மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.2)

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.2)

“வேணும்னா அவன் பைக் டயர் காத்த பிடுங்கிவிட்றுவோமா? இல்ல கண்ணாடிய ஒடச்சி விட்றுவோமா?” – டேவ்

“ப்ரேக்க பிடுங்கிருவோமா?” என்றவளை திகிலாய் பார்த்தவன்

“அடேய்ய்ய்!!! அது கொலை கேஸாயிரும் எரும!! என்ன நீ சைக்கோத்தனமா யோசிக்க ஆரம்பிச்சிட்ட!!” என்றவன் அவளது முகபாவத்தில் அவள் விளையாடுகிறாள் என்றுணர்ந்து.

“சரி சாவிய தூக்கிருவோமா?” என்க அவளும் உடனே

“சரி” என்றுவிட அவளையே சந்தேகமாய் பார்த்தான்.

“உண்மைய சொல்லு என்ன பண்ண நீ??” என்க தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பைக் சாவியை எடுத்தவளோ அதை அந்த டேபிளில் போட்டாள்.

“இது…”

“அவனோடதுதான்”

“இதை எப்போ எடுத்த நீ??”

“பேசிட்டு வெளில வரும்போதுனு நினைக்கறேன்”

“ஏன் வைபா இப்படி பண்ண!!??”

“பின்ன என்ன பண்ண சொல்ற!!? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே அவன் என் ஃப்ரெண்ட பாத்து அப்படி கமெண்ட்டடிப்பான்!!”

“நான் உன்ட்ட கேட்டனா??”

“உனக்காக பண்ணேனு நான் சொன்னேனா??”

“ப்ச்!! சொல்லிட்டாவது செஞ்சுத் தொலையலாம்ல…” என்றவன் ஒரு கணம் பொருத்து “இனி எதையாவது செய்யறதுக்கு முன்ன என்ட்ட சொல்லு”

“எதுக்கு?”

“எதாயிருந்தாலும் சேர்ந்தே செய்யலாம்” என்றான்.

இங்கோ ஹாலில் தன் முன் அமர்ந்திருந்த மனோவையே பார்த்திருந்த அதிரூபன்,

“ஏன்பா இந்த வீட்டுக்குள்ள நுழையும்போது ஹாலுல இருக்கற மனுஷனுக்கு ஹாய் சொல்லுவோம்ற எண்ணமெல்லாம் கிடையாதா?”

தான் உள்ளே நுழையும்பொழுது அதியின் ஹாய்யை கண்டுக்கொள்ளாமல் சென்றதை சொல்கிறான் என்பதை புரிந்துக்கொண்ட மனோ, “அது இல்ல அதிண்ணா… செல்லம்மா சோகமா கூப்பிட கூப்பிட கேக்காத மாதிரி வந்துட்டாளா அதான்.. அந்த டென்ஷன்ல… சாரிண்ணா” என்க

“அடேய்!! சாரிலாம் வேண்டாம் மனோ… ஆனா உன் செல்லம்மாவோட சேர்த்து கொஞ்சம் என்னையும் கவனிபா!!” என்றவன் என்ன சண்டை என்று விசாரிக்க டேவ் சொன்னதை அப்படியே அதியிடம் சொன்னான் மனோ.

“ஓ…” என்று கேட்டுக்கொண்ட அதிரூபனோ, “அவள ஃப்ரீயா விடு மனோ… இன்னும் கொஞ்ச நேரத்துல அவளே நம்மட்ட வந்து சொல்லுவா…” என்ற அதிக்கு மகளின் மீது அப்படியொரு நம்பிக்கை! எல்லாவற்றையும் சொல்லும் மகள்… ஏன், எனக்கு இவனை பிடிக்கும் என்று சொன்ன மகள் நிச்சயம் இதையும் சொல்லுவாள் என்று நம்பினான். அதுதான் உண்மையும்கூட! இன்னும் சில மணி நேரங்கள் கழிந்தால் வைபவியே எல்லாரிடமும் இன்று இது இப்படியாகிவிட்டது என்பாள். அப்பொழுது அவளிடம் இதை நான் கடந்துவிட்டேன் என்ற தொனி இருக்கும். அதற்கு அவளுக்கு தேவையானது சில மணி நேரங்களே!!

“வியனி எப்படியிருக்கா மனோ? இசை ஸ்கூலுக்கு சமத்தா போயிட்டு வரானா?”

வியனி மனோவின் துணைவி. இசையெனும் இசையமுதன் அவர்களது ஆறு வயது மகன்.

“இரண்டுபேரும் நல்லா இருக்காங்க. இசை அப்படியே வினி மாதிரி!! வாய்ப்பு கிடைச்சா போதும் சரியான வாலு!!” என்ற மனோவின் கண்களில்… முகத்தில்… இதோ! இப்பொழுதும் அதியால் அவன் உணர்வுகளை அப்படியே உணர முடிகிறது! இவன் மாறவேயில்லை!!

“அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”

“தொடர்ந்து லீவ் வருதுல அதான் ரெண்டுபேரும் அம்மாப்பா வீட்டுக்கு போயிருக்காங்க அதிண்ணா…” எனவும் வைபவியின் அறையிலிருந்து “மனோ!!!!” என்ற இருவரின் அலறல் சத்தம் வரவும் சரியாய் இருந்தது.

விருட்டென எழுந்த மனோவின் கை பற்றி தடுத்த அதி வேண்டாம் என்பதுபோல் தலையசைக்க மனோவோ “இருங்க பார்த்துட்டு வரேன்” என்று இவன் கையை எடுத்துவிட்டு சென்றான்.
“தேடிப்போய் விழறவன என்ன சொல்ல??” என்று தோள்களை குலுக்கிவிட்டு சுகாவை அழைத்துவர கிளம்பினான் அதி.

இங்கு வைபவியின் அறையில், புயலுக்கு முன்…

“ப்ச்!! எனக்குதான் ஈர்ப்பு ஈர டவலாட்டம் கண்ண மறைச்சிடுச்சுனா நீயாவது சொல்லிருக்கலாம்…” என்று மக்கையே வெறித்தபடி வைபவி சொல்ல

“ப்ச்!! விடு வைபா… சிலதெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி புரியறதுதான் நல்லது”

“அப்போ வேணும்னே செஞ்சிருக்க!!” என்று மக்கை ஓங்கியவளிடம் இருந்து அதை வாங்கியவன்.

“சரி… இனிமேல இருந்து நீ கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணனா உன் காதை இப்படி பிடிச்சு முழிச்சுக்கோ எரும!! அப்படினு சொல்றேன் சரியா?” என்றவன் பேச்சுவாக்கில் அவள் காதை அழுத்தமாய் திருகிவிட, “ஆஆஆஆ”என்று அவன் முடியை கொத்தாய் பிடித்திழுத்தபடி கத்த அவள் பிடித்திழுத்ததில் வலி தாங்காமல் அவன் அவள் காதை இன்னும் திருகியபடி கத்தினான்.

“காதை விடு எரும!!”

“நீ முடிய விடு முதல்ல!!”

“நீ முதல்ல என் காதை விடு” என்று ஒருவர் மாற்றி ஒருவர் நீ நான் என்று விவாதித்துக் கொண்டேபோக ஒரு கட்டத்தில் இருவரும் “மனோ!” என்று கத்தத் தொடங்கினர் அவனது உதவியை நாடி.

புயலுக்குப் பின்….

அறையினுள் நுழைந்தவன் இருவரையும் கண்டுவிட்டு பிரிக்க முயல ஒரு கட்டத்தில் அவர்களிடையில் சிக்கி அவன்தான் சின்னாபின்னமானான். இதொன்றும் அவனுக்கு புதிதல்ல!! ஒவ்வொரு முறையும் வாங்குவதுதான். இதற்காகவே இவர்களது சண்டை என்றால் அதியிலிருந்து யாரும் நடுவில் வரமாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் முதல் தரம்போல மாட்டிக்கொள்வதே இவன் வழக்கமாகிப்போனது.

ஒருகட்டத்தில் இருவரையும் பிடித்து தள்ளியவன், “இப்ப என்னத்தாண்டா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்!!??” என்று கத்த

டேவ் மென்குரலில் வைபாவிடம், “நாம கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?” என்று கிசுகிசுக்க அவளும் அதேபோல், “ஆமாம் போல… மனோவுக்கே கோவம் வந்துட்டு” என்றவள்

“இவன் என் காதை பிடிச்சு திருகிட்டான் மனோ” என்க டேவ்வும்

“இவ என் முடிய பிடிச்சு இழுத்துட்டா மனோ” என்றான் அவளை முறைத்துக்கொண்டே

“நீங்க என்னை என்ன பண்ணீங்கனு கொஞ்சம் பாக்கறீங்களா ரெண்டு பேரும்!!??” என்றதும்தான் மனோவை கவனித்தனர். அவனை நடுவில் இழுத்து கிட்டத்தட்ட அவன்மீது உருண்டு விளையாடாத குறையாய் அவனை நசுக்கியிருந்தனர் போலும் சட்டை கசங்கி முதல் நான்கு பட்டன் கழண்டு முடி கலைந்தென அவர்களைவிட மோசமான நிலையில் நின்றிருந்தான் அவன்.

“ஆறு வயசு இசைக்கூட என்ன இப்படி படுத்த மாட்டான்டா!!” என்று அங்கலாய்த்தவன், “ம்ம்!! இன்னும் என்ன பாத்துட்டிருக்கீங்க!? எழுந்துருங்க!! நைட்டுக்குள்ள வேலையெல்லாம் முடிக்கனுமா வேணாமா?” என்றதுதான் தாமதம் அவனுக்கு முன்னாடி அவர்கள் வெளியேறியிருந்தனர் அறையிலிருந்து.

அதே சமயம் மற்றொரு புறம்…

அந்த அலுவலகத்தின் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க கண்ணுக்கு முன் மலையாய் நின்ற வேலையை பார்த்து அலுத்துவிட்டு தனது நண்பனின் டெஸ்க்கை நோட்டமிட்டான் அஜய். அவன் எதிர்பார்த்தது போலவே உதய் திரையில் மூழ்கியிருக்க வைப்ரேஷன் மோடில் போட்டு வைக்கப்பட்டிருந்த ஃபோன் அடித்ததை அவன் கவனிக்கவேயில்லை என்பதை அவன் பார்வை அகலாததே அடித்துரைத்தது. ஆனால் உதயிடம் எழுந்து வந்த அஜய்யின் பார்வையில் அது தப்பவில்லை! முக்கியமாய் அதில் ஒளிர்ந்த பெயர்!!

‘அன்பே அமுதா’ என்றொளிர்ந்த பெயரை கண்டு புருவம் சுளித்தவனோ “உதி உன் ஃபோன் அடிக்குது” என்க அப்பொழுதே கனவில் இருந்து கலைந்தவனைப் போல விழித்த உதய் பின் ஃபோனை எங்கு வைத்தோமென்று தேட அதை எடுத்து உதய்யின் கையில் வைத்த அஜய்க்கு ஆர்வம் தாளவில்லை! தெரியாவிட்டால் இப்பொழுது தலை வெடித்துவிடக்கூடும்.

“தாங்க்ஸ் அஜய்!”

“அது யாரு உதய் அமுதா?” என்று ஆர்வமாய் வினவியவனுக்கு விஷமப்புன்னகையொன்றை பரிசளித்தவனோ “ என் வைஃப்” என்று ஃபோனை அட்டெண்ட் செய்ய இங்கு அஜய்யின் தலை வெடித்தேவிடட்து!

“உன் வைஃப் நேம் வேறல்ல..” என்றவனின் தோளைத் தட்டி புன்னகைத்தவன் “என் ஸெக்கண்ட் வைஃப்” என்றுரைத்துவிட்டு அகன்றுவிட அஜய்யின் அதிர்ச்சி லெவல் ஈஃபிலை தாண்டியது!!

“யாரு மாம்ஸ் அந்த ஸெக்கண்ட் வைஃப்?? என் சேச்சிக்கு துரோகம் பண்றீங்களா நீங்க!!??” என்று அந்த பக்கத்திலிருந்து அலறிய அமுதனை அடக்கினான் உதய்.

“அடேங்கப்பா! பண்ணிட்டாலும்… ஒரு லவ்வ சொல்லி கல்யாணம் பண்ணவே இங்க மனுசனுக்கு நாக்கு தள்ளிட்டாம் இதுல இன்னொன்னா!? மாமாவ மர்கையாவாக்காம விடமாட்ட போலயே அமுதா…”

“அதுவும் சரிதான்”

“எது?”

“இல்லை… ஒரு லவ்வுக்கே என்ன நாயா பேயா அலையவிட்டீங்க… இன்னொன்னுலாம்… என்ர சேச்சி உங்கள உசுரோட விட்டாலும் நான் விடமாட்டேன்!! ஐ வில் ட்ரைவாஷ் யூ மாம்ஸ்!!”

“எங்கயாவது உயிர காப்பாத்துற டாக்டர் மாதிரி பேசிறியாடா நீ!?”

“அது வேற டிபார்ட்மெண்ட்!” என்றவன் பிறகு, “இன்னைக்கு ஃப்ரீயா மாமா?” என்றான் ஆர்வமாய்.

“எப்பவும்போலத்தான்…”

“அப்போ வந்து என்னை பிக்கப் பண்ணிக்கங்க!!”

“ஹே!! நீ எப்போ ஹைதராபாத்ல இருந்து கிளம்பின?”

“இன்னுமில்ல மாமா… இப்போதான் ஃப்ளைட் ஏறப் போறேன்”

“என்ன திடீர்னு? அத்தையும் மாமாவும் வேற மதுரைக்கு போயிருக்காங்க…”

“நான் உங்களதான் பார்க்க வரேன்!” என்றவன்

“சரி மாமா… நான் அங்க வந்துட்டு கூப்பிடறேன்!” என்று வைத்துவிட உதய்யும் சீக்கிரமாய் கிளம்பினான்.

உங்கள பார்க்கத்தான் வரேன் என்றவன் வீடு வந்து சேரும்வரை ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை இவனிடம். இவனும் கட்டாயப்படுத்தவில்லை அவனை! அவர்களிடையே மாமன் மச்சினன் என்பதைவிட அவர்கள் முதலில் நண்பர்கள் அதற்கு பிறகே இந்த உறவு முறை வந்து ஒட்டிக்கொண்டது அவர்களுடன்.

வீட்டினுள் நுழையும்பொழுதே வழமைப்போல “ஐம் ஹோம்!!” என்று கத்த வந்த அமுதனின் வாயை பின்னாலிருந்து வேகமாய் பொத்தினான் உதய்.

இவன் புரியாமல் அவனை பார்க்க அவனோ பையை கொண்டு சென்று சோஃபாவில் போட்டபடி, “உள்ள ரெண்டு பேரும் தூங்கறாங்க அமுதா…” என்றுவிட்டு அந்த ஒபன் ஸ்டைலில் இருந்த அடுக்களையினுள் நுழைந்தான்.

“ஓ… தேனு தூங்குதா…” என்றவன் பின் திடீரென “அதுக்குட்டி தூங்கறான்ன ஒரு நியாயம் இருக்கு சின்னப்பிள்ளை… தேனு ஏன் தூங்கறா?”

அதுக்குட்டி என்றழைக்கப்படும் அதரா உதய் தென்னலின் இரண்டு வயது மகள்.

“நடுவுல ப்ரேக்கெடுத்தது தேனுக்கு வேலை அதிகமாகிட்டு அமுதா… நல்ல ஆள் பாத்துதான் பொறுப்ப ஒப்படைச்சிருந்தா இருந்தும் அப்படி இப்படினு ப்ராப்பரா வேலைல உக்காரதுக்கே ஒரு வருஷத்துக்கிட்ட ஆகிடுச்சே… நடுவுல பாத்தாதான்… இப்போ அதே வேகத்த கொண்டுவர நேரமெடுக்கும்ல… பார்ட் டைம் கோர்ஸ் வேற சேர்ந்துருக்கா… இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன வந்தா இப்போ மறுபடியும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவா… அதான்” என்றவாரே அமுதனுக்கும் தனக்குமாய் காபி கலக்கியவன் அதை அவனிடம் கொடுத்தான். தென்னல் சில வருடங்களுக்கு முன் சின்னதாய் ரெஸ்டாரெண்ட் ஒன்றை தொடங்கி அது இன்று நாலைந்து இடங்களாய் பெருகியிருந்தது. அவள் இப்பொழுது ஒரு முழு நேர பிஸ்னஸ் பெர்சன். உதய்யின் மொத்த காதலுக்கும் உரிமையாளினி.

ஆம்! இருவரும் அடிப்படையில் நல்லவர்களே… சூழ்நிலையால் ஏற்பட்ட தவறான புரிதல் ஏதோ ஒரு கட்டத்தில் சரியாய் மாறிப்போனது.

சமையல் மேடையில் அமர்ந்தபடி உதய் பேசுவதையே கேட்டிருந்த அமுதனோ குதித்து கீழிறங்கியவனாய் உதய்யின் தோளில் கைபோட்டுக்கொண்டு மற்றொரு கையை நெஞ்சில் வைத்தபடி, “உங்கள இந்த வீட்டுக்கு மருமகனா கொண்டு வந்தத நினைச்சு பெருமைப்படறேன்!!” என்க அவன் விலாவிலேயே முழங்கையால் இடித்து தள்ளிய உதய்…

“வெளக்குமாறு!! எங்களுக்கு நடந்தது லவ் மேரேஜ்… இதுல அத்தை மாமா 0.1% கூட மறுப்பு சொல்லல… இதுல இவன் கொண்டுவந்தானாம்…” என்க அமுதனோ

“நன்றாக சிந்தித்துப் பார்!! நான் மட்டும் பத்திரிகை வைக்கலன்னா உங்க கல்யாணம் நடந்துருக்குமா? நான் மட்டும் பன்னீர் தெளிக்க என் அத்தை பொண்ண நிறுத்தி வைக்கலன்னா உங்களால தாலி கட்டிருக்க முடியுமா??” என்று உளறிக்கொட்ட சிரிக்காமல் அவனையே கடுப்பாய் பார்த்த உதய் அவன் கையிலிருந்த கோப்பையை அவன் வாய் வரை உயர்த்தி…

“பிடுங்கறதுக்குள்ள குடிச்சிரு!” என்றுவிட்டு தனது மக்கை கழுவி கவிழ்த்தினான்.

சற்று நேரத்தில் மீண்டும்…

“மாம்ஸ்…”

“ம்ம்..”

“மாம்ஸ்…”

“சொல்லு அமுதா…”

“மாம்ஸ்…”

“அடுப்பு பக்கத்துல நின்னுட்டு கடுப்பேத்தாத அமுதா… கடாய தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க!!”
“மாம்ஸ்…” என்று மறுபடியும் தொடங்க

“டேய்!!!! என்னடா வேணும் சொல்றா” என்று அழாக்குறையாய் இறங்கிவர அவனோ

“என்கூட வேலை பாக்கற சாரா ஞாபகம் இருக்கா?” என்று மெல்ல ஆரம்பித்தான்.

“ம்ம்… ஆமா அந்த ஃபாரினர்தானே?”

“ஆமா ஆமா அவளேதான்”

“இருக்கு…அதுக்கு?” உதய்க்கு புரிந்துப்போனது.

“அவ எனக்காக நான் பேசற தமிழ் கத்துக்கனும் நினைக்கறா…”

“ஓ… அதுக்கு?”

“நானும் இங்க்லீஷ் இன்னும் நல்லா தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறேன்…”

“அப்போ முடிவே பண்ணிட்ட??” என்க புன்னகை முகமாய் நின்றிருந்த அமுதன், “நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“எதே!? நான் ஏன் ஹெல்ப் பண்ணனும்??”

“இதுக்கா உங்களுக்கு இவ்வளோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிவச்சேன்??” என்று மீண்டும் தொடங்க

“அதுக்கேண்டா நீ கல்யாணத் தரகர் ரேஞ்சுக்கும் நான் வருஷக்கணக்கா பொண்ணு தேடிட்டிருந்த மாதிரியும் பேசி வைக்கற…”

“நான் தரகர் இல்லைதான் ஆனா பொண்ணு விஷயம் உண்மைதானே!”

“என்ன உண்மை?? நான் ஒரே பொண்ணதான் பல வருஷமா தேடினேன்.” என்றான் வீராப்பாய்

“அந்த கருமத்ததான் நானும் சொல்றேன்”

“என் காதல் உனக்கு கருமமா??”

“மாம்ஸ்… எனக்கதெல்லாம் தெரியாது நீங்கதான் பேசி இந்த கல்யாணத்த முடிச்சு வைக்கனும்!!” என்றுவிட விளையாட்டுத்தனத்தை கைவிட்ட உதய், “இதுல பேச என்ன இருக்கு அமுதா? அத்தையும் மாமாவும் நிச்சயம் நோ சொல்லப் போறதில்ல… அது உனக்கே தெரியும்… அவங்களும் ஊர்ல இருந்து வரட்டும் பேசுவோம்” என்றுவிட அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்ட அமுதனோ உதய்யின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு “மாம்ஸ்னா மாமஸ்தான்!!” என்க அவனை தள்ளிவிட்டு கன்னத்தை தடவிக்கொண்ட உதய்யோ “ஓடிரு!!” என்பதற்கும் அறையிலிருந்து தென்னல் வருவதற்கும் சரியாய் இருந்தது.

வந்தவள் அமுதனை அங்கு எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

“டேய் அம்மு!! எப்ப வந்த?” என்று அவனை அணைத்து விடுவிக்க… “இப்பதான் தேனு… அதுக்குட்டி இன்னும் தூங்கறாளா?”

“ம்ம் ஆமா…” என்றவளின் கையில் உதய் காபி கோப்பையை திணிக்க அமுதனோ ‘இத்தனை நேரம் நம்மக்கூடத்தானே இருந்தாரு… எப்போ போட்ருப்பாரு?’ என்று யோசிக்கலானான்.

காபியை ரசித்து பருகும் மனைவியை ஒரு கணம் இமைக்காது பார்த்த உதய், “எத்தனை மணிக்கு கிளம்பனும் தேனு?” என்க கூந்தலை காதுக்கு பின்னால் இழுத்துவிட்டவாரே அருந்திக்கொண்டிருந்தவள், மக்கை கழுவ செல்ல

“அதை குடு நான் பாத்துக்கறேன்” என்றவனிடம் மறுப்பாய் தலையசைத்தவள்.

“நானே பண்றேன் உதயா!!” என்றுவிட அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

“அதிகாலை ஃப்ளைட்… அங்க முடிச்சிட்டு ஈவ்னிங்கே கிளம்பிருவேன் உதி” என்க புரியாமல் விழித்த அமுதனிடம்

“நாளைக்கு அதியண்ணா பர்த்டேல… அதான் எல்லாரும் சேர்ந்து சர்ப்ரைஸ் குடுக்க…” என்க அவனோ உதயைதான் கேள்வியாய் நோக்கினான்.

“நீங்க போலயா மாம்ஸ்??”

“இல்ல அமுதா… நாளைக்கு மதியம் மீட்டிங் இருக்கு… அதுக்குட்டி வேற ட்ராவல் பண்ண வேணாம்னு பாக்கறேன்…”

“ஓ… சரி”

உதய் “ அங்க ரீச் ஆகும்போது விடிஞ்சிருக்காதே தேனு… கேப் எடுக்கப்போறீயா?”

“கேப் சரிவராது உதி… மனோ கூப்பிட வருவான்”

“ஓஹ்… அப்போ ஓகேடா!” என்றுவிட தென்னலும் “ஃப்ரெஷாகிட்டு வரேன்” என்று அங்கிருந்து அகன்றுவிட்டாள்.

அமுதன்தான் “ஏன் மாமஸ்… நீங்களும் மனோண்ணாவும் எப்பவும் டைம்பாம் ரேஞ்சுக்குதான் பேசுவீங்க… இப்போ மட்டும் எப்படி நார்மலா டபிள் ஓகே சொல்றீங்க??” என்க ஒரு கணம் காய் வெட்டிக்கொண்டிருந்தவன் அதை நிறுத்திவிட்டு அமுதனைப் பார்த்தான்.

“தெரியல அமுதா… தேனே சமாளிச்சிருவாதான்… ஆனா மனோன்னா இன்னும் கொஞ்சம் நிம்மதி!!” என்றுவிட்டு வேலையை தொடர்ந்தவனையே வினோதமாய் பார்த்துவைத்தான் அமுதன்.

இரவு 12:30

வைபவியின் அறையில்தான் அனைவரும் அடைக்கலம்!! ஆம்! சுகா, மனோ, டேவ், வைபாவென நால்வரும் நாளைய தினத்திற்கான ஏற்பாடுகளை ஓரளவு முடித்து அதி தூங்கச் செல்லும்வரை காத்திருந்து அவன் தூங்கியதை உறுதி செய்த பின் மொட்டை மாடியில் பாதி வேலையை முடித்துவிட்டனர். அதற்கே மணி பனிரெண்டை தாண்டிவிட்டது. மீதமெல்லாம் கடைசி நிமிட வேலைதான் என்பதால் கீழே இறங்கியவர்கள் நேராக வைபாவின் அறைக்கு வந்து ஆளுக்கொரு புறமென சரிந்துவிட்டனர். மேகாவும் இவர்களுடன் கூட்டுக்களவாணித்தனம் செய்திருந்தாள்.

வைபவி படுக்கையில் குறுக்காக மல்லாந்துவிட மனோ அந்த ரோலிங் சேரில் அமர்ந்து மேசைமீது கால்களை தூக்கி வைத்து அமர்ந்திருந்தானென்றால் சுகா பீம் பேகை இழுத்துப்போட்டு சரிந்துவிட டேவ் படுக்கைக்கும் மேசைக்கும் நடுவில் தாராளமாய் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் கையை தலைக்கு கொடுத்தவாறு படுத்துவிட்டான்.

அவர்கள் அனைவரும் படுத்திருந்தனரே தவிர உறங்கவில்லை.

“மனோ தேன்ஸ எப்போ கூப்பிட போனும்?” -டேவ்

மனோ “அதுக்கு இன்னும் நேரம் இருக்கு… ஆனா தூங்கினா சரிவராது…” என்றவாரே இன்னும் வாகாய் சாய்ந்தமர்ந்துக்கொண்டான்.

“அது சரி!!” என்றவாறே டேவ்வும் தலையை ஒரு கையால் தாங்கியபடி படுத்திருந்தவன்…

“வைப்ஸ்!! மனோ இதுல மட்டும் அப்படியே உன்ன மாதிரி!! சரியான தூங்குமூஞ்சி!!” என்று வம்பிழுக்க மல்லாக்க படுத்து முகத்தின் மேல் வலக்கரத்தை வைத்து வெளிச்சத்தை மறைத்திருந்தவளோ ஆடாது அசையாது அப்படியே, “உன்ன கொல்லப் போறேன் டேவ்…” என்றாள் குரலில் சுரத்தேயில்லாமல்.

“இவ ஏன் இப்போ இப்படியிருக்கா??” – சுகா

“அதொன்னுமில்லை சுகா.. மேடம் இவ்ளோ நேரம் வேலையா இருந்தாங்கல்ல… அதான் தள்ளிப்போட்றுந்தாங்க… இப்ப மறுபடியும் அவ க்ரஷ்ஷு க்ராஷானதுக்கு pathos வாசிக்கறா…” சுகாவிடம் பேசிக்கொண்டிருந்த டேவ்வின் மீது அருகிலிருந்த தலையணையை எடுத்து வைபா வீச அது சரியாய் அவன் தலையை தாக்கும் முன் கேட்ச் பிடித்தவன், “தேங்க்ஸ்!!” என்று அதை தலைக்கு வைத்துக்கொண்டான்.

டேவ் “ஏன் சுகா உனக்கு இந்த க்ரஷ்ஷு பப்பி லவ் கிட்டன் லவ்னுலாம் எதுவுமில்லையா?” என்று முடிப்பதற்குள் அவன் தலையில் பட்டென்று ஒரு தட்டு தட்டினான் மனோ, “சின்ன பையன ஏண்டா கெடுக்கற!?”

“ஆமா… இவன் எல் கே ஜி பிள்ளை இவன நாங்க கெடுத்துட்டோம்!! என் க்ளாஸ்ல படிக்க அஞ்சாங்க்ளாஸ் பையன் ப்ரேக்கப்னு அழுது… அவன புடிச்சு அடேய் ராசா இதெல்லாம் சல்பி மேட்டரு!! இன்னும் எவ்வளவோ இருக்குனு சொல்லி அனுப்பின எனக்குத்தானே தெரியும்…”

“இப்போ இப்படிலாமா பண்றாங்க??” என்று நம்பாமல் கேட்ட மனோவை முறைத்த டேவ், “ஏன் மனோ… நீ படிக்கும்போது இதெல்லாம் நடக்கலையாக்கும்?? அப்போ அதுக்கு பேர் பப்பி லவ் அது இதுனு சொல்லி ஒப்பேத்திட்டு இப்ப மட்டும் பிள்ளைங்களா இதுங்கன்னா என்ன நியாயம்? அவங்களுக்குப் பிடிச்சா மாதிரி சொன்னா புரிஞ்சிறப்போது… அதைவிட்டுட்டு…”

“அப்போ நானும் இசைட்ட கேக்கனுமோ?”

“ஹா ஹா மனோ… இசை குட்டி பாப்பா… அது மட்டுமில்லாம அவனுக்கு அவன் டீச்சர தவிர வேற யாரையும் பிடிக்காது!!”

“அது உனக்கெப்படி தெரியும்??”

“இந்த இடத்துல நான் ஒரு ட்யூஷன் டீச்சர்ன்றத பதிவு செய்யறேன்” என்று முடித்துவிட்டான். உண்மையும் அதுதான் டேவ் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதாலோ இல்லை குழந்தைகள் அவனிடம் ஒட்டிக்கொள்வதாலோ அவன் சுலபமாய் அவர்கள் உலகிற்கு சென்றிடுவான். அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்வான். எந்தவொரு மனதிற்கும் தன்னை தராசில் நிறுத்தாமல் கைகளை பற்றிக்கொள்ளும் உயிரைத்தான் அது நாடும்.. டேவ் இயல்பிலேயே அப்படிப்பட்டவன்.. விளையாட்டுத்தனமாய் தெரிந்தாலும் மிகவும் ஆழமானவன்..!!

“சரி.. நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே?” என்றான் விடாது விடையறிந்தும்.

சுகா “எனக்கு அப்படியெல்லாம் இதுவரை எதுவும் தோணினதில்லை டேவ். சிலர் மேல அபிமானம் உண்டு மரியாதையுண்டு… ஆனா க்ரஷ்னுலாம் எதுவுமில்ல!!” அதை தொடர்ந்து “உனக்கு அப்படி எதுவும் இல்லையா?” என்றதுதான் தாமதம்

டேவ் “உன் அக்கா மாதிரி ஒருத்திய உயிர்நட்பா வச்சுக்கிட்டு அதுக்கெல்லாம் நான் ஆசைப்பட முடியுமாடா சுகா??” என்றான் அங்கலாய்ப்பாய். இப்பொழுது மனோவும் ஆர்வமாகிவிட்டான் போலும் இவன் புறம் திரும்பி அமர்ந்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!