மோகனங்கள் பேசுதடி!04

258870534_107665628407960_2661016960017320672_n-8e38d97f

மோகனங்கள் பேசுதடி!04

மோகனம் 04

விடியலே மூர்த்தியின் வீட்டில் பரபரப்பாய் இருக்க,மூர்த்தி மட்டுமே அமைதியாக சோஃபாவில் அமர்ந்து ஆற அமர உட்கார்ந்து வரக்காப்பியை குடித்து கொண்டிருந்தார்.

“மா,எனக்கு நேரமாகுது. லன்ச் ரெடியா?” மதி கேட்ட படி தன் ஜடையை சரிபார்த்து கொண்டிருந்தாள்.

“எனக்கு ஒன்னும் வேணாம் போ “மதி சிறுபிள்ளையெனக் கோபித்து கொள்ள,”என்கிட்ட வாங்கிக்கடிக்காத மதி.ஒரு அஞ்சு நிமிஷம் இரு இட்லி ரெடி ஆகிடும்.”

“எனது இன்னைக்கும் இட்லியா?”வாயைப் பிளக்க,

“ஆமா. இருக்கறதை சாப்பிட்டு பழகுன்னு எத்தன தடவை சொல்றது. நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்ல மதி. பன்னண்டாவது படிக்குற கொஞ்சம் பொறுப்போட இருக்க கத்துக்கோ.”

“என்ன காலையிலே இங்க இப்படி சத்தம். இந்த வீட்ல நிம்மதியா ஒரு காப்பி குடிக்க முடியுதா பாரு.எப்ப பாரு ஏதாவது ஒரு சத்தம் போட்டுட்டே இருக்கிறது” சத்தமாகவே பேச, அடுத்த நிமிடம் அந்த வீடே நிசப்தமாய் இருந்தது.

சந்திரா பேசியதை கேட்டு மதி வருத்தத்துடன் அமைதியாக அவள் வேலையைப் பார்க்க, விழிக்கும் அருவிக்கும் தங்கையை நினைத்துக் கவலையாக இருந்தது.

அருவி நேராக மதியிடம் சென்று,”மதி கிளம்பிட்டியா? நம்ம ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்.விழி கூடப் போனா அவ ஏதாவது ஒரு பிரச்சனைய இழுத்துட்டு வருவா.அத நம்மால சமாளிக்க முடியாது பா” தங்கையின் மனதை மாற்றும் பொருட்டு கூற,

“ஆமா க்கா நீ சொல்றது சரி தான்.அவ எப்ப என்ன பண்ணுவாளே தெரியாது” மதி அருவிக்கு ஒத்து ஊதி பேச,

“என்ன டி சரி?பாவம் புள்ள அம்மாகிட்ட திட்டுவாங்கிட்டு சோகமா இருக்கும், ஹனி கேக் வாங்கி கொடுக்கலாம்னு பார்த்தேன். அப்பாடா எனக்கு ஒரு இருப்பது ரூபாய் மிச்சம்”

‘என்னது ஹனி கேக்கா’வாய்யை பிளந்த மதி, அடுத்த நொடியே “அக்கா நீ ரொம்பவே ஸ்வீட்”என அக்காளுக்கு ஐஸ் வைத்துக் கரைக்க முற்பட்டாள்.

“கிடையாது… கிடையாது போ. நானும் தேனும் மட்டும் போயிக்கிறோம்” பழிப்பு காட்டி விட்டுத் தேனின் தோளில் கைப் போட்டுக்கொள்ள,

“க்கா…” என மதி நெருங்கி வர, விழி ஓட்டமெடுத்தாள்.அவள் பின்னாலையே மதியும் ஓட, அப்போது தான் தூங்கி எழுந்து அன்னையை தேடி வந்த பூவினி “நானு…நானு…” என இவர்களோடு சேர்ந்து கொண்டு ஓடினாள்.

மூவரது விளையாட்டையும் புன்னகையோடு அருவி பார்த்துக்கொண்டிருக்க, சமையலறையிலிருந்தப்படியே அவர்கள் நால்வருக்கும் கண்ணு படக் கூடாதென்று நெட்டி எடுத்தார்.

பின்னர் மூவரும் கிளம்பி சென்றுவிட, சந்திரா பிள்ளைகளை நினைத்துக் கவலைக்கொண்டார்.

பள்ளிக்கு வந்த அருவியை, ஜீவா அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, புன்னகையோடு அவர்களுடன் ஒருவராகச் சேர்ந்து கொண்டாள்.

அந்த வாரம் அப்படியே கடந்து விட, வார இறுதியில் பள்ளி விடுமுறை விட்டதால் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தாள் அருவி.

கோவிலுக்குச் சென்றாவது தன் மனபாரத்தை குறைக்க எண்ணினாள். அதோடு பூவினியும் ஊரைச் சுற்றி பார்க்க ஆசைக்கொண்டு நச்சரிக்க, இன்று அவளோடும் தங்கைகளுடனும் வெளியே செல்லலாம் என்று ஆயத்தமானாள்.

“விழி, கிளம்பிட்டியா இல்லையா?” அருவி புடவையைச் சரி செய்தப்படி கேட்க,

“நான் எப்பவோ கிளம்பிட்டேன். ஆனா இந்தக் குட்டி மேடம் தான் கிளம்ப லேட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.நீயே அவள என்னென்னு கேளு?” சொல்லிக் குட்டியை அன்னையிடம் ஒப்படைத்தாள்.

அருவி,”அம்மு!ஏன் இவ்வளோ லேட் பண்றீங்க?”

“மம்மி, எனக்கு எந்த ட்ரெஸ் போடுறதுன்னே தெரியல.” என்று வந்து நின்ற மகளைப் பார்த்தால் அவனின் ஞாபகம் தான் ஏனோ வந்து தொலைத்தது.

“ஏதோ ஒன்னு போடுடா.”

“நோ மம்மி.டெம்பிள்க்கு பட்டுப் பாவாடை போட்டா சூப்பரா இருக்கும்.ஆனா நீங்க என்ன சிம்ஸ்பார்க் கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்க. அதுக்கு இது நல்லா இருக்காது மம்மி”என்று இதழ்பிதுக்கிய மகளைப் பார்க்கப் பார்க்க அவனைப் பார்ப்பது போலவே இருந்தது.

அவனுமே இதே போல் தான், இடத்திற்கு ஏற்பத் தான் ஆடையை அணிய வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உடை அணிவான். அதே தான் இப்போது இவளும் செய்கிறாள்.

என் உலகமும் அழகாய் இருக்கும் எனக் காட்டியவன் அவன். ஆனால் அவனே என்னை இப்படியொரு நரகத்தில் தள்ளிவிட்டானே.அவனை எத்தனை நம்பினேன். என் நம்பிக்கை அத்தனையும் சுக்குநூறாகிவிட்டானே.

ஏன் அப்படியொரு நாள் என் வாழ்வில் வந்தது? வரமாலே இருந்து இருக்கலாமே. அந்த ஒரு நாள் என் வாழ்வையல்லவா சூறையாடிவிட்டு சென்றுவிட்டது.அவனால் தானே தனக்கு இத்தனை கஷ்டங்களும் என நினைக்க நினைக்க அவன் மீது கொலைவெறியே வந்தது.

“மம்மி” என்ற மகளின் குரலில் சுயநினைவு பெற்றவள், அவளுக்கான உடையைத் தேர்ந்தெடுத்தாள்.

நால்வரும் கிளம்பிவிட, அதனைப் பார்த்த மூர்த்தி,” என்ன எல்லா தண்டங்களும் வெளிய போறீங்க போலயே?”கேட்க,

“நாங்க தண்டாம்னா அப்போ நீங்க யாரு?” நக்கலாய் விழி அவரைப்போலவே தந்தையை பார்த்துக் கேட்க,

“என்ன திமிரா பேசுற, அப்பன்ற மரியாதை இருக்கா பாரு. நீயெல்லாம் எங்க போய் உருப்புட போற” மகளைக் கருவினார் மூர்த்தி.

“அத உருப்புடுடாத யாரும் சொல்லக் கூடாது”முறைத்தபடி பதில் கூறிய விழி மூவரையும் இழுத்து சென்றாள்.

வெளியே வந்ததும் விழியைப் பிடித்துக் கொண்ட அருவி,”அப்பா கிட்ட இப்படி பேசாதனு எத்தனை தடவை சொல்றது விழி”கோபமாகத் தங்கையிடம் பேச,

“நானும் பல தடவை சொல்லிட்டேன் க்கா.யாருக்கு என்ன கிடைக்குதோ அது தான் திரும்பக் கிடைக்கும்.”

“இது ரொம்ப தப்பு.அவரு நம்ம அப்பா அதை ஞாபகத்துல வை”கண்டித்து சொல்ல,

“உன்ன மாதிரி ஊமக்கொட்டான் மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது.பேச வேண்டிய இடத்துல நீ பேசல, ஏன் காது குடுத்து கூட கேக்கல. உனக்காக இருக்குறவங்கள நீ எப்போதும் மதிக்கிறதும் இல்லல. ஆனா உன்ன வார்த்தையால சாகடிக்குறவங்களுக்கு அத்தனை மரியாதை.சபாஷ் க்கா”

“விழி”அதட்டலுடன் அவள் குரல் வர,

“இப்ப வேணா என் வாயை அடைச்சிடலாம். ஆனா அது எப்போதுமே நடக்காது அக்கா”பேசியவள் முன்னே நடக்க தொடங்கினாள்.

அகல்விழிக்கு தன் அக்காளின் மீது அத்தனை மனவருத்தம் உண்டு. அந்த ஒரு நாள் மட்டும் அவள் காது குடுத்து கேட்டிருந்தால், இன்றைக்கு இந்த நிலைமையில் வந்து நின்றிருக்க மாட்டாள். எதையுமே கேட்க அவள் தயாராக இல்லை. அன்றைய நிலையும் கூட அப்படி தான் இருந்தது. அப்படியொரு நாள் மட்டும் வராமல் இருந்திருந்தால், இன்று இவள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை அவளுக்குப் பிடித்தமானவரோடு வாழ்திருப்பாள்.

இதோ இன்று யாருக்காக விழியிடம் பேசினாலோ, அவரால மட்டுமே அவள் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது. அது தெரிந்தாலும் கூட அவள் இப்படி நடந்து கொள்வது அகல்விழிக்கு எரிச்சலை கொடுத்தது.

இருவரும் அமைதியாகவே வர, இருவரையும் பார்த்த மதிக்கு கவலையாக இருந்தது.அவளுக்கு என்ன பிரச்சனை என்று கூடத் தெரியாது. சிறு பிள்ளையைக் கலங்கடிக்க கூடாதென்று அவளிடமிருந்து அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது.

முதலில் கோவிலுக்குச் சென்ற நால்வரும், வேண்டுதலை வைத்தனர்.அதில் பூவினி ‘தான் தந்தையோடு இருக்க வேண்டும் ‘என்று வேண்டிக்கொண்டாள்.

கோவிலைச் சுற்றி வந்த நால்வரும், நிழலாக இருந்த ஒரு இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டனர்.

அருவியும் விழியும் பேசாது அமைதியாக இருக்க, மதி தான் அக்காள் மகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.

“பார்த்து மதி”கூறிய அருவி அவர்களை ஒரு பார்வை பார்த்த படியே பூவை எடுத்துத் தலையில் வைத்தாள்.

“மதி சித்தி என்ன புடி பாப்போம்”என்றபடியே வேகமாக ஓடிய பூவினி, கால் தடுக்கி கீழே விழப் போக அவளைத் தாங்கிப் பிடித்தது இரு கரங்கள்.

“பார்த்துக் குட்டி” குட்டி தேவதையை ஒழுங்காக நிற்க வைத்தார் மஞ்சுளா. குழந்தையோ கண் சிமிட்டி அவரைப் பார்த்தது.

பூவினி விழுகின்ற மாதிரி சென்றதை பார்த்து அருவி ஓடி வந்தாள்.

“அம்மு உனக்கு ஒன்னும் ஆகலையே.இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் இங்க விளையாடாதீங்கன்னு” அக்கறை கலந்த கண்டிப்புடன் அருவி மகளுக்கு ஏதும் காயம் பட்டதோ என்று ஆராய்ந்தாள்.அவளுக்கு அருகில் மதி பாவமான முகத்தை வைத்தபடி நின்றாள்.

“பாப்பா நல்லா தான் இருக்கா மா. நான் தான் பிடிச்சுட்டேனே “என்ற குரலில் நிமிர்ந்து பார்த்த அருவி எழுந்து நின்றவள்,” கீழ வீழாம அம்முவ புடிச்சதுக்கு ரொம்பவே நன்றி “என்று கையெடுத்து கும்பிட,

அவளின் கையைப் பிடித்து வேகமாக இறக்கிவிட்டவர்,” ஐயோ! என்னமா பண்ற நீ?” இப்பெண்ணின் செய்கையில் பதறிப்போனார்.

“என்னமா நீ இதுக்கெல்லாமா கையெடுத்து கும்பிடுறது. கடவுள் முன்னாடி மட்டும் தான் கை எடுத்துக் கும்பிடணும். இப்படி எல்லாத்துக்கும் கைக்கூப்பி நீக்காதமா” என்று அருவிக்கு அறிவுரை வழங்க, அருவி அவரைத் தான் பார்த்தபடி நின்றாள்.

“குட்டி பேர் என்ன?”மஞ்சுளா குனிந்து குழந்தையிடம் கேட்க,

“பூவினி” என்று அழகாய் புன்னகைத்து மலர்ந்த முகமாய் கூறினாள்.

“அழகான பேரு”கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிய மஞ்சுளா அருவியைப் பார்த்து,” குழந்தைங்க அப்படி இப்படி ஓடத் தான் செய்வாங்க. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மா “என்றுவிட்டு கோவிலுக்குள் சென்றார் மஞ்சுளா.

அதன்பின்பு நால்வரும் மாலைவரை ஊர் சுற்றியவர்கள், ஆறு மணிபோல் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

இப்படியே ஒரு மாத காலம் முடிந்து விட, அருவி அந்தப் பள்ளியில் நல்ல ஆசிரியை என்று பெயர்பெற்றிருந்தாள்.

ஒரு மாத காலம் போனதே தெரியவில்லை. காலைப் பள்ளி இரவுக் குடும்பம் என்று அவள் வாழ்க்கை இயந்திரமாகச் சென்றுகொண்டிருந்தது.எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் கடமையென ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். அவள் இப்போது உயிரோட இருக்க காரணமே அவள் மகள் பூவினி தான். அவள் இல்லையென் இன்று அருவி என்பவள் இல்லை. முற்றிலுமாகக் காற்றோடு கலந்திருப்பாள். இப்போது அவளை அங்கேயே lkgயில் சேர்த்துவிட்டிருந்தாள்.

மதியவேளையில் அவளது இருக்கையில் அமர்ந்தபடி எதையோ செய்துகொண்டிருந்தவள், எதர்ச்சியாக நாட்காட்டியைப் பார்க்க அவளது கண்கள் இரண்டும் பெரிதாக விரிந்து விழியோரத்தில் கண்ணீர் கசிந்தது.அது அவளின் மாமியாரான ஆனந்தி இறந்த தினம். தானாக மூளைக்குள் அவள் அத்தை இறக்கும் தருவாயில் கூறிய வார்த்தைகள் நினைவலைவில் வந்துபோனது .

‘தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சுடு தேனுமா’ என்ற குரல் கேட்டமையமாக இருக்கவே தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.உடனே அங்கிருக்க பிடிக்காமல் வெளியே இருந்த சிட்டௌட்டில் அமர்ந்து மொபைலில் தன் அத்தையின் புகைபடத்தை பார்த்தாள்.

அந்தநேரம் பார்த்து அருண் பள்ளிக்குள் நுழைய, அவனது விழிகளில் மொபைலை பார்த்தப்படி சிட்டௌட்டில் அமர்ந்திருந்த அருவி கண்ணில் தென்பட, அவளை நோக்கிக் கால்கள் தானாக நடந்தது.

பக்கத்தில் சென்றவனுக்கு அவளை நெருங்கச் சிறிது தயக்கமாக இருந்தது.‌ஏனெனில் இதுவரை அனைவரிடமும் அதிகப்படியான கண்டிப்பை காட்டியிருக்க, இப்போது புதிதாகச் சேர்ந்த ஆசிரியரிடம் பேசினால் ஏதாவது தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்று தயங்கியவன் திரும்பிச் செல்லப் பார்க்க, அருவி அவனைக் கண்டுக்கொண்டாள்.

“அருண் சார்!”

“ஹான், சொல்லுங்க மிஸ்.தேனருவி. இது லஞ்ச் டைம் தானே, லஞ்ச் சாப்பிடாம இங்க என்ன பண்றீங்க?”

“இன்னைக்கு ஃபாஸ்டிங் சார். சோ மத்த ஸ்டாப்ஸ்க்கு டிஸ்டர்பன்ஸ் பண்ண வேணாம்னு இங்க வந்துட்டேன்” வாய்க்கு வந்த பொய்யை அளந்து விட்டாள்.

“ஹோ…”

“சார்! இன்னைக்கு எனக்கு ஒரு ஹாஃப் டே லீவ் வேணும்” தயங்கி கேட்க,

“எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“என்னோட மாமியார் இறந்த நாள் சார். அதுக்கு தான்” கவலை தேய்ந்த குரலில் கூறினாள்.

“சாரி. ஒகே ஃபார்மலா ஒரு மெயில் மட்டும் பண்ணிட்டு போங்க” என்று கூறி அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்க்க, அவள் விழியோ கலங்கிப் போய் இருந்தது.

“கவலப்படாதீங்க தேனருவி.இப்ப வேணா அவங்க உங்களோட இல்லாம இருக்கலாம். ஆனா அவங்களோட நல்ல நினைவுகள் எல்லாம் உங்க கிட்ட இருக்கு. இப்படி கலங்கிப்போனா மேல இருந்து உங்களைப் பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல. சோ அழுகாதீங்க மிஸ். தேனருவி.தைரியமா எதையும் எதிர்க்கொள்ளுங்க “அவளுக்கு ஏற்ப ஆறுதல் கூறி தைரியமூட்ட, அருவியோ மெலிதாகப் புன்னகைத்தாள்.

“தேங்க்ஸ் அருண் சார்”

“பரவால்ல. என்ன இருந்தாலும் நீங்க இப்போ என்னோட ப்ரெண்டாச்சே. உங்களைத் தேத்த வேண்டிய கடமை இருக்குன்னு நான் நினைக்கிறேன். ப்ரெண்ட் தான?”அவளை பார்த்துக் கேள்வியோடு தொக்கி நிற்க,

“கண்டிப்பா நீங்க என்னோட ப்ரெண்ட் தான் சார் “சொல்லிப் புன்னகைத்தாள்.

“சரி டைமாச்சி, நீங்க போய்க் கிளம்புங்க” சொல்லி முடிக்கவும் அவனுக்கு ஃபோன் வர , அதில் சொன்ன செய்தியை கேட்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டான். அவளுமே கோவை நோக்கி அவளது பயணத்தை மேற்கொண்டாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!