மோகனகள் பேசுதடி!06(2)

****

சின்ன மகனிடம் தன் பேச்சு தோல்வியில் முடிய, பெரிய மகனிடம் பேச்சை ஆரம்பித்தார்.

அப்போது தான் வேலை முடித்து அயர்வுடன் வந்த மகனைப் பிடித்துக் கொண்டார் மஞ்சுளா.

“அருண்!”

“சொல்லுங்க ம்மா”

“உனக்கு நாங்க ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கலாம்னு இருக்கோம் டா” சிறிய குரலில் சொல்ல,

“யாரை கேட்டு முடிவு பண்ணீங்க?”

“உனக்குக் கல்யாணம் பண்ணி பார்க்க எங்களுக்கு உரிமை இல்லையா?”

“ம்மா, நான் தான் கல்யாணம் வேணாம்னு சொல்றேன்ல விடமாட்டீங்களா?”அருண் தேவ் அன்னையிடம் கோபமே உருவமாய் கத்தினான்.

“இப்போ சம்மதிக்க போறியா இல்லையா டா?”

“முடியாது மா. என்னால என்னோட இந்துக்கு துரோகம் செய்ய முடியாது”

“ஏன் டா அண்ணனும் தம்பியும் இப்படி இருக்கீங்க? உங்களைப் பெத்ததுக்கு சாகும்போது கூட நிம்மதியா சாக முடியாது போல” புலம்ப,

“போதும் மா. இப்போ எதுக்கு தம்பியை இதுல இழுக்குற?”

“பின்ன, நீயும் கல்யாணம் பண்ணிக்க மாட்ட, அவன் என்னென்னா கல்யாணம்ன்ற பேச்சை எடுத்தாலே கொரில்லா கத்துற மாதிரி கத்துறான்” சின்ன மகனையும் சேர்த்து வைத்துத் திட்ட,

அருணோ” நான் மேரிட் மா. எனக்கு மனைவினா அது இந்து மட்டும் தான் மா. அதை ஞாபகத்துல வைங்க” கர்ஜனையான குரலில் கூறியவன் வீட்டிலிருக்க பிடிக்காமல் வெளியே சென்றுவிட்டான்….

அடுத்த நாள் விடியலில் விஷ்வா ட்ராலியுடன் வெளியே வர, அருணும் அவனோடு வெளிவந்தான்.

பார்த்திருந்த மஞ்சுளாவிருக்கு மகன்கள் இருவர் மீதும் அப்படியொரு கோபம் வந்தது. ஆனாலும் அமைதியாகத் தான் நின்றிருந்தார்.

அனைத்து பெட்டிகளும் கீழே வந்துவிட, ஒவ்வொன்றாய் எடுத்துக் காரில் வைக்கலானான்.

அனைத்தும் எடுத்து வைத்தவன், அன்னையின் முன்பு நிற்க அவரோ முகத்தைத் திருப்பினார்.

“அம்மா நான் போய்ட்டு வரேன் மா” மகன் கூறவும் அன்னை பொங்கிவிட்டார்.

“ஏன் பா, போய்ட்டு வரேன்னு சொல்ற போறேன்னு சொல்லு. நீங்கத் தான் போனா திரும்ப வரமாட்டீங்களே” காட்டமாக மொழிய, விஷ்வா ஏதும் பேசாதது மௌனித்தான்.

“ம்மா, என்ன பேசுறீங்க நீங்க?” அருண் தமையனுக்காக முன் வந்து பேச, விஷ்வா அண்ணனின் கையைப் பிடித்துப் பேச வேண்டாம் என்று சைகை செய்தான்.

“ப்லைட் ஏறுறதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேருக்கும் கொல்லி வச்சிட்டு போய்டுங்க டா” அன்னை கூறவும் மகன்கள் இருவரும் திடுக்கிற்றனர்.

“ம்மா” ஒருசேர கத்த,

“மூச், நீங்க ரெண்டு பேரும் பண்றது எங்களுக்கு எத்தனை வலிய குடுகுதுன்னு தெரியுமா டா” என்றவரை “மஞ்சு மா வேணாம் டா. பாவம் பசங்க” மனைவியைக் கணவன் அடக்கப் பார்க்க, அவர் எப்போதோ தன் கட்டுப்பாட்டை மீறி இருந்தார்.

“பெரியவனாது அவனோட மனைவியை மறக்கக் கஷ்ட படுறான்னு சொல்லலாம். உனக்கு என்ன டா வந்துச்சி, நீ எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற? நீ என்ன நினைக்குறன்னு வாயைத் திறந்து சொல்லு “சிறிய மகனைப் பார்த்து ஏவுகணைபோல் கேள்வி எழுப்ப, விஷ்வா பதில் பேசாது மௌனித்தான்.

எல்லா நேரங்களிலும் மௌனமே பிரச்சனைகளுக்கு விடையாகாதே. அதே தான் இங்கேயும் நடந்தது.

ஒரு மனிதனை உள்ளத்தால் தாக்கக்கூடிய பெரிய ஆயுதம் மௌனமே. கத்தியின்றி ரத்தமின்றி ஒருவரை கொல்ல கூட இதற்குச் சக்தி இருக்கே. பல நேரங்களில் மௌனம் பல பிரச்சனையிலிருந்து காத்திருக்கலாம். ஆனால் அது எல்லா இடங்களிலும் சரிவராது. ஒரு நேரம் இல்லையெனில் ஒரு நேரம் பிரளயத்தை உண்டு பண்ண தான் செய்யும்.

இவர்களது மௌனம், அன்னையின் பொறுமை எரிமலையாய் வெடித்து சிதறவைத்தது.

“பேச மாட்டிங்கள, சரி அப்போ நீங்க இனி என்கிட்ட பேசத் தேவை இல்ல டா.இன்னைக்கு தான் நான் உங்ககிட்ட கடைசியா பேசுறது. இனி ஒருவார்த்தை உங்ககிட்ட பேசப்போறது இல்ல”தன் இத்தனை கால மன வேதனையைக் கொட்ட தொடங்கினார்.

அருணின் புறம் தன் பார்வையை செலுத்தியவர்,” உன் மனைவி கோழைத்தனமா செத்து போனா. ஒரு மாமியாராவா நான் அவகிட்ட நடந்துக்கிட்டேன். ஒரு அம்மா போல தான அவளைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டேன். யாரோ ஏதோ சொன்னாங்கன்னு மகராசி நிம்மதியா செத்துபோய்ட்டா. போறவ சும்மா போயிருக்கலாமே, எதுக்கு டா கடைசி ஆசையா உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைங்க அத்தைன்னு சொல்லிட்டு போகணும். அதுனால தான இப்படி உன் கழுத்த பிடிச்சு தொங்க வேண்டியதா இருக்கு. அப்புறம் நீ “எனச் சின்ன மகனின் புறம் திரும்பியவர்,” உனக்கு நாங்க என்ன டா குறை வச்சோம். நீ செய்யற எந்த ஒரு விஷயத்துக்காவது நாங்க தடையா முட்டுக்கட்டையா இருந்துருப்போமா டா. திடீருன்னு வெளிநாட்டுக்கு போறேன்னு வந்து நின்ன, உன்ன யாரும் இங்க தடுக்களையே.போனவன் போனவனாவே இருந்தா எப்படி டா ? உன்னையெல்லாம் பார்க்கணும்னு ஒரு பெத்தவளுக்கு ஆசை இருக்காதா சொல்லு. ஆனா நீ என்ன பண்ண, எங்களைக் கெஞ்ச விட்ட. இது தான் நீ பெத்தவளுக்கு கொடுக்கிற மரியாதையா விஷ்வா”அவரது பேச்சு இப்போது கோர தாண்டவம் எடுத்திருந்தது. யாராலயும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது போல் அவர் பேச்சு இருந்தது.

“பிள்ளைகளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்ற பெத்தவங்கள நட்டாத்துல விட்டுடுறீங்க டா. என்ன பெருசா கேட்டுட்டோம் ஒரு கல்யாணத்தை பண்ணி சந்தோஷமா வாழுங்கன்னு தான சொல்லுது. ஏதோ கொல பண்ண சொல்ற மாதிரி வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. பெத்தவங்க மட்டும் எல்லாத்தையும் தியாகம் பண்ணி உங்களுக்காக வாழனும். ஆனா நீங்க ஒரு விஷயத்தைக் கெஞ்சாத குறையா கேட்டா, அது நீங்கப் பெத்த கடமை செஞ்சி தான் ஆகணும்னு சொல்றது. உங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யுற பெத்தவங்களை, எத்தனை பசங்க டா கண்ணும் கருத்துமாய் பார்த்திக்கிறாங்க. நூத்துல ஒரு பங்கு கூட இருக்காது. உங்களோட ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேத்திக்க நாங்க வேணும். நாங்க ஏதாவது கேட்டா கத்தி விட்டுப் போறது. எங்களை ஜடம்னு நினைச்சுடீங்க இல்ல. அப்படியே இருந்துக்கோங்க டா” என்று மஞ்சுளா ஆக்ரோஷத்துடன் பேசப் பேச இரு மகன்களும் கழிவிரக்கம் கொண்டு தலை கவிழ்ந்தனர்.

“அருண் உனக்காக உன்னோட பொறுப்பை அவன் பார்க்கமாட்டான் விஷ்வா. நீ பாக்குறதுனா பாரு இல்லை அந்த ஸ்கூல் எப்படியோ போகுது. இனி அருண் அவன் பொறுப்புள இருக்கிற சாக்லேட் பேக்டரிய மட்டும் தான் பார்ப்பான். அப்புறம் உங்க ரெண்டு பேரையும் இனி கலயாணத்துக்காகக் கெஞ்ச போறதில்லை. நீங்க எப்டியோ போங்க” விட்டொதியாகப் பேசியவர் கணவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிட்டார்.

இரு மகன்களும் போகும் அன்னையை தவிப்போடு பார்த்திருந்தனர். அது மட்டுமே அந்த நேரத்தில் அவர்களால் செய்யமுடிந்தது. அன்னை பேசிச் சென்றதை இவர்கள் உள்வாங்க முயற்சித்து கொண்டிருந்தனர். படப் படப் பட்டாசாய் இத்தனை கால மனவேதனையை கொட்டிவிட்டார் மஞ்சுளா. அவரும் எத்தனை காலம் இவர்களைப் பிடித்துக் கெஞ்சிக்கொண்டு இருப்பார். அதான் இன்று ஒரேடியாக வெடித்து விட்டார்.

இனி இவர்களின் முடிவு இவர்கள் கையில்…