிர்ந்துவிட்டு தானும்  ஒன்றை வாயிலிட்ட சில மணித்  துளிகளில் ஓரளவு உள்ளுக்குள் இதமான உணர்வு ஒன்று உதித்தது.

“சின்னதா வாங்கிருந்தா நிறைய வாங்கிருக்கலாம்ல..” என்றவளை முறைத்தவனோ

“கஞ்சத்தனம் பண்ண நல்ல நேரம் பார்த்த நீ!” என்றுவிட்டு “கேண்டீன் போலாமா தென்னல்? ஏதாவது சாப்பிடலாம்.. இப்ப உனக்கு கொஞ்சம் பரவால்லதானே? நடக்கலாம்ல..” என்க

“ம்ம் போலாமே!” என்றவள் நிதியிடம் திரும்பி, “கேண்டீன் போய்ட்டு வரேன் நிதி” சாதாரண முகமாய் சொல்லிவிட்டு  நகர நிதிக்கோ என்ன கேரக்டர்டா இவ மொமெண்ட் தான்!!

அத்தனை நேரம் உக்காந்திருந்ததாலோ என்னவோ கால் சற்று நடந்ததும் வலிக்கத் தொடங்க அவள்  தோளில் கை போட்டவனாக பொறுமையாய் மனோ நடக்க அவளோ,

“என்ன பார்த்தா உனக்கு பேஷண்ட் மாதிரியா தெரியுது?”  என்றுவிட  அவன் கேலிச்சிரிப்பு ஒன்றை சிந்தினான்.

“சும்மா வா தென்னல்! நீ அந்த நிதிய பேஷண்ட் ஆக்காம இருக்கறவரைக்கும் ஓகே…”  அவன்தான் வரும்போதே பார்த்துவிட்டானே அங்கு நடந்ததை.

“ப்ச்! அப்படி பேசக்கூடாதுல மனோ.. அவன் முகத்த நீ பார்க்கல.. பாக்கவே அவ்ளோ கஷ்டமாகிப்போச்சு!!”

“ம்ம்.. விடு தென்னல்! நல்ல வேளை நீ சத்தம்போடாததால யாரும் கவனிக்கல.. இல்லன்னா நிதிக்கும் கஷ்டமாகியிருக்கும்..”

“ம்ம்”

“நல்லவேளை! கேண்டீன்ல ஐஸ்க்ரீம் ஸ்டாக் இருக்கு…  எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டா கூட்டமாகிடும்.. ஈவ்னிங் டான்ஸ் பெர்ஃபார்மென்ஸ் பார்க்கப்போறீயா?” என்று பேச்சை மாற்றிவிட்டான்.

“இல்ல மனோ பிஜி போயிடலாம்னு பாக்கறேன் அப்பறமா..” என்றவள் சீரியஸ் மோடை கை விட்டவளாய்.. “அதுசரி உனக்கு இந்த வேஷ்டி கஷ்டமாயில்ல?”

“யார்  சொன்னா!? அதுவே ஏதோ க்ரிப்ல நிக்கிது.. பெல்ட் புண்ணியத்துல.. முன்ன பின்ன கட்டியிருந்தாதானே..”

“ஓஹோ… அப்போ பெல்ட்தான் க்ரிப்னு சொல்ற..” என்றவளை உற்று நோக்கியவன்,

“உன்ன!!” என்று பல்லைகடிக்க அடக்கமாட்டாமல் சிரித்தவளையே மற்றொருவன் கவனித்துக் கொண்டிருந்ததை இருவரும் அறிந்திருக்கவில்லை..

கடைசி கட்ட டெக்கரேஷன்களில் மும்முரமாய் இறங்கியிருந்த உதயின் கவனத்தை கலைத்தது நிதியின் குரலே! அவனும் அங்குதான் இருந்தான். ஆனால் கதவுக்கு உட்புறமாய் நின்றிருந்தான். தென்னல் பேசியதனைத்தையும் கேட்டிருந்தவனுக்கு அவளை காணும் ஆவல் எழ அவன் வெளியில் வரவும் மனோவுடன் தென்னல் கேண்டீன் கிளம்பவும் சரியாய் இருந்தது.

சன்னமான சிகப்பு நிற பார்டருடனான  கறுப்பு நிற சில்க் காட்டன்  ரக சேலைக்கு அதே சிகப்பிலான காட்டன் ப்ளௌஸும்.. முழு கூந்தலையும் ஒரே  ஹேர்பேண்டில் அடக்கியிருந்த விதமும்…  என்றும் இல்லா திருநாளாய் அன்று மட்டும் திடீரென மைவிழிகளுக்கு நடுவே காட்சியளித்த அந்த  மெரூன் நிறத்திலான சிறு வட்ட வடிவ பொட்டுவரை எல்லாம் மனதில் பதிந்துப்போனது.

அவன் அவளை அதற்கு முன்னும் பார்த்திருக்கிறான்தான். ஏன் இருவரும் ஒரே வகுப்பெனும்பொழுது பல முறை கடந்திருக்கிறான்தான். ஆனால் முதல் முறையாக இன்று கவனிக்கிறான். அந்நாளின் நினைவுகள் முகில்களுடன் நகர்ந்தது.

ஒற்றை வரிக்கே கேள்வி கேட்டவள்.. நியாயமான கேள்வியும்கூட! அப்படிப்பட்ட தென்னல் இவனைப் பற்றி இப்பொழுது என்ன நினைப்பாள்!? நிராகரித்ததால் அவளைப் பற்றி தவறாக பேசினான் என்றா? நிச்சயம் அவளது பார்வையில் இப்பொழுது தான்  ஒரு அக்மார்க் பொறுக்கியாகத்தான் இருப்போம் என்று எண்ணியவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… நினைக்க நினைக்க உள்ளம் கொதித்தது. அவனால் தென்னலை இழக்க முடியாது… அவளது வெறுப்பை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை…

******

மேகா வீட்டிலிருந்து கிளம்பிய அதிரூபனின் மனம் ஒரு திசையில் ஓட… எண்ணங்களின் பிடியில் சிக்கித் தவித்தவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியிருந்தான். சற்று சுதாரித்தவனாய் அவன் விழித்துக்கொள்ள அப்பொழுதே கவனித்தான். எதை எதையோ சிந்தித்தபடி அவன் வெகு தூரம் வந்துவிட்டதை. திருப்பி நடக்கவோ.. வேறெங்கும் செல்லவோ தோணாமல் போக.. அருகிலிருந்த பூங்காவினுள் நுழைந்தவன் அந்த சிமெண்ட் பாதையில் நடக்கத் தொடங்கினான்.

சுற்றிலும் யூகலிப்டஸ் மரத்தால் நிறைந்திருந்த இடம் அவன் நாசியையும் அதன் வாசத்தால் நிறைத்தது.  யாரோ விசிலடித்த சத்தத்தில் திரும்பியவன் அப்பொழுதே கவனித்தான் அவனுக்கு நேரெதிரில்.. பார்க்கின் மறுபுறம் அமர்ந்திருந்த அவனை..

அவனைக் கண்ட கணத்தில் அத்தனை நேரம் அவனுள் இருந்த குழப்பங்கள் யாவும் மாயமாகியிருக்க நினைவிலாடியதெல்லாம்.. “என்னாலதான்” என்ற தென்னலின் குரலும்.. குற்ற உணர்வில் இறுகிக் கிடந்த மனோவின் முகமுமே!!

ஒரு முடிவு எடுத்தவனாய் ஆழ மூச்சிழுத்துவிட்டு அவனை நோக்கி நடையை கட்டினான் அதிரூபன்.

*****

“உதய்?” என்ற கேள்வியோடு தன்னெதிரில் நின்றிருந்த புதியவனையே புரியாத பார்வை ஒன்றுடன் பார்த்திருந்தான் உதய்.

“நான் அதிரூபன்..”  என்று புன்னகைத்தவனை பரிச்சயமில்லா பாவத்துடன் மற்றவனின் புருவங்கள் சுருங்கிட அதை உணர்ந்தவனாய்,

“மேகாவோட ஃப்ரெண்ட்!” என்றதுதான் தாமதம். அத்தனை நேரம் அவன் முகத்திலிருந்த கேள்வியும் குழப்பமும் மாறி இறுக்கமாகியிருந்தது. இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்கும் இளையவனை கண்டவனோ,

“உதய்..?”  என்று தொடங்க அதற்குள் மற்றவனின் குறுக்கீடு.. வெகு வேகமாய் வந்து விழுந்தது.

“என்ன.. திட்டப்போறீங்களா.. இல்ல அடிக்கப்போறீங்களா..??” என்று உணர்ச்சியற்ற குரலில் அதிரூபன் எதை கண்டானோ,

“நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட உதய். உன்ன அடிக்கவோ திட்டவோ நான் யாரு?” என்ற அதியையே ஒரு கணம் வெறித்த உதய் திரும்பிக்கொள்ள ஆழ மூச்சிழுத்துவிட்டவனாய்,

“நீ தப்பானவன் இல்ல உதய்.. ஆனா தப்பா பேசாதன்னுதான் சொல்றேன்” என்றான் அவன்.  புரியாத பார்வை ஒன்றுடன் நிமிர்ந்து நோக்கியவனின் புருவமத்தியில் சிறு முடிச்சிட

“புரியல..” என்றான் இளையவன்.

“இங்க உக்காரலாமா?” உதயின் கேள்விக்கு சற்றும் சம்பந்தமில்லாத மறுகேள்வி ஒன்று அதியிடமிருந்து வந்தது.

தன்னருகில் அதே கல்பெஞ்சின் காலி இடத்தை காட்டி அந்த புதியவன் கேட்கவும் “ம்ம்” என்று ஆமோதித்து நகர்ந்து அமர்ந்தான் உதய்.

“நேத்து நடந்தத பத்தி உன்ட்ட பேசலாமா?” என்றதுதான் தாமதம்..

“என்ன அட்வைஸ் பண்ண போறீங்களா??”  உதயின்  குரலிலேயே அத்தனை வெறுப்பும் கோபமும் போட்டிப்போட்டன.. எந்த நிலைக்கு வந்துவிட்டான்!? யாரோ ஒருவன் வந்து புத்தி சொல்லுமளவா அவன் புத்திக்கெட்டுப் போனான்?? என்ற உணர்வே அவனை வாட்டியெடுத்தது.

“ம்ஹூம்” இடவலமாய் தலையசைத்து மறுத்தான் அதி.

“நானும் ஒரு பொண்ண ப்ரோபோஸ் பண்ணேன்.. கிட்டத்தட்ட அப்போ எனக்கு உன் வயசுதானிருக்கும்”  என்று சம்பந்தமின்றி வேறு பேச, தொலைதூரத்தில் பார்வையை பதித்து நினைவுகளை மீட்டுக் கொண்டிருந்தவனின் பேச்சில் இப்பொழுது உதய்க்கும் ஆர்வம் பிறந்தது.

இத ஏன் என்கிட்ட சொல்றீங்க என்றெல்லாம் அவனுக்கு கேட்க தோன்றவில்லை.

“யு நோ வாட் ஷீ ஸெட்??.. அவளுக்கு என்ன பிடிச்சிருந்தது உதி.. அத அவ பாடிலாங்க்வேஜே சொல்லுச்சு.. ஆனா அவ பொய் சொல்லிட்டா..”

“ஏஏன்?”

“தெரியல.. யு நோ? அவ என்ன சொன்னா தெரியுமா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அதி! லவ் யூ சோ மச் ஆனா எனக்கு இதுல இஷ்டமில்லனு சொல்லிட்டா..”

“ஏன்? எதனாலன்னு அவங்க சொல்லலையா?” அவனை அறியாமலே குரலின் மென்மை மீண்டிருந்தது. அதை உணர்ந்த மூத்தவனோ சிறு முறுவலொன்றுடன்.

“ப்ச்! தெரியல உதி.. அவ அப்படிதான், ரிஜக்ஷன கூட ரசிக்க வச்ச பாவி.. எல்லாரும் காதலிக்கப்படறதுதான் சுகம்னு சொல்லுவாங்க.. ஆனா என் விஷயத்துலதான் ரிஜக்ஷன்கூட சுகமான நினைவாகிப்போச்சுபோல.. அதுக்காக அவளையே நெனைச்சுட்டு அவளுக்காகவே காத்துட்டு இருந்தேன்லாம் சொல்லமாட்டேன்.. ஆனா இத்தன வருஷத்துல ஒரு முறைக்கூட அவள பிடிக்காம போகல..மறக்கவும் தோணல.. எனக்கு லவ் ஃபெயிலியர்னு சொல்லமாட்டேன் உதய்.. என்னோட காதல் எனக்கானது.. எங்க உறவு காதலா மாறல ஆனா அடிப்படை அன்பு அப்படியேதான இருந்தது”

இதற்கு என்ன சொல்லவென்று புரியாமல்போனது உதய்க்கு. தென்னலைப்போல் பேசியதற்கே தான் இப்படி படாதபாடு படுகிறோமே இப்படியொன்றை.. இதை எப்படி ஏற்க? இவரால் எப்படி இதை இத்தனை இலகுவாய் கடக்க முடிந்தது.. முகம் மாறாமல் வேறு அசைபோடுகிறாரே.. என்று குழம்பினான் இளையவன்.

“உனக்கு தென்னல்னா என்ன உதய்?” மற்றவனின்  திடீர் கேள்வியில் அதிர்ந்தவன் “உங்களுக்கு?” என்று தொடங்க

“சும்மா சொல்லு உதய்.. தென்னல்னா என்ன?” என்றான் விடாமல்.

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவனாய், “என்னன்னா? தெரியல.. தென்னல், சந்தோஷம்.. திகட்டாத அமைதி.. என்  மனசுக்குள்ள மட்டுமே அடிக்கற சாரல்.. என் தென்னல்..” என்றவனின் முகத்தில் படர்ந்த மென்மையே அதிக்கு உணர்த்தியது அவன் உணர்ந்துரைப்பதை!!

“அப்போ தென்னலோட சந்தோஷம் முக்கியமில்லையா உதய்?” என்ற அதியின் குரல் மெல்ல ஒலித்தாலும் மற்றவனுள் அது வன்மையாய் இறங்கியது.

“என்கூட இருந்தா அவ சந்தோஷமா இருக்கமாட்டாங்கறீங்களா?” உதய்யின் குரல் ஒரே நொடியில் மாறி,  எகிறத் தயாராய் இருக்க அவன் தோளை தட்டியவனோ..

“அப்படியில்ல உதய்.. நான்ங்கறது இந்த உடலா? முகமா? இல்லையே.. நான்ங்கறது  நம்மளோட..நமக்கான நினைவுகள்தானே? உன்கூட சேர்ந்த என்னோட காலத்த மட்டும்தானே நீ நாளைக்கு அதியா அடையாளப்படுத்துவ? அப்போ தென்னல்றது அவளோட விருப்பு வெறுப்பு எல்லாம் உள்ளடங்கியது தானே?..”

“…”

“நீ தென்னல நேசிக்கறன்னா அவளோட விருப்பு வெறுப்புனு எல்லாத்தையும்தானே நேசிக்கற?” என்க மெல்லமாய் அசைந்தது மற்றவனின் தலை.

“ஃப்ரெண்ட்க்காக சண்டை போடறது சரிதான்.. ஆனா அது நியாயமாவும் இருக்கனுமே… நீ ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் உதய்! இல்லன்னா எல்லார் பார்வையிலும் தப்பா தெரிவோம்னு தெரிஞ்சும்… ஃப்ரெண்ட்க்காக நின்னுருக்கமாட்ட… ஆனா அது சரியானும் சிந்திச்சிருக்கலாம்.. எமோஷனலா முடிவெடுத்துட்ட!” என்று தட்டிக்கொடுத்தான் அதி.

உதய் இதை இப்படி யோசித்திருக்கவில்லை.. நண்பனுக்காக நின்றது தவறில்லை! ஆனால் அவன் நிற்குமளவு அது சரியில்லை என்று தெரிந்தும் அவன் நின்றதுதான் தவறாகிப்போனது. அவன் தேஜஸை விட்டுவிடக்கூடாது என்று நண்பனாய் எண்ணினானே தவிர.. தவறிழைத்தது நண்பன் ஆனாலும்  தவறு தவறே என்று நினைத்திருக்கவில்லை!

தென்னலின் எந்த குணத்தை கண்டு முதலில் வியந்தானோ அதே விஷயத்தில்தான் சொதப்பியிருக்கிறான். தென்னலைப் பொருத்தமட்டில் தவறென்றால் அது யார் செய்தாலும் தவறே! அவனும் தேஜஸை நியாயப்படுத்தவோ காப்பாற்றவோ நினையவில்லைதான். ஆனால் அதே சமயம் அவனை அடிவாங்கவும்  மற்றவனிடம்  விட்டுக்கொடுக்கவுமில்லை. இனி இந்த நட்பு வேண்டாம் என்று எண்ணியப் பிறகும்கூட அவனைப் பற்றி ஹெச் ஓடியிடம் வாய் திறவாமல் நின்றானே தவிர தேஜஸை மாட்டிவிட வேண்டும் என்று எண்ணவில்லை. இந்த அவமானமும் தண்டனையும் தவறான இடத்தில் தான் வைத்த நம்பிக்கையின் பலன் என்று எண்ணிக்கொண்டான், அதனாலேயே அப்பொழுது இது தவறாய் தெரிந்திருக்கவில்லை! ஆனால் இப்பொழுது.. தவறாய் தெரிந்து தொலைந்தது!

இனி தென்னலை இவன் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர்கொள்வான்!? ஏற்கனவே தவறாக பேசிய பொறுக்கியின் பிம்பம் அதனுடன் இப்பொழுது  இதுவும் சேர்ந்து நியாயமில்லாதவனாகிப் போனதைப் போல் உணர்ந்தான். தெளிவும் தவிப்பும் ஒன்றாய் வந்து கலங்கடித்தது.

இளையவனுக்கு புரிய தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தவனோ,

“லைஃப் நீளமானது உதய்.. எங்க எப்போ யாரோட மறுபடியும் இணைக்கும்னு தெரியாது.. அவசரம் வேண்டாமே..” என்று அவன் தோளில் ஆதரவாய் கை வைத்தபடி அதிரூபன் எழுந்துக்கொள்ள இரு கைகளாளும் முகத்தை மூடியிருந்த உதய் அழுந்த துடைத்துவிட்டு நிமிர்ந்தான் சிநேகமாய் சிறு இதழ் வளைவுடன்.

அந்த சின்னச்  சிரிப்பு அளித்த திருப்தியில்…

“காதல் சேரலன்ன தாடியும் போதையும் கோபமாவும்தான் இருக்கனுமா என்ன? சந்தோஷமாவும் இருக்கலாமே.. இப்போ இல்லங்கறத விட அப்போ இருந்துச்சுங்கறது எவ்வளோ பெட்டரில்லையா?” என்று பேசியவாரே வாசலை நோக்கி நடந்தான் அதிரூபன்.