மென்சாரலில் நின்வண்ணமோ..!? (8)

 

சாரல்-8

இன்று…

என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் இவள்!? மனம் ஒரு புறம் முரண்டித் தள்ளியது என்றால் மறுபுறமோ எதையும் யோசிக்க மறுத்தது.. ஏன்? என்ற கேள்வியும் இருந்தால் என்ன? என்றதற்கும் இடையில் இருந்தாள் மேகராகா.

சுலபத்தில் அவள் தடுமாறும் ரகமல்ல எத்தனை குழப்பம் இருந்தாலும் ப்ரச்சனைகள் எழுந்தாலும் அவளது முடிவுகளில் என்றுமே திடம்!!
இப்பொழுதும் அதிரூபனால் எந்த ப்ரச்சனையும் வரக்கூடுமென அவள் நினைக்கவில்லைதான்.. இருந்தும் அவன் எதையோ மறைப்பதுபோல் தோன்றியது… உள்ளூர ஏதோ உறுத்தியது.. அவன் அவளுக்காகத்தான் அங்கு தங்கியிருக்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள முடியாதளவு மேகா அந்நியமில்லையே! அவளும் நன்கறிவாள் அவன் அங்கு தங்கியிருப்பது தனக்காகத்தான் என… நீண்ட கால இடைவேளைக்கு பின் சந்தித்த நட்பு… அதை அவள் வெறுக்கவோ ஒதுக்கவோ இல்லையே அவளும் அதை ஆனந்தமாய்தானே எதிர்கொண்டாள்..

அவளால் புரிந்துக் கொள்ள இயலாத ஒன்று அதிரூபன்! ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்தவை எதையும் அவள் மறக்கவில்லையே அவனும் மறந்திருக்க மாட்டான்தானே? எப்படி அவனால் இத்தனை வருடங்கள் கழித்தும் அப்படியே இருக்க முடிகிறது? என்று தோன்றிய மறுகணமே மற்றொன்றும் உறுத்தியது.. ஒருவன் நல்லவனாய் நடந்துக் கொள்வதற்கா இவ்வளவு ஆச்சர்யமும்? இல்லை இது அதனால் இல்லை இது வேறு!

கல்லூரி காலங்களில் அவள் பொழிந்த அன்பை இப்பொழுது இரட்டிப்பாக்கி கொண்டிருக்கிறான் என்றே எண்ணத் தோன்றியது. உண்மைதானே! யாரிடமும் அத்தனை நெருங்காத மேகா அவனிடம் நெருங்கியிருந்தாள். அவன் யாரிடமும் சொல்லாத.. சொல்லவிரும்பாதவைகளைக்கூட அவளிடம் பகிருமளவு.. அவள் தோள் சாயும் அளவு!! 

அவனது புருவச் சுருக்கங்களில் இவளிடம் மிக நுண்ணிய கலக்கமொன்று இழையோடும்… அதை அவன் உணர்ந்திருப்பானோ? ஒருவித தாயன்போ இல்லை நட்புணர்வோ ஏதோ ஒன்று மிக ஆழமாய் ஓடியது என்னவோ உண்மை!! இல்லையேல் இத்தனை வருடங்கள் கழித்தும் அவனைக் கண்டதைவிட அவன் மகிழ்ந்திருக்கிறான் என்பதை அறிந்த தருணம் அவளுள் எழுந்த அந்த பரிபூரண நிம்மதி… அது எப்படி சாத்தியமாகியிருக்கும்…

அவன் முகம் காட்டிய உணர்வுகளே அவளுக்கு விளக்கியது அவனது  ஜீவனம் சுகமென… வேறென்ன வேண்டும் அன்புகொண்ட நெஞ்சத்திற்கு..!?

ஆனால் அதே போல் அவனும் அவள் நலன் நோக்குவான் என்று அவள் அறிந்திருக்கவில்லையோ?  அவள் கொண்ட அமைதி அவன் கொள்ளவில்லை என்று என்றறிவாள்?

ஏனோ பவிக்குட்டியுடன் சிறுபிள்ளையாய் மாறி அதி அவ்வீட்டில் வலம் வருவதை ஒருவிதத்தில் அவள் ரசித்தாள்… முன்பு அவளுக்கு சிறுபிள்ளையாய் தெரிந்தவன் இன்று உண்மையிலேயே சிறுவனாய் மாறி வைபவியுடன் விளையாட ரசிக்கத்தானே செய்யும் யாருக்கேயானாலும்… அவனது அதிகப்படி உரிமைகள்கூட எரிச்சல்மூட்டவில்லை.. மாறாக இவன் இப்படிதான் என்று விட்டுவிட்டாள்… ஆனால் திடீரென எது அவளை யோசிக்கத் தூண்டியது? நினைவடுக்குகளை புரட்டியவளுக்கு நேற்றைய தினத்தில் தெளிவு கிடைத்தது.

நேற்று…

பவிக்குட்டியும் மனோவும் தீவிரமாய் வரைந்துக் கொண்டிருந்த பொழுதுதான் அது நடந்தது.

திடீரென அதிரூபனிடமிருந்து அக்கேள்வி,”லாஸ்ட் டேக்கு அப்பறம் என்னாச்சு மேக்ஸ்? உன்ன பாக்கவே முடியல… காண்டாக்ட் பண்ணவும் முடியல..” என்று வினவ

திடீர் கேள்வியில் ஒரு கணம் நின்றவளோ பின் தன் வேலையை தொடர்ந்தபடியே சொல்லத் தொடங்கினாள்.

“அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க அதி… அப்பா மட்டும்தான்… நாம தர்ட் இயர்ல இருக்கும்போதுதான் தெரிஞ்சது… அவருக்கு கேன்ஸர்னு… ரொம்பவே சாதாரண குடும்பம், ப்ரைவேட்ல தேவைக்கேத்த சம்பளம்னு போயிட்டிருந்துச்சு… முதல்ல யாராலயும் நம்பக்கூட முடியல… அவர் ட்ரீட்மென்ட்க்கு நான் பாத்தா அவர் என் கல்யாணத்துக்கு பாத்துருக்கார்… ம்ம் அப்பாக்கு பயம்! சொந்தம்னு பெருசா யாருமில்லையா…அதான் தனக்கு எதும் ஆச்சுனா தன் பொண்ணு தனியா இருப்பாளோனு… பொண்ணால சமாளிக்க முடியாதுனு நெனச்சாரோ என்னவோ.. அவசர அவசரமா ஒரு கல்யாணம்!!… ஷ்ரவன ரொம்பவே நம்பினார்போல  அவரால அவனோட  பிஹேவியர ஏத்துக்க முடியல இன்னொரு பக்கம் கீமோ பெய்ன்… I still remember when he exhaled for the last time…  நிச்சயம் என்னால இவ்வளவாது வலியில்லாம குறைஞ்சிட்டேனு சந்தோஷப்பட முடியல…  அவர் என்கிட்ட கடைசியா கேட்டது சாரிங்கும்போது என்னால எப்படி நிம்மதியடைய முடியும்?” என்றவளின் குரல் உடையவில்லை ஆனால் அவள் உள்ளுக்குள் உடைவது அவனால் உணர முடிந்தது. இதையெல்லாம் இவள் முதன் முறையாக ஒருவரிடம்  பகிர்ந்து கொள்கிறாள் என்றும் புரிந்தது.

“மேக்ஸ்..” என்றவன் அவளது தோளைத் தொட அவளோ,

“ஹே! அதெல்லாம் ஒன்னுமில்ல அதி…  ஜஸ்ட்  காட் கேரிட் அவே! அவ்வளோதான்… அப்பறம்  பார்ட் டைம்ல வேலை…  post graduation பண்ணேன்.. கூடவே சில ப்ரச்சனை…சண்டைனு கடைசியா டிவோர்ஸ்ல வந்து நின்னுச்சு பிரிஞ்சிட்டோம்… அப்போ ஏற்கனவே அங்க ஒரு ஃபர்ம்ல வேலை பார்த்துட்டிருந்தேன்… பவிக்குட்டி பிறந்ததும் இங்க  நல்ல ஆஃபர் வரவும் எல்லாத்தையும் இங்க மாத்திட்டேன்… இந்த இடமும் சரி வேலையும் சரி என்ன வேற எதை பத்தியும்  யோசிக்க கூட விடல”  என்றுவிட்டு அவள் நிமிர அவனோ அவளையேதான் பார்த்திருந்தான்.

கடைசி வருடம் என்றாளே… அப்படியானால் இத்தனை விஷயங்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு எப்படி சமாளித்தாள்? தன்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லையே… ‘சீக்கிரம் வீட்டுக்குப்போய் அப்படி என்னதான் பண்ணப்போற?’ என்றதற்கு புன்னகைப்பாளே! அந்த புன்னகைக்குப் பின்னால் இதுதான் இருந்ததா?!!  என்ன செய்வ என்றவன் கேட்ட பொழுதுகளிலெல்லாம் அவள் என்னென்னவோ செய்திருக்கிறாள்! தனியொரு ஆளாய் நின்று குடும்பத்தையும் மற்றதையும் சம அளவில் வைத்து கவனித்திருக்கிறாள்… இதில் தான் வேறு..ச்சே! என்றவன் எண்ணமிருக்க,

“என்ன?” என்றவள்  வார்த்தையின்றி புருவம் உயர்த்தினாள் பாவனையாய்.

“என்கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலையே மேக்ஸ்?” என்றவனிடம்

“நீயும்  கேக்கலை நானும் சொல்லல” என்றாள் சாதாரணமாய்…

‘நான் கேக்கலன்னா சொல்லமாட்டீயா?’ என்று  தோன்றியதை தள்ளிவிட்டு,

“கேட்டிருந்தா சொல்லியிருப்பியா மேக்ஸ்?” என்றவனின் குரலில் என்ன இருந்தது?

புருவத்தை லேசாய் சுருக்கியவளோ, “தெரியல அதி.. சொல்லிருக்கலாம்… இல்ல சொல்லாமலும் விட்றுக்கலாம்” என்றுவிட அவன் வேறெதுவும் கேட்கவில்லை…

ஏனோ மேகாவினுள் அதியின் உணர்ச்சிகளற்ற முகமே வந்துப் போனது. அவனிடம்  சொல்லிருக்க கூடாதோ? என்ற எண்ணம் ஒன்று நொடிப் பொழுதில் எழுந்த வேகத்தில் அமிழ்ந்தது… இத்தனை வருடங்களை கடந்துவிட்டாள்… அவளுக்கு யாருமில்லை என்றெல்லாம் அவள் வருந்தியதேயில்லைதான்.. ஆனால் ஏனோ அத்தனை வருடம் பகிரப்படாதவைகளையெல்லாம் அவனிடம் பகிரும்பொழுது உள்ளுக்குள் அப்படி ஒரு உணர்வு! மூச்சு சீராவதைப்போல… விவரிக்க முடியா அழுத்தக் குறைவு!

நினைவுகளை கலைத்துவிட்டு தன்னெதிரில் இருந்த புத்தகத்தினுள் தலையை புதைத்துக் கொண்டாள் ப்ரஃபஸர் மேகராகா.

அன்று காலை அவளுக்கு ஒரு வகுப்பும் மதியத்துக்கு மேல் தொடர்ச்சியாய் மூன்று வகுப்புகளும் இருக்கவே தனது முதல் க்ளாஸை முடித்துக்கொண்டு கடைசி வகுப்புகளுக்கான ப்ரிபரேஷனில் இறங்கியிருந்தாள் மேகா.  அன்றன்றைக்கு எடுக்கும் டாபிக்கைப் பற்றி முழுமையாய் அலசி ஆராய்ந்தப் பின்னரே அவள் எடுப்பது. அத்தனையாய் ரசித்தாள் அவளது உத்யோகத்தை.

அப்படி அவள் ஒரு புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்த  பொழுதுதான் தடதடவென்ற சத்தம் அவள் செவி தீண்டியது. ஸ்டாஃப் ரூம் வேறு முக்கால்வாசி காலியாக இருக்கவே இவளது கவனம் சட்டென கலைந்தது.

“மேம்..மேம்!!” என்று பதட்டமாய் அந்த ஸ்டாஃப்ரூம் வாசலில் ஓடிவந்து சற்று நிதானிக்க முயன்று தள்ளாடியபடி நின்றவளுக்கு மூச்சுவாங்கியது.

அவள்.. மனோவின் மனோஹரி.. தென்னல்!

“தென்னல்?” என்று கேள்வியெழுப்பிய மேகாவிடமும் இப்பொழுது அதே படபடப்பு…

“மேம்..மேம் தே ஆர் ஃபைட்டிங்!” என்றாள் மேல்மூச்சு கீழ் மூச்சுவாங்க

“யாரு?” என்று சந்தேகமாய் வாய் மொழிந்தாலும் தன்னிடத்தில் இருந்து எழுந்துவிட்டாள் மேகா.

“மேம்…மனோ..மனோவும் உதயும் க்ரௌண்ட்ல.. ஃபைட் செய்றாங்க” என்றாள் அவளுக்கு தெரிந்த தமிழில். பதட்டத்தில் அவளது தமிழும் படபடத்தது.

அவ்வளவுதான். மறுகணமே மேகாவின் கால்கள் க்ரௌண்டை நோக்கி ஓடியிருந்தது.

மேகாவால் முதலில் நம்பவும் முடியவில்லை நம்பாமலிருக்கவும் இயலவில்லை.
கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாய் இரண்டாவது தளத்திலிருந்த ஸ்டாஃப் ரூமிலிருந்து காம்பஸ் பின்புறம் இருந்த க்ரௌண்டிற்கு அவள் வந்து சேரவே ஐந்து நிமிடங்கள் பிடித்தது.. அவளும் லிஃப்ட் பட்டனை அமுத்திவிட்டு அது கடைசி தளத்திலிருப்பதை பார்த்துவிட்டு பொறுமையிழந்தவளாய் படியில் இறங்கியிருந்தாள்.

வேர்த்து  வழிய புடவையை தடுக்கிவிடாத வண்ணம் ஒரு கையில் பிடித்தவாறு அவளும் அவள் பின்னாலையே சற்றும் குறையாத படபடப்புடனும் கவலையுடனும் தென்னலும் அந்த க்ரௌண்டை அடைந்தப்பொழுது மேகா பார்த்ததெல்லாம் குழுமியிருந்த கூட்டத்தையே!

அவர்களை விலக்கிவிட்டு அவள் முன்னேற அவள் கண்ணில் விழுந்ததெல்லாம் சட்டையிலும் பேண்ட்டிலும் மண் கோலமிட்டிருக்க ஆங்காங்கே சிராய்ப்பும் சட்டையில் சில இடங்களில் கிழிசலுமாய் புளுதிக்கு நடுவில் புரண்டுக் கொண்டிருந்த மனோவும் உதய்யும்…

மேகாவால் அவள் பார்ப்பதையே நம்ப முடியவில்லை. ப்ரச்சனையின் வீரியத்தை புரிந்தவள் இருவரையும் பிடித்து விலக்க முயன்றாள். மற்றொரு புறம் உதய்யின் நண்பர்கள் சிலரிடமும் அதே மண் கோலம்!!

முதலில் பிடித்திழுக்க முயன்றவளால் அது முடியும் என்று தோன்றவில்லை… இனி இந்த மென்மை கின்மையெல்லாம் இவர்களிடம் சரிபட்டு வராது என்பதை உணர்ந்தவிட..

“மனோ!!” என்றவளின் குரலில் அனைவரும் அதிர்ந்து உறைந்தனர்.. சில கணங்களுக்கு அங்கு  மௌனமழை! மேகா மேமா இப்படி?!! என்று பார்த்திருக்க அவளோ மனோ தடுமாறுவதை கண்டுவிட்டு அவன் கையைப் பிடித்து திருப்பியவளின் கரம் அவன் புஜத்தில் அழுந்தியதில் அவனுக்கு ரத்தம் வராதது ஆச்சர்யமே!  தன்புறம் திருப்பியவளோ தன் பிடியை இறுக்கியபடி அந்த ஒற்றைக் கையாலையே அவனை உலுக்கியவள்,

“என்ன பண்ற மனோ நீ!!??” என்றாள் அதட்டலும் அதிர்ச்சியுமாய்.
தவறிழைத்த பிள்ளையை கண்டிக்கும் அன்னையின் அதட்டல் அது!

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த மனோ பின் மேகாவைப் பார்த்து.. அவள் தன்னை அதட்டுகிறாள் என்று புரிந்தாலும் ஏனோ எதுவுமே உரைக்காததைப்போல அவளையே அதிர்ந்துப் பார்த்திருந்தான்.

நொடிப்பொழுதில் அவன் நிலை மேகாவுக்கு புரிந்துப்போனது. அவனை தனியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனம் உரைத்தது… மற்றவனையும் பார்! என்று அறிவு  அன்னையுள்ளத்திற்கு கட்டளையிட்டது… ஆனால் அதற்குள் ப்ரச்சனை ஹெச்.ஓ.டி. வரை சென்றுவிட  அவரே வந்துவிட்டார்.

நியாயப்படி இந்நேரத்திற்கு இது  ப்ரின்ஸிபலிடம் சென்றிருக்க வேண்டும். ப்ரின்ஸிபல் வெளியூர் பயணத்தில் இருக்கவே… அவ்வளவு  தூரம் செல்லவில்லை.. மற்றொரு காரணம்… ஹெச்.ஓ.டி. ஹெலனிற்கு தன் டிபார்ட்மெண்ட் பெயர் கெடுவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அவர் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் ரகம்! டிஸிப்ளினரி இஷ்யூவென்று அவர் டிபார்ட்மெண்ட் மாணவர்களின் பெயர் அடிபடுவதை அவரும் விரும்பமாட்டார். மாணவர்கள் மேல் தனி அக்கறையுள்ள ப்ரஃபஸரும் கூட! 

அதனாலையே இருவரையும் தன் கேபினுக்கு அழைத்து வந்தவிட்டார். மேகா இவர்களது இந்த செமஸ்டரின் வகுப்பாசிரியை ஆகவே அவளும் அங்குதான் இருந்தாள்.

ஹெலன் எத்தனை முறை கேட்டுப்பார்த்தும் பதில்தான் இல்லை! மனோவிடம் அதே பாவனை! மேகா அப்பொழுதுதான் கவனித்தாள் உதய்யிடமும் அதே பாவனைதான்.. புருவம் சுருங்கியது யோசனையில்.

ஹெலன், “ரைட்! இத போலிஸ் கேஸ் அளவு கொண்டு போறதுல எனக்கு விருப்பமில்ல.. ரெண்டுபேருமே நல்ல படிக்கற பசங்க! டிஸிப்ளின் வைஸும் அப்படிதான்! அதனாலதான் நான் இன்னமும் உங்கள கூப்ட்டு வச்சு பேசிட்டிருக்கேன்… இப்போ வாய திறக்கப் போறீங்களா இல்லையா??”

அவர் என்ன பேசியும் இருவரிடமும் அதே இறுக்கம்.. அது மட்டும் சற்றும் தளரவில்லை.. இருவரையும் கவனித்தபடியே நின்றிருந்த மேகாவோ ஹெலனிடம்
“மேம்  உங்கட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள். அவ்வளவு நேரம் தலையை குனிந்து நின்ற இருவரும் ஒருசேர நிமிர்ந்து அவளைப் பார்க்க

“ம்ம் நீங்க கொஞ்சம் வெளிய வெய்ட் பண்ணுங்க” என்ற ஹெலனின் குரலுக்கு அடிபணிந்து வெளியேறினர்.

அவள் என்ன பேசினாளோ ஏது பேசினாளோ… அடுத்த ஐந்தாவது நிமிடம் வெளியே எட்டிப்பார்த்த மேகா இருவரையும் உள்ளே வரும்படி அழைத்தாள்.

இருவரும் அதே இடத்தில் பழையபடி தலையை குனிந்தவாறு வந்து நிற்க ஒருமுறை அவர்களையும் மேகாவையும் பார்த்த ஹெலன் ஆழ மூச்சிழுத்துவிட்டு,

“இதுவரை உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் இல்ல! உங்க ரெண்டு  பேரையும் நானே நெறையவாட்டி  2C-யோட(section)அஸட்னு சொல்லிருக்கேன். You guys have bright  future… இந்த விஷயத்த பெருசாக்கினா உங்க படிப்பு பாதிக்கப்படும்… குறைஞ்சபட்சம் சஸ்பென்ஷன் கிடைக்கும்… ஆனா இந்த ஒரு தடவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்னு உங்க க்ளாஸ் டீச்சர்  கேக்கறாங்க… ஸோ இப்ப நான் என்ன பண்ணனும் கைஸ்?” என்றார் தெளிவான குரலில் அழுத்தமாய்.

மேகா தங்களுக்காக பேசியிருக்கிறாள் என்றதுமே இருவரின் முகமுமே இருவேறு விதமாய் மாறியது. மனோவிடம் இந்த இறுக்கம்,  இதை இவள் முதல்முறை காண்கிறாள்… அவளுக்கு தெரிந்த மனோவின் முகம் அவனுள்ளத்தை அப்படியே காட்டிவிடும்..  ஆனால் இன்று எதிர்மாறாய் இருக்க உதய்யின் முகத்திலோ அப்படியொரு பாவனை! அது வலியா? கோபமா? ஏதோ ஒன்று கரைகடந்துக் கொண்டிருந்தது.

“ஸாரி மேம்” என்று தீனமாய் ஒலித்தது இளையவர்களின் குரல்.  பின் appology letter ஒன்று எழுதி அதில் மேகாவிடமும் ஹெலனிடமும் கையொப்பம் பெற்றவர்கள் அதை அங்கு முறைப்படி சப்மிட் செய்துவிட்டு வெளியேறினர்.

கேபினில் இருந்து வெளியேறிய உதய்யோ விறுவிறுவென திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

அத்தனை நேரம் வெளியே காத்திருந்த தென்னல் அவர்களிடம் விரைய, “ என் கேபின்க்கு வா” என்றுவிட்டு விடுவிடுவென அகன்றுவிட்டாள் மேகராகா.

                             ***********************

அந்த ஸ்டாஃப் ரூமே காலியாய் கிடக்க மின்விசிறியொன்று அவளது கேபினுக்கு மட்டும் ஒலியெழுப்பியவாறு மிதமான காற்றை கடத்திக் கொண்டிருந்தது.

தன்னெதிரே தலைக் குனிந்து அமர்ந்திருப்பவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் மேகா.

மனோவா இப்படி? என்று.. இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.

மேகாவின் கூர்ப்பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து  நிமிர்ந்தான் மனோ.

“ப்ளீஸ் மேம்!!” என்றபடி.. அப்படி பார்க்காதே என்ற தொனியில்.

“என்ன நடந்தது மனோ?” என்றாள் அமைதியானக் குரலில்.. அவனிடம் பதிலில்லை.

“மனோ?”  அவன் தன் முகம் பார்ப்பதை தவிர்ப்பது புரியவே

“மனோ இங்க பார்!! 
முதல்ல என் முகத்த பார்!!”  என்று அவன் நாடியை பிடித்து நிமிர்த்தாத குறையாக அவள் முகம் பார்த்து பேச சொல்லியவள் அவன் முகத்தில் எதைக் கண்டாளோ…

“உனக்கு என்ட்ட சொல்ல விருப்பமில்லன்னா பரவால்ல மனோ… விடு” என்றுவிட அவன் முகம் கசங்கிய விதத்தில் அவள் பதறிவிட்டாள்.
‘அடி எதுவும் பலமாய் பட்டுவிட்டதோ?’

“மனோ? மனோ.. என்னாச்சுபா? ஏன் ஒரு மாதிரியிருக்க? ஏதாவது பண்ணுதா?” என்று எழுந்து வந்தவள் அவன் நெற்றியை தொட்டுப் பார்க்க… அதுவே போதுமாய் இருந்ததுபோலும் அவன் உடைய…

நெற்றி ஸ்பரிசித்த அவளது கரத்தை இரு கைகளால் பற்றியவன் அதை இறுக பிடித்துக் கொண்டு… “உங்களப்போய் எப்படி மேம் தப்பா நெனைக்க தோணுச்சு?” என்றவனின் வரிகளிலேயே வலியோடியது.

“மனோ?” என்றாள் அவள் புரியாதவளாக.. அப்பொழுதே கவனித்தாள் அவ்வளவு நேரம் அவன் அமர்ந்திருந்த சேர் அருகில் அமராமல் நின்றுக் கொண்டிருந்த தென்னலின் கலக்கத்தை!

அவள் கையை இன்னும் இறுக்கமாய் தன் இரு கைகளுக்குள் பொதிந்தவனோ அதை அவன் நெஞ்சருகினில் வைத்து… “உங்களையோ தென்னலையோ தப்பா பேசினா நான் விட்றுவேனா மேம்?” என்றவன் சொல்லி முடித்தப் பொழுது அவன் குரல் தேய்ந்தது. தலையை அவன் வேறு புறம் திருப்பிக்கொள்ள.. என்னவென்று சரிவர புரியாதப்பொழுதும் அவன் தோளில் ஆதரவாய் கை வைத்தாள்.

“மனோ…” என்று தென்னலும் அவன் தோளைத் தொட…

“நான் என்ன பண்ணட்டும் தென்னல்?!!” என்றவனின் குரலின் கரகரப்பில் ஒரு கணம் தென்னலின் பார்வை மேகாவிடம் திரும்பியது.

இருவருக்கும் பொதுவாய் தென்னலின் விழியோரத்தில் துளிர்த்த நீரைக் கண்ட மேகாவினுள் இதமான உணர்வொன்று பரவுவதை தடுக்க இயலாமல் பார்த்திருந்தாள்..

இதுதான் இவர்கள்!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு.. நட்பு, காதல், சகோதரத்துவமாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஏன், பெயரிட முடியாத பல உணர்வுகள் உள்ள பொழுது உறவுகளை மட்டும் எப்படி பெயரிட முடியும்?.. 

இவர்களது ஈர்ப்பும்  இல்லை.. காதலுமில்லை…

சொற்களுக்குள் அடங்காத உறவு!!

பரிமாறப்படாத அன்பும்.. விலகலுடன் கூடிய இந்த நெருக்கமும்.. கண்களில் கவிதையை தேக்கியதுபோலொரு உணர்வு!!

முழுவதுமாய் கரைந்து போனான் அவன் அந்த அன்பின் ஸ்பரிசத்தில்… விஷயம் ஓரளவு  புரிந்த பொழுதோ மேகாவிடம் ஒன்னும் அவ்வளவு பெரிய வித்தியாசமொன்றும் இல்லை… ஏளனமா இல்லை வருத்தமா என்று வரையறுக்க முடியாதவாறு அவள் இதழ் மட்டும் லேசாய் ஓரத்தில் வளைந்தது… அவ்வளவுதான்! அதற்குமேல் அவள் எதுவும் சொல்லவில்லை… இளையவர்கள் இருவரையும் பேசி சாதாரணமாக்கி தென்னலை பி.ஜிக்கு அனுப்பியவள் தானும் விடுப்பெடுத்துக் கொண்டவளாக  மனோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்திட்டப்பின் அவனை ஹோமில் இறக்கிவிடவே சற்று  தாமதமாகிவிட…வைபவியையும் அழைத்து வந்தவள் அவளுடன் சற்று நேரம் விளையாடி உண்ண வைக்க கொஞ்ச  நேரத்துலேயே ஒரு குட்டித் தூக்கத்திற்கு தயாராகிய பவிக்குட்டி அசந்து உறங்கினாள். பொதுவாகவே அது ப்ளே ஸ்கூலில் வைபவி உறங்கும் நேரம்.. இன்று மேகா சீக்கிரம் அழைத்து வரவே வீட்டில்  இந்த தூக்கம்.

விளைவு வெகு நேரமாக கதவு தட்டப்பட்டும் மேகாவின் கவனத்தில் அது பதியாமலே போனது…