மை ஸ்வீட் ஹேட்டர் 1

 

அத்தியாயம் 1:

              “சார் நித்யா மேம் உங்க மேல ட்வீட்டர்ல  மீ டு (#metoo) அலகேஷன் (allegation) வைச்சுருக்காங்களே அதைப்பத்தி உங்களோட பதில் என்ன? ”

              “ஹா ஹா ஹா… எனக்கு அந்த அலகேஷன் நினைச்சாலே சிரிப்பு தான் வருது. அவங்களும் நானுமே அந்த படத்தில தான் அறிமுகம் ஆனோம். அந்த படத்துக்கு புக் ஆகுறதுக்காக நான் அவங்களை காஸ்டிங்க் கவுச் பண்ணேன் அப்படின்னு சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” என்று அவன் கூறிய பதில் அங்கு கூடியிருந்த அந்த நிருபர் கூட்டத்தை  திருப்திபடுத்தவில்லை போலும்,

               “இதே கேள்வியை உங்க பேன்ஸ் கேட்டு இருந்ததுக்கு அவங்க சொன்ன பதிலை நீங்க பார்க்கலையா? இல்லை அதுக்கு உங்களால மறுபதில் சொல்ல முடியாதுன்னு கண்டுக்காம விட்டுடீங்களா?” என்று ஒரு பெண் நிருபர் கேட்க

அவனுக்கு அந்த பெண்னை பிடித்து தனக்கு எதிரிலிருக்கும் சுவரில் இரண்டு முட்டு முட்டவைக்கலாம் போன்று இருந்தது. மிக கவனமாக அதைதான் தவிர்க்க நினைத்தான் ஆனால் இந்த பெண் சரியாக அதையே கேட்டு விட அவனுக்கு கோவம் கரையை கடந்தது.

             அவன் இப்பொழுது கோபப்பட்டு ஒரு வார்த்தை இவர்களை சொல்லிவிட்டால் போதும் அவ்வளவு தான். தன்னுடைய நடிப்பிற்கே ஒரு முழுக்கு போட்டு  டாட்டா பாய் பாய் சொல்லிவிட்டு தான் படித்திருந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர்க்கு  எங்காவது மொக்கை கம்பெனியில் உட்கார்ந்து சிஸ்டமை தேமே என்று தட்ட வைத்து விடுவார்கள் என்று மூளை அறிவுறுத்தியதால் வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன் அப்பெண்னை பார்த்து புரியாத பாவனையை கொடுத்தவன்,

                   “இல்லை நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை?” என்று கூற, இன்னொரு நிருபருக்கு  அதை இவனுக்கு விம் போட்டு விளக்குவதற்கு  ரெடியாக இருந்திருப்பார் போல். விளக்க ஆரம்பித்தார்.

                 “சார் அவங்க என்ன சொல்லி இருந்தாங்கன்னா அந்த டைரக்டர் ஒரு கே அவர்கூட உங்களுக்கு இருந்த நெருக்கமான உறவை பயன்படுத்தி நித்யா மேமை உங்க ஆசைக்கு இணங்க வைச்சீங்கன்னும் நீங்க ஒரு பை செக்ஸீவல்ன்னும் சொல்லிருந்தாங்க.”

அவ்வளவு தான் முடிந்தது. அவன் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு எழுப்பி வைத்திருந்த கரை சட்டென்று உடைய அவனை அறியாமலே அவனது இடதுகை நீண்டு நடுவிரலை ஒட்டு மொத்த நிருபர் உலகத்துக்கும் காமித்து விட்டது.

                  அங்கு அடுத்தடுத்து ஏற்பட்ட அனைத்து ஆச்சர்ய குரல்களிலும் அவன் சமநிலைக்கு திரும்பாமல் இன்னும் தன் தலையிலேயே மண்ணள்ளி போட ஆரம்பித்திருந்தான்.

                 “உங்க எல்லாத்துக்கும் மூளை இருக்கு தானே? இல்லை எதுக்கு அதுக்கு வேலை கொடுத்துக்கிட்டுன்னு பெட்ரூம்லேயே கழட்டி வைச்சுட்டு வந்து இருக்கீங்களா? ஹீ இஸ் அ லெஜன்ட் டைரக்டர். அவரை காஸ்டிங்க் கவுச் அதுஇதுன்னு சொல்லி அசிங்கப்படுத்த வெக்கமா இல்லை. யார் அவ? அவர் போட்ட பிச்சையில ஹீரோயின் ஆனவ… இப்ப நம்பர் ஒன் ஹூரோயின்னா யார் மேல வேணும்னாலும் கல்லெறியலாம்ன்னு இருக்கா? அவ என்ன சொன்னாலும் நம்பிட்டு அதை கேட்க மைக்கை தூக்கிட்டு அலைய ஒரு கூட்டம்… டிஸ்கஸ்டிங்க்… அவங்களுக்கு நீதி கிடைக்கனும்னா போய் போலீஸ் ஸ்டேசன்ல கம்பளைன்ட் பண்ண சொல்லுங்க. அங்க இருக்கவங்க உங்கள மாதிரி கிடையாது அவங்க ஆதாரம் கேட்பாங்க அதை கொடுத்து ப்ரூப் பண்ணி என்னை ஜெயிலுக்குள்ள தள்ள சொல்லுங்க… அதுக்கு இடையில இப்படி சீப்பா பேசிட்டு யாராச்சும் வந்தீங்கன்னா மானநஷ்ட வழக்கு போடுவேன். ஈச் அண்ட் எவரிஒன் பே பார் இட்…. டாம்ன் இடியட்ஸ்…(each and everyone pay for it… damn idiots)”  என்று அவன் கத்துவதுடன் அந்த வீடியோ முடிவடைந்திருந்தது.

                 அந்த வீடியோவை ‘டேய் பனங்கொட்டை தலையா செய்யுற தப்பு எல்லாத்தையும் செஞ்சுட்டு எவ்வளவு திமிரா பேசுற நீ? நீ கூப்புடும் போது கேமரா வைச்சுட்டா வரமுடியும். ப்ளடி இடியட்! நீ ஆன்ஸ்கீர்ன்லயே காய்ஞ்ச மாடு கம்பகொள்ளையில பாயுற மாதிரி பாய்வ ஆப்ஸ்கீர்ன்ல என்ன என்ன பண்ணீருப்பியோ யார் கண்டா? ஹாஷ்டேக் ஜஸ்ட்டிஸ் ஃபார் நித்யா(#justicefornithya) ’ என்ற கேப்ஷனுடன் தனது முகபுத்தக கணக்கின் சுவரில் சித்தார்த் அபிமன்யு மற்றும் நிவேதா ராம்என்ற இருவரையும் டேக் செய்து பதிவிட்டாள் ஜீவிதா.

              “அடியே எருமைமாடு எப்ப பார்த்தாலும் அந்த மூஞ்சிபுக்கையை கட்டிட்டு அழுகுறீயே? கேண்டின்ல சோறு தீர போகுது போய் வேகமா கொட்டிட்டு வா தரித்திரமே…” என்று தனது உயிர்தோழி நிவியின் குரலில், கைப்பேசியில் இருந்து பார்வையை அவளை நோக்கி திருப்பியவள் ஒரு மார்க்கமாக சிரித்து வைத்தாள்.

                    “ச்சீ இப்ப ஏன் இவ்வளவு அசிங்கமா சிரிக்குற? நீ இப்படி சிரிக்கும் போது இனிச்சு கிடக்கு…”

                    “ஹா ஹா ஹா… ஒன்னுமில்லை மச்சி. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் நீ அதுவரை உன் மூஞ்சிப்புக்கை மேஞ்சுக்கிட்டு இரேன்.” என்று கூறியவாறு ஜீவிதா எழுந்து ஒடிவிட

                   அவள் சொல்லி சென்ற அடுத்த நொடியிலிருந்து டொய்ங்க்… டொய்ங்க்… என்று இடைவேளி இல்லாமல் அழைத்துக்கொண்டிருந்த மார்க் மாமாவின் தயாரிப்பை திறந்து பார்த்தாள்.

                    எல்லாம் இந்த ஜீவிதாவின் கைங்கரியம் தான். அவள் தன் போக்கிற்கு கொளுத்திபோட்டு விட்டு போயிருக்க அங்கு அது வெடித்துக் கொண்டிருந்தது.

                “அடி நன்னாரிநாயே… என்ன வேலை டி பார்த்து விட்டு போயிருக்க?” என்று நிவி திட்டிக்கொண்டிருக்கும் போதே, கையில் உணவு தட்டுடன், அடக்கப்பட்ட சிரிப்புடன் அறையினுள் நுழைந்தாள் ஜீவிதா.

                “தெல்லவாரி தரித்திரமே… உன்னை எல்லாம் உங்க அம்மா பிறக்கும் போதே கள்ளிப்பால் ஊத்தி கொன்னு இருந்தா இன்னைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா…”

                     “ஹா ஹா ஹா… என்னை ஏன் கொல்லனும்? உங்க ஹீரோ அந்த வீணாப்போன விடியை (VD) கொன்னு இருந்தா கூட இந்நேரம் பல பொண்ணுங்களோட வாழ்க்கை காப்பாத்தப்பட்டு இருக்கும்…”

                     “அவன் தான் தப்பு பண்ணான்னு உனக்கு தெரியுமா? நீயா போய் லைட் பிடிச்சிட்டு இருந்த? நாயே… தேவையில்லாம பேசாதே… அவன் தப்பு பண்ணிருந்தா போய் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது தானே? அது தானே என் டார்லிங்கும் சொல்லுறான். அதுக்கு வக்கு இல்லை. தூக்கிட்டு வந்துட்டாளுக ஜஸ்டிஸ் ####ஸ்ன்னு… மரியாதையா இந்த போஸ்ட்டை அழி. இல்லை சாவடிச்சிருவேன் உன்னை.”

                   “என்ன இதுக்கு நான் அழிக்கனும்? முடியாது.”

                    “ஓஹ்… அந்த அளவுக்கு போயாச்சா? போன மாசம் சைபர் கிரைம்ல கம்ப்ளைண்ட் ஆகி நீயும் உன் அன்பு தோம்பியும் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைஞ்சு விடி பத்தி பேசவே மாட்டோம்ன்னு கால்ல விழுந்து கதறுனது மறந்துப் போச்சா? டார்லிங்க்…”

                 “ஹே… அடங்கு டி… அது போன மாசம். இது இந்த மாசம். அண்ட் மோர் ஒவர் இது ஒரு பெண்ணா நான் செய்ய வேண்டிய ஜனநாயக கடமை டி என் சிப்ஸீ…”

                “ஒ அப்படி வரீங்க… ரைட்டு நாளைக்கு காலைக்குள்ள உன்னோட இந்த ஐடியை இல்லாம ஆக்கல நான் விடியோட ஆர்மி இல்லை டி.” என்று நிவி சூளுரைக்க,

              அதை தூசிப்போல் தட்டிவிட்டவள் “திருத்தம் விடி ஆர்மி இல்லை சைக்கோ தி விடி ஆர்மி அப்படின்னு சொல்லு. இது மாதிரி இன்னும் 7 ஐடி வைச்சிருக்கேன். என்னோட ஃபைவ் கே (5k followers page) பாலோவர்ஸ் பேஜையே சைக்கோ பேன்ஸ் நீங்க ஒவர்நைட்ல ரிப்போர்ட் அடிச்சு காலி பண்ணப்பவே கன் மாதிரி நின்ன இன்டலெக்சுவல் டி நானு… இது என்ன வெறும் 2k டோலர்ஸ் டோலிகள் இருக்க ஐடி… நீ வெட்டுன உடனே விழுறதுக்கு நேத்து பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான்னு நினைச்சியா நீ வெட்டவே முடியாத ஆலமரம் டி…” என்று அண்ணாமலை ரஜினிக்கே டப் காம்படிசன் கொடுக்கும் அளவிற்கு பஞ்ச் டையலாக்குகளை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தாள் ஜீவிதா.

           ஜீவிதா சென்னையில் புகழ்ப்பெற்ற கலை கல்லூரியில் மூன்றாம் வருடம் இளங்கலை ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேசன் படிக்கும் இருபது வயது குட்டி முயல். அழகு என்று வர்ணிக்க அப்படி ஒன்றும் பெரிதாக இல்லாததால் அதை ஜாய்ஸ்ல் விட்டுவிட்டு அவளது லட்சியத்திற்கு போவோம்.

அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதிலிருந்து தொலைக்காட்சி பெட்டியில் மூச்சே வாங்கமால் நா பிறழாமல் கடகடவென்று அன்றைய செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளர் ஆகவேண்டும் என்பது தான் அவளது  லட்சியம்,கனவு, ஆசை எல்லாம்.

            இப்பொழுது செய்தி வாசிக்க வரும் பெண்களை பார்த்துவிட்டு இந்த இரண்டு வருடங்களில் அவளது கனவு அப்டேட்டாகி இருந்தது அம்மணிக்கு. அந்த அப்டேட்டடு வெர்ஷன் என்னவென்றால் முதலில் செய்தி வாசிப்பாளர் ஆகி, அடுத்து சீரியல் ஹீரோயினாக ஒரு சீரியல் நடித்து அதற்கு பின்பு பிக்பாஸ் ஷோவில் பங்குப்பெற்று அதன் மூலம் ஆண்டவருக்கு செல்லபிள்ளையாகி அவரது கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவாக ஆக வேண்டும் என்பது தான்.

             அவளது பிறப்பிடம் படபடப் பட்டாசுக்கு பெயர் போன இடமான சிவகாசி. கதிரேசன் சிவகாமி தம்பதியரின் ஒரே ஒரு தவப்புதல்வி தான் அம்மையார் ஜீவிதா. கதிரேசன் அரசு பள்ளி கணக்கு வாத்தியராக இருந்து தற்போது ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர். தாய் சிவகாமி அழகுகலை நிபுணர். சிவகாசியிலே ஐந்து கிளை அழகுநிலையம் வைத்திருக்கும் வுமன் என்டர்பியூனர்.

              ஜீவிதா ஆசைபட்டது அனைத்துமே அவளது கையில் தவளவைக்க நினைக்கும் டிபிகல் பெற்றோர். ஒரே ஒரு பெண் என்பதால் இருவரிடமே செல்லம் அதிகம் தான்.

              அவளது எந்த முடிவிலுமே அவர்கள் இதுவரை தலையிட்டதே கிடையாது. பதினைந்து வயதில் தன் உடன் படிக்கும் மாணவனுடன் காதல் வயப்பட்டிருக்கேன் என்று தைரியமாக தன் தந்தையிடம் நெஞ்சை நிமிர்த்து சொன்னபொழுதும் இது காதலிக்கும் வயதா என்று கேட்கவில்லை. அடுத்து இரண்டே மாதத்தில் கண்கள் நீர் கரைக்கட்ட தாயின் இடுப்பை கட்டிக்கொண்டு எனக்கும் அவனுக்கும் பிரேக் அப் ஆயிடுச்சு என்று அழுகும் போது இது எல்லாம் காதலா என்று கேட்கவில்லை.

          அவள் காதலிக்கிறேன் என்றபோது வரைமுறையோடு காதலிக்க சில அறிவுரைகள் மட்டும் கொடுத்தார் அவளது தந்தை. அவளது காதல் தோல்வி அடையும் போது ஆறுதல் படுத்தி இதெல்லாம் பாஸிங்க் கிளவுட்ஸ் என்று நிதர்சனத்தை கூறினார் அவளது தாய்.

         ஜீவிதா இப்படி தான் அவளுக்கு தளும்பி மனதை நிறைக்கும் சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்ள தனது தந்தை வேண்டும்.  கரையை உடைத்துக்கொண்டு வரும் சோகத்தை பகிர்ந்துக்கொள்ள தனது தாய் வேண்டும்.

                ஜீவிதா சந்தோசபடும் போது ஆர்பரிப்பார்கள். அவள் தவறுகளின் தளைகளில் சிக்கி தவிக்கும் போது கரம் கொடுத்து அவளை மீட்டு நல்வழிப்படுத்துவார்கள். மொத்தத்தில் குழந்தைகள் தங்கள் மூலம் உலகை வந்தடைந்தவர்கள் தானே தவிர தங்களின் கனவுகள் கோப தாபங்களை சுமக்க வந்தவர்கள் அல்ல என்று புரிந்துக்கொண்டவர்கள்

                                         ***

              

வியர்வை ஆறாக பெருகி வழிந்து அந்த நெடு நெடுமாறன் அணிந்திருந்த கருப்பு நிற ஆர்ம்கட் பனியனை நனைத்து அவனின் சிக்ஸ்பேக் கட்டுடலை கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருக்க  ட்ரேட் மில்லில் வேகமாக ஒடிக்கொண்டிருந்தவனோ தனது நிலையில் இல்லை.

           அவன் இதில் ஒடிய நேரத்துக்கு கூகுள் மேப்பை கையில் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி ஒடிருந்தால் இந்நேரத்துக்கு  குறைந்தது நான்கைந்து முட்டு சந்துகளில் முட்டி இருந்தாலும் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சென்றிருப்பான்.

                    தனக்கு எதிரிலிருப்பவன் தயங்கி தயங்கி கூறும் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தவன் மனமோ உலைகளமாக கொதித்து கொண்டிருந்தது.

           “இன்னைக்கு மார்னிங் சேது கால் பண்ணிருந்தார். நம்மளோட படத்தை எந்த தியேட்டர்லயும் வாங்கலையாம். சோ ரீலிஸ் டேட் தள்ளி போடலாமா இல்லை ஒடிடி பிளாட்பார்ம்ல போடலாமான்னு உங்ககிட்ட கேட்க சொன்னாங்க. லேட் ஆச்சுன்னா நமக்கு தான் ப்ராப்ளம் இதுல நம்மளோட எல்லா லிக்யூட் கேஷ் அண்ட் கடன் வாங்குன பெரிய தொகை எல்லாம்  போட்டு இருக்கோம் விடி. ரீலிஸ் ஆன தான் நம்மளால இன்னும் ஒரு மாசத்துல கடனை திருப்பி கட்ட முடியும். இல்லாட்டி அவன் எதாவது கோர்ட்டுல கேஸ் போட்ருவான். ”

       “அப்புறம் நிவாஸ் அவரோட அடுத்த படத்துல இருந்து உங்களை வெளியேத்த சொல்லி ப்ரொடியூசர் ரொம்ப பிரஸர் கொடுக்குறார்ன்னு சொன்னார்… இந்த இரண்டு நாளில் நாலு படத்துல இருந்து…” என்று அவன் கூறி நிற்பாட்ட, சட்டென்று இயந்திரத்தின் இயக்கத்தையும் தன்னுடைய ஒட்டத்தையும் நிறுத்தியவன் அதிலே அமர்ந்தான்.

             சத்தியமாக அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஒன்றா இரண்டா எட்டு வருடங்களாக அவன் கஷ்டப்பட்டு சம்பாரித்து வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பெருந்தொகை என்று அனைத்தையும் இதில் தான் கொட்டியிருக்கிறான். ஆரம்பிக்கும் போதே அகலகால் என்று தெரிந்தது தான். ஆனால் அந்த படத்தை மிகவும் நம்பியிருந்தான். கிட்டதட்ட நூறுகோடி பட்ஜெட் பீரியாட்டிக் பிலிம். திரையில் வெளியிட்டால் கண்டிப்பாக வெற்றி படம் தான். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,

                       நித்யா அவளை நினைத்தாலே உடலே பற்றி எரிவது போன்று இருந்தது. அவளை எதாவது செய்தே ஆகவேண்டும். இல்லையெனில் அவனால் கண் மூடி பெயரளவிலான உறக்கம் உறங்க கூட முடியாது போன்று இருந்தது.

                        “கரண் அவளை எதாவது பண்ணனும்? என் காலுல விழுந்து மன்னிச்சிரு என்னை விட்ரு அப்படின்னு கதறனும் கரண். இல்லாட்டி என்னால நிம்மதியா சாப்பிட கூட முடியாது. ஹூ இஸ் ஷி? சீப் தர்ட் கிரேடு ##### அவள். என்னையே போட்டு பார்த்துட்டா இல்ல…”

              “விடி ப்ளீஸ் காம் டவுன். அவ என்ன நடக்கனும்னு நினைச்சு உங்க மேல அலகெஷன் வைச்சாளோ அதை தான் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க… உங்க கோவத்துல தான் அவ ஜெயிச்சிட்டு இருக்கா விடி. அவ பயங்கரமா பிளான் பண்ணி அடிச்சி இருக்கா சரியா படம் ரீலிஸ் டேட் சொல்ல போற விழாவுக்கு முதல் நாள் இப்படி ஒரு பொய் சொல்லி உங்க கோவத்தை தூண்டி விட்டு நீங்க கதறனும்னு. அதுகேத்த மாதிரியே நீங்க மிடில் பிங்கர் காமிச்சது எவ்ளோ பெரிய முட்டாள் தனம் தெரியுமா விடி?” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே தனக்கு அருகிலிருந்த தண்ணீர் பொத்தலை அந்த கரணின் கால்களை நோக்கி  விட்டெறிந்தான் போன வாரம் வரை தமிழக பெண்களின் கனவு கண்ணன். இயக்குனர்களின் முதல் தேர்வு… தயாரிப்பளார்களின் வசூல் ராஜா விஜய் தேவ்கன்.

                    கண நேரத்தில் அவனது தாக்குதலை உணர்ந்து, சிறிது விலகி தன்னை வழிநடத்தும் கால்களை பாதுகாத்து கொண்டான் கரண்.

            “த்தூ… வெளிய போடா இடியட்….” என்று விடி கத்த தப்பிச்சோம் பிழைச்சோம் என்று வெளியேறி இருந்தான் அவனின் மேனேஜர், உதவியாளன், சிகை அலங்காரன் என்று ஒன்றுக்கு மூன்று பதவிகளை வகிக்கும் கரண்.

          “இவன்கிட்ட வேலைப்பார்க்குறதுக்கு ஒரு நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம். வேலையை விட்டு போலாம்னு பார்த்தா முட்டாள் தனமா பத்து வருசத்துக்கு எவனாச்சும் கான்ட்ராக்ட் போடுவானா? அதுல கொஞ்சம் கூட யோசிக்கமா எந்த முட்டாள் பையனாச்சும் கையெழுத்து போடுவானா? ஆனால் நான் போடுவேன். வேலை இல்லாம திரிஞ்சப்ப வேலைன்னு ஒன்னு கிடைக்குதேன்னு ஒரு கையெழுத்து போட்டு…..” என்று புலம்பியவாறு பெருமூச்சு விட்டவன் அந்த இயக்குநரிடம் மீண்டும் கெஞ்சி பார்க்கலாம் என்று சென்றான்.

                 ***