மோகனங்கள் பேசுதடி!02

eiY0CU848860-26a95421

மோகனம் 02

காலையில் எப்போதும் போல் தூங்கி எழுந்த அருவி, தன் பக்கத்தில் தனது கையை இறுக பிடித்தப்படி உறங்கிக்கொண்டிருந்த தன் மகளைக் கண்டு புன்னகைத்தாள் அருவி.

மகளின் நெற்றியில் அவள் தூக்கம் கலையாதவாறு மென்முத்தமொன்றை பதித்த அருவி, அவள் கையை உருவ முயன்றாள்.

குழந்தையோ சிணுங்கி,” நோ நோ “என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

“அம்மு நீ தூங்கு டா.மம்மிக்கு வேலை இருக்கு”என்று கூறி மெதுவாகக் கையை அகற்றிக்கொண்டாள்.

கையை எடுத்ததுமே சின்னவளின் முகம் சுருங்கி தெளிந்தது.

உடனே படுக்கையை விட்டு எழுந்தவள், மகளை விரிந்த விழிகளோடு ஏறிட்டாள்.

“எல்லா விஷயமும் அப்படியே அவன மாதிரியே பண்றாளே இவ? இது எப்படி சாத்தியமாகும்?அவனை மாதிரியே இவளுக்கும் கன்னத்துல ஒத்த குழி விழுகுதே” குழம்பி போன மனநிலையுடன் அருவி அப்படியே நிற்க, விழி வந்து கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்து விட்ட அருவி,” சொல்லு விழி?”என்க

“உன்ன அந்தாளு கூப்பிடுறாரு க்கா”சிடுசிடுத்த முகத்துடனே சொல்ல,

“என்ன பேச்சு இது, அப்பாவை மரியாதை இல்லாம பேசுறது” கண்டிப்புடன் சொல்ல,

“அவரு நம்மளை என்னைக்காவது மதிச்சு இருப்பாரா? ஆனா நான் மட்டும் மரியாதை கொடுத்துப் பேசணுமோ, எது கொடுக்கப்படுதோ அது தான் திரும்பக் கிடைக்கும் க்கா”

“இந்த மாதிரியெல்லாம் பேசக் கூடாது விழி”

“பரவால்ல இருந்துட்டு போகட்டுமே.நீ சீக்கிரமா கிளம்பி வா” என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் அருவி தந்தையின் முன்பு நின்றிருந்தாள். அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் செய்தித்தாள் படிப்பதில் கவனத்தை வைத்திருந்தார்.

“அப்பா” மெல்லிய குரலில் அழைக்க,

“உன்ன கூப்டு எவ்ளோ நேரமாச்சு.சட்டுனு மேடமால வர முடியாதோ?” கோபமாய் கேட்டார்.

“கொஞ்சம் தூங்கிட்டேன் பா” பயந்த குரலில் அவள் சொல்ல, அவளை இளகாரமாய் பார்த்த சந்தானமூர்த்தி,”இப்போ நீ என்ன வெட்டி முடிச்சுட்டேன்னு தூங்குற, உன்னால இந்த குடும்பம் இப்போ அடுத்த வேல சோத்துக்கு என்ன பண்றதுனு தெரியாம முழிக்குது.இதுல உனக்கு தூக்கம் ஒரு கேடா” மென்மையான மனம் கொண்டவளை வதைக்க தொடங்கினார்.

“என்னங்க” என்று சமயலறையிலிருந்து வேகமாக வந்த சந்திராவை பார்வையாலே அடக்கினார் மூர்த்தி.

“எப்போ நீ பொறந்தியோ அப்போ புடிச்சது எனக்கு சனி. எங்க போய் தொலைச்சாலும் விட்டுப் போகவே மாட்டேங்கிது. இப்போ உனக்கு என்ன கேடுன்னு மாப்பிள்ளை கிட்ட இருந்து விவாகரத்து வாங்கியிருக்க? உன்னால அவரு மாசம் மாசம் கொடுத்துட்டு இருந்த பணத்தை இப்போ நிப்பாட்டிட்டாரு. உன்னால இன்னும் நான் எவ்வளவு தான் அசிங்க படணுமோ தெர்ல”

தந்தை தன்னை அவ்வளவு பேசியும் அவள் அமைதியாகத் தான் நின்றிருந்தாள். இதை எல்லாம் கேட்டிருந்த விழிக்கு தான் அத்தனை கோபம் வந்தது.

“எப்படி நீங்க அக்காவ பார்த்து இப்படி பேசுறீங்க?அக்காவ பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்ல” கோபமாக அவர் முன்பு வந்து நின்றாள் அகல்விழி.

“விழி என்ன பேசுற நீ, அப்பா முன்னாடி இப்படியா எதிர்த்துப் பேசுவ. அவர்கிட்ட முதல மன்னிப்பு கேளு” தங்கையை தந்தையிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினாள்.

“முடியாது அக்கா. தப்பு எல்லாம் இவரு பக்கத்துல வச்சிக்கிட்டு உன்ன சொல்றதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது “காட்டமாகவே கூறினாள்.

“அப்பாகிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது விழி.முதல மன்னிப்பு கேளு”கண்டிப்புடன் கூற, அகல்விழியோ கோபத்தில் கல்லூரி பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

“என்ன அக்காளும் தங்கச்சியும் ஒன்னு சேர்ந்து என்னை பேசுறிங்களோ, நிம்மதியா இருக்க விடமாட்டேன் பார்த்துக்கோ “எச்சரிக்கை விடும் பொருட்டு பேசினார்.

“அப்பா, அவ சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா. அவளுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்கிறேன் பா”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.அடுத்து பணத்துக்கு என்ன செய்யப் போறதா இருக்க?மத்த ரெண்டு தண்டம் மாதிரி ஓசி சோறு திங்கலாம்னு நினைக்காத “வார்த்தைகள் விஷமாய் விழுந்தது.

“இல்ல பா. இன்னைக்கு ஒரு ஸ்கூல்ல எனக்கு இன்டெர்வியூ இருக்கு பா.அது கிடைச்சிட்டா நாளைக்கே ஜாயின் பண்ணிடுவேன்”

“வேலைய வாங்கிட்டு தான் வீட்டுக்கு வர” கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அவர் மறைந்ததும் தான் அருவியால் மூச்சு விடவே முடிந்தது. தன்னையே பரிதவிப்பாய் பார்க்கும் அன்னையை தன் புன்னகையிலே சமாதானம் படுத்தினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்டர்வியூவிற்கு கிளம்பி சென்றாள்.

இங்கே கோபமாய் கிளம்பி வெளியே வந்த அகல்விழிக்கு அந்த குளிரிலும் அவள் மனம் கோபத்தில் கொதித்தது.

‘ச்சீ , என்ன மாதிரியான ஆலு இவரு. மத்தவங்களை பத்தியும் அவங்க மனச பத்தியும் யோசிக்கிறதே இல்ல. இவரெல்லாம் இருக்கிறதுக்கு இல்லாமையே இருக்கலாம்’ மனதிற்குள் திட்டியப்படியே கல்லூரிக்கு நடையிட்டாள்.

அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த ஒரு நாலு சக்கர வாகனம், வண்டியின் வேகத்தில் அகல்விழியை இடித்து விடுவது வந்து சென்றது.

அதில் சிறிது பயந்தவள் தடுமாறி கீழே விழுந்திருந்தாள்.

“அறிவே இல்ல இவனுங்களுக்கு எல்லாம் வண்டிய ஓட்டச் சொன்னா பறக்குறானுங்க” திட்டியப்படி எழுந்தவள் கைக்கால்களை உதறிவிட்டாள்.

இப்போது‌ தந்தையையும் அந்த வண்டிக்காரனையும் சேர்த்து திட்டியப்படியே கால்லை ஏந்தி ஏந்தி மெல்ல நடந்து வந்தவளுக்கு பசியெடுக்க, பர்சை திறந்து பார்த்தவள் அதில் வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே இருக்க, அப்போது தான் தாயிடமிருந்து பேருந்துக்குப் பணம் வாங்காதது நினைவில் வர தலையில் அடித்துக் கொண்டாள் அகல்விழி.

“யார் முகத்துல இன்னைக்கு முழிச்சியோ தெரியல விழி. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. உனக்கு நேரமே சரியில போ” புலம்பியபடி பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு சென்றாள்.

அங்கே சென்றால் அவளை இடிக்கப் பார்த்த வண்டி நின்றிருக்க அதில் சாய்ந்து நின்று ஒருவன் போன் பேசிக்கொண்டிருக்க, பசியையும் மறந்து அவனை நோக்கிக் கோபத்துடன் சென்றாள்.

“ஹலோ மிஸ்டர்!”

அவனோ கண்டுக்கொள்ளாது ஃபோனில் கவனம் வைத்திருந்தான்.

“ஏய் தீவட்டி தலையா!” அவன் முன்பு கோபத்தோடு நின்றாள்.

“யார் நீ?”

“நீ என்ன பெரிய இவனா , ஏதோ உன்னோட சொந்த ரோடு மாதிரி அப்படி வேகமா போற. நீ வேகமா போறதுக்கு மத்தவங்க சாகணுமோ. உனக்காக உயிர் விடவா எங்க ம்மா என்னைப் பெத்து போட்டுருக்காங்க” கோபமாய் பேச,

“ஏய்!நீ உயிரோடு தான இருக்க அப்புறம் என்ன, பேசாம போ. இல்ல காசு வேணும்னா கூட கேட்டு வாங்கிட்டு போ “

” எல்லாம் பணக்கார திமிறு.பணம் இருந்தா எது வேணாலும் வாங்கலாம்னு நினைப்போ.உன் வீட்டு ரோடு மாதிரி நீ போவ ,அத நாங்க கேக்க கூடாதா. நீயெல்லாம் எங்க போய் உருப்பட போற” வார்த்தைகள் இருவருக்கும் வெடித்தது.

“உன்ன மாதிரி லோக்கல் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண என்னால முடியாது. இனி என் கண்ணு முன்னாடி வராத.இன்னைக்கு ஏத்தல ,ஆனா அடுத்த தடவ பார்த்தா ஏத்திட்டு தான் மத்தவேலையே பார்ப்பேன் ஜாக்கிரதை” என எச்சரித்து தன் வழியிலிருந்து அவளை நகர்த்திவிட்டு காரில் ஏறிப் பறந்தான்.

“போயா போ நீயெல்லாம் உனக்கு வரப் போற பொண்டாட்டிக்கிட்ட அனுபவிப்ப” சென்ற வண்டியைப் பார்த்து சாபம் விட்டாள் அகல்விழி.

*****

தேனருவி தனது ஃபைலை சரிப்பார்த்தபடி பஸ் ஸ்டாபை நோக்கி நடக்க , அப்போது பார்த்து அவளது தொலைபேசி அடித்தது.

‘யாராக இருக்கும்’ என்ற சிந்தனையோடு மொபைலை எடுத்துப் பார்த்தவளுக்கு அன்னை கூப்பிடவுமே மனம் சிறிது சஞ்சலமடைந்தது.

‘அம்மா எதுக்கு கூப்பிடுறாங்க. அப்பா பாப்பாவ ஏதாவது பேசிட்டாரோ, அவ அதனால அழுகுறாளோ. இல்ல…’ மூளையில் சிந்தனைகள் எங்கேகோ பறந்தது.அதனுடனே அழைப்பை ஏற்றாள்.

“சொல்லு மா “

“பஸ் ஸ்டாப் போய்ட்டியா தேனு “

“இன்னும் இல்லம்மா ஆனா பக்கத்துல தான் இருக்கேன்.”

“ஏன் வீட்ல ஏதாவது பிரச்சனையா? அம்மு ஏதாவது பண்ணிட்டாளா மா?”பதற்றத்துடன் கேட்க,

“அதெல்லாம் அவ ஒன்னும் பண்ணல. இந்த அகல்விழி தான் பஸ்க்கு கூட காசு வாங்காம போய்ட்டா. அவள கொஞ்சம் பார்த்தா பணம் கொடுத்திடுமா”

“சரிங்க மா. வேறெதுவும் இல்லையே?”மகளை எண்ணி கவலையோடு கேட்க,

“கவலப்படாத தேனு. அம்முவ நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீ பார்த்துப்போ நான் வைக்கிறேன்” என்று வைத்தும் விட்டார்.

பஸ் ஸ்டாப்பை நெருங்கும்போதே அகல்விழி அவள் கண்ணில் படவே, அவளை நோக்கிச் சென்றாள்.

“இங்க என்ன பண்ற விழி?” பின்னால் கேட்ட தன் அக்காள் குரலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட விழி முகத்தை உர்ரென்று வைத்தபடி திரும்பினாள்.

“நான் என்ன பண்ணா உனக்கு என்ன, போய் உங்க அப்பாகிட்ட பேசு.என்கிட்ட பேசாத” முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

“இப்படி பேசாத விழி.அவரு நம்ம அப்பா, அதுவுமில்லாம வயசுல பெரியவர இப்படி எல்லாம் எதிர்த்துப் பேசக் கூடாது.”

“மரியாத தானா வரணும் அக்கா, அதெல்லாம் கேட்டு வரக் கூடாது.உனக்குப் பண்ணினதுக்கு நீ தான் அவரு மேல கோபப்படணும். ஆனா நீ இப்பவும் அவருக்கு வலைஞ்சி கொடுத்துப் போற. உன்ன என்ன சொல்றதுனே எனக்குத் தெர்ல. ஆனா நான் ஒன்னு சொல்றேன் நீ எது உண்மைன்னு நம்புறியோ அது பொய்யா கூட இருக்கலாம்” அக்காளுக்கு அறிவுரையோடு தன்னால் அக்காவின் வாழ்க்கைக்கு ஏதும் செய்யமுடியவில்லை என்ற வருத்தத்தோடு கூறினாள்.

“இந்தா பஸ்க்கு பணம்” எனப் பணத்தை நீட்ட, அதை வாங்கிகொண்டவள் “பேச்ச மாத்துறல விடு. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா போதும். எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்”என்று கிளம்பிவிட்டாள்.

அவள் போகும் பாதையைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவள், அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் தேனருவி.

*****

ஏவீ இன்டெர்னஷனல் ஸ்கூல்

இது குன்னூரிலே புகழ்பெற்ற பள்ளி. படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இப்பள்ளியை அடித்துக்கொள்ள எந்தப் பள்ளியும் இல்லை. இது கங்காதரன்- மஞ்சுளா தம்பதி நடத்தி வரும் பள்ளி. இப்போது இப்பள்ளியை தற்காலிகமாக வேண்டாவெறுப்பாகக் கவனித்து கொள்வது அவர்களது மூத்த மகனான அருண் தேவ் தான்.அதுகூட தன் தம்பி கேட்டுக்கொண்டதற்காகத் தான். அவனின் வருகைக்காகத் தான் இவன் காத்திருக்கிறான்.ஆனால் அவனோ இங்கு வராமல் போக்குக்காட்டி கொண்டிருக்கிறான்.

கார் நேராக கேட்டைத் தாண்டி அவனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் வந்து வேகமாக நிறுத்த, அவனது பிஏ வந்து கதவைத் திறந்து விட்டான்.

“குட் மார்னிங் சார்”

“ம்ம், இன்டெர்வியூக்கு எல்லாம் ரெடியா” தனது மொபைலை பார்த்தவாறே பிஏவிடம் கேட்டான்.

“எல்லாம் ரெடியா தான் இருக்கு சார். உங்களுக்காகத் தான் வெயிட்டிங் “

“சரி வரச் சொல்லு”சலிப்பாகக் கூறி உள்ளே சென்றான்.

“சரிங்க சார்” என்றவன் வெளியே சென்று முதல் கேண்டிடேட்டை உள்ளே அனுப்பிவிட்டான்.

அடுத்த அரைமணி நேரத்திற்கு நேர்காணல் நடக்க , ஒருவரது செயல்திறனும் பிடிக்காமல் போக அருணிற்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

தனது பிஏவை அழைத்தவன் ,” இன்னைக்கு இது போதும். இனி யாரையும் உள்ள அனுப்பாத. வந்த யாருக்குமே டெலன்ட் இல்ல”

“சார் இன்னும் ஒரேயொரு கேண்டிடேட் தான் இருக்காங்க. அவங்களையும் பார்த்துட்டா… “என்று முடிப்பதற்குள் பிஏவிற்கு அருணின் கையால் ஒரு அறை விழுந்தது

“இங்க நீ ஓனரா நான் ஓனரா? உனக்கு என்ன வேலையோ அதமட்டும் பாரு. இல்லன்னா வேலைய விட்டுக் கிளம்பு” கர்ஜிக்கும் குரலில் கூறி டேபிளில் ஓங்கி குத்தியவன் கோபத்தில் வெளியேறினான்.

அவன் வெளியே சென்றதும் மேடத்திற்கு அழைத்த பிஏ ஜீவா,” மேடம் சார் கோபமா வெளிய போயிட்டாரு” சோகமாகச் சொல்ல,

“அவன கொஞ்சம் பார்த்துக்கோ ஜீவா. உனக்கே தெரியும் அவன பத்தி.ஏதோ விதி அவன் வாழ்க்கைய இப்டி புரட்டிப் போட்டுட்டு போய்டுச்சி. எனக்கு யார நினைச்சி கவலப்படுறதுனே தெர்ல. ஒருத்தன் என்னன்னா கண்ணுமுன்னாடி அழியுறான் இன்னொருத்தன் என்னன்னா கடல் தாண்டி இருந்து அழியுறான். இப்போ யார முதல சரிபண்றதுனே தெர்ல ஜீவா” மஞ்சுளா மகன்களை நினைத்து வருத்தமாகக் கூற, அவரைத் தேற்றும் வழியறியாது தவித்துப் போனான்.

“நான் போய் இப்போ சார பாக்குறேன் மேடம்” மொபைலை வைத்தவன் வெளியே வர, அங்கே அருண் ஒரு பெண்ணை அழைத்து வருவதை பார்த்து அப்படியே நிற்க, அவனோ “இவங்களுக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்திடுங்க” என்றவன் அந்தப் பெண்ணின் புறம் திரும்பி “உங்களோட நேம்?” என்க,

அவளோ புன்னகையுடன்,”தேனருவி” என்றாள்.