மேகதூதம்12

                                                 மேகதூதம் 12

 

         வெகு நேரமாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் பாண்டியன். அவரைக் கண்டதும் காமுவிற்கு கண் முன் தோன்றிய காட்சி ஒன்றே ஒன்று தான்.

இரண்டு குழந்தைகளோடு அன்று அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாகத் தான் நின்ற கோலம்.

அக்கம் பக்கத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும்  முன்னர் ஊரைவிட்டு வந்து, பெண் குழந்தையை வளர்க்க அவர் படாத பாடு பட்டிருக்கிறார்.

பருவ வயதைத் தொடும் பெண்ணை தனியே வைத்துக் கொண்டு பல நாட்கள் உறங்காமல் தவித்திருக்கிறார்.

இவையெல்லாம் மட்டும் எதிரே வந்தது. அத்தனை நேரம் அவரும் அதை உணர்ந்தே வாசலிலேயே நின்றார் பாண்டியன்.

போட்டோவில் பார்த்த தந்தையின் முகம் பிரபுவிற்கு தெளிவில்லாமல் நினைவில் இருந்தாலும், பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டான்.

“உள்ள கூப்பிட மாட்டியா காமாட்சி?” அவரது கம்பீரமான குரல் காமுவைக் கலைத்தது.

“யாரு காமாட்சி..வீட்டுக்கு கெஸ்ட்டா?” எதிர் வீட்டு அம்மா கதவைத் திறந்து கொண்டு வர, அப்போது தான் சுயம் பெற்றார் காமாட்சி.

அவசரமாக, “உள்ள வாங்க” என்றுவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தார்.

செய்வதறியாது பிரபுவும் அவரை உள்ளேவிட்டு, எதிர்த்த வீட்டு வீட்டு ஆன்ட்டியிடம் போலியாக புன்னகை செய்துவிட்டு கதவை மூடினான்.

சுவர் கடுகாரத்தின் சத்தம் பெரிதாகக் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி நிலவியது.

என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று அறியாமல் அவரவர் சிந்தையில் ஆழ்ந்து இருந்தனர்.

பிரபுவிற்கு தந்தையின் ஆதரவு தேவைப்பட்ட போது அவனுடன் அவர் இல்லை. அந்த கோவம் அவனுக்குள் இருக்கவே செய்தது. இருந்தாலும் தன்னைவிட அம்மாவே அதிகம் பாதிக்கப் பட்டவர் என்பதை உணர்ந்தவனாய் அருகில் நின்றான்.

நீண்ட யோசனைக்குப் பிறகு தாயின் முடிவே தன் முடிவும் என்ற மனநிலைக்கு வந்து நின்றான்.

“காமு.. என் மேல உனக்குக் கோவம் இருக்கும் கண்டிப்பா இருக்கணும்.. நான் பண்ணது தப்பு..மன்னிக்க முடியாத தப்பு.” பாண்டியன் அப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று பேச்சை ஆரம்பித்தார்.

“இப்போ எதுக்கு வந்தீங்க?” முகத்தில் அறைந்தார் போல் கேட்டார் காமு.

“காமு..உங்ககிட்ட எல்லாம் மன்னிப்புக் கேட்டு மறுபடியும்…”தான் கேட்பது அபத்தம் என்று அவருக்கே பட்டதோ என்னவோ..வார்த்தைகளை முழுங்கினார்.

“மன்னிப்பா.. அதுவே முதல்ல நடக்காத காரியம்.இதுல மறுபடியும் எங்க கூட வாழ வந்தீங்களா?” எள்ளலாக நகைத்தார்.

முட்படுக்கையில் தன்னை யாரோ ஏற்றியது போல துடித்துப் போனார் பாண்டியன்.

அப்படித்தானே அவளையும் நான் விட்டுச் சென்றேன். எனக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எப்படியும் காமாட்சியை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

“மன்னிக்கக் கூடிய தப்பை நான் பண்ணல. அது எனக்கும் தெரியும். ஆனா இதுக்கு மேலயும் அந்தத் தப்பை நான் செய்ய விரும்பல.அதுனால தான் திரும்பி வந்துட்டேன்.” பேசிக்கொண்டே வீட்டை ஒரு சுற்று பார்த்தார். எங்கேனும் தானும் காமுவும் இருக்கும் படம் மாட்டப்பட்டு இருக்கிறதா..எங்கேனும் இவர்கள் தன்னை நினைத்தார்களா என்ற நப்பாசை.

ஆசையில் மண் தான் விழுந்தது. காமு சேரில் அமர்ந்திருக்க பின்னால் இரு தூண்களைப் போல அஞ்சலியும் பிரபுவும் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு நிற்கும் படம் தான் மாட்டியிருந்தது.

அவர்கள் வீட்டில் இடமில்லை, இனி மனதில் ஏதேனும் இடம் கிடைக்குமா என்று அவர் மனம் ஏங்கியது.

அவரின் வார்த்தைகளுக்கு அங்கே பதில் இல்லை.

“நான் திருந்தக் கூடாதா. எனக்காக ஒரு சந்தர்ப்பம் கொடுத்து உங்க கூட என்னை சேத்துக்கக் கூடாதா? பணம் சம்பாதிக்கணும்னு அப்போ எனக்கிருந்த ஆசை வெறியா மாறிடுச்சு, அதுக்கு குடும்பம் ஒரு தடையா , நான் நெனைக்கறத செய்ய முடியாம போறதுக்கு ஒரு முட்டுக்கட்டையா போயிடுமன்னு தான் அப்படி புத்தி இல்லாம பண்ணிட்டேன்.

நான் அன்னிக்கு முட்டாளா இருந்திருக்கேன். நிஜமான சொத்து எது? எதை ஒரு மனுஷன் எதை சம்பாதிக்கனுமோ அதை விட்டுட்டு இப்படி அழியக் கூடிய சொத்தை தேடிப் போன ஒரு அறிவுகெட்டவன் நான்.

சில நாட்களாவே எனக்குள்ள ஒரு நெருடல். உங்களை தவிக்க விட்டுட்டு போனதுக்குத் தான் நான் அனுபவிக்கறேன்.

ப்ளீஸ் காமு என்னை ஏத்துக்கோ. என்னை மன்னிச்சிடு. ப்ளீஸ்.. உன்னையும் நம்ம குழந்தைங்களையும் இனிமே நான் தவிக்க விடமாட்டேன். நான் பண்ண தப்பையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுகட்ட எனக்கு ஒரு வாய்ப்பு குடு காமு..ப்ளீஸ்..

பிரபு..அம்மா கிட்ட சொல்லு பா..”

பிரபு தன் தாயைப் பார்த்தான். காமுவின் முகத்தில் சிறிதளவும் பச்சாதாபம் இல்லை.

“நீங்க ஈடுக்கட்ட முடியாத அளவு எங்களுக்கு துரோகம் செஞ்சிருக்கீங்க. அவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க..நீங்க கேட்டதும் உங்கள மன்னிச்சு ஏத்துக்க நான் ஒன்னும் புத்தர் இல்ல.

ஏன் உங்க ரெண்டாவது மனைவி உங்கள போக சொல்லி அனுமதி கொடுத்துட்டாங்களா? இப்போ எதுக்கு வந்தீங்க?” தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை பேச்சு வாக்கில் கேட்டே விட்டார் காமு.

“காமு…!!” பாண்டியன் கண்ணில் உள்ள பரிதவிப்பை உணர்ந்து கொண்டார் காமு. அதிலேயே அப்படி எதுவும் இல்லை என்பது தெரிந்தாலும், பாண்டியனின் பதிலுக்காக ஏங்கியது மனம்.

“பணம் சம்பாதிக்கணும்னு தான் போனேனே தவிர, உன்னை விட்டு இன்னொருத்திய ..ச்ச.. உன்னால எப்படி காமு இப்படி யோசிக்க முடிஞ்சுது?

உன்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னையும் சரி அதுக்கு அப்பறமும் சரி, வேறு ஒருத்திய நான் மனசால கூட நெனச்சதில்ல. என்னை நம்பு. நான் டெல்லில தான் இத்தனை நாளா இருந்தேன். அங்கே ஒரு பணக்காரர் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். அவருக்குப் பிறகு அவரோட பிசினெஸ் எல்லாம் என் பொறுப்புக்கு வந்தது.

அவங்க பிள்ளைங்களுக்கு அவங்க சொத்தை கொடுத்துட்டு அந்த பிசினெஸ் மட்டும் நான் இப்போ கண்டினியு பண்ணிட்டு இருக்கேன்.

எனக்குன்னு அங்க யாரும் இல்ல. உழைச்சு உழைச்சு களச்சு போன பிறகு தான் எனக்கு புத்தியே வந்துச்சு.

சாப்பிட்டியா , இருக்கியா செத்தியான்னு கேட்கக் கூட எனக்கு நாதி இல்ல காமு.” கண்ணில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது பாண்டியனுக்கு.

அவரின் அந்த ஒரு வார்த்தை காமுவை சற்று அசைத்துத் தான் பார்த்தது.

அவருக்கு இன்னொரு குடும்பம் இல்லை என்பது மறுபுறம் திருப்தி அளித்தது.

இருந்தாலும் அத்தனை சீக்கிரம் தன் காயத்திற்கு மருந்து போட முடியாது என்பதும் அவர் உணர்ந்தே இருந்தார்.

“இத்தனை நாள் சாப்பிடாமலா இருந்தீங்க? உங்க உடம்புல தான் பணக்காரக் களை தெரியுதே! அப்பறம் என்ன வீட்டுல ரெண்டு வேலைக்காரங்க கண்டிப்பா இருப்பாங்களே! அவங்களக்கு சம்பளம் குடுத்தா சாப்பாடு போட்டு எல்லா வேலையும் செய்வாங்க.

நீங்க தான் பணத்தை சம்பாதிச்சுடீங்களே. உங்களுக்கு இனிமேலும் எதுக்குக் குடும்பம். நாங்க இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.” தன் வார்த்தைகளால் அவரைக் கிழித்துத் தன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தார் காமு.

“வேலைக்காரங்க கூட இருக்கறது வாழ்க்கையா? என் மனைவி என்னோட பிள்ளைங்கன்னு இருக்கணும்னு என் மனசு துடிக்கறது உனக்கு புரியல..? உங்க நிம்மதி என்னால கெட்டுடும்னு சொல்றியா காமு. நீ இப்படி சொல்லுவன்னு நான் எதிர்ப்பார்க்கல.

தவறை உணர்ந்து வந்தவனுக்கு நீ வாழ்க்கை குடுன்னு தான் கெஞ்சறேன். ப்ளீஸ் காமு. கொஞ்சம் கன்சிடர் பண்ணு.” அழாத குறையாக கெஞ்சினார்.

பிரபுவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனுக்கும் கோபம் இருந்தாலும் இப்படிக் கெஞ்சுகிறாரே அனைத்தையும் விட்டு வந்து என்று ஆணுக்கு ஆண் அனுதாபம் தோன்றியது.

இருந்தாலும் அம்மாவின் வலி பெரியது என்பதால் அமைதி காத்தான்.

“இதென்ன உங்களோட ஒரே இம்சையா இருக்கு. இத்தனை நாள் இல்லாத அக்கறை இப்போ என்ன வந்தது. நீங்க தான் வேண்டான்னு போனீங்க. உங்களுக்கு வேணும்னா வருவீங்க வேண்டான்னா போவீங்க.. இது என்ன சத்திரமா? இல்ல நான் என்ன..”

“ஸ்டாப் பிட் காமாட்சி. இதுக்கு மேல பேசாத. உன்னை நீ கேவலமான  அளவுக்குப் பேச நான் விடமாட்டேன். நான் கிளம்பறேன். மொத்தமா போறேன்னு நினைக்காத. நாளைக்கும் வருவேன். உன் மனசு மாறும் வர வருவேன்.” கிளம்பினார்.

பிரபுவின்அருகில் வந்தவர், அவனது தலையைப் பாசமாக வருடினார். பிரபு எந்த உணர்வும் வெளிக்காட்டவில்லை. வெறுப்புமில்லை பாசமுமில்லை.

ஆனால் தந்தை என்று உணர்வு அவரின் தொடுகையில் உணர்ந்தான்.

“நீயாவது என்னை ஏத்துப்பியா பிரபு.?” அவனிடம் எந்த பதிலையும் அவர் எதிர்ப்பார்க்கவில்லை.

“நான் வரேன்..” அதன்பிறகு அங்கே நிற்கவில்லை.

தொண்டை அடைத்ததோ அல்லது வேறு என்னவோ…இரும்மிக்கொண்டே வாயிலைக் கடந்து சென்றார்.

அன்றைய பொழுது தன் அறையிலேயே காமு கழிக்க, பிரபு தன் அறையில் அமர்ந்து அஞ்சலிக்கு மெசேஜ் செய்யலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தான்.

‘அவளுக்கு ஏற்கனவே அப்பானாலே வெறுப்பு. இப்போ அங்க தனியா இருக்கா..இத வேற சொல்லி டென்ஷன் ஆகணுமா. எல்லாம் சரி ஆச்சுன்னா அப்பறமா சொல்லிக்கலாம்’ என அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

ஹோட்டல் ரூமிற்கு வந்தார் பாண்டியன்.

அஷோக் சரியாக அந்த நேரம் போன் செய்தான்.

“சார், ஆன்ட்டி ரியாக்ஷன் என்ன? என்ன சொன்னாங்க?” ஆர்வாமாகக் கேட்க,

“ஒன்னும் பெருசா இல்ல அஷோக். வெளிய தொரத்தாத குறை தான். அவ அனுபவிச்ச கஷ்டம் என்னை ஏத்துக்க விடாது. கண்டபடி பேசி தீத்துட்டா..” குரலில் வருத்தம் தெரிந்தது.

 

“சார், கவலைப் படாதீங்க. எறும்பு ஊறக் கல்லும் தேயும். நீங்க தான் வெளிய வந்தீங்களே தவிர அவங்க உங்கள போக சொன்னாங்களா?” அஷோக் ஏதோ புரிந்தது போலக் கேட்க,

“அவ போன்னு நேரா சொல்லல.ஆனா அவ சொல்ல வந்தது அது தான்.”

“சரி அப்போ நான் சொல்ற மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்க.” புதிதாக ஒரு ஐடியா கூறினான்.

அஷோக்கின் யோசனையை ஏற்க பாண்டியன் சிறிதும் யோசிக்கவில்லை. ஏனெனில் அவரின் நோக்கம் காமுவுடன் சேர்வது மட்டுமே. ஆகையால் உடனே அதை ஏற்றுக் கொண்டார்.

இப்போது புது தெம்பு வந்தது போன்ற உணர்வுடன் அன்று இரவு நிம்மதியாக உறங்கினார். மறு நாள் எப்படியும் காமாட்சியை தன் வசமாக்கிக் கொள்ளும் யுக்தி கிடைத்த சந்தோஷம்.

அன்று இரவு அஞ்சலியே பிரபுவிற்கு போன் செய்ய டயல் செய்யப் போனாள், அதற்குள் ரிஷி அவள் அருகில் வந்தான்.

“என்ன பண்ற அஞ்சு?

“அம்மாக்கு போன் பண்ணேன் ரிஷி..எடுக்கல. அதான் பிரபுக்கு போன் பண்றேன்.” மீண்டும் போனை எடுக்க,

“அதெல்லாம் அப்பறம் பண்ணலாம். அவங்க ஒரு வேளை தூங்கி இருக்கலாம். டைம் இப்போ அங்க பதினொன்னு. காலைல பண்ணாலம் பேபி. வா எனக்கு சமைச்சு குடு.பசிக்குது.” அவளது கையைப் பிடித்து இழுக்க,

“என்னது சமைக்கணுமா? ரிஷி விளையாடாதீங்க.. எனக்கு சமைக்கத் தெரியாது.” அவள் பதறிப் போனாள்.

“என்ன டி சொல்ற. சமைக்கத் தெரியாதா?” அவனும் அதிர்ச்சியாக.

“ஆமா ரிஷி. எனக்கு நூடுல்ஸ் மட்டும் தான் சமைக்கத் தெரியும்.”முகத்தை அப்பாவியாக வைத்ததுக் கொண்டாள்.

“நூ..டு..ல்..ஸ்.. அடிபாவி என் வாழ்க்கைல மண் அள்ளிப் போட்டுட்டியே. எனக்கு அந்த ஸ்மெல்லே புடிக்காது டி. இந்த யூடியூப் பாத்தாவது கத்துக்கடி. என்ன சமயல்காரனாக்கிடுவ போலிருக்கே..எனக்கும் சுமாரா தான் டி சமைக்க வரும்.”

“அப்போ நீங்க சுமாரா தான் சமைப்பீங்களா?” கண்ணடித்து ஒரு மார்கமாக கேட்க,

“ஒய்! என்ன டி டபிள் மீனிங் ல பேசுறியா?” அவனது மீசையை ஆள்காட்டி விரலால் நீவிவிட்டுக் கொண்டு அவளை நோக்கி மெல்ல முன்னேற,

“நான் ஏன் டபிள் மீனிங்ல பேசப் போறேன். உங்களுக்குத் தான் அப்படித் தோணுது.நான் சாப்பாட பத்தித் தான் பேசுனேன்.” அவள் மென்னு முழுங்கி பேசினாள்.

“நிஜமாவே வேற எதுவும் கேட்கலையா?

“ம்ம்..ஹ்ம்ம்..” இல்லை என தலையாட்ட,

அவள் அருகில் வந்து காது மடலில் அவனது மீசை உரச நின்று

“நீ அன்னிக்கே நூடுல்ஸ் தான் டி. ரெண்டு நிமிஷத்துல என்கிட்ட…” நிருத்தி பின் மெல்லிதாகக்  அவள் காதைக் கடித்துவிட்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டான்.

அவள் சில நிமிடம் உடல் சிலிர்த்து உறைந்து நின்றாள்.