மென்சாரலில் நின்வண்ணமோ!? (4)

மென்சாரலில் நின்வண்ணமோ!? (4)

 

                                 சாரல்-4

புத்தம் புது காலை
பொன் நிற வேளை
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அது தான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

“அரே! ஃபோன் உட்டாவோ யார்!!!!” என்ற நம்ரதாவின் குரல் குளியலறையினுள் இருந்து சிறு எரிச்சலைத் தாங்கியவாறு வெளிவந்தது. பாவம் அவளும்தான் என்ன செய்வாள்? அவள் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே அடிக்கத் தொடங்கியது.. இன்னும் அடித்துக் கொண்டே இருக்க அதை எடுத்து பேச வேண்டியவளோ அங்கிருக்கிறாளா என்றே தெரியவில்லை. அப்படியொரு மயான அமைதியில் அவளுக்கு புரியாத வரிகளைத் தாங்கி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது தென்னலின் ஃபோன்.

நம்ரதா தென்னலுடன் அவள் அறையை பகிர்ந்துக் கொண்டு அந்த பி.ஜி.யில் வசிப்பவள்.  பூனேவை பிறப்பிடமாக கொண்ட அவளும்.. மலையாள வாசம்வீச தமிழ் பேசும் தென்னலும் ஒரே அறையை பகிர வேண்டி வருமென்று  கனவிலும் நினைத்திருப்பரோ என்னவோ! முதலில் தட்டு தடுமாறினாலும் பின் ஒருவாறு சமாளித்துக் கொண்டனர். இதில் தென்னலுக்காவது தமிழ் தெரியும் ஆனால் நம்ரதாதான் அச்சூழலுக்கு பொருந்திப்போக நிரம்பவே சிரமப்பட்டுப்போனாள்.
இவர்களுடன் இன்னும் இருவரும் இருந்தனர். அவர்கள் இருவரும் இவர்களுக்கு முன்பிருந்தே அவ்வறையில் வசிப்பவர்கள் அதனாலேயே அவ்விருவருக்குள்ளும் ஆழமான நட்பொன்று இருந்தது. மற்ற இருவரும் சொந்த வேளையாக வெளியூர் சென்றிருக்க இங்கு அறையில் இப்பொழுதைக்கு இவர்களின் ஆட்சியே.
அதிகம் கொஞ்சிக் குலாவிடினும் தென்னலை நம்ரதாவிற்கும் நம்ரதாவை தென்னலுக்கும் பிடித்துப்போனது. நம்ரதா சென்னையிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் கண்டண்ட் டெவலப்பராக  பணிபுரிகிறாள்.

பாடலின் வரிகள் புரியாவிட்டாலும் அவள் இரசித்து உணரும் பாடல்களுள் தென்னலின் இந்த புத்தம் புது காலை ரிங்டோனும் ஒன்று. இசைக்கேது மொழி!?

இந்த ஒன்றரை வருட பி.ஜி. வாழ்க்கையில் தென்னல் ரிபீட்டட் மோடில் கேட்கும் பாடலும் அதுவே! அதனாலேயே நம்ரதாவிற்கு வரிக்கு வரிக்கு மனப்பாடமாகியிருந்தது.
முக்கால்வாசி நேரம் வைப்ரேஷன் மோடிலிருக்கும் தென்னலின் ஃபோன் இன்று அந்த அறையை தன் இசையால் நிறைத்திருக்க. நம்ரதாவிற்கோ அப்படி என்ன செய்கிறாள் என்ற எரிச்சலே மிகுந்திருந்தது. அந்தப் பக்கம் என்ன அவசரமோ என்ற வருத்தமும்கூட.

அதனாலேயே பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் ஒருகட்டத்தில் பாத்ரூமினுள் இருந்தே கத்தியிருந்தாள்.

நம்ரதாவின் கத்தலில் நிகழ் உலகிற்குள் குடிபெயர்ந்த தென்னல் முதலில் திடுக்கிட்டாள் தானா இப்படி என்ற கேள்வி எழுந்த நொடி அவளுக்கே ஒரு மாதிரி ஆகிட ‘ப்ச்சே!!’ என்று தலையை தட்டியவளாக தரையிலிருந்து எழுந்துக் கொண்டாள்.
“ஹான்! யா யா” என்று நம்ரதாவிற்கு பதிலளிக்கவும் மறக்கவில்லை அவள்.

முதலில் இசைந்துக் கொண்டிருக்கும் ஃபோனை கைப்பற்றியவள் அது ஷிவானி என்று காட்டவும் அன்று நடந்தவையெல்லாம் வரிசைக்கட்டி நினைவுக்கு வரவும் சரியாய் இருக்க முயன்று ஒதுக்கியவளாக அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ! ஷிவா?” என்றிவள் அழைக்க அந்தப் பக்கத்தில் இருந்தவளோ சிறு மௌனத்திற்கு பின்..

“என்மேல கோவமா இருக்கியா தென்னல்?” என்றவளின் திடீர் கேள்வியில் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் போகவே

“எதுக்கு?”  என்று  மறுகேள்வி கேட்டாள் தென்னல்.

“உனக்கு தெரியும்..” என்ற ஷிவானியின் குரலில் இருந்த தீவிரத்தில் சட்டென உரைத்தது அவள் சொல்ல வருவது.

“கோவமெல்லாம் இல்ல ஷிவா. நான் அத அப்பவே மறந்துட்டேன்..” என்ற தென்னலின்  குரல் அமைதியை தாங்கி நின்றாலும் அதில் சற்று ஒதுக்கம் இருந்ததோ? என்று தென்னலுக்கே சிறு சந்தேகம்.

“அம் சாரி தென்னல்” என்றவளின் வருத்தம் பிடிக்காதவளோ,

“ப்ச்! விடு ஷிவா. நானும் ஹார்ஷா பேசிட்டேன் சாரி..” என்றவளினுள்ளோ ‘கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணிருக்கலாம்’ என்றக் குரல் எழுந்தது.அது அவளது மனக்குரலே!

“ம்ம்..எனக்கு நேத்து நோட்ஸ் வாட்சப் பண்றீயா தென்னல்?” என்று பேச்சை மாற்றிய ஷிவானி பின் எது எதுவெல்லாம் வேண்டுமென சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

முதல் வேளையாக அவள் கேட்டதையெல்லாம் ஃபோட்டோ எடுத்து அவளுக்கு வாட்சப்பில் அனுப்பிவிட்டு மறுபடியும் அதே இடத்தில் வந்தமர்ந்த தென்னலுக்கோ சற்று சலிப்பாய் இருந்தது.

முந்தைய வாரக் கடைசியில் இவள் மனோவிற்காக காத்திருந்த பொழுது நடந்தவை அது. மற்றொரு தோழியான சபிதாவுடன் அமர்ந்திருந்தாள் தென்னல். முதலில் கிளம்பியவள் பிறகே அன்று மதியம் வேலைமெனக்கெட்டு மனோ வந்து அவளை காத்திருக்கும்படி சொன்னது நினைவில் வர க்ரௌண்டிற்கு வந்தவள் அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த சபிதா அண்ட் கேங்குடன் பேசியவாறு அமர்ந்துவிட்டாள்.
ஒரே வகுப்பு மாணவிகள் வேறு.. பேச்சு சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருந்த பொழுதுதான் அவள் அதை கேட்டது. அது வெகு சாதாரண கேள்விதான். இருந்தும் அன்று அவளது இலகு பாவனையை தடுமாறச் செய்தது.
அவள் கதையளந்தபடி இருப்பதை பார்த்துவிட்டு சபிதாதான் முதலில் தொடங்கியது.. “யாருக்காக வெய்ட்டிங்??” என

இவள் “மனோ வரேன்னு சொன்னான்” என்றுவிட்டு பேச்சில் கவனமாகிவிட

“நீங்க ரெண்டு பேரும் கமிட்டெடா?” என்றொலித்த ஷிவானியின் குரலில் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் போனதென்றால் புரிந்த பின்போ அதற்கு என்ன சொல்லவென்று அவளுக்கு விளங்கவில்லை.

இப்படியொரு புரளி சுற்றி வருவதை அவளும் உணர்ந்தே தான் இருந்தாள் இருந்தும் ஓரளவு பழகிய ஷிவானி கேட்கவும் ஒரு மாதிரி ஆனது. அவள் நினைத்திருந்தாள் “இப்படியெல்லாம் அவன்கிட்ட கேட்டிராத கலாய்ச்சு தள்ளிருவான்” என்று கிண்டலாய் தவிர்த்திருக்கலாம். இல்லையெனில் “நாங்க ஃப்ரெண்ட்ஸ்” என்று முடித்திருக்கலாம். என்று இப்பொழுது இத்தனை தோன்றி தொலைத்தது. ஆனால்  அன்றோ.. “ஏன் இவ்வளவு ஆர்வம்? அதுவும் என்ட லைஃப்ல?” என்று சிறு ஏளன  இதழ் வளைவுடன் குரலின் உச்சரிப்பிற்கேற்ப தலையசைத்து வினவியவள் கையிலிருந்த வாட்ச்சை ஒரு முறை பார்த்துவிட்டு

“ஐம் கெட்டிங் லேட்..” என்று விடைபெறும் பாவனையுடன் கிளம்பிவிட்டாள். அதற்கு  பின்னான ஒரு நொடியைக்கூட அங்கு அவள் செலவிட்டிருக்கவில்லை. அவளது உடல்மொழியிலும் வாய்மொழியிலும் தொனித்த ஏளனத்தில் மற்றவளின் முகம் முற்றிலுமாய் மாறியதை உணரத்தான் செய்தாள் இருந்தும் ஏதோ ஒன்று அவளை சீண்டியிருக்க வேண்டும். எது அது?

அதற்காக ஷிவானி மேல் அவளுக்கு எந்தவித கோபமோ வெறுப்போவெல்லாம் இல்லை. மாறாக சிறு ஒதுக்கம் வந்துவிட்டது. அதற்கு பின் சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்த ஷிவானி  இன்றுதான் வந்திருந்தாள். வந்தவள் கோபத்தில் முறுக்கிக் கொண்டிருக்கும் தென்னலை எதிர்ப்பார்க்க அதற்கு நேரெதிராய் புன்னகை முகமாகவே இவள் ஷிவானியை எதிர்கொள்ள அதில் இன்னுமின்னும் குழம்பியவளோ முடிவே செய்துவிட்டாள் இவளது கோபம் தணியவில்லை என..

அதற்கு முன்னும்கூட அப்படியொன்னும்  இருவரும் ‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’ பாடிக் கொண்டிருக்கவில்லைதான். இருந்தும் ஓரளவு நன்றாகவே பேசிப் பழகியவளை நாம் ஏதோ ஒரு விதத்தில்  காயபடுத்திவிட்டோம் என்ற உறுத்தல் இருவருக்குமே இருந்திருக்க வேண்டும்..

‘கேட்டிருக்க கூடாதோ?’ என்று ஷிவானியும்

‘ஒரு ஃப்ரெண்டுக்குண்டான ஆர்வத்துலதான் கேட்டிருப்பாளோ?’ என்று தென்னலும்.

தனக்கு பின்னால் பேசும் ஆட்களின் பேச்சுக்களை  என்னதான் ஒதுக்கித் தள்ளினாலும் ஏனோ தென்னலால் இதை மட்டும் முழுதாய் கடக்க இயலவில்லைபோலும்.  திடீரென வீட்டின் நினைவு வேறு. வீடு என்பது அதில் வாழும் மனிதர்கள்தானே? 

ஒன்று தொட்டு ஒன்றென சிந்தனைகள் அனைத்தும் அதன்போக்கில் வலைப்பின்ன அதன் விளைவுகளை உணர்ந்தவள் சட்டென் தலையை உலுக்கிக் கொண்டு எழுந்துவிட்டாள். போட்டிருந்த  டீஷர்ட்டின் மேல் புல்லோவரை வேகவேகமாய் அணிந்துக் கொண்டு மேசைமேல் கிடந்த அவளது ஹெட்செட்டை கழுத்தில் மாட்டியவளாய் ஸ்னீக்கர்ஸை தூக்கிக் கொண்டு வெளியில் விரைந்தாள்.

“வெளில போய்ட்டு வரேன் நம்ரு” என்று வாசலில் இருந்து உள்நோக்கி குரல் கொடுத்தவள் கதவை சாற்றியவளாக விறுவிறுவென ஸ்னீக்கர்ஸை அணிந்துக் கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சாலையில்  இறங்கியிருந்தாள்.

பூங்காவை நோக்கி நடந்தவள் ‘அம்மு’ என்றிருந்த எண்ணிற்கு அழைத்து ஃபோனை காதிற்கு கொடுத்தவளாய் விறுவிறுவென நடந்தாள்.

இவள் அழைத்து சரியாய்  இரண்டு ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.
“சேச்சி..” என்றவனின் குரல் தூக்க கலக்கம் சற்றும் குறையாமல் வெளிவந்தது. இல்லையெனில் அவன் ஏன் சேச்சி என்றெல்லாம் அழைக்கப் போகிறான்?… சட்டென கையை திருப்பி மணி பார்த்தாள். அமுதன் உறங்கும் நேரமது. பள்ளியில் இருந்து திரும்புபவன் சற்று நேரம் ஓய்வெடுப்பது அவனது வழக்கம்.

வெகு தாமதமாகவே அது உரைத்தது தென்னலுக்கு..

“அமுதா பிஸியா?” என்றிவள் கேட்டதுதான் தாமதம் அங்கு பொங்கியிருந்தான் அமுதன்.

“ராட்ச்சஸி!! தூங்கிட்டிருந்தவன எழுப்பிட்டு கேக்கற கேள்வியா இது?”என்று புலம்பித் தள்ளியவனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது என்பது அவனது ‘ராட்ச்சஸி’ என்ற அழைப்பே கூறியது.

“ஓ… சரி நான் அப்பறமா கால் பண்றேன்” என்றவள் வைக்கப் போக அவளை தடுத்து நிறுத்தியது அமுதனின் குரல்.

“ஹே! ஹே தேன்ஸ்!! என்னாச்சு உனக்கு?? வாய்ஸே சரியில்ல..ம்ம்?” என்று பதட்டமாய் தொடங்கி தெளிவாய் முடிக்க அவன் முதலில் கத்திய கத்தலில் எரிச்சலுற்றவளோ,

“அதுக்கேண்டா காதுக்குள்ள கத்தற?? உனக்குனு வச்சிருக்காங்க பாரு பேர் அமுதன்னு.. தார்டப்பால கல்லு போட்டு உருட்டுனா மாதிரி” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

“ஆஹ்! அங்க மட்டும் என்ன வாழுதாம்? வர்தா புயலுக்கு வனிதாமணினு வச்சாப்ல வச்சிருக்காங்க பாரு.. தேங்காநாருக்கு தென்னல்னு.. “ என்க

“அம்மு!!!” என்றிவள் பல்லை கடிக்கவே  சட்டென இறங்கி வந்தான் அமுதன்.

“இப்ப சொல்லு தேன்ஸ்! என்னாச்சு?” இம்முறை அவன் குரலில் இருந்த இதத்தை உணர்ந்தவள்போல அவள் மன எண்ணங்கள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.  அவர்களைப்போல அடித்துக் கொள்வதிலும் சரி அணைத்துக் கொள்வதிலும் சரி அவர்களுக்கு இணை அவர்களே!!

அவள் பேசி முடிக்கும்வரை அமைதிகாத்த அமுதன் அவள் முடித்த பின் பொறுமையாய், “ஏன் தேன்ஸ்.. அவங்க தப்பா நினைக்கறாங்களேனு ஃபீல் பண்றீயா?” என்றான் தீவிரமான குரலில்.

அவளோ, “ஏன் அம்மு.. உனக்கு என்ன தெரியாதா? இந்த மாதிரி விஷயங்கல்ல  ஐம் லீஸ்ட் பாதர்ட்னு..” என்க மறுமுனையில்,

“அதானே! நான்கூட என்ர சேச்சிக்கு இந்த மான ரோஷம்லாம் வந்துடுச்சோனு பயந்திட்டேன்..” என்க “அம்மு!!!” என்றிவள் பற்களை நறநறப்பது அங்குவரை கேட்டதோ என்னவோ..

“பச்! ஃப்ரீயா விடு தேன்ஸ்!! யூ ஆர் கெட்டிங் ஃபேமஸ் தேனூ!!! ஹூஹூ!!!” என்றவன் திடீர் உற்சாகத்தை தத்தெடுத்தவனாய் சீட்டியடிக்க அவன் குரல் மாறிய விதத்தில் சிரிப்பை அடக்க இயலாமல் சிரித்தவள் பிறகு,

“சம்பந்தமே இல்லாம ரூமர்ஸ் ஸ்ப்ரெட் பண்றதுல இவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ!” என்றாள் சலிப்பாய்

“அல்பத்தனமான திருப்திதான் தேன்ஸ்! அறிவிருக்கற யாரவது பண்ணுவாங்களா? நீயே சொல்லு!?” என்று கேள்வியை அவளிடமே திருப்பினான்.
எதிர்முனையில் சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. அமுதன் அவளை நன்கறிவான். தென்னல் இப்படிப்பட்ட விஷயங்களுக்காகவெல்லாம் வருந்தும் ரகமல்ல! அப்படி அவள் வருந்துகிறாளென்றாள் அவளை வேறெதுவோ பாதிக்கிறதோ? இல்லை உள்ளிருந்து எதுவோ குழப்புகிறதோ? என்றவன் சிந்தனை இருக்க அதை அப்போதைக்கு புறந்தள்ளியவனாக..

“தேன்ஸ்..” என்றழைத்தான் மென்மையாய்.
அண்ணன்கள் மட்டுமல்ல தம்பிக்களும் பல சமயங்களில் தாயாகவும்..சேயாகவும்.. உற்றத் தோழனாகவும் உருவெடுக்கின்றனர்.

“என்னவோ அம்மு..” என்று சலித்த குரலில் அவள் முடித்திருக்க கூடயில்லை அதற்குள் இடைப்புகுந்தவனாய்..

“அடிப்பாவீ!! என்னவோவா?? உனக்காக என் தூக்கத்த தியாகம் பண்ணிட்டு தத்துவார்த்தமா பேசிட்டிருக்கேன்.. “ என்று கொதித்தெழ

“அஹ்!! அங்க அவனவன் அக்காக்காக என்னவெல்லாமோ செய்யறான்.. நீ என்னடான்னா..” என்றாள் அமர்த்தலாய்

“அவ்ளோலாம் ஸீனில்லை!” என்று அவனும் விடாமல் டஃப் கொடுத்தான்.
சில கணங்கள் எதிர்புறத்தில் பதிலில்லாமல் போக, “என்ன கௌண்ட்டர் யோசிக்கறீயா?” என்று அதற்கும் கலாய்த்து வைத்தான் அவளது அருமை தம்பி அமுதன்.
“உன்ன!!”

“ஆமா.. இந்நேரத்துக்கெல்லாம் மேடம் தெருவுல சிங்கம் ஒன்று புறப்பட்டதே ரேஞ்சுக்கு நடக்க ஆரம்பிச்சிருப்பீங்களே..??” என்று கிண்டலாய் இழுத்தான். பிறந்ததில் இருந்து அவளுடனே இருப்பவனுக்கு அது கூடவா தெரியாமல் போகும்? அதான்.. குழப்பமோ கோபமோ வந்தால் தென்னல் தெருவில் இறங்கிவிடுவாள். இதோ இப்பொழுது செய்ததுபோலவே!

விறுவிறுவென மூச்சுவாங்க நடந்து முடிப்பவளுக்கு குழப்பங்களும் வேர்வைத் துளிகளாய் கரைந்துவிடுவதாய் ஒரு நம்பிக்கை. அவள் அளவில் அது உண்மையும்கூட! நடந்து முடித்து வந்து குளித்தால் புத்துணர்வொன்றுடன் புதுத் தெளிவொன்றையும் உணர்வாள் அவள். அதை அமுதனும் சரியாய் கணித்துவிட அவனது கேலியில் சிரிப்பு வரப் பெற்றவளின் குரலோ 

“அம்மூ!! கெஸ் வாட் அம் கோயிங் டு டூ??”  திடீரென உற்சாகமாய் ஒலித்தது அவளது குரல்  அவனது கடைசி கௌண்ட்டரை கண்டுக்கொள்ளாததைப்போல..

“என்ன..” என்று தொடங்கியவனின் செவியில் அந்த மணியோசை மிக தெளிவாய் கேட்டது. அது ஐஸ் க்ரீம் வண்டியின் மணியோசை. அது என்னவென உணர்ந்த அடுத்த கணமே,

“தேனூ..??” என்றவன் சந்தேகமாய் இழுக்க அவளோ,

“நான் அப்பறமா கூப்பிடறேன்.. பை பை பை!!!” என்றாள் அவனை சீண்டுவதற்கென்றே அவசரக் குரலில்.

“வயிறு வலிக்கும்!!” சாபமாய் அவன் தொடங்க அவளோ..

“எனக்கு டயேரியாவே வந்தாலும் பரவால்ல.. ஹலோ!! ஹலோ!! கேக்க மாட்டுது அம்மு..” என்க அமுதனோ..
“அய்யே! கேவலமா நடிக்காத..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.. ‘ஐஸ் கேண்டி பிடிக்க முடியல அம்மு’ என்று வெறுப்பேற்றியபடி.
ஃபோன் திரையையே ஒரு நிமிடம் பார்த்தவனின் முகம் புன்னகையில் மலர இடவலமாய் தலையசைத்தவனாய் மெத்தையிலிருந்து இறங்கினான்.

சீக்கிரமே எழுந்து வந்த மகனை அப்பொழுதே பள்ளியில் இருந்து வீடு திரும்பியிருந்த ஸ்வர்ணம் ஆச்சர்யப் பார்வை பார்த்தவராய் பால்கனியை எட்டிப் பார்த்துவிட்டு,

“மழை எதுவும் வரப்போவுதா என்ன?” என்றார் கிண்டலாக, தான் அவர்களுக்கு அம்மா என்பதை நிரூபிக்கும் விதமாய்.

“எல்லாம் உன்ர தேனுமிட்டாயால வந்தது!!” என்று போலியாய் சலித்துவிட்டு அடுக்களையினுள் நுழைந்தான், “ஃபைவ் மினிட்ஸ்மா!! காஃபி கம்மிங்!!” என்று அமுதனின் குரல் மட்டும் அடுக்களையினுள் இருந்து வெளிவர கைப் பையை மேசைமேல் வைத்துவிட்டு குளியலறையினுள் நுழைந்தார் ஸ்வர்ணம்.

இங்கு அமுதனிடம் பேசி வைத்தவளின் முகமோ பேசும்பொழுதிருந்த அதே மலர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க கையிலிருந்த ராஸ்பெர்ரி ஃப்ளேவர்ட் ஐஸ்கேண்டியை இரசித்து ருசித்துக் கொண்டிருந்தாள் தென்னல். இடையில்  ஐஸ்கேண்டியுடன் ஒரு செல்ஃபியை வேறு எடுத்து அமுதனுக்கு அனுப்பியிருந்தாள்.
யாரிடம் பேசினால் மன நிலை முற்றிலுமாய் மாறும் என்பதை உணர்ந்தே அவனுக்கு அழைத்தாள். அமுதம் அவன் பெயரளவில் மட்டுமின்றி அகம் முழுதும் ஆழியாய் பரந்துக் கிடந்தது. அக்கா தம்பி என்பதைவிட அவளுக்கும் அமுதனுக்கும் இடையில் ஆழமான நட்புறவு ஒன்று மாயநதியாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஐந்தே நிமிடத்தில் அவளை சீண்டி.. அரவணைத்து.. கடுப்பேற்றி..சிரிக்க வைத்தென அத்தனையும் செய்திருந்தான் அமுதன்.
அவனது வயதிற்கு அதிகமான முதிர்ச்சிதான். சில சிறியவர்களிடம் இருக்கும் இப்படிப்பட்ட முதிர்ச்சியை எல்லோராலும் சமாளிக்கவோ இல்லை ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லையே!

அந்த வார இறுதியில் இருந்த நண்பியின் பிறந்தநாள் நினைவு வரவே  ரூமிற்கு திரும்பியவள் ரெஃப்ரெஷாகி கிளம்பி வந்திருந்தாள் அந்த கிஃப்ட் ஷாப்பிற்கு. அங்கு மனோவை சந்தித்தது எதிர்ப்பாரா ஒன்றெனினும் இனிமையாகவே அமைந்தது அவளது மாலைப் பொழுது.

********************************************************************************

“அதி?!!”

“மேக்ஸ்??!!” என்றதைத் தவிர வேறொரு வார்த்தைக்கூட நினைவில் இல்லாததைப் போல இருவரும் உறைந்திருந்தனர் அந்த உப்புக்காற்றிலும்.
அவள்தானா? அவளேதானா?! என்ற மனத்தின் மொழி மறந்துவிட்டதுபோல அகமெங்கிலும் ஆனந்த பரபரப்பில் செய்வதறியாது நின்றிருந்தவனின் கண்கள் வேறு பனித்தது.

வாழ்வில் ஒரு முறையேனும் பார்த்துவிட மாட்டோமா என்று எத்தனை முறை ஏங்கியிருப்பான்? எதிர்ப்பார்த்திருப்பான்?  அவனது நிழல் நினைவுகளின் நிஜமாக அவன் முன் அவள் நிற்கிறாள் என்பதை கிரஹித்துக் கொள்ளவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. தொலைத்த எதையோ கண்டுவிட்ட உற்சாகம். சுகமான தேடலின் இனிமையான முடிவாய்.. அவன் சிதறவிட்ட புதிரின் கடைசி பாகமாய் நின்றிருந்தாள் அவள்..

அவனது எண்ணவோட்டங்களை தடை செய்தது அக்குரல்.

“ராகி!!” என்றவாறு எதிரில் நின்றிருந்தவளின் சேலையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த  பவியின் குரல் அது!

அவன் பார்வை அவளிடம் பாய அவனைப்போலவே அதிர்ந்து நின்றவளின் இதழோரங்களில் சிறு புன்னகையொன்று குழப்ப நிலையில் மலர்ந்தும் மலராமல் போராடிக் கொண்டிருக்க விழிகள் இரண்டையும் விரித்து அவனையே பார்த்திருந்தவளின் பாவனை நொடிப் பொழுதில் மாறியது.

அவள் தடுமாறி முதல் முறையாக பார்க்கிறான். ஏனெனில் தடுமாறக்கூடுமென அவன் நினைத்திருந்த சூழலிலேயே திடம்காத்தவள் அவள்.

சேலையை பிடித்து லேசாக ஆட்டியபடி அழைத்துக் கொண்டிருந்த மகளிடம் கவனம் பதித்தவள் தாழ்ந்த குரலில் எதையோ சொல்லிவிட்டு நிமிர்ந்தாள். ஆனால் இம்முறை தெளிவான புன்னகை ஒன்றுடன்!

‘இவளது புன்னகைக்குப் பின் அப்படி என்னதான் இருக்கிறது?’ என்றும்போல் இன்றும் அவனை எண்ண வைத்தபடி..

“எப்படியிருக்க அதி?” என்ற அவளது ஒரு கேள்வி போதுமானதாக இருந்தது பனித்துவிட்ட அவனது  விழிகளில் அவள் உருவம் மங்கலாய் மாற..

“அதி?!!” என்று அதிர்ந்தவளிடம் பதிலுக்கு முகம்கொள்ளா புன்னகையுடன்
“எப்படியிருக்க மேக்ஸ்?” என்றான் உள்ளார்ந்து. அக்கேள்வியில் அப்படி என்ன இருந்ததோ ஆனால் அது அவள் மனதின் அடியாழத்தை தொட்டு மீண்டது.

“ குட் அதி..” என்றவள் பவியின் கையை இறுக்கமாய்  பிடித்திருக்க

“இதான் ராகி..” என்ற மழலையின் மொழி அதியின் கவனத்தை முழுதாய் திருப்பியது.

மேகாவின் கையை பிடித்துக் கொண்டு நின்றவளையும் மேகாவையும் அவன் புரிந்தும் புரியாமல் பார்த்தான்.

“என் பொண்ணு வைபவி” என்ற மேகாவின் குரலில் ஒரு கணம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றவன் அதை மறைத்தவாறு தன்னையே ஆர்வமாய் பார்த்து நிற்கும் பவியிடம் குனிந்து அவள் உயரத்திற்கு ஏற்ப மண்டியிட்டமர்ந்தான்.

“ஹாய் பவிம்மா!! நான் அதிரூபன்.. மேக்ஸ்க்கு அதி” என்றான் அவளைப்போலவே. அதி அறிமுகமாய் கை நீட்ட என்ன தோன்றியதோ பதிலுக்கு அவனது கையில் தனது பிஞ்சுக் கரத்தை வைத்தாள் வைபவி கன்னம்குழிய சிரித்து.

“பவிம்மா என்ன படிக்கறீங்க?”

“ரைம்ஸ்” என்று தொடங்கியவள் மேகா அவளுக்கு கற்பித்தவற்றை தனக்கு தெரிந்தளவில் பட்டியலிட்டாள்.

“ஐய்யோ!! இவ்வளோ படிக்கறீங்களா!!” என்று ஆச்சர்ய பாவனையுடன் அவன் விழிவிரித்து வினவ “ம்ம் ம்ம்” என்று மேலும் கீழும் உற்சாகத்துடன் வேகமாய் தலையசைத்தாள் வைபவி.

“ப்ளே ஸ்கூல் அதி! இனிதான் ஸ்கூல்ல சேர்க்கனும்” மேகாவின் குரலில் அதி நிமிர்ந்தான்.
“என்ன திடீர்னு சென்னைக்கு?” என்றவள் அடுத்த கேள்விக்கு சென்றிருக்க

“வேலை விஷயமாதான் மேக்ஸ். சின்ன மீட்டிங்.. உன்ன இங்க பார்ப்பேனு எதிர்ப்பார்க்கவேயில்ல..” என்க

“நானும்..” என்றவளின் பதிலும் புதிராகவே இருந்தது.  எங்கே என்னவென்று விசாரித்தாள். அவனும்  தங்கும் இடம் பற்றியெல்லாம் விபரம் உரைத்தவன் பின் வைபவியை பார்த்துவிட்டு,

“கல்யாணம்..” என்று தொடங்க அவளோ,

“ஆறு வருஷமாச்சு..” என்று இடைவெட்டியவள் அவன் எதோ கேட்க வர அதை கவனியாதவளாய்..

“வீட்டுக்கு வாயேன் அதி. இங்க பக்கத்துலதான்” என்று  அழைத்தாள்.

மூன்று வருடங்களை ஒன்றாய் கல்லூரியில் கழித்த நாட்களில் எல்லாம் ஒரு முறைக்கூட மேகராகா அவனை வீட்டிற்கெல்லாம் அழைத்ததில்லை. ஏனோ அவளும் அழைக்கவில்லை.. அவனும் வரவில்லை..

அவர்களது நெருக்கத்திலும் இடைவெளி இருக்கத்தான் செய்தது. அவர்களிடையேயான சம்பாஷனைகள் பலதும் ஆழமானதாய் அமைந்தாலும் அடுத்த கணமே வெறும் பரிச்சயமானவர்கள்தான் என்றளவு மாற்றத்தை அடுத்தவரை  உணர வைப்பர்.  இது எப்படிப்பட்ட உறவு? என்று அவர்களுக்கே வெளிச்சம்.

இன்றோ  வாழ்க்கை இனிது என்று அவனுள்ளம் துள்ளுமளவுக்கு ஆனந்த மழையொன்றில் நனைந்திருக்க இதோ மூவரும் நடக்கத் தொடங்கியிருந்தனர்.

அவனுக்கு அவளை கண்டதே பெரிதாய் தெரிந்தது மற்ற எதுவுமே பெரிதாய் பதியவில்லைபோலும்.. இந்த ஏழு வருடங்கள்கூட..!!

அவள் கவனிக்காமல் கேட்டதில் அவள் தவிர்க்கிறாள் என்று புரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இங்கு வைத்து இதை  பேச அவள் விரும்பவில்லை என்பதையும் அறிந்தேதான் இருந்தான்.

சிறுபிள்ளையின் உற்சாகத்துடன். வைபவிக்கு சமமான துள்ளல் நடையுடன் அவன் வந்துக் கொண்டிருக்க அவனுக்கு நேரெதிராய்.. அமைதியே உருவாய் வந்துக் கொண்டிருந்தாள் மேகா.

அவள் சத்தியமாய் அதிரூபனை அங்கு எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அதுவும் அன்று முழுதும் இருந்த குழப்பங்களனைத்தும் அவனைக் கண்ட கணத்தில் கரைந்துப்போக அவள் அதிர்ந்தே போனாள். வாழ்க்கை மறுபடியும் தொடங்கிய புள்ளிக்கே அவளை அழைத்து வருகிறதா?!! இன்று ஏன் அவள் கடற்கரைக்கு வந்தாள்? அதுவும் அவனைப்பற்றிய நினைவுகளில் அமிழ்ந்திருந்தவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.. நினைவில் இருந்து மீளும்பொழுது அதற்குண்டானவனை உயிரும்.. உடலும்.. உணர்வுமாய் கண்ணெதிரே காண்போமென..

இத்தனை வருடத்தில் ஒரு முறையேனும்  அவள் அதியை பார்த்திர மாட்டோமா என்று ஏங்கியதெல்லாம் இல்லை. அதே சமயம் அவனை பார்க்கவே கூடாது என்று  வேண்டியதுமில்லை. விருப்பத்துக்கும் ஒதுக்கத்துக்கும் இடைப்பட்டவன் அவன்!

‘அதி!!?’ என்று அதிர்ந்து நின்றவள் முதல் முறையாய் தடுமாறியது அப்பொழுதே தடுமாறுகிறோம் என்று புரிந்த கணமே பாவனையை முயன்று மாற்றியவள்  இத்தனை காலமில்லாமல் இன்று மட்டும் ஏன் வீட்டிற்கு அழைத்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.
பொங்கியெழும் குழப்பங்கள் அனைத்தையும் ஒரு ‘ப்ச்!’ உடன் புறந்தள்ளியவளோ, ‘கூப்பிடனும்னு தோணுச்சு கூப்டேன்!’ என்று அவளுக்கு அவளே தோள்களை குலுக்கி சொல்லிக் கொண்டாள். அதனால் வரப்போவதை அறியாதவளாய்…

சாரலாவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!