மை ஸ்வீட் ஹேட்டர் 2

அத்தியாயம் 2:

 

ஜி.என்(GN) தொலைக்காட்சி நிறுவனம்…

            அந்த மீட்டிங் ஹாலில் சிறு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அந்த இடம் அவ்வளவு அமைதியாக இருந்தது. கடந்த ஒரு மணிநேரமாக ஜி.என் அலைவரிசையின் C.E.O அந்த அலைவரிசையில் வரும் சீரியல்களை தவிர அனைத்து நிகழ்ச்சிகளின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை அழைத்து ஜி.என் ஏன் கடந்த இரு மாதங்களாக கடும் பின்னடவை கண்டுள்ளது என்று கேட்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டு கேப்பையை நட்டிருக்க அந்த அறை அமைதியாக இருந்தது.

             “நீங்க எல்லாம் சேர்ந்து என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோன்னு எனக்கு தெரியாது எனக்கு என் சேனல் மறுபடியும் முதல் இடத்துக்கு வரனும். அதுக்கு ஐடியா சொல்லுங்க? புது ஷோவோ, பழைய ஷோல அடுத்த சீசனோ இல்லை வேற லாங்குவேஜ் பார்த்து காபி பண்ற ஷோவோ எதுவா இருந்தாலும் சரி. ” என்று சிம்ம குரலில் கட்டளை இட்டுக்கொண்டிருந்தான் கார்த்திக் ஸ்ரீநிவாஸ்.

கார்த்திக் ஸ்ரீநிவாஸ் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்று இருக்கும் இருபத்தியொன்பது வயது இளைஞன். தன் தந்தை ஸ்ரீநிவாஸ்ஸின் இழப்பிற்கு பின்பு, அதாவது நான்கு வருடத்திற்கு முதல் இந்த நிறுவனத்தை, தான் எடுத்து நடத்த ஆரம்பித்தான். தொடக்கத்தில் கொஞ்சம் இங்கிருக்கும் பாலிட்டிக்ஸ் புரியாமல் சில அடிகள் வாங்கினாலும் சிறிது காலங்களில் புரிந்துகொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் தனது சேனலை முதலிடத்தில் இருக்க வைத்தான். ஆனால் இப்பொழுது இல்லை அதற்கு காரணம்  அவர்களின் ரைவல் S தமிழில் தற்பொழுது ஒளிப்பரப்பப்படும்  பல புதுவகையான பிரமாண்ட நிகழ்ச்சிகள்.

இவன் இப்படி முதலில் வரவேண்டும் என்று துடிப்பதற்கான காரணம் என்னவென்றால் Sதமிழ் சேனலை நடத்துபவர் ஒரு பெண். அதுவும் இளவயது பெண். அதனால் அவளிடம் தான் தோற்றுவிடக்கூடாது என்னும் டிபிகல் ஆண் ஈகோ.

முழுதாக பத்து நிமிடங்கள் கடந்தும் யாரும் பேசவே இல்லை. உண்மையை சொல்ல போனால் யாருக்கும் எதுவும் தோணவில்லை. ஆடல்,பாடல்,நாடகம்,காமெடி, சமையல்,பொதுஅறிவு,கல்வி என்று இருக்கும் அத்தனை துறைகளிலும் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. இதில் எங்கிருந்து ஒரு புதுவிதமான ஐடியாவை கொடுப்பது. பற்றாகுறைக்கு நேரம் இரவு எட்டு மணி வேறு. எப்பொழுதடா வீட்டுக்கு போவோம் என்று தான் இருந்ததே தவிர யாருக்கும் மூளை யோசிக்க தயாரகவில்லை.

பிரபலமான ஷோக்களின் இயக்குநர்கள் ஒவ்வொருவரின் முகமாக பார்த்துக்கொண்டு வந்த கார்த்திக் வெறுத்துவிட்டான். என்ன டா இது? என்பது போல். அப்பொழுது ஒரு பெண்ணின் முகத்தை கவனித்தான். அப்பெண் எதோ சொல்ல துடித்துக்கொண்டிருந்தாள். ஆனால் மிகவும் தயக்கத்திலிருந்தாள். இவளை இதற்கு முன்பு பார்த்த ஞாபகமில்லை . யாருடைய ஆசிஸ்டென்ட் ஆகவும் இருப்பாள் என்று நினைத்துக்கொண்டவன்,

“பிங்க் டாப்… உங்களை தான்… என்ன சொல்லனும்?” என்று கேட்க, அந்த பிங்க் டாப் பெண்ணோ தயக்கத்துடன் எழுந்து நின்றாள். அவள் பூஜா.

“சார் அது வந்து…”

“ம்ம்… சொல்லுங்க?” என்று கார்த்திக் ஊக்க அனைவரது கவனமும் பூஜாவை நோக்கி திரும்பியது.

“ஓரு ரியாலிட்டி ஷோ ஐடியா தான். நான் இப்ப பார்த்த கொரியன் சீரிஸ்ல வந்தது. லைக் பிக்பிரதர் மாதிரி…”

  “அதுவே நம்ம தானே போடுறோம். இன்னும் நாலு மாசத்துல அடுத்த சீசன் வர போகுதுல. பிக்பிரதர் போட்டுட்டா தன்னாலே நம்ம பக்கம் தான் டி.ஆர்.பி. அதுக்கு முன்னே சீர் செய்யனும்னு தானே கேட்குறார்.” என்று இசை நிகழ்ச்சியின் இயக்குநர் கூற, அவரை ஆயாசமாக பார்த்தாள் பூஜா.

‘அண்ணே என்னை முதல் என்னை பேசவிடுணே…’ என்று பவானி மாடுலேஷனின் தனக்குள் டையலாக்கை போட்டவள் அவரை பார்த்தாள்.

“வெயிட். அவங்க சொல்லி முடிக்கட்டும்.” என்று அவரை அடக்கிய கார்த்திக் இப்ப சொல்லு என்று பூஜாவை பார்க்க பேச ஆரம்பித்தாள்.

“அதாவது என்னான்னா ஒரு பேமஸ் யங் ஏஜ் ஹீரோவும் அவனுடைய ஹேட்டரையும் ஒரே வீட்டுல பிக்பிரதர் மாதிரி ஸ்டே பண்ண வைச்சு அவங்களோட ஹேட் டூ லவ் டிராவல் பார்க்குறது. லைக் ஏ பிடிக்காத இரண்டு பேரை மேரேஜ் பண்ணி வைக்குறது மாதிரி தான்.”

“ஹான். இது எல்லாம் ஒத்தே வராது சார். கலாச்சார காவலர்கள் கேஸ் போடுவாங்க.” என்று ஒருவர் கூற,

 “யெஸ். நம்ம பிக்பிரதர் ஷோ முதல் சீசன் ஆரம்பிச்சப்ப ரொம்ப நிறைய எதிர்ப்பு. கலாச்சார சீர்கேடு ப்ளா… ப்ளான்னு எவ்வளவு? ஆனால் அதுனால நமக்கு கிடைச்ச ரீச் எனாமரஸ். முதல் சீசன் முடியும் போது அவ்வளவு நல்ல பீட்பேக் அண்ட் டோட்டல் தமிழ்நாடே நம்மள பத்தி தான் பேசிட்டு இருந்தது இல்லையா? இப்ப பிக்பிரதர் தமிழ்நாட்டு மோஸ்ட் வியூ அண்ட் ஹையஸ்ட் டி.ஆர்.பி ஷோ. முதல் சீசன்ல கையை பிடிச்சதே கலாச்சாரம் சீர்கேடுன்னு பொங்குனவங்க இப்ப கட்டிபிடிக்குறது முத்தம் கொடுக்குறது எல்லாம் அன்போட வெளிப்பாடா பார்க்குறாங்க.”

“ஓக்கே… தட்ஸ் குட் ஐடியா… இப்ப அதுக்கு யார் பிரபலமான ய்ங் கல்யாணமாகாத ஹீரோ வருவா? பிகாஸ் பிஸியான ரொம்ப பேமஸ் பிப்பிள் இதுல்ல எல்லாம் கலந்துக்க மாட்டாங்க. நாமா பிக் பி ஷோவே ஃபீல்டு அவுட் ஆன பிப்ள்ஸ் வைச்சு தானே பண்ணிட்டு இருக்கோம்.” என்று கார்த்திக் கூற,

அதை ஆமோதித்த பூஜா, “இதான் இந்த ஷோல இருக்க ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். காஸ்டிங்க் நல்லா அமைச்சுட்டா இட்ஸ் எ பிக் ஹீட் ஷோ அண்ட் ட்ரெண்ட் செட்டர் ஆகிரும்.” என்று கூறியவள்

 “எனக்கு இந்த சீரியல் பார்க்கும் போதே ஞாபகத்துக்கு வந்தது விடி தான். நம்மளோட நல்ல நேரமோ அல்லது விடியோட கெட்ட நேரமோ இப்ப அவருக்கு  நித்யா கொடுத்த அலேகேஷனும், அவர் மீடியாவை கேவலப்படுத்துற மாதிரி செய்ஞ்சதும் அவரை அவரோட கெரியர்ல எட்ஜ்ல நிற்க வைச்சு இருக்கு. இதை நாம யூஸ் பண்ணிக்கலாம். ” என்று பூஜா கூற அவளை வியந்து பார்த்தான் கார்த்திக்.

“விடியை ஹேட் பண்ணுற பொண்ணுங்க கூட இருங்காங்களா என்ன தமிழ்நாட்டுல? இப்ப ஹேட் பண்ணுறவங்க எல்லாம் ஆண்ட்டிஸ் தான். பிகாஸ் நித்யா அலேகேஷன்.” என்று ஒருவர் கேட்க, பூஜாவின் வதனம் சிரிப்பை பூசிக்கொண்டது. கண்களில் குறும்பு மின்னியது.

“யெஸ் ஒருத்தி இருக்கா… என் சிஸ்டர் பிரண்ட். அவளை தெரியாத விடி பேன் இருக்கவே முடியாது. மே பீ அவளை விடிக்கு கூட தெரிஞ்சு இருக்கலாம். போன மாசம் கூட அவரை ரொம்ப கலாய்ச்சதுக்கு விடி சென்னை ரசிகமன்ற தலைவி அவ மேல சைபர் கிரைம்ல புகார் பண்ணிருந்தாங்க. போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து ஒரு மாசம் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தா. இப்படி தொக்கா ஒரு மேட்டர் சீக்குனா சும்மா விடுவாளா? Fb முழுக்க நேத்துல இருந்து அவளோட அராஜகம் தான். நிறைய பேக் ஐடி வைச்சிருக்கா. விடி ஆர்மி எல்லாம் சேர்ந்து அவளோட எத்தனை ஐடியை ரிப்போர்ட் அடிச்சு தூக்கி விட்டாலும். மறுநாளே புது ஐடில வந்து கலாய்ப்பா…” என்று பூஜா கூற கூற அந்த அறையில் இருந்த அனைவருக்கும் சுவாரசியமாக இருந்தது.

“இன்ட்ரஸ்டிங்க்… பெயர் என்ன?”

 “ஜீவிதா. ஃபைனல் இயர் ஜர்னலிசம் அண்ட் மாஸ்கம்யூனிகேசன். அவளோட லட்சியத்துல ஒன்னு நம்ம பிக்பி ஷோல கலந்துக்கிட்டு ஆண்டவருக்கு செல்ல பிள்ளை ஆகனும்ன்றது தான். விடி கூட அப்படின்றதுனால முடியாதுன்னு சொல்லுவா முதல். அப்புறம் ஒக்கே சொல்லிருவா…” என்று பூஜா உற்சாகமாக கூற, அவளது உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.

“நான் விடி மேனேஜர் கரண்கிட்ட மார்னிங்க் பேசுறேன் சார். அவங்களுக்கும் இப்ப வேற ஆப்ஷன் இல்லை. பட் மணி கொஞ்சம் டிமாண்ட் பண்ணுவாங்கன்னு நினைக்குறேன்.” என்று பூஜா உதவி இயக்குநராக பணிபுரியும் இயக்குநர் கூற,

அதை ஆமோதித்த கார்த்திக் பூஜாவை பார்த்து, “நீங்க தான் இந்த ஷோவோட டைரக்டர்…” என்று கூற,

அவள் அவனை ஆவென்று பார்த்தவள் “இல்லை சார். வேண்டாம். எங்க சார் பண்ணட்டும்.” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே அவளது கையை பிடித்திழுத்து அவளது பேச்சை தடை செய்த அவளின் இயக்குநர்

“பூஜாவே பண்ணுவாங்க கார்த்திக்.” என்று கூறியவர் அவளை பார்த்து புன்னைகையோடு தலையசைக்க அவளது சிரமும் சரி என்று ஆடியது.

“உங்களுக்கு டீம் ரெடி பண்ணிக்கோங்க. செட் எப்படி வேணும்னு ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்கிட்ட சொல்லிருங்க. பேப்பர்ஸ் நான் பார்த்துக்குறேன். உங்களுக்கு டூ டேய்ஸ் டைம் தாரேன் கம்ப்ளீட் ஸ்கீர்ப்ட் உடன் வாங்க. காங்கிராட்ஸ் மிஸ்…”

“பூஜா சார்…”

“காங்கிராட்ஸ் பூஜா!” என்று வாழ்த்திவிட்டு கார்த்திக் கிளம்பிவிட அனைவரும் பூஜாவை வாழ்த்திவிட்டு அவளிடம் ட்ரிட்க்கு அடியும் போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

பூஜா தனது கேபின்ற்கு வந்தவள் தன்னுடைய பொருள்களை எடுத்துக்கொண்டே தனது தங்கைக்கு அழைத்தாள். முதல் அழைப்பிலேயே நிவேதா எடுத்துவிட,

“என்ன டி ஒரே ரிங்க்லேயே போனை எடுத்துட்ட?”

“ப்ரொடிகல் சன் (prodigal son) பார்த்துட்டு இருந்தோம் நானும் ஜீவியும்… சொல்லு என்னத்துக்கு டிஸ்டர்ப் பண்ண? நல்ல சீன் பொணம் வாய்க்குள்ள இருந்து பாம்பு வந்துச்சு. மால்கம் வந்து அது எப்படின்னு சொல்றதுகுள்ள கூப்பிட்டுட்ட…”

 “நான் ஒரு கொரியன் சீரியல் பாருங்க டின்னு சொன்னா மட்டும்   ரெண்டு பேரும் கிளாஸ் இருக்கு… அசைமெண்ட் இருக்குன்னு சீன் போட வேண்டியது இங்கிலிஷ், துருக்கி சீரிஸ் மட்டும் உட்கார்ந்து பார்க்க வேண்டியது… எமிரா இதி???”

“எக்கா… உனக்கு இப்ப என்ன வேணும்? நல்ல சீன்ல வந்து கட்டையை கொடுத்துட்டு இருக்க… நீ சொல்றது எல்லாம் ஒரு சீரிஸ் அதை நாங்க பார்க்க? எல்லாம் ரோம் காம் (ROM-COM) . இரத்தம் தெறிக்க தெறிக்க நாலு சீன் வந்தா தான் எங்களால எல்லாம் பார்க்க முடியும். அதிலயும் கொரியன்ல யாரு ஹீரோ யாரு ஹீரோயின்னு கண்டுபிடிக்கிறதே பெரும் பாடா இருக்கு. ஒடிப்போ…” என்று நிவியின் கரத்தில் இருந்த ஸ்பிக்கரில் போடப்பட்டிருந்த அலைப்பேசியை வாங்கி ஜீவிதா பேசிக்கொண்டிருந்தாள்.

 “ஹே என் உயிரை நீயா பேசியது? என்ன டி இப்படி சொல்லுற? என்ன ஹாட்டா இருக்கானுங்க?”

“நான் தான் பேசுனேன் பூ அக்கா… நல்ல சீன்ல வந்து டிஸ்டர்ப் பண்ணுற பூ அக்கா . நீ ஒரு கொரியன் கன்னி. உனக்கு என்ன சொன்னாலும் புரியாது. சரி இப்ப எதுக்கு கால் பண்ணி கழுத்தை அறுத்துக்கிட்டு இருக்க அதை சொல்லு முதல்ல…” என்று ஜீவிதா கேட்க, அதற்கு சிரித்த பூஜா

“ஓரு நல்ல செய்தி அண்ட் ஒரு கெட்ட செய்தி சொல்ல தான் கால் பண்ணேன்.”

“சொல்லு அக்கா…” என்று இருவரும் கோரசாக கேட்க

“உங்க ஹாஸ்டலுகிட்ட இருக்க ஐஸ்கீரிம் பார்லர் வாங்க. சொல்லுறேன்.”

“ஹே மணி எத்தனைன்னு தெரியுமா? ஒன்பதாக இன்னும் ஒன்பது நிமிஷம் தான் இருக்கு. இப்ப எல்லாம் வெளியே போனும்னு  எங்க வார்டன் சொர்ணாக்கா கிட்ட போய் நின்னா தும்பை பூவில தூக்கு மாட்டிக்கிட்டு சாகுற அளவுக்கு மானங்கேடா கிழிப்பா… அதுனால வர முடியாது.”  என்று மூச்சு வாங்காமல் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் நிவி.

“ச்ச்சீ… தெண்ட கருமாந்திரமே. கொஞ்சம் மூச்சு விட்டுத்தொலை. நல்லகுடி நாணயம் மாதிரி சீன் போடாம எப்பயும் நைட் ஷோக்கு எப்படி சுவர் எகிறி குதிச்சு இரண்டு பேரும் போவீங்களோ அப்படி குதிச்சு வாங்க வானரங்களா…”

“ஏக்கா… இப்ப நாங்க திருந்திட்டோம். அப்படி எல்லாம் பண்றது இல்லை. வீ ஆர் கம்ப்ளிட்லி டிசண்ட் நௌ(we are completely decent now…)”

“எதே நீங்களா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். போன வாரம் தான் போய் மிட் நைட் ஷோ கர்ணன் பார்த்துட்டு வந்தீங்கன்னு நியூஸ் வந்துச்சு. பிராடுகார நாய்களா. இன்னும் அரைமணி நேரம் டைம். வேகமா வாங்க. பாய்…” என்று கூறிவிட்டு அவர்கள் மறுமொழி சொல்வதற்குள் அழைப்பை துண்டித்திருந்தாள் பூஜா.

“ஹே நாம போனது எப்படி பூக்கு தெரியும்?” என்று நிவி கேட்க,

“பூ அக்கா இங்கே எதோ ஸ்பை வைச்சு இருக்குன்னு நினைக்குறேன். சரி வா நாம போலாம்.” என்று ஜீவிதா கூற இருவரும் பின்பக்க சுவர் ஏறி குதிக்க ஆயத்தமாயினர்.

நிவியும், ஜீவியும் அரைமணிநேரத்திற்கு ஐந்து நிமிடத்திற்கே முன்னேயே வந்து பூஜாவிற்காக காத்துக்கொண்டிருக்க சரியாக அரைமணி நேரத்திற்கு வந்தாள் பூஜா.

அவள் விழிகள் அவர்களை தேடி அலைப்பாய பூஜா வந்தவுடனே கண்டுகொண்டவர்கள் “ஹே பூ இங்கே…” என்று அழைக்க அவர்களிடம் விரைந்தாள் பூஜா.

அவள் நெருங்கியவுடனே வேகமாக அவளை எழுந்து அணைத்துக்கொண்டாள் ஜீவிதா. அவளுக்கு பூஜா என்றால் உயிர். இங்கு கல்லூரி வந்த பின்பு தான் நிவேதா பழக்கம். அவளுடைய அக்கா என்று ஐந்தரை அடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை எதோ ஒரு விதத்தில் ஞாபகப்படுத்தும் பூஜாவை பார்த்தவுடனே ஜீவிதாவிற்கு பிடித்துவிட்டது.

அதுவும் பூஜா பழகும் குணம் அவளை மிகவும் கவர்ந்திழுத்தது. பிறந்ததிலிருந்தே உடன்பிறப்புகள் இல்லாமல் தனியாக இருந்தவளுக்கு நிவி மற்றும் பூவின் உரையாடல்கள்,பாசம் என்று அனைத்தும் அவளுக்கு புதிதாகவும் கவரும் விதத்திலும் இருக்க பூஜா அவளின் ‘கோ டூ பர்ஷன்’(go to person!)  ஆகிப் போனாள்.

 பூஜாவும் ஜீவிதாவை அணைத்துக்கொள்ள, “அக்கா உன்னை பார்த்து எத்தனை நாள் ஆயிருச்சு? மிஸ் யூ பூ… லவ் யூ… ஐ வானா ஹக் யூ பார்எவர் பூ…” என்று ஜீவிதா பிதற்ற,

“ஐ டூ மிஸ் யூ பேபிமா… லவ் யூ சோ மச்…” என்று பூவும் கொஞ்ச, நிவேதாவிற்கு  இவர்கள்  இருவரையும் எதாவது தீவில் விட்டுவிடலாம் என்று தோன்றியது.

“ச்சீ… கிரிஞ் பண்ணாம வந்து உட்காருங்க டி. இப்ப தானே ஒன் வீக் முன்னாடி பார்த்தீங்க. லவ்வர்ஸ் தோத்து போயிருவாங்க உங்க அக்கப்போர்ல.” என்று நிவி கலாய்க்க, அங்கு ஒரு ஜீவனே இல்லாது போன்று இன்னும் இரண்டு நிமிடம் கிரிஞ் செய்து விட்டு தான் அமர்ந்தார்கள்.

“என்னமே குட் நியூஸ் பேட் நியூஸ் சொன்னீயே அது என்ன?” நிவி

“ஹான் அதுவா. முதல் குட் நியூஸ்…”

“சொல்லு பூ அக்கா…”

“எனக்கு ஒரு ரியாலிட்டி ஷோ டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு.” என்று கூற இருவரும் தங்களது இடத்தில் இருந்து எழுந்து பூவை கட்டிக்கொண்டனர்.

“ஹே சூப்பர்…”

“ரொம்ப ஹாப்பி அக்கா…” என்று எப்பொழுதும் போன்று சம்பிராதய வாழ்த்துகள் நன்றி நவிலள்கள் முடிந்து ட்ரீட் கேட்டு வம்பு செய்து விட்டு பேட் நியூஸ் என்னவென்று கேட்க,

“அது வந்து ஜீவி நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். என் வாழ்க்கையே உன் கையில தானிருக்கு” என்று பூ கூற

“ஹே என்ன அக்கா? என்ன பிரச்சனை சொல்லு? யாரா இருந்தாலும் நசுக்குன்னு நசுக்கி தூக்கி எறிஞ்சுருவோம்…” என்று ஜீவி கூற,

அதை ஆமோதித்த நிவி “என்னன்னு சொல்லு பூ? நாம பார்க்காத பிரச்சினையா?”

தன் கரங்களை பற்றியிருந்த ஜீவியின் கரங்களை பற்றிக்கொண்ட பூ “இந்த ரியாலிட்டி ஷோல நீ விடியோட கலந்துக்கனும் ஜீவி. ” என்று பூஜா கூற,

பூஜாவின் வாயிலிருந்து வந்து விழுந்து தன் செவிகளை அடைந்த ஒலி உண்மைதானா அல்லது தனது பிரம்மை எதுவுமா என்று அறிந்துக்கொள்ள பூஜாவின் முகத்தை மீண்டும் கூர்ந்து பார்த்தாள் ஜீவிதா.

                        ****

 

   

               “சுசீந்திரன் உங்களுக்கு நான் பணம் கொடுக்குறேன்னு சொன்ன நாள் வர இன்னும் சாலிடா ஒரு மாசம் இருக்கு. அதுக்கு முன்னேயே வந்து பணம் வேணும்னு கேட்டா நான் என்ன பண்றது சுசீந்திரன் சொல்லுங்க?” என்று தனக்கு சம்மந்தமே இல்லாத பொறுமையை இழுத்து பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான் விடி.

இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த கரணுக்கோ நேரம் செல்ல செல்ல திகிலாக இருந்தது.

இவனிடமும் விடி எதாவது இடக்கு மடக்காக பேசிவிட்டால் என்ன செய்வது? என்ற பயத்திலே சோபாவின் நுனியில் அமர்ந்திருந்தான் கரண்.

“என்ன பண்ண முடியும்ன்னு எங்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும். உன்னோட இந்த படம் ரீலிஸ் ஆகுறதே கஷ்டம்ன்னு பேசிக்கிறாங்க. இதுல நீ கமிட்டாகி இருந்த பாதி படத்துல இருந்து உன்னை தூக்கிட்டாங்கன்னு வேற பேசிக்குறாங்க. ”

“மரியாதை கொடுத்து பேசுங்க சுசீந்திரன். போ, வா ன்னு பேசுறீங்க? நான் என்ன உங்க வீட்டில பண்ணைக்கா வேலை பார்த்துட்டு இருக்கேன்.” என்று விஜய் உஷ்ணமாக சட்டென்று நிலைமையை கையிலெடுத்த கரண் சுசீந்திரனிடம் என்னேன்னமோ பேசி தாங்கள் சொன்ன தேதிக்கே பணத்தை வாங்குவதாக ஒப்புக்கொள்ள வைத்தான்.

விஜய் எதுவும் பேசமால் இருவருக்கும் இடையை நடக்கும் பேச்சு வார்த்தையை கவனித்தாலும் கவனிக்காத மாதிரி கையில் இருந்த அலைப்பேசியில் தலையை நுழைத்தவாறு சோபாவில் அமர்ந்துக்கொண்டிருந்தான்.

“உன் வார்த்தையை நம்பி இப்ப போறேன். நீ சொன்ன தேதிக்கு வருவேன். அப்ப என் பணம் வராட்டி வேற சுசீந்திரனை பார்ப்ப…” என்று கரணை பார்த்து கூறியவன்,

விஜய்யை நோக்கி கோணல் சிரிப்பை உதிர்த்தவன் “இதுக்கு தான் வாய் இருக்குன்னு கண்ட இடத்துல வைக்க கூடாதுன்னு சொல்றது. இல்லாட்டி இப்படி தான் அசிங்கப்பட்டு நிக்கனும்.” என்று கூறிக்கொண்டே வெளியேற விஜய்க்கு அவனை கொன்று போடும் ஆத்திரம் வந்தது.

அவனை நோக்கி போகப்போனவனை தடுத்த கரண் அமைதிப்படுத்தி அமரவைத்தான் கரண். அப்பொழுது அவன் அலைப்பேசி அழைக்க எடுத்து பேசியவனின் முகம் யோசனையை தத்து எடுத்தது.