மென்சாரலில் நின்வண்ணமோ!? (6)

                                 சாரல்-6

வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ…

வரிகள் தீண்டவே நிகழ்வும் தீண்டியது அதிரூபனை… தங்கியிருக்கும் ரூமுக்குள் நுழைந்த சில நேரங்களிலேயே தனது ப்ளே லிஸ்ட்டிலுள்ள பாடல்களை ஒலிக்கவிட்டவன் இரவுக்கு இதமாய் வெண்ணீருக்காக கீஸரையும் போட்டுவிட்டு வந்தமர்ந்தவன்தான்.. ஏதேதோ சிந்தனைகள் சிலந்தி வலையாகிட கடைசியில் விழிப்புதட்டியதென்னவோ இவ்வரிகளில்தான்.

ஓடிச் சென்று முதலில் கீஸரை அணைத்து குளிக்க இதமானச் சூட்டில் தண்ணீரை விளாவினான். மனம் முழுதும் அப்பாட்டில் வந்த இரவைப்போல.. அன்றைய தின இரவிலேயே தங்கிவிட்டதுபோலும்.. அவனது மேக்ஸை சந்தித்த அந்த நாளின் இரவில்… அவனது மட்டுமின்றி அவளது வாழ்வையும் திசைமாற்ற முதல் தென்றலாய் வீசிய அவ்விரவு..!!
மற்ற சிலரது வாழ்வில் தன்னையறியாமலே அவன் நுழையவிருப்பதின் கடவுச் சீட்டான இரவு..!!
ஆம்!! அன்று அவன் அறிந்திருக்கவில்லை.. இப்பொழுதும் அவனுக்கு தெரியப்போவதில்லை அவனது ஒற்றை முடிவின் தொடர்ச்சியாய்  பலவற்றில் அது பிரதிபலிக்குமென்று…

தன் வாழ்க்கையை திசைமாற்றியவள் இல்லையெனினும் அவன் வாழும் இந்த சுகவாழ்வுக்கும்… மன நிம்மதிக்கும்… பங்குதாரர் அவளாகிட, இவ்வாழ்க்கை ஓட்டத்தில் ஒருதரமேனும் அவள் வாசம் மறுமுறை படர்ந்திடாதா என்று நினைத்ததுண்டு… அவள் நலன் நாடியதுண்டு… என்றேனும் அவளை அவன் காணும்பொழுது அவள் முகம் மலர்ந்திருக்க வேணும் என்று ஆசைப்பட்டதுண்டு..

ஆம்! அவன் நம்பினான். அவனது நீள வாழ்வில் நிச்சயம் அவளை மறுமுறை சந்திப்பான் என்பதை முழு மனதாய் நம்பினான். அந்நாளை எண்ணுகையிலேயே அவன் இதழ் மலர்ந்த நாட்களும் உண்டு… அன்புகொண்ட நெஞ்சம் ஆசையை வளர்த்திருந்தது.. அவளது மகிழ்வதனம் காண..

அப்படியிருக்கையில்…

ஒரு பக்கம் நெருக்கித்தள்ளிய வேலை.. அவன் சென்னைக்கு வந்ததுகூட வேலை விஷயமாகத்தான். க்ளையண்ட் மீட்டிங் ஒன்றிர்காக இரண்டு நாட்கள் அங்கு தங்கி வேலையை முடித்துக் கொண்டு சென்னை ப்ராஞ்சையும் பார்வையிட்டு வரவே அவன் கிளம்பியது.. அப்படியிருக்கையில் அவன் எதிர்ப்பார்த்திருந்த அந்நாள் அதுவாகவே அமையுமென அவன் என்ன கனவா கண்டான்? அதுவும் எப்படிப்பட்ட நாள் அது.

இரண்டாம் நாள் வேலை முடியவே வெகு நேரம் பிடித்துவிட மதிய உணவை தொடக்கூட மனமற்றுப் போனது.. அதுவும் அன்றிரவே திரும்ப வேணும்.. திரும்பினால்தான் அடுத்த நாள்  பத்து மணிக்குள் அவன் பெங்களூர் அலுவலகத்தினுள் இருக்க முடியும். எத்தனை அலைச்சலாய் இருந்தாலும் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவான் அவன். அவனுக்கு எதையாவது செய்து கொண்டே இருக்கவேண்டும் அதனாலேயே வெளியூர் பயணங்கள் முடித்து திரும்புபவன் ஒரு குட்டித் தூக்கத்திற்கு பின் கிளம்பிவிடுவான்.

சில நேரங்களில் அதிகாலை நாலு நாலரைக்கு வீடு வந்து சேரும் அவன் ஒரு மணி நேரத் தூக்கத்துக்கு பின்னர் விறுவிறுவென குளித்து எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் ஆஜராகிய காலங்களும் உண்டு.

இவனது இச்செயல்கள் அன்னத்துக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.. பெத்தவரல்லவா!? வருந்தத்தானே செய்வார்.. எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டார்.. அவன்தான் கேட்பதாயில்லை.

அன்னம் எவ்வளவு கடிந்துக் கொண்டாலும் புன்னகை குறையா முகம் ஒன்றுடன் அன்னையின் கன்னம் தொட்டு கண்களுள் கவனம் பதித்து,

“ஐம் ஓகேம்மா! டென்ஷன் வேணாம்” என்று வாயடைத்து விடுவான். மகனது இச்செயலும் அந்த மென்மையும் அன்னத்தின் மனதை உருக்கிவிடும்.

இத்தனைக்கும் மகன் முன்பைப் போலில்லை. முன்பு அவர்களிடையே ஓடிய அந்த மெல்லிய விரிசல்கூட இல்லை.. அது எப்படி சாத்தியமென்று இப்பொழுதும் அவருக்கு சரிவர புரியவில்லைதான். திடீரென நிகழ்ந்துவிட்ட மாயமது! அவரது ஆசை மகனை திருப்பி அவருக்கே கொடுத்துவிட்ட மாயம்..!! காரணம் எதுவாகினும் இம்மாற்றத்தை அவர் விரும்பினார்.. விருப்பத்திற்கும் மேல் ஒரு உணர்வு உண்டெனில் அது இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

அவன் தத்தித் தத்தி நடந்து அவர் கைப் பற்றிய தருணத்தில் எழுந்த உணர்விக்கு சமமானது இது. பூரண சுகமொன்றை அவர்கள் வாழ்வில் தூவியதாரோ? எதுவோ?

இந்நிலையில் அவர் நினைத்தால் அவனை  அதட்டி உருட்டி வைக்கலாம் ஆனால் அதெல்லாம் அதிரூபனிடம் நடக்கக்கூடியவை அல்லவே! 

அவரால் முடிந்தளவு அவனை பார்த்துக் கொள்வார்.. அவன் இரவு தாமதமாய் வீடு திரும்பும் நாட்களில் வீட்டில் டீவி முதற்கொண்டு எல்லாம் அணைக்கப்பட்டுவிடும்… அவனது காலைப் பொழுதுகள் சற்று தாமதமாய் புலர்ந்தாலும் விஜியும் அன்னமும் ஆயிரம் முறை அவனறைக்கு அங்குமிங்கும் நடைபயில்வர். விஜி அவனது  குட்டி தங்கை. அகிலன் இவர்களைப் போலல்ல அவர் அன்பை காண்பிக்கும் விதமே வேறு. இவன் காபி கோப்பையுடன் வந்தமர்கையில் பேப்பரை அவன் புறம் நகற்றுபவர் மெல்ல விசாரிப்பார்.

“சரியா தூங்கலையா அதி? கண்ணு சிவந்திருக்கே..” என்க இவனோ  அதே ட்ரேட்மார்க் புன்னகையுடன்.

“இல்லப்பா… ஐம் ஓகே” என்றான்

உண்மையில் அகிலனுக்கும் அன்று சரியான தூக்கமில்லை. இவன் அதிகாலையில் வந்து இறங்கவுமே அங்கு பஸ்டாண்டில் வண்டியுடன் காலை பனிக்கு ஏற்ப உடையுடன் நின்றிருந்தார்.
இந்த வயதில் இவர் இப்படி தூக்கம் தொலைத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று தோன்றினாலும் எத்தனை முறை அவன் மறுத்தும் அகிலன் வருவதை மட்டும் நிறுத்துவதேயில்லை. இவரும்தான் சரியாக உறங்கவில்லை.. ஆனால் என் தூக்கத்திற்காக வருந்துகிறார்..!! 
“ஐம் ஓகேப்பா.. உங்களுக்கும்தான் சரியான தூக்கமில்லை.. அடுத்த தடவைல இருந்து நானே வந்துக்கறேன்பா.. நீங்களும் ஏன் சிரமப்படுத்திக்கறீங்க..”என்றவனின் குரல் மெல்ல தேய்ந்தது அகிலனின் சிரிப்பில்.. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவன் இதை சொல்வதும் அவர் எதிர்மறையாய் நடப்பதுமென்ன புதிதா?

“போய் வேலையைப் பாருங்க சார்! எங்களுக்கு தெரியும்” என்று இளநகையொன்றுடன் அவன் தோள்தட்டியவர் எழுந்து சென்றுவிட்டார்.

ஏனோ திடீரென அகிலனின் நினைவு வந்தது அதிரூபனிற்கு. சற்றும் யோசியாமல் அன்னைக்கு அழைத்தவன் சில நல விசாரிப்புகளுக்குப் பிறகு பேசிவிட்டு வைத்தான்.

குளிக்கவென துணிகளுக்குப் பையை திறந்தவனின் கண்ணில் பட்டது அந்த ஓவியம்.. முதல் நாள் வைபவி அவனுக்காக வரைந்தது. நீலக்கடல் பவிக்குட்டியின் கையால் இன்னும் வசீகரித்தது அவனை.

அன்று…

எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியாமல் போனது அதிக்கு. அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவன் தொண்டைக்குழியினுள் அடைத்ததுப் போல் உணர்ந்தான். காபி ரசிக்கவில்லை. கொடுத்துவிட்டான்.

அவளுக்கு கல்யாணமாகிவிட்டது என்பதைவிட இதுதான் இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது.. வலித்தது  உள்ளூர..

அவள் சொல்லிய விஷயத்தைக்காட்டிலும்  அதை அவள் சொன்ன விதமே வலித்தது. 
சம்பந்தமின்றி அவள் என்றோ சொன்னவையெல்லாம் நினைவிலாடின..

ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது.. அது  ‘இவ ஏன் இப்படி இருக்கா?!’ என்றொலித்த குரலைத் தவிர.

இதை இவள் வருத்தமாகவோ.. குறையாகவோ சொல்லியிருந்தால்கூட அவனுக்கு இந்தளவு வலித்திருக்காதோ? 

அசாத்திய மௌனம் ஒன்று அங்கு நிலவியது. அதை உடைக்கும் துணிவு அவனுக்கில்லை… அவளும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை காபி மக்கை எடுத்துச் சென்று சின்க்கில் போட்டவள் இதமானச் சூட்டில் பாலை ஆத்தி சின்ன சைஸ் தம்ளரில் விட்டு வைபவிக்கு எடுத்து வந்தாள்.

“பவிக்குட்டி!!” என்றிவள் குரல் கொடுக்கவே கனவில் இருந்தவனைப்போல கலைந்தான்.

“வரையறேன் ராகீ!!” என்ற குரல் மட்டும் வந்தது உள்ளறையில் இருந்து.

“இத குடிச்சிட்டு வரையலாம் வா!” என்றிவள் அழைக்க

“த்தீ நிமிட்ஸ் ராகீ” என்றாள் இளையவள். அந்த விஷயத்தில் அவள் மேகாவைப் போல வேலையென்று ஒன்று தொடங்கிவிட்டால் பாதியில் அசையக்கூட மாட்டாள். அவள் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தவள் ட்ரேயை தூக்க  அதை அவள் கையில் இருந்து வாங்கினான் அதி.

“நான் குடுக்கறேனே” என்றபடி

இது வேண்டலா? அறிவிப்பா? முகம் மலர தலையை சம்மதமாய் ஆட்டினாள்.

“குடேன்”

“தாங்க்ஸ் மேக்ஸ்!!” என்றவன் பழைய உற்சாகத்துடன் நடையில் துள்ளலுடன் அறையை பார்த்து நடப்பதையே பார்த்திருந்தாள் மேகா.

தரையில் பால் வண்ண தாள்கள் பரந்து கிடக்க ஆங்காங்கே கலர் பாதி முடிந்த கலர் பென்சில்களும் ஒரு ஸ்டெண்ஸிலும் கிடந்தன.. அதற்கு அருகில் இருந்த ரேக்கின் கீழ்தட்டில் ஊதா நிற கவரொன்றின் வெளியே சில வெள்ளை பேப்பர்கள் தலையை நீட்டியபடி இருந்தன.. தரையில், அந்த பேப்பர்களுக்கு நடுவில் அமர்ந்து குனிந்து வரைந்துக் கொண்டிருந்தவளுக்கு இவன் வந்தது தெரிந்திருக்கும்போல ஒரு நொடி பென்சில் நின்று பின் தன் வேலையை செய்யத் தொடங்கியது.

அதை கண்டவனுள்ளோ ஒரு கணம் மேகா வந்து போனாள்.
‘அப்படியே அம்மாவ மாதிரி!’ என்றெண்ணியவனுக்கு இதழ் மலர அவளுக்கு அருகில் தரையில் அமர்ந்து கொண்டான்.

“பவிம்மா என்ன பண்றாங்க?”  என்றவனின் கேள்விக்கு முதலில் பதிலில்லாமல் போக மறுபடியும் அவன் கேட்க வாய் திறக்கும் பொழுது

“வரையறேன் அதி” என்றவளின் குரலில் உள்ளத்தில் சிறு துள்ளல். நிச்சயம் மேக்ஸ் சிறு வயதில் இப்படிதான் இருந்திருப்பாள். ஏனோ அந்த அதி என்ற அழைப்பும் மழலை குரலும் அப்படிதான் எண்ண வைத்தது.

“பவிம்மா இந்த பால குடிச்சிட்டு வரையலாமே?” என்றான் குனிந்து அவள் முகம் பார்த்தபடி. யப்பா! அச்சிறு முகத்தில்தான்  எத்தனை தீவிரம்? எத்தனை கவனம்?

“முஞ்சாச்சு!!” என்ற உற்சாக குரலுடன் அதியின் கையில் இருந்த தம்ளரை வாங்கியவள் கடகடவென பாலை உள்ளிறக்கினாள்.  குடித்து முடித்த தம்ளரை அவள் அவனிடம் நீட்ட அவள் இதழ் மேல் அம்சமாய் அமர்ந்திருந்த அந்த பால் மீசையை துடைத்துவிட்டு காற்றில் லேசாய் கலைந்திருந்த அவளது முடியை ஒதுக்கி காதுக்கு பின்னால் இழுத்துவிட்டு எழுந்தவனையே அவ்வறை வாசலில் சாய்ந்து நின்று பார்த்திருந்த மேகாவினுள் இதமான தென்றல் காற்று ஒன்று வீசியது. அவளைப் பார்த்து  முறுவலித்தவனோ அவளைத் தாண்டி நேராக அடுக்களைக்குச் சென்று தம்ளரையும் தட்டையும் போட்டுவிட்டு கிடந்த இரு மக்கையும் கழுவி கவிழ்த்த அவன் பின்னாடியே வந்தவளோ..

“இத செய்றதுக்குதான் ஊர்ல இருந்து வந்தியா?” என்றாள் கிண்டாக.

அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனோ தலையை மட்டும் திருப்பி “இருக்கலாம்” என்றுவிட்டு திரும்பிக் கொள்ள இவளோ,

“அதி! நீ அத வச்சிட்டு நகரு.. நான் பாத்துக்கறேன்” என்றாள்

“Don’t be so formal மேக்ஸ்! பயப்பட வேணாம் உன் பாத்தரத்த தூக்கிட்டு ஓடிற மாட்டேன்” என்றுவிட அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை.

அதிரூபன் வீட்டிலேயும் அப்படியே! அவனுக்கு சின்க்கில் எதுவும் இருந்திடக்கூடாது. அதுவும் அவன் அந்த ஏரியாவை கடக்கும்பொழுது இருக்கவே கூடாது. இருந்தால் முதல் வேலையாக அத்தனையையும் தேய்த்து கவிழ்த்திய பின்னரே நகருவான்..

தேய்த்து முடித்தவன் கையை துடைக்க துணி தேட அவனுக்கு மறுபுறம் இருந்த கொக்கியில் கிடந்த பிஸ்தா நிற துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“தேங்க்ஸ்!” என்றவன் பெற்றுக் கொள்ள வழமை போல வாய்வரை வந்தது அவனைப்போலவே Don’t be so formal என்க, ஆனால் அவள் சொல்லவில்லை.

அவன் வெளியில் வரவும் அப்பொழுதே  அறையில் கீழே கிடந்ததையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு வந்தாள் வைபவி.

வாட்ச்சைப் பார்த்தவனோ “அப்போ நான் கிளம்பறேன் மேக்ஸ்!! இந்த வாரம் இங்கதான் இருப்பேன்.. நாளைக்கு வரே..வரலாமா?” என்று மாற்ற, மற்றவளின் முறைப்பில்  வரத்துடித்தது சிரிப்பு.

“இல்ல அதி! நீ வரக்கூடாது” என்றாள் வேண்டுமென்றே

“ஆஹா! அப்போ நான் கட்டாயம் வரேன்” என்றான் கேலியாக. இன்றே அவன் கிளம்பியாக வேண்டும் என்று மனசாட்சி இடித்தது.

“அதி” என்ற குரலில் அவனது கவனம் வைபவியிடம் திரும்பியது.
“என்ன பவிம்மா?” என்று அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தான்.  தன் பின்னால் ஒளித்து வைத்திருந்த இரு பேப்பர்களையும் முன்னால் கொண்டு வந்தவள் அதில் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.  அந்தப் பேப்பரின் முக்கால்வாசியை தன் நீல நிறத்தால் ஆக்கிரமித்திருந்தது கடலும் கரையும். அவர்கள் அன்று சந்தித்த இடம்..!!
“வாவ்!! அழகுடா!!” என்றவன் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.
“இது எனக்கே எனக்கா?” என்றவனின் கண்களில் மெய்யான ஆர்வம் இருந்தது.

வைபவியின் தலையும் உற்சாகமாய் ஆடியது ஆம் என.

“ஆமா அது யாருக்கு?” என்று அவள் கையில் இருந்ததை சுட்டிக்காட்டி அவன் கேட்க அவளோ,

“ மனோக்கு” என்றாள் அதை நெஞ்சோடு அணைத்தபடி.

“மனோ என் ஸ்டூடண்ட் அதி.. இங்க கெஸ்ட்னு யாரும் அதிகம் வரதில்ல மனோ வருவான் இப்ப நீ வந்துருக்கல அதான் ரெண்டு பேருக்கும் சேர்த்து வரைஞ்சிருக்கா” என்ற மேகாவின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது.

சீக்கிரமே விடைப்பெற்று கிளம்பிவிட்டான். அவனது மனசாட்சி வேறு அவனை கேள்விகளால் துளைத்தது.

அன்றே கிளம்ப வேண்டியவன் ஏன் ஒரு வாரம் அங்குதான் என்றான் என்று.. 
ஒரு முடிவெடுத்தவனாய் கிளம்பியவன் முதலில்  அலுவலகத்திற்கு மெயிலொன்றை தட்டினான், பத்து நாள் லீவ் கேட்டு.. போதாக்குறைக்கு அழைத்து உறுதி செய்துக் கொண்டான். அதிகம் விடுப்பு எடுக்காததினாலயே அவனது லீவ் பேலன்ஸ் வேறு இருக்க சுலபத்தில் அவனது லீவ் சாங்க்ஷன் ஆனது. தங்கியிருக்கும் அறையின் வாடகை சற்று அதிகம்தான் மூன்று நாளுக்குண்டானவை அலுவலகத்திலேயே பார்த்துக் கொண்டனர். இன்று செக் அவுட் செய்தாக வேண்டும். அங்கே வேறு அறைகள் இருக்கிறதா என்று விசாரித்து தங்கிக் கொண்டான். வீட்டிற்கும் அழைத்து வர பத்து நாளாகும் என்று தகவல் சொல்லியாயிற்று.

அவன் செய்வதெல்லாம் சரியா என்று கேட்டால் அவனிடம் பதிலில்லை.. ஏனோ அவளை சந்தித்த பின் உடனே கிளம்பிட தோணவில்லையோ.. இல்லை எதுவோ அவனுக்கு அந்நொடியில் தோன்றியதெல்லாம் ஒன்றே மீண்டும் அவளை சந்தித்துவிட்டான். இந்த பத்து நாள் என்ன கணக்கென்று அவனுக்கும் விளங்கவில்லைதான். ஆனால் ஏனோ அத்தனையும் செய்துவிட்டான். அடுத்து என்னவென்றால் நிச்சயம் அவனுக்கும் தெரியாது.