மென்சாரலில் நின்வண்ணமோ..!? (13)

சாரல்-13

 

அதிகாலை மணி ஐந்து, ஐந்தரை இருக்கக்கூடும். இன்னும் இருள் முழுதாய் பிரிந்திருக்கவில்லை. மையிருள் இன்னும் கசியத் தொடங்கிய பெண்ணவளின் மைவிழியாய் கருமை படர்ந்திருந்ததென்றால்.. குளிரோ கொஞ்சமும் குறையாமல் முதல் முறை வருபவர்களை உறையச் செய்து.. அந்நிலைக்கு பழகியோரை டிஸ்க்கௌண்டில் குறைத்ததுபோல நடுங்க மட்டும் வைத்துக்கொண்டிருந்தது.

 
வருடக்கணக்கில் அங்கேயே இருந்து பழகிவிட்டாலும் ஸ்வெட்டர் மஃப்லரென “ஃபுல்லி ஆர்ம்ட்” எனும் விதமாய் நின்றிருந்தார் அகிலன்.

 
அவர் நின்றிருப்பது பெங்களூரின் சில்க்போர்ட்  ஜங்க்ஷனில்! பயணிகளை சுமந்து வந்து இறக்கிவிட்டு முன்னேறிய சில பஸ்ஸுகளையே வேடிக்கைப் பார்த்தபடி அதிரூபன் வரும் அந்த ஒரு பஸ்ஸுக்காக காத்திருந்தார் அவர்.

 

காத்திருந்தாரே தவிர அவர் மனம் முழுதும் எண்ண அலைகள் ஓயாமல் ஓடியாடிக் கொண்டிருந்தன… எல்லாம் மகனைச் சுற்றியே!! எப்பொழுதும் கிளம்புவதற்கு முன்பு.. கிட்டத்தட்ட கிளம்பும் நாள் காலையிலேயே ‘நான் இன்று கிளம்பிடுவேன்’ என்றுவிடும் மகனா.. நேற்றிரவு பத்து பத்தரைக்கு மேல்… அதுவும் எப்பொழுது!?  வண்டியேறிவிட்டப் பிறகு.. இவருக்கு அழைத்து “கிளம்பிட்டேன்பா! நாளைக்கு காலைல அங்க இருப்பேன்” என்றுவிட்டு வைத்தது? எப்பொழுதும் அரை மணி நேரத்திற்கு குறையாமல் வீட்டிலுள்ள அனைவருடனும் இரவு பேசிவிட்டே தூங்கச் செல்லும் அதிரூபனா, அவசர அவசரமாய் தகவல் பகர்ந்துவிட்டு அழைப்பை துண்டித்தது!?

 

வழக்கம் போல் வந்து நின்றுவிட்டார்தான், இருந்தும் உள்ளுக்குள் ஏதோ கிடந்து உறுத்திக்கொண்டே இருந்தது. அது அதிக்கு என்னவாயிற்றென.. எதோ சரியில்லை என்றவர் மனம் அடித்துரைக்க மகனுக்கு எதுவோ பிரச்சனை என்றளவு அவரால் உணர முடிந்தது. நிச்சயம் அது உணர்வு ரீதியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையெனில்.. எதையோ பேசத் தயங்கி அவன் அழைப்பை துண்டித்திருக்கமாட்டான். அது என்னவாய் இருக்கும்? அதுவும் அதிரூபனை இந்தளவு பாதித்திருக்கதென்றால்… திடுதிப்பென இப்படி கிளம்பி வருமளவு அங்கு என்ன நடந்தது!? என்று ஒரு தந்தையாய் அவர் மனம் குழம்பி தவித்தது.

 

அதற்கு விடையளிக்க வேண்டியவனின் வண்டி சரியாய் ஐந்தரைக்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அதியின் முகத்தில் எதுவுமில்லை! சந்தோஷம்.. துக்கம்.. சிரிப்பென..  எதுவுமே! மாறாய் அவனிடம் சோர்வை மட்டுமே அவரால் உணர முடிந்தது. பிரச்சனை பெரிதென புரிந்துவிட இறங்கியவனிடமிருந்து பையை வாங்கிக்கொள்ள அவர் கை நீட்டியபடி,

 

“ட்ராவல்லாம் எப்படி அதி?” என்க அவனிடமோ பதிலுமில்லை நீண்டிருந்த கைக்கு பிரதிபலிப்பும் இல்லை.

 

“அதி?” என்றவர் அவனின் தோளைத் தொடவே,

 

“ஆஹ்! என்னப்பா கேட்டீங்க?” என்றான் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல. அவனது அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருந்த அகிலன்,

 

“ஒன்னுமில்ல அதி.. ரொம்ப அசதியானு கேட்டேன்..கிளம்பலாமா அதி?” என்றார் அதியை ஆராய்ந்தபடியே

 

“ம்ம்.. கிளம்பலாம்பா” என்று வண்டியில் அவர் பின்னால் ஏறிக் கொண்டான் அதிரூபன். அகிலனின் மனதில் பாரத்தை ஏற்றியபடி!!

 

பொதுவாகவே அதிகம் பேசாவிடினும் காலை நேரப்  பயணங்களில் எதைப்பற்றியாவது சிற்சிறிதாய் பேசிக்கொண்டோ இல்லை விவரம் கேட்டுக்கொண்டோ  வரும் அதிரூபன் இன்று நீண்ட நேரமாகியும் மௌனமாய் வந்துக்கொண்டிருக்க ரியர் வ்யூ மிரர் வழியாய் பார்த்தவருக்கு ஏதோ தீவிர சிந்தனையில் நெற்றியைச் சுருக்கியபடி சாலையையே பார்த்திருந்த அதிரூபனே பட.. அதை கவனித்தவர் ஆள் நடமாட்டமற்ற இடமாய் பார்த்து வண்டியை நிறுத்தினார்.

 

அகிலன் நிறுத்திவிட்டு அப்படியே அமைதியாய் அமர்ந்திருக்க ஐந்தாறு நிமிடங்கள் கழிந்தே வண்டி நகராமல் ஒரு இடத்தில் நின்றிருப்பதை உணர்ந்தான் அதிரூபன்.

 வண்டி நகரவில்லை என்று கண்டுக்கொண்டவனின் கண்கள் சுருங்க,

 

“என்னாச்சுபா? எதாவது பிரச்சனையா?” முன்னால் ஆளற்ற சாலையையே  கைகளை கட்டியபடி வெறித்திருந்த தந்தையிடம் வினவ,  அகிலனோ அத்தனை நேரம் எதிர்ப்பார்த்திருந்தது நடந்துவிட்டதைப்போல… பெருமூச்சொன்றை  இழுத்துவிட்டவராய்,

 

“ம்ம்.. ஆமாம் அதி, கொஞ்சம் பேசலாமா?” என்க என்னவென்று புரியாவிடினும் வண்டியைவிட்டு இறங்கினான் அதி.  வண்டியிலிருந்து இறங்கியவர் அதை ஓரமாய் தள்ளி நிறுத்திவிட்டு அந்த லேக்கை தடுத்து நின்ற  சுவரருகே செல்ல அதிரூபனும் அவரை பின்தொடர்ந்தான்.

 

குளத்தையே வெறித்திருந்தவரையே சில கணங்கள் பார்த்திருந்தவனோ அதற்குமேல் முடியாதவனாய்..

 

“என்னாச்சுபா?” என்று ஆரம்பிக்க அகிலன் தன் மௌனம் கலைந்தார்.

 

“உனக்கு என்னாச்சு அதி?” என்ற கேள்வியில் நுண்ணிய அதிர்வொன்று அதியிடம். கணப்பொழுதில் முகத்தை சீராக்கியவன்,

 

“எனக்கு என்னப்பா? ஒன்னுமில்லையே..” என்றான் சாதாரணமாய் காட்டிக்கொண்டு.

 

மறுப்பாய் தலையை இடவலமாய் அசைத்த அகிலனோ,  “நீ பொய்கூட சொல்லுவியா அதி?” என்று கேட்டுவிட அவனுக்கோ அன்றொரு நாள் மேக்ஸிடம் அவன் இதே வார்த்தைகளை சொன்னது வேறு நினைவிலாடி அவனை இன்னும் அலைக்கழித்தது.

 

“அப்படியெல்லாம் இல்லப்பா.. ஐம் ஓகே..”

 

“யு ஆர் நாட்! அவ்வளவு கூடவா எனக்கு வித்தியாசம் தெரியாது? உன் முகத்த வெச்சே உன் மனச படிக்கறவன் நான் அதி.. யு ஆர் நாட் ஓகே… என்னமோ ஆகிருக்கு அங்க.. இல்லன்னா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி கிளம்பி வந்துருக்க மாட்ட! உன் முகத்துல எப்பவும் இருக்கற ஒன்னு இல்ல அதி… மொத்தத்துல நீ.. நீயாவே இல்ல… இங்கருந்து போன  அதி முழுசா திரும்பி வரல..” அகிலன் அடுக்கிக் கொண்டே சென்றதில் இங்கு இவனுள்ளோ பெயரிட முடியாத பிரளயங்கள் பல..!! அத்தனையும் அடக்கி அகத்தினுள்ளே பூட்டியவனாய் நிமிர்ந்தான் அதி.

 

“நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?” உணர்வுகளற்று ஒலித்தது அதிரூபனின் குரல்

 

“நான் உன் அப்பா அதி..”

 

“இல்லேயேப்பா… “ என்றவனின் குரலில் இருந்தது என்னவோ..?? ஆனால் கண்களில் எதுவோ உடையும் நிலையில்..

 

“ஆனா நான் உன்ன அப்படிதான் அதி பாக்கறேன்..” அதிரூபன் அகிலனுக்கு முதுகை காட்டியபடி மறுபுறம் திரும்பிக்கொள்ள

 

“என்னாச்சு அதி?”

 

சில நொடி மௌனம் அவனிடம், அவன் திரும்பாமலே நிற்க

 

“அதி?” என்றபடி  அகிலன் அவன் தோளை ஆதரவாய் தொட, சட்டென அவர் புறம் திரும்பியவனோ,

 

“நான் உங்கள மாதிரி இருப்பேனாப்பா?” என்றான் விழிகள் இரண்டிலும் கலக்கத்தை சுமந்தபடி.

 

அந்நொடி அகிலனுக்கு என்ன புரிந்ததோ.. எதை உணர்ந்தாரோ.. அவன் தோளை தட்டியவாரே,

 

“நீ என்ன விட நல்ல அப்பாவா இருப்படா!!” என்றுவிட அவனது நம்பமாட்டாத பார்வையை பார்த்தவரோ,

 

“அனு எப்பவும் அதி அதினு உன்ன பத்தியேதான் பேசுவா.. அது எல்லா அம்மாக்களும் பண்றதுதான்.. ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு வரும்போது… அப்பயும் அனு முதல்ல அதிட்டதான் கேட்கனும்னு நினைச்சா.. அப்போ அவளுக்குனு இருந்த ஒரே உறவு நீதான் அதி.. நீ கொஞ்சம் முகத்த மாத்தியிருந்தாக்கூட இந்த கல்யாணம் நடந்துருக்காது.. எனக்கும் தெரியும்! ஆனா நீ அப்படி பண்ணல… பதினைஞ்சு வயசுல.. நிச்சயம் நான் இன்னொருத்தர எனக்கு அப்பாவாவோ அம்மாவாவோ ஏத்துட்டிருப்பேனானு தெரியல.. ஆனா நீ அத சந்தோஷமா செஞ்ச! அன்னைக்கு உன் முகத்துல இருந்த உணர்வு… நீ அந்த இடத்துல அனுவுக்கு அப்பாவாகிட்ட அதி! அதுக்கடுத்து நீ கொஞ்சம் ஒதுங்கிட்டியோனு ரொம்பவே வருத்தப்பட்றுக்கோம்… ஆனா மறுபடியும் ஒரு நாள்.. நீ எங்கட்டயே வந்துட்ட… அன்னைக்கு அனு எவ்ளோ சந்தோஷப்பட்டானு.. நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்ல… நீ உன் அம்மாவுக்கே அப்பாவா இருந்தவன் அதி!! நிச்சயம் என்னவிட நல்ல அப்பாவா இருப்ப!!” என்றவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உணர்ந்துரைப்பதாய் உள்ளத்திலிருந்து வர.. அதை கேட்டிருந்தவன்தான் பேச்சற்றுப்போனான்.

 

இத்தனை வருடங்கள் அவர் மனதில் இருந்தவையெல்லாம் வெளியேறிவிட்டது. அவனால் நம்ப முடியாத ஒன்று அவன் விலகியதைக்கூட இந்த மனிதரால் இப்படி புரிந்துக்கொண்டு செயல்பட முடியுமா என்பதே! அந்த இடத்தில் அவனுள் உதித்தது இதுவே… காரணம் யாதெனில்.. அகிலன் அவனது அப்பா!!  மகனை புரிந்துக்கொண்ட அப்பா!!

ஏனோ சம்பந்தமின்றி என்றோ வாசித்த வாசகம் ஒன்று நினைவிலாடியது.. அது ‘யார் வேண்டுமென்றாலும் தந்தையாகிவிடலாம் ஆனால் அப்பாவாவது சிரமம்’ என்று. ரத்த சம்பந்தமற்ற அகிலனிடம்தானே அவன் “அப்பா” எனும் உணர்வை முழுதாய் உணர்ந்தது.

 

“என்னாச்சுபா?” மௌனமாய் நின்றிருந்த மகனின் தோளை ஆதரவாய் தொட்டபடி மென்குரலில் அகிலன் வினவ அந்த குரலும்.. அவர் அவ்வார்த்தையை சொல்லிய விதமும் அதியை ஆட்டிப்பார்த்தது. அத்தனை நேரமும் இறுக்கமாய் பிடித்துவைத்திருந்த உணர்வுகள் யாவும் கட்டவிழ்ந்தன…

 

“அப்பா..” என்றவாரே அருகிலிருந்தவரை  அதி அணைத்துக்கொள்ள காரணம் ஓரளவு புரிந்துப்போனாலும் அவன் முதுகை ஆதரவாய் தட்டிக்கொடுத்தவாரே…

 

“என்னாச்சுபா..? அப்பாட்ட சொன்னாதானே தெரியும்? எதாயிருந்தாலும் பார்த்துக்கலாம்டா…” என்றவரின் ஆறுதல் வார்த்தைகள் குற்ற உணர்வால் குத்தி கிழிக்கப்பட்ட அவனிதையத்தில் மெல்லிதழ் முத்தங்களாய் வருடின..

 

ஆம்! மேகா வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவனுள் ஆயிரம் குழப்பங்கள். அதையெல்லாம் தாண்டி அவனை அதிகம் தாக்கியது அவள் சொன்ன அந்த ப்ரையாரிட்டிதான்!

 

நான் ஏன் உன் ப்ரையாரிட்டியாய் இல்லை? என்பது அவன் வருத்தமல்ல ஆனால்..

ஒரு முறைக்கூட நான் உனது ப்ரையாரிட்டியாய் இருந்ததில்லையா?  என்பதே அவனது வருத்தமாய் இருந்தது.  ஏனோ இவ்வாரத்தைகள் அவனை ஆழமாய் தாக்கின.. அப்படி அவன் நடந்த பொழுதுதான் அதி அந்த பூங்காவினுள் நுழைந்ததும் உதயை பார்த்ததும். அதுவரைக்கூட, நானில்லையா? என்று வருந்திக்கொண்டிருந்தவனின் வருத்தம் உதயிடம் பேசப் பேச வேறு விதமாய் உருபெற்றது.

 

தான் மேகாவை ‘என்னை நீ காதலி’ என்று ஒரு முறைக்கூட கட்டாயப்படுத்தியதில்லை! அவனுடைய காதலைத்தான் வெளிப்படுத்தினான். அவளை காயப்படுத்தவோ.. கட்டாயப்படுத்தவோ இல்லை.. என்று எண்ணிக்கொண்டிருந்தவனின் எண்ணம் முழுதும் தகர்ந்தது.

 

திடீரென ஓர் எண்ணம்.. தான் அவளை எதற்கேனும் கட்டாயப்படுத்தி விட்டோமோ? மேகா காயப்பட்டுப்போனாளோ?  தான் அவளை நச்சரிக்கிறோமோ? என்று தோண தொடங்கிவிட அவனாலையே அவனை மன்னிக்க இயலவில்லை. அதுவும் உதயிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஏனோ அவனிடம் அவனே பேசிக்கொண்டதுபோலாகியது.  குற்ற உணர்வில் குறுகியவன் அவசர அவசரமாய் அன்றே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

அதிரூபனுக்கு சத்தியமாய் அவன் என்ன தவறு செய்தான் என்று புரியவில்லை.. ஆனால் மேகாவை தான் பாதிக்கிறோமோ என்று தோன்றவுமே கிளம்பிவிட்டான். அவனால் இச்சமயத்தில் தெளிவாய் முடிவெடுக்க முடியுமென தோன்றவில்லை. அதனாலையே முடிந்தளவு தள்ளி வந்துவிட்டான்.

 

இப்பொழுது அகிலன் கேட்கவும் அங்கு சென்றதிலிருந்து மேகாவை சந்தித்தது முதல் நேற்று நடந்தது வரை ஒன்றுவிடாமல் இவன் சொல்லி முடிக்க அவரோ குழப்பமாய் ஏறிட்டார்..

 

“இந்த பொண்ணுக்கும்.. நமக்கும்..” என்று தொடங்க அவர் எதை கேட்க வருகிறார் என்பதை உணர்ந்தவனாக..

 

“நிறையவே சம்பந்தமிருக்கு!” என்றான்.

 

அகிலனுக்கு இன்னுமே குழப்பம்தான். ஏன் எதனால் என்று.. இவன் எதையோ சொல்லாமல் விட்டுவிட்டதைப்போல தோன்ற.. சற்று சிந்தித்தவர் பின்பு,

 

“அப்படி என்னதான் அதி ஆச்சு அன்னைக்கு? நீ என்னனு ப்ரபோஸ் செய்த?”

 

முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவனாய் அன்றைய தினத்தை தூசு தட்டினான் அதிரூபன்.

 

அன்று…

 

அது ஒரு இள மாலைப் பொழுது. கதிரவனின் கரிசனக் கரங்களால் அந்த பூங்காவில் பூத்துக் குலுங்கிய ஒவ்வொரு பூக்களின் மொழியிலும்..  அது அசைந்தாடும் அழகிலும்.. ஒவ்வொரு ஸ்பரிசங்களிலுமென சுகமானதொரு சாரல்..!!

 

அப்பூக்களின் மொழி புரியாதவனாய்… ஏன், தன் சுய மனமொழியையே அறியும் முயற்சியில் மௌனமாய்… மண்வாசத்தை மட்டும் மனதில் நிரப்பிக்கொண்டிருந்தான் அதிரூபன்.

 

அதே பார்க்..!! அது அவர்களது ரோமியோ ஜுலியெட் பார்க். ஆனால் இம்முறையும் அவன் மட்டுமே.. அங்கே..

 

முடிவென்று ஒன்றை தீர்மானித்தாயிற்று! இனி சொல்லாமல் இருப்பது… அவனால் முடியாது!! ஏதோ ஒன்று அவன் அகத்தில் கிடந்து அழுத்தியது. இப்பொழுது இவன் செய்யவிருப்பது… சரியா..?? தவறா..?? என்று கேட்டால்.. அவனுக்கும் தெரியவில்லை… புரியவுமில்லை.. எந்த நம்பிக்கையில் இதை சொல்லத் துடிக்கிறான்?! தெரியவில்லை.. ஆனால் சொல்லாமல் இருப்பதும் தவறு என்று உணர்ந்திருந்தான்.. ஆனால் இதை எப்படி சொல்வது..?? எத்தனையோ நாட்களாய் சொல்ல நினைத்ததுதான்… எப்பொழுதும் தொண்டைக்குழியிலேயே திக்கி நின்றுப் போனவை… இன்று மட்டும் என்னவோ… நா நுனிவரை வந்து தித்திக்கின்றது. உள்ளுக்குள் ஊஞ்சலாடும் பரபரப்பு… இனம்புரியா ஒரு தித்திப்பு… மனமெங்கிலும் கண்ணாடி ஊஞ்சல்களின் சலசலப்பு.. ஆற்று நீராய் அடித்துச் செல்லும் ஆசை மழை.. அதில் நனையும் ஆசை ஒரு புறமென்றால்… தயக்கம் ஒரு புறம்.. இடையிலோ அவன் மனம்..!!

 

எண்ணச் சாரலில் திளைத்திருந்தவனை திசைத் திருப்பியது அக்குரல்.. அது அவளது குரல்..!!

 

“தர்ட் வர்ல்ட் போறளவுக்கு… சாருக்கு அப்படி என்ன யோசனை!??”  என்று அவன் பின்னால் ஒலித்த குரலை உணர்ந்ததின் அடையாளமாய் அவன் இதழ்களில் சிறு மலர்ச்சி.. அதை மறைக்க மனமற்று அவன் திரும்பிட அவன் முகம் கண்டவளாய் அருகில் வந்தமர்ந்தாள் அவள்.

 

“பேசாம இதுக்கு ரோமியோ ஜுலியெட்ல இருந்து ரூப்ஸ் ரூஃப்ஸ்னு பேர் மாத்திடுவோமா !?” என்றபடி,

 

அதற்கு அவன் சின்னதாய் சிரித்து தலை அசைத்திட, “ என்னாச்சு அதி? ஏதாவது ப்ரச்சனையா??” என்று கேட்டவளின் குரலில் மென்மையின் வாசம்.

 

அதை உணர்ந்தவனாய், “ப்ச்!! ப்ச்!!” என்று மறுப்பாய் தலை அசைத்திட அவளோ நம்பவில்லை என்பதாய் தலை அசைத்தாள். அவனைப்போலவே.

 

“என்னவோ இருக்கு… சரி விடு!! வர வழில தீப்ஸ பார்த்தேன்… உன்ன தான் தேடிட்டு இருந்தா…” என்றவள் ஒரு நொடி பொருத்து,   “ ஒரு வேளை அவளையும் கூப்ட்டு வந்துருக்கனுமோ…” என்று விழிகள் இரண்டிலும் குறும்புப் பார்வை மின்ன அவளுரைக்க அவனோ, “உன்ன!!!!” என்றவள் தோளில் ஒன்று வைத்திருந்தான்.

 

தீப்ஸ் எனும் தீப்தி அவர்களது ஜுனியர். வெறும் ஜுனியர் மட்டுமின்றி அதிரூபனின் மேல் தனி ஆர்வம் ஒன்றை வளர்த்து வைத்திருப்பவள். அவளது ஆர்வம் மட்டுமே!! அதைத் தாண்டி.. வேறொன்றுமில்லை.. அதை அவளும் அறிந்தேதான் இருந்தாள். தன்னைப் போலவே சிந்திக்கும் ஒருவரை காணும்பொழுது எழும் ஆர்வம்..

 

அவளது ஆர்வம் சில சமயம் ஆர்வக்கோளாராகிப் போனதுண்டு!! அதை மனதில் வைத்தே இவள் கிண்டலடித்ததும்.

 

“சரி..சரீ… விடு!! சொல்லல!!” என்றவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனோ திடீரென சில நொடிகளை அவள் முகம் பார்த்தவாரே மௌனத்தில் கழித்திட சட்டென இதழ்களில் உறைந்த புன்னகையுடன் தன்னையே பார்த்திருந்தவனிடம் மேகாவின் பார்வை சிரிப்பினூடே கேள்வியாய் வளைந்தது, என்னவென…

 
அவள் விழிகளின் மொழி உணர்ந்தவன் சற்றும் சிந்தியாமல் தன் மனக்கூட்டை திறந்திருந்தான்.

 

“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் மேக்ஸ்… இப்போனு இல்ல.. ரொம்ப நாளாவே!! ஆனா இதுக்கு இதுதான் அர்த்தம்னு இப்போதான் புரிஞ்சிக்கிட்டேன்… இப்போ.. இந்த ஸெக்கண்ட்.. முழுசா உணர்றேன்! இதுக்காக நான் என்னைக்குமே ரிக்ரெட் பண்ணப் போறதில்லை. அடுத்த ஸெக்கண்ட் எப்படி வேணாலும் மாறலாம்… ஆனா, அது எப்படி மாறினாலும்… இந்த நொடி எனக்கு ஸ்பெஷல்!! உன்கிட்ட சொல்லிருக்க கூடாதோனு ஒரு நொடிக்கூட ஃபீல் செய்ய மாட்டேன்!!” என்றவன் சிறு மௌனத்திற்குப் பிறகு,

“இந்த பிடிக்கும்க்கான அர்த்தம்… உனக்கு புரியுதுதானே…?” என்று சந்தேகமாய் இழுத்தவன் அவள் முகத்தில் எதை கண்டானோ,

‘வாஹூ!!!!’ என்று நிம்மதிப் பெருமூச்சை உற்சாகத் த்வனியில் வெளியிட்டவனாய்.. கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்துவிட்டு உட்கார்ந்திருந்த பெஞ்சில் இருபக்கமும் ஊன்றியபடி பின்னால் சாய்ந்தமர்ந்தவாரே  அருகிலிருந்தவளிடம்,

 

“வாவ்வ்வ்!! இப்படி ஒன்ன இதுவரை ஃபீல் செஞ்சதேயில்லை நான்! என்ன ஃபீல் இது!!? வாஹ்! இவ்ளோ நேரமிருந்த பரபரப்பவிட இது… சீரீயஸ்லி மேக்ஸ்!!” என்றுவிட்டு ஆழ மூச்சிழுத்து இயற்கையின் வாசத்தை உள்ளுக்குள் நிரப்பியவாரே,

 

“ நீ இப்போ எதுவும் சொல்ல வேண்டாம் மேக்ஸ்.. பிடிச்சிருக்கு, பிடிக்கலனு  எதுவுமே வேணாம்! எனக்கு உன்ன பிடிச்சிது.. பிடிச்சிருக்கு.. எப்பவுமே பிடிக்கும்! அத சொல்லனும்னு பட்டுச்சு, சொல்லிட்டேன்! உனக்கும் அப்டி தோணும்போது… தோணூச்சுனா… சொல்லு மேக்ஸ். அதுவரை, நானா உன்ட்ட கேட்கமாட்டேன்! இதப்பத்தி மறுபடி பேசவும் மாட்டேன்!” என்றவன் அவன் கழுத்தில் கைவைத்து, “ப்ராமிஸ்!!” என்க

சிறு பிள்ளைத்தனமாய் அவன் கழுத்தில் கைவைத்து ‘ப்ராமிஸ்’ என்றதிலேயே லயித்திருந்தவளோ சற்றும் தடுமாறாதவளாய்,

  “இந்த பிடிக்கும்க்கான அர்த்தத்த புரிஞ்சிக்கவே கூடாதுனு நினைச்சேன், ஆனா நீ இவ்வளவு தெளிவா இத சொன்னதுக்கு அப்பறமும்… புரிஞ்சிக்காத மாதிரி.. என்னால நடிக்க முடியாதே! அதான்… உனக்கு புரியவைக்க முயற்சி பண்றேன்…

எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதி… ரொம்பவே!!  ஆனா இந்த ரிலெஷன்ஷிப், காதல், கமிட்மெண்ட், இது வேணாம் அதி.  எனக்கு இது பிடிக்கல… இதுல விருப்பமுமில்ல… எனக்கு நீ எப்பவுமே ஸ்பெஷல்! ஆனா இத காதல்ல அடக்க எனக்கு இஷ்டமில்ல அதி. மிஞ்சி மிஞ்சிப் போனா நமக்கு என்ன.. இருபது இருக்குமா? வாழ்க்கை ரொம்ப நீளமானது அதி…  அது எப்போ, எப்படி, யார, யாரோட சேர்த்துவைக்கும்னு தெரியாது!  அவசரப்பட வேண்டாமே… எனக்கு நீயும், இப்ப நமக்குள்ள இருக்கற இந்த அன்பும் எப்போவும் வேணும்! இப்படியே… இதே மாதிரியே… இத மாத்தறதுல, ஏன் மாத்தனும் யோசிக்கக்கூட முடியல… இது, இப்ப முடிவெடுக்க வேண்டாமே”  என்றவளுக்கு இன்னமும் முறுவலொன்றை முகத்தில் பதியவைத்தவனாய்,

 

“ நீ எப்பவுமே தெளிவு மேக்ஸ்!!” என்று  அவள் தலைமுடியை கலைத்துவிட்டவாரே எழுந்து இரண்டடி எடுத்து வைத்துவிட்டு திரும்பியவன்,

 

“நீ எந்த முடிவும் எடுக்க வேணாம் மேக்ஸ். ஆனா இந்த முறை நானும் என் முடிவுல தெளிவாதானிருக்கேன் மேக்ஸ்! நான் எப்பவுமே மேக்ஸோட அதிதான்!!” என்று  குறும்பாய் கண்ணடித்துவிட்டு தனது துள்ளல் நடையுடன் அதி சென்றது இன்றும் பசுமை நிறம் மாறாமல் செலித்திருந்தது அவள் நினைவினுள்.

 
எப்படி மறப்பாளவள்? அதிரூபனின் இந்த  அதீத அன்பின் அர்த்தத்தை முதலில் உணர்ந்ததும் அவள்தான்! உணர்ந்ததை உணராததுப்போல கடந்துவிடத் துடித்ததும் அவள்தான்! 

இது இப்படிதான் என்பதை அறிந்தப் பின்பும் அவன் தன்னிடம் இதை சொல்லிவிடவேக் கூடாதென்றல்லவா அவள் நினைத்தாள். எத்தனை முறை அவள் மனம் மௌனமாய் அலறியது அவனிடம், சொல்லிவிடாதே! என்னை மறுக்க வைக்காதே! என்றிவளுள்ளம் கதறியதெவும் கேளாததைப்போலல்லவா அதிரூபன் தன் அகக் கதவை முழுதாய் திறந்துவிட்டான். அவனைப்போல அவளால் முழுதாய் திறக்க இயலவில்லையே!

விலகிச் செல்லவும் மனம் விழையவில்லை… தூரம் குறைக்கவும் துணியவில்லை..!!

விரும்பியோ விரும்பாமலோ.. நிற்குமிடத்திலேயே நின்றுவிட்டாள்.. அந்த இடம்கூட அவளுக்கொரு விதத்தில் இதமாகிப் போனது.. எத்தனைக்காலம் இதென்று தோன்றினாலும்.. எத்தனைக்காலமோ அத்தனைக்காலம்.. என்றவளின் எண்ணமிருந்தது. மாற மறுத்த மனதின் முனகலாய் சிறு விலகலும் அவளை விட்டு போயிருக்கவில்லை..!!