மென்சாரலில் நின்வண்ணமோ!? (9)

மென்சாரலில் நின்வண்ணமோ!? (9)

 

சாரல்-9

அந்த மாலை நேரத்தில் தங்கியிருந்த ரூமிலிருந்து கிளம்பிய அதிரூபனுள் உற்சாகம் ஊற்றாய் பொங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஐந்தோ ஆறோ நாட்கள்தான் அவன் அங்கு இருக்கப் போவது, அதற்கு பின் அவன் ஊருக்கு கிளம்பியாக வேண்டும்.. ஆனால் அதை நினைத்துப் பார்க்கக்கூட அவன் தயாராய் இல்லை! அவனைப் பொருத்தமட்டில் இந்த நொடி அவனுக்கானது.. அவனுக்கே அவனுக்கான காலம் அதுவும் அவன் மேக்ஸுடன்.
மனம் ஒரு நிலைக்கு வந்துவிட்டதுபோலும்… ஏனோ மனம் “இதை வாழ்ந்துக் கொள்கிறேனே?” என்று கேட்டது போலவும் அதற்கு அறிவு “ சரி” என பச்சை கொடி காட்டிவிட்டது போலவும் அவன் மனம் நிதர்சனத்தை தள்ளி வைக்கத் தொடங்கியது. அதை உணர்ந்தே உதாசினப்படுத்தினான் அவன்.

நாளை பற்றி கவலையில்லை! இன்று… இவர்களுடன் செலவிடும்..இல்லை! சேமிக்கும் இந்நொடி  போதும்! பவிம்மாவின் அமுதமான  மழலைத்தனம்… மனோவின் கனிந்த பிள்ளைமனம்… இதற்கெல்லாம் மேல்… அவனது மேக்ஸ்! இதனால் அவள் என்றில்லாமல், எல்லாமுமாய் அவள் இருந்தாள். இதுவே போதும் என்றது மனம். ஆனால் மனம் ஒரு குரங்காயிற்றே… அதுவும் அன்பில் நனையும் உள்ளம் என்றும் போதுமென்பதில்லையே!

மேகாவின் வீடு வந்து சேர்ந்த அதியிடம் இருந்ததெல்லாம் சந்தோஷம்… சந்தோஷம்… சந்தோஷம் மட்டுமே!

ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் சடுதியில் மறைந்து போனது. அவன் முதலில் மென்குரலில் அழைத்துப் பார்த்து பதிலில்லாமல் போகவே கதவை தட்டத் தொடங்கினான்… உரக்க தட்டுவதற்கும் சங்கடமாய் இருந்தது ஒருவேளை உள்ளே வைபவியை அவள் உறங்க வைத்து இவன் தட்டியதிலோ இல்லை காலிங் பெல்லை அமுத்தியதிலோ அவள் விழித்துவிட்டால்? அது தவறல்லவா? எனவே பொறுமையாய் தட்டினான்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் கதவு மட்டும் திறந்த பாடில்லை! ஒரு முறை பெல்லைக்கூட அழுத்தினான் பதிலில்லாமல் போகவே இப்பொழுது அதியை பயம் சூழத் தொடங்கியது. ஏன்? எதனால்? என்னவாயிற்று? என்று பல கேள்விகள் ஒரேயடியாய் எழுந்தன… கூடவே பதட்டமும்… பதட்டத்தில் படபடவென கதவை தட்டத் தொடங்கிவிட்டான். நினைத்திருந்ததெல்லாம் மறந்துவிட்டதைப்போல…

எவ்வளவு பெரிய தைரியசாலியாய் இருந்தாலும் நம்மவர்களுக்கென்று வரும்பொழுது  பொறுமையெல்லாம் வடிந்துதான் போகிறது.

அவனை அதிகம் தவிக்கவிடாமல் கதவு திறக்கப்பட்டது. அவள் கதவைத் திறந்த மறு கணம் மின்னல் வேகத்தில் அவளருகே வந்தவனின் பார்வை ஒரு நொடிக்கும் குறைவாய் அவளிடம் பதிந்தது. மறுகணம் அவளை இறுக்கி தன் கை வளைவுக்குள் பத்திரப்படுத்தினான்.

அவன் இதயம் துடிக்கும் வேகத்தை அவன் பிடியினுள் நின்றிருந்தவளால் உணர முடிந்தது. அவன் பதறியிருக்க வேண்டும் என்பதை யூகித்தவள் அவனது அணைப்பை மறுத்து திமிறவும் இல்லை… அணைத்து ஏற்கவுமில்லை அப்படியே நின்றாள்.

ஏதேதோ சிந்தனைகள் வலை பின்ன அமர்ந்துவிட்டவள் எப்பொழுது கண்ணயர்ந்தாளோ… கதவு படபடவென தட்டப்படவே தான் உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தவள் விடுவிடுவென சென்று கதவைத் திறந்தது…

இவன் இப்படி பதறுகிறான் என்றால் வெகு நேரம் தட்டியிருக்க வேண்டும் என்பது புரிய… அமைதியாய் நின்றவள் சில நொடிகளுக்குப் பின்,

“அதி..” என்றாள் அமைதியாய். அவனது அணைப்பில் இன்னும் இறுக்கமே..

“குரல் கொடுக்கறதுக்கு என்ன?” என்றவனின் குரலில் அதட்டல் இல்லை.

“கண் அசந்துட்டேன் அதி… ஐம் ஓகே! என்ன இது சின்னப்பிள்ள மாதிரி?” என்றவளை விட்டு விலகியவனின் பார்வையில் கண்டனம்,

“சின்னப்பிள்ளத்தனமா உனக்கு? டென்ஷன்ல இந்த கதவுக்கு இன்னைக்கு புது லாக் மாத்த வேண்டி வந்துருக்கும்!!” என்றான் எச்சரிப்பாய்.

“ஏன் ஹௌஸ் ஓனர் காலி பண்ண சொல்லவா? ப்ச்! அதெல்லாம் வேணாம்… பின் பக்கமா வந்து குரல் கொடுத்துருக்கலாம்…” என்றவள் திரும்பி நடக்க அதற்கு மற்றவனிடம் சிரிப்பில்லை. மாறாய் புருவங்கள் இரண்டும் முடிச்சிட,

“என்னாச்சு மேக்ஸ்?” என்று வினவினான்.

திரும்பியவளோ ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையசைத்து நகரப் பார்க்க அவள் கைப் பிடித்து நிறுத்தியவனோ,

“சொல்லு” என்றான்

“அதி!?”

“ஏன் மேக்ஸ்? என்ட்ட சொல்லக்கூடாததா?” என்க

“ப்ச்! அப்படியில்ல அதி.. ஒன்னும் அவ்வளோ பெரிய விஷயம் இல்லனுதான் சொல்றேன்..”

“விஷயம் அவ்வளோ பெரிசில்லன்னா நீ ஏன் மேக்ஸ் இப்படியிருக்க?” என்று கேட்க  சில நொடி மௌனத்திற்கு பின்,

“இங்க உக்காரலாமா?” என்று தரையை அவள் காட்ட அவனும்

“ம்ம்”  என்றுவிடவே சுவற்றில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்து கொண்டனர் இருவரும்.

அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாய் விளங்கியது.. அது, மேகாவை ஏதோ போட்டு  அழுத்தியிருக்க வேண்டும் இல்லையெனில் இதற்கு இவள் இவ்வளவு யோசிக்கமாட்டாள்.  இந்த விஷயத்தில் அவனது மேக்ஸ் இப்படியெல்லாம் யோசிக்கும் ரகமல்ல! எவராயினும் ‘சர்தான் போடா’ என்றுவிடும் ரகமவள். ஆனால் அவளுக்குமே நடந்தது முழுதாய் தெரியவில்லை என்பது நன்கு புரிந்தது.

அவள் சொல்வதை வைத்துப் பார்க்கையில் அவனது யூகமெல்லாம் இதுவாகவே இருந்தது.
அந்தப் பையன் உதய் ஏதோ இவளைப் பற்றியும் தென்னலை பற்றியும் தவறாக பேசியிருக்க வேண்டும்.. அதாவது மனோவின் முன்னிலையில் செய்திருக்க வேண்டும்  அதன் விளைவுதான் இது.
ஆனால் அவன் ஏன் அப்படி பேச வேண்டும்? மேக்ஸ் சொல்வதை வைத்துப் பார்த்தால் இவளுக்கும் அவனுக்கும் எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை. இத்தனைக்கும் இவளே ஹெச்.ஓ.டியிடம்  அவனுக்காகவும் பேசியிருக்கிறாளெனில் அவன் அவ்வளவு மோசமான மனிதனாய் இருக்க வாய்ப்பில்லை… பின் ஏன்?? என்ற கேள்விதான் அதியை அதிகம் யோசிக்க வைத்தது. நிச்சயம் இதற்கு பின்கதை ஒன்று இருக்க வேண்டும்.. என்றவனின் எண்ணங்கள் சிறகு விரிக்க அதைத்  தவிர்த்து நிகழ் உலகிற்கு வந்தவனோ தனக்கு வெகு அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

அருகருகே அமர்ந்திருந்தனர் இருவரும். ஒருவரை மற்றவர் ஸ்பரிசிக்காத அளவு தூரமும் வாசமும் நேசமும்  தீண்டுமளவு பக்கமும்..!! நினைவுகள் அனைத்தும் மெல்ல மீட்டத் தொடங்கும் வேளை..!! பசும் மஞ்சள் நிற மலர்கள் பரவிக்கிடக்கும் ஆளில்லா சாலையின் குளுமை.. சட்டென கேசம் கலைப்பது மட்டுமின்றி பூக்களை உதிர்த்துச் செல்லும் தென்றல்… அதன் சிலிர்ப்பு… கண் முன் முடிவிலியைப்போல முடிவற்று நீண்டுக் கிடக்கும் சாலை… அவனருகில் மேக்ஸ்..

அருகிலிருப்பவள் தன்னையே பார்ப்பது கருத்தில் பதிய சட்டென நிகழ் காலத்திற்கு வந்தவனுக்கோ மெல்லிய அதிர்வொன்று மனதினுள். நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்டவனோ,

“சரி என்ன பண்ணலாம்? சொல்லு. அந்த பையன்ட்ட எதாவது பேசினியா?” என்றவன் அவளது முகத்தினில் பார்வையை பதித்து கேட்க அவளது வதனத்திலோ நொடிப்பொழுதில் உணர்வு பெயர்ந்தது.

“ஓஹ்!! கம்-ஆன்… நான் ஒன்னும் சீதா தேவியில்ல அக்னிப் பரீட்சை செஞ்சு ப்ரூவ் பண்ண!!” என்றவளின் குரல் மற்றவனதில் தடைப்பட்டது.

“வாஹ்!! நான்கூட நம்மக்கூட படிச்சப்பொண்ணு இதில்லையோ.. இது வேறையோனு சந்தேகப்பட்டேன்.. பட்..மேக்ஸ் இஸ் பேக்!!!!” என்றான் அந்தச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத உற்சாகத்துடன்.
அதுதான் உண்மையும்கூட! நொடிப் பொழுதில் பத்தொன்பது வயது மேகராகா அவன் கண் முன் வந்து போனாள்.  அதை அவளும் உணரத்தான் செய்தாள். 

நினைவுமட்டுமின்றி நெருக்கமும் மீள்கிறதோ..!?

“ப்ச்! போடா டேய்” என்றவள் மலரும் சிரிப்பை அடக்கியவளாய் கையசைத்து முகத்தை திருப்பிக்கொள்ள அவனோ,

“ஏ!! ஏ.. இதானே வேணாங்கறது..”என்று அவளுக்கு அந்தபுறம் வந்தமர்ந்தவனாய் அவள் முகம் பார்க்க அவளோ,

அவனது கேலிப் பார்வையை பார்த்தவள் பட்டென அவனது தோளில் தன் இடக்கையால் அடித்தாள்..

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பின் அவளிடமிருந்து கிடைக்கும் முதல் அடி.. அன்பின் அடி அது..!! 
முன்பெல்லாம் அடிக்கடி வாங்கியதுண்டு. அவன் இப்படிதான் எதையாவது சொல்ல அதற்கு அவள் சிரித்தபடியே இப்படி தோளை பட்டென தட்டுவதுண்டு.

‘உனது ஒவ்வொரு பரிமாணத்திலும்
தடுமாறுகிறதடி என்னிதயம்’

“இப்படியே இரு மேக்ஸ்.. இதுதான் நீ! அப்பதேயிருந்த அந்த அழுகாச்சி மூஞ்சியில்ல!!” என்று உருக்கமாய் தொடங்கி  பின்  கிண்டலில் முடித்தவன் அவள் அடிக்கும் முன் ஓடியிருந்தான் அவ்விடமிருந்து.

“அதி!!” என்றவள் கத்துவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

ஏனோ சூழ்நிலையின் கனம் குறைந்ததைப்போல் உணர்ந்தாள் மேகா. அதியின் மாயம்! அகம் முழுதும் அன்புமயம் அவனிடம்..!!

ஓடிவந்தவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்க, “நான் பாக்கறேன்” என்றுவிட்டு கதவை திறந்தான்.

இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி நின்றிருந்தாள். கண்களில் சிறு தயக்கம் எட்டிப் பார்த்ததோ?

“ஹலோ! ஞான் தென்னல். மேகா மேம் இருக்காங்களா?”என்றவளின் குரலில் எந்தவித தடுமாற்றமும் இல்லை..
“ஓஹ்! தென்னல்.. ப்ளீஸ் கம் இன்.. நான் அதிரூபன். மேக்ஸ்  உள்ளதான் இருக்காங்க” என்று அவளுக்கு வழிவிட்டு நகர்ந்தவனோ..

“மேக்ஸ்! தென்னல் வந்துருக்காங்க!” என்றழைக்க அதற்குள் வைபவி உருண்டு விடாமல் இருக்க வைத்த தலையணையை சரிபார்த்துக் கொண்டிருந்தவள் வந்துவிட்டாள்.

“ஹே! வா தென்னல் உள்ள வா!” என்றழைத்து அவளை அந்த சோஃபாவில் அமர்த்தி அவளுக்கு அருகில் இருந்த ஒற்றை சேரில் அமர்ந்தவள்..

“தென்னல் இது அதிரூபன்
அதி… தென்னல்” என்றாள் அறிமுகமாய்.

பின் நினைவு வந்தவளாக,

“ காஃபி ஆர் டீ?” என்றவள் எழப் போக அவளை தென்னல் தடுக்கும் முன் தடுத்திருந்தான் அதிரூபன்.

“இரு நான் பாத்துக்கறேன்..” என்றவன் நகரப்போக

“அதில்ல..” என்று மேகா தொடங்கும் முன்பே

“அவ உன்ட்டதான் பேச வந்துருக்கா மேக்ஸ்..  பேசிட்டிருங்க.. இதோ வந்துட்டேன்” என்றவன் அவள் மறுப்பதற்கு இடம் கொடாமல் அடுக்களையினுள் நுழைந்துக் கொண்டான்.
சின்ன சிரிப்புடன் அவனுக்கு தலையசைத்தவள் தென்னலிடம் திரும்பினாள்..

“என்னாச்சு தென்னல்?” என்றபடி

“ஸாரி மேம்.. இதெல்லாம் என்னால வந்தது” என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.
அடுக்களையினுள் இருந்த அதிக்கும் இது காதில் விழத்தான் செய்தது. சிறிய வீடு அது.

“தென்னல்?” மேகாவின் குரல் கேள்வியாய் நீள அன்று காலையில் நடந்ததை சொல்லலானாள் தென்னல்.

அன்று காலை…

பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ

காலை நேரக் குளுமையை அந்தப் பூவின் அருகில்  முழுதாய் உணர்ந்துக் கொண்டிருந்தாள்  தென்னல். அவள் நின்றிருந்தது அவர்களது காலேஜ் லைப்ரரிக்கு பின்னால் இருக்கும் ஒரு சிறு பூவின் நிழலில். ஆம்! அவளது கட்டைவிரல் அளவுகூட இல்லாத அந்தப் பூவின் இதம் அவளை முழுதாய் இழுத்து நிழலாய் நிற்பதைப்போல உணர்ந்தாள் அவள்.  வெள்ளை நிறத்தில் இருந்த அப்பூவின் பெயர் அறியாள்! ஆனால் மனம் லயித்தாள்..!!

தென்னலுக்கு பேப்பர் ப்ரெஸன்டேஷன் சம்பந்தமாக வேறு சில வேலைகள் இருக்கவே முதல் இரண்டு வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலை.
அந்தந்த வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றவள் அதை மனோவிடம் சொல்ல மறந்தாள்.. சொல்லக்கூடாதென்று இல்லை.. அவளுக்கே அன்று காலையில் வந்தப் பிறகுதானே தெரியும்? அதற்கு பிறகுதானே சந்தியா வந்து இவளிடம் முதல் இரண்டு வகுப்பாசிரியர்களிடமும் அனுமதி பெற்றுவிட்டு தன்னை ப்ரெஸன்டேஷன் பேப்பர்களுடன் வந்து சந்திக்குமாறு பணித்துவிட்டு வந்த வேகத்திலேயே விடுவிடுவென அகன்றது.

சந்தியா தான் ஸெகண்ட் இயருக்கு பொறுப்பு! அது மட்டுமன்றி இன்னபிற க்ளப்களில் முக்கிய பங்குமுண்டு. அப்படியிருக்கையில் இந்த அவசரமும் படபடப்பும் அவளுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் தென்னலுக்கு அப்படியல்லவே!?

முதல் வேலையாக ஸ்டாஃப் ரூம் நோக்கி ஓடியவள் பெர்மிஷன் பெற்றுக் கொண்டு சந்தியா வரச் சொல்லியிருந்ததைப் போல செமினார் ஹாலை அடுத்து இருந்த ரூமிற்குள் நுழைய அங்கோ அவசரகதியில் சந்தியா!

இவள் சரியாய்  வந்துவிட்டதை கவனித்தவளோ.. வாட்சை ஒரு முறை பார்த்துவிட்டு.. “ குட்! கரெக்ட் டைம்க்கு வந்துட்டியே!” என்று மெச்சியவள் பின்.. “ இது ரிலேட்டடா சில புக்ஸ் ரெஃபரண்ஸ்க்கு எடுத்து வைக்க சொல்லிருந்தேன்… If you don’t mind… லைப்பரில இருந்து வாங்கிட்டு வர முடியுமா?” என்று கேட்க இங்கு  இளையவளினுள்ளோ பெரிதாய் குடிகொண்டது கவலை..!! இங்கிருந்து மறுபடியும் க்ரௌண்ட் ஃப்ளோரிற்கு அவள் இறங்கி ஏற வேண்டும். இங்கு லிஃப்ட் வசதியெல்லாம் ஸ்டாஃப்களுக்கு மட்டுமே.  சம்மதமாய் தலையசைத்தவள். தடதடவென படிகளில் இறங்கினாள். அவளது ஸ்னீக்கர்ஸ் அவளை காலைவாராது என்ற நம்பிக்கை போலும்.

இரண்டு இரண்டு படிகளாக தாவி இறங்கியவள் லைப்ரரி செல்ல அங்கோ லைப்ரரியனாகப்பட்ட  சர்வேஷ் மாயமாகியிருந்தார்.

அங்கிருந்த மற்றொரு ஸ்டாஃபை பார்த்தவள்…

“எக்ஸ்க்யூஸ் மீ சர் சர்வேஷ் சர் இல்லயா?” என்று வினவ இவளை ஏற இறங்க பார்த்தவரோ…

“எந்த க்ளாஸ்? க்ளாஸ் இல்லையா இப்போ?” என்றார் சம்பந்தமின்றி. அங்கு சில மாணவர்கள் க்ளாஸை தவிர்த்தோ இல்லை வெளியேற்றப்பட்டோ இப்படி பொழுதைப் போக்க லைப்ரரிக்கும் கேண்டினுக்கும் வருவதுண்டு அதனாலையே அவர் கேட்டது.

அவரிடம் அவள் விவரம் உரைத்த பின்பே, “ஓ… சந்தியா மேம் அனுப்ச்சாங்களா…” என்றபடி டெஸ்கில் தேடியவர் கிடைக்காமல் போகவே..

“இங்க இல்லையேமா…” என்றவர் சர்வேஷிற்கு அழைத்து விசாரித்துவிட்டு, “அந்த லாஸ்ட் ரேக்ல இருக்காம்மா..” என்றுவிட அவரிடம் ஒரு தாங்க்ஸை பகிர்ந்துவிட்டு கடைசி ரேக்கிற்கு வந்தவளுக்கு மூச்சு முட்டாதக்குறைதான்! 

மனிதன் லாஸ்ட் ரேக் என்றாரே… அதில் எந்த தட்டு என்றாரா? வரிசையாய் அவள் வரை இருந்தது அனைத்தும் காலியாய் இருக்க சரியாய் அவளுக்கு மேல் எட்டாத தூரத்தில் தடிமனாய் ஐந்தாறு புத்தகங்கள்… இதை எக்கி எடுக்க முயற்ச்சிப்பதைவிட முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்காது என்று தோன்றிவிடவே… அவள் பார்வையும் பரபரவென அவ்விடத்தை அளந்தது… போட்டு எடுக்க ஸ்டூலோ சேரோ இல்லை… இனி லைப்ரரி முன்பகுதி வரை அலைந்து பர்மிஷன் வாங்கி ஸ்டூலைக் கொண்டு வந்து… அதெல்லாம் அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
சட்டென விழிகள் இரண்டும் சிசிடிவியை தேடியது. அவள் நின்றிருந்த ரோவில் இருந்து சற்று வெளியே வந்துப் பாதையில் நின்றுப் பார்த்தாள். சிசிடிவி லைப்ரரியன் கேபினுக்குள்ளிருந்தபடி அவ்விடத்தை அளவிட்டது. மற்ற திசைகளில் இருப்பதிலெல்லாம் அவள் நேரடியாய் விழுவாளா என்பது சந்தேகமே… சற்றும் யோசியாமல் பழைய ரேக்கில் ஒரு காலையும் அதற்கு பக்கத்தில் இருந்த சன்னலில மற்றொரு காலையும் பதித்தவள் ஏறி அதை லேசாய் நகர்த்தினாள்.

எடைக்குப்போட்டால் ஒரு நாள் சாப்பிடலாம்போல.. அத்தனை கனம் ஒவ்வொன்றும்.. பாலன்ஸ் குறைவாய் இருக்கும் இந்த சமயத்தில் இதை  ஒரேயடியாய் தூக்க முடியாது என்பதை உணர்ந்தவளோ அதை அப்படியே ஒவ்வொன்றாய் எடுத்து அதற்கு கீழிருந்த ரேக்கில் எடுத்து வைத்தாள்…

கிட்டத்தட்ட கம்பி மேல் நடப்பது போல்தான் அதுவும்! என்ன இங்கு இரு கால்களையும் பதித்து ஒரு கையில் சன்னல் கம்பியை பிடித்திருந்தாள்.. அந்த ரேக் சரிந்து அவளையும் சேர்த்து கீழே தள்ளி அவள் மேல் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்! அப்படியிருக்கையில் அந்த கடைசி புத்தகத்தை எடுக்கும் பொழுதுதான்  அது நடந்தது…

கடைசி புத்தகம் சற்றே உள்ளே தள்ளியிருக்க அதை எக்கி எடுக்க முயன்றவளின் கண்ணில் பட்டது சன்னலுக்கு வெளியே தெரிந்த அந்த வெள்ளைப்பூ..!! ஒரு கணம் அவளை அது ஈர்த்தாலும் அதை விடுத்து புக்கை எடுப்பதில் முனைந்தவள் எக்கி அதை எடுத்தது வரைதான் புரிந்தது… நொடிப்பொழுதில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.

எப்படி வழுக்கியதோ.. எது இடறியதோ… ஒரு வேளை அவள் எக்கி எடுத்ததில் அந்த ரேக் ஆடியதாலோ என்னவோ… ரேக் ஆட்டம் கண்டதில் இவள் பிடிமானம் நொறுங்கியதுபோலானது. அந்த உயரத்தில் இருந்து விழுந்தால்… நிச்சயம் எங்காவது பலமாய் படும்.. ஏன் எலும்பு முறிவுக்கூட ஏற்படலாம் வாகில்லாமல் விழுந்தால்…  ஆனால் அவளை யாரோ தாங்கிப் பிடித்திருந்தனர்.

அத்தனை இதமாய்… அவள் கைகளில் விழுந்த வலியைக்கூட உணராதவண்ணம்… சுகமான உணர்வு… அது பாதுகாப்பாய் உணர்ந்ததாலும்கூட இருக்கலாம்.. 

கண் திறந்து பார்வையை தன்னை பிடித்திருந்தவரின் மேல் பதித்தவளின் முகம் உணர்ச்சிகளற்று இருந்தது. தன் கைகளுக்குள் பத்திரமாய் இருந்தவளையே பார்த்திருந்தான் உதய். அவன் பார்வையில் படபடப்பை தவிர்த்து வேறெதுவுமிருக்கவில்லை..

“ஆர் யு ஓகே தென்னல்? எங்காவது பட்டுச்சா?” என்று இறுக்கமாய் அணைத்திருந்தவனோ அவள்  இன்னும் தன் பிடியில்தான் இருக்கிறாள் என்பதை உணரவில்லை போலும். அவன் அவளை கைகளில் ஏந்தி பிடித்திருக்கவில்லை.

அவனும் அங்குதான் இருந்தான். தென்னல் உள்ளே வருவதைப் பார்த்தவனோ அவள் நன்றாக  தெரியுமாறு டேபிள் பார்த்து அமர்ந்தவன் அவள் ஏறத் தொடங்கவுமே அவளுக்கு பின்னால் இருந்த ரேக்கிற்கு அப்புறமாய் வந்து நின்றுக் கொண்டான். அவளுக்கு உதவத்தான் அவனும் நினைத்தது. ஆனால் அதை அவள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையும் அவன் நன்கறிவான். அதனாலையே நின்று பார்த்திருந்தான்.

சரியாய் அவள் இடறி விழப் போக.. ஓடி வந்தவன் அப்படியே பிடித்துக் கொண்டான் அணைத்தவாறு. பார்ப்பவர்களுக்கு என்னவோ அவர்கள் இருவரும் கட்டிக்கொண்டு நிற்பதைப்போலத்தான் தெரியும்..
தன் முகத்துக்கு நேராய் இருந்த அவன் முகத்தையே பார்த்தவளோ.. “இறக்கி விடு உதய்” என்றாள் அது என்ன உணர்வென்று அவனால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.. இறக்கிவிட்டவன்,

“உனக்கொன்னுமில்லையே?..” என அவளோ,

“ஐம் ஓகே உதய்… தாங்க்ஸ்… சரியான நேரத்துல ஹெல்ப் பண்ணிருக்க” என்றவள் அவளுக்கு தலைக்கு மேலிருந்த ரேக்கில் அவள் வைத்த  புத்தகங்களை எடுக்க  கை உயர்த்த அவளை தடுத்தவனோ..

“விடு தென்னல் நான் எடுத்து தரேன்…” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் எடுத்து தர அதை பெற்றுக் கொண்டவளோ,

“தாங்க்ஸ் அகைன்! ஆனா இனி இப்படி செய்யாத!” என்றுவிட்டு திரும்ப

“நான் உனக்கு செய்ய கூடாதா தென்னல்?” என்றவனின் குரலில் அதென்ன..வலியா?
“செய்யக்கூடாது உதய்!” என்றவள் “தாங்க்ஸ்!!” என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள்.

உதயின் முகபாவத்தை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.

அதற்கு பின்னான வேலைகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் நடந்தது. சந்தியாவிடம் அந்த புக்ஸையெல்லாம் ஒப்படைத்துவிட்டு அவள் சொன்னதை குறித்துக் கொண்டென நிமிடங்கள் பனியாய் கரைந்தன…

அடுத்த க்ளாஸிற்கு அதிக நேரமிருக்கவே பொறுமையாய் க்ரௌண்டிற்கு வந்தாள் தென்னல். இன்டர் க்ளாஸ் காம்படிஷனுக்கான விளையாட்டு பயிற்சிகள் ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்தது.. மெல்ல நடந்து அந்த பூவிடம் வந்தாள். அவள் கவனத்தை ஈர்த்த அதே பூ..!! 

தென்னலின் கவனம் முழுதும் தேன்மலரில் இருக்க பின்னிருந்து கலைத்தது ஒரு குரல்…

“நீ இங்க இருக்கியா?” என்ற குரலே அவளுக்கு அது யாரென்று சொல்லிவிட “ஷ்ஷ்!” என்று திரும்பி பார்க்காமல் உரைத்தவள் அவனையும் வரும்படி கையசைத்தாள். அவளது செயல் வினோதமாய் இருந்தாலும் அவளருகே சென்றான் மனோ..

“என்ன?” என்றவாரே..

“அங்க பாரு..” என்றவள் காட்டிய திசையில் பால் வண்ண பூவொன்று புன்னகைத்தது.

“அழகா இருக்குல” வேறு யார் மனோ தான்.

“ம்ம்.. ஆமா.. லைப்ரரில இருந்து பார்த்தேன்..”

“அது சரி நீ எங்க போன தென்னல்?” என்றவன் வினவ தென்னலின் கவனமும் மலரிடமிருந்து மனோவிடம் திரும்பியது.

“அதுவா..” என்றவள் சந்தியா மேம் அழைத்ததை பற்றி சொன்னாள்.
“ஆமா..க்ளாஸ் இல்ல? நீ  எப்படி இங்க?” என்றவளிடம்

“ஆமா.. க்ளாஸ் இல்ல… அதான் நீயும் காணோம்னு பாக்க வந்தேன்..”

“அச்சோ! சாரி மனோ.. உன்ட்ட சொல்லனும்னுதான் நெனைச்சேன் ஆனா அவஷரத்துல மறந்துட்டேன்..”

“இதெல்லாம் ஒரு மேட்டரா? ஃப்ரியா விடுங்க மேடம்!” என்றுவிட பிறகு பேசியபடியே நடக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் அறிந்திருக்கவில்லை அடுத்து நடக்கவிருக்கும் விபரீதத்தை… ஏன் அங்கிருந்த எவருமே அறிந்திருக்கவில்லை… உதய் உட்பட!

ஆம்!  உதய் எதிர்ப்பார்த்திருக்கவில்லைதான். லைப்ரரியில் நடந்த பேச்சு வார்த்தையின் முழு அர்த்தம் உணர்ந்தவனுக்கு மன நிம்மதி பறிபோனது. மனம் முழுதும் குழப்ப ரேகைகளும் அழுத்தங்களுமே அவனுக்கு..!! அவனும் அவனது நண்பர் கூட்டமும்கூட அங்குதான் இருந்தனர். ஏன் அவன் தென்னல் அங்கு வந்ததிலிருந்து இருக்கிறான். அத்தனையும் பார்த்தும் பார்க்காததைப்போல..மனதில் பதிந்தும் பதியாமல்  அவனிருக்க அவன் நண்பனோ நேர்மாறாய்…

அதுவும் மனோவும் தென்னலும் நெருங்க நெருங்க இங்கு தேஜஸின் வேகம் கூடியதே தவிர குறையவில்லைபோலும். பேசிப் பழகியிராத தென்னல் மேலும் மனோ மேலும் அவனுக்கு அப்படி என்னதான் வன்மமோ? 

“பாரு மச்சான்.. இவன வேணா வேணானு சொல்லிட்டு இவ சுத்தரத… லவ்வே வேணாம்னவ அவன்கூட மட்டும் எப்டிடா பேசறா…” என்று வாய்க்கு வந்ததை பேச… உதயோ அவ்வுலகில் இருந்தாதானே? அவன்தான் நினைவுகளை கடன்கொடுத்தவனாய் அமர்ந்திருந்தானே… தேஜஸ் என்ன சொல்கிறான் என்றுக்கூட அவன் சரியாய் கவனிக்கவில்லை..  மற்ற சிலர் “மச்சான் மறுபடியும் அவன்ட்ட  வாங்கப் போற…” என்று அவனை எச்சரித்தனர் என்றால் சிலர்..”அவன் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கொடி பிடித்தனர். ஆக மொத்ததில் உதயை தவிர மற்ற அனைவரும் அவன் காதலை விவாதித்தனர் அங்கு…

அப்பொழுதுதான்… மனோ அருகில் வரவே தேஜஸின் நாவு நரம்பிழக்கத் தொடங்கியது… “ஆனாலும் பொறந்தா இவனப்போல பொறக்கனும்டா…” என்க அதற்கு இன்னொருவன்.. “ஏண்டா?” என்றான்

“பாரு… வயசுல பெரிய ப்ரஃபஸருல இருந்து நம்ம வயசு தென்னல்வரை இவன் பின்னாடிதானே சுத்துது… கொடுத்து வச்சவன்டா!…” என்றவன் எதையோ சொல்ல அதற்கு மற்ற சிலர் வேறு சிரிக்கத் தொடங்கினர்.

யார் காதில் படவேண்டும் என்று எண்ணி பேசினானோ அந்த மனோ காதில் தெளிவாய் விழுந்து வைத்தது அனைத்தும்.. தென்னலே கொஞ்ச நேரத்திற்கு உறைந்துப் போனாள். எவ்வளவு கேவலமான வார்த்தைகள்??  அதுவும் யாரைப் பற்றி?

மனோ வசமிழந்தான்… தேஜஸைப் போட்டு புரட்டியெடுக்க தொடங்கினான். அவனால் சீரனிக்கவே இயலவில்லை… 

அத்தனை நேரம் அமைதியாய் வெறித்திருந்த உதய்க்கோ தேஜஸின் கடைசி சில கமெண்ட்டுகளில் உரைக்க அவனே அவனை வெளுத்து வாங்கியிருப்பான்தான். அதுதான் அவன் நினைத்ததும். ஆனால் அதற்கு முன்பே மனோ தேஜஸின் மேல் கை வைத்துவிட… என் நண்பனை எப்படி தொடலாம் என்று மனோவிடம் திரும்பியது.

அவனைப் பொருத்தவரை.. தேஜஸ் அவனது நண்பன். இனி அவன் நட்பே வேண்டாமென்று போனாலும் அவன் அடிவாங்குவதை இவனால் பாரத்துக் கொண்டிருக்க இயலாது.. மனோவை பிடித்திழுத்தான்.. எந்நொடியில் சண்டை அவர்களிருவருக்குள்ளும் மாறியதென்பது அவர்களுக்கே புரியாமல் போனது…

எத்தனையோ முயன்றும் முடியாமல் போக தென்னல் மேகாவை நாடினாள்…

****************

நடந்ததை ஒன்றுவிடாமல் உரைத்தவள் அமைதிகாத்தாள்.
மேகாவுக்கும் என்ன சொல்லவென்று புரியவில்லை. இதற்கு இப்படியொரு காரணமா? என்றெண்ணியவளுக்கு விஷயம் விளங்கியதும் கலக்கமும் கரைந்தது இளையவள் தோளை ஆதரவாய் தட்டியவளோ… “தட்ஸ் ஃபைன் தென்னல்… இதுல உன் தப்பு இல்ல” என்க தென்னலோ சிறிதாய் இதழ்வளைத்து…

“தொடக்கமே என்னாலதான மேம்…” என்றாள் அமைதியாய்.

அந்த கனத்த மௌனத்தை உடைத்தான் அதிரூபன்.
“காஃபி எடுத்துக்க தென்னல்” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள் புன்னகைத்து
“தாங்க்ஸ் அண்ணா” என்றபடி எடுத்துக்கொள்ள இவனிடமோ ஆச்சர்யப் புன்முறுவல் ஒன்று.

“பரவால்லயே..” என்றவனிடம் புன்னகைத்தவள்.

“மனோ நிறைய சொல்லிருக்காண்ணா” என்றாள் எனக்கு உன்னை முன்பே தெரியும் என்பதாக..

“அதானே பார்த்தேன்… சரியான ஓட்டவாய் சொல்லிட்டானா” என்றபடி அவளருகிலிருந்த இடத்தில் அமர அவளோ அவனை போலியாய் முறைத்தாள்..

“பாத்தீங்களா! என் ஃப்ரெண்ட பத்தி என் முன்னாடியே பேசறீங்க!!” என்று மிரட்ட

“அய்யோ பயமாயிருக்கு!” என்று நடுங்குவதுபோல் நடித்தவன் அவள் சிரிக்கவும் உடன் சிரித்தபடியே..

“இதே மாதிரிதான தென்னல் மனோவும் நெனைச்சிருப்பான்?” என்றான் அர்த்தமாய் அவள் கேள்வியாய் பார்க்க அவனோ…

“அவன் ஃப்ரெண்ட பத்தி அவன் முன்ன தப்பா பேசினா அவனுக்கு கோவம் வரது இயல்புதானே தென்னல்? அதானே ஃப்ரெண்ட்ஷிப்!? இதுக்கும் உனக்கும் எந்தவிதத்திலயும் சம்பந்தமில்ல தென்னல்…” என்றவன் பின்..

“ஏன் தென்னல்.. அவன் தப்பா பேசிட்டானு நீ வருத்தப்படுறீயா?” என்க அவளிடமோ இதழோர வளைவு ஒன்று!

“ இவங்கல்லாம் பேசறாங்களேனு வருத்தப்பட்டா நான் கடைசிவரை வருத்தப்பட்டுட்டேதான் இருக்கனும்ணா. அவன் அப்படி நினைச்சா அது அவன் ப்ரச்சனை.. என்னோடதில்லையே..” என்க பட்டென படிந்தது அதியின் பார்வை மேகாவிடம் அவளும் அவனைதான் பார்த்திருந்தாள். இருவரிடயும் புன்னகையொன்று மலர்ந்தது.
“குட்! இப்பதாண்டா நீ அதியோட தங்கச்சி!!” என்றான் அவளது தோளில் ஒரு முறை  கைப்போட்டு.

“ஆஹா!?” என்று கிண்டலாய் இழுக்க அவனோ..” ஹே… வாலு!” என்றான்.

“சரிண்ணா லேட்டாச்சு..” என்றவள் மேகாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

வாசல்வரை வந்து அவளை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைய அதிரூபனோ, “பவிம்மாவுக்கு பால் ஆத்தி வச்சுருக்கேன் மேக்ஸ்.. இவ்வளவு நேரத்துல அது இதமா இருக்கும்..” என்க பேசிக் கொண்டிருந்தவனின் கைப் பற்றியவள் மனமாற” தாங்க்ஸ் எ லாட் அதி!” என்றாள் உணர்ந்து.

அவள் கைகளை பற்றிக்கொண்டவனோ..” ஏன் மேக்ஸ்?” என்க

“தெரியல அதி.. சொல்லனும்னு தோணுச்சு” என்றுவிட்டு நகர அவளைத் தடுத்தவனோ..

“உன்ட்ட ஒன்னு கேக்கலாமா மேக்ஸ்?”

“இதென்ன கேள்வி..” என்றவளுக்கு மெல்ல உரைக்க அதற்குள் கேட்டேவிட்டான்.

“Do you still love me மேக்ஸ்?” என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!