மென்சாரலில் நின்வண்ணமோ!? (3)

IMG-20210429-WA0007-44d0cee1

மென்சாரலில் நின்வண்ணமோ!? (3)

                                  சாரல்-3

 

ஆயிரம் நிறங்கள்
ஜாலமிடும்
ராத்திரி வாசலில்
கோலமிடும்
ஆயிரம் நிறங்கள்
ஜாலமிடும்
ராத்திரி வாசலில்
கோலமிடும்
வானம் இரவுக்கு
பாலமிடும்
பாடும் பறவைகள்
தாளமிடும்
பூமரங்கள், சாமரங்கள்…
வீசாதோ

கடந்துச் செல்லும் காரிலிருந்து கசிந்த பாடல் வரிகளில் உள்ளத்தில் இனம்புரியா இதமொன்று பரவியது மேகாவிற்கு. இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பாள்..? இருந்தும் ஏனோ, ஒவ்வொரு முறையும் முதல் முறையில் தந்த அதே உணர்வை அள்ளி அள்ளி தருகிறது இந்த இசையெனும் அமுதம் மட்டும்.

இதமான உணர்வொன்றுடன் இலவச இணைப்பாய் சில பழைய நினைவுகளும் தலைத்தூக்கின.. பின்னிழுத்த மனதை பிடித்திழுத்தவளாய் தன் கைப்பிடித்து நடந்து வரும் மகளிடம் கவனம் பதித்தாள் அவள்.

வைபவியிடம் முழுக்க முழுக்க கடல் நீரில்  கால் நனைக்கப் போகும் உற்சாகமே என்பது அவளது துள்ளலான நடையே பெரியவளுக்கு உணர்த்தியது. கூடவே தாமாய் மலரும் சின்ன சிரிப்பும் இதழோரங்களில்..!!

ஏனோ இன்று அவளுக்கு மாற்றத்தின் மேல் அப்படியொரு தாகம் வந்துவிட்டதுபோலும். ஏதோ ஒன்று உந்தித் தள்ள எல்லாவற்றிலும் வழக்கத்தை விடுத்து வெளியே வந்து நின்றுப் பார்க்க முயன்றாள். அதை மத்திய உணவைக்  கஃபேட்டீரியாவில் உண்டதுடன் நில்லாமல் இதோ.. இப்பொழுது இங்கு அவளை இழுத்து வந்திருந்தது.

எதிலிருந்து தன்னை விடுவிக்க முயல்கிறாள்? அவளறியாள்! வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்ப நகரக் கற்றுக் கொண்ட பின்னும் ஏனோ அவ்வப்பொழுது ஏதோ ஒரு ஓரத்தில் சலிப்பு தட்டிவிடத்தான் செய்கிறது. அப்படியிருக்கையில் ஓட்டங்கள் மட்டுமே வாழ்க்கையானால்? இப்படிதான் அவ்வப்பொழுது சிறு இடைவெளி.. அவளுக்கு அவளே கொடுத்துக் கொள்வது.. உடல் ஓய்வு கேட்கும்பொழுதெல்லாம் மதித்து உறங்கும் நாம் ஏனோ மனத்தின் குரலை மட்டும் கண்டுக்கொள்வதேயில்லை.

உடலுக்கு ஓய்வு எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியமானது மனதின் அமைதி! அது சற்று ஆட்டம் கண்டாலும் வாழ்வே சிதறவிட்ட புதிராய் ஆகிவிடாதா? அப்படி ஒரு நிலையை அவள் என்றும் விரும்புவதில்லை.

வாழ்க்கை தன்னை எத்தனை தூரம் விரட்டினாலும்.. விளிம்பிற்கே தள்ளினாலும்.. சிற்சிறு சந்தோஷங்களைக் கையில் பிடித்து தன்மானத்துடன் தலை நிமிர்த்தி மகளின் மழலையில் மகிழ்ந்தென வாழ்வை சிறு புன்னகையுடனே எதிர்கொள்கிறாள்.

இல்லையெனில் வாழ்வு இத்தனை இனிமையாகிறாது.

ஆனால் இந்த திடீர் குழப்பத்தின் காரணமென்ன? என்று எண்ணியவளின் முகம் லேசாய் சந்தேக ரேகைகளை பூசிக்கொண்டாலும் தலையை ஆட்டியாட்டி கதை பேசிவரும் மகளை ஏமாற்ற மனமில்லாது அவளுக்கு பதிலுரைத்தபடியே அவள் நடக்க சற்று நேரத்திலேயே  மணல்பரப்பில் கால்கள் பதிய நடந்தார்கள்.

அணிந்திருக்கும் செருப்புடன் சேர்ந்து கால்கள் இரண்டும் நடக்கும் பொழுது  மணலுக்குள் பொதிந்து மீண்டதை வைபவி ஆனந்த ஆர்பரிப்புடன் பார்த்திருந்தாள்.

அங்கேயே  சற்று அமைதியான இடம் பார்த்து அமர்ந்தவள் வைபவியை தனது பார்வை வட்டத்தினுள்ளே வைத்திருந்தாள். அதுதான் மேகா! இங்கு செல்லாதே! என்று அடக்கமாட்டாள் ஆனால் அதே சமயம் அவள் கவனம் முழுதையும் அங்கு வைத்திருப்பாள்.

அதிகம் நிராகரித்திராத அன்னை சிலதை வேண்டாமென்றால் அது வேண்டாதவைபோல என்று புரிந்து கொள்ளுமளவு அந்த மூன்று வயது வைபவியிடம் பக்குவம் இருந்தது.

மணலை குமித்து விளையாடும் மகளையே பார்த்திருந்தவளின் மனதுள்தான் அத்தனை கேள்விகள். அனைத்தும் ஒரேடியாய் மேலெழும்பின.

இத்தனை காலம் அவர்கள்  உடன் ஒத்தாசையாய் இருந்து வைபவியை கவனித்துக் கொண்ட அமிர்தம்மா விட்டுச் சென்ற ஒரே மகன்  திரும்பி வந்து வருந்தி அழைக்கவும் சிறுபிள்ளையாய் மாறி உற்சாகம் ததும்ப அவளிடம் வந்துரைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  அதை கேட்டவளுக்கும் மனம் நிறைந்த மகிழ்வுதான். இனி அந்த அன்னையின் தனிமை தீருமல்லவா? 

அவர்கள் கிளம்பிய சிலநாட்களில் முதலில் கொஞ்சம் நேரம் சரிபட்டுவராமல் போனாலும் பின் ஒருவாறு  நிதானித்து நேரத்தை ஒதுக்கியென புது வழி ஒன்றை கண்டிருந்தாள் மேகா.  அது இப்பொழுதைக்கு சரியென்றாலும்.. இன்னும் சில மாதங்களில் பவிக்குட்டி பள்ளி  செல்ல தொடங்கிய பின் என்ன செய்வதென்பதே அவளது முதல்  கவலை.

இப்பொழுதும் அவள் வரும்வரை ப்ளே ஸ்கூலில் இருப்பாள்தான். ஆனால் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால்  மதியமே பவி வீட்டுக்கு வந்துவிடுவாளே.. அங்கேயே வழிகள் ஆயிரம் இருந்தன.. ஆனால் மனம்தான் எதிலும் ஒன்ற மறுத்தன. பவி விஷயத்தில் மட்டும் எந்த விதத்திலும் அவள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

பார்த்துக்கொள்ளலாம்! என்று மனதுக்கு ஆறுதல் உரைத்து உறங்க வைக்க அவள் முயல அதுவோ மறுத்தது. இதுவல்லவே இந்த பரபரப்பிற்கான காரணம்..  ஹ்ம்!!

அழகான மாலைப்பொழுது.. தீண்டிச் செல்லும் உப்புக்காற்று.. சகமனிதர்களின் சலசலப்பு.. கண்ணெதிரே கலைந்து பரந்திருந்த ஊதா போர்வை.. அவளைப்போலவே குழப்பத்துடன் கரைத்தொட்டுச் செல்லும் அலைகள்.. என வாழ்க்கை அற்புதம் என்று பறைசாற்றும் விதமாய் அங்கு வாழ்வின் அழகியல் அனைத்தும்..!!

மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றவளுக்கு சற்று முன் கேட்ட பாடல்வரிகளை இதழ்கள் தாமாய் முணுமுணுக்க இம்முறை எத்தனை முயன்றும் நினைவுகளின் பிடியில் அவள்.

ஏழு வருடங்களை சுலபமாய் கடந்த மனம் பின்னோக்கி சிறகு விரித்திருந்தது..
ரூபனுடனான அவள் நினைவுகள்…

சில பாடல்களை திருப்பித் திருப்பி கேட்பதற்கு காரணம் பிடித்தமாய் மட்டும் இருப்பதில்லை.. அவை தாங்கி வரும் பழைய நினைவுகளும்தான்! சிலதை இரசிப்பதும் சிலதை தவிர்ப்பதும் அதே நினைவுகளால்தானே! இசையுடன் பின்னப்பட்ட நினைவுகளனைத்தும் அதன் ஒவ்வொரு மெட்டிலும் மேலெழுப்பத்தானே செய்யும்..
அவளது நிலையோ திரிசங்கு சொர்க்கம்தான்.. நினைக்கவும்  தோணாத..தவிர்க்கவும் இயலாத நிலை..
எதையும் ஒதுக்கவும் மனம்விழையவில்லை.. அதே சமயம் எண்ணி மகிழ்வுறும் நிலையிலும் இல்லை.. ஏதோ இரண்டுக்கும் இடையில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஊசலாடியது..
இந்த ஊசலாடும் நிலை இன்று நேற்றா??
மற்றவர்களுக்கு மிக தெளிவானவளாகத் தெரிந்தாலும் அவளுள் அவள் நடத்தும் போராட்டத்தை யாரறிவர்?!
அன்றும் இதே போலத்தான்.. காலையில் கல்லூரி வாசலுக்கு வந்த பின்பே தெரிந்தது, அன்று திடீர் விடுமுறை ஒன்றை அறிவித்திருந்தனர். சிலர் நண்பர்களுடன் குதூகலமாய்  சென்றுவிட சிலர் வீடு திரும்பினர் என்றால் மற்ற சிலரோ எந்தவித நோக்கமுமின்றி ஆங்காங்கே நின்றப்படி கதையளந்துக் கொண்டிருந்தனர்.

வீடு திரும்பும் நோக்கில் திரும்பியவளை தடுத்தது அவனே!
“மேக்ஸ்!!” என்ற உற்சாகக் குரலில் இவள் திரும்பிட சற்று தூரத்தில்.. அந்த கேட்டின் மறுவாயில் கேட்டிலிருந்து  விறுவிறுவென கிட்டத்தட்ட ஓடி வந்துக் கொண்டிருந்தான் அவன்.

இதழில் சிறு புன்னகை மலர்ந்திட தலையசைத்தவளாய் அவள் முழுதாய் அவன் புறம் திரும்பி நின்றாள் காத்திருக்கும் உடல்மொழியுடன்.

சற்று மூச்சு வாங்கியவனாக, “எங்க போற?” என்றவன் கேட்க அவளோ கேலிப் புன்னகை ஒன்றுடன்.

“வீட்டுக்குதான் ஏன்?” என்றாள் கேள்வியாய்.

“ஸோ ஸூன்? அஹ்! கொஞ்ச நேரம் இருக்கலாம்ல?” என்றான்.

“இங்க இருந்து என்ன பண்ண?” என்றவளை முறைத்தவனோ,

“ஏன்? எங்களலாம் பார்த்தா மனிதப்பிறவியா தெரியலையா?” அவனின் குரலில் கிண்டலே.

“ நீ இத்தன நாளா சொல்லவே இல்ல பாத்தீயா?!!” என்றவளின் குரலில் மறைந்திருந்த கேலியில் அவனுக்குமே சிரிப்பு வர..

“அதான் இப்ப சொல்லிட்டேனே! அண்ட் இந்த ரகசியத்த வெளில சொல்லிராத! அப்பறம் நீயும் எங்க ப்ளானட்னு கண்டுபுடிச்சிருவாங்க!!” என்றான் தீவிரமாய்.

“சரி சரி சொல்லமாட்டேன்” என்று அவள் விடாமல் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தாள்.

“வீட்டுக்கு போய் அப்படி என்னதான் செய்வ?!!” என்றவனின் கேள்விக்கு எப்பொழுதும் போல் இப்பொழுதும் புன்னகைத்தாள்.
அவர்களுக்கு வெகு அருகில் இருந்த பூங்கா ஒன்றிர்க்கு நடந்தனர். முதலில் அவள் வெறெதோ சிந்தனையில் வர அவனோ கொஞ்சம் அமைதிகாத்தாலும் மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தான்.
அவனை பொருத்தமட்டில் அவளுடன் செலவிடும் ஒவ்வொரு மணித்திவலைகளும் அவனுக்கு இதமானவை..!! அதை எப்படி அவன் விடுவான்? கிடைக்கும் நேரங்களிலெல்லாம் அவளுடன் செலவிடவே விரும்பினான். அவள் ஏதோ ஒன்றில் மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட்டாள்! அது என்னவென்றுதான் அவனுக்கு புரிய மறுத்தது.

இதுதான் முதல் முறை இருவரும் கல்லூரியை தவிர்த்து வெளியில் அமர்ந்து பேசுவது.
உள்ளே தள்ளி மரத்தடியில்.. நல்ல நிழலில் இருவரும் அமர்ந்து கொண்டனர் அந்த சிமென்ட் பெஞ்சில்.

சுற்றிப் பார்வையை சுழலவிட்டவனின் கண்ணெட்டும் தூரம் வரையிலுமே காதல் ஜோடிகள்தான் அந்த பார்க்கில்!

“பேசாம ரோமியோ-ஜூலியட் பார்க்னு பேர் வச்சிருக்கலாம் போலயே!!” என்று முதலில் கிண்டலடித்தவனோ பிறகு திடீரென..

“ஏன் மேக்ஸ்.. நம்மளயும் எல்லாரும் இப்படிதானே நினைப்பாங்க??!!” என்று வினவ அவளோ,

“நினைச்சிட்டு போகட்டும்!” என்றாள் சர்வ சாதாரணமாய் அவனை வியப்பில் தள்ளியவளாக.

அவனது ஆச்சர்யப்பார்வையை உணர்ந்தவளோ,

“உனக்கும் எனக்கும் தெரியும்! அப்பறமென்ன? என்ன பத்தி தெரிஞ்சவங்க ஜட்ஜ் பண்ணப் போறதில்ல.. என்னப்பத்தி தெரியாதவங்க ஜட்ஜ் பண்ணா அது என் பிரச்சனையில்லல..  மத்தவங்களோட அஸம்ஷன்ஸ்க்கு நாம ஆன்ஸரபிள் கிடையாது! மோரோவர் நீயும் இப்ப அதான பண்ண..” என்றவள்  ஒரு இயர்ஃபோனை அவனிடம் கொடுத்தவிட்டு இன்னொன்றை மாட்டிக் கொண்டது இன்றும் அவனுக்கு நினைவில் இருக்கிறது.
நினைவுகளில் மூழ்கி திளைத்திருந்தவனை கலைத்தது பஞ்சுப் பொதியொன்று!
ஆம்! மூன்று வயது மதிக்கத்தக்க பஞ்சுப்பொதியொன்று அதியின் மேல் வந்து மோதிய வேகத்தில் மடியில் விழ கனவு கலைந்தவனோ தாங்கிப் பிடித்தான்.

“அச்சோ! பாப்பா! பாத்துமா” என்றவன் அவளை தூக்கிவிட்டு  மேலிருந்த மணலை தட்டிவிட அவனை தடுத்தவளோ,

“நானே பண்தேன்” என்று மழலை மொழி இசைந்துவிட்டு பிஞ்சுக் கரங்களால் தட்டிக் கொண்டதையே ஆசையாய் பார்த்திருந்தவனுக்கு அவ்வளவு பிடித்துப் போனது..

“உங்க பேரென்ன?” என்றவனின் கேள்வியில் தலை நிமிர்த்தியவள் அப்புதியவனிடம் எதை உணர்ந்தாளோ,

“வைப..வி.. ராகிக்கு பவிக்குட்டி” என்றவள் கையை சுருக்கி குட்டியாக்கினாள்.

மழலையில் மெய்மறந்திருந்தவனை கலைத்தது அந்த குரல்.

“பவிமா!!” என்ற அழைப்பில் ஒரு கணம் உறைந்தவன் மறுநொடியே உயிர்பெற்றவனாய் திரும்பிட அவன் நினைத்தது நூறு சதவிகிதமாய் இருந்தது.

“மேக்ஸ்?!!”

“அதி!!??”

 

###

“இப்ப ஏன் இவ்வளவு ஷாக்காற?” என்று கேள்வியுடன் எதிரில் நின்ற மனோவை நம்பாத பார்வை ஒன்றுடன் எதிர்க்கொண்டவள் அவன் கையவே கிள்ளிப் பார்த்தாள். அதில் இன்னும் கடுப்பானவனோ,

“கனவில்ல தாயே!!” என்றான் கடுப்பு குறையாமல்.

“It’s a medical miracle!!!” என்றவளையே குழப்பமாய் பார்த்தவனோ “ஏன்?” என்றான் நம்பாமலேயே

“படிப்பிஸ்ட்டுக்கு கிஃப்ட்ஷாப்பிலென்ன ஜோலி?” என்றாள் போலி ஆர்ச்சயத்துடன்.

“அத யார் சொல்றா?!” என்று பதிலுக்கு கலாய்த்தவனோ, பின் சீரியஸ் மோடிற்கு மாறி,

“செல்லம்மாக்கு கலரிங் புக் வாங்கலாம்னு வந்தேன்..” என்றான் அந்த டேபிளின் மேல் பரந்துக் கிடக்கும் புத்தகங்களையே ஆர்வமாய் தழுவியபடி..

“பட்ஜட் என்ன?” என்றவள் கேட்க அவன் உரைத்த தொகைக்கு சரியாய் என்னவெல்லாம் ஆப்ஷன்கள் இருக்கிறதென்று யோசிக்கலானாள்.

அவளுக்கும் நன்றாகவே தெரியும் அவன் வேலைக்கு சேர்ந்து சில நாட்களே ஆகிறதென்று.. இது அவனது சேமிப்பாய்தான் இருக்க வேண்டும். லீவ் நாட்களில் அவன் வேலைப் பார்த்து சேர்த்தவை..!!

“கலரிங் புக்விட கலர் பென்சில் ஸ்கெட்ச் பென்ஸ்னு வாங்கேன்.. கலரிங் புக்னா.. ஃபர்ஸ்ட் இருக்கதுலயே நாம கலர் செய்யனும் இதுனா அவளே புதுசு புதுசா வரையலாம்” என்றாள் தீவிரமாய் அவனுக்கும் அது சரியென்றுபடவே அதையே வாங்கிக் கொண்டான்.

“நல்லாதானே தமிழ் பேசற.. அப்பறம் ஏன் அப்பப்ப பழைய டேப்ரிக்கார்டர் மாதிரி ஸ்டக் ஆகற?” என்றான் கேலியாய்.

“அது..கொஞ்சம் ஓவர் டென்ஸ்ட் ஆனா.. வர்ட்ஸ் வரமாட்டேங்குது” என்று பதிலளித்தவள் அவள் வாங்க வந்ததை வாங்கச் சென்றாள்.

“என்ன விசேஷம்?” என்றவாறே அவளுடன் அவன் நின்றிருக்க அவளோ வேலையில் கவனம் பதித்தவளாய்..

“ஃப்ரெண்ட் பர்த்டே.. என் ஃப்ரெண்ட் சர்க்கிள் சின்னது.. இத குரியர் செய்யனும் நாளைக்கு..” என்றபடி தென்னல்  நிமிர மனோவோ,

“பேசாம ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சு அவங்க அட்ரஸ் குடுத்துருக்கலாமே?” என்று வினவினான்.
“நான்கூட கேஷ் ஆன் டெலிவரி போட்டு விடலாம்னுதான் நெனைச்சேன் பச்! மை மனசாட்சி டின்ட் அலோ யூ நோ!?” என்றாள் பாவமாய் முகத்தை வைத்து

“பாவீ!! இப்படி பண்ணா எப்படி சர்க்கிள் சதுரமாகும்!!” என்று சிரித்தான்.

அவன் சிரிப்பதையே கவனித்திருந்த தென்னலோ, “அப்படியில்ல மனோ.. நமக்கு பிடிச்சவங்களுக்கு நம்ம கையால செய்யும்போது இன்னும் கொஞ்சம் சாட்டிஸ்ஃபாக்ஷன்..” என்க மனோவும் சிரிப்பினூடே தலையசைத்து ஆமோதித்தான்.

அவன் சிரிப்பை பார்த்திருந்தவளின் அகத்திலோ.. எத்தனை வதந்திகள் வந்தாலென்ன? இவனுடன் நான் பேசத்தான் போகிறேன்… என்ற எண்ணம் திண்ணமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!