மென்சாரலில் நின்வண்ணமோ!? (2)

மென்சாரலில் நின்வண்ணமோ!? (2)

                                சாரல்-2

புத்தம் புது காலை
பொன் நிற வேளை

என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

கேட்க கேட்க தெவிட்டாமல், தித்தித்திப்பாய் இரு காதுகளையும் ஆக்கிரமித்திருந்த ஹெட்ஃபோனுக்குள் அமுதமாய் ஒலித்தது ஜானகியின் குரல்.
ஆங்காங்கே தேகத்தில் வேர்வையால், அணிந்திருந்த டீஷர்ட்டின் முதுகுபுறம் ஈரமாகிவிட்டதை உணர்த்த அதை லட்சியம் செய்யாதவளாய் அந்த  பூங்காவை இன்னொரு முறை சுற்றி வந்தாள் தென்னல். யெஸ்!! சரளமாய் மலையாளம் பேசும் தென்றல்..இல்லை தென்னல்!
வழமையாய் சுற்றுவதைவிட இன்று சற்று அதிகம் ஓடிவிட்டதை அவளது தசைகள் அவளுக்கு உணர்த்த இம்முறை அதற்கு மதிப்பளிப்பவளாய் அங்கிருந்த கல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துக்கொண்டாள் கால்களை சற்று நீட்டியவாறு.

ஏற்கனவே காலைப் பொழுதுகளை இரசித்து தொடங்கும் பேர்வழிக்கு புத்தம் புது காலை.. உடலின் ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்ச்சியை பாய்ச்சியதுபோலொரு உணர்வு!

ஒரேயடியாய் அதிகாலை என்றுவிட முடியாதெனினும் குளுமையான காலைப்பொழுது அது.. மணி ஆறைத்தொட இன்னும் சிறு துளிகளே இருந்தது. ஆம்! நாலரை மணிக்கு விழிக்கும் அவளுக்கு ஆறெல்லாம் அதிகாலை லிஸ்ட்டிலா வரும்?!

கதிரொளி பரவும் பொழுதுதான்! இருந்தும் இன்று நிலவு சோம்பலாய் மறைந்ததுபோலும்.. இருள் பிரியவே வெகு நேரம் பிடித்தது. கதிரொளி மெல்ல மெல்ல தன் ரேகைகள் அனைத்தையும் இருள் பிரிந்த வானினூடே அடர் மஞ்சளாய் பரப்பிக்கொண்டிருந்தது. குங்குமப்பூக்களை அள்ளித் தெளித்தாற்போல்  காட்சியளித்த செவ்வானம் அந்த மரங்கள் அடர்ந்து நின்ற பூங்காவில் மிக மிருதுவாகவே தனது இதத்தை உணர்த்தியது. அடர் பச்சை இலைகளினூடே துண்டங்களாய் தெரிந்த செவ்வானத்தையே சற்று நேரம் இமை மூடாமல் பார்த்திருந்தவளின் விழியோரங்களில் நீர் துளிர்த்தது.

பார்வையை வானிலிருந்து அகற்றியவள் கைகளிரண்டையும் நன்றாக சூடு பரக்க தேய்த்து பின் கண்களில் வைத்து ஆழ மூச்சிழுத்தாள். கண்களில் அந்த இதம் பரவியதென்றால் நாசியில் இலைகளின் வாசமே நிறைந்தது.

பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோன் வைபரேட்டி அவளது கவனத்தை கலைக்க அழைப்பை ஏற்றவளின் வதனமோ தானாய் மிளிர்ந்தது!
தினம் தினம் தென்னலின் காலைப்பொழுதுகளை அழகுரச்செய்யும் அழைப்பல்லவா அது!? அப்படியிருக்கையில் மலரத்தானே செய்யும் அவளது அகமும் முகமும்..

அவள் அழைப்பை ஏற்ற மறு கணம் எப்பொழுதும்போல் இப்பொழுதும் கடகடவென பேசித்தள்ளினார் ஸ்வர்ணா. பேசினாரென்பதைவிட கேள்விகளால் அவள் செவியை நிரப்பினார் என்பதே சரி!
எப்படி இருக்கறயில் தொடங்கி வாக் முடித்தாயிற்றா? காபி ஆச்சா? கிளம்பியாச்சா? என பல் விளக்கினியா? உட்பட சரளமாய் கேள்விகளை தொடுப்பார் ஸ்வர்ணா என்கிற ஸ்வர்ணலதா.

பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதரனும் கோயமுத்தூர் குமரியான ஸ்வர்ணலதாவும் மதுரையில் மீட்டி.. திருச்சியில் திருமணத்தை முடித்து கடைசியில் திருவனந்தபுரத்தில் செட்டிலாகிவிட்டனர்.

ஆம்! கோயம்புத்தூர் தமிழை சுவாசிக்கும் ஸ்வர்ணலதாவும் பாலக்காட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீதரனும் சந்தித்த இடம் என்னவோ மல்லியில் மணக்கும் மதுரையில்தான். ஸ்வர்ணா காலேஜிலிருந்து எக்ஸ்கர்ஷன் வந்திருக்க அங்கு நண்பர்களுடன் வந்திருந்த ஸ்ரீதரனின் மேல் பெரியளவில் ஈர்ப்பு எதுவும் வந்துவிடாத  பொழுதிலும் ஏதோ ஒரு ஓரத்தில் ஸ்ரீதரின் நினைவுகள் ஈரப்பதம் குறையாமல்தான் இருந்தனவோ? என்னவோ!?  மீண்டும் திருச்சியில் ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தவர்கள்தான்! அவர்களது திருமணமே நடந்து முடிந்திருந்தது.

இரு வீட்டாரிடையும் நல்ல பழக்கம் இருக்கவே இனிதே தொடங்கியது அவர்களது இல்வாழ்க்கை.

ஸ்ரீதரன் ஆடிட்டராய் இருக்க ஸ்வர்ணமோ புகழ்பெற்ற பள்ளியொன்றில் கணித ஆசிரியையாய் பணிபுரிகிறார். முத்தான இரு பிள்ளைகளோடு சற்று வசதியான வாழ்க்கைதான் எனினும் உழைப்பால் உயர வேண்டும் என்ற கொள்கையுடைய குடும்பம். மூத்த மகள் தென்னல் இளைய மகன் அமுதன்.
நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றவளோ இந்த கல்லூரிதான் வேண்டுமென்று அடம்பிடிக்காத குறையாக சொந்த ஊர் தெரிந்த மக்களென அனைத்தையும் விட்டு சிங்காரச் சென்னையில் காலடி வைத்து இன்றோடு ஒன்றரை வருடங்கள் முடியப்போகிறது. ஆம்! இப்பொழுது தென்னல் இரண்டாம் வருடத்தில் இருக்கிறாள்.. அவள் மனதுக்குப் பிடித்த பாடத்தை பயின்றபடி.

இதோ! இதேபோலத்தான். காலை நாலரைக்கு எழுந்தால் தயாராகி தனது ஜாகிங்கை முடித்து பின் பி.ஜி. சென்று குளித்து பி.ஜியில் வழமையாய் கிடைக்கும் காலை உணவான உப்புமாவை மற்றவர்கள் சபிக்க இவள் ருசிக்கவென நாள் தொடங்குமென்றால் மீதம் முழுதும் கல்லூரி கல்லூரி கல்லூரியே!  இப்பொழுதெல்லாம் வெறும் லைப்ரரியும்.. கேண்டினும்.. வகுப்பறையும் மட்டுமின்றி அவனும் இணைந்திருந்தான் அவளது தினப்படியில்.

“தேனூ!!” என்ற அன்னையின் குரலில் நிகழுக்கு வந்தவளோ எண்ணங்களையும் இழுத்துப் பிடித்தவளாய் கவனத்தை அவர்களிடம் திருப்பினாள்.

“ஆஹ்! ஆம் ம்மா..” என்றவள் தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்க அங்கு பின்னிருந்து ஸ்ரீதரன் உரைத்த “லவ் யூ குட்டிமா!” தெள்ளத்தெளிவாய் காதைத் தொட்டு மனதில் நிறைய இதள்களில் புன்னகை தவழ.. “அச்சா..” என்றிவள் தொடங்கவுமே ஸ்வர்ணம் தொடங்கிவிட்டார்.

“அச்சாவாவது பச்சாவாவது! அப்பதேயிருந்து ஒரு மனுஷி இங்க தேனூ தேனூனு தாங்கிட்டிருக்கேன்..ஆபிஸ் கெளம்பற அவசரத்துல அவரு லவ் யூங்கறதும் நீ லவ் யூ டூங்றதும்..” என்று  தொடங்க பின்னிருந்து “ஸ்வர்ணா…” என்று ஸ்ரீதரனின் குரல் கேட்க அப்படியே அந்த புலம்பலுக்கு என்டுகார்ட் போட்டவரோ ஃபோனை ஸ்ரீதரனிடம் கொடுத்தார் “லவ் யூ டூ அச்சா!” என்று தொடங்கியவள் பேசிக் கொண்டேப் போக இம்முறை “ஸ்ரீதர்..” என்ற ஸ்வர்ணத்தின் குரலில் ஃபோன் அமுதனிடம் கைமாறியது. இல்லை பிடுங்கிவிட்டான் என்பதே சரியாகும்!

“அமுதா!!” என்று ஸ்வர்ணமும் ஸ்ரீதரனும் ஒருசேர குரல் கொடுக்க “வில் கால் யூ பேக் தேன்ஸ்!” என்று அழைப்பை அவசர அவசரமாய் துண்டித்திருந்தான் அமுதன். பத்தாம் வகுப்பு மாணவன்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அவளது ஃபோன் கிணுகிணுக்க எடுத்து பார்த்தாள். ஸ்வர்ணாதான்.

“சாப்ட்டுட்டு கெளம்பனும் தேனூ!” என்ற அன்பான கட்டளையை தாங்கி வந்திருந்தது அந்த குறுஞ்செய்தி.
தென்னல் என்று பெயர் சூட்டிவிட்டு அதை தேனூ தேனூ என்றழைக்கும் அன்னையை நினைத்து புன்னகை மலர எழுந்து தனது பி.ஜியை நோக்கி நடக்க தொடங்கினாள் தென்னல்.

அந்த வகுப்பறை முழுதும் ஆழ்கடலின் அமைதியில் இருந்தது. அதற்கு முழு முதற்காரணம், அந்த பெரியளவிலான டயாஸில் நின்று அத்தனை மாணவர்களின் கவனத்தையும் தன்னில் தக்க வைத்தவளாக கம்பீரமாய் கையில் இருந்த பேனாவை சுழட்டியபடி அந்த டயாஸின் வலதில் இருந்து இடமும் பின் இங்கிருந்து அங்குமாய் நடைபயின்றபடி அந்த அறை முழுதையும் தன் பார்வையினுள் அடக்கியவளாக பாடமெடுத்துக் கொண்டிருந்த மேகாவையே சேரும்.

அவள் மேகராகா.. அஸிஸ்டென்ட் ப்ரோஃபஸர், காமர்ஸ் டிபார்ட்மென்ட்.

அதிகம் அளவளாத அவளது குணமே அவளை அந்த பிரிவின் ஸ்டாஃப் ரூமில் தனித்துக் காட்டியது. விளைவு அதிக நண்பர்களில்லை எனினும் அவளது நாட்கள் அமைதியாகவே நீண்டது இருந்த ஒருசில நட்புக்களால். மற்றவர்களெல்லாம் எதிரிகள் அல்ல! எந்தவித விரோதமும் அவளிடம் கிடையாது அதே சமயம் ஒட்டுதலும் இருக்கவில்லை. ப்ரோஃபஸர்.மேகா என்றால் மரியாதை இருந்தது அதைத் தாண்டி இல்லை.

அந்த கலம்காரி சேலையும் கழுத்தில் கருப்பு கயிறும் அதில் தொங்கிய சிறு டாலரும்கூட போட்டியிட்டன அவளது புருவ மத்தியிலிருந்த சிறிய வட்ட வடிவ கருப்பு பொட்டிடம்.

வெகு இயல்பாய் அன்றைய வகுப்பை கையாண்டுக் கொண்டிருந்தாள் மேகா. ஜனரஞ்கமான உதாரணங்களும் நேர்த்தியான விஷயக் கோர்வையுமாய் எளிமையான அவளது வகுப்புகள் என்றுமே மனோவின் மனோகரம்தான்!

அவன் இரசித்து லயித்துப் போகும் வகுப்புகள் அல்லவா அவை!?

ஆண்டவன் குற்றமா? பெற்றவர்களின் குற்றமா? அலட்சியமா? இல்லை பொறுப்பின்மையோ? இல்லை இயற்கையின் விதியோ? என்னவோ! சிறுவனாய் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வந்து சேர்ந்தவன்.  இன்றளவும் அங்குதான் அவனின் வாசம்!  அதை எண்ணுகையிலே ஒருவித அயர்வும் வினாவும் அவனுள் எழும், அடுத்து என்னவென்று. இன்னும் சில வருடங்கள்தான். இருபத்தி மூன்று வயதானால் அவன் அங்கிருந்து வெளியேறியாக வேண்டும்.

தனக்கென்று ஒரு வேலை.. ஒரு இருப்பிடமென தனி உலகம் ஒன்றிர்க்குள் குடிபெயர்ந்தாக வேண்டும். இதில் மாற்றமேயில்லை! அவன் இதுவரை எதற்குமே  குறைபாடியதில்லை. வாழ்வு வாழ்வதற்கே! அது எத்தனை துன்பங்களை அள்ளித் தந்தாலும் அதை இன்பமயமாக்குவது என் கடமை! என் வாழ்க்கையை ‘வாழ்வது’ என் உரிமையும்கூட! என்பவன் அவன்.

விட்டுச் சென்றவர்களை சபித்ததில்லை. கடவுளை பழித்ததில்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படியென்று துவண்டதில்லை. வாழ்வை அதன்போக்கில் எடுத்துக் கொண்டான். எதையும் இனி மாற்றவியலாது என்று புரியும்பொழுது வருமே ஒரு தெளிவு.. அதுதான் அவனிடமும். சூழ்நிலையை ஏற்க கற்றுக் கொண்டான்.

அவனைப் பொருத்தமட்டில் சூழ்நிலையை நாம் ஏற்க மறுக்கும் ஒவ்வொரு வினாடியும் அழுத்தத்துக்குள்ளாகிறோம்..  விருப்பமற்ற அந்த அழுத்தத்தை விரும்பியே ஒதுக்கினான்.

சட்டென அவனது கவனம் வலதுபக்க வரிசையில் இரண்டாவது பெஞ்சிலிருந்தவளிடம் தாவியது சிறு யோசனையுடன். அவன் நினைத்ததைப் போலவே அவளும் வெகு  தீவிரமாய் மேகாவின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள். மனோவின் இதழ்கள் இரண்டும் தாமாய் மலர்ந்தன.

வாழ்க்கையில் சிலரின் வரவு வரமாகும் பொழுதெல்லாம் உள்ளெழுமே மனம் நிறைந்த நன்றியுணர்வொன்று.. அப்படிப்பட்ட உணர்வை அவனுக்கு அடிக்கடி உணரச் செய்யும் இருவரை ஓரே இடத்தில் கண்டால்? தினம்தினம் காண்கிறானே! அவனது மேகா மேமையும் தென்னலையும்.

நினைவுகளுக்கு தடா போட்டவன் பாடத்தில் கவனமாக பத்து நிமிடங்களில் மணியடித்தது. அது லஞ்ச்ப்ரேக் என்பதால் அனைவரும் கலைந்துச் செல்ல பொறுமையாய் ரெஜிஸ்டரையும் புத்தகங்களையும் சேகரித்து நின்றவளிடம் விரைந்தான் மனோ.

கிட்டத்தட்ட அந்த வகுப்பறையே காலியாகி இருந்தது.

“ஹாய் மேம்!! செல்லம்மா எப்படியிருக்கா?” என்று வந்தவனை புன்னகை முகமாய் எதிர்க்கொண்டவளோ

“உங்க செல்லம்மா மனோ மேல கோவமா இருக்கா..” என்றாள் கேலிச்சிரிப்புடன்.

“சாரி மேம்.. புதுசா பார்ட் டைம்ல வேலைக்கு சேர்ந்துருக்கேன் அதான் வர முடியல..” என்றான் உண்மையான வருத்ததுடன்.

“மனோ! உன் செல்லம்மா சௌக்கியமா இருக்கா. மனோ அண்ணாக்கு வரைஞ்சு குடுக்கனும்னு பென்சிலும் கையுமா சுத்திட்டிருக்கா” என்றவள் மனோவின் முகம் மலர்வதை கவனித்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எங்க சேர்ந்திருக்க மனோ? நேரம் வசதிபடுதா?” என்று தொடங்க சில விசாரிப்புகளுக்குப் பின் வெளியேறினாள். சொல்லப் போனால் முதலில் இது சம்பந்தமாக மனோ நாடியது அவளது கைடண்ஸையே! அவனைப் பொருத்தமட்டில் அவள் அவனது வெல்விஷர் மட்டுமின்றி சிறந்த கைட்!! அவளும் அதை சிறப்பாகவே செய்தாள். கலந்தாலோசித்தவர்கள் கடைசியில் முடிவை மட்டும் அவனிடமே விட்டுவிட்டாள். அதுதான் மேகா!
அதனாலேயே இந்த சாதாரண விசாரிப்பு.
எப்பொழுதும் வீட்டிலிருந்து கொண்டு வரும் சாப்பாட்டை தன் கேபினிலேயே வைத்து உண்டு முடிப்பவள் இன்று கஃபேட்டீரியாவை நாடியதன் காரணம் மாற்றத்துக்காகவே!

அந்த கஃபேட்டீரியாவில் ஸ்டூடண்ட்ஸ் பகுதிக்கு பாரலெல்லாய் சுவற்றுக்கு மறுபுறம் அந்த மைதானத்தை பார்த்தபடி டேபிள்கள் போடப்பட்டு காற்றாட அமைக்கப்பட்டிருந்தது ஸ்டாஃப்களின் பகுதி.

ஸ்டூண்ட்ஸ் பகுதியை கடந்து அங்கிருந்த ஸ்டாஃப்ஸ் ஒன்லி பகுதிக்குள் நுழைந்தவள் மூலையில் இருந்த மேசையில் தனது உணவுடன் ஐக்கியமானாள்.

காதோரம் கூசச் செய்து கூந்தலை கலைத்துப் போன காற்றில் உடல் சிலிர்க்க முடியை கோதியவளோ பக்கவாட்டில் பரந்து விரிந்துக் கிடந்த வானில் சற்று நேரம் வெறித்தவளாக பார்வையை கீழிறக்கினாள். தூரத்தில்.. மைதானத்தின் மறுகோடியில் இருந்த படிகட்டுக்களில் அமர்ந்திருந்த இருவரிடம் அவளது கவனம் பதிந்து சில மணி துளிகளுக்குப் பின் மீண்டது.

தென்னலும் மனோவும் அவளது கவனத்தை கவர்ந்தனர் என்றால் எப்பொழுதோ அவள் மனம் பின்னோக்கி பறந்திருந்தது அவனது நினைவால்..

‘இதே போலத்தானே.. அவளும் அவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர்?’

சாரலாவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!