மென்சாரலில் நின்வண்ணமோ!? (7)

மென்சாரலில் நின்வண்ணமோ!? (7)

சாரல்-7

அலுப்பு தீர இதமான வெண்ணீரில் தனது இரவு குளியலை முடித்துக் கொண்டவன் ஒரு  ட்ராக் பேண்ட்டும் டீஷர்ட்டுமாய் கட்டிலில் விழுந்தான்
நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி அலையடித்துச் சென்றது, முன்தினத்தை  நோக்கி. கூடவே அந்த மனோ பையனின் நினைவு வேறு வந்தது அவனுக்கு. எப்படிப்பட்டவன் அவன்? இச்சிறு வயதில் இத்தனை முதிர்ச்சியா என்று வியக்கத்தான் முடிந்தது அவனால். கூடவே அவன் வைபவியுடன் பழகும் விதம்.. அதிக்கு இளையவனை அவ்வளவு பிடித்துப் போனது.சரிவிகிதமாய் நின்றவனது முதிர்வும் கனிவும்.

அந்த இரண்டாம் நாள்…

மறுநாள் மாலையே அதிரூபன் மேகா வீட்டில் ஆஜராகியிருந்தான். அவளது காலைப் பொழுதுகள் கல்லூரியிலும் பவியினது ப்ளே ஸ்கூலிலும் கழிந்துவிடுவதால் மாலை நேரத்தை மிகவும் விரும்பி எதிர்நோக்கினான் அதிரூபன்.
முதல் நாள் அவளுடன் வந்தவனுக்கு வழி அவ்வளவு சுலபத்தில் மறந்திடுமா? அதுவும் அவனது மேக்ஸ் வீட்டிற்கு செல்லும் வழி என்னும்போது…

வாசலில் அதே வெள்ளைப்பூ சிரித்தபடி அவனை வரவேற்க அந்த ஊதா நிறக் கதவை லேசாக தட்டினான்.. முதலில் பதில் வராமல் போகவே காலிங் பெல்லின் முறையானது… இப்பொழுது சிறு சலசலப்பு கதவருகில் நெருங்கிக் கொண்டிருந்த காலடிச் சத்தத்தில்  அத்தனை நிதானம் இருந்தது.

“மனோ யார்னு பாரேன்” என்றவளின் குரலை தொடர்ந்த

“இதோ பாக்கறேன் மேம்” என்ற குரலும் இவனுக்கு தெளிவாய் கேட்டதுதான்.

கதவை திறந்த இளைஞனுக்கு வயது இருபதிருக்கலாம். சராசரி உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும் கண்களில் அமைதியும் குடி கொண்டிருந்தது. அவன்தான் மனோ என்று அதிரூபனிற்கு யாரும் சொல்லித் தெரிய தேவையில்லை… இளையவனின் புருவமத்தியில் சிறு முடிச்சு விழுந்தாலும் இதழ் மட்டும் மலர்ந்தேதான் இருந்தது.

“ஹாய் மனோ?” என்றவனின் கேள்வி சிநேகமாய் நீள இதழ் விரிய புன்னகைத்தவனோ,

“ஆமா.. நீங்க?” என்றிழுத்தான்.

“நான் அதிரூபன் மனோ.  உங்க மேம் இல்லையா?” என்றவன் சட்டென ஒருவிதத்தில்  தோழனாய் மாறிவிட அவன் குரலில் தொனித்த நெருக்கத்தில் இளையவனும் இலகுவானான்.

“மனோ?” என்ற மேகாவின் கேள்விக் குரல் தூரத்தில் ஒலித்தது

“இருக்காங்க அதிரூபன் சர்” என்றவன் உள்ளே திரும்பி,

“மேம் அதிரூபன் சர் வந்துருக்காங்க” என்றதுதான் தாமதம் சில நொடிகளில் மேகா அங்கே! சமையலறையில் அவள் வேலையில் இருக்கவே மனோவை யாரென்று பார்க்குமாறு கேட்டாள். வந்திருப்பது அதிரூபன் என்றானதும் அப்படியே வைத்தவள் விறுவிறுவென ஹாலிற்கு வந்தாள்.
நேற்று அவன் கேட்கும்பொழுதே தெரியும் நிச்சயம் இன்று வருவானென்று.
“வா அதி!” என்றவாரே கையை துண்டில் துடைத்தபடி அவள் வரவும் வாசலில் இருந்து நகர்ந்து மற்றவனுக்கு வழிவிட்டான் இளையவன்.

என்னதான் சிநேகமாய் பேசினாலும் மேகாவுக்குத்  தெரியும் என்று உறுதி செய்த பின்னரே அவனை உள்ளே வர அனுமதிக்கிறான் என்பதை அதிரூபனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதில் அவனுக்கு துளி வருத்தமும் இல்லை. மாறாய் ஒருவித நிம்மதியும் மனோவின் மேல் ஒரு நல்லெண்ணமும் பிரவாகமானது அவனுள்.

“உள்ள வாங்க சர்” என்றவனிடம் புன்னகைத்தவன் வீட்டினுள் நுழைய மேகாவின் அதி என்ற அழைப்பில் ஹாலுக்கு உற்சாகமாய்  ஓடி வந்தாள் வைபவி.
“அதி!!” என்றவாரே ஓடி வந்தவளோ மனோவின் அருகிலேயே நின்றுக் கொண்டவளாய் ஒரு கையால் மனோவின் சுண்டுவிரலை பற்றிக் கொண்டு இவனிடம் “மனோ” என்றாள்.

அவளது மனோவை இவனுக்கு அறிமுகம் செய்கிறாளாம்.

அவளது செயலில் இதழ் இரண்டும் இதமாய் வளைய அவள் உயரத்திற்கு மண்டியிட்டமர்ந்தான் அதி.

“இவங்கதான் உங்க மனோவா?” என்றிவன் தலையசைத்து கேட்க அதைவிட வேகமாய் வைபவியின் தலை ஆடியது ஆம் என்பதாக.

மனோவின் முகத்திலோ அப்படியொரு உணர்வு! வீட்டிற்கு வருபவனிடம் அவனை அவனது செல்லம்மா அறிமுகம் செய்த விதம்.. உள்ளுக்குள் அப்படியொரு தித்திப்பு..!!

குழந்தைகளின் அன்பு.. அது ஒரு தனி போதைதான் இல்லையா? அவர்களது அன்பிலும் கோபத்திலும் அத்தனை பரிசுத்தம்!! கன்னக்குழிச் சிரிப்பில் நெகிழ்த்தி இதழ் பிதுக்கும் அழுகையில் தவிக்க வைத்தென தனி உலகு ஒன்றின் தேவதைகள் அவர்கள். இதைத்தான் பாரதியும் பாடினாரோ?

இவளது சிப்பி கைக்குள் அடங்கியிருந்த அவனது சுண்டு விரலை உணரும் தருணம் அவனை கர்வம் கொள்ள வைக்க, அவளுரைத்த மனோவில் அவனது உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அமுதம்.. இது வெகு சாதாரண விஷயமே ஆனாலும் அந்நொடி அவ்வுலகமே அவன் வசத்தில்..!! அப்படித்தான் அவன் உணர்ந்தான். நொடிப் பொழுதில் அப் பிரபஞ்சத்தையே அவன் காலடியில் இழுத்துப் போட்டுவிட்டாள் அவனது செல்லம்மா.

“அதி.. என் ஸ்டூடண்ட் மனோ
மனோ என் ஃப்ரெண்ட் அதி…” என்று ஒருவருக்கு மற்றவரை அவசரகதியில் அறிமுகம் செய்தவள், 
“நீங்க பேசிட்டிருங்க.. இதோ வரேன்” என்ற பாதியில் விட்டு வந்த வேலையை தொடரச் சென்றாள் மேகா.

சிறியவளிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தவனோ நிமிர்ந்து மற்றவளுக்கு சம்மதமாய் தலையசைத்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தான்.

வைபவியிடம் பேசி முடித்து நிமிர்ந்த அதிரூபன் மனோவிடம் புன்னகை ஒன்றை வீசினான்.
ஏற்கனவே பூரணநிலவாய் மலர்ந்திருந்தவனின் வதனம் இன்னும் மிளிர, “உக்காருங்க அதிரூபன் சர்” என்று உபசரித்தான்.

அவனை அதியால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நேற்று பார்த்த தன்னை நினைவில் வைத்து வைபவி  பேசியதே அவனுக்கு அவ்வளவு ஆனந்தத்தைக்  கொடுத்திருக்க, இவன் எனக்கு நெருக்கமானவன் என்பதைப்போல அவள் மனோவை அறிமுகப் படுத்துகையில் மற்றவன் எப்படி உணரக்கூடுமென தெரியும்தான். ஆனால் அவனுக்கு ஆச்சர்யமே அது  இளையவன் முகத்தில் துளி தப்பாமல் அப்படியே பிரதிபலித்ததுதான்.

அந்நொடி தோன்றியதெல்லாம் இதுவே, “இவன் கள்ளமற்றவன்” என அவனுள்ளம் அடித்துரைத்தது.

மேகாவில் தொடங்கி இப்பொழுது இந்த மனோ வரை அவனை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றனர்.. எதையோ அவனுக்கு உணர்த்துகின்றனர்.. என்றெண்ணியவனுக்குத்தான் புரியவில்லை தான் மனிதத்தின் இயல்பை ரசிக்கத் தொடங்கிவிட்டோமென…

“பாத்தீயா? ப்ரோஃபஷனையே மாத்தறீயே..” என்றான் குரலில் கேலியை தேக்கி.

மனோவுக்கு ஒன்றும் புரியாமல் போக மீண்டும் அதியே தொடர்ந்தான்.
“இந்த சார்லாம் வேணாம் மனோ.. ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா ஃபீலாகுது… நீ வேணா என்ன அண்ணானு கூப்டேன்… நான் வேற உன்னவிட கொஞ்சமே கொஞ்சம்தான் பெரியவன்” என்க மனோவின் முகம் கனிந்தது.

‘நிச்சயம் இவனால் எதையும் மறைக்க முடியாது’ என்றெண்ணிக் கொண்டான் அதி.

“எப்படியண்ணா? கொஞ்சமே கொஞ்சமா!? இல்ல ரொம்ப கொஞ்சமா?” என்று அவனைப் போலவே கேலியாய் மனோ இழுக்க

“ரொம்ப ரொம்ப கொஞ்சம்” அதியின் பதிலில் மனோவின் புன்னகை அகலமானது.

அதற்குள் வைபவி மனோவை பிடித்து இழுக்க தொடங்கிவிட்டாள்.

“நீங்களும் வாங்களேன் நானும் செல்லம்மாவும் வரைஞ்சிட்டிருக்கோம்” என்றவனின் அழைப்புக்கடியில் நான் தொடரச் செல்கிறேன் என்ற செய்தி இருந்ததோ?

“ஓ யெஸ்!! நீங்க வரைங்க நான் ஆடியன்ஸா வரேன்” என்றுவிட முதல் நாள் வைபவி வரைந்துக் கொண்டிருந்த அதே அறைக்குச் சென்றனர்.

அதுவரைதான் அவர்களது பேச்சு வார்த்தையெல்லாம். அங்கு சென்று அமர்ந்த சில கணங்களிலேயே இளையவர்கள் இருவரும் மும்முரமாகிவிட  இவனும் எவ்வளவு நேரம்தான் அவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

எழுந்துக் கொண்டவன் மெல்லிய குரலில் “இதோ வரேன்” என்றுவிட்டு நகர அது மனோவின் காதில் விழுந்ததா என்றால் சந்தேகம்தான்.

இவன் மேகாவை தேடிச் செல்ல பின்கட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்துவிட்டு வர அங்குதான் அவள் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.

இவன் வருவது மட்டும் திரும்பாமலே அவளுக்கு எப்படிதான் தெரியுமோ..
“கழட்டிவிட்டாங்களா?” என்றவளின் குரல் மட்டும் இவன் புறமிருக்க அவள் இவனுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தாள்.

“ரெண்டுபேரும் செம க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா? இரண்டுபேருக்கும் வயச தவிர வேற வித்தியாசமேயில்ல தீவிரமா வரைஞ்சிட்டிருக்காங்க” என்றவனின் கடைசி வரிகளில் அவன் புறம் திரும்பினாள் மேகா.

“அப்போ உண்மைலயே கழட்டிவிட்டாங்களா?” என்றுவிட்டு திரும்ப விடுவிடுவன அவளிடம் வந்தவனோ “ நான்தான் பாவம் உனக்கு போரடிக்குமேனு வந்தேன்”

“உனக்கு…” என்று திருத்திவிட்டு அவள் துணியெடுக்க

“சரி எதுவோ… மேகா மேம்க்கு செக்யூரிட்டி சிஸ்டம்லாம் பலமா இருக்கே..” என்று கிண்டலாய் ஆரம்பித்த அதி “ஆனா ரொம்ப நல்ல பையன் மேக்ஸ்!! ரொம்ப ஜென்யூனா ஃபீலாகுது.. “ என்க அவள் இதழ் ஒரத்தில் சிறு புன்னகை.

‘இவன் தனக்காகத்தான் யோசித்திருக்கிறான்’ என்று நன்றாகவே புரிந்தது.

“நான் இங்க ஜாய்ன் பண்ணி மூணு  நாலு வருஷமிருக்கும் அதி… மனோவ ரெண்டு வருஷமா தெரியும் ஸ்டுடண்டா… ரெண்டு வருஷம் முன்னாடிதான் ஒரு நாள் பவிக்குட்டியோட பார்க்குக்கு  போயிருக்கும்போது பார்த்தேன்.. அவன் அப்பதான் பவிக்குட்டிய ஃபர்ஸ்ட் டைம் பாத்தான்… ஒன்ர வயசுக் கொழந்த அவன் கைய பிடிச்சுக்கவும் அவனுக்கு அப்படியொரு சந்தோஷம்…

அப்போதான் தெரியும் அவன் ஹோம்ல வளர்ந்தது… அவனோட பத்தாவது வயசுல அவன் ஹோம்க்கு ஒரு பாப்பா வந்தாளாம்… கொஞ்சம் வளர்ந்த பாப்பா… அவளும் இதேபோல.. இவன் கைய பிடிச்சிட்டே ஒரு தடவை தூங்கிட்டாளாம்… அந்தப் பாப்பாவ அடுத்த நாளே யாரோ அடாப்ட் செய்துட்டாங்க போல… முதல் தடவை அவன் கைய பிடிச்சிக்கிட்டு தூங்கின குழந்தை அவன் மனசுல ஆழமாவே பதிஞ்சிருக்கனும்… அவனுக்கு பவிக்குட்டிய ரொம்ப பிடிச்சுப் போச்சு… அவனுக்கு கிடைக்காத எல்லாத்தையும் அவளுக்கு குடுக்கனும்னு ஆசைபடறான்.. ஏதோ ஒரு விதத்துல பவிக்குட்டிக்கிட்ட அவன் ரொம்பவே அட்டாச் ஆகிட்டான் அதி… பவிக்குட்டியும் அப்படிதான்… பாரு இப்பக்கூட சேத்து வச்சு மேடம்க்கு ஸ்கெட்ச் பென்ஸ் வாங்கிட்டு வந்துருக்கான்… இப்படியெல்லாம செய்யாத மனோனா கேட்க மாட்டேங்கறான்… நம்ம செல்லம்மாக்குதானேங்கறான்”

இப்பொழுது தெளிவாய் விளங்கியது அதிரூபனிற்கு… அவன் வதன மிளிர்வுக்கான காரணமும்..!! மனோ வைபவியை அவனது உறவாய் பார்க்கிறான். அதனாலையே அவள் செய்யும் சிற்சிறு விஷயங்களிலும் மகிழ்வுறுகிறான் என…

பதிலேதும் சொல்லாமல் அவன் அவள் கையில் நிரம்பிக் கொண்டிருந்த துணிகளை வாங்க முயல அவளோ…

“விடு அதி நான் பாத்துக்கறேன்” என்று மறுத்தாள்.

“ஆமா! அப்படியே இது எட்டு கிலோ வெய்ட்… சும்மா குடு மேக்ஸ்! கடகடனு  மத்த துணியும் எடு” என்றவாரே வாங்கிக் கொண்டான்.
அவள் மீதத்தையும் எடுத்துக் கொள்ள அதை அப்படியே கொண்டு வந்து அவள் சொன்னதைப் போல ஒரு  சேரில் போட்டான்.

அதற்குள் மற்ற இருவரும் வரைந்து முடித்துவிட்டனர்போலும் வரைந்து முடித்ததை முகம்கொள்ளா புன்னகையுடன் கொண்டு வந்து காட்டினாள்.

“சூப்பர் பவிம்மா”  என்று அதியும்

“அழகுடா பவிக்குட்டி” என்று மேகாவும் கன்னம் கிள்ள மனோவின் கை பிடித்து அறையினுள் இழுத்துச் சென்றாள் பவி..

“மனோ வா!” என

“வரேன் செல்லம்மா..” என்றவாரே அவள் பின்னோடே சென்றவனை தொடர்ந்து மற்ற இருவரும் செல்ல உள்ளே சென்ற வைபவியோ மனோவிடம்

“தூக்கு” என்று கை நீட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதை ஒட்ட வேண்டுமாம்.
“இதோ..” என்று அவன் அவளை தூக்கி ஒட்டுவதற்கு வசதியாய் பிடிக்க அவளோ…

“இங்க” என்று அவன் தோள்பட்டையை சுட்டிக் காட்டினாள். இன்ஸ்டண்ட்டாய் மறுப்பு வந்தது மேகாவிடம் இருந்து.

“நோ! நோ மனோ… பவி சின்னப் பொண்ணு அவளுக்கு தெரியாது.. தோள் மேல தூக்கினா பிடிச்சுக்கும் உனக்கு…” என்றவள் சொல்லிக் கொண்டிருக்க மனோவோ

“நானும் சின்னப் பையன்தானே மேம்…?” என்று இடைவெட்டினான். அந்த குரலில் அப்படி என்ன இருந்தது? வெகு அமைதியான குரலது, இருந்தும் அது மேகாவை ஏதோ செய்தது. இவன் என்ன சொல்ல வருகிறான்? குழந்தையோடு குழந்தையாய் என்னை விட்டுவிடு என்கிறானா… இல்லை குழந்தையாய் நான் விரும்பிய ஒன்றை அவள் விரும்பும்பொழுது செய்கிறேனே என்கிறானா…

ஏனோ சட்டென அவன் வளர்ந்த பிள்ளையாகிப் போனான். அதி சொன்னதைப்போல வயதைத் தவிர இருவரிடையிலும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை… அவளும் மனோவை வைபவியை பார்ப்பதை போலத்தானே பார்க்கிறாள்.. அதனால்தான் வேண்டாமென்றதே… என்னதான் குழந்தை என்றாலும் வயதுக்கேற்ற உடல்வாகுடன் இருக்கும் பவியை இவன் தோளில் அமர வைத்து எங்கேனும் பிடித்துக் கொண்டால்? அப்படிதான் அவள் யோசித்தது..

ஆனால் இப்பொழுது… ஒரு நொடி அவன் மட்டும் வைபவியைப் போல உருவத்திலும்  சிறுபிள்ளையாய் இருந்திருந்தால் தூக்கி தோள் மேல் வைத்திருப்பாள்… ஆனால் அவளது ஐம்பத்தி ஐந்து கிலோ  அவளுக்கு இப்பொழுது ஒத்துழைக்கப் போவதில்லை…

மனோ வைபவியை தூக்கி தோள் மீது அமர வைத்துக் கொள்ள உற்சாகமாய் வரைந்ததை சுவற்றில் வைபவி ஒட்டியது இப்பொழுதும் அதிக்கு நினைவில் ஆடுகிறது. 

மெல்ல மெல்ல முந்தைய நினைவுகளிலிருந்து மீண்டவன் அன்றைய தினத்தை அசைப்போடத் துவங்கினான்.

எத்தனை ரம்யமான விடியல் அது.. நேற்று மேகா வீட்டிலிருந்து கிளம்பியவன் வரும் வழியில் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் இருந்த அந்த சாக்லெட் நிற டெடி பேர் அவன் கவனத்தை கொள்ளை கொண்டது. ஏனோ அதை பார்த்த உடனே அவனுக்கு வைபவிதான் ஞாபகம் வந்தாள். சற்றும் யோசியாமல் முதல் வேலையாக அதை வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து சேர்ந்தான். 
அவன் நினைத்ததுபோலவேதான் நடந்தது… அந்த சாக்லெட் நிற டெடி வைபவிக்கு நிரம்பவே பிடித்துப் போனது… அதை இறுக்கி கட்டிக் கொண்டவளோ “தாங்கூ” என்று மழலை மாறாமல் மொழிந்துவிட்டு அதை ஆராய தொடங்கிவிட்டாள்.

திரும்பினால், மறுபுறம் மேகாவின் பார்வை!

“இத பாத்த ஒடனே பவிம்மாதான் ஞாபகம் வந்தா மேக்ஸ்…” என்றவனின் குரலில் ஸ்கூல் பையனின் தொனி…

அவன் சொல்லிய விதத்தில் இதழ் மலர தலையசைத்துவிட்டு அவள் பால் காய்ச்ச சென்றாள்.

“அது ஏன் பொண்ணுங்களுக்கு இந்த டெடி பேர்னா இவ்ளோ பிடிக்குது?” என்றவாரே அவனும் வந்துவிட  பாலில் ஒரு கண்ணை வைத்திருந்தவளோ காபி கலக்கவும் பவிக்கு பால் ஆத்தவும் எடுத்து வைத்தபடியே

“எல்லாம் ஹார்மோன் தான் அதி” என்றாள்

“புரியல..”

“ம்ம் அதாவது பொண்ணுங்களோட உடம்பில  progesteroneனு ஒரு ஹார்மோன் இருக்குமாம்  குழந்தைங்கள பாத்தா எழுமே.. மதர்ஹுட் ஃபீல குடுக்கற ஹார்மோன் மாதிரினு வச்சுக்கோயேன்…  பொதுவாவே டெடி பேர்லாம் நல்லா குட்டி பாப்பா மாதிரி புசுபுசுனு இருக்குதுல அதனால அவங்களுக்கு பிடிக்குமாம்… அண்ட் ஒன் மோர் திங்.. டெடிங்கறது முன்னால் அமெரிக்கன் பிரஸிடெண்ட்   தியோடோர் ரூஸ்வெல்ட்ங்கறவரோட நிக்நேம்னு எங்கயோ வாசிச்ச ஞாபகம்…” என்றுவிட்டு மக்கில் இருவருக்கும் டிகாக்ஷனை ஊற்ற

“அது சரி… Production Management க்கும் progesteroneக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வியாய் இழுக்க அவளோ

“இல்லங்கறீயா?” என்றாள் விடாமல்.

“இருக்கலாம்…”என்றான் சின்ன சிரிப்பினுடனே

“முன்ன.. ஏதோ ஆர்ட்டிக்கல்ல படிச்ச ஞாபகம் அதி” என்றவள் பால் பொங்கிவிட சரியாய் பார்த்து ஊற்றினாள். அதி பவியின் பாலை ஆத்த இவள் மக்கை  தூக்கிக் கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

“இந்த சூடு போதும் அதி குடிப்பா” என்றுவிட பொம்மையை ஆராய்ந்து கொண்டு தனி உலகமொன்றில் சஞ்சரித்திருந்த வைபவியை குடிக்க வைத்தான்.

இவன் அதிகம் உரிமை எடுக்கிறான் என்று அவளுக்கு எண்ணத் தோன்றவில்லை. ஏனெனில் அதி என்றுமே அப்படிதான். அவளிடம் அவன் எப்படியோ அதேப்போலத்தான் அவள் வீட்டிலும் நடந்துக் கொள்கிறான்.  இது அவள் வீடு என்ற எண்ணம் எழவில்லை அவனுக்கு மாறாய் என் மேக்ஸ் வீடு இது என்று பார்த்தான்.

நினைவில் அமிழ்ந்திருந்தவனை மெல்ல மெல்ல நித்திரையும் சேர்த்து அமிழ்த்திக் கொண்டது…

மூன்று நாட்கள் தந்த இதத்தில் அவன் மகிழ்ந்திருக்க மறுநாளே அத்தனையும் தலைகீழாகப் போவதை அவன் அறிந்திருக்கவில்லை.. தெரிந்தால் இந்த தூக்கம் எட்டாகனிதான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!