மென்சாரலில் நின்வண்ணமோ!? (5)

 

                                சாரல்-5

அடுத்த நாள்..

சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இளங்காலை தென்றலுக்கும் இடைப்பட்ட வேளை அது.  மணி பதினொன்று இருக்கலாம். அந்த கேண்டீனே அத்தனை அமைதியாய் இருந்தது.

அந்த ஸ்டாஃப்ஸ் ஒன்லி பகுதியில் இருந்து பாதியாய் பிரிக்கப் பட்டிருந்த மற்றொரு பகுதியில்.. அந்த ஸ்டீல் டேபிளில் ஷோல்டர் பேகையும் சில புத்தகங்களையும் பரத்திக் கொண்டு அங்கிருந்தபடியே க்ரௌண்டை வெறித்திருந்தாள் தென்னல்.
அவளுக்கு பிடித்த சில இடங்களில் இதுவும் ஒன்று. அந்த கல்லூரி கட்டமைப்பே அப்படிதான்.  கல்லூரி வளாகத்தில் பில்டிங்கிற்கு பின்புறம் பரந்து விரிந்து கிடக்கும் க்ரௌண்டும் அதை ஒட்டிய பார்க்கிங் லாட்டும்.. முதல் தளத்தில் கேண்டீன் என அத்தனை காற்றோட்டமாய் இருக்கும்.
அன்று பிஜியில் இருந்து கிளம்பியவள் எதிர்பாரா விதமாய் நெரிசலில் மாட்டிக்கொள்ள அவள் நினைத்ததை விட இருபது நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. அதுவும் இன்று தொடர்ந்து இரு வகுப்புகளும் ஒருவரே எடுக்க,வகுப்பின்  உள்ளே அவளை அனுமதிப்பதே கேள்விக் குறியென்றானப் பின் லைப்ரரி செல்ல மனமற்றவள் இங்கு வந்து அமர்ந்துவிட்டாள்.

அவளிருந்த இடத்தில் யாருமில்லாமல் போனாலும் உள்பக்கமாய்  ஆங்காங்கே சில  BBA டிபார்ட்மெண்டின் தலைகள் தென்பட்டன.. 

அவள் பார்வை முழுதையும் அந்த மைதானமே ஆக்கிரமித்திருந்தது. கவனத்தை கடன்கொடுத்தவளாய் வெறித்திருந்தவளுக்கு திடீரென பொறிதட்டியது.

யெஸ்!! அவள் குழப்பத்திற்கான காரணம்.. அன்றைய கோபத்திற்கான காரணம்!! எல்லாம்.. எல்லாம் ஒரே கோட்டில் வந்து சேர்ந்தன.. அதுதான் உதய்!!

அன்று…

“டேய் மச்சான் உதய்!!!” என்று அலறியபடி ஓடி வந்தான் தேஜஸ்.

செய்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து சற்றும் தன் கவனத்தை சிதறவிடாதவனாய்,

“என்னடா?” என்றான் உதய்.

“டேய்!! உன் ஆளு அங்க கேண்டீன்ல தனியா ஈ ஓட்டிட்டு இருக்கு நீ என்னடான்னா  பழைய பேப்பர பொரட்டிட்டிருக்க இங்க.. நீ தேரமாட்ட” என்று சலித்துக் கொண்டான்.

மற்றவன் உரைத்த செய்தியிலேயே பரபரப்பானவன் அத்தனை நேரம் பழைய பேப்பர்களை புரட்டி புரட்டி சேகரித்த  ஸ்டாக் மார்கெட் செய்திகளெல்லாம் எப்பொழுதோ பறந்துவிட்டிருந்தது. மனம் முழுக்க தென்னல்.. தென்னல்.. தென்னல் மட்டுமே!!

“நிஜமாவா சொல்ற?”

“இல்லடா விளையாண்டுட்டு இருக்கேன்..” என்றவன் இன்னொரு நண்பனை பார்த்து “நான்தான் சொன்னேன்ல இவன் அதுக்கெல்லாம் செட்டாக மாட்டானு!” என்றவன் மறுபடியும் உதயிடம் திரும்பி,

“மச்சான் பேசாம நீ அவள மறந்துருடா! எப்படியும் இந்த ஜென்ம..” என்றவன் முடிப்பதற்குள் அவன் சட்டை காலரை இறுகப் பற்றியிருந்தான் உதய்.

அவன் மறப்பதா?? அதுவும் தென்னலை? எப்படி அவனால் முடியும்? தென்னலை அவனால் மறக்க முடியுமா? என்று நினைத்து பார்க்க கூட அவன் விரும்பவில்லை.

அதற்குள் மற்றவர்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். “கொன்றுவேன்டா!!” உதயின் குரல் உறுமலாய் வெளிவந்தது.

சட்டையை நீவி விட்டவாரே, “ பின்ன என்னடா? நானும் பாத்துட்டிருக்கேன் ஒன்ர வருஷமா இதோ சொல்றேன் அதோ சொல்றேன்னு விளையாண்டுட்டு இருக்க நீ!! எங்கள பாத்தா எப்படி தெரியுது? அவ என்னடான்னா உன் பக்கம்கூட திரும்ப மாட்டேன்றா..  நீயும் பேச மாட்டேன்ற.. எங்களையும் விடமாட்டேன்ற.. கடைசில பாரு அவ அடுத்த வருஷம் சொந்த ஊருக்கு கிளம்பிருவா நீ அப்பவும் தூரமா நின்னு பாத்துட்டுதான் இருக்கப்போற.. காதல சொல்றதுக்கு தைரியமில்ல சட்டைய புடிக்க வந்துட்டான் பெரிய இவனாட்டம்..” என்க

“இப்ப என்னடா?? சொல்லனும்..அவ்ளோதானே!?” என்றவாரே கோபத்தில் மூச்சு வாங்க அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான் உதய்.
அவனுக்கும் உள்ளூர நடுங்கத்தான் செய்தது.. ஒருவேளை தேஜஸ் சொன்னதைப் போல சொல்ல முடியாமல் போய்.. அவன் தென்னலை இழக்க நேரிடுமோ என்ற எண்ணமே பூதாகரமாய் அவன் முன் நின்றது. அவன் அவளை இழக்க தயாரில்லை.அவனை பொருத்தமட்டில் அவனது காதல் உண்மையானது.. அது தோற்காது..தோற்கவும் கூடாது!

“டேய்! என்னடா??” என்ற மற்ற நண்பர்களை அடக்கிய தேஜஸ்,
“பின்ன என்னடா? இன்னும் எத்தன நாளைக்கு சொல்லாமையே இருப்பான்.. அவளும் அந்த மனோ கூட சுத்திட்டிருக்கா.. சொன்னாதானே தெரியும்..”

“டேய்!! அவங்க ஃப்ரெண்ட்ஸ்டா தப்பா பேசாத!” என்ற மற்றவனின் குரலை அசட்டை செய்துவிட்டு கேண்டீனை நோக்கி நடையைக் கட்டினான் தேஜஸ்.

நட்பு புரியாமல் போனது அந்த நண்பனின் துரதிஷ்டமா இல்லை யாரின் துரதிஷ்டமோ..

“ஹே தென்னல்!! இங்க என்ன பண்ற?” உற்சாக குரலுடன் தன்னருகில் அமர்ந்தவனை  சிநேகபாவமொன்றுடன் நிமிர்ந்து நோக்கியவள்,

“க்ளாஸில்லல.. நெக்ஸ்ட் வீக் பேப்பர் பிரசெண்டேஷனுக்கு ப்ரிபேர் பண்றேன் உதய்” என்றவள் தன் வேலையை தொடர

“உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே தென்னல்” என்றான் அவசரமாய்.

புருவமத்தியில் சிறு முடிச்சுடன் அவள் கேள்வியாய் நோக்க அவனோ

“ப்ளீஸ்..” என்றான்.

நோட்பாடை மூடி கையிலிருந்த பென்சிலை அதன் வளைவில் செருகி வைத்துவிட்டு அவன் புறம் திரும்பி அமர்ந்தாள். ‘நான் கேட்க தயார்’ என்ற பாவனையுடன்.

“உனக்கு என்ன பிடிக்குமா தென்னல்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தவனின் கண்களில் இருந்த அதீத எதிர்ப்பார்பை கண்டவளினுள் அதிர்வலைகள் பல.. சில காலங்களாகவே உதயின் பார்வையிலும் பேச்சிலும் மாற்றத்தை உணர்ந்திருக்கிறாள்தான். ஆனால் இவ்வளவு தீவிரமாய் என்று நினைத்திருக்கவில்லை. எதிர்பாலினத்தின்மேல் வரும் சாதாரண ஆர்வம் என்று விட்டுவிட்டாள். அவனிடமும் சாதாரணமாகவே பேசினாள்.

“என்ன?”

“சொல்லு தென்னல் உனக்கு என்ன பிடிக்குமா?” என்றான் விடாபிடியாக.

“உதய் நீ என் க்ளாஸ்மேட். ஒன்ர இயர்ஸா ஒன்னா படிக்கறோம்.. இதுவரை நாம சண்டைக்கூட போட்டதில்ல.. போதுமா?” என்றாள் ஏதோ அவனுக்கான பதில் அவ்வளவுதான் என்பதைப்போல சிறு முறுவலுடன் முகம் மாறாமல்.

“ஐ லவ் யூ தென்னல்!! உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. டூ யூ லவ் மீ??” என்று போட்டுடைத்தான் அவன் காதலை.

அதிர்ந்துதான் போனாள் அவள். இப்படியொன்றை அவள் எதிர்பார்த்திருக்கவில்லையே!

“சாரி உதய்.. எனக்கு இதுலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. இத இதோட விட்றலாம்” என்றுவிட்டு எழ முயன்றாள். ஆம் முயன்றாள்!

உணர்வுகளை கொட்டிவிட்ட பரபரப்பு மறைந்து அவள் இல்லை என்றுவிட்டாள் என்பது பதியவே சில கணங்கள் பிடித்தது உதய்க்கு. சடாரென எதிலிருந்தோ கீழே இழுத்து தள்ளிவிடப்பட்ட உணர்வு!

அவள் எழுந்து செல்கிறாள் என்ற எண்ணத்தில் எதை பற்றியும் யோசியாமல் அவள் கரம்பற்றி இழுத்தமர்த்தினான் அவன்.

திடீரென இழுபட்டதால் நிலை தடுமாறியவள் சுதாரித்து அமர்ந்து சற்றே ஆசுவாசம் அடைந்த பின் அவனை ஏறிட்டாள்.

“என்ன இதெல்லாம்தான் உனக்கு லவ்வா?? நீ  பிடிச்சு இழுத்துட்டனு நான் கத்தி சீன் க்ரியேட் செஞ்சு உன்ன பெரியாளாக்கனுமா?? ஈ ஸீனெல்லாம் இவ்வட வேணாம்!! க்ரோ அப் மேன்!! இது அல்ல லைஃப்”  விழிகள் இரண்டையும் விரித்து எச்சரித்தவள் கையை உதறிக்கொண்டு எழுந்து சென்றுவிட்டாள்.

ஏனோ.. அவன் அவன் காதலை பகிர்ந்ததில் அவளுக்கு பிரச்சனையிருக்கவில்லை. அவன் மன உணர்வுகளை பகிர்கிறான் அதனாலேயே அவன் சொல்லி முடிக்கும் வரையுலுமே பொறுமைகாத்தவள் அவனிடம் தனது மறுப்பைக்கூட பொறுமையாய் அதே சமயம் சற்றே அழுத்தமாகவும் எடுத்துரைத்தாள். ஆனால் அவன் திடீரென முரட்டுத்தனமாய் கையை பிடித்து இழுத்து அமர்த்தவும் அவள் மனதில் வைத்திருந்த பொறுமையெல்லாம் பறந்துவிட்டிருந்தது.  தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அகன்றுவிட்டாள் அவ்விடமிருந்து.

ஏனோ அவள் அவனையே உதறிச் சென்றதுபோல் வலித்தது உதய்க்கு. அவன் செய்தது அவன் மனதில் பதிந்திருக்கவில்லைபோலும். மனம் முழுதும் தென்னல் மறுத்துவிட்டாள் என்பதே நின்றது.

அத்தனை நேரம் பக்கத்து மேசையில் அமர்ந்து இவர்களையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த தேஜஸ் அவள் சென்ற மறு நொடி நண்பனின் தோள் தொட்டான்.

“சாரி மச்சான்.. உனக்கு செட்டாகனும்னுதான்டா பேசினேன்.. “ என்று வருத்தமுற அவன் பேசியதே காதில் விழாததுபோல நின்றிருந்த உதயின் பார்வையோ கேண்டீனிலிருந்து காலேஜிற்குள் செல்லும் பாதையையே வெறித்திருந்தது. அவன் பார்வையை தொடர்ந்த தேஜஸின் பார்வை கூர்மையானது.
தூரத்தில் மனோ கேண்டீனை நோக்கி நடந்துவர பாதியிலேயே தென்னலை கண்டவன் பின் இருவருமாய் பேசியபடி காலேஜினுள் செல்லும் காட்சி..
பார்த்திருந்த தேஜஸினுள் இவனால்தான் எல்லாம் என்ற எண்ணமெழ அதை வாய்விட்டு சொல்லவும் செய்தான்.

“இவன்தான்டா காரணம்!இவனாலதான் தென்னல் இப்படி பேசிட்டு போறா” என்று நஞ்சை விதைத்தான்.

மற்ற நேரங்களில் இதை அவன் மறுத்திருக்ககூடும்.. ஏன் சண்டைக்கூட போட்டிருப்பான்தான்.ஆனால் ஏற்கனவே மனதில் விழுந்த அடியே வலித்துக் கொண்டிருக்க இதில் நண்பன் சொல்வதை மறுக்கவும் தோன்றாமல் ஏற்கவும் முடியாமல் நின்றிருந்தான் உதய்.

அன்றைய தின நிகழ்வில் மூழ்கியிருந்த தென்னல் விழித்ததென்னவோ மணியடித்த பின்னர்தான். இப்பொழுது அவளுக்கு காரணம் புரிந்துவிட்டது. அவன் அப்படி நடந்துக் கொண்டது.. பேசியது.. அவளை சுற்றிக் கொண்டிருக்கும் அந்த புரளி என எல்லாம் சேர்ந்துதான் அவள் அன்று ஷிவானியிடம் வெடித்திருக்க வேண்டும்.. அமுதனிடம் புலம்பியிருக்க  வேண்டும். காரணம் புரிந்ததினாலோ என்னவோ தெளிவுடனே வகுப்பறையை நோக்கி நடையை கட்டினாள் தென்னல்.

நேற்று…

பூட்டப்பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டிருந்தாள் மேகா. அவள் திறந்த மறு நொடி குடுகுடுவென வைபவி வீட்டினுள் ஓடிவிட அதிரூபனிடம் தயக்கம் எட்டிப் பார்த்தது. அதை உணர்ந்தவளாய்

“உள்ள வா அதி” என்றுவிட்டு முன்னேறினாள் அவள்.

“பவிக்குட்டி!! என்ன பண்றீங்க?” என்றிவள் முகப்பறையிலிருந்தே குரல் கொடுக்க உள்ளறையிலிருந்து “ வரையறேன் ராகி!!” என்று பதில் வந்தது.

“மேடம் வர டைமாகும்.. நீ உக்காரு அதி! காஃபி? உனக்கு டீ பிடிக்காதுல..இரு வரேன்” என்று அவளே கேள்வியெழுப்பி பின் அவளே விடையும் கண்டு நகர்ந்தாள்.

ஒற்றைப்  படுக்கையறைக் கொண்ட வீடு அது. வாசலுக்கும் வெளி கேட்டுக்கும் இருந்த இடைவெளியில் வெள்ளை நிறப்பூ ஒன்று மலர்ந்திருந்தது அந்த ஊதா நிறக் கதவுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

பிரம்பு நாற்காலி செட்.  ஹாலுக்கும் அடுக்களைக்கும் நடுவிலிருந்த சாப்பாட்டு அறையில் குட்டி டேபிள் என எளிமையின் அழகு அவ்விடம்!! எத்தனை நேரம்தான் அவன் பொருட்களையே வெறித்திருப்பதென தோன்றிவிட எழுந்து  அடுக்களைக்கு சென்றான்.  வாசலில் இவன் வந்து நிற்பதை நிழல் அசைவிலேயே கண்டுக் கொண்டவளோ, “அதுக்குள்ள உனக்கு போரடிச்சிட்டா என்ன?” என்றாள் திரும்பாமலே.

“தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை” கலாய்த்தவனின் குரலும் அதற்கு சிரித்தவளின் குரலும் செவி தீண்டிய வரிகளில் உறைந்தன..
‘பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ..’

பக்கத்து வீட்டிலிருந்து கசியும் இசை.. இங்கு அடுக்களையில் நிற்பதால் ஓரளவு கேட்கிறது. சன்னல் வழியே பக்கத்து வீட்டிலேயே பார்வை பதித்திருந்தவள் சிறு முறுவல் ஒன்றுடன்
“சக்ஸஸ்ஃபுல்லா இன்னைக்கு இந்த பாட்ட இத்தோட மூனாவது தடவையா க்ராஸ் பண்றேன்” என்றாள் சிறு ஆச்சரியத்துடன்.

“ஆனா நான் இந்த பாட்ட தினமும் கேப்பேன்” அர்த்தம் பொதிந்திருந்தது அதியின் குரலில்

“ஏன்??”

“ஏன்னா இந்த பாட்டுல நான் உன்ன உணர்றேன் மேக்ஸ்.. உன் அருகாமைய.. வாசனைய.. இல்ல நீ மூச்சு விடற சத்தத, ஏதோ ஒன்ன உணர்றேன்..”
உணர்ச்சிவசத்தில் அவன் பேசவில்லை என்பது ஆழ்ந்திருந்த அவன் குரலே அவளுக்கு உணர்த்தியது. அவன் விழிகளில் வழிந்தது நிச்சயம் காதல் அல்ல! அது அன்பு! அவளுக்கே அவளுக்கென்று அவனிடமிருக்கும் அன்பு!! ஏறக்குறைய ஏழு வருடங்கள்.. ஏழு முழு வருடங்கள் தேக்கி வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு அது. 

“அதி உன் பேர்ல ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?”

“என்ன?”

“அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானேனு..” என்று எப்பொழுதோ அவள் சொல்லியது அவளுக்கே இப்பொழுது நினைவு வந்தது. நெஞ்சம் நெகிழத்தான் செய்தது இவனின் எதிர்ப்பார்பற்ற அன்பில்..!!

அன்பு கொள்வதில் சுகிப்பவன் அவன்.. அதிரூபன்! அன்பால் அவளை நனையச் செய்கிறானே.

பால் பொங்கிவிட இருவருக்குமாக காஃபி கலந்தவள் மக்கில் சர்கரையை போட்டுக்கொண்டு ட்ரேயுடன் அதை டேபிளில் வைத்து கலந்தாள்.

“அவர் எப்போ வருவார் மேக்ஸ்?” என்றவனின் கேள்வியில் கலக்கிக் கொண்டிருந்தவளின் கை ஒரு நொடி தடைப்பட்டது. ஒரு நொடிதான் பின் வேலையை தொடர்ந்தவளாய்,

“அவர் வரமாட்டார் அதி” என்றாள் வெகு சாதாரணமாய்.

அவனுக்குத்தான் ஒன்றும் புரியாமல் போனது. அதிர்ந்து விழித்தவனோ, “என்னாச்சு மேக்ஸ்?” என்றான் உண்மையான அக்கறையுடன்.

ஒரு கணம் நிறுத்தி படுக்கறையை எட்டிப் பார்த்துக் கொண்டாள் மேகா. வைபவி வெளியில் வருவதற்கு இன்னும் நேரமிருப்பது போல் தோன்றவே திரும்பியவள் மற்றவனிடம் புன்னகை முகமாகவே,

“குழந்தை  மெச்சூர்டா இருக்கனும்தான் ஆனா அவ இன்னஸன்ஸ தொலைக்க விரும்பல அதி.. அவளோட சின்ன சின்ன சந்தோஷங்கள இத சொல்லி கெடுக்க இஷ்டமில்ல..” 

வைபவியை வைத்துக் கொண்டு அவள் பேச விரும்பாதவை என்றால் அப்படி என்ன?? வைபவியின் மனதை பாதிக்க கூடியவை? என்று அவன் சிந்தனைகள் சிறகு விரித்தன கூடவே பயமும்..

“டிவோர்ஸ் ஆச்சு அதி.. மூணு வருஷத்துக்கு முந்தி..” என்றாள் கலக்கிய காஃபி மக்கை அவனிடம் நீட்டியபடி.

கேட்டிருந்தவனின் சர்வமெங்கிலும் அதிர்வலை..

“மேக்ஸ்??!!” அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.

“ம்ம்.. எடுத்துக்கோ அதி! ஆறிடப்போது” என்று அந்த காஃபியிலேயே கவனமாயிருந்தாள் அவள்.

இப்ப இந்த காஃபி ஆறுரதுதான் முக்கியமா என்று தோன்றினாலும் தன்னையறியாமலேயே வாங்கியிருந்தான் அதி.

“குட்!” என்று முறுவலித்தவள் பிறகு

“He was quite abusive அதி.. நாட்கள் போகபோக அதிகமாச்சே தவிர குறையல.. பிரிஞ்சிட்டோம். த்ரீ இயர்ஸ் பேக் தான் டிவோர்ஸ் ஃபைனலைஸ் ஆச்சு..”

மூன்று வருடங்களுக்கு முன்பு என்றால் வைபவி பிறக்கும் முன்பு. இதனால்தான் சொன்னாளா?

“அவர் இப்போ எங்க இருக்கார் மேக்ஸ்?” என்றான் முயன்று வரவழைத்த சாதாரணக் குரலில்.

“அவரில்ல அதி.  இரண்டு வருஷம் முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல ஷ்ரவன் இறந்துட்டான்” என்றவள் அவன் கையிலிருந்த மக்கிற்காக காத்திருந்தாள்.

எந்தவித தடுமாற்றமோ உணர்ச்சியோ இன்றி ஒலித்த அவள் குரலே அவனை தடுமாறச் செய்தது. இன்று இங்கு வந்தேன் அங்கு போனேன் என்பதை போலல்லவா சொல்கிறாள்! எப்படி இவளால் இப்படி முடிகிறது?   என்ற குழப்பமும் அதிர்வும் குறையாமல் இருந்தது. அதற்கு மேல் அவனுக்கு காஃபி ரசிக்குமென்று தோன்றவில்லை. தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது. மக்கை அவளிடம் கொடுத்துவிட்டான்.

எப்படி ரியாக்ட் செய்யவென்றே புரியவில்லை அதிரூபனிற்கு.