மோகனங்கள் பேசுதடி!- 01

eiY0CU848860-8374a33e

மோகனம் 01

குளிர்ந்த காற்று அவள் தேகத்தை தீண்டிச்சென்றாலும், அவள் மனம் ஒருவித இறுக்கத்தை கொண்டிருந்தது.

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரியை நோக்கித் தான் இப்போதைய அவளது பயணம்.

பாதைகள் வலைந்து நெளிந்து செல்வதுபோல் அவளது வாழ்வும் பல வலைவுகளையும் சிக்கல்களையும் கொண்டது.

யார் யாரோ அவளது வாழ்வை பந்துபோல் உருட்டி விளையாடிவிட்டனர் இல்லை இல்லை விளையாடுகின்றனர் என்பதே சரியும்.

இவள் பெண்ணாய் பிறந்தது தவறா அல்லது அவளது தந்தைக்கு மூத்த மகளாகப் பிறந்தது தவறா என்று தெரியவில்லை, இல்லை பிறந்ததே தவறா என்றும் கூட தெரியவில்லை.

அன்பை கொண்டே மற்றவர்களிடம் பழகிய அவளுக்குக் கிடைத்தது என்னவோ அவமானங்களும் கஷ்டங்களும் வார்த்தை சாடல்களும் மட்டுமே.

சின்னஞ்சிறு குருவியாய் தன் நீண்டதொரு கனவு பயணத்தில் அடிவைத்தவளின் சிறகுகளை வெட்டிச் சிறையெடுத்து குடும்பம் என்னும் கூண்டில் அடைத்து வைத்தனர்.

சிறைக்கைதியாய் தினம் தினம் மனதினுளே ரணத்தை அனுப்பவித்தவளுக்கு இன்று தான் விடுதலை கிடைக்கப்பெற்றது.

விடுதலை என்றால் சாதாரண விடுதலை அல்ல ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டவர்களுக்குக் கிடைத்தது போலான ஒரு விடுதலை.

அது தான் அவள் கணவனிடமிருந்து அவளுக்குக் கிடைப்பெற்ற விவாகரத்து விடுதலை

இப்போது தான் அவளால் மூச்சு விடவே முடிந்தது. அது கூட எத்தனை நாளுக்கு நீடிக்குமோ?

பார்வை பச்சை பசேலென இருக்கும் மரங்களிலும் மலைகளிலும் இருந்தாலும், அவளது எண்ணங்கள் அனைத்தும் அடுத்து என்ன செய்வது என்று தான்.

கடந்த காலத்தை எண்ண கூடப் பெண்ணிற்கு பிடிக்கவில்லை. கடந்த காலத்தைக் கசக்க வைத்தது மூவராக இருந்தாலும், அதில் இருவருக்கு மட்டுமே பெரும்பான்மையான பங்கு வந்து சேரும்.

ஜன்னல் புறம் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளின் மீது இசைத்தூறலாய் மழைத்துளி அவள் கன்னத்தின் மீது பட்டுத் தெறிக்க , தன் சுயத்திலிருத்து வெளிவந்தாள் பேதை.

“அண்ணா, இன்னும் எவ்வளவு நேரமண்ணா ஆகும் குன்னூர் போய்ச் சேர? “

“காட்டேரி வந்துட்டோம் மா. இன்னும் ஒரு அரைமணி நேரத்துல போயிடலாம்” தன்மையாகக் கூறிய ஓட்டுநர் பாதையில் கவனத்தை வைத்தார்.

“சரிங்க ண்ணா நீங்கப் பொறுமையாவே போங்க” என்றவள் குளிர் தாங்காது கைகள் இரண்டையும் தேய்க்க செய்தாள்.

அப்போது தன் பஞ்சு போலான பிஞ்சு விரல்களை அந்தக் கைகளோடு சேர்த்து கொண்டு தேய்த்து விட்டது.

“பேபி, முழிச்சிட்டீங்களா?” இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து அன்பொழுக தன் மகளிடம் கேட்டாள்.

“எஸ் மம்மி! பேபி முழிச்சிட்டா “சிரிப்பொழுக குட்டி தேவதை பெரிய தேவதையிடம் சொல்ல, புன்னகைத்தாள் அருவி…தேனருவி.

“சரி, இப்போ பேபி இந்த ஸ்வெட்டர் போட்டுக்குவீங்களாம். இல்லனா அதிகமா குளிர் எடுக்கும்”

“நோ மம்மி” என மறுத்துக் கூறிய குழந்தையைக் கேள்வியாய் நோக்கினாள் பெண்.

“ஏன் போடமாட்டேனு சொல்ற?”

“மா, ஸ்வெட்டெர் போட்டா சில் க்ளைமெட்டை என்ஜாய் பண்ண முடியாது மம்மி” மூன்று வயதேயான பூவினி கூற, பெண் அதிர்ந்து தான் போனாள்.

இதே…இதே வார்த்தைகள் தானே அவனும் கூறுவான். அவனுக்குமே இப்படி தான் குளிரை ரசிக்க ரொம்பவே பிடிக்கும்.அதே போல் இவளும் கூறுகிறாளே. இது எப்படி சாத்தியம்?

ஆண்டவா எதை எல்லாம் மறக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அதையெல்லாம் இவள் ஞாகபடுத்துகிறாளே.கடவுளே !இது என்ன எனக்கு வந்த புது சோதனை. என்னை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் சிலருக்கு இது அவலாகிவிடுமே.

“இப்படியெல்லாம் பேசக் கூடாது அம்மு.இவ்ளோ நாள் நாம ப்லைன்ஸ்ல இருந்தோம், அங்க குளிர்காலத்துல மட்டும் தான் குளிரும்.ஆனா இங்க அப்படி கிடையாது அம்மு. நம்மளோட பாடி இந்த க்ளைமேட்க்கு இன்னும் செட் ஆகல டா. சோ ஸ்வெட்டர் போட்டுத் தான் ஆகணும்” கண்டிப்புடன் அன்னை கூறவும் ,மறுத்துப் பேச முடியாது போக அன்னையிடமிருந்து ஸ்வெட்டர் வாங்கி போட்டுக்கொண்டது அந்த மூன்று வயது குழந்தை பூவினி.

“மம்மி, இது அழகா இருக்கு” என்று பார்க்கும் மலைகளையும் டீச்செடிகளையும் பார்த்துக் குழந்தை குதுகளத்துடன் கூற, சிரிப்போடு கேட்டிருந்தாள் அவள்.

அவளும் இதேப்போல் தானே ஒருகாலத்தில் குதுகளித்திருப்பாள்.

அதற்குக் காரணம் கூட அவன் தானே. வீடு வீடு விட்டால் பள்ளி என்று ஒரு சிறிய வட்டத்தினுள் இருந்தவளை தானே வெளிவர உதவி செய்தான்.

இப்போது அந்த நாட்களை எல்லாம் நினைக்கும்போது இதழுக்குள் தெரியா புன்னகை ஒன்று உதிக்க தான் செய்தது.

ஒரு நொடி தான் அந்தப் புன்னகைக்கான ஜீவன்.முகத்தைச் சிலுப்பிக் கொண்டு தன்னை நிலைப்படுத்தியவள் கடந்த காலத்தை விடுத்து நிகழ்காலத்திற்கு வந்தாள்.

தொடரக் கூடாது என்று நினைக்கும் அவளது கடந்தகாலம் இனி அவள் எதிர்காலத்தோடு…

அடுத்த அரைமணி நேரத்தில் அவளது வீட்டில் முன் வண்டி நிற்கப்பட்டது.

வண்டி சத்தத்தில் வீட்டிலிருந்த சந்தானமூர்த்தி,”இதோ மூத்த தண்டம் வந்துடுச்சி” சத்தமாகக் கடுகடுத்து விட்டு அறைக்குள் முடங்கிக் கொண்டார்.

கேட்டிருந்த சந்திராவிற்கு கணவர் மீது ஆத்திரமாக வந்தது. 

பெண் பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக, மட்டம் தட்டி பேசும் கணவரை ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் இவர் உதாசினப்படுத்தி பேசும் பெண் தான்.

தந்தை மீது அத்தனை பாசம் வைத்திருப்பவள், சின்னவள் ஏதாவது பேசினால் கூட அவளை அடக்கி அழைத்துச் சென்றுவிடுவாள்.

இவளைப் பார்த்தா தண்டம் என்கிறார் கணவர், இவருக்காக இப்போது இவள் வாழ்க்கையையே அழித்துக் கொண்டு நிற்கிறாளே நினைக்க நினைக்க மனம் வெறுத்தது அந்தத் தாய்க்கு.

“அம்மா” என்ற உலுக்கிய உலுக்களில் தான் நிதானத்திற்கே வந்தார் சந்திரா.

“ம்மா, அக்கா வந்துட்டா” அகல்விழி கூற,

“ரெண்டு பேரையும் அப்படியே பின்னாடி கூட்டிட்டு வா”என்றவர் பின்னோக்கி நடையிட்டார்.

“அக்கா…” என்று ஓடி வந்தாள் அந்த வீட்டின் கடைக்குட்டி மதியழகி.

“மதி மா” அன்பொழுக அழைத்த அருவி அவளை அணைத்து கொண்டாள்.

“எப்படி இருக்க கா?” பாசமாய் கேட்க,

விரக்தியாய் புன்னகைத்த அருவி,” இருக்கேன் மதி.நீ எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் க்கா” தன் அக்காளை கண்ட சந்தோஷம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

திடிரெனத் தன் காலை ஏதோ சுரண்டுவது போல் தோன்ற, கீழே குனிந்து பார்த்த மதி குட்டியாய் அழகாய் பொம்மைபோல் கொழு கொழுவென இருந்த தன் அக்காள் மகளைப் பார்த்து” என்னடி?”என்று கேட்டாள்.

“நானு”

“தூக்க முடியாது. போ”விளையாட்டாய் சொல்ல,

“மம்மி” குழந்தை சிணுங்க,

“இது என் அக்கா”

“நோ மை மம்மி”என்று அவள் கையை பிடித்துக் கொண்டது பிள்ளை.

“மை அக்கா”

“போதும் ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க விளையாட்டை நிறுத்துறீங்களா, அக்கா உன்னையும் பாப்பாவையும் அம்மா பின்னாடி வரச் சொன்னாங்க” அகல்விழி வந்து சொல்லவும் முகம் ஒரு நொடி அடுத்து நடக்கபோகும் செயலில் கறுத்தது.

அவளின் முகம் பார்த்த அகல்விழி,”விடு க்கா‌ எல்லாம் நல்லதுக்குன்னே எடுத்துக்கோ” அக்காளை சமாதானம் படுத்த முயன்றாள்.

முயற்சி தான் செய்ய முடிந்ததே தவிர அதனை அழிக்க முடியவில்லை. அனுபவிப்பவர்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும்.

இருவரையும் பின்னே அழைத்துச் சென்றவள், அவர்களது பொருட்களை எடுத்து உள்ளே வைக்கச் சென்றுவிட்டாள்.

மகளைப் பார்த்த சந்திராவிற்கு வேதனையாக இருந்தது. தன்னைப் போல் ஒரு புள்ள பூச்சியைப் பெற்று, அதை ஒரு பூச்சி கொல்லியிடம் கொடுத்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டார்.

“பாட்டிஈஈஈஈ”கத்தினாள் பேத்தி.

“அம்மு” பேத்தியை ஆரத்தழுவிக்கொண்டவர் முகமெங்கும் முத்தமிட்டார் சந்திரா.

பின், அவள் தலையில் மூன்று சொட்டு தண்ணியை விட்டவர் வீட்டிற்குள் போகச் சொன்னார்.

அன்னைக்கு மகளைக் காணவே நெஞ்சமடித்து கொண்டது.

இருவரும் அமைதியாகவே நிற்க, மகள் தான் அமைதியை கலைத்தாள்.

“ம்மா…” மெலிதான குரலில் அழைக்க, உடைத்தே போனார் சந்திரா.

” தேனு” என்றவர் மகளைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டார்.

“உன்னோட வாழ்க்கை இப்படியாகும்னு நினைச்சு கூடப் பார்க்கலை டி. குழந்தையோட உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே ” என்று கண்ணீர் விட,

“விடு மா. எனக்கு என்னோட அம்மு இருக்கா, அதுவே போதும்” அருவி சொல்ல , அன்னைக்கு அழுகை தான் வந்தது.

“என் வயித்துல பிறந்ததுனால தான் டி உனக்கு இந்த நிலமை”என்று சொல்லித் தலையிலடித்து கொள்ள, அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள்.

“விடு மா…”என்று அடுத்து பேசுவதற்குள் ,வெளியே வந்த சந்தானமூர்த்தி “பாசமழை பொழியிறதுனால பணம் வரப் போறதில்லை. சீக்கிரமா ஏதாவது ஒரு வேலைக்குப் போக சொல்லு “மனைவியிடம் காய்ந்தார்.

‘ச்சை என்ன மனுஷன் இவரு’ உள்ளுக்குள் பொறுமினார்.

பின்னர் அவளை அமர வைத்துத் தலையில் மிதமான சூட்டில் வைத்திருந்த வெந்நீரை ஊற்றி ,”உன்ன பிடிச்ச பிண்டம் எல்லாம் ஒழியட்டும்” என்று சத்தமாகவே சொல்லி அவளைக் குளிக்க அனுப்பி வைத்தார்.

அடுத்த அரைமணி நேரத்தில் குளித்துக் கிளம்பி வெளியே வந்தவளை தங்கைகள் இருவரும் சூழ்ந்து கொண்டனர்.

அதனைக் கண்ட சந்தானமூர்த்தி ,” மூணு தண்டங்களும் ஒன்னு சேந்தாச்சு போலையே” போறப்போக்கில் சொல்ல, அகல்விழி பிடித்துக் கொண்டாள்.

“நாங்க தண்டம்னா, அதைப் பெற்ற நீங்க யாரு ப்பா?”

“ஏய், என்ன வாய் ரொம்ப ஒவரா நீலுது? பேசுற வாய கிழிச்சு போட்ருவேன் பார்த்துக்க”

“எங்க கிழிங்க பார்ப்போம்” சிலிர்த்து கொண்டு நிற்க,

“அகல் அமைதியா இரு டி” தங்கையை அமைதி படுத்த முயன்றாள் அருவி.

“மன்னிச்சிடுங்க பா. ஏதோ சின்னப் பொண்ணு தெரியாம பேசிட்டா. அவளுக்குப் பதிலா நான் மன்னிப்பு கேக்குறேன்”என்றவளை அர்ப்ப புழுவாகப் பார்த்துவிட்டுச் சென்றார் .

“நீ ஏன் க்கா இப்படி இருக்க?”தந்தையை விட்டு அக்காளை பிடித்துக் கொண்டாள்.

“பச், விடு டி”

“சரி, அடுத்து என்ன பண்றதா இருக்க க்கா?”

” நீ ஏன் வந்ததும் இப்படி அக்காவ நச்சு பண்ற அகல்” மதியழகி அக்காவுக்காகப் பேசினாள்.

“உனக்கு ஸ்கூலுக்கு நேரமாகல்லை.கிளம்பு போ” தங்கையை விரட்டிவிட்டாள் அகல்விழி.

“ச்சீ பே” திட்டிச்சென்றாள்.

மதியழகி அந்தப்புறம் சென்றதும்,”அவளுக்கு விஷயம் எதுவும் தெரியாது.‌ இப்போ சொல்லு அடுத்து என்ன பண்றதா முடிவு?”

“இங்க ஒரு ஸ்கூல்ல வேலைக்கு அப்ளை பண்ணிருக்கேன் டி. நாளைக்கு இண்டர்வ்யூக்கு போகனும்.‌அப்படியே அம்முவை அங்கேயே சேர்த்திடலாம்னு இருக்கேன்” 

“உனக்கு நான் என்னைக்குமே துணை இருப்பேன் க்கா. நீ நடந்ததை நினைச்சி கவலை பட்டுட்டு இருக்காத. நீ கோவில்ல இருக்கிற சாமி சிலைப் போல. உன்னைப் போய் அந்த அய்யோகியன் வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்.‌ ஆக்ஷ்வலி நீ சந்தோஷம் தான் படணும், அவன் இனி உன் வாழ்க்கையில இல்லைன்னு” என்ற தங்கையைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைக்க மட்டுமே அவளால் முடிந்தது.

மனதளில் அவள் உயிரற்ற பிணமாகத் தான் இருக்கிறாள். உயிர் இருந்தும் அவளை ஜடமாக வாழ வைத்தது அவன். அவனை விடுத்து மற்றவர்களைக் காரணமாக வைப்பதை பார்த்து நகைப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை.

அன்றையதினம் மகளோடும் அன்னையோடுமே நாளைக் கழித்தவள், அடுத்தநாள் இன்டர்வியூவிற்கு சென்றாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!