மேகதூதம்15

                                               மேகதூதம் 15

 

ரிஷிக்கு  அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் அருகில் வந்து அமர்ந்தான்.

அஞ்சலியோ கை நகம் ஒவ்வொன்றையும் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்.

ரிஷிக்கு முன்பே அவர்களின் குடும்ப விஷயம் தெரியும். அதுவும் அஞ்சலிக்கு அப்பா என்றால் சுத்தமாக ஆகாது, அவரை வைத்தே அனைத்து ஆண்களையும் வெறுத்தவள் என்பதும் அவன் அறிவான். இப்படிப்பட்ட நிலையில் அவளுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் தவித்தான்.

அவளது மனநிலை மட்டுப்படும் வரை அமைதிகாத்தவன்,

“அஞ்சு. அப்பா வந்திருக்காரா?

“அப்பா என்ன அப்பா.. அந்தாள அப்படிக் கூப்பிட எனக்குப் பிடிக்கல. பெத்துட்டா மட்டும் அப்பாவாக முடியாது.” சீறினாள்.

“சரி.. புரியுது. எப்போ வந்தாராம்? எதுக்கு வந்தாராம்?” அவளது உள்ளங்கையை தன் கையேடு கோர்த்தபடி கேட்க,

“சன்டே வந்திருக்கார். அவர எங்க அம்மா எத்துக்கனுமாம். அம்மா முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஆனா மறுபடியும் வந்து அவங்கள ஏத்துக்க வைப்பேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. புல் ஷிட்.. இவருக்கு இப்போ என்ன திடீர் ஞானோதயம். யார் அழுதா இவர் வரலன்னு” அவனிடமே நியாயம் கேட்டாள்.

 

“இத்தனை நாள் எங்க இருந்தாராம்?

“டெல்லில இவரு பெரியாளாம். அப்படியே இருக்க வேண்டியது தான. வேற கல்யாணம் எதுவும் பண்ணிக்கல. உங்க அம்மாவை தவிர யாரையும் நினச்சு கூட பாக்கலன்னு சீன் போட்ருக்காரு. இதெல்லாம் எங்க அம்மா கிட்ட செல்லுமா? இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப டெல்லிகே போய்ட போறாரு பாருங்க.”

“ அஞ்சு..நான் சொல்றேன்னு நீ தப்பா நினைக்காத. ஒருவேளை உங்க அம்மா ஏத்துக்கிட்டா நீயும் உங்க அப்பாவ ஏத்துக்கணும்..” அவளது தலையை வருடியபடி எடுத்துரைக்க,

அவனது கையை தட்டிவிட்டு திரும்பினாள்.

“ரிஷி.. அது மட்டும் எப்பவும் நடக்காது. எங்க அம்மா மன்னிக்க மாட்டாங்க. அப்படியே அப்பா மேல அவங்களுக்கு இருந்த அஃபெக்ஷன் அவங்கள ஏத்துக்க வெச்சாலும், நான் பட்ட வேதனை ஒருநாளும் என்னை சம்மதிக்க வைக்காது.” அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

ரிஷி எதுவும் பேசவில்லை.

“ஸ்கூல் படிக்கும் போது, அக்கம் பக்கம் இருக்கறவங்க , ப்ரெண்ட்ஸ் கூட உங்க அப்பா இருக்காரா இல்லையா? ஏன் உங்கள விட்டு போனாரு?உங்க அம்மா தப்பு செஞ்சாங்களா..அதுனால தான் போயிட்டாரான்னு கேட்டு கேட்டு என்னை கொல்லுவாங்க.

வெளிய எங்கயாவது போன கூட, அப்பா இல்ல இவங்க தனியா இருக்காங்கன்னு நிறைய பேர் தப்பா பேசிருக்காங்க. அப்பா வேணும் ங்கற இடத்துல எல்லாம் அவர் இல்லாம தவிச்சிருக்கேன். அந்த உறவோட அரவணைப்பும் உணர்வும் புரிஞ்சுக்கற வயசுல அது எனக்குக் கிடைக்கல. அதுக்கு பதில்லா கோவமும் அழுகையும் தான் கெடச்சுது.

சின்ன பொண்ணா இருந்தப்ப வீட்ல வந்து அழுவேன். எங்களுக்கு தெரியாம அம்மா அழுவாங்க.

வளர வளர கொஞ்சம் கொஞ்சமா நிதர்சனம் என்னனு புரிய ஆரம்பிச்சுது.

அப்படியே அது வெறுப்பா மாறிடுச்சு. ஆம்பளைங்க மேலேயே வெறுப்பு வந்துச்சு. உங்கள பாக்கற வரைக்கும் அப்படித் தான் இருந்தேன். நான் உங்கள நம்பறேன். எனக்கு இதுவே போதும். வேற எதுவும் புதுசா எனக்கு வேண்டாம் ரிஷி. எந்த உறவும் வரவேண்டாம்.

பசி வேளைல கெடைக்காத சாப்பாடு , விருந்து சாப்பிட்ட பிறகு கிடைச்சு என்ன பிரயோஜனம்.?” அவள் கலங்கினாள்.

ரிஷிக்கு அவளின் வேதனையை தாங்க இயலவில்லை.

அவளை நிமிர்த்தி, “உங்க அப்பா கிட்ட கெடைக்காத அன்பை நானே சேர்த்து கொடுக்கறேன். நீ எதுக்கும் கலங்க கூடாது.” அவளது உச்சியில் முத்தமிட,

“ம்ம்”

அவளை அந்த மூடிலிருந்து மாற்ற, தன் பிரச்சனையை முன்னுக்கு வைத்தான்.

“அது சரி இதே ரூல்ஸ் எனக்கும் உண்டு தெரியும்ல. எங்க அம்மாக்காக இன்னொரு தடவை பேசாத. சரியா?” எனவும்,

அவனை நிமிர்ந்து முறைத்து பார்த்து, “இதுவும் அதுவும் ஒன்னா” என்றாள்.

“ அதை விடு. நாளைக்கு நீயும் நானும் இங்க இருக்கற பெருமாள் கோயிலுக்கு போய் கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லி கேட்போம். ஈவினிங் போலாம் அப்போ தான் அந்த அர்ச்சகர் கிட்ட  கொஞ்சம் டீடெய்லா பேச முடியும்.” கூலாக சொல்லிக் கொண்டிருந்தான்.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“யார் கிட்டயும் சொல்லாமலா? இல்ல ரிஷி. அவசரப் படாதீங்க.” குழம்பிப் போனாள்.

“யார் கிட்ட சொல்லணுமோ அவங்க கிட்ட நான் பேசிக்கறேன்.”

“உங்க அம்மா கிட்டயா?” கண்கள் மின்ன அவள் கேட்க,

“ஆமா உங்க அம்மா கிட்ட.” ‘உங்க’ வில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

“எங்க அம்மா இப்போ இதப் பத்தி பேசற நிலைமைல இல்ல. அவங்க ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க.” மீண்டும் அங்கு நடந்து கொண்டிருக்கும் நிலமை கருத்தில் வர, அதை ரிஷி கலைத்தான்.

“ எப்போ பேசணும்னு எனக்குத் தெரியும். நீ கவலை படாத. நாளைக்கு நீ மேகி மாதிரி டக்குனு ரெடி ஆகி கோயிலுக்கு வரணும்.” அவளது நெற்றியை முட்டினான்.

“புரிஞ்சு தான் செய்யறீங்களா ரிஷி. இப்போ நம்ம ரெண்டு வீட்டுலயும் பேசறது சரியா வராது.”

 

“அஞ்சு, நீ தான் என் பொண்டாட்டி. நான் தான் உன் புருஷன். இது நமக்குள்ள எப்போ நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?” ரிஷி அவளை பழைய நினைவிற்குள் தள்ள,

“ஞாபகம் இல்லாமலா.. இத்தனை நாளா அந்த நினைவுகளோட தான் வாழ்ந்துட்டு இருந்தேன். என்ன டெஸ்ட் பண்றீங்களா?” அவனை முறைக்க,

“இல்ல..சும்மா சொல்லு.” கண்ணை சிமிட்டி அவளிடம் கேட்க,

அவர்கள் அப்போது தங்கியிருந்த வீட்டில் ஒரு நாள்,

மாலை ஆபீசிலிருந்து வந்த அஞ்சலி, வீட்டிற்குள் நுழைந்ததும் ஹாலில் அருகில் இருந்த ரிஷியின் அறையை பார்த்துக் கொண்டே, ஹாலிலிருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டில் ஏறினாள்.

அவனது அறை சாத்தியே இருந்தது.

‘எங்க போய்ட்டாரு? ஒரு வேளை படிக்கராறோ!’ யோசித்துக் கொண்டே படி ஏற, ரிஷியோ மாடியில் இருந்த அவளது அறையைத் தாண்டி மொட்டை மாடியில் நின்று அவள் வீட்டிற்குள் நுழைவதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடியில் மொத்தம் மூன்று அறைகளும் கூடவே ஓபன் பால்கனி போல இந்த இடமும் இருந்தது.

ஒவ்வோர் அறையிலும் இரு பெண்கள் தங்கியிருக்க, இவளும் ரம்யாவும் ஒரு அறையில் இருந்தனர்.

எல்லோரும் காலையில் வேலைக்குச் சென்று இரவு தான் திரும்புவர். அஞ்சலிக்கு மட்டும் மாலையே வேலை முடிந்து விடுவதால், முதல் பஸ்சிலேயே வந்து விடுவாள்.

அன்று அப்படி சீக்கிரம் வர, ரிஷியோடு மாலையில் காபி அருந்தலாம் என்று தேடினாள்.

அவர்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு இருவரும் காலையும் மாலையும் ஒன்றாக காபி அருந்துவது வழக்கமாகிப் போனது.

அவள் அறைக்குள் நுழையும் சமயம் அவளது கையைப் பிடித்து இழுத்தான். ஒரு நொடி திக் என்று ஆனது அவளுக்கு.

“என்ன பயந்துட்டியா ?” அழகாக சிரிக்க,

“பின்ன பயப்படாம. யாரும் இல்ல வேற, இப்படி சடனா புடிச்சு இழுத்தா என்னனு நினைக்கறது. என்ன இங்க இருக்கீங்க? கீழ படிச்சிட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன்.” அறையின் கதவைத் திறந்து உள்ளே உடமைகளை வைத்து விட்டு வந்து நின்றாள்.

“காய போட்ட துணி எல்லாம் எடுக்க வந்தேன். அப்பறம் உங்க லேடீஸ் கும்பல் வந்துடும். அதுனால சீக்கிரமே வந்து எடுத்துட்டு போய்டறேன். அப்போ தான் நீ வரத பாத்தேன். உன்கிட்ட பேசலாம் வெய்ட் பண்ணேன்.”

“பொண்ணுங்க இருந்தா அங்க வர மாட்டீங்களா?” நக்கலாகக் கேட்க,

“ஆமா, அவங்க கண்ணுல பட்டா அவங்க கண்டிப்பா நம்மள பத்தி கமென்ட் பண்ணுவாங்க. அதுனால தான் வரதில்ல.”

“இல்லனா மட்டும் தெரியாதா. பொண்ணுங்க கொஞ்சம் டவுட் வந்தாலும் ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணி கண்டுபிடிச்சுடுவாங்க. அவ்வளோ டேலேன்ட். நம்ம கதை இங்க இருக்கற மீடி அஞ்சு பேருக்கும் தெரியும்.” சாதாரணம் போல சொல்ல,

“அது சரி, இன்னும் எங்க அங்கிள்க்கு தெரியாது. தெரிஞ்சா மொதல்ல போய் எங்க அம்மா கிட்ட சொல்லிடுவாரு.” அவர்கள் தங்கி இருப்பது ரிஷியின் தூரத்து உறவுக் காரர் இல்லம் தான். மாடி போர்ஷனை வேலை செய்யும் பெண்களுக்கு ஒதுக்கி இருந்தார். வீட்டிலேயே அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து அதற்கும் சேர்த்து காசு வாங்கிக் கொள்வார்.

“இது வரை அவருக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் உங்க அம்மா கிட்ட சொல்ற வேலை உங்களுக்கு இல்லனு நெனச்சுக்கோங்க. சரி என்ன பேசணும். விஷயத்துக்கு வாங்க.” சுற்றி வளைக்காமல் கேட்டாள்.

“உன்கிட்ட சாரி இருக்கா?

“இல்லையே! எதுக்கு கேட்கறீங்க?

“நாளைக்கு நீ சாரி கட்டனும்.” உத்தரவிட்டான்.

“ஐயோ! ரிஷி எனக்கு அதெல்லாம் கட்டத் தெரியாது.” பின்வாங்கினாள்.

“நாளைக்கு ஒரு விசேஷம்.”

“அங்கிள் வீட்லையா?

“அடியே! அவர் வீட்ல விசேஷம்னா உன்னை ஏன் நான் புடவை கட்ட சொல்றேன். நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.”

“வாவ்..ரிஷி. அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே” கைகுலுக்கினாள்.

“ம்ம்..” கையை உதறியவன்,

“நீ நாளைக்கு எனக்குத் தரப் போற கிஃப்ட், நான் உன்னை புடவைல பாக்கறது தான். புரிஞ்சுதா!” அஞ்சலியை செல்லமாக மிரட்ட,

“ஹல்லோ சார்.. கிஃப்ட் எல்லாம் நாங்களா பாத்து குடுக்கறது தான். இப்படி மிரட்டி வங்கக் கூடாது. அப்பறம் முக்கியமான விஷயம் என்னனா, என்கிட்டே புடவையும் கிடையாது. சோ வேற கிஃப்ட் கேளுங்க..முடிஞ்சா சாங்ஷன் பண்றேன்.” கையைக் கட்டிக் கொண்டு ஓரப் பார்வையில் அவனிடம் சொன்னாள்.

 

“ நீ சாங்க்ஷன் பண்றியா. மவளே..இப்போவே கடைக்கு போய் ஒரு புடவை வாங்கற. நாளைக்கு காலைல நான் உன்ன சாரில தான் பார்க்கணும். எனக்கு வேற எந்த கிஃப்ட்டும் வேண்டாம். அங்கிள் வர மாதிரி இருக்கு. நான் வரேன். முகம் கழுவிட்டு கீழ வா காஃபி போட்ருவாரு. குடிக்கலாம்.” என்று விட்டு கீழே சென்றான்.

“முடியாது முடியாது” என கத்தினாள் ஆனால் அதை அவன் சட்டை செய்யவே இல்லை.

அவன் சொன்னபடி கீழே வந்தவள், டைனிங் டேபிளில் இருந்த காபியை  தன் க்ளாஸ்சில் ஊற்றிக் கொண்டு, ஹாலில் வந்து அமர்ந்தாள்.

ரிஷியும் அவளைக் கண்டுகொள்ளதவன் போல அங்கிளுடன் ஹாலில் அமர்ந்திருக்க, டிவி ஓடிக்கொண்டிருந்தது.

கண் ஜாடையில் அவன் அவளுக்கு டிவியில் வந்த புடவை விளம்பரத்தைக் காட்டினான்.

அவளும் கண்ணை மூடிக் கொண்டு முடியாது என்று தலையாட்டினாள்.

அதைப் பார்த்துவிட்ட அந்த அங்கிள், “என்னம்மா தலையாட்டிட்டு இருக்க?” என்றதும்,

வாயை மூடிக் கொண்டு ரிஷி சிரித்தான், அவனை ஒரு நொடி முறைத்தவள்,

“ஹீ ஹீ… ஒண்ணுமில்ல அங்கிள், கண்ணை மூடி காஃபில இருந்து வந்த வாசனையை ஸ்மெல் பண்ணி பாத்துட்டு இருந்தேன். நல்லா இருக்கு அங்கிள். என்ன காபி இது.” அவசரமாக சமாளித்தாள்.

“இது என் ப்ரெண்டோட காபிதோட்டத்துல இருந்து வரவேச்சது. அவன் இங்க வரப்பலாம் எனக்குன்னு குடுத்துட்டு போய்டுவான்.”

“ரொம்ப நல்லா இருக்கு” என மீண்டும் சொல்லி டிவியில் கவனம் செலுத்தினாள்.

ரிஷியும் அஞ்சலியும் ஒரு சேர எழுந்தனர். இருவரும் கிச்சன் சின்க்கில் க்ளாஸ்சை போடும் சாக்கில் அங்கே செல்ல,

“மாட்டுனியா..” ரிஷி சிரித்தான்.

“உனக்கு சிரிப்பா இருக்கா, இதுக்காகவே நாளைக்கு சாரி கெடையாது.ம்ம்ம்..” முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

பின் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர ஆரம்பிக்க, ரிஷி தன் அறையில் புகுந்து கொண்டான். அவனுக்கு பரிட்ஷை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.

அவனுக்குத்  தெரியா வண்ணம்  அஞ்சலி கடைக்குச் சென்று சிவப்பும் பிங்க்கும் கலந்த ஒரு அழகிய நிறத்தில் ஒரு ஜார்ஜெட் புடவையை வாங்கி வந்தாள். அதற்கு மேச்சிங்காக ரெடிமேட் ப்ளவுசை தேட, அந்த கடையிலேயே ஒரு மணி நேரத்தில் ப்ளவுஸ் தைத்துக் கொடுப்பதாகச் சொல்ல,  இருந்து அதையும் தைத்து வாங்கிக் கொண்டே சென்றாள்.

ரம்யா அதற்குள் வந்திருக்க,

“எங்க டி போன?” உரிமையுடன் கேட்க,

“சாரி வாங்க.” புன்னகைத்தாள்.

“அட..சாரி யா? என்ன விசேஷம்? கொடு அதை..” என சாரியை பிரித்தபடியே கேட்க,

“நாளைக்கு அவருக்கு பிறந்தநாளாம். சாரி கட்டி பார்க்கணும்னு சொன்னாரு. அதான்.” வெட்கப்பட்டு சொன்னாள்.

“வாவ்.. அஞ்சு…சூப்பர் கலர். உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும். அதுவும் மெல்லிசான ஜார்ஜெட். அள்ளுது போ. ப்ளவுசும்  தெச்சுட்டியா.. அப்போ நாளைக்கு கலக்கல் தான். சார் பிளாட் ஆகப் போறாரு.” கிண்டல் செய்தாள் ரம்யா.

“வாங்கிட்டேனே தவிற, எனக்கு புடவை கட்டத் தெரியாது ரம்மி. உனக்குத் தெரியுமா?” கவலையாக அவளைப் பார்க்க,

“இங்க ஒரு ப்ரோஃபஷனல் இருக்கறப்ப ஏன் கவலபடற. நான் கட்டி விடறேன்.” அஞ்சலியின் நெஞ்சில் பாலை வார்த்தாள்.

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு ரிஷிக்கு போன செய்தாள். அதற்காகவே காத்திருந்தவன், உடனே எடுக்க,

“மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ரிஷி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எடுத்ததும் வாழ்த்தினாள்.

“தேங்க்ஸ் டார்லிங். நான் கேட்டது ரெடியா?” அதிலேயே நின்றான்,

“உங்களுக்கு நான் வேற கிஃப்ட் வெச்சிருக்கேன்” அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து மறைத்தாள்.

“ப்ச்ச்… போடி.. என்னை டிஸ்ஸப்பாயிட் பண்ணிடல்ல..”குரலில் கோபத்தைக் காட்ட…

“அடடா..உடனே கோவத்த பாரு. நாளைக்கு காலைல உங்களுக்காக பக்கத்துல இருக்கற கோயில்ல நான் வெய்ட் பண்றேன், உங்கள பாத்துட்டு தான் நான் ஆபீஸ் போவேன். ஏழு மணிக்கு வந்துடுங்க. அப்பறம் எனக்கு லேட் ஆயிடும். ப்ளீஸ்…” என கெஞ்ச,

“ம்ம்ம் வரேன் வரேன்.. உன்ன…என்ன பண்ணலாம்..நான் என்ன உன்னை பிக்கினிலயா பாக்கணும்னா சொன்னேன், ஒரு புடவை தான டி கட்டிப் பாக்கணும்னு ஆச பட்டேன். அது கூட முடியாதுன்னுட்ட.. ரிஷி நீ குடுத்து வெச்சது அவளோ தான் டா..” தனக்கு தானே சொல்லிக் கொள்ள,

“ம்ம்.. அந்த நெனப்பு வேறயா உங்களுக்கு. எனக்கு  குர்தி டாப் ஜீன் பேன்ட் தான் கம்ஃபர்ட்டபில். . ஒவ்வொருத்தர் பத்தாயிரம் …இருபதாயிரம்னு புடவை ரேட் சொல்றாங்க.உங்களுக்கு அந்த  செலவு மிச்சம் தானே.  பட்ஜெட் போட்டு வாழனும். அப்புறம் பின்னாடி நமக்கு சேவ் பண்ணனும், பிள்ள குட்டியெல்லாம் படிக்கணும், அதுங்களுக்கு கல்யாணம் பண்ணனும்…” சொல்லிக்கொண்டே போக,

“வோ..வோ… ஸ்டாப்… நீ நைட்டி மட்டுமே போட்டுக்கம்மா… ரொம்ப மிச்சம் பண்ணலாம். ஒரு புடவைன்னு சொன்னதுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து என்னை அதுக்குள்ள கிழவனாக்கிட்ட.. இன்னிக்கு இதுவே போதும். போய் தூங்கு. நான் சாரி பத்தி மறந்துட்டேன்.” குறைபட்டுக் கொண்டான்.

“ஹா ஹா… குட் நைட் ரிஷி..” என சிரித்தாள்.

“குட் நைட்..” உறங்கச் சென்றான்.

காலையில் அவனுக்கு முன்னரே கோவிலுக்குக் கிளம்ப வேண்டுமென்று ஐந்து மணிக்கே ரம்யாவை தொல்லை செய்ய ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு ப்ளவுசை மட்டும் மாட்டிக் கொண்டு உள்பாவாடை வாங்க மறந்து விட்டதை எண்ணி வருந்தினாள். அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“ரம்யா..ரம்மி…. ப்ளீஸ் எழுந்திரு” டவலை கீழே சுற்றிக் கொண்டு வந்து நின்றாள்.

“என்னடி இப்போவேவா போக போற, பத்து நிமிஷத்துல கட்டிவிட்டுடுவேன் . ஒரு ஹாஃப் ஹவர் கழிச்சு எழுப்பு என்று போர்வைக்குள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“அதில்ல ரம்மி, உள்பாவாடை வாங்கல.. இப்போ என்ன பண்றது?”

“என்னது..!” எழுந்தே விட்டாள்.

அவளின் அதிர்ச்சியை பார்த்து அஞ்சலிக்கு கவலை வந்தது.

“அப்போ புடவை கட்ட முடியாதா.. போச்சா… ச்சே…” தலையில் கைவைத்துக் கொள்ள,

“இரு இரு… கவலை படாத, உன்கிட்ட சேம் கலர் லெக்கின் பேன்ட் இருக்குல்ல..”

“ம்ம்ம் இருக்கே!” முகத்தில் பல்ப் எறிய தன் கப்போர்டில் தேடி எடுத்தாள்.

“அதை போட்டுக்க, நான் பிரஷ் பண்ணிட்டு வரேன்!”

வந்ததும் அவளுக்கு மிகவும் நேர்த்தியாக புடவையைக் கட்டிவிட்டாள் ரம்யா.

“லெக்கின்ஸ் வெச்சு கூட சாரி கட்டலாமா ரம்யா?” முக்கியாமான டவுட்டைக் கேட்க,

“ம்ம் கட்டலாம். உள்பாவாடைய விட இதுல கட்டினா சும்மா நச்சுன்னு இருக்கும் ஷேப். ஆனா ஒன்னு, நீ பாத்ரூம்க்கு மட்டும் போக முடியாது. ஃபுல்லா கழட்டி மாட்டனும்..” என சிரித்தாள்.

“ஆமா..ல…எனக்கு ஒரு ஒன் ஹவர் தான். வந்து ட்ரெஸ் சேஞ்ச்  பண்ணிட்டுத் தான் ஆபீஸ் போவேன்.”

தன்னை ஒரு முறை அங்கிருந்த முழு நீள கண்ணாடியில் பார்க்க, ரம்யாவின் புடவைக் கட்டு கணக்கச்சிதாமாக இருப்பதை உணர்ந்தாள்.

“சூப்பரா கட்டி விட்ருக்க ரம்மி. கொஞ்சம் கூட அவந்துடும்னு தோனல. பெர்பெக்ட்டா இருக்கு” முன்னும் பின்னும் தன்னை பார்த்துக் கொண்டாள்.

பின்னர் நீண்ட அடர்ந்த  கூந்தலை எப்போதும் போல லூசாகப் பின்னி இடைக்கும் கீழே தொங்கவிட்டாள்.

“பூ தான் மிஸ்ஸிங். அவ்ளோ அம்சமா இருக்க” ரம்யா அவளுக்கு பத்து விரல்கை சொடக்கி திருஷ்டி எடுத்தாள்.

மெலிதாகப் புன்னகைத்தவள் மணி பார்க்க, ஆறு முப்பது என்று காட்டியது.


“சரி ரம்மி நான் கிளம்பறேன். ரிஷிக்கு முன்னாடி அங்க போய் அவருக்கு ஷாக் குடுக்கணும்.” அவசரமாக கிளம்பினாள்.

“இன்னிக்கு அவர் காலி தான். ஆல் தி பெஸ்ட்” வாழ்த்தி அனுப்பினாள் ரம்யா.

மேலிருந்து ரிஷியின் ரூமை எட்டிப் பார்க்க, அது இன்னும் திறக்கப் படாமல் தான் இருந்தது.

கட கடவென கீழே இறங்கி வாசல் கதவை திறந்து ஓடியே விட்டாள்.

கோயிலில் அன்று மிதமான கூட்டம் இருந்தது. ஏதோ விசேஷம் என நினைத்தாள்.

“ரெண்டு முழம் பூ குடுங்க பாட்டி ..என்ன ஸ்பெஷல் இன்னிக்கு கோயில்ல?” செருப்பை விட்டு விட்டு வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம் கேட்க,

“இன்னிக்கு கோயில்ல சாமிக்கு கல்யாண உற்சவம். அதுனால தான் பாப்பா கொஞ்சம் கூட்டம்.. அர்ச்சனை எல்லாம் இப்போ செய்ய மாட்டாங்க. சாமி கும்பிட்டு வர வேண்டியது தான். ஏழற மணிக்கு முகுர்த்தம். இருந்து பாத்துட்டு போ. நல்லதே நடக்கும்” அவளிடம் பூவைக் கொடுத்து விவரம் கூறினார்.

நல்ல நாள் தான் போல என உள்ளே சென்று ரிஷியின் வரவிற்காக காத்திருந்தாள்.

காலையிலேயே ரிஷியின் தாய் அவனுக்கு அழைத்து வாழ்த்து சொல்லி, “குளிச்சுட்டு வேஷ்டி சட்டை போட்டுட்டு கோயிலுக்கு போய்ட்டு வா” என கட்டளையிட்டிருந்தார்.

அதனால், சிகப்பு நிற சட்டையும் தன்னிடம் இருந்த வெள்ளை காட்டன் வேஷ்டியும் கட்டிக் கொண்டு புறப்பட்டான்.

ஐந்து நிமிடத்தில் கோயிலுக்கு வந்துவிட்டான்.

வாசலில் அவளது செருப்பைக் கண்டவன், ஆவலாக உள்ளே சென்று அவளைத் தேடினான்.

மறைந்திருந்து அவன் வருவதை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் அஞ்சலி.

வேட்டி சட்டையில் அவனை முதல் முறை கண்டதும், அவள் தான் மயங்கிப் போனாள்.  முழுச் சட்டையை முக்கால் கையாக மடித்து விட்டு, முடி படர்ந்த அவனது கைகளை கவர்ச்சியாகக் காட்டியது.

சொல்லமலே தனக்கு மேச்சிங்காக சட்டை அணிந்திருப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.

‘உனக்கு சப்ரைஸ் குடுக்கலானு வந்தா நீ எனக்கே சர்ப்ரைஸ் குடுத்து என்னை கொல்ற ரிஷி’ அவன் அழகில் பித்துப் பிடித்துப் போனாள்.

ரிஷி, சுற்றும் முற்றும் தேடிவிட்டு கடைசியில் கல்யாண உற்சவம் நடக்கும் இடத்தில் வந்து நிற்க, அவனது அருகில் சட்டென்று வந்து நின்றாள் அவனது தேவதை. அவனை இடித்து நிற்க, யாரிது என்று திரும்பிப் பார்த்தான்.

அசந்து போய் நின்றான். அவனுக்கு மனதிற்குள் ஏதோ செய்தது. அழகு பெட்டகமே என அவளை அங்கேயே கொஞ்சத் துடித்த கைகளை கட்டுப் படுத்தினான்.

அந்த ஜார்ஜெட் புடவை அவளது உடலோடு ஒட்டி இருக்க, அவளது நேர்த்தியான உடலழகை ரம்யாவின் கைவண்ணத்தில் நன்றாகவே ரசித்தான்.

லேசாக தெரிந்து அவளது மஞ்சள் இடை அவனை பைத்தியமாக்கியது.

நெருங்கி அவள் நிற்கையில் திக்குமுக்காடிப் போனான்.

அவளது கையிலிருந்த மல்லிகையின் மனம் வேறு சமயத்திற்கு ஏற்றார் போல வாட்டியது.

எதுவும் பேசாமல் இருவரும் ஒருவர் அழகில் ஒருவர் மயங்கி, அந்த கூட்டத்தில் ஒட்டி நின்று, மனம் முழுக்கக் காதலில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்க, அங்கிருந்த ஒருவர் அருகில் வந்து, “பூ நீங்களே எடுத்துக்கோங்க, இன்னிக்கு அர்ச்சனை எல்லாம் செய்ய மாட்டாங்க.” என்றார்.

இருவரும் அதில் சுயம் பெற, “ஓ சரி, தேங்க்ஸ்” என்றான் ரிஷி.

அந்தப் பூவை அவன் கையில் வாங்கிக் கொண்டான்.

“எல்லாரும் அப்படியே உட்காருங்க, தாலி கட்டறது எல்லாரும் பார்க்கணும்” கூட்டத்தில் ஒருவர் கத்த,  அனைவரும் அமர்ந்தனர்.

ரிஷியும் அஞ்சலியும் இருவரும் அருகருகே அமர, அஞ்சலியின் பக்கத்தில் இருந்த பெண்மணி,

“கொஞ்சம்  தள்ளு மா” என மேலும் அவளை ரிஷியின் புறம் நகரச் செய்தார்.

அவள் நகர்ந்ததில் ரிஷியின் முழங்கை அவளது இடையில் லேசாக உரசியது. இருவர் மனதும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

ரிஷி கீழே குனிந்து அவள் காதில் முணுமுணுத்தான்.

“இது கோவில்,  ஆனா நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்கற.. ஐ கான்ட் கண்ட்ரோல்”  அவனது உதடு அவள் காதில் படும்படி பேசினான்.

அவனது மீசை உரச, பெண்ணவள் துடித்தே போனாள். அதிலும் அவனது வார்த்தைகள் சிகப்பு நிறப் புடவைக்கு ஏற்றார் போல அவள் கன்னத்திலும் சிகப்பை அப்பியது.

கெட்டிமேளம் கொட்ட, இறைவனுக்கு அங்கே திருமணம் நடக்க, இங்கே இரு மனம் ஒன்றாகக் கலந்து தவித்தது.

அனைவர்க்கும் குங்கும பிரசாதம் வழங்கினர்.

அதைப் பெற்றுக் கொண்டு இருவரும் அங்கிருந்து எழுந்து சற்று காற்றாட வேறு இடத்தில் வந்து அமர்ந்தனர்.

ஒரு கையில் பூவும் இன்னொரு கையில் குங்குமமாக ரிஷி தவிக்க, அஞ்சலி கை நீட்டினாள். அதில் அவன் குங்குமத்தை வைத்தான்.

கையிலருந்த பூவை சற்றும் யோசிக்காமல் அவளைத் திருப்பி அவளது தலையிலேயே வைத்துவிட்டான்.

“ரிஷி!” அஞ்சலி அதிற,

அதற்குள் அவள் கையிலுருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியிலும் வகுட்டிலும் வைத்து விட்டான்.

அவனது செயலில் செய்வதறியாது நின்றாள்.

“இன்னிக்கு அந்த சாமிக்கு மட்டும் கல்யாணம் இல்ல, நமக்கும் தான். நமக்கு எப்போவேனா முறையா ஊருக்காக கல்யாணம் நடக்கட்டும், ஆனா இது நமக்குள்ள இன்னிக்கு நடந்த மானசீகமான கல்யாணம். புரியுதா பொண்டாட்டி” கண்சிமிட்டி அவளிடம் கேட்க,

ஏற்கனவே அவனிடம் மயங்கி நிற்கும் அவள் தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றாள்.

“புடவை இல்ல, கட்டத் தெரியாதுன்னு சொன்ன. இப்போ அழகா வந்து நிக்கற .” கண்ணை மூடி அவளை அப்படியே உள்வாங்கிக் கொண்டான்.

“உங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கனும்னு தான் சொல்லல. நேத்து நைட் தான் போய் வாங்கிட்டு வந்தேன். ரம்யா தான் கட்டிவிட்டா. எப்படி இருக்கேன்.” தலை சாய்த்து அவனிடம் கேட்க,

இந்த புடவைல நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொன்னா அது சாதாரணமா இருக்கும் அஞ்சு..”


வேற எப்படி ஸ்பெஷலா சொல்லப் போறீங்க?”


உன்னை இந்த புடைவைல அப்படியே என் மனசுல நிரப்பி வெச்சிருக்கேன். எப்போ கண்ணைமூடி உன்னை நினைச்சாலும் இந்த புடவைல தான் நீ வருவ. அவ்வளவு லட்சணமா இருக்க” இதயத்தில் கை வைத்து அவ
ன் குத்திக் கொண்டான்.

சிரித்துக் கொண்டாள்.

“ம்ம்ம் அதுவும் அப்போ உன் இடுப்பு லைட்டா என் கைல உரசுச்சே… யப்பா கரண்ட் ஷாக்க விட பவர்புல்” அச்செயலை அவன் சொல்லிக் காட்ட,

“ச்சு..இது கோயில்..” அவனை அடக்கினாள்.

“ இன்னிக்கு என் பொண்டாட்டி ஆயிட்ட, அப்போ இன்னிக்கு நைட் நமக்கு பஃஸ்ட் நைட்டா?”

“ச்சு… இது கோயில்… பேசாம இருங்க”

“என்னடி இப்போவே மிரட்ட ஆரம்பிச்சுட்ட..” அவன் அவளை ரசித்தான்.

தன் கையில் இன்னும் மீதம் இருந்த குங்குமத்தை அழகாக அவன் நெற்றியிலும் சிறு கீற்றாக வைத்தாள்.

“ஹாப்பி பர்த் டே!!”,  அவன் கன்னத்தில் அது சிறிது பட்டு சிந்தி இருக்க, அவளது புடவை நுனியால் அதைத் துடைத்தாள். அந்தப் புடவையில் அப்படியே அது ஒட்டிக் கொண்டது.

இருவரும் கணவன் மனைவியாகவே உணர்ந்த தருணம் அது.

இருவரும் வாசல் வரை ஒன்றாக வெளியே வந்தனர்.

“நீ மொதல்ல போ, நான் அப்பறம் வரேன்.” அவளை முதலில் அனுப்பினான்.

அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் வந்து சேர்ந்தாள்.

ரம்யா அவளைப் பார்த்து அசந்து நின்றாள்.

“கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்க அஞ்சு.தாலி ஒன்னு தான் இல்ல.” கேலி பேச,

“போடி” புடவையைக் கழட்டச் சென்றாள்.

“சரி சரி, நான் கிளம்பறேன், நீ டிபன் சாப்ட்டு  வா” என கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு, கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை தன்னைப் பார்க்க, அவன் வைத்த பூவும் பொட்டும் அவளை மேலும் அழகாகக் காட்டியது.

‘ஒரு வேளை ரம்யா வகுட்டுல இருந்த குங்குமத்தை பார்த்திருப்பாளோ!’ சட்டென யோசித்தவள்,

‘இல்ல..இல்ல.. பார்த்திருந்தா கண்டிப்பா கேட்டிருப்பா..’ அதை அழிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே உலவினாள்.

பின் மனமே இல்லாமல் முகத்தை கழுவிக் கொண்டு உடை மாற்றிச் சென்றாள்.

அன்று நடந்ததை அசை போட்டனர் இருவரும்.

எப்போது அவன் கைக்குள் வந்து அமர்ந்தாளோ தெரியாது. ரிஷி அவளைக் கட்டிக் கொண்டு அவளது மெத்தையில் அமர்ந்திருந்தான்.